அவர்கள் தொடர்ந்து சத்தியத்திலே நடக்கிறார்கள்
“என் பிள்ளைகள் சத்தியத்திலே [“தொடர்ந்து,” NW] நடக்கிறார்கள் என்று நான் கேள்விப்படுகிற சந்தோஷத்திலும் அதிகமான சந்தோஷம் எனக்கு இல்லை.”—3 யோவான் 4.
1. ‘சுவிசேஷ சத்தியம்’ எதன் மீது கவனத்தை ஒருமுகப்படுத்துகிறது?
யெகோவா தம்மை “ஆவியோடும் சத்தியத்தோடும்” வணங்குவோரை மட்டுமே அங்கீகரிக்கிறார். (யோவான் 4:24, NW) அவர்கள் சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து, கடவுளுடைய வார்த்தையின் அடிப்படையில் அமைந்த கிறிஸ்தவ போதனைகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்கின்றனர். இந்த ‘சுவிசேஷ சத்தியம்’ இயேசு கிறிஸ்துவின் மீதும், ராஜ்யத்தின் மூலம் நியாயநிரூபணம் செய்யப்படும் யெகோவாவின் பேரரசுரிமை மீதும் கவனத்தை ஒருமுகப்படுத்துகிறது. (கலாத்தியர் 2:14) பொய்யை விரும்புகிறவர்களிடம் ‘கொடிய வஞ்சகம்’ செயல்பட கடவுள் அனுமதிப்பார்; ஆனால் இரட்சிப்போ நற்செய்தியில் விசுவாசம் வைத்து சத்தியத்தில் நடப்பதை சார்ந்திருக்கிறது.—2 தெசலோனிக்கேயர் 2:9-12; எபேசியர் 1:13, 14.
2. அப்போஸ்தலனாகிய யோவான் முக்கியமாய் எதற்காக சந்தோஷப்பட்டார், காயுவுடன் அவருக்கு எப்படிப்பட்ட உறவு இருந்தது?
2 ராஜ்ய பிரசங்கிப்பாளர்கள் ‘சத்தியத்திற்கு உடன்வேலையாட்களாக’ இருக்கிறார்கள். அப்போஸ்தலனாகிய யோவானையும் அவரது நண்பர் காயுவையும் போல் அவர்கள் சத்தியத்தை உறுதியாக பற்றிக்கொண்டு அதில் நடக்கிறார்கள். காயுவை மனதில் வைத்து யோவான் இவ்வாறு எழுதினார்: “என் பிள்ளைகள் சத்தியத்திலே நடக்கிறார்கள் என்று நான் கேள்விப்படுகிற சந்தோஷத்திலும் அதிகமான சந்தோஷம் எனக்கு இல்லை.” (3 யோவான் 3-8) வயது முதிர்ந்த யோவான், காயுவுக்கு நேரடியாக சத்தியத்தை ஒருவேளை கற்பித்திருக்காவிட்டாலும், அந்த அப்போஸ்தலனின் முதிர்வயதையும் கிறிஸ்தவ முதிர்ச்சியையும் தந்தைக்குரிய பாசத்தையும் கருத்தில் கொள்கையில், இளம் காயுவை அவரது ஆவிக்குரிய பிள்ளைகளில் ஒருவராக எண்ணியது பொருத்தமானதே.
சத்தியமும் கிறிஸ்தவ வணக்கமும்
3. ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் நடத்திய கூட்டங்களின் நோக்கமும் பயனும் என்ன?
3 சத்தியத்தைக் கற்றுக்கொள்ள ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் சபைகளாக பெரும்பாலும் வீடுகளில் ஒன்றுகூடி வந்தனர். (ரோமர் 16:3-5) இவ்வாறு அவர்கள் உற்சாகத்தைப் பெற்றுக்கொண்டு ஒருவரையொருவர் அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் ஏவினர். (எபிரெயர் 10:24, 25) பிற்பட்ட காலங்களில் கிறிஸ்தவர்களாக உரிமைபாராட்டியவர்களைக் குறித்து டெர்டுல்லியன் (சுமார் பொ.ச. 155 முதல் 220-க்கு பின் வரை) இவ்வாறு எழுதினார்: “கடவுளுடைய புத்தகங்களை வாசிக்க நாங்கள் ஒன்றுகூடுகிறோம் . . . அந்தப் பரிசுத்த வார்த்தைகளால் எங்கள் விசுவாசத்தை பேணுகிறோம், எங்கள் எதிர்பார்ப்பை பலப்படுத்துகிறோம், எங்கள் நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறோம்.”—அப்பாலஜி, அதிகாரம் 39.
4. கிறிஸ்தவ கூட்டங்களில் பாடல்களின் பங்கு என்ன?
4 ஆரம்ப கால கிறிஸ்தவ கூட்டங்களில் பாடல்களும் இடம் பெற்றதாக தெரிகிறது. (எபேசியர் 5:19; கொலோசெயர் 3:16) கிறிஸ்தவர்களென சொல்லிக் கொண்டவர்கள் பயன்படுத்திய மதுர கீதங்கள் இரண்டாம் நூற்றாண்டு விமர்சகரான செல்சஸை “பெரிதும் கவர்ந்ததால் உணர்ச்சிப்பூர்வமாக அவை ஏற்படுத்தும் பாதிப்பைக் குறித்து அவர் வருத்தப்பட்டதாக” பேராசிரியர் ஹென்ரி சாட்விக் எழுதுகிறார். அவர் தொடர்ந்து சொல்வதாவது: “கிறிஸ்தவர்களுக்கு எப்படிப்பட்ட இசை பொருத்தமானது என்பதைக் கலந்தாலோசித்த முதல் கிறிஸ்தவ எழுத்தாளர் அலெக்ஸாந்திரியாவின் கிளமென்ட் ஆவார். காமத்தைத் தூண்டும் நடன இசையைப் போல் அது இருக்கக்கூடாது என அவர் சொல்கிறார்.” (ஆரம்ப கால சர்ச் [ஆங்கிலம்], பக்கங்கள் 274-5) ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் ஒன்றுகூடியபோது எவ்வாறு பாடினார்களோ அவ்வாறே யெகோவாவின் சாட்சிகளும் பைபிள் அடிப்படையிலான பாடல்களை எப்போதும் பாடுகிறார்கள்; கடவுளையும் ராஜ்யத்தையும் போற்றிப் புகழும் வல்லமைமிக்க வேதப்பூர்வ பாடல்கள் அவற்றில் உட்பட்டுள்ளன.
5. (அ) ஆரம்ப கால கிறிஸ்தவ சபைகள் எவ்வாறு ஆவிக்குரிய வழிநடத்துதலைப் பெற்றன? (ஆ) மத்தேயு 23:8, 9-ல் உள்ள இயேசுவின் வார்த்தைகளை உண்மை கிறிஸ்தவர்கள் எவ்வாறு கடைப்பிடித்திருக்கின்றனர்?
5 ஆரம்ப கால கிறிஸ்தவ சபைகளில் கண்காணிகள் சத்தியத்தைக் கற்பித்தார்கள், உதவி ஊழியர்கள் உடன் விசுவாசிகளுக்கு பல வழிகளில் உதவினார்கள். (பிலிப்பியர் 1:1) கடவுளுடைய வார்த்தையையும் பரிசுத்த ஆவியையும் சார்ந்திருந்த ஓர் ஆளும் குழு ஆவிக்குரிய வழிநடத்துதலை அளித்தது. (அப்போஸ்தலர் 15:6, 23-31) மத சம்பந்தமான பட்டப்பெயர்கள் பயன்படுத்தப்படவில்லை, ஏனெனில் இயேசு தம் சீஷர்களுக்கு இவ்வாறு கட்டளையிட்டிருந்தார்: “நீங்களோ ரபீ என்றழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார், நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள். பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார்.” (மத்தேயு 23:8, 9) இந்த விதங்களிலும் இன்னும் பல விதங்களிலும் ஆரம்ப கால கிறிஸ்தவர்களுக்கும் யெகோவாவின் சாட்சிகளுக்கும் ஒற்றுமைகள் உண்டு.
சத்தியத்தை பிரசங்கித்ததற்காக துன்புறுத்துதல்
6, 7. உண்மை கிறிஸ்தவர்கள் சமாதான செய்தியை அறிவித்தபோதிலும் எவ்வாறு நடத்தப்பட்டிருக்கிறார்கள்?
6 ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் சமாதானத்தின் ராஜ்ய செய்தியை பிரசங்கித்தபோதிலும், இயேசுவைப் போலவே துன்புறுத்தப்பட்டார்கள். (யோவான் 15:20; 17:14) முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள், “கடுகளவும் தீமை செய்ய நினையாத தொகுதியினர்; நாட்டின் நலனுக்கு கெடுதி விளைவிக்கும் எண்ணத்தை அல்லது விருப்பத்தை அவர்கள் ஒருபோதும் வளர்த்துக் கொள்ளவில்லை” என சரித்திராசிரியர் ஜான் எல். ஃபான் மோஷைம் கூறினார். “வணக்கத்தில் கிறிஸ்தவர்கள் பின்பற்றிய எளிமையே அவர்கள்மீது ரோமர்களுக்கு எரிச்சல் உண்டாகக் காரணம்; அது பிற தேசத்தாருடைய புனித சடங்குகளைப் போல் துளியும் இருக்கவில்லை” என்றும் டாக்டர் மோஷைம் கூறினார். மேலும், “அவர்களுக்கு பலிகளும், ஆலயங்களும், விக்கிரகங்களும், குறிசொல்வதற்கான கோயில்களும், ஆசாரியத்துவமும் இல்லாதிருந்தது; இவை இல்லாத மதமே இருக்க முடியாது என எண்ணிய அறியாமையுள்ள ஜனங்களின் நிந்தைகளை சம்பாதித்துக்கொள்ள இதுவே போதுமானதாக இருந்தது. ஆகவே அவர்கள் ஒருவிதத்தில் நாத்திகர்களாக கருதப்பட்டனர்; ரோம சட்டங்களின்படி நாத்திகர்கள் என குற்றம் சாட்டப்பட தகுந்தவர்கள், மனித சமுதாயத்தின் தொல்லைதரும் ஜந்துக்கள் என அறிவிக்கப்பட்டனர்” என்றும் சொன்னார்.
7 விக்கிரகங்களை வைத்து பிழைப்பு நடத்திய ஆசாரியர்களும் கைவினைஞர்களும் மற்றவர்களும், விக்கிரகாராதனையில் ஈடுபடாத கிறிஸ்தவர்களுக்கு எதிராக மக்களை தூண்டிவிட்டனர். (அப்போஸ்தலர் 19:23-40; 1 கொரிந்தியர் 10:14) டெர்டுல்லியன் இவ்வாறு எழுதினார்: “நாட்டிற்கு வரும் எந்தக் கெடுதிக்கும் மக்களுக்கு சம்பவிக்கும் எந்த அசம்பாவிதத்திற்கும் கிறிஸ்தவர்களே காரணமென அவர்கள் நினைத்தார்கள். டைபர் ஆறு கரைபுரண்டு மதில்களை எட்டிவிட்டதா, நைல் நதியின் நீர் வயல்களுக்கு சரிவர பாயவில்லையா, வானிலையில் மாற்றமில்லையா, பூமியதிர்ச்சியோ பஞ்சமோ கொள்ளை நோயோ ஏற்பட்டதா, உடனே, ‘கிறிஸ்தவர்களை சிங்கத்திடம் தூக்கி எறியுங்கள்’ என்ற கூக்குரலே எழும்பும்.” என்ன விளைவுகளை சந்திக்க நேர்ந்தாலும் உண்மை கிறிஸ்தவர்கள் ‘விக்கிரகங்களுக்கு விலகி தங்களைக் காத்துக்கொள்கிறார்கள்.’—1 யோவான் 5:21.
சத்தியமும் மத சடங்குகளும்
8. சத்தியத்தில் நடப்பவர்கள் ஏன் கிறிஸ்மஸ் கொண்டாடுவதில்லை?
8 சத்தியத்தில் நடப்பவர்கள் வேதப்பூர்வமற்ற சடங்குகளை தவிர்க்கிறார்கள்; காரணம், ‘ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமில்லை.’ (2 கொரிந்தியர் 6:14-18) உதாரணத்திற்கு, டிசம்பர் 25 அன்று அவர்கள் கிறிஸ்மஸ் கொண்டாடுவதில்லை. “கிறிஸ்து பிறந்த சரியான தேதி ஒருவருக்கும் தெரியாது” என த உவார்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா ஒப்புக்கொள்கிறது. த என்ஸைக்ளோப்பீடியா அமெரிக்கானா (1956 பதிப்பு) குறிப்பிடுகிறபடி, “டிசம்பர் மத்திபத்தில் கொண்டாடப்பட்ட சாட்டர்னேலியா என்ற ரோம பண்டிகையிலிருந்தே கிறிஸ்மஸோடு சம்பந்தப்பட்ட அநேக குதூகல பழக்கங்கள் பிறந்தன.” மெக்ளின்டாக் மற்றும் ஸ்ட்ராங்கின் ஸைக்ளோப்பீடியா சொல்வதாவது: “கிறிஸ்மஸ் கொண்டாட்டம் கடவுள் கொடுத்த கட்டளை அல்ல, அது பு[திய] ஏ[ற்பாட்டில்] காணப்படுவதும் இல்லை.” இயேசுவின் காலத்தில் தினசரி வாழ்வு என்ற ஆங்கில புத்தகம் இவ்வாறு குறிப்பிடுகிறது: “மந்தைகள் . . . குளிர்காலத்தை தொழுவத்தில் கழித்தன; இந்த ஒரு விஷயத்திலேயே, பாரம்பரியமாக குளிர்காலத்தில் கொண்டாடப்படும் கிறிஸ்மஸின் தேதி சரியாயிருக்க முடியாதென தெரிகிறது, ஏனெனில் மேய்ப்பர்கள் வயல்வெளிகளில் இருந்ததாக சுவிசேஷத்தில் சொல்லப்பட்டிருக்கிறதே.”—லூக்கா 2:8-11.
9. யெகோவாவின் ஆரம்ப கால ஊழியர்களும் இன்றைய ஊழியர்களும் ஏன் ஈஸ்டர் கொண்டாடுவதில்லை?
9 ஈஸ்டர் பண்டிகை கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை நினைவுகூருவதற்கு கொண்டாடப்படுவதாக சொன்னாலும் நம்பத்தக்க ஆதாரங்களின்படி அது பொய் வணக்கத்தோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. ஈஸ்டர், “ஒளிக்கும் வசந்தத்திற்குமான ஜெர்மானிய கடவுளை கௌரவிப்பதற்காக ஆரம்பத்தில் கொண்டாடப்பட்ட வசந்தகால பண்டிகை; அக்கடவுள் ஆங்லோ-சாக்ஸனில் ஈஸ்டர் [அல்லது ஈயோஸ்டர்] என அழைக்கப்பட்டது” என த வெஸ்ட்மின்ஸ்டர் டிக்ஷ்னரி ஆஃப் த பைபிள் சொல்கிறது. எப்படியிருந்தாலும், என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா (11-வது பதிப்பு) இவ்வாறு சொல்கிறது: “புதிய ஏற்பாட்டில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டதாக எந்தக் குறிப்பும் இல்லை.” ஈஸ்டர் ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் கொண்டாடிய பண்டிகையல்ல, இன்று யெகோவாவின் மக்களும் அதைக் கொண்டாடுவது இல்லை.
10. இயேசு எந்த ஆசரிப்பை துவக்கி வைத்தார், அதை யார் சரியாக அனுசரிக்கின்றனர்?
10 இயேசு தாம் பிறந்த நாளையோ உயிர்த்தெழுந்த நாளையோ நினைவுகூரும்படி தம் சீஷர்களுக்கு கட்டளையிடவில்லை; ஆனால் தமது தியாக மரணத்தை நினைவுகூரும் ஆசரிப்பை துவக்கி வைத்தார். (ரோமர் 5:8) சொல்லப்போனால், நினைவுகூரும்படி தம் சீஷர்களுக்கு அவர் கட்டளையிட்ட ஒரே ஆசரிப்பு இதுதான். (லூக்கா 22:19, 20) கர்த்தருடைய இராப் போஜனம் என்றும் அழைக்கப்படும் இந்த வருடாந்தர நிகழ்ச்சி இன்னமும் யெகோவாவின் சாட்சிகளால் அனுசரிக்கப்படுகிறது.—1 கொரிந்தியர் 11:20-26.
சத்தியம் பூமியெங்கும் அறிவிக்கப்படுகிறது
11, 12. சத்தியத்தில் நடப்பவர்கள் எவ்வாறு தங்கள் பிரசங்க வேலையை எப்போதும் ஆதரித்திருக்கின்றனர்?
11 சத்தியத்தை அறிந்திருப்பவர்கள், நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்காக தங்கள் நேரத்தையும் சக்தியையும் மற்ற வளங்களையும் அர்ப்பணிப்பதை பாக்கியமாக கருதுகிறார்கள். (மாற்கு 13:10) ஆரம்ப கால கிறிஸ்தவர்களின் பிரசங்க ஊழியம், மனமுவந்து அளிக்கப்பட்ட நன்கொடைகளால் முழுமையாக ஆதரிக்கப்பட்டது. (2 கொரிந்தியர் 8:12; 9:7) டெர்டுல்லியன் இவ்வாறு எழுதினார்: “பணம் செலுத்த பெட்டி இருந்தாலும், மதத்தை ஏதோவொரு வியாபார ஒப்பந்தம் போல் கருதி நுழைவுக் கட்டணங்கள் வசூலிக்கப்படுவது இல்லை. ஒவ்வொருவரும் மாதந்தோறும்—அல்லது தனக்கு விருப்பமான போதெல்லாம்—சிறு தொகையை அளிக்கிறார்; அதுவும் மனதில் விருப்பமும் கையில் காசும் இருக்கையில் மட்டுமே அளிக்கிறார். ஏனெனில் யாரும் வற்புறுத்தப்படுவது கிடையாது; அது மனமுவந்து அளிக்கப்படும் நன்கொடை.”—அப்பாலஜி, அதிகாரம் 39.
12 யெகோவாவின் சாட்சிகளது உலகளாவிய ராஜ்ய பிரசங்க வேலையும் மனமுவந்து அளிக்கப்படும் நன்கொடைகளால் ஆதரிக்கப்படுகிறது. சாட்சிகள் மட்டுமல்லாமல், ஆர்வமுள்ள மற்றவர்களும் நன்றியோடு இந்த ஊழியத்திற்கு நன்கொடைகள் தருகின்றனர்; அப்படி தருவதை பாக்கியமாகவும் கருதுகின்றனர். இந்த விஷயத்திலும் ஆரம்ப கால கிறிஸ்தவர்களுக்கும் யெகோவாவின் சாட்சிகளுக்கும் ஒற்றுமை உண்டு.
சத்தியமும் தனிப்பட்ட நடத்தையும்
13. நடத்தை சம்பந்தப்பட்ட விஷயத்தில் பேதுருவின் எந்தப் புத்திமதியை யெகோவாவின் சாட்சிகள் ஏற்று நடக்கின்றனர்?
13 சத்தியத்தில் நடப்பவர்களாக ஆரம்ப கால கிறிஸ்தவர்கள், அப்போஸ்தலன் பேதுருவுடைய இந்தப் புத்திமதிக்குக் கீழ்ப்படிந்தனர்: “புறஜாதிகள் உங்களை அக்கிரமக்காரரென்று விரோதமாய்ப் பேசும் விஷயத்தில், அவர்கள் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு அவற்றினிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும்படி நீங்கள் அவர்களுக்குள்ளே நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள்.” (1 பேதுரு 2:12) யெகோவாவின் சாட்சிகள் இந்த வார்த்தைகளை ஏற்று நடக்கின்றனர்.
14. ஒழுக்கங்கெட்ட பொழுதுபோக்கை கிறிஸ்தவர்கள் எப்படி கருதுகின்றனர்?
14 விசுவாச துரோகம் தலைதூக்க ஆரம்பித்த பிறகும் கிறிஸ்தவர்களென சொல்லிக்கொண்டவர்கள் ஒழுக்கங்கெட்ட செயல்களைத் தவிர்த்தனர். திருச்சபை சார்ந்த சரித்திர பேராசிரியராகிய டபிள்யூ. டி. கில்லன் இவ்வாறு எழுதினார்: “இரண்டாம், மூன்றாம் நூற்றாண்டுகளில் மாநகரங்கள் ஒவ்வொன்றிலும் இருந்த நாடக அரங்கங்களே பெரிதும் வசீகரிப்பவையாக இருந்தன; நடிகர்கள் ஒழுக்கங்கெட்டவர்களாக, படுமோசமாக இருந்தபோதிலும் அவர்களது நாடகங்கள் அக்காலத்து வக்கிர ஆசைகளுக்கு தொடர்ந்து தீனிபோட்டன. . . . உண்மை கிறிஸ்தவர்கள் அனைவரும் அந்த நாடக அரங்கத்தை வெறுத்தனர். . . . அதன் ஆபாசத்தை அருவருத்தனர்; புறமத தெய்வங்களிடமும் தேவியரிடமும் அது தொடர்ந்து கவனத்தை ஈர்த்தது, கிறிஸ்தவர்களது மத நம்பிக்கைகளை அவமதிப்பதாக இருந்தது.” (பூர்வ சர்ச் [ஆங்கிலம்], பக்கங்கள் 318-19) இன்று இயேசுவின் உண்மையான சீஷர்களும் ஆபாசத்தையும் ஒழுக்கங்கெட்ட பொழுதுபோக்குகளையும் தவிர்க்கின்றனர்.—எபேசியர் 5:3-5.
சத்தியமும் ‘மேலான அதிகாரங்களும்’
15, 16. ‘மேலான அதிகாரங்கள்’ யார், சத்தியத்தில் நடப்பவர்கள் அவர்களை எப்படி கருதியிருக்கின்றனர்?
15 ஆரம்ப கால கிறிஸ்தவர்களின் நன்நடத்தை மத்தியிலும் பெரும்பாலான ரோமப் பேரரசர்கள் அவர்களை தவறாக எடைபோட்டனர். அவர்களை “ஒருவித வெறுக்கத்தக்க ஆர்வலர்களாக” கருதினரென சரித்திராசிரியர் ஈ. ஜி. ஹார்டி சொல்கிறார். பித்தினியாவின் ஆளுநரான இளைய பிளைனியும் பேரரசனான டிராஜனும் எழுதிக்கொண்ட கடிதங்கள், பொதுவாக அரசு அதிகாரிகள் கிறிஸ்தவத்தின் உண்மையான இயல்பை அறியாதிருந்ததைக் காட்டுகின்றன. கிறிஸ்தவர்கள் நாட்டை எவ்வாறு கருதுகின்றனர்?
16 இயேசுவின் ஆரம்ப கால சீஷர்களைப்போல் யெகோவாவின் சாட்சிகள் ‘மேலான அதிகாரங்களாகிய’ அரசாங்கங்களுக்கு சம்பந்தப்பட்ட கீழ்ப்படிதலைக் காட்டுகிறார்கள். (ரோமர் 13:1-7) மனித கட்டளையும் தெய்வீக சித்தமும் முரண்படும்போது அவர்கள், “மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது” என்பதை உணர்ந்து செயல்படுகின்றனர். (அப்போஸ்தலர் 5:29) இயேசுவுக்குப் பிறகு—கிறிஸ்தவத்தின் வெற்றி என்ற ஆங்கில புத்தகம் இவ்வாறு குறிப்பிடுகிறது: “கிறிஸ்தவர்கள் பேரரசர் வணக்கத்தில் ஈடுபடாவிட்டாலும் கலகத்தை தூண்டிவிடவில்லை; அவர்களது மதம் விநோதமாகவும் சிலசமயம் புறதேசத்தாரின் கண்ணோட்டத்தில் விரும்பத்தகாததாகவும் இருந்தபோதிலும் பேரரசுக்கு அது எவ்விதத்திலும் அச்சுறுத்தலாக இருக்கவில்லை.”
17. (அ) ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் எந்த அரசாங்கத்தைக் குறித்து அறிவித்தார்கள்? (ஆ) கிறிஸ்துவை உண்மையாய் பின்பற்றுபவர்கள் ஏசாயா 2:4-ல் உள்ள வார்த்தைகளை தங்கள் வாழ்க்கையில் எப்படி பின்பற்றுகிறார்கள்?
17 முற்பிதாக்களாகிய ஆபிரகாமும் ஈசாக்கும் யாக்கோபும் ‘தேவன் தாமே உண்டாக்கிய [வாக்குப்பண்ணப்பட்ட] நகர’த்தின்மீது விசுவாசம் வைத்தனர்; அதுபோலவே ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் கடவுளுடைய ராஜ்யத்தை அறிவித்தனர். (எபிரெயர் 11:8-10) இயேசுவின் சீஷர்கள், தங்கள் எஜமானரைப் போலவே ‘உலகத்தாராக இருக்கவில்லை.’ (யோவான் 17:14-16) மனிதப் போர்களையும் சண்டை சச்சரவுகளையும் பொருத்ததில், அவர்கள் ‘தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாக அடித்து’ சமாதானத்தை நாடினர். (ஏசாயா 2:4) ஆர்வத்திற்குரிய ஓர் ஒற்றுமையைக் குறித்து சர்ச் சரித்திரத்தின் விரிவுரையாளரான ஜஃப்ரி எஃப். நட்டால் இவ்வாறு குறிப்பிட்டார்: “போரைக் குறித்த ஆரம்ப கால கிறிஸ்தவர்களின் மனப்பான்மை யெகோவாவின் சாட்சிகள் என தங்களை அழைத்துக் கொள்பவர்களின் மனப்பான்மையோடு வெகுவாக ஒத்திருக்கிறது, இந்த உண்மையை ஏற்றுக்கொள்வது நமக்கு மிகக் கஷ்டமாக இருக்கிறது.”
18. ஏன் எந்த அரசாங்கமும் எக்காரணத்திற்காகவும் யெகோவாவின் சாட்சிகளுக்குப் பயப்பட வேண்டியதில்லை?
18 ‘மேலான அதிகாரங்களுக்கு’ கீழ்ப்பட்டு நடுநிலைமையைக் காத்துக்கொண்ட ஆரம்ப கால கிறிஸ்தவர்கள், எந்த அரசியல் அமைப்புகளுக்கும் அச்சுறுத்தலாக இருக்கவில்லை; யெகோவாவின் சாட்சிகளும் அப்படித்தான். “யெகோவாவின் சாட்சிகள் எந்த அரசாங்கத்திற்காவது எந்த விதத்திலாவது அச்சுறுத்தலாக இருப்பதாக நம்ப வேண்டுமானால் கற்பனையிலேயே முடியும்; அதுவும் குருட்டுத்தனமாக, சந்தேக மனப்பான்மையுடன் கற்பனை செய்தாலே முடியும்” என ஒரு வட அமெரிக்க பதிப்பாசிரியர் எழுதினார். “ஒரு மத வகுப்பினர் எந்த அளவிற்கு தேசவிரோத காரியங்களில் ஈடுபடாதவர்களாகவும் சமாதானத்தை நேசிப்பவர்களாகவும் இருக்க முடியுமோ அந்த அளவிற்கு அவர்கள் இருக்கிறார்கள்.” உண்மை தெரிந்த அதிகாரிகளோ, எக்காரணத்திற்காகவும் யெகோவாவின் சாட்சிகளுக்குப் பயப்பட வேண்டியதில்லை என அறிந்திருக்கிறார்கள்.
19. வரிகள் செலுத்துவதைப் பொருத்ததில் ஆரம்ப கால கிறிஸ்தவர்களையும் யெகோவாவின் சாட்சிகளையும் பற்றி என்ன சொல்லலாம்?
19 ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் ‘மேலான அதிகாரங்களுக்கு’ மரியாதை காட்டிய ஒரு வழி, தங்கள் வரிகளை செலுத்தியதன் மூலமாகும். கிறிஸ்தவர்கள் “மற்ற எல்லாரையும்விட அதிக மனமுவந்து” வரிகளை செலுத்தினர் என ஜஸ்டின் மார்டர், ரோம பேரரசரான அன்டோனினஸ் பையஸுக்கு (பொ.ச. 138-161) எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டார். (ஃபர்ஸ்ட் அப்பாலஜி, அதிகாரம் 17) வரிவசூலிப்பவர்கள், தவறாமல் வரிகளை செலுத்தும் “கிறிஸ்தவர்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறார்கள்” என ரோம அரசர்களுக்கு டெர்டுல்லியன் சொன்னார். (அப்பாலஜி, அதிகாரம் 42) பாக்ஸ் ரொமானா அல்லது ரோம சமாதானம், கிறிஸ்தவர்களுக்கு பயனளித்தது; அதன் சட்டமும் ஒழுங்கும் நேர்த்தியான சாலைகளும் ஓரளவு பாதுகாப்பான கடற்பிரயாணமும் அவர்களுக்கு பிரயோஜனமளித்தன. சமுதாயத்திற்குத் தாங்கள் கடன்பட்டிருப்பதை உணர்ந்து, “இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள்” என்ற இயேசுவின் அறிவுரைக்கு கிறிஸ்தவர்கள் கீழ்ப்படிந்தார்கள். (மாற்கு 12:17) இன்று யெகோவாவின் மக்களும் இந்த அறிவுரைக்குக் கீழ்ப்படிகிறார்கள்; ஆகவே வரிகள் செலுத்தும் விஷயத்திலும் மற்றவற்றிலும் நேர்மையோடு நடந்துகொள்வதற்காக பாராட்டப்படுகிறார்கள்.—எபிரெயர் 13:18.
சத்தியம்—ஐக்கியப்படுத்தும் கட்டு
20, 21. சமாதானமான சகோதரத்துவத்தைப் பொருத்ததில், ஆரம்ப கால கிறிஸ்தவர்களின் விஷயத்திலும் யெகோவாவின் இன்றைய ஊழியர்களின் விஷயத்திலும் எது உண்மையாக இருக்கிறது?
20 ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் சத்தியத்தில் நடந்ததால், சமாதான சகோதரத்துவத்தில் ஐக்கியப்பட்டிருந்தார்கள்; இன்று யெகோவாவின் சாட்சிகளும் அவ்வாறே ஐக்கியப்பட்டிருக்கிறார்கள். (அப்போஸ்தலர் 10:34, 35) த மாஸ்கோ டைம்ஸ்-ல் பிரசுரிக்கப்பட்ட ஒரு கடிதம் இவ்வாறு சொன்னது: “[யெகோவாவின் சாட்சிகள்] மிக சிநேகப்பான்மையான, அன்பான, பணிவான ஜனங்கள் என்பது யாவரும் அறிந்ததே; அவர்களோடு பழகுவது மிக எளிது, மற்றவர்களை அவர்கள் எந்த விஷயத்திலும் வற்புறுத்துவது கிடையாது, மற்றவர்களோடு எப்போதும் சமாதானமாக இருக்கவே விரும்புகிறார்கள். . . . அவர்கள் மத்தியில் லஞ்சம் வாங்குவோரும் குடிவெறியரும் போதைப்பொருளுக்கு அடிமையானோரும் கிடையாது, இதற்கு காரணம் மிக தெளிவானது: தங்கள் பைபிள் சார்ந்த நம்பிக்கைகளின் அடிப்படையில் அனைத்தையும் செய்ய அல்லது சொல்ல அவர்கள் முயலுகிறார்கள். யெகோவாவின் சாட்சிகளைப் போல் உலகெங்கும் உள்ளவர்கள் பைபிளின்படி வாழ முயற்சியாவது செய்தால், இந்தக் கொடூர உலகம் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும்.”
21 ஆரம்ப கால கிறிஸ்தவத்தின் என்ஸைக்ளோப்பீடியா (ஆங்கிலம்) இவ்வாறு குறிப்பிடுகிறது: “ஆரம்ப கால சர்ச் ஒரு புதிய மனித சமுதாயமாக தன்னைக் கருதியது; முன்பு விரோதிகளாயிருந்த யூதர்களும் புறதேசத்தாரும் அதில் சமாதானமாக ஒன்றுபட்டு வாழ முடிந்தது.” யெகோவாவின் சாட்சிகளும் சமாதானத்தை நேசிக்கும் சர்வதேச சகோதரத்துவமாக—உண்மையிலேயே ஒரு புதிய உலக சமுதாயமாக—இருக்கின்றனர். (எபேசியர் 2:11-18; 1 பேதுரு 5:9; 2 பேதுரு 3:13) தென் ஆப்பிரிக்காவின் பிரிடோரியா மைதானத்தின் தலைமை பாதுகாப்பு அதிகாரி, எல்லா இனங்களையும் சேர்ந்த யெகோவாவின் சாட்சிகள் சமாதானத்தோடு மாநாட்டிற்கு ஒன்றுகூடி வந்ததைக் கண்டு இப்படிச் சொன்னார்: “அனைவருடைய மரியாதையான நடத்தை, ஒருவருக்கொருவர் பாசமாக பேசும் விதம், கடந்த சில நாட்களாக வெளிக்காட்டிய மனப்பான்மை—இவை அனைத்தும் உங்கள் சமுதாயத்தினரின் தரத்திற்கும் நீங்கள் அனைவரும் சந்தோஷமான ஒரே குடும்பமாக வாழ்கிறீர்கள் என்பதற்கும் அத்தாட்சி அளிக்கின்றன.”
சத்தியத்தைக் கற்பிப்பதால் பெறும் ஆசீர்வாதம்
22. கிறிஸ்தவர்கள் சத்தியத்தை வெளிப்படுத்தி வந்திருப்பதால் என்ன நடந்திருக்கிறது?
22 பவுலும் மற்ற கிறிஸ்தவர்களும் தங்கள் நடத்தையாலும் பிரசங்க ஊழியத்தாலும் ‘சத்தியத்தை வெளிப்படுத்தினார்கள்.’ (2 கொரிந்தியர் 4:2) யெகோவாவின் சாட்சிகளும் அதேபோல் சகல தேசங்களுக்கும் சத்தியத்தைக் கற்பிக்கிறார்கள் என்று நீங்கள் ஒப்புக்கொள்ள மாட்டீர்களா? பூமியெங்குமுள்ள மக்கள் உண்மை வணக்கத்தை ஏற்றுக்கொண்டு, ‘[யெகோவாவுடைய] ஆலயமாகிய பர்வதத்திற்கு’ திரண்டு வருகிறார்கள்; இவர்களது எண்ணிக்கை எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. (ஏசாயா 2:2, 3) ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கானோர் கடவுளுக்கு தங்களை ஒப்புக்கொடுத்து அதன் அடையாளமாக முழுக்காட்டுதல் பெறுகிறார்கள்; இதனால் பல புதிய சபைகள் உருவாகின்றன.
23. எல்லா தேசத்தாருக்கும் சத்தியத்தைக் கற்பிப்போரை நீங்கள் எவ்வாறு கருதுகிறீர்கள்?
23 யெகோவாவின் மக்கள் பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் உண்மை வணக்கத்தில் ஐக்கியப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் காட்டும் அன்பு அவர்களை இயேசுவின் சீஷர்களாக அடையாளம் காட்டுகிறது. (யோவான் 13:35) ‘தேவன் மெய்யாய் அவர்களுக்குள்ளே இருப்பதை’ உங்களால் காண முடிகிறதா? (1 கொரிந்தியர் 14:25) எல்லா தேசத்தாருக்கும் சத்தியத்தைக் கற்பிப்போருக்கு நீங்கள் ஆதரவு அளிக்கிறீர்களா? அளிக்கிறீர்கள் என்றால், சத்தியத்திற்கு எப்போதும் நன்றியுணர்வு காட்டி, அதில் என்றென்றும் நடக்கும் பாக்கியத்தைப் பெறுவீர்களாக.
எப்படி பதிலளிப்பீர்கள்?
• வணக்கமுறையை பொருத்ததில் ஆரம்ப கால கிறிஸ்தவர்களுக்கும் யெகோவாவின் சாட்சிகளுக்கும் உள்ள ஒற்றுமை என்ன?
• சத்தியத்தில் நடப்பவர்கள் அனுசரிக்கும் ஒரு மத ஆசரிப்பு என்ன?
• ‘மேலான அதிகாரங்கள்’ யார், கிறிஸ்தவர்கள் அவர்களை எப்படிக் கருதுகிறார்கள்?
• சத்தியம் எவ்வாறு ஐக்கியப்படுத்தும் கட்டாக இருக்கிறது?
[பக்கம் 21-ன் படம்]
சத்தியத்தில் நடப்பவர்களுக்கு கிறிஸ்தவ கூட்டங்கள் எப்போதுமே ஆசீர்வாதமாக இருந்திருக்கின்றன
[பக்கம் 23-ன் படங்கள்]
இயேசு தமது தியாக மரணத்தை நினைவுகூரும்படி சீஷர்களுக்குக் கட்டளையிட்டார்
[பக்கம் 24-ன் படம்]
ஆரம்ப கால கிறிஸ்தவர்களைப் போல் யெகோவாவின் சாட்சிகளும் ‘மேலான அதிகாரங்களுக்கு’ மரியாதை காட்டுகிறார்கள்