“வசனங்களை ஒன்றோடொன்று ஒப்பிட்டுப் பார்ப்போம்”
நியு யார்க் நகரத்திற்குச் செல்லும் ரயிலில் ஒரு துண்டுப்பிரதியை ஒரு நபர் கண்டெடுத்தார். ‘மனித ஆத்துமா சாகும்’ என அதில் எழுதப்பட்டிருந்தது. அந்த நபர் ஒரு மதப் போதகராக இருந்ததால் ஆவலோடு அதை வாசிக்க ஆரம்பித்தார். அவருக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது, ஏனெனில் ஆத்துமா அழியாது என்ற போதனையை அவர் இதற்கு முன் சந்தேகித்ததே கிடையாது. இந்தத் துண்டுப்பிரதியை யார் எழுதினார்கள் என்று அவருக்கு அப்போது தெரியவில்லை. இருந்தாலும் அதன் விளக்கம் நியாயமாகவும், பைபிள் அடிப்படையிலும் இருந்ததை அவர் கண்டார்; அதிலுள்ள தகவலை ஆழமாக ஆராய்ந்து பார்க்க முடிவு செய்தார்.
இந்த மதப் போதகரின் பெயர் ஜார்ஜ் ஸ்டார்ஸ். இந்தச் சம்பவம் 1837-ல் நிகழ்ந்தது; இந்த வருடத்தில்தான், பரிணாமக் கொள்கையாக உருவெடுக்கவிருந்த கருத்துகளை சார்ல்ஸ் டார்வின் முதன்முதல் தன் நோட்டில் எழுதி வைத்தார். அந்தச் சமயத்தில் பெரும்பாலோர் பக்திமான்களாக, கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாக இருந்தார்கள். அநேகர் பைபிளை வாசித்தார்கள், அதன் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்தார்கள்.
பென்ஸில்வேனியாவிலுள்ள பிலடெல்ஃபியாவைச் சேர்ந்த ஹென்ரி க்ரூ என்பவர்தான் அந்தத் துண்டுப்பிரதியை எழுதியவர் என்பதைப் பின்னர் ஸ்டார்ஸ் கண்டுபிடித்தார். “வேதவசனமே . . . மிகச் சிறந்த விதத்தில் சுயவிளக்கம் அளிக்கிறது” என்ற நியதியை க்ரூ உறுதியாய் நம்பினார். இவரும் இவருடன் கூட்டுறவு வைத்திருந்தவர்களும் பைபிளுக்கு இசைய தங்கள் வாழ்க்கையையும் செயல்களையும் மாற்ற வேண்டுமென்ற எண்ணத்தில் அதைப் படித்து வந்தார்கள். அப்படி இவர்கள் படித்து வந்தது, அருமையான சில பைபிள் சத்தியங்களை வெட்டவெளிச்சமாக்கியது.
க்ரூ எழுதிய துண்டுப்பிரதியால் ஊக்கம் பெற்ற ஸ்டார்ஸ், ஆத்துமாவைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்பதைக் கவனமாக ஆராய்ந்தார், அதிலுள்ள தகவலை தன் சக மதப் போதகர்கள் சிலருடன் கலந்துபேசினார். ஐந்து ஆண்டுகள் கண்ணும் கருத்துமாய் ஆராய்ந்து படித்த பிறகு இறுதியில், புதிதாகக் கண்டுபிடித்த பைபிள் சத்தியங்களின் மணிக்கற்களை விளம்பரப்படுத்த முடிவுசெய்தார். முதலில், 1842-ம் வருடம், ஞாயிற்றுக்கிழமையில் கொடுப்பதற்காக ஒரு பிரசங்கத்தைத் தயாரித்தார். இருப்பினும், அந்தப் பொருளை முழுமையாக விளக்குவதற்கு இன்னும் சில பிரசங்கங்களைத் தயாரித்து அளிக்க வேண்டுமென நினைத்தார். கடைசியில், மனித ஆத்துமா சாகும் என்பதை நிரூபிக்க அவர் ஆறு பிரசங்கங்களைத் தயாரித்தார்; அவற்றை ஆறு பிரசங்கங்கள் (ஆங்கிலம்) என்ற தலைப்பில் ஒரு புத்தகமாக வெளியிட்டார். கிறிஸ்தவமண்டலத்தாருடைய கொள்கைகள் கடவுளை அவமதிப்பவையாக இருக்கின்றன; அந்தக் கொள்கைகளின் அடியில் புதைந்து கிடந்த அழகான சத்தியத்தை உலகிற்கு வெளிப்படுத்த ஸ்டார்ஸ் ஒரு வசனத்தை மற்றொரு வசனத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தார்.
அழியாத ஆத்துமா —பைபிள் போதனையா?
இயேசுவின் அபிஷேகம் செய்யப்பட்ட சீஷர்கள் உத்தமர்களாய் இருந்ததற்காக அழியாமையைப் பரிசாகப் பெற்றார்கள் என பைபிள் குறிப்பிடுகிறது. (1 கொரிந்தியர் 15:50-56) உத்தமர்களுக்கு அழியாமைதான் பரிசு என்றால் துன்மார்க்கருக்கு அழியாமையைக் கொடுக்க முடியாது என ஸ்டார்ஸ் நியாயப்படுத்தினார். இதை வெறுமனே ஊகிப்பதற்குப் பதிலாக அவர் வேதவசனங்களை ஆராய்ந்தார். கிங் ஜேம்ஸ் வர்ஷன் பைபிளில், மத்தேயு 10:28-ஐ ஆராய்ந்தார், அது இவ்வாறு சொல்கிறது: “ஆத்துமாவையும் உடலையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.” ஆகவே, ஆத்துமா அழியக் கூடியதே என்பதைப் புரிந்துகொண்டார். அவர் எசேக்கியேல் 18:4-ஐயும் குறிப்பிட்டார், அது இவ்வாறு சொல்கிறது: ‘பாவம் செய்கிற ஆத்துமா சாகும்.’ பைபிள் முழுவதையும் ஆராய்ந்தபோது சத்தியத்தின் அழகு கண்ணுக்குத் தெரிந்தது. “இந்த விஷயத்தில் என் கருத்து சரியானதென்றால், [அழியாத ஆத்துமா என்ற] பொதுவான கொள்கையால் புரியாதிருந்த வேதவசனங்களின் பெரும் பகுதிகள், இப்போது தெளிவானவையாகவும், அழகானவையாகவும், அர்த்தம் பொதிந்தவையாகவும், வலிமைமிக்கவையாகவும் ஆகியிருக்கின்றன” என ஸ்டார்ஸ் எழுதினார்.
அப்படியென்றால் யூதா 7 போன்ற வசனங்களைப் பற்றி என்ன சொல்லலாம்? அங்கு இவ்வாறு வாசிக்கிறோம்: “அப்படியே சோதோம் கொமோரா பட்டணத்தார்களும், அவைகளைச் சூழ்ந்த பட்டணத்தார்களும், அவர்களைப்போல் விபசாரம்பண்ணி, அந்நிய மாம்சத்தைத் தொடர்ந்து, நித்திய அக்கினியின் ஆக்கினையை அடைந்து, திருஷ்டாந்தமாக வைக்கப்பட்டிருக்கிறார்கள்.” இந்த வசனத்தை வாசிக்கும்போது, சோதோம் கொமோராவில் அழிக்கப்பட்ட ஆத்துமாக்கள், நெருப்பில் என்றென்றும் வதைக்கப்படுகின்றன என்ற முடிவுக்கு சிலர் வரலாம். ஆனால், “வசனங்களை ஒன்றோடொன்று ஒப்பிட்டுப் பார்ப்போம்” என ஸ்டார்ஸ் எழுதினார். அவர் பின்னர் 2 பேதுரு 2:5, 6-ஐ மேற்கோள் காட்டினார், அது இவ்வாறு சொல்கிறது: ‘பூர்வ உலகத்தையும் தப்பவிடாமல், . . . நோவாவை . . . காப்பாற்றி, அவபக்தியுள்ளவர்கள் நிறைந்த உலகத்தின்மேல் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணி; சோதோம் கொமோரா என்னும் பட்டணங்களையும் சாம்பலாக்கிக் கவிழ்த்துப்போட்டு, ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து, பிற்காலத்திலே அவபக்தியாய் நடப்பவர்களுக்கு அவைகளைத் திருஷ்டாந்தமாக வைத்தார்.’ ஆம், சோதோம் கொமோரா பட்டணங்கள் சாம்பலாயின, அதன் குடிமக்களோடு நித்தியத்திற்குமாக அழிக்கப்பட்டன.
ஸ்டார்ஸ் இவ்வாறு விளக்கினார்: “யூதா புத்தகத்தைப் புரிந்துகொள்ள பேதுரு புத்தகம் கூடுதல் தகவலை அளிக்கிறது. இந்த இரண்டு புத்தகங்களும், பாவிகள் மீது தம் வெறுப்பை கடவுள் எப்படி வெளிப்படுத்தினார் என்பதைத் தெள்ளத் தெளிவாகக் காட்டுகின்றன. . . . பண்டைய உலகின் மீது, அதாவது சோதோம் கொமோரா மீது, சுமத்தப்பட்ட தண்டனைத் தீர்ப்புகள், உலகின் முடிவு வரும்வரை வாழ்கிற மனிதர் அனைவருக்கும் நிரந்தரமான, முடிவற்ற, ‘நித்திய’ படிப்பினை, எச்சரிக்கை, அல்லது ‘திருஷ்டாந்தமாக’ இருக்கின்றன.” எனவேதான், சோதோம் கொமோராவை அழித்த நெருப்பின் பாதிப்பை முடிவில்லாதது என யூதா குறிப்பிட்டார். இது, மனித ஆத்துமா அழியும் என்ற உண்மையை எந்த விதத்திலும் மாற்றிவிடாது.
தன் கருத்தை ஆதரித்த வசனங்களை மட்டுமே பயன்படுத்திக்கொண்டு மற்றவற்றை ஸ்டார்ஸ் ஒதுக்கித் தள்ளவில்லை. அவர் ஒவ்வொரு வசனத்தின் சூழமைவையும் முழு பைபிளின் அடிப்படையில் அதன் பொதுவான அர்த்தத்தையும் ஆராய்ந்தார். ஒரு வசனம், மற்ற வசனங்களுடன் முரண்படுவதாகத் தோன்றியபோது அவர் நியாயமான விளக்கத்திற்காக பைபிளின் பிற பகுதிகளையும் ஆராய்ந்தார்.
வேதாகமங்களை ரஸல் ஆராய்கிறார்
ஜார்ஜ் ஸ்டார்ஸுடன் சார்ல்ஸ் டேஸ் ரஸல் என்ற இளைஞரும் கூட்டுறவு வைத்திருந்தார். இவர் பென்ஸில்வேனியாவிலுள்ள பிட்ஸ்பர்க்கில் பைபிள் படிப்பு தொகுதி ஒன்றை ஒழுங்கமைத்து வந்தார். வேதப்பூர்வ தலைப்பில் அவர் எழுதிய முதல் கட்டுரை, பைபிள் எக்ஸாமினர் என்ற பத்திரிகையில் 1876-ல் பிரசுரிக்கப்பட்டது; ஸ்டார்ஸ் அப்பத்திரிகையின் பதிப்பாசிரியராய் இருந்தார். ஆரம்ப காலத்தில் பைபிளை ஆராய்ந்தவர்களின் செல்வாக்கு தன் மீதிருந்ததை ரஸல் ஒத்துக்கொண்டார். பிற்பாடு, ஸயன்ஸ் உவாட்ச் டவர் பத்திரிகையின் ஆசிரியரான அவர், வாய்மொழியாகவும், எழுத்து வாயிலாகவும் தனக்கு ஸ்டார்ஸ் பெரும் உதவி அளித்ததற்கு அவர் அதிக நன்றி உள்ளவராய் இருந்தார்.
தனது 18 வயதில் சி. டி. ரஸல் பைபிள் படிப்பு வகுப்பை ஒழுங்கமைத்தார், பைபிள் படிப்பதற்குரிய மாதிரியை ஏற்படுத்தினார். அந்த மாதிரியைப் பற்றி, ரஸலுடன் கூட்டுறவு வைத்திருந்த பைபிள் மாணாக்கரான ஏ. ஹெச். மேக்மில்லன் என்பவர் இவ்வாறு குறிப்பிட்டார்: “யாராவது ஒருவர் கேள்வி கேட்பார். எல்லாரும் அக்கேள்வியைக் கலந்தாலோசிப்பார்கள். அதனுடன் தொடர்புடைய எல்லா வசனங்களையும் எடுத்துப் பார்ப்பார்கள்; பின்னர் இந்த வசனங்கள் ஒன்றுக்கொன்று ஒத்திருப்பதை உறுதிப்படுத்தியதும் தங்கள் முடிவை இறுதியில் வெளிப்படுத்துவார்கள், அதை எழுதியும் வைப்பார்கள்.”
பைபிளை முழுமையாக ஆராயும்போது அது ஒரு செய்தியை அளிக்க வேண்டும் என்றும், அது பைபிளுக்கும், அதன் நூலாசிரியரான கடவுளுடைய குணங்களுக்கும் இணக்கமானதாகவும் ஒத்திசைவானதாகவும் இருக்க வேண்டும் என்றும் ரஸல் உறுதியாய் நம்பினார். பைபிளின் ஒரு பகுதியைப் புரிந்துகொள்வது கடினமாக இருந்தால், மற்ற பகுதிகளைக்கொண்டு அதை தெளிவுபடுத்தவும் விளக்கவும் வேண்டுமென அவர் நினைத்தார்.
வசனங்களை ஒப்பிட்டுப் பார்க்கும் பழங்கால பழக்கம்
இருப்பினும், வேதவசனங்களே சுயவிளக்கம் அளிக்கும்படி முதன்முதல் முயன்று பார்த்தது, ரஸலோ, ஸ்டார்ஸோ, க்ரூவோ அல்ல. இந்தப் பழக்கம், கிறிஸ்தவத்தின் ஸ்தாபகரான இயேசு கிறிஸ்துவிடமிருந்து வந்தது. ஒரு வசனத்திலுள்ள சத்தியத்தைத் தெளிவுபடுத்த அவர் பல வசனங்களைப் பயன்படுத்தினார். உதாரணத்திற்கு, ஓய்வுநாளில் தம்முடைய சீஷர்கள் கதிர்களைப் பறித்ததை பரிசேயர்கள் குற்றப்படுத்தியபோது, ஓய்வுநாள் சட்டத்தை உண்மையில் எப்படிக் கடைப்பிடிக்க வேண்டுமென்பதற்கு இயேசு 1 சாமுவேல் 21:6-லுள்ள சம்பவத்தைச் சுட்டிக்காட்டினார். தாவீதும் அவருடைய ஆட்களும் சமுகத்தப்பங்களைச் சாப்பிட்டதைப் பற்றிய சம்பவத்தை அந்த மதத் தலைவர்கள் நன்கறிந்திருந்தார்கள். பிறகு, ஆரோனின் வம்சத்தில் வந்த ஆசாரியர்கள் மட்டுமே அந்த அப்பத்தைச் சாப்பிட வேண்டுமென்று நியாயப்பிரமாணத்தின் ஒரு பகுதியில் சொல்லப்பட்டிருந்ததையும் இயேசு சுட்டிக்காட்டினார். (யாத்திராகமம் 29:32, 33; லேவியராகமம் 24:9) இருப்பினும், அந்த அப்பங்களைச் சாப்பிடும்படி தாவீது அனுமதிக்கப்பட்டார். ஆதாரம் காட்டி இணங்க வைக்கும் விதத்தில் பேசிய இயேசு, ஓசியா புத்தகத்திலிருந்து மேற்கோள் காட்டி தன் விவாதத்தை இவ்வாறு முடித்துக்கொண்டார்: “பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று அறிந்தீர்களானால், குற்றமில்லாதவர்களை நீங்கள் குற்றப்படுத்த மாட்டீர்கள்.” (மத்தேயு 12:1-8) வசனங்களை ஒன்றோடொன்று ஒப்பிட்டுப் பார்த்துத் திருத்தமாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்கு எப்பேர்ப்பட்ட அருமையான எடுத்துக்காட்டு!
ஒரு வசனத்தை விளக்குவதற்கு வேறு வேதவசனங்களைப் பயன்படுத்தும் அதே மாதிரியை இயேசுவின் சீஷர்களும் பின்பற்றினார்கள். தெசலோனிக்கேயில் இருந்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் போதித்தபோது, ‘வேதவாக்கியங்களின் நியாயங்களை எடுத்து அவர்களுடனே சம்பாஷித்து [அதாவது, விளக்கிக்காட்டி], கிறிஸ்து பாடுபடவும் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கவும் வேண்டியதென்று . . . திருஷ்டாந்தப்படுத்தினார் [அதாவது, ஆதாரத்துடன் நிரூபித்தார்].’ (அப்போஸ்தலர் 17:2, 3) கடவுளுடைய ஆவியின் தூண்டுதலால் தான் எழுதிய கடிதங்களில்கூட, வசனங்களே சுயவிளக்கம் அளிக்கும்படி பவுல் விட்டுவிட்டார். உதாரணத்திற்கு, எபிரெயர்களுக்கு எழுதும்போது நியாயப்பிரமாணம் வரப்போகிற நன்மைகளின் பொருளாக, அதாவது நிழலாக, இருக்கிறதென நிரூபிப்பதற்கு, அவர் பல்வேறு வசனங்களை மேற்கோள் காட்டினார்.—எபிரெயர் 10:1-18.
இப்படி, வசனங்களை ஒன்றோடொன்று ஒப்பிட்டுப் பார்க்கும் கிறிஸ்தவ மாதிரியை, 19-ம் நூற்றாண்டிலும் 20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வாழ்ந்த நல்மனமுள்ள பைபிள் மாணாக்கர்கள் மீண்டும் பின்பற்ற ஆரம்பித்தார்கள். வசனங்களை ஒன்றோடொன்று ஒப்பிட்டுப் பார்க்கும் இந்தப் பழங்கால பழக்கம், அல்லது முறைமை காவற்கோபுர பத்திரிகையில் இன்றும் பின்பற்றப்படுகிறது. (2 தெசலோனிக்கேயர் 2:15) ஒரு வசனத்தைப் அலசி ஆராயும்போது யெகோவாவின் சாட்சிகள் இந்த நியதியையே பின்பற்றுகிறார்கள்.
வசனத்தின் சூழமைவுக்குக் கவனம் செலுத்துங்கள்
நாம் பைபிளை வாசிக்கும்போது இயேசுவும் அவருடைய சீஷர்களும் வைத்த சிறந்த முன்மாதிரியை எப்படிப் பின்பற்றலாம்? முதலாவதாக, சிந்திக்கப்படும் வசனத்திற்கு முன்னும் பின்னுமுள்ள வசனங்கள் என்ன சொல்லுகின்றன என்பதைக் கவனிக்கலாம். அர்த்தத்தைப் புரிந்துகொள்ள சூழமைவு நமக்கு எப்படி உதவும்? உதாரணத்திற்கு, மத்தேயு 16:28-ல் காணப்படும் இயேசுவின் வார்த்தைகளை எடுத்துக்கொள்வோம்; அது இவ்வாறு சொல்கிறது: “இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனுஷ குமாரன் தம்முடைய ராஜ்யத்தில் வருவதைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.” அவர் இந்த வார்த்தைகளைச் சொன்ன சமயத்தில் அங்கிருந்த சீஷர்கள் எல்லாரும் கடவுளுடைய ராஜ்யம் பரலோகத்தில் ஸ்தாபிக்கப்படுவதற்கு முன்பாகவே இறந்துவிட்டார்கள்; ஆகையால், இயேசுவின் வார்த்தைகள் நிறைவேறவில்லை என்று சிலர் நினைக்கலாம். த இன்டர்பிரிட்டர்ஸ் பைபிள் அந்த வசனத்தைக் குறித்து இப்படியும் சொல்கிறது: “முன்னுரைக்கப்பட்டது நிறைவேறவில்லை, எனவே அது உருவகமாகச் சொல்லப்பட்டதென பிற்பாடு வந்த கிறிஸ்தவர்கள் விளக்கம் அளிக்க நேர்ந்தது.”
எனினும், இந்த வசனத்தின் சூழமைவும், மாற்கும், லூக்காவும் எழுதிய இதற்கு இணையான பதிவுகளும் இதன் சரியான அர்த்தத்தைப் புரிந்துகொள்ள நமக்கு உதவுகின்றன. மேலே காணப்படும் வார்த்தைகளைச் சொன்ன பிறகு அடுத்த வசனத்தில் மத்தேயு எதைப் பற்றி கூறினார்? அவர் இவ்வாறு எழுதினார்: “ஆறுநாளைக்குப் பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவனுடைய சகோதரனாகிய யோவானையும் கூட்டிக்கொண்டு தனித்திருக்கும்படி உயர்ந்த மலையின்மேல் போய், அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார்.” (மத்தேயு 17:1, 2) ராஜ்யம் சம்பந்தமாக இயேசு சொன்னதை மாற்கும், லூக்காவும்கூட மறுரூப காட்சியோடு தொடர்புபடுத்தினார்கள். (மாற்கு 9:1-8; லூக்கா 9:27-36) ராஜாவாக இயேசு வரவிருப்பது, அவர் மறுரூபமானபோது, அதாவது அந்த மூன்று அப்போஸ்தலர்கள் முன்பாக மகிமையில் வெளிப்பட்டபோது, மெய்ப்பித்துக் காட்டப்பட்டது. “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும்” பற்றி பேதுரு குறிப்பிட்டது அவர் கண்ணாரக் கண்ட இயேசுவின் மறுரூப காட்சியைக் குறித்த விளக்கம் சரியானது என்பதை நமக்குக் காட்டுகிறது.—2 பேதுரு 1:16-18.
வேதவசனங்களே சுயவிளக்கம் அளிக்க அனுமதிக்கிறீர்களா?
சூழமைவை ஆராய்ந்த பிறகும் ஒரு வசனத்தை உங்களால் புரிந்துகொள்ள முடியாவிட்டால் என்ன செய்வது? பைபிளின் முக்கியப் பொருளை மனதில் வைத்து, வேறு வசனங்களுடன் அதை ஒத்துப் பார்ப்பதன் மூலம் நீங்கள் பயன் அடையலாம். இதற்கு உதவும் அருமையான ஒத்துவாக்கியங்களின் பட்டியலை பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு ஆங்கில பைபிளில் காணலாம்; இந்த பைபிள் தற்போது முழுமையாகவோ பகுதியாகவோ 57 மொழிகளில் கிடைக்கிறது. இந்த மொழிபெயர்ப்புகள் பலவற்றில் ஒவ்வொரு பக்கத்தின் நடுவிலும் இந்த ஒத்துவாக்கியங்களின் பட்டியல் காணப்படுகிறது. பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு—ஒத்துவாக்கிய பைபிளில் 1,25,000-க்கும் அதிகமான இத்தகைய வசனங்களைக் காணலாம். இந்த பைபிளில் உள்ள “அறிமுகம்” என்ற பகுதி இவ்வாறு விளக்கம் அளிக்கிறது: “கவனமாய் ஒத்துவாக்கியங்களை ஒப்பிட்டுப் பார்ப்பதும், அதனுடன் உள்ள அடிக்குறிப்புகளை ஆராய்வதும் பைபிளிலுள்ள 66 புத்தகங்களும் சங்கிலித் தொடர்போல் ஒன்றுக்கொன்று இசைந்திருக்கும் விதத்தைக் காட்டும்; அவை அனைத்தும் சேர்ந்து ஒரே புத்தகமாக இருப்பதையும், கடவுளுடைய ஆவியின் வழிநடத்துதலால் எழுதப்பட்டிருப்பதையும் நிரூபிக்கும்.”
ஒரு வசனத்தைப் புரிந்துகொள்ள ஒத்துவாக்கியங்கள் எப்படி உதவுகின்றன என்பதைப் பார்ப்போம். உதாரணத்திற்கு, ஆபிராம், அதாவது ஆபிரகாமுடைய வரலாற்றை எடுத்துக்கொள்வோம். இந்தக் கேள்வியைச் சற்று கவனியுங்கள்: ஊர் பட்டணத்திலிருந்து ஆபிராமும் அவருடைய குடும்பமும் புறப்பட்டபோது யார் வழிநடத்திச் சென்றது? ஆதியாகமம் 11:31 இவ்வாறு சொல்கிறது: “தேராகு தன் குமாரனாகிய ஆபிராமையும், . . . லோத்தையும், . . . தன் மருமகள் சாராயையும் அழைத்துக்கொண்டு, அவர்களுடனே ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்தை விட்டு, கானான் தேசத்துக்குப் போகப் புறப்பட்டான். அவர்கள் ஆரான்மட்டும் வந்தபோது, அங்கே இருந்துவிட்டார்கள்.” இதை மட்டுமே வாசிக்கும் ஒரு நபர், ஆபிராமின் தகப்பனான தேராகுதான் வழிநடத்திச் சென்றார் என்ற முடிவுக்கு வரலாம். ஆனால் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளில் இதற்கு 11 ஒத்துவாக்கியங்கள் கொடுக்கப்பட்டுள்ளதைக் காண்கிறோம். அதிலுள்ள கடைசி வசனம் அப்போஸ்தலர் 7:2; முதல் நூற்றாண்டிலிருந்த யூதர்களுக்கு ஸ்தேவான் தரும் பின்வரும் புத்திமதியை அதில் நாம் வாசிக்கிறோம்: ‘நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம் காரானூரிலே குடியிருக்கிறதற்கு முன்னமே மெசொப்பொத்தாமியா நாட்டிலே இருக்கும்போது மகிமையின் தேவன் அவனுக்குத் தரிசனமாகி: நீ உன் தேசத்தையும் உன் இனத்தையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்கு வா என்றார்.’ (அப்போஸ்தலர் 7:2, 3) இதை, ஆரானிலிருந்து ஆபிராம் புறப்பட்டதோடு ஸ்தேவான் குழப்பிக்கொண்டாரா? நிச்சயமாகவே இல்லை; இது ஆவியின் வழிநடத்துதலால் எழுதப்பட்ட கடவுளுடைய வார்த்தையில் காணப்படுகிறது.—ஆதியாகமம் 12:1-3.
அப்படியென்றால், ‘தேராகு தன் குமாரனாகிய ஆபிராமையும்’ தன் குடும்பத்திலுள்ள மற்றவர்களையும் “அழைத்துக்கொண்டு” ஊர் பட்டணத்தை விட்டு சென்றதாக ஆதியாகமம் 11:31 ஏன் குறிப்பிடுகிறது? அப்போதும் தேராகுதான் குடும்பத் தலைவராக இருந்தார். ஆபிராமுடன் செல்லவும் அவர் ஒப்புக்கொண்டார்; எனவே, கௌரவிக்கும் விதத்தில் அவரே குடும்பத்தை ஆரானுக்கு அழைத்துச் சென்றதாக குறிப்பிடப்பட்டார். இந்த இரண்டு வசனங்களையும் ஒப்பிட்டு, ஒத்திசைவைப் பார்ப்பதன் மூலம் உண்மையில் என்ன நடந்திருக்கும் என்பதை மனக்கண்ணில் நம்மால் பார்க்க முடிகிறது. கடவுளுடைய கட்டளைக்கு இசைய ஊர் பட்டணத்தைவிட்டு புறப்பட்டுச் செல்வதற்கு மதிப்பு மரியாதையோடு தன் தகப்பனை ஆபிராம் இணங்க வைத்தார்.
வேதவசனங்களை நாம் வாசிக்கும்போது, அவற்றின் சூழமைவையும் பைபிளின் முக்கியப் பொருளையும் மனதில் வைக்க வேண்டும். கிறிஸ்தவர்களுக்குப் பின்வரும் புத்திமதி கொடுக்கப்பட்டிருக்கிறது: “நாங்களோ உலகத்தின் ஆவியைப் பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம். அவைகளை நாங்கள் மனுஷ ஞானம் போதிக்கிற வார்த்தைகளாலே பேசாமல், பரிசுத்த ஆவி போதிக்கிற வார்த்தைகளாலே பேசி, ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடே சம்பந்தப்படுத்திக் காண்பிக்கிறோம்.” (1 கொரிந்தியர் 2:11-13) உண்மைதான், யெகோவாவுடைய வார்த்தையைப் புரிந்துகொள்ள உதவும்படி நாம் அவரிடம் கெஞ்சி மன்றாட வேண்டும்; அதோடு, புரியாத வசனத்தின் சூழமைவை ஆராய்வதன் மூலமும், சம்பந்தப்பட்ட வசனங்களைக் கண்டுபிடிப்பதன் மூலமும், “ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடே சம்பந்தப்படுத்திக் காண்”பதற்கு உதவும்படியும் நாம் அவரிடம் கெஞ்சி மன்றாட வேண்டும். கடவுளுடைய வார்த்தையை ஆராய்ந்து படிப்பதன் மூலம் சத்தியத்தின் ஜொலிக்கும் மணிக்கற்களைத் தொடர்ந்து கண்டுபிடிப்போமாக.