‘விசுவாசத்திற்காக கடினமாய் போராடுங்கள்’!
“பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக நீங்கள் தைரியமாய்ப் [“கடினமாய்,” NW] போரா[டுங்கள்].”—யூதா 3.
1. என்ன கருத்தில் இன்று மெய்க் கிறிஸ்தவர்கள் போரில் ஈடுபட்டிருக்கின்றனர்?
போரில் ஈடுபடும் படைவீரர்களுக்கு அவர்களுடைய வாழ்க்கையே சதா போராட்டம்தான். படைக்கலன் பூண்டு, மழையிலும் வெயிலிலும் பனியிலும் மைல்கணக்காக அணிவகுத்துச் செல்ல வேண்டியதை, போராயுதங்களைப் பயன்படுத்த கடுமையான பயிற்சிக்கு உட்படுவதை அல்லது உயிருக்கும் உடலுக்கும் ஏற்படும் பல்வகையான பயங்கர அச்சுறுத்துதல்களுக்கு எதிராக உங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டியதை சற்று கற்பனைசெய்து பாருங்கள். இருப்பினும், தேசங்கள் தொடுக்கும் போர்களில் மெய்க் கிறிஸ்தவர்கள் பங்குகொள்வதில்லை. (ஏசாயா 2:2-4; யோவான் 17:14) ஆனால், ஒரு கருத்தில் நாமனைவருமே போரில் ஈடுபடுகிறோம் என்பதை ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. இயேசு கிறிஸ்துவின் மீதும் பூமியிலுள்ள அவருடைய சீஷர்களின் மீதும் சாத்தான் பகைவெறியோடு இருக்கிறான். (வெளிப்படுத்துதல் 12:17) சொல்லப்போனால், யெகோவா தேவனை சேவிக்க தீர்மானிக்கிற அனைவரும் ஆவிக்குரிய போர் புரியும் படைவீரர்களாக சேர்ந்துவருகிறார்கள்.—2 கொரிந்தியர் 10:4.
2. கிறிஸ்தவ போரை யூதா எவ்வாறு விவரிக்கிறார், அதில் நிலைத்திருப்பதற்கு அவருடைய கடிதம் எவ்வாறு நமக்கு உதவக்கூடும்?
2 பொருத்தமாகவே, இயேசுவின் ஒன்றுவிட்ட சகோதரன் யூதா இவ்வாறு எழுதுகிறார்: “பிரியமானவர்களே, பொதுவான இரட்சிப்பைக்குறித்து உங்களுக்கு எழுதும்படி நான் மிகவும் கருத்துள்ளவனாயிருக்கையில், பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக நீங்கள் தைரியமாய்ப் [“கடினமாய்,” NW] போராடவேண்டுமென்று உங்களுக்கு எழுதி உணர்த்துவது எனக்கு அவசியமாய்க் கண்டது.” (யூதா 3) ‘கடினமாய் போராடும்படி’ கிறிஸ்தவர்களை யூதா உந்துவிக்கிறபோது, ‘கடும் வேதனை’ என்பதற்குரிய வார்த்தையோடு தொடர்புடைய ஒரு பதத்தை அவர் பயன்படுத்துகிறார். ஆம், இந்தப் போராட்டம் கடினமாகவும், கடும் வேதனையாகவும்கூட இருக்கலாம்! இந்தப் போரில் சகித்திருப்பதை நீங்கள் சிலசமயங்களில் கடினமாய் காண்கிறீர்களா? யூதாவின் இரத்தினச் சுருக்கமான ஆனால் வலிமைமிக்க கடிதம் நமக்கு உதவக்கூடும். ஒழுக்கயீனத்தை எதிர்த்துநிற்பதற்கும் கடவுளால் ஏற்படுத்தப்பட்ட அதிகாரத்தை மதிப்பதற்கும் கடவுளுடைய அன்பில் நம்மை வைத்துக்கொள்வதற்கும் அது நம்மை உந்துவிக்கிறது. இந்த ஆலோசனையை எவ்வாறு பொருத்துவது என்பதை நாம் பார்க்கலாம்.
ஒழுக்கயீனத்தை எதிர்த்து நில்லுங்கள்
3. யூதாவின் நாளில் இருந்த கிறிஸ்தவ சபை என்ன நெருக்கடி நிலைமையை எதிர்ப்பட்டது?
3 சாத்தானுக்கு எதிரான போரில் தன்னுடைய உடன் கிறிஸ்தவர்கள் அனைவருமே ஜெயிக்கவில்லை என்பதை யூதா பார்க்க முடிந்தது. மந்தை ஓர் நெருக்கடி நிலையை எதிர்ப்பட்டது. ஒழுக்கயீனமான மனிதர்கள் ‘பக்கவழியாய் நுழைந்திருந்தார்கள்’ என்று யூதா எழுதுகிறார். இப்படிப்பட்ட மனிதர்கள் தந்திரமாய் ஒழுக்கயீனத்தை முன்னேற்றுவித்து வந்தார்கள். மேலும், “தேவனுடைய கிருபையை காமவிகாரத்துக்கேதுவாகப் புரட்டி,” சூழ்ச்சி நயத்துடன் தங்களுடைய கிரியைகளை நியாயப்படுத்தினார்கள். (யூதா 4) ஒருவேளை, பூர்வ சமரச மறையியல் ஞானக்கோட்பாட்டாளர்களைப் போல் (Gnostics), ஒருவர் எந்தளவுக்கு அதிகமாய் பாவம் செய்கிறாரோ அந்தளவுக்கு அதிகமாய் தேவனுடைய கிருபையைப் பெறமுடியும் என நியாயவிவாதம் செய்தனர்! அல்லது அன்பான கடவுள் தங்களை ஒருபோதும் தண்டிக்க மாட்டார் என்ற முடிவுக்கு ஒருவேளை வந்திருக்கலாம். எப்படியிருந்தபோதிலும், அவர்களுடைய நியாயவிவாதம் தவறு.—1 கொரிந்தியர் 3:19.
4. யெகோவாவின் கடந்தகால நியாயத்தீர்ப்புகளைப் பற்றி யூதா மேற்கோள் காட்டும் மூன்று வேதப்பூர்வ உதாரணங்கள் யாவை?
4 யெகோவாவின் நியாயத்தீர்ப்புகளைப் பற்றிய கடந்தகால மூன்று உதாரணங்களை அதாவது, “விசுவாசியாத” இஸ்ரவேலர்கள்; பெண்களுடன் பாவம் செய்வதற்காக ‘தங்களுடைய ஆதிமேன்மையை . . . விட்டுவிட்ட தூதர்கள்;’ ‘விபசாரம்பண்ணி, அந்நிய மாம்சத்தைத் தொடர்ந்த’ சோதோம் கொமோரா பட்டணத்தார் ஆகியோருக்கு எதிராக யெகோவா கொண்டுவந்த நியாயத்தீர்ப்புகளை எடுத்துக்காட்டுவதன் மூலம் அவர்களுடைய பொல்லாத நியாயவிவாதங்களை யூதா தவறென நிரூபிக்கிறார். (யூதா 5-7; ஆதியாகமம் 6:2-4; 19:4-25; எண்ணாகமம் 14:35) ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், பாவிகளுக்கு எதிராக யெகோவா உறுதியான நியாயத்தீர்ப்பைக் கொண்டுவந்தார்.
5. பூர்வகாலத்தில் வாழ்ந்த எந்தத் தீர்க்கதரிசியின் வார்த்தைகளை யூதா மேற்கோள் காட்டுகிறார், அதன் நிறைவேற்றத்தின் முழு நிச்சயத்தை அந்தத் தீர்க்கதரிசனம் எவ்வாறு காட்டியது?
5 பிற்பாடு, அதைவிட பெரிய நியாயத்தீர்ப்பைப் பற்றியும்கூட யூதா குறிப்பிடுகிறார். ஏனோக்கின் தீர்க்கதரிசனத்தை—ஏவப்பட்டெழுதப்பட்ட வேதாகமத்தில் வேறெங்கும் காணப்படாத ஒரு பகுதியை—அவர் மேற்கோள் காட்டுகிறார். a (யூதா 14, 15) தேவபக்தியற்ற அனைவரையும் அவர்களுடைய தேவபக்தியற்ற செயல்களையும் யெகோவா நியாயந்தீர்க்கப்போகும் ஒரு காலத்தைப் பற்றி ஏனோக்கு முன்னுரைத்தார். அக்கறைக்குரிய விஷயம் என்னவென்றால், ஏனோக்கு அத்தீர்க்கதரிசனத்தை இறந்தகால வினைவடிவத்தில் உரைத்தார், ஏனென்றால் கடவுளுடைய நியாயத்தீர்ப்புகள் ஏற்கெனவே நடந்துவிட்டதைப் போல அவ்வளவு நிச்சயமாய் இருந்தன. ஏனோக்கையும் அதன்பின் நோவாவையும் ஜனங்கள் கேலி செய்திருக்கலாம், ஆனால் இப்படிப்பட்ட பரிகசிப்பாளர்கள் அனைவரும் உலகளாவிய ஜலப்பிரளயத்தில் மூழ்கிப்போனார்கள்.
6. (அ) யூதாவின் நாளைய கிறிஸ்தவர்களுக்கு எதைப் பற்றி நினைப்பூட்ட வேண்டியதாயிருந்தது? (ஆ) யூதாவின் நினைப்பூட்டுதல்களை நாம் ஏன் மனதில் எடுத்துக்கொள்ள வேண்டும்?
6 கடவுளுடைய இந்த நியாயத்தீர்ப்புகளைப் பற்றி யூதா ஏன் எழுதினார்? ஏனென்றால் அவருடைய நாளில் கிறிஸ்தவ சபைகளுடன் கூட்டுறவுகொண்டிருந்த சிலர், கடந்தகாலத்தில் நியாயத்தீர்ப்பைக் கொண்டுவரத் தூண்டியவற்றைப் போலவே மோசமானதும் கண்டிக்கப்படத்தக்கதுமான பாவங்களை செய்துவந்தனர். எனவே, அடிப்படை ஆவிக்குரிய சத்தியங்கள் சிலவற்றை பற்றி அந்தச் சபைகளுக்கு நினைப்பூட்ட வேண்டும் என்று யூதா எழுதுகிறார். (யூதா 5) அவர்கள் செய்துகொண்டிருந்ததை யெகோவா தேவன் பார்த்தார் என்பதை அவர்கள் மறந்துவிட்டதாக தெரிகிறது. ஆம், அவருடைய ஊழியர்கள் அவருடைய சட்டங்களை வேண்டுமென்றே மீறி தங்களையும் மற்றவர்களையும் கெடுத்துக்கொண்டிருப்பதை அவர் பார்க்கிறார். (நீதிமொழிகள் 15:3) இப்படிப்பட்ட செயல்கள் அவரை ஆழமாய் புண்படுத்துகின்றன. (ஆதியாகமம் 6:6; சங்கீதம் 78:40) சர்வலோகத்தின் உன்னத பேரரசருடைய உணர்ச்சிகளை சாதாரண மனிதர்கள் பாதிக்க முடியும் என்பது பயபக்தியூட்டும் கருத்தாக இருக்கிறது. அவர் நம்மை அனுதினமும் கவனிக்கிறார், அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் அடிச்சுவடுகளைப் பின்பற்ற நம்முடைய மிகச் சிறந்ததைச் செய்யும்போது, நம்முடைய நடத்தை அவருடைய இருதயத்தை சந்தோஷப்படுத்துகிறது. அப்படியானால், யூதா அளிக்கும் இப்படிப்பட்ட நினைப்பூட்டுதல்களைக் குறித்து ஒருபோதும் எரிச்சலடையாமல், அவற்றிற்கு நாம் செவிசாய்ப்போமாக.—நீதிமொழிகள் 27:11; 1 பேதுரு 2:21.
7. (அ) வினைமையான தவறில் ஈடுபட்டுள்ளவர்கள் உடனடியாக உதவியை நாடுவது ஏன் இன்றியமையாதது? (ஆ) ஒழுக்கயீனத்தை நாமனைவரும் எவ்வாறு தவிர்க்கலாம்?
7 யெகோவா பார்ப்பதோடல்லாமல் செயல்படவும் செய்கிறார். நீதியின் கடவுளாக, தீயோர் மீது—இன்றைக்கோ நாளைக்கோ—தண்டனையைக் கொண்டுவருகிறார். (1 தீமோத்தேயு 5:24) அவருடைய நியாயத்தீர்ப்புகளெல்லாம் வெறுமனே பூர்வகால சரித்திரமே என்றும் தீமையைக் குறித்து அவர் எந்தவித அக்கறையும் கொள்வதில்லை என்றும் நியாயவிவாதம் செய்பவர்கள், தங்களைத்தாங்களே முட்டாளாக்கிக்கொள்கிறார்கள். ஒழுக்கயீனத்தில் ஈடுபடுகிற எவரும் இன்று உடனடியாக கிறிஸ்தவ மூப்பர்களிடமிருந்து உதவியை நாடுவது எவ்வளவு இன்றியமையாதது! (யாக்கோபு 5:14, 15) நம்முடைய ஆவிக்குரிய போரில் ஒழுக்கயீனம் ஏற்படுத்தும் அச்சுறுத்தலே நம்மை கவனமாயிருக்கும்படி செய்யலாம். ஒவ்வொரு வருடமும் பலர் மடிந்துபோகின்றனர், அதாவது, நம் மத்தியிலுள்ள நபர்களில் பெரும்பான்மையர் மனந்திரும்பாமல் ஒழுக்கயீன செயல்களில் ஈடுபட்டதற்காக வெளியேற்றப்படுகின்றனர். ஏதாவது சோதனைகள் இப்படிப்பட்ட பாதையில் நம்மை வழிநடத்த ஆரம்பித்தாலும்கூட அவற்றை தடுத்துநிறுத்துவதற்கு நாம் திடதீர்மானத்துடன் இருக்க வேண்டும்.—ஒப்பிடுக: மத்தேயு 26:41.
கடவுளால் ஏற்படுத்தப்பட்ட அதிகாரத்தை மதியுங்கள்
8. யூதா 8-ல் குறிப்பிடப்பட்டுள்ள ‘மகத்துவமானவர்கள்’ யார்?
8 யூதா சொல்கிற மற்றொரு பிரச்சினை என்னவென்றால், கடவுளால் ஏற்படுத்தப்பட்ட அதிகாரத்திற்கு மதிப்புத் தராமல் இருப்பதைப் பற்றியதாகும். உதாரணமாக, வசனம் 8-ல், (NW) ‘மகத்துவமானவர்களைத் தூஷிப்பதாக’ அதே பொல்லாத மனிதர்களை அவர் குற்றம்சாட்டுகிறார். ‘மகத்துவமானவர்களாகிய’ இவர்கள் யார்? அவர்கள் அபூரண மனிதர்களே, ஆனால் யெகோவாவின் பரிசுத்த ஆவியால் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட உத்தரவாதங்களை பெற்றிருந்தார்கள். உதாரணமாக, சபைகளில் மூப்பர்கள் இருந்தார்கள்; அவர்களுக்கு கடவுளுடைய மந்தையை மேய்க்கும் பொறுப்பு இருந்தது. (1 பேதுரு 5:2) அப்போஸ்தலன் பவுலை போன்ற பயணக் கண்காணிகளும்கூட இருந்தார்கள். மேலும், எருசலேமிலிருந்த மூப்பர் குழுவினர் ஆளும் குழுவாக செயல்பட்டு, முழு கிறிஸ்தவ சபையை பாதிக்கும் விஷயங்களைக் குறித்து தீர்மானம் எடுத்தார்கள். (அப்போஸ்தலர் 15:6) சபையிலுள்ள சிலர் இப்படிப்பட்ட மனிதர்களை மோசமாக, அல்லது அவதூறாக பேசிக்கொண்டிருந்ததைக் குறித்து யூதா ஆழ்ந்த கவலையுள்ளவராக இருந்தார்.
9. அதிகாரத்தை அவமதிப்பதைக் குறித்ததில் என்ன உதாரணங்களை யூதா மேற்கோள் காட்டுகிறார்?
9 இப்படிப்பட்ட அவமரியாதையான பேச்சை கண்டனம் செய்வதற்கு, 11-ம் வசனத்தில் யூதா இன்னும் மூன்று உதாரணங்களை நினைப்பூட்டுதல்களாக தருகிறார்: காயீன், பிலேயாம் மற்றும் கோராகு. யெகோவாவின் அன்பான அறிவுரையை காயீன் அசட்டை செய்து, பிடிவாதமாய் கொலைபாதக பகைமையை தொடர்ந்து காட்டினான். (ஆதியாகமம் 4:4-8) சந்தேகமின்றி மீமானிட ஊற்றுமூலத்திலிருந்து திரும்பத் திரும்ப வந்த எச்சரிக்கைகளை பிலேயாம் பெற்றிருந்தான்—அவனுடைய சொந்த கழுதைகூட பேசியதே! ஆனால் கடவுளுடைய ஜனங்களுக்கு விரோதமாக சதிசெய்வதற்கு பிலேயாம் சுயநலத்துடன் தொடர்ந்து ஈடுபட்டான். (எண்ணாகமம் 22:28, 32-34; உபாகமம் 23:5) கோராகு தனக்குரிய பொறுப்பான ஸ்தானத்தைப் பெற்றிருந்தான், ஆனால் அவன் திருப்தியடையவில்லை. பூமியிலேயே மிகவும் சாந்தகுணமுள்ள மனிதனாகிய மோசேக்கு விரோதமாக கலகத்தை தூண்டினான்.—எண்ணாகமம் 12:3; 16:1-3, 32.
10. ‘மகத்துவமானவர்களை தூஷிக்கும்’ கண்ணிக்குள் எவ்வாறு சிலர் இன்றைக்கு வீழ்ந்துவிடக்கூடும், ஏன் இப்படிப்பட்ட பேச்சை தவிர்க்க வேண்டும்?
10 ஆலோசனைக்கு செவிகொடுப்பதற்கும் உத்தரவாதமுள்ள ஸ்தானங்களில் யெகோவா பயன்படுத்தி வருகிறவர்களுக்கு மரியாதை காண்பிப்பதற்கும் இந்த உதாரணங்கள் எவ்வளவு தெள்ளத்தெளிவாக நமக்கு போதிக்கின்றன! (எபிரெயர் 13:17) நியமிக்கப்பட்ட மூப்பர்களிடம் குறை கண்டுபிடிப்பது மிக எளிது, ஏனென்றால் நாம் அனைவரும் அபூரணராய் இருப்பது போலவே, அவர்களும் அபூரணரே. ஆனால் அவர்களுடைய குற்றங்குறைகளையே நாம் பார்த்துக்கொண்டிருந்து அவர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொஞ்சம் கொஞ்சமாக கெடுத்துப்போட்டால், நாம் ‘மகத்துவமானவர்களை தூஷிப்பதாக’ இருக்கக்கூடுமா? வசனம் 10-ல் (NW), ‘உண்மையிலேயே எல்லா காரியங்களையும் அறியாதவர்களாய் தூஷிக்கிறவர்களைப்’ பற்றி யூதா குறிப்பிடுகிறார். சிலசமயங்களில், மூப்பர் குழுவினர் அல்லது நியாயவிசாரணைக் குழுவினர் செய்த தீர்மானத்தை சிலர் விமர்சிப்பார்கள். இருப்பினும், ஒரு தீர்மானத்தை எட்டுவதற்கு முன் மூப்பர்கள் சிந்திக்கவேண்டியிருந்த எல்லா விவரங்களும் அவர்களுக்குத் தெரிந்திருக்காது. ஆகவே, அவர்களுக்கு உண்மையில் தெரியாத விஷயங்களைப் பற்றி ஏன் தூஷணமாக பேச வேண்டும்? (நீதிமொழிகள் 18:13) இப்படி எதிர்மறையாக பேசுவதில் விடாப்பிடியாக இருப்பவர்கள் சபையில் பிரிவினையை உண்டுபண்ணலாம்; ஒருவேளை உடன் விசுவாசிகளுடைய கூட்டங்களில், ‘தண்ணீருக்கு கீழே மறைந்திருக்கும் [ஆபத்தான] பாறைகளுக்கு’ இவர்களை ஒப்பிடலாம். (யூதா 12, 16, 19) மற்றவர்களுக்கு நாம் ஒருபோதும் ஆவிக்குரிய அபாயத்தை ஏற்படுத்த விரும்பமாட்டோம். அதற்கு மாறாக, அவர்களுடைய கடினமான வேலைக்காகவும் கடவுளுடைய மந்தைக்கு அவர்கள் தங்களை அர்ப்பணித்திருப்பதற்காகவும் உத்தரவாதமுள்ள மனிதர்களைப் போற்றுவதற்கு நாம் ஒவ்வொருவரும் திடதீர்மானமுள்ளவர்களாய் இருப்போமாக.—1 தீமோத்தேயு 5:17.
11. சாத்தானுக்கு எதிராக தூஷணமான வார்த்தைகளால் தீர்ப்புசெய்யாமல் ஏன் மிகாவேல் விலகியிருந்தார்?
11 தகுந்த விதத்தில் ஏற்படுத்தப்பட்ட அதிகாரத்தை மதித்தவருடைய ஒரு முன்மாதிரியை யூதா குறிப்பிடுகிறார். அவர் இவ்வாறு எழுதுகிறார்: “பிரதான தூதனாகிய மிகாவேல் மோசேயினுடைய சரீரத்தைக்குறித்துப் பிசாசுடனே தர்க்கித்துப் பேசினபோது, அவனைத் தூஷணமாய்க் குற்றப்படுத்தத் துணியாமல்: “கர்த்தர் [“யெகோவா,” NW] உன்னைக் கடிந்துகொள்வாராக” என்று சொன்னார். (யூதா 9) ஏவப்பட்டெழுதப்பட்ட வேதாகமத்திலுள்ள யூதாவின் கடிதத்திற்கே உரிய தனித்தன்மைவாய்ந்த, மனதைக் கவரும் இந்த விவரப்பதிவு இரண்டு தெளிவான பாடங்களை கற்பிக்கிறது. ஒருபுறத்தில், நியாயத்தீர்ப்பை யெகோவாவிடம் விட்டுவிடும்படி கற்பிக்கிறது. பொய் வணக்கத்தை ஊக்குவிப்பதற்காக உண்மையுள்ள மனிதனாகிய மோசேயின் சரீரத்தை சாத்தான் தவறாகப் பயன்படுத்த விரும்பினான் என்பது தெளிவாக தெரிகிறது. எப்பேர்ப்பட்ட பொல்லாப்பான செயல்! என்றபோதிலும், நியாயத்தீர்ப்பை அளிப்பதிலிருந்து மிகாவேல் தாழ்மையுடன் விலகியிருந்தார், ஏனென்றால் யெகோவாவுக்கு மாத்திரமே அந்த அதிகாரம் இருந்தது. அப்படியானால், யெகோவாவை சேவிக்க முயலும் உண்மையுள்ள மனிதர்களை நியாயந்தீர்ப்பதிலிருந்து இன்னும் எந்தளவுக்கு அதிகமாய் நாம் விலகியிருக்க வேண்டும்.
12. கிறிஸ்தவ சபையில் உத்தரவாதமான ஸ்தானங்களில் உள்ளவர்கள் மிகாவேலின் முன்மாதிரியிலிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?
12 மறுபட்சத்தில், சபையில் ஓரளவு அதிகாரம் பெற்றிருப்பவர்களும்கூட மிகாவேலிடமிருந்து ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம். மிகாவேல் ‘பிரதான தூதராக,’ எல்லா தேவதூதரிலும் முதன்மையானவராக இருந்தபோதிலும், கோபமூட்டிய சமயத்திலும்கூட தம்முடைய அதிகார ஸ்தானத்தை துர்ப்பிரயோகம் செய்யவில்லை. உண்மையுள்ள மூப்பர்கள் தங்களுடைய அதிகாரத்தை துர்ப்பிரயோகம் செய்வது யெகோவாவின் உன்னத அரசதிகாரத்தை அவமதிப்பதாகும் என்பதை உணர்ந்தவர்களாய், அந்த முன்மாதிரியை நெருங்கிய விதத்தில் பின்பற்றுகின்றனர். சபைகளில் மதிப்புக்குரிய ஸ்தானங்களில் இருந்து தங்களுடைய அதிகாரத்தை துர்ப்பிரயோகம் செய்தவர்களைப் பற்றி யூதாவின் கடிதத்தில் அதிகம் சொல்லப்பட்டுள்ளது. உதாரணமாக, 12 முதல் 14 வரையான வசனங்களில், ‘பயமின்றி விருந்துண்டு தங்களைத் தாங்களே மேய்த்துக்கொள்கிறவர்களை’ கடும் கண்டனத்துடன் யூதா குறிப்பிடுகிறார். (ஒப்பிடுக: எசேக்கியேல் 34:7-10.) வேறு வார்த்தைகளில் சொல்லப்போனால், அவர்களுடைய முதலாவது அக்கறை, யெகோவாவின் மந்தையிடம் அல்ல, சுயபிரயோஜனம் அடைவதிலேயே இருந்தது. இப்படிப்பட்ட எதிர்மறையான முன்மாதிரிகளிலிருந்து இன்றுள்ள மூப்பர்கள் அதிகத்தைக் கற்றுக்கொள்ளலாம். உண்மையிலேயே, நாம் எப்படிப்பட்டவர்களாய் ஆவதற்கு விரும்பக் கூடாது என்பதை யூதாவின் வார்த்தைகள் இங்கே தெள்ளத் தெளிவாக விவரிக்கின்றன. நாம் சுயநலத்திற்கு அடிபணியும்போது, கிறிஸ்துவின் படைவீரர்களாக இருக்க முடியாது; நாம் தனிப்பட்ட அக்கறைகளுக்காக போராடுவதிலேயே மூழ்கிவிடுவோம். அதற்கு மாறாக, “வாங்குவதைப் பார்க்கிலும் கொடுப்பதே அதிக சந்தோஷம்” என்ற இயேசுவின் வார்த்தைகளுக்கு இசைவாக நாம் வாழ்வோமாக.—அப்போஸ்தலர் 20:35, NW.
‘தேவனுடைய அன்பிலே உங்களை காத்துக்கொள்ளுங்கள்’
13. தேவனுடைய அன்பில் நிலைத்திருப்பதற்கு ஏன் நாமனைவரும் ஊக்கமாக விரும்ப வேண்டும்?
13 தன்னுடைய கடிதத்தின் முடிவில், இருதயத்திற்கு அனலூட்டும் இந்த அறிவுரையை யூதா கொடுக்கிறார்: “தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொ[ள்ளுங்கள்].” (யூதா 21) யெகோவா தேவனின் அன்பிலே நிலைத்திருப்பதைவிட வேறெதுவும் கிறிஸ்தவ போரில் ஈடுபட நமக்கு உதவாது. மொத்தத்தில், அன்பே யெகோவாவின் மேலோங்கிய பண்பு. (1 யோவான் 4:8) ரோமிலுள்ள கிறிஸ்தவர்களுக்குப் பவுல் இவ்வாறு எழுதினார்: “மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்.” (ரோமர் 8:38, 39) ஆனால், அந்த அன்பில் நாம் எவ்வாறு நிலைத்திருக்கிறோம்? யூதா கடிதத்தின்படி, நாம் எடுக்கக்கூடிய மூன்று நடவடிக்கைகளைக் கவனியுங்கள்.
14, 15. (அ) ‘மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல்’ கட்டப்படுவது எதை அர்த்தப்படுத்துகிறது? (ஆ) நம்முடைய ஆவிக்குரிய சர்வாயுதவர்க்கத்தின் நிலைமையை நாம் எவ்வாறு பரிசோதிக்கலாம்?
14 முதலாவதாக, “மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல்” நம்மை தொடர்ந்து கட்டும்படி யூதா நமக்கு கூறுகிறார். (யூதா 20) முந்திய கட்டுரையில் நாம் பார்த்தப்பிரகாரம், இது தொடர்ச்சியாக நடைபெறும் ஒரு செயல்முறை. இயற்கை சீற்றத்தால் வரும் மோசமான கடுந்தாக்குதலுக்கு எதிராக மேன்மேலும் பலப்படுத்தப்பட வேண்டிய கட்டடங்களைப் போல நாம் இருக்கிறோம். (ஒப்பிடுக: மத்தேயு 7:24, 25.) ஆகவே நாம் ஒருபோதும் மட்டுக்கு மீறிய தன்னம்பிக்கையுள்ளவர்களாய் ஆகாதிருப்போமாக. அதற்கு மாறாக, பலமுள்ளவர்களாயும் கிறிஸ்துவுக்கு அதிக உண்மையுள்ள படைவீரர்களாயும் ஆவதற்கு நம்முடைய விசுவாசத்தின் அஸ்திவாரத்தின்மீது நாம் எங்கே கட்டலாம் என்பதை காண்போமாக. உதாரணமாக, எபேசியர் 6:11-18-ல் விவரிக்கப்பட்டுள்ள ஆவிக்குரிய சர்வாயுதவர்க்கத்தின் பாகங்களை நாம் சிந்திக்கலாம்.
15 நம்முடைய சொந்த ஆவிக்குரிய சர்வாயுதவர்க்கத்தின் நிலை என்ன? நம்முடைய ‘விசுவாசமென்னும் பெரிய கேடகம்’ தேவையான உறுதியுடன் இருக்கிறதா? சமீப வருடங்களை நாம் பின்னோக்கிப் பார்க்கையில், கூட்டங்களுக்கு ஆஜராவதில் குறைவுபடுதல், ஊழியத்திற்கான வைராக்கியத்தை இழந்துவிடுதல், அல்லது தனிப்பட்ட படிப்புக்கான ஆர்வத்தில் படிப்படியாக தணிந்துபோதல் போன்ற மந்தநிலைக்கான அறிகுறிகளை காண்கிறோமா? இப்படிப்பட்ட அறிகுறிகள் ஆபத்தானவை! சத்தியத்தில் நம்மை கட்டியெழுப்புவதற்கும் பலப்படுத்திக்கொள்வதற்கும் நாம் இப்பொழுதே செயல்படுவது அவசியம்.—1 தீமோத்தேயு 4:15; 2 தீமோத்தேயு 4:2; எபிரெயர் 10:24, 25.
16. பரிசுத்த ஆவிக்குள் ஜெபம்பண்ணுவது எதை அர்த்தப்படுத்துகிறது, நாம் யெகோவாவிடம் எப்போதும் கேட்கவேண்டிய ஒரு காரியம் என்ன?
16 தேவனுடைய அன்பில் நிலைத்திருப்பதற்கு இரண்டாவது வழி, தொடர்ந்து “பரிசுத்தஆவிக்குள் ஜெபம்பண்”ணுவதாகும். (யூதா 20) யெகோவாவினுடைய ஆவியின் செல்வாக்கிலும் ஆவியால் ஏவப்பட்டெழுதப்பட்ட அவருடைய வார்த்தைக்கு இசைவாகவும் ஜெபிப்பதை அது குறிக்கிறது. தனிப்பட்ட விதத்தில் யெகோவாவிடம் நெருங்கி வருவதற்கும் அவருக்கான நம்முடைய பக்தியை காட்டுவதற்கும் ஜெபம் ஓர் இன்றியமையாத வழியாகும். இந்த மகத்தான சிலாக்கியத்தை நாம் ஒருபோதும் அசட்டை செய்யக்கூடாது! மேலும், நாம் ஜெபிக்கும்போது பரிசுத்த ஆவிக்காக கேட்கலாம்—சொல்லப்போனால், எப்போதுமே கேட்கலாம். (லூக்கா 11:13) நமக்கு கிடைக்கக்கூடிய வலிமைமிக்க சக்தி இதுவே. இப்படிப்பட்ட உதவியுடன், நாம் எப்பொழுதும் ‘தேவனுடைய அன்பில் நிலைத்திருக்கலாம்,’ மேலும் கிறிஸ்துவின் படைவீரர்களாகவும் சகித்திருக்கலாம்.
17. (அ) இரக்கத்தைப் பற்றிய விஷயத்தில் யூதாவின் முன்மாதிரி ஏன் குறிப்பிடத்தக்கது? (ஆ) நாம் ஒவ்வொருவரும் எவ்வாறு இரக்கத்தை தொடர்ந்து காண்பிக்கலாம்?
17 மூன்றாவது, தொடர்ந்து இரக்கத்தைக் காண்பிக்கும்படி யூதா நம்மை உந்துவிக்கிறார். (யூதா 22) இதன் சம்பந்தமாக அவருடைய முன்மாதிரியே குறிப்பிடத்தக்கது. கிறிஸ்தவ சபையில் ஊழல், ஒழுக்கயீனம், விசுவாசதுரோகம் ஆகியவை நுழைந்ததைக் கண்டு நியாயமாகவே அவர் மனக்கலக்கமுற்றார். என்றபோதிலும், இப்படிப்பட்ட சமயங்கள் இரக்கம் என்ற “மென்மையான” குணத்தைக் காண்பிக்க முடியாதளவுக்கு ஏதோவொரு வகையில் மிக ஆபத்தானவை என்ற எண்ணத்தில் அவர் பயத்திற்கு அடிபணிந்துவிடவில்லை. மாறாக, சாத்தியமான சந்தர்ப்பத்திலெல்லாம் தொடர்ந்து இரக்கத்தை காண்பிக்கும்படி அவர் தன்னுடைய சகோதரர்களை உந்துவித்தார். சந்தேக மனப்பான்மையினால் அல்லற்பட்டுக் கொண்டிருந்தவர்களிடம் தயவுடன் நியாயங்காட்டிப் பேசினார், வினைமையான பாவம் செய்யும் நிலையில் இருந்தவர்களை ‘அக்கினியிலிருந்து இழுத்துவிடவும்கூட’ செய்தார். (யூதா 22; கலாத்தியர் 6:1) தொல்லைமிக்க இக்காலங்களில் வாழும் மூப்பர்களுக்கு என்னே ஒரு சிறந்த புத்திமதி! எங்கெல்லாம் சாத்தியமோ அங்கெல்லாம் இரக்கம் காண்பிக்கும்படி அவர்களும்கூட முயற்சி செய்கிறார்கள், அதேசமயத்தில் தேவைப்படுமாகில் உறுதியாகவும் இருக்கிறார்கள். இதைப்போல நாமனைவரும் ஒருவருக்கொருவர் இரக்கத்தைக் காண்பிக்க விரும்புகிறோம். உதாரணமாக, அற்பமான விஷயங்களுக்காக மனத்தாங்கலோடு இருப்பதற்குப் பதிலாக, நம்முடைய மன்னிக்கும் தன்மையில் தாராளகுணத்தைக் காட்டலாம்.—கொலோசெயர் 3:13.
18. நம்முடைய ஆவிக்குரிய போரில் வெற்றியை குறித்து நாம் எவ்வாறு நிச்சயமாயிருக்கலாம்?
18 நாம் செய்கிற போர் எளிய ஒன்றல்ல. யூதா சொல்கிறபடி, அது ‘கடினமான போர்.’ (யூதா 3, NW) நம்முடைய எதிரிகள் பலசாலிகள். சாத்தான் மட்டுமல்ல, அவனுடைய பொல்லாத உலகமும் நம்முடைய சொந்த அபூரணங்களும் சேர்ந்து நமக்கு எதிராக அணிவகுத்து நிற்கின்றன. இருப்பினும், வெற்றி நம் பக்கம் என முழு நம்பிக்கையோடு இருக்கலாம்! ஏன்? ஏனென்றால் நாம் யெகோவாவின் பக்கத்தில் இருக்கிறோம். ‘கனமும் மகத்துவமும் வல்லமையும் அதிகாரமும் இப்பொழுதும் எப்பொழுதும்’ நியாயமாகவே யெகோவாவுக்கு உரித்தானது என்ற நினைப்பூட்டுதலுடன் யூதா தன்னுடைய கடிதத்தை முடிக்கிறார். (யூதா 25) இது பயபக்தியூட்டும் கருத்தாக இல்லையா? அப்படியானால், இதே கடவுள் “வழுவாதபடி உங்களைக் காக்க” முடியும் என்பதைக் குறித்ததில் ஏதாவது சந்தேகம் இருக்கமுடியுமா? (யூதா 24) நிச்சயமாகவே இருக்க முடியாது! தொடர்ந்து ஒழுக்கயீனத்தை எதிர்த்துநிற்பதற்கும் கடவுளால் ஏற்படுத்தப்பட்ட அதிகாரத்தை மதிப்பதற்கும் நம்மை கடவுளுடைய அன்பில் வைத்திருப்பதற்கும் நாம் ஒவ்வொருவரும் திடதீர்மானமாய் இருப்போமாக. இந்த விதத்தில், நாம் மகிமையான வெற்றியை ஒன்றாக அனுபவிப்போம்.
[அடிக்குறிப்பு]
a ஏனோக்கின் புத்தகம் (ஆங்கிலம்) என்ற தள்ளுபடி ஆகமத்திலிருந்து யூதா மேற்கோள் காட்டுவதாக ஆராய்ச்சியாளர்கள் சிலர் உறுதியாக கூறுகின்றனர். என்றபோதிலும், ஆர். சி. எச். லென்ஸ்கி குறிப்பிடுகிறார்: “நாங்கள் கேட்கிறோம்: ‘ஏனோக்கின் புத்தகம் என்ற இந்த முரணான நூலின் ஊற்றுமூலம் எது?’ இந்தப் புத்தகம் சேர்க்கப்பட்ட ஒன்று, அதிலுள்ள பல்வேறு பகுதிகளின் காலத்தைப் பற்றி யாரும் நிச்சயமாயில்லை . . . ; அதிலுள்ள சில வார்த்தைகள் ஒருவேளை யூதா புத்தகத்திலிருந்து தானே எடுக்கப்படவில்லை என்பதை யாரும் உறுதியாக கூறமுடியாது.”
மறுபார்வைக்கான கேள்விகள்
◻ ஒழுக்கயீனத்தை எதிர்த்துநிற்பதற்கு யூதாவின் கடிதம் நமக்கு எவ்வாறு கற்பிக்கிறது?
◻ கடவுளால் ஏற்படுத்தப்பட்ட அதிகாரத்திற்கு நாம் மரியாதை காண்பிப்பது ஏன் மிக முக்கியம்?
◻ சபையில் அதிகாரத்தை துர்ப்பிரயோகம் செய்வதைப் பற்றியதில் எது மிகவும் வினைமையானது?
◻ தேவனுடைய அன்பில் நிலைத்திருப்பதற்கு நாம் எவ்வாறு உழைக்கலாம்?
[பக்கம் 15-ன் படம்]
ரோம படைவீரர்களைப் போலல்லாமல், கிறிஸ்தவர்கள் ஆவிக்குரிய போர் புரிகிறார்கள்
[பக்கம் 18-ன் படம்]
கிறிஸ்தவ மேய்ப்பர்கள் சுயநலத்திற்காக அல்ல, அன்பினால் சேவை செய்கிறார்கள்