இந்த உலகம் எப்படி அழிவைச் சந்திக்கும்?
“நீங்கள் இருளில் இருப்பவர்கள் அல்ல; எனவே, வெளிச்சத்தில் திடீரென அகப்பட்டுக்கொள்கிற திருடர்களைப் போல் நீங்கள் அந்த நாளில் அகப்பட்டுக்கொள்ள மாட்டீர்கள்.”—1 தெ. 5:4.
1. விழிப்புடன் இருக்கவும், துன்பதுயரங்களைச் சமாளிக்கவும் எது நமக்கு உதவும்?
உலகையே உலுக்கும் சம்பவங்கள் சீக்கிரத்தில் அரங்கேறப்போகின்றன. பைபிள் தீர்க்கதரிசனங்கள் அதற்கு அத்தாட்சி அளிக்கின்றன. எனவே, நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். அப்படி இருப்பதற்கு எது நமக்கு உதவும்? ‘காணப்படாதவற்றின் மீது நம்முடைய கண்களைப் பதிய வைக்கும்படி’ அப்போஸ்தலன் பவுல் சொல்கிறார். ஆம், முடிவில்லா வாழ்வு எனும் பரிசை எப்போதும் மனதில் வைக்க வேண்டும்—அந்த வாழ்வு, பரலோகத்தில் இருந்தாலும் சரி பூமியில் இருந்தாலும் சரி! உண்மைத்தன்மைக்குக் கிடைக்கப்போகும் பரிசின் மீது கவனத்தை ஒருமுகப்படுத்தும்படி கொரிந்து சபையாரை உற்சாகப்படுத்தவே பவுல் அதை எழுதினார். அவர்கள் அப்படிச் செய்வது, விழிப்புடன் இருக்க மட்டுமல்ல துன்பதுயரங்களையும் துன்புறுத்தல்களையும் சமாளிக்கக்கூட அவர்களுக்கு உதவும்.—2 கொ. 4:8, 9, 16-18; 5:7.
2. (அ) நம்முடைய நம்பிக்கையில் உறுதியாய் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்? (ஆ) இந்தக் கட்டுரையிலும் அடுத்த கட்டுரையிலும் நாம் எதைப் பற்றிச் சிந்திப்போம்?
2 பவுல் கொடுத்த அறிவுரையில் ஒரு முக்கிய விஷயம் அடங்கியிருக்கிறது. அதாவது, நம்முடைய நம்பிக்கையில் உறுதியாய் இருக்க இனி சம்பவிக்கப்போகிற காரியங்கள்மீது கவனத்தை ஒருமுகப்படுத்த வேண்டும். ஆம், இதுவரை காணப்படாதவையாய் இருக்கும் முக்கியச் சம்பவங்கள்மீது நம் கண்களைப் பதிய வைக்க வேண்டும். (எபி. 11:1; 12:1, 2) எனவே, நாம் முடிவில்லா வாழ்வைப் பெறுவதற்குமுன் நடக்கப்போகிற பத்துச் சம்பவங்களைப் பற்றி இந்தக் கட்டுரையிலும் அடுத்த கட்டுரையிலும் சிந்திப்போம்.
முடிவு வருவதற்குச் சற்றுமுன் என்ன நடக்கும்?
3. (அ) எதிர்காலத்தில் நடக்கப்போகிற என்ன சம்பவத்தைப் பற்றி 1 தெசலோனிக்கேயர் 5:2, 3 குறிப்பிடுகிறது? (ஆ) அரசியல் தலைவர்கள் என்ன செய்வார்கள், இவர்களுடன் யார் கூட்டுச்சேர்ந்துகொள்வார்கள்?
3 எதிர்காலத்தில் நடக்கப்போகும் ஒரு சம்பவத்தைப் பற்றி தெசலோனிக்கே சபைக்கு பவுல் கடிதம் எழுதினார். (1 தெசலோனிக்கேயர் 5:2, 3-ஐ வாசியுங்கள்.) அதில் ‘யெகோவாவின் நாளை’ பற்றிக் குறிப்பிட்டார். “யெகோவாவின் நாள்” என்பது பொய் மதங்களின் அழிவு தொடங்கி அர்மகெதோன் போர் முடியும்வரை உள்ள காலப்பகுதியைக் குறிக்கிறது. என்றாலும், யெகோவாவின் நாள் ஆரம்பிப்பதற்குச் சற்று முன்பு, “இதோ! சமாதானம், பாதுகாப்பு!” என்று உலகத் தலைவர்கள் அறிவிப்பார்கள். இந்த அறிவிப்பு ஒரு முறையோ பல முறையோ செய்யப்படலாம். பெரிய பெரிய பிரச்சினைகளையெல்லாம் வெகு சீக்கிரத்தில் தீர்க்கப்போவதாகத் தேசங்கள் நினைக்கலாம். மதத் தலைவர்கள் என்ன செய்வார்கள்? அவர்கள் இந்த உலகத்தின் பாகமாக இருப்பதால் அரசியல் தலைவர்களுடன் கூட்டுச்சேர்ந்துகொள்வார்கள். (வெளி. 17:1, 2) இந்த விஷயத்தில், மதத் தலைவர்கள் பூர்வ யூதாவிலிருந்த பொய்த் தீர்க்கதரிசிகளைப் போலிருப்பார்கள். அந்தத் தீர்க்கதரிசிகள், ‘சமாதானமில்லாதிருந்தும் சமாதானம் சமாதானம் என்று சொல்வதாக’ யெகோவா கூறினார்.—எரே. 6:14; 23:16, 17.
4. உலகத்தாரைப் போலில்லாமல் நாம் எதைப் புரிந்துகொண்டிருக்கிறோம்?
4 “இதோ! சமாதானம், பாதுகாப்பு!” என்று யார் அறிவித்தாலும் சரி, அது யெகோவாவின் நாள் ஆரம்பமாகப் போவதைக் குறிக்கும். ஆகவே, பவுல் இவ்வாறு சொன்னார்: “சகோதரர்களே, நீங்கள் இருளில் இருப்பவர்கள் அல்ல; எனவே, வெளிச்சத்தில் திடீரென அகப்பட்டுக்கொள்கிற திருடர்களைப் போல் நீங்கள் அந்த நாளில் அகப்பட்டுக்கொள்ள மாட்டீர்கள்.” (1 தெ. 5:4, 5) உலகத்தாரைப் போலில்லாமல், இப்போது நடக்கிற சம்பவங்களைக் குறித்து பைபிள் தரும் விளக்கத்தை நாம் புரிந்துகொண்டிருக்கிறோம். “இதோ! சமாதானம், பாதுகாப்பு!” என்ற அறிவிப்பைப் பற்றிய தீர்க்கதரிசனம் உண்மையில் எப்படி நிறைவேறும்? அதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எனவே, “விழிப்போடும் தெளிந்த புத்தியோடும் இருக்க” தீர்மானமாய் இருப்போமாக.—1 தெ. 5:6; செப். 3:8.
தப்புக்கணக்குப் போடும் “ராணி”
5. (அ) “மிகுந்த உபத்திரவம்” எப்போது ஆரம்பமாகும்? (ஆ) தன்னைக் குறித்து எந்த “ராணி” தப்புக்கணக்கு போடுவாள்?
5 காணப்படாத என்ன சம்பவம் அடுத்ததாக நடக்கப்போகிறது? “ ‘இதோ! சமாதானம், பாதுகாப்பு!’ என்று அவர்கள் சொல்லும்போது, . . . எதிர்பாரா நேரத்தில் அழிவு திடீரென்று அவர்கள்மீது வரும்” என்று பவுல் சொன்னார். இந்த ‘திடீர் அழிவின்’ முதற்கட்டமாக, பொய் மத உலகப் பேரரசான “மகா பாபிலோன்” தாக்கப்படும். இது “விலைமகள்” என்றும் அழைக்கப்படுகிறது. (வெளி. 17:5, 6, 15) கிறிஸ்தவமண்டலம் உட்பட எல்லாப் பொய் மதங்களும் தாக்கப்படும்போது “மிகுந்த உபத்திரவம்” ஆரம்பமாகும். (மத். 24:21; 2 தெ. 2:8) அநேகருக்கு இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் அளிக்கும். ஏன்? ஏனென்றால், அதுவரை அந்த விலைமகள் தான் “ராணி” என்றும் ‘தான் ஒருபோதும் துயரப்பட மாட்டாள்’ என்றும் நம்பிக்கொண்டிருப்பாள். ஆனால், திடீரெனத் தாக்கப்படும்போது தான் தப்புக்கணக்கு போட்டிருந்ததைப் புரிந்துகொள்வாள். சட்டென அவள் அழிக்கப்படுவாள், சொல்லப்போனால் “ஒரே நாளில்,” அழிக்கப்படுவாள்.—வெளி. 18:7, 8.
6. பொய் மதத்தை எது அழிக்கப்போகிறது?
6 ‘பத்துக் கொம்புகளுள்ள மூர்க்க மிருகம்’ ஒன்று அந்த விலைமகளைத் தாக்கப்போவதாக பைபிள் சொல்கிறது. வெளிப்படுத்துதல் புத்தகத்தை ஆராய்ந்து படிக்கும்போது அந்த மூர்க்க மிருகம் ஐக்கிய நாட்டுச் சங்கத்தை (ஐநா-வை) குறிப்பதாகத் தெரிகிறது. அதன் ‘பத்துக் கொம்புகள்,’ ‘கருஞ்சிவப்பு நிறமுள்ள அந்த மூர்க்க மிருகத்தை’ ஆதரிக்கிற எல்லா அரசியல் அதிகாரங்களையும் குறிக்கின்றன.a (வெளி. 17:3, 5, 11, 12) இந்தத் தாக்குதல் எந்தளவு மோசமானதாய் இருக்கும்? ஐநாவில் அங்கம் வகிக்கும் நாடுகள் அந்த விலைமகளின் சொத்துபத்துகளைச் சூறையாடும், அவளுடைய சுயரூபத்தைத் தோலுரித்துக் காட்டும், அவளை அழித்து, நெருப்பிலே ‘முழுமையாகச் சுட்டெரிக்கும்.’ அத்துடன், அவளுடைய சகாப்தம் முடிவடையும்.—வெளிப்படுத்துதல் 17:16-ஐ வாசியுங்கள்.
7. ‘மூர்க்க மிருகத்தின்’ தாக்குதல் எப்படி ஆரம்பமாகும்?
7 இந்தத் தாக்குதல் எப்படி ஆரம்பமாகும் என்றும் பைபிள் தீர்க்கதரிசனம் சொல்கிறது. ஏதாவதொரு வகையில், அரசியல் தலைவர்களின் மனதில் யெகோவா ‘தமது எண்ணத்தை,’ அதாவது விலைமகளை அழிக்கும் எண்ணத்தை, ‘வைப்பார்.’ (வெளி. 17:17) போர் வெறிபிடித்த மதம் பிரிவினை உண்டாக்கும் சக்தியாக இந்த உலகில் செயல்பட்டு வருகிறது. எனவே, இந்த விலைமகளை அழிப்பதுதான் நல்லது என தேசங்கள் நினைக்கலாம். சொல்லப்போனால், அந்தத் தேசங்களின் தலைவர்கள் விலைமகளைத் தாக்கும்போது, தங்களுடைய “ஒரே எண்ணத்தை” செயல்படுத்துவதாக நினைப்பார்கள். ஆனால், எல்லாப் பொய் மதங்களையும் அழிப்பதில் கடவுளுடைய கருவிகளாகத்தான் அவர்கள் செயல்படுவார்கள். இவ்வாறு, சாத்தானுடைய உலகின் ஒரு பகுதியை அதன் மற்றொரு பகுதி தாக்கும். அப்போது, அதைத் தடுக்க சக்தியில்லாமல் பல்லிழந்த சிங்கத்தைப் போல் சாத்தான் இருப்பான்.—மத். 12:25, 26.
கடவுளுடைய மக்கள் மீதான தாக்குதல்
8. ‘மாகோகு தேசத்தானான கோகுவின்’ தாக்குதலின்போது என்ன நடக்கும்?
8 பொய் மதங்கள் அழிக்கப்பட்ட பிறகும்கூட யெகோவாவின் ஊழியர்கள் ‘சுகத்தோடு குடியிருப்பார்கள்.’ ஆனால், ‘மதில்களில்லாமல் குடியிருப்பார்கள்.’ (எசே. 38:12, 14) பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதுபோல் தோன்றுகிற இந்த ஊழியர்களுக்கு என்ன ஏற்படும்? இவர்களை எதிர்த்து முழுவீச்சு தாக்குதல் நடத்த ‘திரளான ஜனங்கள்’ புறப்படுவார்கள். ‘மாகோகு தேசத்தானான கோகுவின்’ தாக்குதல் என்று பைபிள் அதை விவரிக்கிறது. (எசேக்கியேல் 38:2, 15, 16-ஐ வாசியுங்கள்.) அந்தத் தாக்குதலை நாம் எப்படிக் கருத வேண்டும்?
9. (அ) ஒரு கிறிஸ்தவர் முக்கியமாய் எதைப் பற்றிக் கவலைப்படுகிறார்? (ஆ) நம்முடைய விசுவாசத்தைப் பலப்படுத்திக்கொள்ள நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டும்?
9 கடவுளுடைய மக்களாகிய நாம் இந்தத் தாக்குதலைக் குறித்து முன்னமே அறிந்திருந்தாலும் அதை நினைத்து அநாவசியமாகக் கவலைப்படுவதில்லை. நம்முடைய கவலையெல்லாம், நமது மீட்பைப் பற்றி அல்ல, யெகோவாவின் பெயர் பரிசுத்தப்பட வேண்டும்... அவரது பேரரசாட்சியே சரியானதென நிரூபிக்கப்பட வேண்டும் என்பதைப் பற்றியே. சொல்லப்போனால், ‘நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்கள்’ என யெகோவாவே அறிவித்திருக்கிறார்; இதுபோன்ற சொற்றொடர் 60-க்கும் அதிகமான தடவை காணப்படுகிறது. (எசே. 6:7) எனவே, எசேக்கியேல் தீர்க்கதரிசனத்தின் அந்த முக்கிய அம்சம் நிறைவேறுவதைக் காண வெகு ஆவலாய்க் காத்திருக்கிறோம். “தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையிலிருந்து விடுவிக்க . . . யெகோவா அறிந்திருக்கிறார்” என்பதில் நம்பிக்கை வைத்திருக்கிறோம். (2 பே. 2:9) இதற்கிடையில், எத்தகைய சோதனைகளை எதிர்ப்பட்டாலும் யெகோவாவுக்கு உத்தமமாய் இருப்பதற்காக முடிந்தளவு நம் விசுவாசத்தை நாம் பலப்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்? ஜெபம் செய்ய வேண்டும், பைபிளைப் படிக்க வேண்டும், படித்தவற்றைத் தியானிக்க வேண்டும், கடவுளுடைய அரசாங்கத்தின் நற்செய்தியை மற்றவர்களுக்கு அறிவிக்க வேண்டும். இப்படிச் செய்யும்போது, முடிவில்லா வாழ்வுக்கான நமது நம்பிக்கை “நங்கூரம்” போல் உறுதியாய் இருக்கும்.—எபி. 6:19; சங். 25:21.
யெகோவாவே கடவுளென தேசங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்
10, 11. என்ன சம்பவம் அர்மகெதோனுக்கு வழிநடத்தும், அந்தச் சமயத்தில் என்ன நடக்கும்?
10 யெகோவாவின் ஊழியர்கள் தாக்கப்படும்போது உலகையே உலுக்கும் என்ன சம்பவம் நிகழும்? தம் மக்களின் சார்பில் போரிட இயேசுவையும் பரலோகப் படைவீரர்களையும் யெகோவா பயன்படுத்துவார். (வெளி. 19:11-16) அதுதான், ‘சர்வ வல்லமையுள்ள கடவுளின் மகா நாளில் நடக்கப்போகும் போர்’; அது அர்மகெதோன் என அழைக்கப்படுகிறது.—வெளி. 16:14, 16.
11 அந்தப் போரைப் பற்றி எசேக்கியேல் மூலம் யெகோவா இவ்வாறு சொன்னார்: ‘என் எல்லா மலைகளிலும் பட்டயத்தை அவனுக்கு [கோகுக்கு] விரோதமாக வரவழைப்பேன் என்று யெகோவாவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்; அவனவன் பட்டயம் அவனவன் சகோதரனுக்கு விரோதமாயிருக்கும்.’ சாத்தானின் ஆதரவாளர்கள் குழம்பித் தவிப்பார்கள், பயத்தில் வெலவெலத்துப்போவார்கள், ஒருவரையொருவர் கொலை செய்துகொள்வார்கள். சொல்லப்போனால், சாத்தானுடைய முழு உலகத்துக்கும் அழிவு வரப்போகிறது. “அவன்மேலும் [கோகுவின்மேலும்] அவன் இராணுவங்களின்மேலும் அவனோடிருக்கும் திரளான ஜனங்களின்மேலும் . . . அக்கினியையும், கந்தகத்தையும் வருஷிக்கப்பண்ணுவேன்” என்று யெகோவா சொல்கிறார். (எசே. 38:21, 22) அவர் அப்படிச் செய்யும்போது தேசங்கள் எதை உணர்ந்துகொள்ளும்?
12. தேசங்கள் எதை ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கும்?
12 யெகோவா தலையிட்டதால்தான் தங்களுக்குப் படுதோல்வி ஏற்பட்டிருக்கிறதென தேசங்கள் உணர்ந்துகொள்ளும். அப்போது, செங்கடலில் இஸ்ரவேலரைத் துரத்திச்சென்ற எகிப்தியப் படையினர் குலைநடுங்கிப்போய், ‘யெகோவாதான் அவர்களுக்குத் துணைநின்று யுத்தம்பண்ணுகிறார்’ என்று சொன்னதைப் போலவே சாத்தானின் படையினரும் சொல்வார்கள்! (யாத். 14:25) ஆம், யெகோவாவே கடவுளென தேசங்கள் அப்போது ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கும். (எசேக்கியேல் 38:23-ஐ வாசியுங்கள்.) இந்தச் சங்கிலித்தொடர் சம்பவங்கள் எவ்வளவு சீக்கிரத்தில் ஆரம்பமாகப்போகின்றன?
இனி புதிதாக எந்த உலக வல்லரசும் தோன்றாது
13. தானியேல் கண்ட சிலையின் ஐந்தாவது பாகத்தைக் குறித்து நாம் என்ன அறிந்திருக்கிறோம்?
13 மிகுந்த உபத்திரவம் வேகமாய் நெருங்கிவருகிறது என்பதைப் புரிந்துகொள்ள தானியேல் புத்தகத்திலுள்ள ஒரு தீர்க்கதரிசனம் நமக்கு உதவுகிறது. அந்தத் தீர்க்கதரிசனத்தில், பல்வேறு உலோகங்களால் செய்யப்பட்ட ஒரு மனிதச் சிலையைப் பற்றி தானியேல் விவரிக்கிறார். (தானி. 2:28, 31-33) அன்றும் இன்றும் கடவுளுடைய மக்களை எதிர்த்து வந்த, எதிர்த்து வருகிற வல்லரசுகளுக்கு... அடுத்தடுத்து வந்த உலக வல்லரசுகளுக்கு... அந்தச் சிலை படமாக இருக்கிறது. அந்த வல்லரசுகள், பாபிலோன், மேதிய-பெர்சியா, கிரீஸ், ரோம் ஆகியவையும், நம்முடைய காலத்தில் ஆட்சி செய்கிற கடைசி உலக வல்லரசும் ஆகும். தானியேல் தீர்க்கதரிசனத்தைக் கருத்தூன்றிப் படித்தால், இந்தக் கடைசி உலக வல்லரசு அந்தச் சிலையின் பாதங்களையும் கால்விரல்களையும் குறிப்பதைப் புரிந்துகொள்வோம். முதல் உலகப் போரின்போது பிரிட்டனும் அமெரிக்காவும் ஒரு விசேஷ ஒப்பந்தத்தில் இணைந்தன. ஆம், தானியேல் கண்ட சிலையின் ஐந்தாவது பாகம் ஆங்கிலோ-அமெரிக்க உலக வல்லரசைக் குறிக்கிறது. பாதங்கள் அந்தச் சிலையின் கடைசி பாகமாக இருப்பதால், இனி புதிதாக வேறு எந்த உலக வல்லரசும் தோன்றப்போவதில்லை. அந்தப் பாதங்களும் கால்விரல்களும் இரும்பாலும் களிமண்ணாலும் ஆகியிருப்பது... ஆங்கிலோ-அமெரிக்க உலக வல்லரசு வலுவிழந்து இருப்பதைக் குறிக்கிறது.
14. அர்மகெதோன் ஆரம்பமாகையில் எந்த உலக வல்லரசு ஆட்சி செய்துகொண்டிருக்கும்?
14 கடவுளுடைய அரசாங்கத்திற்குப் படமாக இருக்கிற பெரிய கல், 1914-ல் யெகோவாவுடைய பேரரசாட்சி எனும் மலையிலிருந்து பெயர்ந்து உருண்டு வந்திருப்பதை அதே தீர்க்கதரிசனத்திலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது. அந்தக் கல் இப்போது அதன் இலக்கை நோக்கி, சிலையின் பாதங்களை நோக்கி படுவேகமாக உருண்டு வருகிறது. அந்தச் சிலையின் பாதங்களும் மற்ற பாகங்களும் அர்மகெதோனில் சுக்குநூறாக்கப்படும். (தானியேல் 2:44, 45-ஐ வாசியுங்கள்.) எனவே, அர்மகெதோன் ஆரம்பமாகையில் ஆங்கிலோ-அமெரிக்க உலக வல்லரசே ஆட்சி செய்துகொண்டிருக்கும். இந்தத் தீர்க்கதரிசனம் முற்றும் முழுமையாக நிறைவேறுவதைப் பார்க்கும்போது எவ்வளவாய் மெய்சிலிர்த்துப்போவோம்!b சரி, சாத்தானை யெகோவா என்ன செய்யப்போகிறார்?
கடவுளுடைய பரம எதிரிக்கு என்ன நடக்கும்?
15. அர்மகெதோனுக்குப் பிறகு சாத்தானுக்கும் அவனுடைய பேய்களுக்கும் என்ன நடக்கும்?
15 முதலாவதாக, பூமியில் உள்ள தன்னுடைய அமைப்புகள் அனைத்தும் ஒவ்வொன்றாகத் துடைத்தழிக்கப்படுவதை சாத்தான் பார்ப்பான். பிறகு, சாத்தானுக்கே என்ன நடக்கும் என்று அப்போஸ்தலன் யோவான் சொல்கிறார். (வெளிப்படுத்துதல் 20:1-3-ஐ வாசியுங்கள்.) ‘அதலபாதாளத்தின் சாவியை . . . தன் கையில்’ வைத்திருக்கும் ‘தேவதூதர்,’ அதாவது இயேசு கிறிஸ்து, சாத்தானையும் அவனுடைய பேய்களையும் பிடித்து, அதலபாதாளத்தில் தள்ளி, ஆயிரம் வருடங்களுக்குக் கட்டிப்போடுவார். (லூக். 8:30, 31; 1 யோ. 3:8) இந்தச் செயல், சர்ப்பத்தின் தலை நசுக்கப்படுவதன் ஆரம்பக் கட்டமாக இருக்கும்.c—ஆதி. 3:15.
16. ‘அதலபாதாளத்தில்’ சாத்தான் எப்படிப்பட்ட நிலையில் இருப்பான்?
16 சாத்தானும் அவனுடைய பேய்களும் தள்ளப்படப்போகிற அந்த ‘அதலபாதாளம்’ எது? யோவான் பயன்படுத்திய அபிஸாஸ் என்ற கிரேக்க வார்த்தை, “படு ஆழமான” என்ற அர்த்தத்தைத் தருகிறது. அந்த வார்த்தை “அளவிட முடியாத, ஆழங்காண முடியாத” என்றும் மொழிபெயர்க்கப்படுகிறது. எனவே, யெகோவாவும் அவரால் நியமிக்கப்பட்டிருக்கிற தேவதூதரும் தவிர, அதாவது “அதலபாதாளத்தின் சாவியை” வைத்திருக்கிற தேவதூதரும் தவிர, வேறு யாருமே அந்த இடத்திற்குப் போய் சாத்தானையும் அவனுடைய பேய்களையும் விடுவிக்க முடியாது. அங்கே, சாத்தான் எதுவுமே செய்ய முடியாத நிலையில் இருப்பான். அப்போது அவனால், ‘தேசங்களை ஏமாற்ற’ முடியாது. ஆம், அந்த ‘கர்ஜிக்கிற சிங்கத்தின்’ கொட்டம் அடக்கப்பட்டிருக்கும்!—1 பே. 5:8.
சமாதான காலத்திற்கு வழிநடத்தும் சம்பவங்கள்
17, 18. (அ) காணப்படாதவையாய் இருக்கிற என்ன சம்பவங்களை இந்தக் கட்டுரையில் சிந்தித்தோம்? (ஆ) இந்தச் சம்பவங்களுக்குப் பிறகு எப்படிப்பட்ட சகாப்தத்தில் அடியெடுத்து வைப்போம்?
17 குறிப்பிடத்தக்க மாற்றங்களும் உலகை உலுக்கும் சம்பவங்களும் சீக்கிரத்தில் நடக்கப்போகின்றன. “இதோ! சமாதானம், பாதுகாப்பு!” என்ற அறிவிப்பு எப்படிச் செய்யப்படும் என்பதைப் பார்க்க நாம் ஆவலாய்க் காத்திருக்கிறோம். அடுத்து, மகா பாபிலோன் அழிக்கப்படுவதையும், மாகோகு தேசத்தானாகிய கோகுவின் தாக்குதலையும், அர்மகெதோன் போரையும் பார்க்கப்போகிறோம்; அதன்பின், சாத்தானும் அவனுடைய பேய்களும் அதலபாதாளத்தில் தள்ளப்படுவார்கள். இந்தச் சம்பவங்களெல்லாம் நடந்தேறிய பிறகு, பொல்லாதவர்கள் முற்றிலும் அகற்றப்பட்டிருப்பார்கள்; புதிய சகாப்தத்தில், கிறிஸ்துவின் ஆயிர வருட ஆட்சியில், நாம் அடியெடுத்து வைப்போம்; அப்போது, ‘மிகுந்த சமாதானத்தை’ முழுமையாய் ருசிப்போம்.—சங். 37:10, 11.
18 ‘காணப்படாதவையாய்’ இருக்கிற ஐந்து சம்பவங்களைக் குறித்து இதுவரை சிந்தித்தோம். அடுத்த கட்டுரையில், ‘நம்முடைய கண்களைப் பதிய வைக்க’ வேண்டிய மற்ற சம்பவங்களைக் குறித்து சிந்திக்கப்போகிறோம்.
a வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது! என்ற புத்தகத்தில் பக்கங்கள் 251-258-ஐப் பாருங்கள்.
b ‘அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கும்’ என்று தானியேல் 2:44 குறிப்பிடுகிறது. அந்த ராஜ்யங்கள், சிலையின் பாகங்களுக்குப் படமாக இருக்கிற உலக வல்லரசுகளைக் குறிக்கின்றன. என்றாலும், இதற்கு இணையான இன்னொரு தீர்க்கதரிசனம், ‘பூமியெங்கும் உள்ள ராஜாக்கள்’ “சர்வ வல்லமையுள்ள கடவுளின் மகா நாளில்” யெகோவாவை எதிர்த்து போர் செய்வார்கள் என்று சொல்கிறது. (வெளி. 16:14; 19:19-21) எனவே, சிலையின் பாகங்களைக் குறிக்கும் ராஜ்யங்கள் மட்டுமல்ல மற்ற எல்லா ராஜ்யங்களுமே அர்மகெதோனில் அழிக்கப்படும்.
c ஆயிர வருட ஆட்சியின் முடிவில், சாத்தானும் அவனுடைய பேய்களும் ‘அக்கினியும் கந்தகமும் உள்ள கடலில் தள்ளப்படும்போது’ சர்ப்பத்தின் தலை முழுமையாக நசுக்கப்படும்.—வெளி. 20:7-10; மத். 25:41.