“அவருக்குள் மறைத்து வைக்கப்பட்டுள்ள” பொக்கிஷங்களைக் கண்டுபிடித்தல்
“ஞானம், அறிவு ஆகிய பொக்கிஷங்களெல்லாம் அவருக்குள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன.” —கொலோ. 2:3.
1, 2. (அ) என்ன கலைப்பொருள்கள் 1922-ல் கண்டுபிடிக்கப்பட்டன, அவை இப்போது எங்கே தஞ்சம்புகுந்திருக்கின்றன? (ஆ) கடவுளுடைய வார்த்தை எல்லாரையும் என்ன செய்யும்படி அழைக்கிறது?
“அரும்பெரும் பொக்கிஷங்கள்!—ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு!!” இதுபோன்ற செய்திகள் அடிக்கடி தலைப்புச் செய்திகளாக வெளிவந்திருக்கின்றன. பிரிட்டனைச் சேர்ந்த புதைபொருள் ஆராய்ச்சியாளரான ஹௌவர்ட் கார்ட்டரின் கண்டுபிடிப்பு இதற்கு ஓர் உதாரணம். பிரமிக்க வைக்கும் ஒன்றை அவர் 1922-ல் கண்டுபிடித்தார்; அதுவும் கடினமான சூழலில், நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தப் பல பத்தாண்டுகள் பாடுபட்ட பிறகு கண்டுபிடித்தார். அது, பார்வோன் ராஜா டூடன்காமனின் சமாதியாகும்; அந்தச் சமாதி எந்தச் சேதமும் அடையாததுபோல் இருந்தது, ஏறக்குறைய 5,000 கலைப்பொருள்கள் அதில் வைக்கப்பட்டிருந்தன.
2 கார்ட்டரின் கண்கவர் கண்டுபிடிப்புகளில் பெரும்பாலானவை அருங்காட்சியகங்களிலும் வீடுகளிலும் இப்போது தஞ்சம்புகுந்திருக்கின்றன. அவை சரித்திரப் புகழ் வாய்ந்தவையாகவோ, கலைநயமிக்கவையாகவோ இருக்கலாம்; ஆனால், நம் அன்றாட வாழ்க்கைக்கு அவை பிரயோஜனமாய் இருக்கின்றனவா? இல்லை! என்றாலும், நம் வாழ்க்கைக்கு உண்மையிலேயே பிரயோஜனமான பொக்கிஷங்கள் இருக்கின்றன; அவற்றைத் தேடிக்கண்டுபிடிக்கும்படி கடவுளுடைய வார்த்தை நம்மை அழைக்கிறது, நம்மை மட்டுமல்ல எல்லாரையுமே அழைக்கிறது. இந்த அழைப்புக்கு இணங்கிச் செயல்படுவோருக்குப் பொன், பொருள் போன்ற பொக்கிஷங்களைவிட மிகமிக மதிப்புவாய்ந்த பொக்கிஷங்கள் கிடைக்கும்.—நீதிமொழிகள் 2:1-6-ஐ வாசியுங்கள்.
3. தேடிக்கண்டுபிடிக்கும்படி தம்முடைய ஊழியர்களிடம் யெகோவா சொல்கிற பொக்கிஷங்கள் எவ்விதங்களில் பயனளிக்கின்றன?
3 தேடிக்கண்டுபிடிக்கும்படி தம்முடைய ஊழியர்களிடம் யெகோவா சொல்கிற பொக்கிஷங்கள் எவ்வளவு மதிப்புவாய்ந்தவை எனக் கவனியுங்கள். அந்தப் பொக்கிஷங்களில் ஒன்று, ‘யெகோவாவுக்குப் பயப்படுகிற பயம்’; இந்தக் கொடிய காலங்களில் அது நமக்குப் பாதுகாப்பை அளிக்கிறது. (சங். 19:9) “தேவனை அறியும் அறிவை” நாம் கண்டடையும்போது உன்னதமானவரோடு ஓர் இனிய உறவுக்குள் நம்மால் வரமுடிகிறது; கிடைப்பதற்கரிய மாபெரும் பாக்கியம் இது! தெய்வீக ஞானம், அறிவு, பகுத்துணர்வு ஆகிய பொக்கிஷங்களும் நமக்கு மதிப்புவாய்ந்தவையே; நம்முடைய அன்றாடப் பிரச்சினைகளையும் கவலைகளையும் வெற்றிகரமாகச் சமாளிக்க அவை நமக்கு உதவுகின்றன. (நீதி. 9:10, 11) இப்படிப்பட்ட அரும்பெரும் பொக்கிஷங்களை நாம் எங்கே கண்டடையலாம்?
ஆன்மீகப் பொக்கிஷங்களைக் கண்டுபிடித்தல்
4. ஆன்மீகப் பொக்கிஷங்களை நாம் எவ்வாறு கண்டுபிடிக்கலாம்?
4 புதைபொருள் ஆராய்ச்சியாளர்களும் ஆய்வுப் பயணம் மேற்கொள்கிறவர்களும் பொக்கிஷங்களைக் கண்டுபிடிக்க எங்கெல்லாமோ தேடி அலைய வேண்டியிருக்கிறது; ஆனால், ஆன்மீகப் பொக்கிஷங்களை எங்கே தேடிக் கண்டுபிடிக்க வேண்டுமென நாம் நன்றாகவே அறிந்திருக்கிறோம். கடவுளுடைய வார்த்தை, பொக்கிஷங்களைக் கண்டுபிடிக்க உதவுகிற வரைபடம்போல் இருக்கிறது; கடவுள் வாக்குறுதி அளித்திருக்கிற பொக்கிஷங்களை நாம் எங்கே கண்டுபிடிக்க முடியும் என்பதை அது துல்லியமாகச் சொல்கிறது. கிறிஸ்துவைக் குறிப்பிட்டு அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “ஞானம், அறிவு ஆகிய பொக்கிஷங்களெல்லாம் அவருக்குள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன.” (கொலோ. 2:3) இவ்வார்த்தைகளை வாசிக்கும்போது நாம் இப்படிக் கேட்டுக்கொள்ளலாம்: ‘அந்தப் பொக்கிஷங்களை நாம் ஏன் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்? அவை எவ்வாறு கிறிஸ்துவுக்குள் “மறைத்து வைக்கப்பட்டுள்ளன”? நாம் அவற்றை எப்படிக் கண்டுபிடிக்கலாம்?’ இவற்றுக்குப் பதில்காண, பவுலுடைய வார்த்தைகளை இப்போது நுணுக்கமாக ஆராய்வோம்.
5. ஆன்மீகப் பொக்கிஷங்களைப் பற்றி பவுல் ஏன் எழுதினார்?
5 பவுல் அந்த வார்த்தைகளை கொலோசெயிலிருந்த சக கிறிஸ்தவர்களுக்கு எழுதினார். அவர்கள் ‘எல்லாரும் ஆறுதலடைய வேண்டும், எல்லாரும் அன்பினால் ஒன்றிணைக்கப்பட வேண்டும்’ என்பதற்காக அவர்களுடைய சார்பில் பாடுபடுவதாகத் தெரிவித்தார். (கொலோசெயர் 2:1, 2-ஐ வாசியுங்கள்.) அவர்களை நினைத்து பவுல் ஏன் இந்தளவு கவலைப்பட்டார்? கொலோசெ சபையிலிருந்த சிலர் கிரேக்க தத்துவங்கள் சிலவற்றைப் பரப்பிவந்தார்கள், திருச்சட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டுமெனச் சொல்லிவந்தார்கள்; இவர்களுடைய செல்வாக்கினால் சில சகோதரர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம். பவுல் இதைக் கேள்விப்பட்டதால் அவர்களை நினைத்துக் கவலைப்பட்டதாகத் தெரிகிறது. ஆகவே, “தத்துவங்களினாலும் வஞ்சனையான வீண் கருத்துகளினாலும் ஒருவனும் உங்களைக் கவர்ந்துகொண்டு போகாதபடி எச்சரிக்கையாக இருங்கள்; அவை மனித பாரம்பரியங்களையும் இவ்வுலகின் அடிப்படைக் காரியங்களையுமே சார்ந்தவை, கிறிஸ்துவைச் சார்ந்தவை அல்ல” என்று அவர்களைக் கடுமையாக எச்சரித்தார்.—கொலோ. 2:8.
6. பவுலின் அறிவுரைக்கு நாம் ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?
6 சாத்தான் மற்றும் அவனுடைய பொல்லாத உலகத்தின் செல்வாக்கினால் நாமும் இன்று அவ்வாறே பாதிக்கப்பட்டுவருகிறோம். நாத்திகக் கொள்கை, பரிணாமக் கொள்கை போன்ற இவ்வுலகக் கொள்கைகள் மக்களுடைய சிந்தனையையும், ஒழுக்கநெறியையும், லட்சியத்தையும், வாழ்க்கைப் பாணியையும் மாற்றிவிடுகின்றன. பெருவாரியான மக்கள் கொண்டாடுகிற பண்டிகைகளுக்குப் பொய் மதமே முக்கியக் காரணமாக இருக்கிறது. பொழுதுபோக்குத் துறை மக்களுடைய வக்கிர ஆசைகளுக்குத் தீனிபோடுகிறது, இன்டர்நெட்டில் உள்ள பெரும்பாலான வெப் சைட்டுகள் சிறியோர் பெரியோர் என எல்லாருக்கும் பயங்கர ஆபத்துகளை விளைவிக்கின்றன. இவையும் இன்னும்பிற உலகப் பாணிகளும் நம்மீது சதா செல்வாக்கு செலுத்திக்கொண்டிருக்க அனுமதித்தோமானால், யெகோவா அளிக்கிற வழிநடத்துதலைக் குறித்து நாம் அசட்டையாக இருந்துவிடுவோம்; இதனால் உண்மையான வாழ்வின்மீது உள்ள இறுக்கமான பிடியை நாம் தளர்த்திவிடுவோம். (1 தீமோத்தேயு 6:17-19-ஐ வாசியுங்கள்.) அதனால்தான், கொலோசெ சபையாருக்குப் பவுல் எழுதிய வார்த்தைகளை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்; சாத்தான் வைக்கும் கண்ணிகளில் சிக்கிக்கொள்ளாதிருக்க அந்த அறிவுரைக்கு மனதாரக் கீழ்ப்படிய வேண்டும்.
7. கொலோசெயருக்கு என்ன இரண்டு காரியங்கள் உதவுமென பவுல் சொன்னார்?
7 பவுல், கொலோசெயர்மீது தனக்கிருந்த கவலையைப் பற்றிக் குறிப்பிட்ட பின்பு, அவர்கள் ஆறுதலடைவதற்கும் அன்பினால் ஒன்றிணைக்கப்படுவதற்கும் உதவுகிற இரண்டு காரியங்களைப் பற்றிச் சொன்னார். முதலாவது, “சத்தியத்தை . . . புரிந்துகொண்டு முழு நம்பிக்கை” பெறுவதைக் குறித்துச் சொன்னார். வேதவசனங்களைப் பற்றித் தாங்கள் புரிந்திருக்கிற விஷயங்கள் சரியானவையே என்று அவர்கள் முழு நம்பிக்கையோடு இருக்க வேண்டியிருந்தது; அப்போதுதான் அவர்களுடைய விசுவாசம் நம்பகமான ஆதாரத்தின் அடிப்படையில் அமைந்ததாக இருக்கும். (எபி. 11:1) இரண்டாவது, ‘கடவுளுடைய பரிசுத்த ரகசியத்தைப் பற்றிய திருத்தமான அறிவை’ குறித்துச் சொன்னார். சத்தியத்தைப் பற்றிய அடிப்படை அறிவைப் பெறுவதோடு நிறுத்திக்கொள்ளாமல், கடவுளுடைய ஆழமான காரியங்களைப் பற்றி அவர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ளவும் வேண்டியிருந்தது. (எபி. 5:13, 14) கொலோசெயருக்கு மட்டுமல்ல, நமக்கும் இது எப்பேர்ப்பட்ட அருமையான அறிவுரை! அப்படிப்பட்ட முழு நம்பிக்கையையும் திருத்தமான அறிவையும் நாம் எவ்வாறு பெற்றுக்கொள்ளலாம்? இயேசு கிறிஸ்துவைப் பற்றி பவுல் சொன்ன பின்வரும் வலிமையான கூற்றிலிருந்தே இதற்கான பதிலைக் காணலாம்: “ஞானம், அறிவு ஆகிய பொக்கிஷங்களெல்லாம் அவருக்குள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன.”
கிறிஸ்துவுக்குள் “மறைத்து வைக்கப்பட்டுள்ள” பொக்கிஷங்கள்
8. கிறிஸ்துவுக்குள் “மறைத்து வைக்கப்பட்டுள்ள” என்ற சொற்றொடரின் அர்த்தத்தை விளக்குங்கள்.
8 ஞானம், அறிவு ஆகிய எல்லாப் பொக்கிஷங்களும் கிறிஸ்துவுக்குள் “மறைத்து வைக்கப்பட்டுள்ளன” என்ற சொற்றொடர், யாராலும் கண்டுபிடிக்க முடியாதபடி அவை ஒளித்து வைக்கப்பட்டுள்ளன என்று அர்த்தப்படுத்துவதில்லை. மாறாக, அவற்றைக் கண்டுபிடிக்க நாம் கடும் முயற்சியெடுக்க வேண்டும், இயேசு கிறிஸ்துவின் மீதே நம்முடைய முழு கவனமும் இருக்க வேண்டும் என்று அர்த்தப்படுத்துகிறது. இயேசு சொன்ன பின்வரும் வார்த்தைகளுக்கு இசைவாக இது இருக்கிறது: “நானே வழியும் சத்தியமும் வாழ்வுமாக இருக்கிறேன். என் மூலமாக மட்டுமே ஒருவரால் தகப்பனிடம் வர முடியும்.” (யோவா. 14:6) ஆம், கடவுளைப் பற்றிய அறிவை அடைய இயேசு அளிக்கிற உதவியையும் வழிநடத்துதலையும் நாம் பெற்றுக்கொள்ள வேண்டும்.
9. இயேசு என்னென்ன பங்குகளை வகிக்கிறார்?
9 இயேசு, “நானே வழி” என்று சொன்னதோடு, ‘நானே சத்தியமும் வாழ்வுமாக இருக்கிறேன்’ என்று சொன்னார். இந்தக் கூற்று, அவர் வகிக்கிற பங்குகளைப் பற்றி எதைச் சுட்டிக்காட்டுகிறது? நம் பரலோகத் தகப்பனை நாம் அணுகுவதற்கு வழிகாட்டுகிறவராக மட்டுமல்லாமல், பைபிள் சத்தியங்களைப் புரிந்துகொள்ள உதவுகிறவராகவும், முடிவில்லா வாழ்வைப் பெற உதவுகிறவராகவும் அவர் இருக்கிறார் என்பதையே சுட்டிக்காட்டுகிறது. இயேசுவுக்குள் மறைத்து வைக்கப்பட்டுள்ள விலைமதிக்க முடியாத ஆன்மீகப் பொக்கிஷங்கள் பைபிளை ஆழ்ந்து ஆராய்கிறவர்களுக்குக் கண்டிப்பாகக் கிடைக்கும். ஆகவே, எதிர்கால நம்பிக்கையைப் பெறுவதற்கும் கடவுளோடுள்ள உறவில் நிலைத்திருப்பதற்கும் பிரயோஜனமாக இருக்கிற பொக்கிஷங்கள் சிலவற்றை இப்போது நாம் ஆராயலாம்.
10. கொலோசெயர் 1:19 மற்றும் 2:9-ல் இயேசுவைக் குறித்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
10 “அவரிடம்தான் தெய்வீகப் பண்புகள் முழு நிறைவாகக் குடிகொண்டிருக்கின்றன.” (கொலோ. 1:19; 2:9) இயேசு யுகா யுகங்களாகத் தம்முடைய பரலோகத் தகப்பனோடு இருந்திருக்கிறார்; அதனால் வேறு யாரையும்விட அவருக்குத்தான் தகப்பனைப் பற்றியும் அவரது சித்தத்தைப் பற்றியும் மிக நன்றாகத் தெரியும். பூமியில் ஊழியம் செய்த காலமெல்லாம் இயேசு தம் தகப்பன் கற்பித்திருந்த விஷயங்களையே மற்றவர்களுக்குக் கற்பித்தார், தம் தகப்பன் தமக்குள் வளர்த்திருந்த குணங்களையே வெளிக்காட்டினார். அதனால்தான், “என்னைப் பார்த்தவன் என் தகப்பனைப் பார்த்திருக்கிறான்” என்று அவரால் சொல்ல முடிந்தது. (யோவா. 14:9) கடவுளைப் பற்றிய எல்லா ஞானமும் அறிவும் கிறிஸ்துவுக்குள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன, அதாவது அவருக்குள் குடிகொண்டுள்ளன; எனவே, யெகோவாவைப் பற்றிக் கற்றுக்கொள்வதற்கு ஒரே வழி, இயேசுவைப் பற்றிக் கருத்தூன்றிக் கற்றுக்கொள்வதுதான்.
11. இயேசுவுக்கும் பைபிள் தீர்க்கதரிசனங்களுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன?
11 “இயேசுவைக் குறித்துச் சாட்சி கொடுப்பதே தீர்க்கதரிசனங்களின் நோக்கம்.” (வெளி. 19:10) பைபிளிலுள்ள பெரும்பாலான தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றத்தில் இயேசுவுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது என்பதையே இந்த வார்த்தைகள் சுட்டிக்காட்டுகின்றன. மேசியானிய அரசாங்கத்தில் இயேசு வகிக்கும் பங்கைக் குறித்துச் சரியாகப் புரிந்துகொண்டால்தான், ஆதியாகமம் 3:15 தொடங்கி, வெளிப்படுத்துதல் வரையிலுள்ள எல்லாத் தீர்க்கதரிசனங்களையும் நன்றாகப் புரிந்துகொள்ள முடியும். அதனால்தான், இயேசுவை வாக்குப்பண்ணப்பட்ட மேசியாவாக ஏற்றுக்கொள்ளாத ஆட்களால் எபிரெய வேதாகமத்திலுள்ள அநேக தீர்க்கதரிசனங்களைப் புரிந்துகொள்ள முடிவதில்லை. அதோடு, மேசியானிய தீர்க்கதரிசனங்கள் பலவற்றை உள்ளடக்கிய எபிரெய வேதாகமத்தை நம்பாத ஆட்களால் இயேசுவை ஒரு மாமனிதராக மட்டும் பார்க்க முடிகிறதே தவிர அவர் வகிக்கிற முக்கியப் பங்குகளைப் புரிந்துகொள்ள முடிவதில்லை. அவரைப் பற்றிய அறிவு, எதிர்காலத்தில் நிறைவேறவிருக்கிற பைபிள் தீர்க்கதரிசனங்களைப் புரிந்துகொள்ள கடவுளுடைய மக்களுக்கு அத்தியாவசியமானது.—2 கொ. 1:20.
12, 13. (அ) இயேசு எவ்வாறு “இந்த உலகத்திற்கு ஒளியாக” இருக்கிறார்? (ஆ) பொய்மத இருளின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள கிறிஸ்தவர்கள் என்ன செய்யக் கடமைப்பட்டிருக்கிறார்கள்?
12 “நான் இந்த உலகத்திற்கு ஒளியாக இருக்கிறேன்.” (யோவான் 8:12; 9:5-ஐ வாசியுங்கள்.) இயேசு பூமியில் பிறப்பதற்கு வெகு காலம் முன்பு, ஏசாயா தீர்க்கதரிசி இவ்வாறு முன்னுரைத்தார்: “இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது.” (ஏசா. 9:2) இயேசு பிரசங்க வேலையைத் தொடங்கிய சமயத்தில், “மக்களே, மனந்திரும்புங்கள், பரலோக அரசாங்கம் சீக்கிரம் வரப்போகிறது” என்று அறிவித்தபோது இந்தத் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றினார் என அப்போஸ்தலன் மத்தேயு விளக்கினார். (மத். 4:16, 17) இயேசு செய்த ஊழியம் மக்களுக்கு ஆன்மீக ரீதியில் அறிவொளியூட்டியது, பொய்ப் போதனைகளிலிருந்து விடுதலை அளித்தது. “என்மீது விசுவாசம் வைக்கிற ஒவ்வொருவரும் இருளிலேயே இருக்காதபடி நான் இந்த உலகத்திற்கு ஒளியாக வந்திருக்கிறேன்” என்று அவர் சொன்னார்.—யோவா. 1:3-5; 12:46.
13 பல வருடங்களுக்குப் பிறகு, அப்போஸ்தலன் பவுல் சக கிறிஸ்தவர்களிடம் இவ்வாறு சொன்னார்: “ஒருகாலத்தில் நீங்கள் இருளாக இருந்தீர்கள்; இப்போதோ நம் எஜமானரோடு இணைந்திருப்பதால், ஒளியாக இருக்கிறீர்கள்; தொடர்ந்து ஒளியின் பிள்ளைகளாக நடந்துகொள்ளுங்கள்.” (எபே. 5:8) பொய்மத அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள், ஒளியின் பிள்ளைகளாக நடக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள். மலைப்பிரசங்கத்தில் தம் சீடர்களுக்கு இயேசு சொன்ன பின்வரும் விஷயத்திற்கு இசைவாகவே இது இருக்கிறது: “உங்கள் ஒளியை மனிதர்களுக்கு முன்பாகப் பிரகாசிக்கச் செய்யுங்கள்; அப்போது, அவர்கள் உங்களுடைய நற்செயல்களைக் கண்டு உங்கள் பரலோகத் தகப்பனை மகிமைப்படுத்துவார்கள்.” (மத். 5:16) இயேசுவிடம் கண்டுபிடித்திருக்கிற ஆன்மீகப் பொக்கிஷங்களை நீங்கள் பெரிதும் மதித்துணருகிறீர்கள் என்பதைக் காட்ட என்ன செய்வீர்கள்? அவற்றை மற்றவர்களுக்குச் சிபாரிசு செய்வீர்கள்; ஆம், உங்கள் பேச்சின் மூலமும் நல்நடத்தையின் மூலமும் சிபாரிசு செய்வீர்கள்.
14, 15. (அ) பூர்வ காலங்களில், ஆடுகளும் மற்ற மிருகங்களும் உண்மை வணக்கத்தில் எவ்வாறு பயன்படுத்தப்பட்டன? (ஆ) ‘கடவுளுடைய ஆட்டுக்குட்டியாக’ இருக்கும் இயேசு எவ்வாறு ஈடிணையற்ற பொக்கிஷமாய்த் திகழ்கிறார்?
14 இயேசு ‘கடவுளுடைய ஆட்டுக்குட்டியாக’ இருக்கிறார். (யோவா. 1:29, 36) மக்கள் பாவ மன்னிப்பைப் பெறுவதற்கும் கடவுளை அணுகுவதற்கும் ஆடுகளைப் பயன்படுத்தினார்கள் என்று குறிப்பிடுகிற வசனங்கள் பைபிள் முழுவதிலும் காணப்படுகின்றன. உதாரணத்திற்கு ஈசாக்கைப் பலிசெலுத்துவதற்காக ஆபிரகாம் கத்தியை எடுத்தபோது, அவனை ஒன்றும் செய்ய வேண்டாமென அவரிடம் கடவுள் சொன்னார்; பின்பு, பலிசெலுத்துவதற்காக ஓர் ஆட்டுக்கடாவைக் கொடுத்தார். (ஆதி. 22:12, 13) இஸ்ரவேலர் எகிப்திலிருந்து விடுவிக்கப்பட்ட சந்தர்ப்பத்திலும் ஆடுகள் ‘யெகோவாவுடைய பஸ்காவாக’ பயன்படுத்தப்பட்டன. (யாத். 12:1-13) அதன் பிறகு மோசேயின் திருச்சட்டத்திலும், செம்மறியாடு வெள்ளாடு போன்ற பல்வேறு மிருகங்கள் பலி செலுத்தப்படுவது பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தன.—யாத். 29:38-42; லேவி. 5:6, 7.
15 அந்த மிருக பலிகளெல்லாம் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் மனிதர்களுக்கு நிரந்தர விடுதலையை அளிக்கவில்லை. (எபி. 10:1-4) இயேசுவோ, ‘உலகத்தின் பாவத்தைப் போக்குவதற்குக் கடவுளால் அனுப்பப்பட்ட ஆட்டுக்குட்டியாக’ இருக்கிறார். பொன், பொருள் போன்ற எந்தப் பொக்கிஷத்தையும்விட இயேசுவே மிகமிக மதிப்புவாய்ந்த பொக்கிஷமாக விளங்குகிறார் என்பதை நிரூபிக்க இந்த விஷயம் ஒன்றே போதும்! ஆகவே, மீட்புபலி குறித்துக் கருத்தூன்றிப் படிப்பதற்கு நேரமெடுத்துக்கொள்வதும், அந்தப் பலியில் விசுவாசம் வைப்பதும் அதிமுக்கியமாகும். அப்படிச் செய்வோருக்கு, மகத்தான ஆசீர்வாதம் காத்திருக்கிறது; ஆம், ‘சிறுமந்தைக்கு’ பரலோகத்தில் கிறிஸ்துவோடு மகிமையும் மாட்சிமையுமான வாழ்வு; ‘வேறே ஆடுகளுக்கு’ பூஞ்சோலை பூமியில் முடிவில்லா வாழ்வு.—லூக். 12:32; யோவா. 6:40, 47; 10:16.
16, 17. ‘விசுவாசத்தின் அதிபதியாகவும், விசுவாசத்தைப் பரிபூரணமாக்குபவராகவும்’ இயேசு வகிக்கிற பங்கைப் புரிந்துகொள்வது ஏன் அவசியம்?
16 இயேசு, ‘விசுவாசத்தின் அதிபதியாக, விசுவாசத்தைப் பரிபூரணமாக்குபவராக’ இருக்கிறார். (எபிரெயர் 12:1, 2-ஐ வாசியுங்கள்.) எபிரெயர் 11-ஆம் அதிகாரத்தில், விசுவாசத்தைப் பற்றி பவுல் அருமையான விவரங்களை அளித்தார். முதலில் விசுவாசமென்றால் என்னவென்று ரத்தினச் சுருக்கமாகக் குறிப்பிட்டார்; அதன்பின், விசுவாசத்தில் சிறந்து விளங்கியவர்களான நோவா, ஆபிரகாம் போன்ற ஆண்களையும், சாராள், ராகாப் போன்ற பெண்களையும் பட்டியலிட்டார். இந்த விஷயங்களை மனதில் வைத்துத்தான் அவர் சக கிறிஸ்தவர்களை இவ்வாறு ஊக்கப்படுத்தினார்: ‘விசுவாசத்தின் அதிபதியாக இருப்பவரும் விசுவாசத்தைப் பரிபூரணமாக்குபவருமான இயேசுவின் மீதே கண்களை ஒருமுகப்படுத்துங்கள்.’ இயேசுவின் மீது கண்களை ஒருமுகப்படுத்தும்படி அவர் ஏன் சொன்னார்?
17 எபிரெயர் 11-ஆம் அதிகாரத்தில் பட்டியலிடப்பட்டுள்ள ஆண்களும் பெண்களும் கடவுளுடைய வாக்குறுதியில் பலமான விசுவாசம் வைத்திருந்தபோதிலும், மேசியாவின் மூலமும், பரலோக அரசாங்கத்தின் மூலமும் கடவுள் தமது வாக்கை எவ்வாறு நிறைவேற்றுவார் என்பது பற்றிய எல்லா விவரங்களையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை. இந்த அர்த்தத்திலேயே அவர்களது விசுவாசம் முழுமையடையாதிருந்தது. சொல்லப்போனால், மேசியானிய தீர்க்கதரிசனங்கள் பலவற்றை எழுதுவதற்காக யெகோவாவால் உபயோகிக்கப்பட்டவர்களும்கூட, தாங்கள் எழுதிய விஷயங்களின் கருத்தை முழுமையாய்ப் புரிந்திருக்கவில்லை. (1 பே. 1:10-12) அந்தத் தீர்க்கதரிசனங்களை இயேசு எப்படியெல்லாம் நிறைவேற்றினார் என்பதை நன்றாகப் புரிந்துகொண்டால் மட்டுமே விசுவாசம் பரிபூரணமடையும், அதாவது முழுமையடையும். ஆகவே, ‘விசுவாசத்தின் அதிபதியாகவும், விசுவாசத்தைப் பரிபூரணமாக்குபவராகவும்’ இயேசு வகிக்கிற பங்கைத் தெளிவாகப் புரிந்துகொண்டு அதை மதித்துணர்வது எவ்வளவு முக்கியம்!
தேடிக்கொண்டே இருங்கள்
18, 19. (அ) கிறிஸ்துவுக்குள் மறைத்து வைக்கப்பட்டுள்ள மற்ற ஆன்மீகப் பொக்கிஷங்களைக் குறிப்பிடுங்கள். (ஆ) நாம் ஏன் இயேசுவிடம் ஆன்மீகப் பொக்கிஷங்களைத் தொடர்ந்து தேட வேண்டும்?
18 மனிதகுலத்தின் மீட்புக்காகக் கடவுள் செய்திருக்கிற ஏற்பாட்டில் இயேசு வகிக்கும் ஒப்பற்ற பங்குகள் சிலவற்றை மட்டுமே நாம் இதுவரை கவனித்தோம். கிறிஸ்துவுக்குள் மறைத்து வைக்கப்பட்டுள்ள பொக்கிஷங்கள் இன்னும் நிறைய இருக்கின்றன. அவற்றைக் கண்டுபிடிப்பது, மிகுந்த ஆனந்தத்தையும் நன்மைகளையும் அளிக்கும். உதாரணத்திற்கு இயேசுவை, “வாழ்வின் அதிபதி” எனவும், வானில் உதிக்கிற “விடிவெள்ளி” எனவும் அப்போஸ்தலன் பேதுரு அழைத்தார். (அப். 3:15; 5:31; 2 பே. 1:19) “ஆமென்” என்ற பெயரும் இயேசுவுக்கு இருப்பதாக பைபிள் சொல்கிறது. (வெளி. 3:14) இயேசு வகிக்கிற இந்தப் பங்குகளின் அர்த்தத்தையும், அவற்றின் முக்கியத்துவத்தையும் நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? இயேசு சொன்னதைப் போலவே, “தேடிக்கொண்டே இருங்கள், அப்போது கண்டடைவீர்கள்.”—மத். 7:7.
19 இயேசுவுக்கு இணையாக எந்தவொரு மனிதனும் இந்தளவு அர்த்தம் பொதிந்த வாழ்க்கை வாழ்ந்ததுமில்லை, நம் நித்திய நலனுக்காக வழிவகுத்ததுமில்லை. அவருக்குள் இருக்கிற ஆன்மீகப் பொக்கிஷங்களை முழு ஈடுபாட்டுடன் தேடுவோருக்கெல்லாம் அவை கிடைப்பது உறுதி. ஆகவே, “அவருக்குள் மறைத்து வைக்கப்பட்டுள்ள” பொக்கிஷங்களைக் கண்டுபிடித்து, மட்டில்லா மகிழ்ச்சியைப் பெறுங்கள், அளவில்லா ஆசீர்வாதத்தை அடையுங்கள்!
நினைவிருக்கிறதா?
• என்ன பொக்கிஷங்களைத் தேடிக்கண்டுபிடிக்கும்படி கிறிஸ்தவர்கள் ஊக்கமளிக்கப்படுகிறார்கள்?
• கொலோசெயருக்கு பவுல் கொடுத்த அறிவுரை இன்று நமக்கும்கூட ஏன் பொருத்தமாக இருக்கிறது?
• கிறிஸ்துவுக்குள் “மறைத்து வைக்கப்பட்டுள்ள” ஆன்மீகப் பொக்கிஷங்கள் சிலவற்றைக் குறிப்பிடுங்கள், அவற்றை விளக்குங்கள்.
[பக்கம் 5-ன் படங்கள்]
கிறிஸ்துவுக்குள் “மறைத்து வைக்கப்பட்டுள்ள” பொக்கிஷங்களுக்கு வழிகாட்டுகிற வரைபடம் பைபிளே