கிறிஸ்தவ யூபிலி ஆயிர வருட ஆட்சியில் உச்சக்கட்டத்தை அடைகிறது
இஸ்ரேல் குடியரசிலும்கூட (1948-ல் தோற்றுவிக்கப்பட்டது) தங்களை மோசேயின் நியாயப்பிரமாணத்தின் கீழிருப்பதாக கருதிய அநேக யூதர்கள், யூபிலி வருட கொண்டாட்டத்தைத் திரும்ப அமுலுக்குக் கொண்டுவரவில்லை. அவர்கள் அதை முயற்சித்தால் அநேக சிக்கல்கள் அங்கு வரும். சொத்துரிமைகள் இதில் உட்பட்டிருப்பதால் மிகப் பெரிய பொருளாதார பிரச்னைகள் உருவாகும். பூர்வத்தில் 12 கோத்திரங்கள் குடியிருந்த தேசம் முழுவதும் இப்பொழுது இஸ்ரேல் குடியரசாக இல்லை. மேலுமாக ஜனங்களின் கோத்திர அடையாளம் மறைந்துவிட்டதால், லேவிக் கோக்திர பிரதான ஆசாரியனைக் கொண்ட ஒரு ஆலயமும் அங்கு இல்லை.
2 ஆனால், ஒரு யூபிலி கொண்டாட்டத்தின் ஆசீர்வாதங்களின் சம்பந்தமாக இது நம்மை எங்கே விட்டுச் செல்கிறது? பூர்வ யூபிலி விடுதலையின் கொண்டாட்ட வருடமாக இருந்தது என்பது நமக்கு நினைவிருக்கிறது. அடிமைகளாக தங்களை விற்றுவிட்ட இஸ்ரவேலர் விடுதலைப் பெற்றனர். அவர்களுடைய பரம்பரை காணியாட்சிகள் திரும்பத் தரப்பட்டன. (லேவியராகமம் 25:8-54) இந்த ஏற்பாடு, பொ.ச. 33-ல் மோசேயின் நியாயப்பிரமாண உடன்படிக்கையோடு முடிவுக்கு வந்தது என்பதை நாம் முந்தையக் கட்டுரையில் பார்த்தோம். (ரோமர் 7:4, 6; 10:4) பின்பு, கடவுள் ஒரு புதிய உடன்படிக்கையை அமுலுக்குக் கொண்டுவந்தார். இதன் மூலமாக அவர் விசுவாசிகளின் பாவங்களை மன்னித்து, பரிசுத்த ஆவியினால் அவர்களை அபிஷேகம் பண்ணி, பரலோகத்துக்கு எடுத்துக் கொள்வதற்காக புத்திரர்களாக அவர்களைச் சுவிகாரம் செய்து கொள்ளக்கூடியவராக இருந்தார். (எபிரெயர் 10:15-18) என்றபோதிலும் இவ்விதமாக இந்தப் புதிய உடன்படிக்கை ஏற்பாட்டிலிருந்து நன்மை அடைகிறவர்கள், “பூமியிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்ட” 1,44,000 பேர் அடங்கிய ஒரு “சிறு மந்தை”யாகவே இருக்கிறார்கள். அப்படியானால், யூபிலியால் முன்நிழலாக காண்பிக்கப்பட்ட விடுதலையை லட்சக்கணக்கான மற்ற உண்மைத்தவறாத கிறிஸ்தவர்கள் எவ்விதமாக அடைவர்?—லூக்கா 12:32; வெளிப்படுத்தின விசேஷம் 14:1-4.
அனைவருக்கும் ஒரு யூபிலி
3 கிறிஸ்தவத்துக்கு முந்தின காலங்களில், வருடாந்தர பாவ நிவாரண நாளின் நன்மைகள் ஒரே ஒரு வருடத்துக்கு மாத்திரமே கிடைத்தன. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய பலியின் நன்மைகள் எப்பொழுதும் கிடைப்பதாயும் நிலையானதாயும் இருக்கிறது. ஆகவே மாதிரி படிவமான பிரதான ஆசாரியனாகிய இயேசு கிறிஸ்து மறுபடியுமாக மனிதனாக வந்து தம்மை பலி கொடுத்து பின்னர் ஒவ்வொரு வருடமும் அந்தப் பலியின் மதிப்பை யெகோவா தேவனின் மகாப் பரிசுத்த ஸ்தலத்தில் சமர்ப்பிப்பதற்காக பரலோகத்துக்குத் திரும்பி செல்ல வேண்டியதில்லை. வேதவசனங்கள் சொல்கிற விதமாகவே: “மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து இனி மரிப்பதில்லையென்று அறிந்திருக்கிறோம்; மரணம் இனி அவரை ஆண்டுகொள்வதில்லை.”—ரோமர் 6:9; எபிரெயர் 9:28.
4 ஆகவே பொ.ச. 33 பெந்தெகொஸ்தே முதற்கொண்டு அதைத் தொடர்ந்து வந்த வருடங்களில், விசுவாசிகள் மகிமைப்படுத்தப்பட்ட கர்த்தராகிய இயேசுவின், ஆவியால் பிறப்பிக்கப்பட்ட சீஷர்களானபடியால் அவர்கள் கிறிஸ்தவ யூபிலியைக் கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு தரம் “பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலை”யான பின்பு அவர்கள் உயிர்ப்பூட்டும் விடுதலையை அனுபவித்து வந்திருக்கிறார்கள். (ரோமர் 8:1, 2) இன்னும் மற்றவர்களும்கூட தங்களுடைய பாவங்களுக்கு மன்னிப்பைப் பெற்று, அபிஷேகம் பண்ணப்பட்டு, தேவனின் ஆவிக்குரிய குமாரர்களாவதற்காக அவர்கள் கிறிஸ்தவ செய்தியையும்கூட அறிவித்து வந்திருக்கிறார்கள். அப்படியென்றால் ஒருவர் 1,44,000 பேர் கொண்ட தொகுதியைச் சேர்ந்தவராக இல்லாவிட்டால், அவர் இப்பொழுது மகிழ்ச்சியான விடுதலையை அனுபவிக்க முடியாது என்பதை இது அர்த்தப்படுத்துமா?
5 இதன் சம்பந்தமாக ரோமர் 8:19-21-ல் அப்போஸ்தலனாகிய பவுலின் வார்த்தைகள் குறிப்பிடத்தக்கவையாக இருக்கின்றன: “தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்குச் சிருஷ்டியானது மிகுந்த ஆவலோடே காத்துக் கொண்டிருக்கிறது.” அதேனென்றால் சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்திலிருக்கிறது. [பாவமுள்ளதாக பாவத்தை நீக்க முடியாததாக இருக்கிறது] அது “விடுதலையாக்கப்பட்டு தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும் என்கிற நம்பிக்கை”யை பவுல் பின்னர் வலியுறுத்தி காண்பித்தான். ஆகவே இப்படிப்பட்ட விடுதலை பரலோகத்துக்குரிய “தேவனுடைய புத்திரருக்கு” மாத்திரம் இல்லை. யோவான் 3:16-லுள்ள பிரபலமான வார்த்தைகள் அதை உறுதிசெய்கின்றன. ஏற்கெனவே சொல்லப்பட்ட விதமாகவே, அபிஷேகம் பண்ணப்பட்ட அப்போஸ்தலனாகிய யோவான், கிறிஸ்து “நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார்” என்று சொன்னான்.—1 யோவான் 2:2.
1919—பூர்வாங்கமான ஒரு விடுதலை
6 நவீன காலங்களில், கறிஸ்தவ யூபிலியைக் கொண்டாடும் அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள், விசேஷமாக 1919 முதற்கொண்டு, விடுதலையின் நற்செய்தியை அறிவித்து வருகிறார்கள். அண்மையில் தானே நீங்கள் பிறந்தவர்களாக இருந்தால், ‘ஏன் அந்தச் சமயம் முதற்கொண்டு’ என்பதாக நீங்கள் நினைக்கக்கூடும். நீங்கள் விடுதலையை அனுபவித்துக் களிப்பது இதில் உட்பட்டிருக்கிறது என்பதை மனதில் கொண்டு நாம் பார்ப்போம்.
7 அந்தச் சமயத்துக்கு பல பத்தாண்டுகளுக்கு முன்பாக, அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள், ஸ்டடீஸ் இன் தி ஸ்கிரிப்சர்ஸ் (Studies in the Scriptures) போன்ற குறிப்பிடத்தக்க தொடர் வெளியீடுகளில் பைபிள் சத்தியங்களை வெளியிட்டார்கள். (1886-1917) அவர்கள் அநேக விளக்கமான சிறு புத்தகங்களையும் துண்டு பிரதிகளையும்கூட விநியோகித்தார்கள். முதல் உலகப் போரின்போது, எதிர்ப்பும், சோதனையும் சலித்து பிரித்தெடுப்பதும் அவர்களுடைய நடவடிக்கைகளில் ஒருவித தளர்ச்சியும் ஏற்பட்டது. ஆனால் 1919-ல் அபிஷேகம் பண்ணப்பட்ட மீதியானோர் புதுப்பிக்கப்பட்ட வைராக்கியத்தோடு பைபிள் சத்தியங்களை அறிவிக்க ஆரம்பித்தார்கள். பொ.ச. 30-ல் இயேசு “சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும் குருடருக்குப் பார்வையையும்” பிரசித்தப்படுத்த தாம் அபிஷேகம் பண்ணப்பட்டிருப்பதாக சொல்லக்கூடியவராக இருந்தது போலவே இந்த நவீனகால அபிஷேகம் பண்ணப்பட்டவர்களாலும்கூட சொல்ல முடிந்தது. 1919-ல் செப்டம்பர் 1-7-ல் நடைபெற்ற கிளர்ச்சியூட்டிய மாநாட்டுக்குப் பின்னர்a அவர்கள் சத்தியங்களைப் பிரசங்கிப்பதில் சுறுசுறுப்பாக முன்னேறிச் சென்று எண்ணற்ற ஆட்களை விடுதலை செய்தார்கள்.—லூக்கா 4:18.
8 உதாரணமாக, தேவனின் சுரமண்டலம் (Harp of God) என்ற பைபிள் படிப்பு உதவி புத்தகத்தை (1921) எடுத்துக் கொள்ளுங்கள். அது இன்றியமையாத சத்தியங்களை வெளிப்படுத்தியது. “பொல்லாதவர்களுக்குத் தண்டனை . . . நித்திய வாதனை அல்லது தணியாத அக்கினியும் கந்தகமும் எரிகிற நரகத்தில் சித்திரவதை” என்ற கோட்பாட்டின் காரணமாக, “அநேகர் பைபிளைப் படிக்க அஞ்சுகிறார்கள்” என்பதை அந்தப் புத்தகம் ஒப்புக்கொண்டது. இந்தப் புத்தகத்தின் பிரதியை வாசித்த சுமார் 60 லட்சம் வாசகர்கள், இந்தக் கோட்பாடு “குறைந்த பட்சம் சுமார் 4 வித்தியாசமான மற்றும் தெளிவான காரணங்களுக்காக உண்மையாக இருக்க முடியாது” என்பதைக் கற்றறிந்தார்கள்: “(1) ஏனென்றால் அது நியாயமற்றதாக இருக்கிறது; (2) ஏனென்றால் அது நீதிக்கு நேர் எதிராக இருக்கிறது; (3) ஏனென்றால் அது அன்பின் நியமத்துக்கு முரணாக இருக்கிறது. (4) ஏனென்றால் அது முற்றிலும் வேத ஆதாரமற்றதாக இருக்கிறது.” நரகத்தில் நித்திய ஆக்கினையை அல்லது உத்தரிக்கும் ஸ்தலத்தில் வேதனையை நினைத்து பயத்தில் வளர்ந்து வந்த ஆட்களுக்கு இது எவ்வளவு விடுதலையளிப்பதாக இருந்திருக்கும் என்பதை நீங்கள் கற்பனை செய்து பார்க்கலாம்!
9 ஆம், இந்த அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள் பைபிள் சத்தியங்களை வைராக்கியத்தோடு பிரசங்கித்தபோது உலகம் முழுவதிலும் பொய் போதகங்கள், மூட நம்பிக்கைகள், வேத ஆதாரமற்ற பழக்க வழக்கங்கள் (மூதாதையர் வழிபாடு, பேய்கள் அல்லது பொல்லாத ஆவிகளைப் பற்றிய பயம், மத குருமார்கள் பணம் சுரண்டல்) ஆகியவைகளுக்கு அடிமைப்பட்டிருந்த ஆட்கள் விடுவிக்கப்பட்டார்கள். பைபிள் படிப்பு உதவி புத்தகங்களின் தலைப்புகளே, அவை லட்சக்கணக்கானோர் மீது செலுத்திய விடுதலையளிக்கும் செல்வாக்கைப் பிரதிபலிக்கின்றன.b இவ்விதமாக, இயேசு, தம்முடைய சீஷர்கள் தாம் செய்ததைவிட “பெரிய கிரியைகளைச் செய்வார்கள்” என்று சொன்னது உண்மையாக நிறைவேறியிருக்கிறது. (யோவான் 14:12) “சிறைபட்டவர்களுக்கு விடுதலை”யை பிரசங்கிப்பதில் இயேசு செய்த பூர்வாங்க ஆவிக்குரிய விடுதலையளிக்கும் வேலையோடு ஒப்பிடுகையில், கடவுளுடைய நவீன கால ஊழியர்கள் மிகுதியான அளவில் செய்திருக்கிறார்கள். உலகம் முழுவதிலும் அநேக லட்சக்கணக்கான ஆட்களை இவர்கள் சென்றெட்டியிருக்கிறார்கள்.
10 ஆனால் முதல் நூற்றாண்டில் கூடுதலான ஒரு விடுதலை பொ.ச. 33 பெந்தெகொஸ்தேவின்போது ஆரம்பமானதை நினைவுபடுத்திப் பாருங்கள். அங்கே சிறுமந்தைக்குக் கிறிஸ்தவ யூபிலி ஆரம்பமானது. இவர்கள் தங்களுடைய பாவங்களுக்கு மன்னிப்பை பெற்று பரலோகத்தில் “தேவனுடைய புத்திரர்களாக” ஆனார்கள். நம்முடைய காலத்தைப்பற்றி என்ன? ஆயிரக்கணக்கான மற்ற பக்தியுள்ள கிறிஸ்தவர்கள் பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டு இவ்விதமாக மகத்தான ஒரு யூபிலியைக் கொண்டாட முடியுமா? ஆம், அப்போஸ்தலனாகிய பேதுரு “உலகத் தோற்றமுதல் தேவன் தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகளெல்லாருடைய வாக்கினாலும் உரைத்தவைகள் எல்லாம் நிறைவேறித் தீரும் காலங்களைப்” பற்றி பேசிய போது இதைச் சுட்டிக் காண்பித்தான்.—அப்போஸ்தலர் 3:21.
லட்சக்கணக்கானோருக்கு ஒரு யூபிலி
11 லேவியராகமம் 25-ம் அதிகாரத்தில் யெகோவாவின் நோக்குநிலையில், இஸ்ரவேலர் எகிப்திலிருந்து அவர் விடுவித்துக் கொண்டு வந்த அவருடைய “ஊழியக்காரராக” இருப்பதை அவர்களுக்கு இரண்டு தடவைகள் நினைப்பூட்டியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். (வசனங்கள் 42 மற்றும் 55) இந்த யூபிலி அதிகாரம், “தங்க வந்தவர்களையும்” ‘அவர்கள் மத்தியிலுள்ள அந்நியர்களையும்’ பற்றியும்கூட குறிப்பிடுகிறது. இவர்கள் இன்றுள்ள “திரளான கூட்டமாகிய ஜனங்களுக்கு” இணையாக இருக்கிறார்கள். இவர்கள் கிறிஸ்தவ நற்செய்தியை அறிவிப்பதில் ஆவிக்குரிய இஸ்ரவேலரோடு சேர்ந்து கொள்ளுகிறார்கள்.
12 1935 முதற்கொண்டு “நல்ல மேய்ப்பனாகிய” இயேசு கிறிஸ்து “வேறே ஆடுகள்” என்பதாக தாம் அழைத்த ஆட்களை, அபிஷேகம் பண்ணப்பட்ட மீதியானோரோடு சுறுசுறுப்பான கூட்டுறவுக்குள் கொண்டு வந்திருக்கிறார். இவர்களை அவர் “ஒரே மேய்ப்பனின்” கீழ் “ஒரே மந்தை”யை உண்டு பண்ணுவதற்காக “கொண்டுவர” வேண்டியவராக இருந்தார். (யோவான் 10:16) “வேறே ஆடுகள்” இப்பொழுது லட்சக்கணக்கில் இருக்கிறார்கள். அந்தத் திரள் கூட்டத்தில் ஒருவராக நீங்கள் இருப்பீர்களேயானால், தேவனுடைய சிநேகிதனாக நீங்கள் ஏற்கெனவே நீதிமானாக கருதப்படுகிறீர்கள். மனித சிருஷ்டியின் ஒரு பாகமாக, பூமியின் மீது வரப்போகும் “உரைத்தவைகள் எல்லாம் நிறைவேறித் தீருங்காலத்தில்” “அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக” நீங்கள் எதிர் நோக்கியிருக்கிறீர்கள். இது தவறான நம்பிக்கை இல்லை.—ரோமர் 8:19-21; அப்போஸ்தலர் 3:20, 21.
13 பரலோக நம்பிக்கையுடைய கிறிஸ்தவ யூபிலியை அனுபவிக்கும் 1,44,000 பேரை அப்போஸ்தலனாகிய யோவான் பார்த்த பின்பு, அவன் ஒரு திரளான கூட்டமாகிய ஜனங்களை விவரித்தான்: “இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்; இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள். ஆனபடியால், இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருந்து இரவும் பகலும் அவருடைய ஆலயத்திலே அவரைச் சேவிக்கிறார்கள்.”—வெளிப்படுத்தின விசேஷம் 7:14, 15.
14 இப்பொழுதேயும்கூட மகா உபத்திரவத்துக்கு முன்பாக, இவர்கள் கிறிஸ்துவின் சிந்தப்பட்ட இரத்தத்தில் விசுவாசத்தை அப்பியாசித்து இவ்விதமாக அவருடைய பலிக்குரிய மரணத்திலிருந்து நன்மையடைந்தது வருகிறார்கள். மகா பாபிலோனிலிருந்து விடுவிக்கப்பட்டிருப்பதாலும், யெகோவா தேவனுக்கு முன்பாக நல்மனசாட்சியைக் கொண்டிருப்பதாலும் மத்தேயு 24:14-ன் நிறைவேற்றமாக முடிவு வருவதற்கு முன்பாக ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கிக்கும் சிலாக்கியத்தில் பங்கு கொள்வதாலும்கூட அவர்கள் களிகூருகிறார்கள்.
15 என்றபோதிலும், திரள் கூட்டத்தார், உடன்பிறந்துள்ள பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுதலையடையும் எதிர்பார்ப்பைப் பற்றி என்ன? அந்தக் காலம் அருகாமையில் இருக்கிறதா? முன்னறிவிக்கப்பட்ட எல்லாக் காரியங்களும் சம்பவிக்குமுன்னே ஒழிந்துபோகாது என்பதாக இயேசு கிறிஸ்து முன்னறிவித்த மனிதவர்க்க சந்ததியாரில் சிலர் நம்மோடு இன்னும் இருக்கிறார்கள் என்று நம்புவதற்கு நமக்கு நல்ல காரணமிருக்கிறது. (மத்தேயு 24:34) ஆகவே “காரிய ஒழுங்கின் முடிவின்” மகத்தான இறுதிகட்டம் வெகு சமீபத்தில் இருக்க வேண்டும்.—மத்தேயு 24:3.
கிறிஸ்தவ யூபிலியை நிறைவு செய்யும் அம்சங்கள்
16 “சர்வ வல்லமையுள்ள தேவனுடைய மகா நாளில் நடக்கும் யுத்தம்” விரைவாக வந்து கொண்டிருக்கிறது. “சிறு மந்தை”யின் மீதியானோரும் அவர்களுடைய உண்மையுள்ள பற்றுமாறாத தோழர்களாக “திரள் கூட்டத்தாரும்” யெகோவா தேவனிடமாக உத்தமத்தைக் காத்துக் கொண்டு தெய்வீக பாதுகாப்பை எதிர் நோக்கியிருக்கிறார்கள். சர்வலோக பேரரசராக யெகோவாவின் நாமம் நிலைநாட்டப்படும் வகையில், அவர் எல்லா சத்துருக்களுக்கும் கொண்டுவரும் தோல்வியை இவர்கள் ஆவலோடே எதிர்பார்த்திருக்கிறார்கள். அவர்களுடைய கிறிஸ்தவ விடுதலையின் மகிழ்ச்சிக்கு என்ன நிறைவு செய்யும் அம்சமாக இது இருக்கும்!—வெளிப்படுத்தின விசேஷம் 16:14; 19:19-21; ஆபகூக் 2:3.
17 இதைத் தொடர்ந்து சுத்திகரிக்கப்பட்ட பூமியின் மீது வெற்றி பெற்ற ராஜாவாகிய இயேசு கிறிஸ்துவின் ஆட்சி ஆரம்பமாகும். யெகோவாவின் சர்வலோக அரசுரிமை மீண்டும் உறுதி செய்யப்படும். ராஜாதி ராஜாவாகவும் கர்த்தாதி கர்த்தாவாகவும் இயேசு கிறிஸ்து பூமி முழுவதையும் தம்முடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவார். பின்பு அவர் உயிர்த்தெழுப்பப்பட்ட மரித்தோர் உட்பட லட்சக்கணக்கான மனிதர்களுக்கு தம்முடைய பலியின் மதிப்பை நேரடியாக பயன்படுத்துவார். விசுவாசத்தை அப்பியாசித்து, கிறிஸ்துவின் மூலமாக கடவுள் அளிக்கும் பாவ மன்னிப்பை மனமுவந்து ஏற்றுக்கொள்கிறவர்களுக்கு அவர் இவ்விதமாகச் செய்வார். இதற்கு அத்தாட்சியாக பின்வரும் வார்த்தைகள் நிறைவேற்றமடையும்: “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை.” (வெளிப்படுத்தின விசேஷம் 21:3, 4) இது உண்மையான விடுதலையாக இல்லையென்றால், எது உண்மையான விடுதலையாக இருக்க முடியும்?
18 மேலுமாக பூமி இனிமேலும் பேராசைமிக்க தனி ஆட்களாலும், கூட்டுரிமை குழுக்களாலும், மனித அரசாங்கங்களாலும் கட்டுப்படுத்தப்பட்டு அசுத்தப்படுத்தப்பட்டு கெடுக்கப்படாது. (வெளிப்படுத்தின விசேஷம் 11:18) மாறாக, அது மெய் வணக்கத்தாரிடமாக திரும்ப கொடுக்கப்படும். ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தைச் சொல்லர்த்தமாக நிறைவேற்றும் மகிழ்ச்சிகரமான வேலையில் பங்குகொள்ளும் பொறுப்பு அவர்களிடமாக ஒப்படைக்கப்படும்: “வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள், திராட்சத் தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைப் புசிப்பார்கள். அவர்கள் கட்டுகிறதும் வேறொருவர் குடியிருக்கிறதும், அவர்கள் நாட்டுகிறதும் வேறொருவர் கனி புசிக்கிறதுமாயிருப்பதில்லை . . . அவர்கள் விருதாவாக உழைப்பதில்லை; அவர்கள் துன்பமுண்டாகப் பிள்ளைகளைப் பெறுவதுமில்லை; அவர்களும் அவர்களோடேகூட அவர்கள் சந்தானமும் யெகோவாவாலே ஆசீர்வதிக்கப்பட்ட சந்ததியாயிருப்பார்கள்.” (ஏசாயா 65:21-25) ஆயிர வருட ஆட்சியின் முடிவிலே சுதந்தரிக்கப்பட்ட பாவத்தின் மற்றும் அபூரணத்தின் எல்லா தடங்களும் துடைத்து அழிக்கப்பட்டுவிட்டிருக்கும். பூமியின் மீதுள்ள கடவுளுடைய உண்மைத் தவறாத ஊழியர்கள் யூபிலியின் முழு உச்சக்கட்டத்தைக் கொண்டாடுவார்கள். இதோடு யூபிலி முடிவடையும். ஆகவே யூபிலியால் முன்நிழலாக காண்பிக்கப்பட்ட விடுதலை நிறைவேற்றமடைந்து விட்டிருக்கும்.—எபேசியர் 1:10.
[அடிக்குறிப்புகள்]
a “குழப்பமான வனாந்தரத்தில் ஒரு குரலைப் போலவும், வரப்போகும் பொற்காலத்தை அறிவிப்பதைப் பணியாகவும் கொண்ட” ஒரு புதிய பத்திரிகை அங்கு வெளியிடப்பட்டது. இன்று இந்தப் பத்திரிகை விழித்தெழு! என்று அழைக்கப்படுகிறது.
b ஆங்கிலத்தில்—“இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் லட்சக்கணக்கானோர் ஒருபோதும் மரிக்க மாட்டார்கள்” (1920); “மீட்பு” (1926); “ஜனங்களுக்குச் சுயாதீனம்” (1927); “விடுதலை” (1932); “சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” (1943); “மரணத்துக்குப் பின் பிழைத்திருப்பதைக்” குறித்து வேதவாக்கியங்கள் சொல்வது என்ன? (1955); “நித்திய ஜீவன்—தேவ புத்திரர்களின் சுயாதீனத்தில்” (1966); தமிழில்—“நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற சத்தியம்” (1968); “விடுதலைக்கு வழிநடத்தும் தெய்வீக சத்திய பாதை” (1980).