படிப்புக் கட்டுரை 39
‘வாழ்வின் புத்தகத்தில்’ உங்கள் பெயர் எழுதப்பட்டிருக்கிறதா?
‘யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறவர்களுக்காக ஒரு நினைவுப் புத்தகம் அவருக்குமுன் எழுதப்பட்டது.’—மல். 3:16.
பாட்டு 61 சாட்சிகளே, முன்னே செல்லுங்கள்!
இந்தக் கட்டுரையில்...a
1. மல்கியா 3:16 சொல்கிறபடி, யெகோவா எந்தப் புத்தகத்தை எழுதிக்கொண்டு வருகிறார், அதில் என்ன இருக்கிறது?
பல்லாயிரம் வருஷங்களாகவே யெகோவா ஒரு விசேஷமான புத்தகத்தை எழுதிக்கொண்டு வருகிறார். அந்தப் புத்தகத்தில் நிறைய பெயர்கள் இருக்கின்றன. அதில் அவர் எழுதிய முதல் பெயர் ஆபேல். ஆபேல்தான் முதன்முதலில் யெகோவாவுக்கு உண்மையாக இருந்தவர்.b (லூக். 11:50, 51) அதற்குப் பின்பு பல நூற்றாண்டுகளாகவே, யெகோவா அதில் நிறைய பெயர்களைச் சேர்த்துக்கொண்டு வருகிறார். இன்றைக்கு அதில் லட்சக்கணக்கான பெயர்கள் இருக்கின்றன. பைபிள் இந்தப் புத்தகத்தை “நினைவுப் புத்தகம்,” ‘வாழ்வின் புத்தகம்,’ ‘வாழ்வின் சுருள்’ என்றெல்லாம் குறிப்பிடுகிறது. இந்தக் கட்டுரையில் அதை நாம் ‘வாழ்வின் புத்தகம்’ என்று மட்டும் சொல்வோம்.—மல்கியா 3:16-ஐ வாசியுங்கள்; வெளி. 3:5; 17:8.
2. வாழ்வின் புத்தகத்தில் யாருடைய பெயரெல்லாம் எழுதப்பட்டிருக்கிறது, அதில் நம்முடைய பெயர் வர வேண்டுமென்றால் நாம் என்ன செய்ய வேண்டும்?
2 யாரெல்லாம் யெகோவாவைப் பயபக்தியோடு வணங்குகிறார்களோ... யாரெல்லாம் அவருடைய பெயரை உயர்வாக மதிக்கிறார்களோ... அவர்களுடைய பெயர்கள் இந்த விசேஷ புத்தகத்தில் எழுதப்படும். அவர்களுக்கு முடிவில்லாத வாழ்க்கை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இயேசு கிறிஸ்துவின் மீட்பு பலியின் அடிப்படையில் யெகோவாவோடு நாம் நெருக்கமான நட்பை வளர்த்துக்கொள்ளும்போது, நம்முடைய பெயரை அந்தப் புத்தகத்தில் யெகோவா எழுதுவார். (யோவா. 3:16, 36) நமக்குப் பரலோகத்தில் வாழும் நம்பிக்கை இருந்தாலும் சரி, பூமியில் வாழும் நம்பிக்கை இருந்தாலும் சரி, அந்தப் புத்தகத்தில் நம்முடைய பெயர் வர வேண்டும் என்ற ஆசை நம் எல்லாருக்குமே இருக்கிறது.
3-4. (அ) வாழ்வின் புத்தகத்தில் இப்போது நம்முடைய பெயர் இருக்கிறது என்பதற்காக என்றென்றைக்கும் நாம் வாழ்வோம் என்று அர்த்தமா? விளக்குங்கள். (ஆ) இந்தக் கட்டுரையிலும் அடுத்த கட்டுரையிலும் நாம் எதைப் பற்றிப் பார்ப்போம்?
3 இந்தப் புத்தகத்தில் ஒருவருடைய பெயர் வந்துவிட்டது என்பதற்காக அவருக்கு முடிவில்லாத வாழ்க்கை நிச்சயம் கிடைத்துவிடும் என்று அர்த்தமா? யாத்திராகமம் 32:33-ல், மோசேயிடம் யெகோவா பேசிய விஷயத்திலிருந்து இந்தக் கேள்விக்கான பதிலைத் தெரிந்துகொள்ளலாம். அந்த வசனத்தில், “யாரெல்லாம் எனக்கு எதிராகப் பாவம் செய்தார்களோ, அவர்களுடைய பெயரைத்தான் என் புத்தகத்திலிருந்து துடைத்தழிப்பேன்” என்று யெகோவா சொல்கிறார். அப்படியென்றால், இப்போது அந்தப் புத்தகத்தில் யெகோவா எழுதியிருக்கிற பெயர்களெல்லாம் பென்சிலில் எழுதிய மாதிரிதான் இருக்கின்றன. எப்போது வேண்டுமானாலும் அதை அவர் அழித்துவிடலாம். (வெளி. 3:5) நம்முடைய பெயரை இங்க்கில் எழுதியதுபோல் நிரந்தரமாக அந்தப் புத்தகத்தில் அவர் எழுத வேண்டுமென்றால் அதற்கு ஏற்றபடி நாம் நடந்துகொள்ள வேண்டும்.
4 இப்போது நமக்கு சில கேள்விகள் வரலாம். உதாரணத்துக்கு, வாழ்வின் புத்தகத்தில் பெயர்கள் எழுதப்பட்டவர்களைப் பற்றியும் பெயர்கள் எழுதப்படாதவர்களைப் பற்றியும் பைபிள் என்ன சொல்கிறது? அந்தப் புத்தகத்தில் பெயர்கள் எழுதப்பட்டவர்களுக்கு முடிவில்லாத வாழ்க்கை எப்போது கிடைக்கும்? யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொள்ள வாய்ப்பே கிடைக்காமல் இறந்துபோனவர்கள் என்ன ஆவார்கள்? அவர்களுடைய பெயர்கள் அந்தப் புத்தகத்தில் எழுதப்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறதா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் இந்தக் கட்டுரையிலும் அடுத்த கட்டுரையிலும் பதில் பார்ப்போம்.
இந்தப் புத்தகத்தில் யாருடைய பெயர்களெல்லாம் இருக்கின்றன?
5-6. (அ) பிலிப்பியர் 4:3 சொல்கிறபடி, யாருடைய பெயர்கள் வாழ்வின் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன? (ஆ) அவர்களுடைய பெயர்கள் அதில் எப்போது நிரந்தரமாக எழுதப்படும்?
5 வாழ்வின் புத்தகத்தில் யாருடைய பெயர்களெல்லாம் இருக்கின்றன? இந்தக் கேள்விக்குப் பதில் தெரிந்துகொள்ள, ஐந்து தொகுதிகளைச் சேர்ந்தவர்களைப் பற்றிப் பார்க்கலாம். அவர்களில் சில தொகுதிகளைச் சேர்ந்தவர்களுடைய பெயர்கள் அந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன. சில தொகுதிகளைச் சேர்ந்தவர்களுடைய பெயர்கள் அதில் இல்லை.
6 முதல் தொகுதி, இயேசுவோடு பரலோகத்தில் ஆட்சி செய்வதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். வாழ்வின் புத்தகத்தில் இப்போது அவர்களுடைய பெயர்கள் இருக்கின்றனவா? ஆமாம். பிலிப்பி சபையில் இருந்த ‘சக வேலையாட்களுக்கு’ அப்போஸ்தலன் பவுல் எழுதிய வார்த்தைகளிலிருந்து இதை நாம் தெரிந்துகொள்கிறோம். இயேசுவோடு பரலோகத்தில் ஆட்சி செய்வதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கிறிஸ்தவர்களுடைய பெயர்கள் வாழ்வின் புத்தகத்தில் இருக்கின்றன என்று அவர் சொல்லியிருக்கிறார். (பிலிப்பியர் 4:3-ஐ வாசியுங்கள்.) அவர்களுடைய பெயர்கள் அதில் தொடர்ந்து இருக்க வேண்டுமென்றால், அவர்கள் கடைசிவரை உண்மையாக இருக்க வேண்டும். அவர்கள் இறப்பதற்கு முன்போ மிகுந்த உபத்திரவம் ஆரம்பிப்பதற்கு முன்போ அவர்களுக்குக் கடைசி முத்திரை கிடைக்கும். அப்போதுதான் அவர்களுடைய பெயர்கள் வாழ்வின் புத்தகத்தில் நிரந்தரமாக எழுதப்படும்.—வெளி. 7:3.
7. திரள்கூட்டமான ஜனங்களின் பெயர்கள் வாழ்வின் புத்தகத்தில் எப்போது நிரந்தரமாக எழுதப்படும் என்பதைப் பற்றி வெளிப்படுத்துதல் 7:16, 17-லிருந்து என்ன புரிந்துகொள்கிறோம்?
7 இரண்டாவது தொகுதி, வேறே ஆடுகளைச் சேர்ந்த திரள்கூட்டமான ஜனங்கள். இப்போது அவர்களுடைய பெயர்கள் வாழ்வின் புத்தகத்தில் இருக்கின்றனவா? ஆம், இருக்கின்றன. அர்மகெதோனில் தப்பிப்பிழைத்த பின்பும் அவர்களுடைய பெயர்கள் அதில் இருக்குமா? இருக்கும். (வெளி. 7:14) செம்மறியாடுகளைப் போல் இருக்கிற இவர்கள் “முடிவில்லாத வாழ்வைப் பெறுவார்கள்” என்று இயேசு சொன்னார். (மத். 25:46, அடிக்குறிப்பு) ஆனால், அர்மகெதோனில் தப்பிப்பிழைத்த உடனேயே இவர்களுக்கு முடிவில்லாத வாழ்வு கிடைத்துவிடுமா? இல்லை. அப்போதும்கூட இவர்களுடைய பெயர்கள் வாழ்வின் புத்தகத்தில் பென்சிலில் எழுதிய மாதிரிதான் இருக்கும். ஆயிர வருஷ ஆட்சியில் இயேசு அவர்களை “மேய்ப்பார், வாழ்வு தரும் நீரூற்றுகளிடம் வழிநடத்துவார்.” யாரெல்லாம் இயேசுவின் வழிநடத்துதலுக்குக் கீழ்ப்படிகிறார்களோ... கடைசி சோதனையில் யெகோவாவுக்கு உண்மையாக இருக்கிறார்களோ... அவர்களுடைய பெயர்களை வாழ்வின் புத்தகத்தில் யெகோவா நிரந்தரமாக எழுதுவார்.—வெளிப்படுத்துதல் 7:16, 17-ஐ வாசிக்கவும்.
8. வாழ்வின் புத்தகத்தில் யாருடைய பெயர்கள் எழுதப்படவில்லை, அவர்களுக்கு என்ன ஆகும்?
8 மூன்றாவது தொகுதி, அர்மகெதோனில் அழியப் போகிற வெள்ளாடுகள். அவர்களுடைய பெயர்கள் வாழ்வின் புத்தகத்தில் இல்லை. அவர்கள் “நிரந்தரமாக அழிக்கப்படுவார்கள்” என்று இயேசு சொன்னார். (மத். 25:46) பவுலும்கூட, “இப்படிப்பட்டவர்கள் . . . நிரந்தர அழிவைத் தண்டனையாக பெறுவார்கள்” என்று சொன்னார். (2 தெ. 1:9; 2 பே. 2:9) இதுவரை கடவுளுடைய சக்திக்கு எதிராக வேண்டுமென்றே பாவம் செய்தவர்களுக்கும்கூட இதே கதிதான். அவர்களும் நிரந்தரமாக அழிக்கப்படுவார்கள். அவர்களுக்குக் கண்டிப்பாக உயிர்த்தெழுதல் நம்பிக்கை இல்லை. (மத். 12:32; மாற். 3:28, 29; எபி. 6:4-6) எந்த இரண்டு தொகுதியைச் சேர்ந்தவர்கள் பூமியில் மறுபடியும் உயிரோடு எழுப்பப்படுவார்கள் என்பதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.
யாரெல்லாம் உயிரோடு எழுப்பப்படுவார்கள்?
9. அப்போஸ்தலர் 24:15 சொல்கிறபடி, எந்த இரண்டு தொகுதிகளைச் சேர்ந்த மக்கள் உயிரோடு எழுப்பப்படுவார்கள், அந்த இரண்டு தொகுதிகளுக்கும் என்ன வித்தியாசம்?
9 இரண்டு தொகுதிகளைச் சேர்ந்தவர்கள் உயிரோடு எழுப்பப்படுவார்கள் என்று பைபிள் சொல்கிறது. என்றென்றைக்கும் இந்தப் பூமியில் வாழும் வாய்ப்பு அவர்களுக்கு இருக்கிறது. அவர்கள் யார்? ‘நீதிமான்கள், அநீதிமான்கள்.’ (அப்போஸ்தலர் 24:15-ஐ வாசியுங்கள்.) உயிரோடு இருந்தபோது யெகோவாவுக்கு உண்மையாகச் சேவை செய்தவர்கள்தான் அந்த ‘நீதிமான்கள்.’ ஆனால், ‘அநீதிமான்கள்’ யெகோவாவுக்கு உண்மையாகச் சேவை செய்திருக்க மாட்டார்கள். பெரும்பாலும், அவருடைய சட்டதிட்டங்களின்படி நடந்திருக்கவும் மாட்டார்கள். இந்த இரண்டு தொகுதிகளைச் சேர்ந்தவர்களுமே உயிரோடு எழுப்பப்படப்போவதால், அவர்களுடைய பெயர்கள் வாழ்வின் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கும் என்று சொல்ல முடியுமா? இந்தக் கேள்விக்குப் பதில் தெரிந்துகொள்வதற்கு, அந்த இரண்டு தொகுதிகளைப் பற்றியும் தனித்தனியாகப் பார்க்கலாம்.
10. ‘நீதிமான்கள்’ ஏன் உயிரோடு எழுப்பப்படுவார்கள், அவர்களில் சிலருக்கு என்ன நியமிப்பு கிடைக்கும்? (பூமியில் நடக்கப்போகும் உயிர்த்தெழுதலைப் பற்றி இந்த இதழில் வந்திருக்கும் “வாசகர் கேட்கும் கேள்விகள்” பகுதியையும் பாருங்கள்.)
10 நான்காவது தொகுதி, ‘நீதிமான்கள்.’ அவர்கள் சாவதற்கு முன்பு அவர்களுடைய பெயர்கள் வாழ்வின் புத்தகத்தில் எழுதப்பட்டுவிட்டன. அவர்கள் இறந்துவிட்டதால் அதில் அவர்களுடைய பெயர்கள் இல்லாமல் போய்விட்டதா? அப்படிக் கிடையாது. அவர்கள் இன்னமும் யெகோவாவின் ஞாபகத்தில் “உயிருள்ளவர்களாகவே” இருக்கிறார்கள். யெகோவா, “இறந்தவர்களின் கடவுளாக அல்ல, உயிருள்ளவர்களின் கடவுளாக இருக்கிறார்.” “[அவரை] பொறுத்தவரை, இவர்கள் எல்லாரும் உயிருள்ளவர்களாகவே இருக்கிறார்கள்.” (லூக். 20:38) அப்படியென்றால், இந்த நீதிமான்கள் மறுபடியும் பூமியில் உயிரோடு வரும்போது அவர்களுடைய பெயர்கள் வாழ்வின் புத்தகத்தில் அப்படியேதான் இருக்கும். ஆனால், பென்சிலில் எழுதப்பட்ட மாதிரிதான் இருக்கும். (லூக். 14:14) இவர்களில் சிலர், ‘அதிபதிகளாக பூமியெங்கும் நியமிக்கப்படுவார்கள்’ என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.—சங். 45:16.
11. வாழ்வின் புத்தகத்தில் ‘அநீதிமான்களின்’ பெயர்கள் எழுதப்பட வேண்டுமென்றால் அவர்கள் எதைக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும்?
11 ஐந்தாவது தொகுதி, ‘அநீதிமான்கள்.’ ஒருவேளை, யெகோவாவின் சட்டங்களைப் பற்றித் தெரியாததால் அவருக்குப் பிடித்த மாதிரி அவர்கள் வாழாமல் போயிருக்கலாம். அதனால், வாழ்வின் புத்தகத்தில் அவர்களுடைய பெயர்கள் எழுதப்பட்டிருக்காது. ஆனால், அவர்களை மறுபடியும் உயிரோடு கொண்டு வருவதன் மூலமாக அந்தப் புத்தகத்தில் அவர்களுடைய பெயர்கள் எழுதப்படுவதற்கு கடவுள் அவர்களுக்கு ஒரு வாய்ப்பு தருவார். இந்த ‘அநீதிமான்களுக்கு’ நிறைய உதவி தேவைப்படும். பழைய வாழ்க்கையில் அவர்களில் சிலர் யோசித்துக்கூடப் பார்க்க முடியாத அளவுக்கு மோசமான விஷயங்களைச் செய்திருப்பார்கள். அதனால், யெகோவாவின் நீதியான நெறிமுறைகள் என்ன என்பதை அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். அதற்காக கடவுளுடைய அரசாங்கம், கற்பிக்கும் வேலையை மிகப் பெரிய அளவில் நடத்தப்போகிறது. அந்தளவு பிரமாண்டமான கற்பிக்கும் வேலை அதுவரை நடந்திருக்கவே நடந்திருக்காது.
12. (அ) அநீதிமான்களுக்கு யார் கற்றுக்கொடுப்பார்கள்? (ஆ) கற்றுக்கொள்கிறபடி நடக்காதவர்களுக்கெல்லாம் என்ன ஆகும்?
12 அநீதிமான்களுக்கு யார் கற்றுக்கொடுப்பார்கள்? திரள் கூட்டமான ஜனங்களும் உயிரோடு எழுப்பப்படுகிற நீதிமான்களும்தான். அநீதிமான்களின் பெயர்கள் வாழ்வின் புத்தகத்தில் வர வேண்டுமென்றால், யெகோவாவோடு அவர்கள் ஒரு நெருக்கமான நட்பை வளர்த்துக்கொள்ள வேண்டும், அவருக்குத் தங்களை அர்ப்பணிக்க வேண்டும். அவர்கள் எந்தளவுக்கு மாற்றங்கள் செய்கிறார்கள் என்பதை இயேசு கிறிஸ்துவும், அவரோடு சேர்ந்து நியாயந்தீர்க்கப் போகிறவர்களும் ரொம்ப கவனமாகப் பார்ப்பார்கள். (வெளி. 20:4) கற்றுக்கொள்கிறபடி யாராவது நடக்கவில்லை என்றால், அவர்களால் தொடர்ந்து உயிர் வாழ முடியாது. அவர்கள் பூஞ்சோலை பூமியில் 100 வயதுவரை வாழ்ந்தவர்களாக இருந்தாலும்சரி, அவர்கள் அழிக்கப்படுவார்கள். (ஏசா. 65:20) யெகோவாவாலும் இயேசுவாலும் ஒருவருடைய மனதில் என்ன இருக்கிறது என்பதைப் பார்க்க முடியும். அதனால், பூஞ்சோலை பூமியைக் கெடுக்கிற யாரையுமே அவர்கள் விட்டுவைக்க மாட்டார்கள்.—ஏசா. 11:9; 60:18; 65:25; யோவா. 2:25.
வாழ்வு பெறும்படியும் நியாயத்தீர்ப்பு பெறும்படியும் உயிர்த்தெழுப்பப்படுகிறவர்கள்
13-14. (அ) யோவான் 5:29-ஐ முன்பு நாம் எப்படிப் புரிந்துகொண்டோம்? (ஆ) அந்த வசனத்தில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன?
13 பூமியில் உயிரோடு எழுப்பப்படப்போகிறவர்களைப் பற்றியும் இயேசு சொன்னார். உதாரணத்துக்கு, “நேரம் வருகிறது; அப்போது, நினைவுக் கல்லறைகளில் இருக்கிற எல்லாரும் அவருடைய குரலைக் கேட்டு வெளியே வருவார்கள். நல்லது செய்தவர்கள் வாழ்வு பெறும்படி உயிர்த்தெழுப்பப்படுவார்கள், கெட்டதைச் செய்துவந்தவர்கள் நியாயத்தீர்ப்பு பெறும்படி உயிர்த்தெழுப்பப்படுவார்கள்” என்று சொன்னார். (யோவா. 5:28, 29) இயேசு சொன்னதன் அர்த்தம் என்ன?
14 இயேசு சொன்னதை முன்பு நாம் எப்படிப் புரிந்துகொண்டோம்? நினைவுக் கல்லறைகளில் இருக்கிறவர்கள் உயிர்த்தெழுந்த பின்பு என்ன செய்வார்கள் என்பதைப் பற்றி இயேசு இங்கே சொல்கிறார் என்று முன்பு நாம் நினைத்தோம். அதாவது, உயிரோடு வருகிற சிலர் நல்லது செய்வார்கள் என்றும் சிலர் கெட்டது செய்வார்கள் என்றும் நினைத்தோம். ஆனால், அவர்கள் நல்லது செய்வார்கள் என்றும், கெட்டது செய்வார்கள் என்றும் இயேசு சொல்லவில்லை என்பதைக் கவனியுங்கள். அதற்குப் பதிலாக, “நல்லது செய்தவர்கள்” என்றும், “கெட்டதைச் செய்துவந்தவர்கள்” என்றும்தான் சொன்னார். அப்படியென்றால், இறந்துபோவதற்கு முன்பு அவர்கள் செய்த செயல்களைப் பற்றித்தான் இயேசு சொன்னார். இது நமக்கு நியாயமாகவும் படுகிறது இல்லையா? ஏனென்றால், பூஞ்சோலை பூமியில் கெட்டது செய்பவர்கள் இருக்கவே மாட்டார்கள். அநீதிமான்கள் சாவதற்கு முன்புதான் கெட்ட விஷயங்களைச் செய்திருப்பார்கள். ஆனால், “வாழ்வு பெறும்படி உயிர்த்தெழுப்பப்படுவார்கள்” என்றும், “நியாயத்தீர்ப்பு பெறும்படி உயிர்த்தெழுப்பப்படுவார்கள்” என்றும் இயேசு சொன்னதன் அர்த்தம் என்ன?
15. யார் “வாழ்வு பெறும்படி உயிர்த்தெழுப்பப்படுவார்கள்,” ஏன்?
15 நீதிமான்கள், அதாவது சாவதற்கு முன்பு நல்லது செய்தவர்கள், “வாழ்வு பெறும்படி உயிர்த்தெழுப்பப்படுவார்கள்.” ஏனென்றால், அவர்களுடைய பெயர்கள் வாழ்வின் புத்தகத்தில் ஏற்கெனவே எழுதப்பட்டிருக்கும். அப்படியென்றால், “நல்லது செய்தவர்கள்” உயிர்த்தெழுப்பப்படுவார்கள் என்று யோவான் 5:29-ல் சொல்லப்பட்டிருப்பதும் ‘நீதிமான்கள்’ உயிர்த்தெழுப்பப்படுவார்கள் என்று அப்போஸ்தலர் 24:15-ல் சொல்லப்பட்டிருப்பதும் ஒன்றுதான். இந்த விளக்கம் ரோமர் 6:7-வுடன் ஒத்துப்போகிறது. “இறந்தவன் தன்னுடைய பாவத்திலிருந்து முழுமையாக விடுதலை செய்யப்பட்டிருக்கிறான்” என்று அங்கே சொல்லப்பட்டிருக்கிறது. இதிலிருந்து என்ன புரிந்துகொள்கிறோம்? நீதிமான்கள் செய்யும் பாவங்களை அவர்கள் சாகும்போது யெகோவா ரத்து செய்துவிடுகிறார். அதேசமயத்தில், அவர்கள் உண்மையோடு செய்த சேவையை அவர் எப்போதும் ஞாபகத்தில் வைத்திருக்கிறார். (எபி. 6:10) ஆனாலும், அந்த நீதிமான்களுடைய பெயர்கள், தொடர்ந்து வாழ்வின் புத்தகத்தில் இருக்க வேண்டுமென்றால் கடைசிவரை யெகோவாவுக்கு உண்மையாக இருக்க வேண்டியது அவர்களுடைய பொறுப்பு.
16. ‘நியாயத்தீர்ப்பு பெறும்படி உயிர்த்தெழுப்பப்படுவது’ என்றால் என்ன?
16 சாவதற்கு முன்பு மோசமான விஷயங்களை செய்தவர்களைப் பற்றி என்ன சொல்லலாம்? அவர்கள் இறந்தபோது அவர்களுடைய பாவங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தாலும், அவர்கள் உயிரோடு இருந்தபோது யெகோவாவுக்கு உண்மையோடு சேவை செய்யவில்லை. அதனால், அவர்களுடைய பெயர்கள் வாழ்வின் புத்தகத்தில் எழுதப்படவில்லை. ‘கெட்டது செய்துவந்தவர்கள்’ உயிர்த்தெழுப்பப்படுவார்கள் என்று யோவான் 5:29-ல் சொல்லப்பட்டிருப்பதும் ‘அநீதிமான்கள்’ உயிர்த்தெழுப்பப்படுவார்கள் என்று அப்போஸ்தலர் 24:15-ல் சொல்லப்பட்டிருப்பதும் ஒன்றுதான். இவர்கள் “நியாயத்தீர்ப்பு பெறும்படி உயர்த்தெழுப்பப்படுவார்கள்.”c அதாவது, இவர்கள் யெகோவாவுக்கு உண்மையாக இருக்கிறார்களா இல்லையா என்பதை இயேசு கிறிஸ்து பார்ப்பார். (லூக். 22:30) வாழ்வின் புத்தகத்தில் அவர்களுடைய பெயர்கள் எழுதப்படலாமா, வேண்டாமா என்று இயேசு முடிவு எடுக்க வேண்டுமென்றால் அதற்குக் கொஞ்சம் காலம் எடுக்கும். இந்த அநீதிமான்கள் தங்களுடைய பழைய வாழ்க்கையை விட்டுவிட்டு யெகோவாவுக்குத் தங்களையே அர்ப்பணிக்கும்போதுதான், அவர்களுடைய பெயர்கள் வாழ்வின் புத்தகத்தில் எழுதப்படும்.
17-18. பூமியில் உயிரோடு எழுப்பப்படுகிற எல்லாரும் என்ன செய்ய வேண்டியிருக்கும், வெளிப்படுத்துதல் 20:12, 13-ல் சொல்லப்பட்டிருக்கிற செயல்கள் எதைக் குறிக்கின்றன?
17 ஆயிர வருஷ ஆட்சியில் புதிய சுருள்கள் திறக்கப்படும். உயிர்த்தெழுந்து வருபவர்கள் நீதிமான்களாக இருந்தாலும் சரி, அநீதிமான்களாக இருந்தாலும் சரி, அந்தச் சுருள்களில் இருக்கிற சட்டங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும். அப்போஸ்தலன் யோவான் ஒரு தரிசனத்தில் பார்த்ததை இப்படி விளக்குகிறார்: “இறந்துபோன பெரியவர்களும் சிறியவர்களும் சிம்மாசனத்துக்கு முன்னால் நிற்பதைப் பார்த்தேன். அப்போது சுருள்கள் திறக்கப்பட்டன. வாழ்வின் சுருள் என்ற வேறொரு சுருளும் திறக்கப்பட்டது. அந்தச் சுருள்களில் எழுதப்பட்டிருக்கிறபடியே, இறந்தவர்கள் தங்களுடைய செயல்களுக்கு ஏற்ப தீர்ப்பு பெற்றார்கள்.”—வெளி. 20:12, 13.
18 உயிர்த்தெழுந்து வருபவர்கள் எந்தச் ‘செயல்களுக்காக’ நியாயந்தீர்க்கப்படுவார்கள்? அவர்கள் சாவதற்கு முன்பு செய்த செயல்களுக்காகவா? இல்லை. நாம் ஏற்கெனவே பார்த்தபடி, அவர்கள் இறந்தபோதே அந்தப் பாவங்களிலிருந்து அவர்களுக்கு விடுதலை கிடைத்துவிட்டது. அப்படியென்றால், இங்கே ‘செயல்கள்’ என்று சொல்லப்பட்டிருப்பது, பழைய வாழ்க்கையில் அவர்கள் செய்த செயல்களைக் குறிக்கவில்லை. அதற்குப் பதிலாக, புதிய உலகத்தில் அவர்களுக்குப் பயிற்சி கிடைத்த பின்பு அவர்கள் செய்யப்போகிற செயல்களைத்தான் குறிக்கின்றன. யெகோவாவுக்கு உண்மையாக வாழ்ந்த நோவா, சாமுவேல், தாவீது, தானியேல் போன்றவர்கள்கூட இயேசு கிறிஸ்துவைப் பற்றித் தெரிந்துகொண்டு, அவருடைய பலியில் விசுவாசம் வைக்க வேண்டியிருக்கும். அப்படியென்றால், அநீதிமான்கள் இன்னும் எவ்வளவு தெரிந்துகொள்ள வேண்டியிருக்கும்!
19. வாழ்வின் புத்தகத்தில் பெயர் எழுதப்படும் வாய்ப்பை நழுவ விடுகிறவர்களுக்கு என்ன ஆகும்?
19 வாழ்வின் புத்தகத்தில் பெயர் எழுதப்படும் அருமையான வாய்ப்பை நழுவ விடுகிறவர்களுக்கு என்ன ஆகும்? “வாழ்வின் புத்தகத்தில் பெயர் எழுதப்படாதவர்கள் எல்லாரும் நெருப்பு ஏரியில் தள்ளப்பட்டார்கள்” என்று வெளிப்படுத்துதல் 20:15 சொல்கிறது. அதாவது, அவர்கள் நிரந்தரமாக அழிக்கப்படுவார்கள். அப்படியென்றால், வாழ்வின் புத்தகத்தில் பெயர் எழுதப்படுகிற விதமாகவும் அந்தப் பெயர் அதில் தொடர்ந்து இருக்கிற விதமாகவும் நாம் நடந்துகொள்வது எவ்வளவு முக்கியம், இல்லையா?
20. ஆயிர வருஷ ஆட்சியில் என்ன பிரமாண்டமான வேலை நடக்கப்போகிறது? (அட்டைப் படம்)
20 ஆயிர வருஷ ஆட்சி எவ்வளவு விறுவிறுப்பாகப் போகும், இல்லையா? கற்பிக்கும் வேலை இதுவரைக்கும் நடக்காத அளவுக்குப் பிரமாண்டமாக அப்போது நடக்கப்போகிறது. அதேசமயத்தில் நீதிமான்களும் சரி, அநீதிமான்களும் சரி எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை இயேசுவும் யெகோவாவும் பார்ப்பார்கள். (ஏசா. 26:9; அப். 17:31) இந்தக் கற்பிக்கும் வேலை எப்படி நடக்கும்? அதைப் புரிந்துகொள்வதற்கு அடுத்த கட்டுரை நமக்கு உதவி செய்யும்.
பாட்டு 147 பூஞ்சோலை வாழ்வு நிச்சயம்!
a யோவான் 5:28, 29-ல் இயேசு, ‘வாழ்வு பெறும்படி உயிர்த்தெழுப்பப்படுகிறவர்களை’ பற்றியும் ‘நியாயத்தீர்ப்பு பெறும்படி உயிர்த்தெழுப்பப்படுகிறவர்களை’ பற்றியும் சொல்கிறார். இந்த விஷயத்தை நாம் புரிந்துகொண்டதில் ஒரு மாற்றம் வந்திருக்கிறது. அது என்ன என்பதை இந்தக் கட்டுரையில் பார்ப்போம். அதோடு, இந்த இரண்டு உயிர்த்தெழுதலுக்கும் என்ன அர்த்தம், அதில் யார் யார் வருவார்கள் என்றெல்லாம்கூட பார்ப்போம்.
b இந்தப் புத்தகம் “உலகம் உண்டானதுமுதல்” எழுதப்பட்டு வருகிறது. இங்கே “உலகம்” என்று சொல்லப்பட்டிருப்பது, மீட்பு பலியால் நன்மையடைகிற மக்களைக் குறிக்கிறது. (மத். 25:34; வெளி. 17:8) மீட்பு பலியின் நன்மை முதன்முதலில் ஆபேலுக்குத்தான் கிடைத்தது. அதனால், வாழ்வின் புத்தகத்தில் அவருடைய பெயர்தான் முதலில் எழுதப்பட்டிருக்கும்.
c இங்கே பயன்படுத்தப்பட்டிருக்கிற “நியாயத்தீர்ப்பு” என்ற வார்த்தை தண்டனைத் தீர்ப்பை அர்த்தப்படுத்துகிறது என்று முன்பு சொல்லியிருந்தோம். உண்மைதான், “நியாயத்தீர்ப்பு” என்ற வார்த்தைக்கு அந்த அர்த்தம் இருக்கலாம். ஆனால், இந்த வசனத்தின் சூழமைவைப் பார்க்கும்போது, இயேசு இங்கே “நியாயத்தீர்ப்பு” என்ற வார்த்தையைப் பொதுவான ஒரு அர்த்தத்தில்தான் பயன்படுத்தியிருக்கிறார் என்பது தெரிகிறது. இங்கு “நியாயத்தீர்ப்பு” என்பது மதிப்பிடுவதையும் கண்காணிப்பதையும் குறிக்கிறது. இல்லையென்றால், ஒரு கிரேக்க பைபிள் அகராதி சொல்கிறபடி, “ஒருவருடைய நடத்தையைப் பரிசோதிப்பதை” குறிக்கிறது.