சமாதானம் —ஆயிரம் ஆண்டுகளுக்கும்... அதற்கு அப்பாலும்...
“கடவுளே எல்லாருக்கும் எல்லாமுமாக இருப்பார்.”—1 கொ. 15:28.
1. என்ன இனிய எதிர்பார்ப்புகள் ‘திரள் கூட்டமான மக்களுக்கு’ காத்திருக்கின்றன?
நீ தியான, கனிவான ஒரு ராஜா ஆட்சி செய்யப்போகிறார்! தனது பலம்படைத்த அரசாங்கத்தின் மூலம் ஆயிரம் வருடங்களுக்கு நல்ல நல்ல காரியங்களைச் செய்யப்போகிறார்! அப்படிப்பட்ட இனிய எதிர்பார்ப்புகள் ‘திரள் கூட்டமான மக்களுக்கு’ காத்திருக்கின்றன. இந்தப் பொல்லாத உலகத்திற்கு முடிவுகட்டப்போகும் ‘மிகுந்த உபத்திரவத்திலிருந்து’ தப்பிப்பிழைப்பவர்களே அந்தத் திரள் கூட்டமாகிய மக்கள்.—வெளி. 7:9, 14.
2. கடந்த 6,000 வருடங்களாக மனிதகுலம் எதையெல்லாம் அனுபவித்திருக்கிறது?
2 மனிதன் தன்னால் எதையும் சாதிக்க முடியும்... தன்னையே ஆட்சி செய்துகொள்ள முடியும்... என்ற வெறியோடு கடந்த 6,000 வருடங்களாக அலைந்து வந்திருக்கிறான். விளைவு? சொல்ல முடியாதளவு வேதனை, வலி, துன்பதுயரம்! ‘ஒரு மனுஷன் தனக்கே கேடுண்டாக வேறொரு மனுஷனை ஆளுகிறான்’ என்று வெகு காலத்துக்கு முன்பே பைபிள் சொன்னது. (பிர. 8:9) இன்றைய நிலைமை என்ன? போர்களும் போராட்டங்களும் ஒருபுறமிருக்க, வறுமையும் வியாதியும் சுற்றுச்சூழல் சீர்கேடும் சீதோஷ்ணநிலையில் குளறுபடிகளும், இன்னும் பல பிரச்சினைகளும் கைகோர்த்து நிலைமையை மேலும் மோசமாக்கியிருக்கின்றன. மக்கள் பெரியளவில் மாற்றங்களைச் செய்யாவிட்டால், இந்தப் பூமியைப் பாழ்ப்படுத்துவதை நிறுத்தாவிட்டால் விளைவு விபரீதமாக இருக்குமென அரசு அதிகாரிகள் எச்சரித்திருக்கிறார்கள்.
3. ஆயிர வருட ஆட்சியில் என்ன நடக்கப்போகிறது?
3 கடவுளுடைய அரசாங்கத்தில், மேசியானிய ராஜாவான இயேசு கிறிஸ்துவும் அவருடைய சக ராஜாக்களான 1,44,000 பேரும் சேர்ந்து, மனிதர்களுக்கும் அவர்கள் குடியிருக்கிற பூமிக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புகளையெல்லாம் படிப்படியாகச் சரிசெய்ய நடவடிக்கைகள் எடுப்பார்கள். “நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறேன்; முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை” என்ற வாக்குறுதியை யெகோவா தேவன் கொடுத்திருக்கிறார். (ஏசா. 65:17) மனதிற்கு இதமளிக்கும் இந்த வாக்குறுதியை ஆயிர வருட ஆட்சி நிஜமாக்கும். என்னென்ன அருமையான சம்பவங்கள் நிகழவிருக்கின்றன? இதுவரை “காணப்படாத” அற்புத காரியங்களை பைபிள் தீர்க்கதரிசனங்களின் உதவியோடு இப்போது நம் மனக்கண்களில் ஓடவிட்டுப் பார்க்கலாம்.—2 கொ. 4:18.
‘வீடுகளைக் கட்டி, . . . திராட்சத்தோட்டங்களை நாட்டுவார்கள்’
4. வீடு சம்பந்தமாக அநேகர் என்னென்ன கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள்?
4 சொந்தமாக வீடு கட்டி அதில் குடியிருக்க யார்தான் ஆசைப்படுவதில்லை? அதில் முழு குடும்பமாய் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என்று யார்தான் கனவு காண்பதில்லை? ஆனால், இன்றைய உலகில் போதிய வசதிகளோடு ஒரு வீடு கிடைப்பது குதிரைக்கொம்பாக இருக்கிறது. ஜனநெரிசல்மிக்க நகரங்களில் மக்கள் புறாக் கூண்டு போன்ற வீடுகளில் குடியிருக்கிறார்கள். பலர் குடிசைகளிலும் குப்பங்களிலும் கஷ்டப்பட்டுக் காலம்தள்ளுகிறார்கள். சொந்த வீடு என்பது அவர்களுக்குச் சொப்பனமாகவே இருக்கிறது.
5, 6. (அ) ஏசாயா 65:21 மற்றும் மீகா 4:4 எப்படி நிறைவேறும்? (ஆ) அந்த ஆசீர்வாதத்தை நாம் எப்படிப் பெறலாம்?
5 சொந்த வீட்டில் குடியிருக்க ஆசைப்படும் ஒவ்வொருவருடைய கனவும் கடவுளுடைய அரசாங்கம் ஆட்சி செய்யும்போது நனவாகும். ஏனென்றால், “வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள், திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைப் புசிப்பார்கள்” என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்னார். (ஏசா. 65:21) இருந்தாலும், சொந்த வீடு மட்டுமல்ல, வேறு ஆசீர்வாதங்களையும் அவர்கள் எதிர்பார்க்கலாம். ஏனென்றால், இன்றுகூட சிலருக்குச் சொந்த வீடு இருக்கிறது. இன்னும் சிலருக்கு பங்களா இருக்கிறது அல்லது தோட்டந்துரவோடு வசதியான வீடு இருக்கிறது. ஆனால், எங்கே பணநெருக்கடி ஏற்பட்டு சொந்த வீடு கைவிட்டுப் போய்விடுமோ அல்லது திருடர்கள் வீட்டை உடைத்து எல்லாவற்றையும் சுருட்டிக்கொண்டு போய்விடுவார்களோ அல்லது வேறெதாவது அசம்பாவிதம் நடந்து வீட்டுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற கவலைகளும் கூடவே இருக்கின்றன. கடவுளுடைய அரசாங்கத்திலோ இந்தக் கவலைகளெல்லாம் இருக்கவே இருக்காது! “அவனவன் தன்தன் திராட்சச் செடியின் நிழலிலும், தன்தன் அத்திமரத்தின் நிழலிலும் பயப்படுத்துவார் இல்லாமல் உட்காருவான்” என்று மீகா தீர்க்கதரிசி எழுதினார்.—மீ. 4:4.
6 இந்த அருமையான ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்? உண்மைதான், நம் எல்லாருக்குமே போதிய வசதியோடு வீடு தேவை. ஆனால், நம் கனவு இல்லத்தை இப்போதே பாடுபட்டு, அதுவும் நிறையக் கடன் வாங்கி கஷ்டப்பட்டு கட்டுவதைவிட கடவுளுடைய வாக்குறுதியில் கண்களைப் பதிய வைப்பது புத்திசாலித்தனமாக இருக்கும், அல்லவா? இயேசு தம்மைப் பற்றி என்ன சொன்னார் என்பதைச் சற்று நினைத்துப் பாருங்கள். “குள்ளநரிகளுக்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குத் தங்குமிடங்களும் உள்ளன; மனிதகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை” என்றார். (லூக். 9:58) இயேசு நினைத்திருந்தால் அழகான, அம்சமான ஒரு வீட்டைக் கட்டியிருக்கலாம் அல்லது சகல சௌகரியங்களை உடைய ஒரு வீட்டை வாங்கியிருக்கலாம். அதற்கான திறமையும் சக்தியும் அவருக்கு இருந்தன. அப்படியிருந்தும் அவர் ஏன் அதற்கு முயற்சி செய்யவில்லை? கடவுளுடைய அரசாங்கத்திற்கு முதலிடம் கொடுப்பதற்குத் தடையாக இருக்கும் எந்தக் காரியங்களிலும் இயேசு ஈடுபடவில்லை. அவரைப் போலவே நாமும், பொருளாதாரக் காரியங்களால் திசைதிருப்பப்படுவதற்கு அல்லது அவற்றில் வலியப் போய்ச் சிக்கிக்கொள்வதற்குப் பதிலாக நம்முடைய கண்களைத் தெளிவாக வைத்துக்கொள்ள முடியுமா?—மத். 6:33, 34.
“ஓனாயும் ஆட்டுக்குட்டியும் ஒருமித்து மேயும்”
7. மிருகங்கள்மீது மனிதர்களுக்கு என்ன அதிகாரத்தை யெகோவா அளித்தார்?
7 பூமியில் யெகோவா எல்லாவற்றையும் படைத்தபோது அந்தப் படைப்புக்கெல்லாம் மணிமகுடமாய் விளங்கும் மனிதனைக் கடைசியில் படைத்தார். கைதேர்ந்த வேலையாளான தமது முதல் மகனிடம் யெகோவா இவ்வாறு சொன்னார்: “நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருக ஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள்.” (ஆதி. 1:26) இவ்வாறு, எல்லா மிருகங்களையும் ஆளுவதற்கான அதிகாரத்தை ஆதாம் ஏவாளுக்கு மட்டுமல்ல, அவர்களுடைய வருங்கால சந்ததியாருக்கும் யெகோவா அளித்தார்.
8. இன்று மிருகங்களிடம் என்ன இயல்பு சகஜமாகக் காணப்படுகிறது?
8 எல்லா மிருகங்களையும் ஆண்டுகொண்டு, அதேசமயத்தில் அவற்றுடன் சமாதானமாய் வாழ மனிதர்களால் முடியுமா? அநேகர் நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளிடம் கொஞ்சி விளையாடுகிறார்கள். ஆனால், வனவிலங்குகளிடம்? ஓர் அறிக்கை இவ்வாறு சொல்கிறது: ‘எல்லா மிருகங்களுமே உணர்ச்சிகளை வெளிக்காட்டுகின்றன என்பதை விலங்குகளுடன் நெருங்கிப் பழகி, அவற்றை ஆராய்ச்சி செய்கிற அறிவியலாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.’ உண்மைதான், உயிருக்கு ஆபத்து என்றால் விலங்குகள் பயந்து பதுங்கும் அல்லது சீறிப் பாயும். ஆனால், அப்படிப்பட்ட விலங்குகள் பாசத்தைக் காட்ட முடியுமா? ‘மிருகங்கள் தங்கள் குட்டிகளை வளர்க்கும்போது அவற்றின் மிகச் சிறந்த இயல்பு வெளிப்படுகிறது. ஆம், குட்டிகள்மீது அவை வைத்திருக்கிற அளவற்ற பாசம் வெளிப்படுகிறது’ என்றும் அந்த அறிக்கை சொல்கிறது.
9. மிருகங்களிடம் என்ன மாற்றங்களை நாம் எதிர்பார்க்கலாம்?
9 எனவே, மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் மத்தியில் சமாதானம் நிலவும் என்று பைபிள் சொல்வதை வாசிக்கும்போது நாம் ஆச்சரியப்படத் தேவையில்லை. (ஏசாயா 11:6-9; 65:25-ஐ வாசியுங்கள்.) ஏன்? பெருவெள்ளத்திற்குப் பிறகு நோவாவும் அவருடைய குடும்பத்தாரும் பேழையிலிருந்து வெளியே வந்தபோது, “உங்களைப் பற்றிய பயமும் அச்சமும் பூமியிலுள்ள சகல மிருகங்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும் உண்டாயிருக்கும்” என்று யெகோவா சொன்னதைச் சற்று நினைத்துப் பாருங்கள். அன்றுமுதல் மிருகங்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள மனிதர்களிடமிருந்து ஓடி ஒளிகின்றன. (ஆதி. 9:2, 3) ஆனால், மிருகங்களுக்கு இருக்கிற ஓரளவு பயத்தை யெகோவாவினால் நீக்கிவிட முடியும்; அப்போது, அவர் ஆரம்பத்தில் கட்டளையிட்ட விதமாகவே மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் இடையே ஒற்றுமை நிலவும். (ஓசி. 2:18) வரவிருக்கும் அழிவிலிருந்து தப்பிப்பிழைத்து புதிய பூமியில் வாழப்போகிறவர்களுக்கு எப்பேர்ப்பட்ட சந்தோஷமான காலம் காத்திருக்கிறது!
“அவர்களுடைய கண்ணீரையெல்லாம் கடவுள் துடைத்துவிடுவார்”
10. மனிதர்கள் ஏன் கண்ணீர் வடிக்கிறார்கள்?
10 ‘சூரியனுக்குக்கீழே செய்யப்படும் கொடுமைகளையெல்லாம் பார்த்த’ சாலொமோன், “இதோ, ஒடுக்கப்பட்டவர்களின் கண்ணீரைக் கண்டேன், அவர்களைத் தேற்றுவாரில்லை” என்று புலம்பினார். (பிர. 4:1) இன்றும் அதே நிலைமைதான் இருக்கிறது, சொல்லப்போனால் இன்னும் மோசமாகியிருக்கிறது. ஏதாவதொரு காரணத்திற்காக நாம் அனைவருமே கண்ணீர் சிந்தியிருக்கிறோம். சில சமயங்களில் ஆனந்தக் கண்ணீர் வடித்திருக்கிறோம். ஆனால், பெரும்பாலான சமயங்களில் மன வேதனையால் இரத்தக் கண்ணீர்தான் வடிக்கிறோம்.
11. பைபிளிலுள்ள எந்தச் சம்பவம் குறிப்பாய் உங்கள் நெஞ்சை நெகிழ வைத்திருக்கிறது?
11 நெஞ்சை நெகிழ வைத்த... மனதை உருக வைத்த... பைபிள் சம்பவங்களைச் சற்று யோசித்துப் பாருங்கள். 127 வயதில் சாராள் இறந்தபோது ‘ஆபிரகாம் சாராளுக்காகப் புலம்பி அழுதார்.’ (ஆதி. 23:1, 2) விதவைகளான தன் இரண்டு மருமகள்களுக்கு நகோமி பிரியாவிடை கொடுத்தபோது, ‘அவர்கள் சத்தமிட்டு அழுதார்கள்’; பின்பு, நகோமி ஆறுதலாகப் பேசியபோது மீண்டும் “சத்தமிட்டு அதிகமாய் அழுதார்கள்.” (ரூத் 1:9, 14) தன்னை வாட்டி வதைக்கும் வியாதி தன்னை மரண வாசலுக்கு அழைத்துச் செல்வதை அறிந்த எசேக்கியா ராஜா கடவுளிடம் ஜெபம் செய்துவிட்டு, “கதறி அழுதார்.” அதைப் பார்த்து யெகோவா உள்ளம் உருகினார். (2 இரா. 20:1-5, பொது மொழிபெயர்ப்பு) இயேசுவை அப்போஸ்தலன் பேதுரு மறுதலித்தபோது நடந்த சம்பவத்தைப் பற்றி வாசிக்கும்போது நம்மில் யார்தான் மனங்கலங்குவதில்லை? சேவல் கூவியதைக் கேட்ட பேதுரு, “வெளியே போய் மனங்கசந்து அழுதார்.”—மத். 26:75.
12. கடவுளுடைய அரசாங்கம் எப்படி மக்களுக்கு உண்மையான விடுதலையை அளிக்கும்?
12 சிறிய அளவிலோ பெரிய அளவிலோ மக்கள் துயர சம்பவங்களைச் சந்திக்கும்போது ஆறுதலுக்காகவும் வேதனையிலிருந்து விடுபடுவதற்காகவும் ஏங்கித் தவிக்கிறார்கள். இப்படித் தவிப்பவர்களுக்கெல்லாம் ஆயிர வருட ஆட்சி அருமருந்தாய் அமையப்போகிறது. ஆம், “அவர்களுடைய கண்ணீரையெல்லாம் கடவுள் துடைத்துவிடுவார்; இனி மரணம் இருக்காது, துக்கம் இருக்காது, அழுகை இருக்காது, வேதனை இருக்காது.” (வெளி. 21:4) துக்கம், அழுகை, வேதனை ஆகியவற்றை நீக்குவதோடுகூட மனிதகுலத்தின் கடைசி ‘எதிரியான’ மரணத்தையும் நீக்கப்போவதாகக் கடவுள் அளித்திருக்கும் வாக்குறுதிதான் அருமையிலும் அருமை! இவையெல்லாம் எப்படி நிஜமாகும்?
“கல்லறைகளில் உள்ள அனைவரும் . . . வெளியே வருவார்கள்”
13. ஆதாம் பாவத்தில் விழுந்ததிலிருந்து மரணம் எப்படி மனிதகுலத்தை ஆட்டிப்படைக்கிறது?
13 ஆதாம் பாவத்தில் விழுந்ததிலிருந்து மரணம் மனிதகுலத்தின் மீது ராஜாவாக ஆட்சி செய்து வருகிறது. அது வெல்ல முடியாத எதிரியாக இருக்கிறது. அதன் பிடியிலிருந்து யாரையும் தப்பவிடாமல், சொல்ல முடியாத துயரத்தையும் வேதனையையும் வலியையும் தந்திருக்கிறது. (ரோ. 5:12, 14) அதனால்தான், லட்சக்கணக்கானோர் ‘வாழ்நாள் முழுவதும் மரண பயத்திற்கு அடிமைப்பட்டிருக்கிறார்கள்.’—எபி. 2:15.
14. மரணம் ஒழிக்கப்படும் காலப்பகுதியில் என்ன நடக்கும்?
14 ‘கடைசி எதிரியான மரணம்’ ‘ஒழிக்கப்படப்போகும்’ காலத்தைப் பற்றி பைபிள் சொல்கிறது. (1 கொ. 15:26) அந்தக் காலப்பகுதியில், இரண்டு தொகுதியினர் நன்மை அடைவார்கள்: இன்றுள்ள “திரள் கூட்டமான மக்கள்” வரவிருக்கும் அழிவிலிருந்து தப்பிப்பிழைத்து புதிய உலகில் என்றென்றும் வாழ்வார்கள்; ஏற்கெனவே மரணமடைந்த கோடிக்கணக்கானோர் உயிர்த்தெழுந்து வருவார்கள். அவர்களைத் திரள் கூட்டமான மக்கள் அன்போடு வரவேற்கும்போது ஏற்படும் சந்தோஷத்தையும் குதூகலத்தையும் உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? பைபிளிலுள்ள உயிர்த்தெழுதல் பதிவுகளைக் கருத்தூன்றி வாசிக்கும்போது எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் உயிர்த்தெழுதல் எப்படியிருக்கும் என்பதை நம்மால் நன்கு புரிந்துகொள்ள முடியும்.—மாற்கு 5:38-42-ஐயும் லூக்கா 7:11-17-ஐயும் வாசியுங்கள்.
15. உங்களுக்குப் பிரியமான ஒருவர் உயிர்த்தெழுந்து வரும்போது உங்களுக்கு எப்படி இருக்கும்?
15 “அவர்கள் ஆனந்தப் பரவசம் அடைந்தார்கள்”... “கடவுளை மகிமைப்படுத்த ஆரம்பித்தார்கள்”... என்ற சொற்றொடர்களைக் கவனியுங்கள். இந்தச் சம்பவங்கள் நடந்த இடத்தில் நீங்கள் இருந்திருந்தால் நீங்களும்கூட அப்படித்தான் உணர்ந்திருப்பீர்கள். இறந்துபோன நம் அன்பானவர்கள் உயிர்த்தெழுந்து வருவதைப் பார்க்கும்போது சந்தோஷத்தின் எல்லைக்கே போய்விடுவோம் என்பதில் சந்தேகமில்லை. இயேசு இவ்வாறு சொன்னார்: “வேளை வரப்போகிறது; அப்போது, கல்லறைகளில் உள்ள அனைவரும் அவரது குரலைக் கேட்டு வெளியே வருவார்கள்.” (யோவா. 5:28, 29) இறந்தவர்கள் உயிர்த்தெழுந்து வருவதை நம்மில் யாருமே இதுவரை பார்த்ததில்லை; என்றாலும், “காணப்படாத” சம்பவங்களில் உண்மையிலேயே இது ஓர் அற்புதமான சம்பவமாக இருக்கப்போகிறது.
“கடவுளே எல்லாருக்கும் எல்லாமுமாக இருப்பார்”
16. (அ) ‘காணப்படாதவையாய்’ இருக்கும் ஆசீர்வாதங்களைப் பற்றி நாம் ஏன் உற்சாகம் பொங்கப் பேச வேண்டும்? (ஆ) கொரிந்துவிலிருந்த கிறிஸ்தவர்களை உற்சாகப்படுத்த பவுல் என்ன செய்தார்?
16 இந்தக் கொடிய காலங்களில் யெகோவாவுக்கு உண்மையாய் இருப்பவர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது. புதிய உலகில் கிடைக்கப்போகிற ஆசீர்வாதங்கள் ‘காணப்படாதவையாய்’ இருந்தாலும் அவற்றை எப்போதும் மனதில் வைப்பது முக்கியமானவற்றுக்குக் கவனம் செலுத்த உதவும். அதோடு, இந்த உலகம் தரும் அற்ப சந்தோஷங்களால் திசைதிருப்பப்படாதிருக்கவும் உதவும். (லூக். 21:34; 1 தீ. 6:17-19) நாம் பெறவிருக்கிற அருமையான ஆசீர்வாதங்களையும் நமக்கு இருக்கும் நம்பிக்கைகளையும் பற்றி உற்சாகம் பொங்கப் பேச வேண்டும்; குடும்ப வழிபாட்டின்போது, சகோதர சகோதரிகளுடன் உரையாடும்போது, பைபிள் மாணாக்கர்களிடமும் ஆர்வம் காட்டுகிறவர்களிடமும் சத்தியத்தை விளக்கும்போது அப்படிப் பேச வேண்டும். அப்போதுதான், அந்த ஆசீர்வாதங்களும் நம்பிக்கைகளும் நம்முடைய மனதில் என்றும் பசுமையாய் இருக்கும். சக கிறிஸ்தவர்களை உற்சாகப்படுத்த அப்போஸ்தலன் பவுல் அதைத்தான் செய்தார். ஆயிர வருட அரசாட்சியின் முடிவில் நடக்கப்போகும் விஷயங்களை அவர்களுடைய கண்முன் தத்ரூபமாகக் கொண்டுவந்து நிறுத்தினார். 1 கொரிந்தியர் 15:24, 25, 28-ல் (வாசியுங்கள்.) பவுல் சொன்ன வார்த்தைகளை முழுமையாய்ப் புரிந்துகொண்டு, அதை அப்படியே உங்கள் மனத்திரையில் ஓடவிடுங்கள்.
17, 18. (அ) மனித சரித்திரத்தின் ஆரம்பத்தில் யெகோவா எப்படி ‘எல்லாருக்கும் எல்லாமுமாக இருந்தார்’? (ஆ) சமாதானத்தையும் ஐக்கியத்தையும் மீட்டெடுக்க இயேசு என்ன செய்வார்?
17 “கடவுளே எல்லாருக்கும் எல்லாமுமாக இருப்பார்” என்ற வார்த்தைகள் ஆயிர வருட ஆட்சியின் மகத்தான உச்சக்கட்டத்தை மிகமிக அருமையாக வர்ணிக்கின்றன. இவ்வார்த்தைகள் எதை அர்த்தப்படுத்துகின்றன? இதைச் சற்று எண்ணிப் பாருங்கள்: ஏதேன் தோட்டத்தில் பரிபூரணமாக இருந்த ஆதாம் ஏவாள், யெகோவாவுடைய சர்வலோக குடும்பத்தின் அங்கத்தினர்களாக இருந்தார்கள். அந்தக் குடும்பத்தில் சமாதானமும் ஐக்கியமும் நிலவியது. தேவதூதர்கள், மனிதர்கள் என எல்லாப் படைப்புகள்மீதும் சர்வலோகப் பேரரசரான யெகோவா நேரடியாக ஆட்சி செய்து வந்தார். அவர்கள் அவரிடம் நேரடியாகப் பேசினார்கள், அவரை வணங்கினார்கள், அவருடைய ஆசீர்வாதத்தைப் பெற்றார்கள். இவ்வாறு, அவரே ‘எல்லாருக்கும் எல்லாமுமாக இருந்தார்.’
18 முதல் தம்பதியர் சாத்தானின் பேச்சைக் கேட்டு யெகோவாவின் பேரரசாட்சிக்கு எதிராகக் கலகம் செய்தபோது அந்த ஐக்கியம் முறிந்தது. என்றாலும், இழந்த சமாதானத்தையும் ஐக்கியத்தையும் மீட்டெடுக்க மேசியானிய அரசாங்கம் 1914 முதற்கொண்டு படிப்படியாக நடவடிக்கைகளை எடுத்து வந்திருக்கிறது. (எபே. 1:9, 10) இப்போது ‘காணப்படாதவையாக’ இருக்கிற காரியங்கள் ஆயிர வருட ஆட்சியின்போது நிஜமானவையாகிவிடும். பிறகு ‘முடிவு’ வரும். அதாவது, கிறிஸ்துவின் ஆயிர வருட ஆட்சி முடிவுக்கு வரும். அதன்பின் என்ன நடக்கும்? இயேசுவுக்கு ‘பரலோகத்திலும் பூமியிலும் . . . எல்லா அதிகாரமும் கொடுக்கப்பட்டிருந்தாலும்,’ யெகோவாவின் சிம்மாசனத்தை அபகரிக்க வேண்டுமென்ற எண்ணம் அவருக்குத் துளிகூட இல்லை. அவர் தாழ்மையுடன் “கடவுளும் தகப்பனுமானவரிடமே ஆட்சியை ஒப்படைத்துவிடுவார்.” ஆம், தமக்கு அளிக்கப்பட்ட விசேஷப் பொறுப்பையும் அதிகாரத்தையும் “கடவுளுடைய மகிமைக்கே” அவர் எப்போதும் பயன்படுத்துவார்.—மத். 28:18; பிலி. 2:9-11.
19, 20. (அ) யெகோவாவுடைய அரசாங்கத்தின் குடிமக்கள் அவருடைய பேரரசாட்சியை ஏற்றுக்கொள்கிறார்களா இல்லையா என்பதை எப்படிக் காட்டுவார்கள்? (ஆ) என்ன அளவற்ற ஆசீர்வாதங்களை நாம் சுவைக்க இருக்கிறோம்?
19 அந்தச் சமயத்தில், கடவுளுடைய அரசாங்கத்தின் குடிமக்கள் பரிபூரணமாக இருப்பார்கள். இயேசுவைப் போலவே யெகோவாவின் பேரரசாட்சியைத் தாழ்மையுடன் மனதார ஏற்றுக்கொள்வார்கள். இப்படி ஏற்றுக்கொண்டிருப்பதை நிரூபித்துக் காட்ட இறுதிப் பரீட்சையில் வாய்ப்பளிக்கப்படுவார்கள். (வெளி. 20:7-10) அதன் பிறகு, கலகக்கார மனிதர்களும் தூதர்களும் சுவடுதெரியாமல் நீக்கப்படுவார்கள். அது சந்தோஷமான நாளாக, கொண்டாட வேண்டிய நாளாக இருக்கும்! விண்ணிலும் மண்ணிலும் உள்ள அனைவரும் ‘எல்லாருக்கும் எல்லாமுமாக இருக்கிற’ யெகோவாவை ஆனந்தமாய்ப் போற்றிப் புகழுவார்கள்.—சங்கீதம் 99:1-3-ஐ வாசியுங்கள்.
20 மகத்தான புதிய உலக ஆசீர்வாதங்கள் சீக்கிரம் கிடைக்கப்போவதால், கடவுளுடைய சித்தத்தின்படி நடக்க முழு கவனம் செலுத்துவதற்கும், முழு முயற்சி எடுப்பதற்கும் தூண்டப்படுவீர்களா? சாத்தானின் உலகம் தரும் பொய்யான நம்பிக்கையையும் போலியான ஆறுதலையும் நம்பி மோசம்போகாமல் இருப்பீர்களா? யெகோவாவின் பேரரசாட்சியை ஆதரிக்க வேண்டுமென்ற உங்கள் தீர்மானத்தில் உறுதியாய் இருப்பீர்களா? என்றென்றும் இதுவே உங்கள் ஆசை என்பதைச் செயலில் காட்டுங்கள். அப்போது, ஆயிரம் ஆண்டுகளுக்கும்... அதற்கு அப்பாலும்... சந்தோஷத்தை, சமாதானத்தை, செழிப்பை சுவைத்துக்கொண்டே இருப்பீர்கள்!