அதிகாரம் 43
மகிமையாய்ப் பிரகாசிக்கும் நகரம்
தரிசனம் 16—வெளிப்படுத்துதல் 21:9–22:5
பொருள்: புதிய எருசலேமைப்பற்றிய ஒரு விவரிப்பு
நிறைவேற்றத்தின் காலம்: மிகுந்த உபத்திரவத்திற்கும் சாத்தான் அபிஸ்ஸுக்கு உட்படுத்தப்பட்டதற்கும் பின்னர்
1, 2. (அ) புதிய எருசலேமைக் காணும்படி ஒரு தூதன் யோவானை எங்கே கொண்டுசெல்கிறார், என்ன வேறுபாட்டை நாம் இங்கே கவனிக்கிறோம்? (ஆ) இது ஏன் வெளிப்படுத்துதலின் மகத்தான உச்சக்கட்டம்?
ஒரு தூதன் யோவானுக்கு மகா பாபிலோனைக் காண்பிக்கும்படி அவரை வனாந்தரத்துக்குள் கொண்டுசென்றிருந்தார். இப்பொழுது அதே தூதர் தொகுதியிலுள்ள ஒருவர் யோவானை ஓர் உயர்ந்த மலைக்கு வழிநடத்துகிறார். எத்தகைய வேறுபட்ட ஒன்றை அவர் காண்கிறார்! அந்தப் பாபிலோனிய வேசியைப்போன்ற அசுத்தமான, ஒழுக்கங்கெட்ட நகரம் இங்கே இல்லை, மாறாக புதிய எருசலேம்—தூய்மையானது, ஆவிக்குரியது, பரிசுத்தமானது—மேலும் இது பரலோகத்திலிருந்தே இறங்கிவருகிறது.—வெளிப்படுத்துதல் 17:1, 5.
2 பூமிக்குரிய எருசலேமுங்கூட இதைப்போன்ற மகிமையை ஒருபோதும் உடையதாக இருந்ததில்லை. யோவான் நமக்குச் சொல்வதாவது: “பின்பு, கடைசியான ஏழு வாதைகளால் நிறைந்த ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதரில் ஒருவன் என்னிடத்தில் வந்து: நீ இங்கே வா, ஆட்டுக்குட்டியானவருடைய மனைவியாகிய மணவாட்டியை உனக்குக் காண்பிக்கிறேன் என்று சொல்லி, பெரிதும் உயரமுமான ஒரு பர்வதத்தின்மேல் என்னை ஆவியில் கொண்டுபோய், தேவனுடைய மகிமையை அடைந்த எருசலேமாகிய பரிசுத்த நகரம் பரலோகத்தைவிட்டுத் தேவனிடத்திலிருந்து இறங்கிவருகிறதை எனக்குக் காண்பித்தான்.” (வெளிப்படுத்துதல் 21:9, 10) அந்த உயர்ந்தோங்கிய மலையின் சாதகமான இடநிலையிலிருந்து, யோவான், அந்த மிக அழகிய நகரத்தை அதன் கவர்ச்சிவாய்ந்த எல்லா நுட்பவிவரத்துடனும் கவனித்துப்பார்க்கிறார். மனிதவர்க்கம் பாவத்துக்குள்ளும் மரணத்துக்குள்ளும் விழுந்தது முதற்கொண்டே இதன் வருகைக்காக விசுவாசமுள்ள மனிதர் மிக ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். கடைசியாக இதோ அது இங்கே இருக்கிறது! (ரோமர் 8:19; 1 கொரிந்தியர் 15:22, 23; எபிரெயர் 11:39, 40) இது உயர்சிறப்புவாய்ந்த ஆவிக்குரிய நகரம், உண்மைத்தவறாமல் உத்தமத்தைக் காத்துக்கொள்ளும் 1,44,000 ஆட்களாலாகியது, இதன் பரிசுத்தத்தில் ஒளிவீசி பிரகாசித்து யெகோவாவின் மகிமையைத்தானே பிரதிபலிக்கிறது. இதோ, வெளிப்படுத்துதலின் மகத்தான உச்சக்கட்டம்!
3. புதிய எருசலேமின் அழகை யோவான் எவ்வாறு விவரிக்கிறார்?
3 புதிய எருசலேம் அதன் அழகில் திகைக்க வைக்கிறது: “அதின் பளப்பளப்பு மேலான இரத்தினம்போன்றது. பளிங்குபோல் ஒளிவீசும் வச்சிரக்கல்லுக்கொப்பானது, அதற்குப் பெரிதும் உயரமுமான மதிலும் பன்னிரண்டு வாசல்களுமிருந்தன; வாசல்களில் பன்னிரண்டு தூதர் நின்றார்கள். நாமங்களும் எழுதியிருந்தன. அவை இஸ்ரவேல் புத்திரராகிய பன்னிரண்டு கோத்திரத்தாருடைய நாமங்கள். கிழக்கே மூன்று வாசல், வடக்கே மூன்று வாசல், தெற்கே மூன்று வாசல், மேற்கே மூன்று வாசல். நகரத்தின் மதிலுக்குப் பன்னிரண்டு அஸ்திபாரக்கற்களிருந்தன; அவற்றில் ஆட்டுக்குட்டியானவரின் பன்னிரண்டு அப்போஸ்தலருடைய பன்னிரண்டு நாமங்களுமிருந்தன.” (வெளிப்படுத்துதல் 21:11-14, தி.மொ.) யோவான் பதிவுசெய்யும் முதல் கருத்துப்பதிவு அழகொளிவீசும் பிரகாசமானதாயிருப்பது எவ்வளவு பொருத்தமாயுள்ளது! புதிய மணவாட்டியாக, அதன் பளப்பளப்பான ஒளியுடன், புதிய எருசலேம் கிறிஸ்துவுக்குப் பொருத்தமான மனைவியாகிறது. “ஜோதிகளின் பிதா”வினுடைய சிருஷ்டிப்புக்குத் தகுதியாக, அது மட்டற்றமுறையில் அழகொளிவீசுகிறது.—யாக்கோபு 1:17, தி.மொ.
4. புதிய எருசலேம் மாம்சப்பிரகாரமான இஸ்ரவேல் ஜனமல்லவென எது குறிப்பிட்டுக் காட்டுகிறது?
4 அதன் பன்னிரண்டு வாசல்களில், இஸ்ரவேலின் 12 கோத்திரத்தாரின் பெயர்கள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. ஆகையால், இந்த அடையாளக்குறிப்பான நகரம், “இஸ்ரவேல் புத்திரருடைய சகல கோத்திரங்களிலு”மிருந்து முத்திரைபோடப்பட்ட 1,44,000 ஆட்களாலாகியது. (வெளிப்படுத்துதல் 7:4-8) இதற்கிசைவாக, அந்த அஸ்திபாரக் கற்கள், ஆட்டுக்குட்டியானவருடைய 12 அப்போஸ்தலரின் பெயர்களைத் தங்கள்மீது கொண்டுள்ளன. ஆம், புதிய எருசலேம் யாக்கோபின் 12 புத்திரரின்மீது ஸ்தாபிக்கப்பட்ட மாம்சப்பிரகாரமான இஸ்ரவேல் ஜனமல்ல. இது, “அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகள்” ஆனவர்களின்மீது அஸ்திபாரம் போடப்பட்ட, ஆவிக்குரிய இஸ்ரவேல்.—எபேசியர் 2:20.
5. புதிய எருசலேமின் ‘பெரிதும் உயரமுமான மதிலாலும்,’ அதன் ஒவ்வொரு வாசலிலும் தூதர்கள் காவலாக நிறுத்தப்பட்டிருப்பதாலும் குறிப்பிட்டுக் காட்டப்படுவது என்ன?
5 இந்த அடையாளக் குறிப்பான நகரம் ஒரு பெரிய மதிலை உடையதாயுள்ளது. பூர்வ காலங்களில், நகர மதில்கள் சத்துருக்களை உட்புகாதபடி தடுத்து வைப்பதற்குப் பாதுகாப்பாகக் கட்டப்பட்டன. புதிய எருசலேமின் ‘பெரிதும் உயரமுமான மதில்,’ அது ஆவிக்குரியபிரகாரம் பாதுகாப்பாயுள்ளதெனக் காட்டுகிறது. நீதியின் சத்துருவான எவராயினும், அசுத்தமான அல்லது நேர்மையற்ற எவராயினும் உட்பிரவேசிக்க ஒருபோதும் அனுமதிபெற முடியாது. (வெளிப்படுத்துதல் 21:27) ஆனால் உள்ளே அனுமதிக்கப்படுவோருக்கு, இந்த அழகிய நகரத்துக்குள் பிரவேசிப்பது பரதீஸுக்குள் பிரவேசிப்பதுபோலுள்ளது. (வெளிப்படுத்துதல் 2:7) ஆதாம் வெளித்தள்ளப்பட்டபின்பு, அசுத்தமான மனிதர்களை உட்புகாதபடி தடுத்து வைப்பதற்கு அந்த முதல் பரதீஸுக்கு முன்னால் கேருபீன்கள் காவலாக நிறுத்தப்பட்டனர். (ஆதியாகமம் 3:24) அவ்வாறே, இந்த நகரத்தின் ஆவிக்குரிய பாதுகாப்பை நிச்சயப்படுத்திக்கொள்ளும்படி, இந்தப் பரிசுத்த நகரமாகிய எருசலேமின் ஒவ்வொரு வாசலிலும் தூதர்கள் காவலாக நிறுத்தப்பட்டிருக்கின்றனர். புதிய எருசலேமாகிற, அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் சபையை பாபிலோனிய தூய்மைக்கேடு தொற்றாதபடி, தூதர்கள் இந்தக் கடைசிநாட்கள் முழுவதினூடேயும் நிச்சயமாகவே பாதுகாவல்செய்து வந்திருக்கின்றனர்.—மத்தேயு 13:41.
அந்த நகரத்தை அளவிடுதல்
6. (அ) அந்த நகரத்தை அளப்பதை யோவான் எவ்வாறு விவரிக்கிறார், இந்த அளவிடுதல் எதைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது? (ஆ) பயன்படுத்தப்பட்ட அளவுகோல் ‘மனுஷனுடைய அளவின்படி, அதே சமயத்தில் தூதனுடையதன்படி’ இருந்தது எதை விளக்குவதாக இருக்கலாம்? (அடிக்குறிப்பைப் பாருங்கள்.)
6 யோவான் தன்னுடைய விவரத்தைத் தொடர்ந்து கூறுகிறார்: “என்னுடனே பேசினவன், நகரத்தையும் அதின் வாசல்களையும் அதின் மதிலையும் அளக்கிறதற்கு ஒரு பொற்கோலைப் பிடித்திருந்தான். அந்த நகரம் சதுரமாயிருந்தது, அதின் அகலமும் நீளமும் சமமாயிருந்தது. அவன் அந்தக் கோலினால் நகரத்தை அளந்தான்; அது பன்னீராயிரம் ஸ்தாதி [பர்லாங்கு, NW] அளவாயிருந்தது; அதின் நீளமும் அகலமும் உயரமும் சமமாயிருந்தது. அவன் அதின் மதிலை அளந்தபோது, அது தூதனுடைய அளவாகிய மனுஷ அளவின்படியே [மனுஷனுடைய அளவின்படி, அதே சமயத்தில் தூதனுடையதன்படி, NW] நூற்றுநாற்பத்துநான்கு முழமாயிருந்தது.” (வெளிப்படுத்துதல் 21:15-17) ஆலயத்தின் பரிசுத்த ஸ்தலம் அளக்கப்பட்டபோது, அதைக் குறித்த யெகோவாவின் நோக்கங்கள் நிறைவேற்றப்படுமென்ற பொறுப்புறுதியை இது அளித்தது. (வெளிப்படுத்துதல் 11:1) இப்பொழுது, அந்தத் தூதன் புதிய எருசலேமை அளவிடுவது, இந்த மகிமையான நகரத்தைக் குறித்த யெகோவாவின் நோக்கங்கள் எவ்வளவாய் மாற்றக்கூடாதவையாக இருக்கின்றனவெனக் காட்டுகிறது.a
7. அந்த நகரத்தின் அளவுகளைப் பற்றியதில் தனிச் சிறப்புக்குரியதாயிருப்பது என்ன?
7 எத்தகைய தனிச் சிறப்புக்குரிய நகரம் இது! சுற்றளவில் 12,000 பர்லாங்குகளைக் (ஏறக்குறைய 2,220 கிலோமீட்டரைக்) கொண்ட பரிபூரண கனசதுரம், 144 முழங்கள் அல்லது 64 மீட்டர் உயரமான ஒரு மதிலால் சூழப்பட்டுள்ளது. எந்தச் சொல்லர்த்தமான ஒரு நகரமும் இத்தகைய அளவுகளை உடையதாக ஒருபோதும் இருக்க முடியாது. அது தற்கால இஸ்ரவேல் தேசத்தைப்போல் ஏறக்குறைய 14 மடங்குகள் பெரியதான ஒரு பிராந்தியத்தை தன்னுள் அடக்கும், மேலும் வானவெளியில் பெரும்பாலும் 560 கிலோமீட்டர் உயர்ந்தோங்கி நிற்கும்! வெளிப்படுத்துதல் அடையாளங்களில் கொடுக்கப்பட்டன. ஆகையால், பரலோக புதிய எருசலேமைப்பற்றி இந்த அளவுகள் நமக்கு என்ன சொல்கின்றன?
8. இவற்றால் குறிப்பிட்டுக் காட்டப்படுவதென்ன: (அ) அந்த நகரத்தின் 144-முழம் உயரமான மதில்கள்? (ஆ) அந்த நகரத்தின் 12,000 பர்லாங்கு அளவு? (இ) உருவமைப்பில் அந்த நகரம் பரிபூரண கனசதுரமாக இருப்பது?
8 இந்த நகரம் ஆவிக்குரியபிரகாரம் ஏற்கப்பட்ட கடவுளுடைய குமாரரான 1,44,000 ஆட்களாலாகியதென்பதை, இந்த 144 முழம் உயரமான மதில்கள் நமக்கு நினைப்பூட்டுகின்றன. நீளமும், அகலமும், உயரமும் சமமாயுள்ள அந்த நகரத்தின் 12,000 பர்லாங்கு அளவில் தோன்றுகிற இந்த எண் 12, பைபிள் தீர்க்கதரிசனத்தில் அமைப்புக்குரிய பொருத்தங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே, புதிய எருசலேம், கடவுளுடைய நித்திய நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக ஈடற்று உயர்ந்த முறையில் திட்டமிடப்பட்ட அமைப்புக்குரிய ஓர் ஏற்பாடாகும். புதிய எருசலேம், அரசராகிய இயேசு கிறிஸ்துவோடுகூட, யெகோவாவின் ராஜ்ய அமைப்பாக இருக்கிறது. பின்னும் அந்த நகரத்தின் வடிவம்: ஒரு பரிபூரண கனசதுரம். சாலொமோனின் ஆலயத்தில், யெகோவாவின் சமுகத்தின் அடையாள பிரதிநிதித்துவம் அடங்கிய மகா பரிசுத்த ஸ்தலம் ஒரு பரிபூரண கனசதுரமாக இருந்தது. (1 இராஜாக்கள் 6:19, 20) அவ்வாறெனில், யெகோவாவின் மகிமையால்தானே பிரகாசிப்பிக்கப்பட்ட, இந்தப் புதிய எருசலேம், மிகப்பேரளவிலாகிய பரிபூரண கனசதுரமாகக் காணப்படுவது எவ்வளவு பொருத்தமாயுள்ளது! அதன் அளவுகள் எல்லாம் பரிபூரணமாய்ச் சமநிலைப்படுத்தப்பட்டிருக்கின்றன. அது மாறுபாடுகளோ ஊறுபாடுகளோ இல்லாத ஒரு நகரம்.—வெளிப்படுத்துதல் 21:23.
மதிப்புமிகுந்த கட்டிடப் பொருட்கள்
9. அந்நகரத்தின் கட்டிடப் பொருட்களைப்பற்றி யோவான் எவ்வாறு விவரிக்கிறார்?
9 யோவான் தன் விவரிப்பைத் தொடர்ந்து கூறுவதாவது: “அதின் மதில் வச்சிரக்கல்லால் கட்டப்பட்டிருந்தது; நகரம் தெளிந்த பளிங்குக்கு ஒப்பான சுத்தப்பொன்னாயிருந்தது. நகரத்து மதில்களின் அஸ்திபாரங்கள் சகலவித இரத்தினங்களினாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன; முதலாம் அஸ்திபாரம் வச்சிரக்கல், இரண்டாவது இந்திரநீலம், மூன்றாவது சந்திரகாந்தம், நான்காவது மரகதம், ஐந்தாவது கோமேதகம், ஆறாவது பதுமராகம், ஏழாவது சுவர்ணரத்தினம், எட்டாவது படிகப்பச்சை, ஒன்பதாவது புஷ்பராகம், பத்தாவது வைடூரியம், பதினோராவது சுநீரம், பன்னிரண்டாவது சுகந்தி இவைகளே. பன்னிரண்டு வாசல்களும் பன்னிரண்டு முத்துக்களாயிருந்தன; ஒவ்வொரு வாசலும் ஒவ்வொரு முத்தாயிருந்தது. நகரத்தின் வீதி தெளிவுள்ள பளிங்குபோலச் சுத்தப்பொன்னாயிருந்தது.”—வெளிப்படுத்துதல் 21:18-21.
10. இந்த நகரம் வச்சிரக்கல்லாலும், பொன்னாலும், “சகலவித இரத்தினங்க”ளாலும் கட்டப்பட்டிருக்கும் இந்த உண்மை எதைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது?
10 இந்த நகரத்தின் கட்டமைப்பு உண்மையாகவே மகிமையான பிரகாசமுள்ளது. களிமண் அல்லது கல் போன்ற, மண்ணுலக, பூமிக்குரிய கட்டிடப் பொருட்களுக்குப் பதிலாக, வச்சிரக்கல், தூய்மையாக்கப்பட்ட பொன் மற்றும் “சகலவித இரத்தினங்களை”யும் பற்றி நாம் வாசிக்கிறோம். அவை விண்ணுலகக் கட்டிடப் பொருட்களை எவ்வளவு பொருத்தமாய் உருப்படுத்திக் காட்டுகின்றன! இதைப்பார்க்கிலும் அதிக சிறப்புவாய்ந்ததாய் எதுவும் இருக்க முடியாது. பூர்வ உடன்படிக்கைப் பெட்டி பசும்பொன் தகட்டால் மூடப்பட்டிருந்தது, பைபிளில் இந்த மூலப்பொருள் நன்மையும் மதிப்பும் வாய்ந்த காரியங்களைப் பெரும்பாலும் குறிப்பிட்டு நிற்கின்றன. (யாத்திராகமம் 25:11; நீதிமொழிகள் 25:11; ஏசாயா 60:6, 17) ஆனால் இந்தப் புதிய எருசலேம் முழுவதும், அதன் பெரும் பாதையுங்கூட, “தெளிவுள்ள பளிங்குபோலச் சுத்தப்பொன்னால்” கட்டியமைக்கப்பட்டிருக்கின்றன, இவ்வாறு மனக்கற்பனையைத் தடுமாற வைக்கும் அழகையும் உள்ளார்ந்த மதிப்பையும் தெளிவுபடுத்திக் காட்டுகிறது.
11. புதிய எருசலேமாக அமைவோர், மகா உயர்ந்த தனி மேன்மைவாய்ந்த ஆவிக்குரிய தூய்மையோடு பிரகாசிப்பார்களென்று எது நிச்சயப்படுத்துகிறது?
11 இத்தகைய தூய்மையான பொன்னை எந்த மனித உருக்காலையும் உண்டாக்க முடியாது. ஆனால் யெகோவா மகா திறம்பட்ட சுத்திகரிப்பாளர். “வெள்ளியைப் புடமிட்டுச் சுத்திகரிப்”பவராக அவர் உட்கார்ந்து, ஆவிக்குரிய இஸ்ரவேலின் உண்மையுள்ள உறுப்பினர் ஒவ்வொருவரையும் “பொன்னைப்போலவும் வெள்ளியைப்போலவும்” புடமிட்டு, அவர்களிலிருந்து எல்லா மாசுகளையும் நீக்குகிறார். உண்மையாய்ப் புடமிடப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட ஆட்கள் மாத்திரமே முடிவில் புதிய எருசலேமில் அமைவோராகின்றனர், இவ்வாறு, மகா உயர்ந்த தனி மேன்மைவாய்ந்த ஆவிக்குரிய தூய்மையோடு பிரகாசிக்கிற உயிருள்ள கட்டிடப் பொருட்களைக்கொண்டு, யெகோவா இந்த நகரத்தைக் கட்டுகிறார்.—மல்கியா 3:3, 4.
12. பின்வருபவை குறித்துக் காட்டுபவை என்ன: (அ) அந்த நகரத்தின் அஸ்திபாரங்கள் மதிப்புமிகுந்த 12 இரத்தினக்கற்களால் அலங்கரிக்கப்பட்டிருப்பது? (ஆ) அந்த நகரத்தின் வாசல்கள் முத்துக்களாக இருப்பது?
12 இந்த நகரத்தின் அஸ்திபாரங்களுங்கூட, மதிப்புமிகுந்த 12 இரத்தினக்கற்களால் அலங்கரிக்கப்பட்டு அழகாக இருக்கின்றன. இது பூர்வ யூதப் பிரதான ஆசாரியனை நினைவுபடுத்துகிறது, அவர் விசேஷித்த ஆசரிப்பு நாட்களில், இங்கே விவரித்தவற்றிற்கு ஒருவாறு ஒத்த, வெவ்வேறுபட்ட 12 இரத்தினக்கற்கள் பதியப்பட்ட ஏபோத்தைத் தரித்திருந்தார். (யாத்திராகமம் 28:15-21) நிச்சயமாகவே இது வெறும் தற்செயலானப் பொருத்தம் அல்ல! மாறாக, புதிய எருசலேமின் ஆசாரிய சேவையை இது வலியுறுத்துகிறது. இதற்கு மகா பிரதான ஆசாரியராகிய இயேசு ‘விளக்காக’ இருக்கிறார். (வெளிப்படுத்துதல் 20:6; 21:23; எபிரெயர் 8:1) மேலும், இயேசுவின் பிரதான ஆசாரியத்துவ சேவையின் நன்மைகள், புதிய எருசலேமின் மூலமே மனிதவர்க்கத்துக்குச் செலுத்தப்படுகின்றன. (வெளிப்படுத்துதல் 22:1, 2) ஒவ்வொன்றும் பெரும் அழகுவாய்ந்த முத்தாக இருக்கும் இந்த நகரத்தின் 12 வாசல்கள், ராஜ்யத்தை விலையுயர்ந்த ஒரு முத்துக்கு ஒப்பிட்ட இயேசுவின் உவமையை நினைவுபடுத்துகின்றன. அந்த வாசல்களுக்குள் பிரவேசிப்போர் யாவரும் ஆவிக்குரிய மதிப்புகளுக்கு உண்மையான மதித்துணர்வைக் காட்டியிருப்பார்கள்.—மத்தேயு 13:45, 46; யோபு 28:12, 17, 18-ஐ ஒத்துப்பாருங்கள்.
ஒளிநிறைந்த நகரம்
13. புதிய எருசலேமைப்பற்றி யோவான் அடுத்தபடியாக என்ன சொல்கிறார், ஏன் அந்த நகரத்துக்கு சொல்லர்த்தமாக எந்த ஆலயமும் வேண்டியதில்லை?
13 சாலொமோனின் காலத்தில், எருசலேமின் வடக்கே மோரியா மலைமீது மிக உயர்ந்த இடத்தில் கட்டப்பட்ட ஆலயத்தால் அந்நகரம் மேலுயர்ந்தோங்கியது. ஆனால் புதிய எருசலேமைப் பற்றியதென்ன? யோவான் சொல்வதாவது: “அதிலே தேவாலயத்தை நான் காணவில்லை; சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரும் ஆட்டுக்குட்டியானவருமே அதற்கு ஆலயம். நகரத்திற்கு வெளிச்சங்கொடுக்கச் சூரியனும் சந்திரனும் அதற்கு வேண்டுவதில்லை; தேவனுடைய மகிமையே அதைப் பிரகாசிப்பித்தது, ஆட்டுக்குட்டியானவரே அதற்கு விளக்கு.” (வெளிப்படுத்துதல் 21:22, 23) உண்மையில், இங்கே சொல்லர்த்தமான ஆலயத்தைக் கட்டுவதற்குத் தேவையில்லை. அந்தப் பூர்வ யூத ஆலயம் வெறும் ஒரு மாதிரியாகவே இருந்தது; அந்த மாதிரி முன்குறித்த உண்மையாகிய, ஆவிக்குரிய இந்த மகா ஆலயம் பொ.ச. 29-ல் யெகோவா இயேசுவைப் பிரதான ஆசாரியராக அபிஷேகஞ்செய்தது முதற்கொண்டு உண்டாகியிருந்துவருகிறது. (மத்தேயு 3:16, 17; எபிரெயர் 9:11, 12, 23, 24) மேலும், ஓர் ஆலயம், ஜனங்களுக்காக யெகோவாவுக்கு பலிகளைச் செலுத்துவதற்கு ஓர் ஆசாரிய வகுப்பார் இருப்பாரெனவும் ஊகித்துக்கொள்ளும்படி செய்கிறது. ஆனால் புதிய எருசலேமின் பாகமாயிருப்போர் யாவரும் ஆசாரியர்களே. (வெளிப்படுத்துதல் 20:6) மேலும் இயேசுவின் பரிபூரண மனித உயிராகிய அந்த மகா பலி, எல்லா காலத்துக்குமாக ஒரே தடவை செலுத்தப்பட்டாகிவிட்டது. (எபிரெயர் 9:27, 28) மேலும், அந்த நகரத்தில் வாழும் ஒவ்வொருவருக்கும் யெகோவாதாமே நேரில் அணுகத்தக்கவராக இருக்கிறார்.
14. (அ) புதிய எருசலேமின்மீது பிரகாசிக்கச் சூரியனும் சந்திரனும் அதற்கு ஏன் தேவையில்லை? (ஆ) யெகோவாவின் சர்வலோக அமைப்பைப்பற்றி ஏசாயாவின் தீர்க்கதரிசனம் எதை முன்னறிவித்தது, புதிய எருசலேம் எவ்வாறு இதில் உட்பட்டுள்ளது?
14 சீனாய் மலையில் யெகோவாவின் மகிமை, மோசேக்கு அருகில் கடந்து சென்றபோது, அது மோசேயின் முகத்தை அவ்வளவு மிகுந்த ஒளியுடன் பிரகாசிக்கச் செய்ததால், அவர் தன் உடன்தோழரான இஸ்ரவேலர் காணாதபடி முகத்தை மூடிக்கொள்ள வேண்டியதாயிருந்தது. (யாத்திராகமம் 34:4-7, 29, 30, 33) அவ்வாறெனில், யெகோவாவின் மகிமையால் நிலையாக ஒளிபெறச் செய்யப்படுகிற நகரத்தின் பிரகாசத்தை நீங்கள் கற்பனைசெய்து காண முடியுமா? அத்தகைய நகரம் இராக்காலத்தை உடையதாக இருக்க முடியாது. அதற்கு சொல்லர்த்தமான சூரியனோ சந்திரனோ தேவையிராது. அது நித்தியகாலமும் ஒளிவீசிக்கொண்டிருக்கும். (1 தீமோத்தேயு 6:16-ஐ ஒப்பிடுக.) புதிய எருசலேம் அந்த வகையான சுடரொளி பிரகாசத்தில் தோய்விக்கப்பட்டிருக்கிறது. நிச்சயமாகவே, இந்த மணவாட்டியும் அதன் மணவாளரான அரசரும் யெகோவாவின் சர்வலோக அமைப்பின்—அவருடைய “ஸ்திரீ”யாகிய “மேலான எருசலேமின்”—தலைநகரமாகிறார்கள், இந்த “ஸ்திரீ”யைக் குறித்து ஏசாயா பின்வருமாறு தீர்க்கதரிசனம் கூறினார்: “பகலிலே வெளிச்சம்தரச் சூரியன் இனி உனக்குத் தேவையில்லை, தன் பிரகாசத்தினால் உனக்கு வெளிச்சம்தரச் சந்திரனும் தேவையில்லை; யெகோவாவே உனக்கு நித்திய வெளிச்சமும், உன் கடவுளே உனக்கு மகிமையுமாவார். உன் சூரியன் இனி அஸ்தமிப்பதுமில்லை; உன் சந்திரன் தேய்வதுமில்லை; யெகோவாவே உனக்கு நித்திய வெளிச்சமாவார், உன் துக்க நாட்கள் முடிந்துபோம்.”—ஏசாயா 60:1, 19, 20, தி.மொ.; கலாத்தியர் 4:26.
ஜாதிகளுக்கு ஒளி
15. புதிய எருசலேமைப்பற்றி வெளிப்படுத்துதல் கூறும் என்ன வார்த்தைகள் ஏசாயா தீர்க்கதரிசனத்துக்கு ஒத்திருக்கின்றன?
15 இதே தீர்க்கதரிசனம் பின்வருவதையும் முன்னறிவித்தது: “உன் ஒளியினிடத்துக்கு ஜாதியாரும் உன்மேல் உதிக்கும் பிரகாசத்தினிடத்துக்கு ராஜாக்களும் நடந்துவருவார்கள்.” (ஏசாயா 60:3, தி.மொ.) இந்த வார்த்தைகள் புதிய எருசலேமையும் உட்படுத்துமென வெளிப்படுத்துதல் பின்வருமாறு காட்டுகிறது: “ஜனங்கள் அதின் வெளிச்சத்தில் நடப்பார்கள். பூமியின் ராஜாக்கள் தங்கள் மகிமையை அதற்குள் கொண்டுவருகிறார்கள். அதின் வாசல்கள் பகலில் அடைபடுவதேயில்லை; இராக்காலம் அங்கே கிடையாது. ஜனங்களின் மகிமையையும் மேன்மையையும் அதற்குள் கொண்டுவருவார்கள்.”—வெளிப்படுத்துதல் 21:24-26, தி.மொ.
16. புதிய எருசலேமிய வெளிச்சத்தின் உதவியைக்கொண்டு நடக்கப்போகிற இந்த “ஜனங்கள்” யார்?
16 புதிய எருசலேமிய வெளிச்சத்தின் உதவியைக்கொண்டு நடக்கும் இந்த “ஜனங்கள்” யார்? இவர்கள், ஒரு காலத்தில் இந்தப் பொல்லாத உலக தேசங்களின் பாகமாயிருந்தவர்களும், இந்த மகிமையான பரலோக நகரத்தின்மூலம் அளிக்கப்படும் ஒளிக்குச் சாதகமாகப் பிரதிபலிப்போருமான ஜனங்கள். இவர்களில் முதன்முதலாக இருப்போர், “சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து” ஏற்கெனவே வெளிவந்தவர்களும், யோவான் வகுப்பாரோடு ஒன்றுசேர்ந்து கடவுளை இரவும் பகலும் வணங்குவோருமான திரள் கூட்டத்தாரேயாவர். (வெளிப்படுத்துதல் 7:9, 15) புதிய எருசலேம் பரலோகத்திலிருந்து இறங்கிவந்து, இயேசு மரித்தோரை உயிர்த்தெழுப்புவதற்கு, மரணத்துக்கும் ஹேடீஸுக்குமுரிய திறவுகோல்களைப் பயன்படுத்தினபின்பு, தொடக்கத்தில் அந்த “ஜாதிகளி”லிருந்து வந்த, இன்னுமதிகமான லட்சக்கணக்கானோர் அவர்களைச் சேர்ந்துகொள்வார்கள், இவர்கள் யெகோவாவையும், புதிய எருசலேமின் ஆட்டுக்குட்டியைப்போன்ற கணவரான, அவருடைய குமாரனையும் நேசிக்கிறார்கள்.—வெளிப்படுத்துதல் 1:18.
17. ‘தங்கள் மகிமையை அதற்குள் கொண்டுவருகிற,’ “பூமியின் ராஜாக்கள்” யார்?
17 அவ்வாறெனில், “தங்கள் மகிமையை அதற்குள் கொண்டுவரும்” “பூமியின் ராஜாக்கள்” யார்? இவர்கள் ஒரு தொகுதியாக சொல்லர்த்தமான பூமியின் ராஜாக்கள் அல்லர், ஏனெனில் அவர்கள் அர்மகெதோனில் கடவுளுடைய ராஜ்யத்துக்கு எதிராகப் போரிட்டு அழிக்கப்பட்டுப் போகின்றனர். (வெளிப்படுத்துதல் 16:14, 16; 19:17, 18) இந்த ராஜாக்கள், திரள் கூட்டத்தாரின் பாகமான ஜனங்களில் உயர்பதவிகளிலுள்ள சிலராக இருக்கக்கூடுமா, அல்லது இவர்கள் புதிய உலகத்தில் கடவுளுடைய ராஜ்யத்துக்குக் கீழ்ப்படியும் உயிர்த்தெழுப்பப்பட்ட ராஜாக்களா? (மத்தேயு 12:42) அவ்வாறிருக்க முடியாது, ஏனெனில் பெரும்பான்மையாக, அத்தகைய ராஜாக்களின் மகிமை உலகப்பிரகாரமானது மற்றும் வெகுகாலத்துக்கு முன்பே மங்கி அற்றுப்போய்விட்டது. அவ்வாறெனில், புதிய எருசலேமுக்குள் தங்கள் மகிமையைக் கொண்டுவரும் இந்தப் “பூமியின் ராஜாக்கள்,” ஆட்டுக்குட்டியானவரான இயேசு கிறிஸ்துவுடன் அரசர்களாக ஆளும்படி “சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து . . . மீட்டுக்கொண்ட” 1,44,000 பேராகவே இருக்கவேண்டும். (வெளிப்படுத்துதல் 5:9, 10; 22:5) அந்த நகரத்தின் பிரகாசத்தோடு மேலும் கூட்டுவதற்கு இவர்கள், கடவுளால் கொடுக்கப்பட்ட தங்கள் மகிமையை அதற்குள் கொண்டுவருகிறார்கள்.
18. (அ) புதிய எருசலேமில் யார் அனுமதிக்கப்படுவதில்லை? (ஆ) யார் மாத்திரமே நகரத்துக்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படுவர்?
18 யோவான் தொடர்ந்து சொல்வதாவது: “அசுத்தமான எதுவும் அருவருப்பையும் பொய்யையும் நடப்பிக்கிற எவனும் அதில் பிரவேசிப்பதேயில்லை; அதில் பிரவேசிப்பவர்கள் ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் [ஜீவ புஸ்தகச்சுருளில், NW] எழுதப்பட்டவர்களே.” (வெளிப்படுத்துதல் 21:27, தி.மொ.) சாத்தானின் காரிய ஒழுங்குமுறையால் கறைப்பட்ட ஒன்றும் புதிய எருசலேமின் பாகமாக இருக்க முடியாது. அதன் வாசல்கள் நிலையாய்த் திறந்திருக்கிறபோதிலும், “அருவருப்பையும் பொய்யையும் நடப்பிக்கிற” ஒருவரும் அதற்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படார். விசுவாசதுரோகிகளோ மகா பாபிலோனின் எந்த உறுப்பினரோ அந்த நகரத்தில் இரார். அதன் எதிர்கால உறுப்பினர்கள் இன்னும் பூமியில் இருக்கையில், அவர்களை கறைபடுத்துவதன்மூலம் அந்த நகரத்தின் தூய்மையைக் கெடுக்க எவராவது முயற்சி செய்தால், அவர்களுடைய முயற்சிகள் முற்றிலும் தோல்வியடைய செய்யப்படுகின்றன. (மத்தேயு 13:41-43) “ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் [ஜீவ புஸ்தகச்சுருளில், NW] எழுதப்பட்ட” 1,44,000 பேர் மாத்திரமே, முடிவில் புதிய எருசலேமுக்குள் பிரவேசிப்பர்.b—வெளிப்படுத்துதல் 13:8; தானியேல் 12:3.
ஜீவத்தண்ணீருள்ள நதி
19. (அ) புதிய எருசலேம் தன் மூலமாய் மனிதவர்க்கத்துக்கு ஆசீர்வாதங்கள் சென்றெட்டும்படி செய்வதை யோவான் எவ்வாறு விவரிக்கிறார்? (ஆ) இந்த ‘ஜீவத்தண்ணீருள்ள நதி’ எப்பொழுது ஓடுகிறது, இதை நாம் எவ்வாறு அறிகிறோம்?
19 மகிமையாய்ப் பிரகாசிக்கும் இந்தப் புதிய எருசலேம், பூமியிலுள்ள மனிதவர்க்கத்துக்கு மகத்தான ஆசீர்வாதங்களைத் தன்மூலமாகச் சென்றடைய செய்யும். யோவான் அடுத்தபடியாக அறிந்துகொள்வது இதுவே: “பின்பு, பளிங்கைப்போல் தெளிவான ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனத்திலிருந்து புறப்பட்டு [அதன் பெருஞ்சாலையின் நடுவே, NW] வருகிறதை எனக்குக் காண்பித்தான். (வெளிப்படுத்துதல் 22:1, 2அ) இந்த “நதி” எப்போது ஓடுகிறது? “தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனத்திலிருந்து புறப்பட்டு” ஓடுவதால், அது 1914-ல் கர்த்தருடைய நாள் தொடங்கின பின்பே ஓட முடியும். அது, ஏழாவது எக்காளத்தை ஊதினதால் முன்னறிவிக்கப்பட்ட சம்பவத்திற்கும் பின்வரும் மகத்தான அறிவிப்புக்குமுரிய காலமாயிருந்தது: “இப்பொழுது இரட்சிப்பும் வல்லமையும் நமது தேவனுடைய ராஜ்யமும், அவருடைய கிறிஸ்துவின் அதிகாரமும் உண்டாயிருக்கிறது.” (வெளிப்படுத்துதல் 11:15; 12:10) முடிவுகாலத்தின்போது, ஜீவத்தண்ணீரை இலவசமாகப் பெற்றுக்கொள்ளும்படி ஆவியும் மணவாட்டியும் நல்மனமுள்ளவர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கின்றனர். இந்நதியின் தண்ணீர் இந்தப் பொல்லாத உலகத்தின் முடிவு வரையிலும் தொடர்ந்து கிடைப்பதோடு, அதற்குப் பிறகும், புதிய எருசலேம் ‘தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கி வரும்’ புதிய உலகிலும் தொடர்ந்து கிடைக்கும்.—வெளிப்படுத்துதல் 21:2.
20. ஜீவத்தண்ணீர் ஓரளவில் ஏற்கெனவே கிடைக்கக்கூடியதாயுள்ளதென எது குறிப்பிட்டுக் காட்டுகிறது?
20 உயிரளிக்கும் தண்ணீர் மனிதவர்க்கத்துக்கு ஏற்கும்படி அளிக்கப்படுவது இதுவே முதல் தடவையல்ல. இயேசு, தாம் பூமியிலிருந்தபோது, நித்திய ஜீவனை அளிக்கும் தண்ணீரைப் பற்றிப் பேசினார். (யோவான் 4:10-14; 7:37, 38) மேலும், யோவான் பின்வரும் அன்பான அழைப்பை அண்மையில் கேட்கவிருப்பவராக இருந்தார்: “ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்.” (வெளிப்படுத்துதல் 22:17) இந்த அழைப்பு இப்போதேயும் தொனிக்கப்பட்டு வருகிறது, இது, ஜீவத்தண்ணீர் ஓரளவு ஏற்கெனவே கிடைக்கக்கூடியதாயுள்ளதென குறிப்பிட்டுக் காட்டுகிறது. ஆனால் புதிய உலகத்தில், அந்தத் தண்ணீர்கள் கடவுளுடைய சிங்காசனத்திலிருந்து புதிய எருசலேமினூடே அதன் மெய்ப்படியான முழு நதியாகப் பாய்ந்தோடும்.
21. ‘ஜீவத்தண்ணீருள்ள நதி’ எதை அடையாளமாகக் குறித்துக் காட்டுகிறது, இந்த நதியைப்பற்றிய எசேக்கியேலின் தரிசனம் எவ்வாறு இதை அறியும்படி நமக்கு உதவி செய்கிறது?
21 இந்த ‘ஜீவத்தண்ணீருள்ள நதி’ என்ன? சொல்லர்த்தமான தண்ணீர் உயிருக்கு இன்றியமையாத ஒரு மூலப்பொருளாக இருக்கிறது. உணவில்லாமல் ஒரு மனிதன் பல வாரங்கள் உயிர்ப்பிழைத்திருக்க முடியும், ஆனால் தண்ணீர் இல்லாமல் ஏறக்குறைய ஒரே வாரத்தில் அவன் சாவான். மேலும் தண்ணீர் சுத்தமாக்கும் ஒரு பொருள், சுகநலத்துக்கு இன்றியமையாதது. இவ்வாறு, ஜீவத்தண்ணீர் மனிதவர்க்கத்தின் உயிருக்கும் உடல்நலத்துக்கும் இன்றியமையாத ஒன்றை அடையாளமாய்க் குறித்துக்காட்டுவதாக இருக்க வேண்டும். தீர்க்கதரிசி எசேக்கியேலுக்குங்கூட இந்த “ஜீவத்தண்ணீருள்ள நதி”யைப் பற்றிய ஒரு தரிசனம் அளிக்கப்பட்டது, மேலும் அவருடைய தரிசனத்தில், அந்த நதி ஆலயத்திலிருந்து வெளிப்பட்டுப் பாய்ந்தோடி சவக்கடலுக்குள் வீழ்ந்தது. அப்பொழுது, அற்புதங்களிலும் மகா அற்புதம்! அந்த உயிரற்றதும், இரசாயனங்கள் செறிவுநிலையில் நிரம்பியதுமான தண்ணீர் தேக்கம், உப்பற்ற சுத்தமான நீராக, மீன்கள் நிரம்பியிருக்கும்படி மாற்றப்பட்டது! (எசேக்கியேல் 47:1-12) ஆம், இந்தத் தரிசனத்துக்குரிய நதி, முன்னால் செத்ததாயிருந்த ஒன்றைத் திரும்ப உயிருக்குக் கொண்டுவருகிறது, இவ்வாறு ஜீவத்தண்ணீருள்ள அந்த நதி, “மரித்த” நிலையிலிருக்கும் மனிதகுலத்துக்கு, இயேசுவின் மூலம் பரிபூரண மனித உயிரைத் திரும்பக் கொண்டுவருவதற்கான கடவுளுடைய ஏற்பாட்டைச் சித்தரித்துக் காட்டுகிறதென்பதை உறுதிசெய்கிறது. இந்த நதி “பளிங்கைப்போல் தெளிவான”தாக இருப்பது கடவுளுடைய ஏற்பாடுகளின் தூய்மையான மற்றும் பரிசுத்தமானத் தன்மையைக் காட்டுகிறது. இரத்தம் கலந்தும், சாவுண்டாக்குவதுமாயிருக்கும் கிறிஸ்தவமண்டல ‘தண்ணீர்களைப்’ போல் இது இல்லை.—வெளிப்படுத்துதல் 8:10, 11.
22. (அ) இந்த நதி எங்கிருந்து தொடங்குகிறது, இது ஏன் பொருத்தமாயுள்ளது? (ஆ) இந்த ஜீவத்தண்ணீரில் உட்பட்டிருப்பது என்ன, இந்த அடையாளக் குறிப்பான நதியில் என்ன அடங்கியுள்ளது?
22 இந்த நதி “தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனத்திலிருந்து” தொடங்குகிறது. இது பொருத்தமாயுள்ளது, ஏனெனில் யெகோவாவின் இந்த உயிரளிக்கும் ஏற்பாடுகளின் ஆதாரம் மீட்கும் பலியாகும், இது, யெகோவா “தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்த”தனால் அளிக்கப்பட்டது. (யோவான் 3:16) இந்த ஜீவத்தண்ணீர் கடவுளுடைய வார்த்தையையும் உட்படுத்துகிறது, இது பைபிளில் தண்ணீரெனக் குறிப்பிட்டுப் பேசப்படுகிறது. (எபேசியர் 5:26) எனினும், இந்த ஜீவத்தண்ணீருள்ள நதி, சத்தியத்தை மட்டுமல்லாமல், கீழ்ப்படிதலுள்ள மனிதர்களைப் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் மீட்டு அவர்களுக்கு நித்திய ஜீவனை அருளும்படிக்கு, இயேசுவினுடைய பலியின் ஆதாரத்தின்பேரில், யெகோவா செய்திருக்கும் மற்ற எல்லா ஏற்பாட்டையும் உள்ளடக்குகிறது.—யோவான் 1:29; 1 யோவான் 2:1, 2.
23. (அ) இந்த ஜீவத்தண்ணீருள்ள நதி புதிய எருசலேமின் பெருஞ்சாலையின் நடுவில் பாய்ந்தோடுவது ஏன் பொருத்தமாயுள்ளது? (ஆ) இந்த ஜீவத்தண்ணீர் ஏராளமாய் ஓடுகையில், கடவுள் ஆபிரகாமுக்குக் கொடுத்த என்ன வாக்கு நிறைவேற்றப்படும்?
23 அந்த ஆயிர ஆண்டு ஆட்சியின்போது, இந்த மீட்கும் பொருளின் நன்மைகள், இயேசுவும் அவருக்குக் கீழ்ப்பட்ட 1,44,000 ஆசாரியர்களும் அடங்கிய ஆசாரியத்துவத்தின் மூலம் முழுமையாகப் பயன்படுத்தப்படுகின்றன. அவ்வாறிருக்க, பொருத்தமாகவே அந்த ஜீவத்தண்ணீருள்ள நதி புதிய எருசலேமிய பெருஞ்சாலையின் நடுவில் பாய்ந்தோடுகிறது. இது ஆவிக்குரிய இஸ்ரவேலரால் ஆகியது, இயேசுவோடுகூட இது ஆபிரகாமின் உண்மையான வித்தாகிறது. (கலாத்தியர் 3:16, 29) ஆகையால், அந்த அடையாளக் குறிப்பான நகரத்தின் அந்தப் பெருஞ்சாலையின் நடுவில் ஜீவத்தண்ணீர் ஏராளமாய் ஓடுகையில், “பூமியிலுள்ள சகல ஜாதிகளும்” ஆபிரகாமின் வித்தின் மூலம் தங்களை ஆசீர்வதித்துக்கொள்வதற்கு முழு வாய்ப்பும் இருக்கும். யெகோவா ஆபிரகாமுக்குச் செய்த வாக்குத்தத்தம் முழுமையாக நிறைவேற்றப்படும்.—ஆதியாகமம் 22:17, 18.
ஜீவ விருட்சங்கள்
24. அந்த ஜீவத்தண்ணீருள்ள நதியின் இரு கரைகளிலும் யோவான் இப்பொழுது என்ன காண்கிறார், அவை சித்தரித்துக் காட்டுவதென்ன?
24 எசேக்கியேலின் தரிசனத்தில், இந்த நதி விசைநீரோட்டமாகவுங்கூட ஆயிற்று, மேலும் அதன் இருகரைகளிலும் எல்லா வகைகளான கனிகொடுக்கும் மரங்கள் வளருவதைத் தீர்க்கதரிசி கண்டார். (எசேக்கியேல் 47:12) ஆனால் யோவான் என்ன காண்கிறார்? இதுவே: “நதியின் இக்கரையிலும் அக்கரையிலும் பன்னிரண்டுவிதமான கனிகளைத்தருகிற ஜீவவிருட்சங்கள் இருந்தன. அவை ஒவ்வொரு மாதமும் கனிகளைத் தந்தன; அந்த விருட்சங்களின் இலைகள் தேசங்கள் ஆரோக்கியமடைகிறதற்கு ஏதுவானவையாய் இருந்தன.” (வெளிப்படுத்துதல் 22:2ஆ, NW) இந்த ‘ஜீவ விருட்சங்கள்’ கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கத்துக்கு நித்திய ஜீவனைக் கொடுப்பதற்கான யெகோவாவின் ஏற்பாட்டினுடைய பாகத்தைச் சித்தரித்துக் காட்டுபவையாக இருக்க வேண்டும்.
25. உலகளாவிய அந்தப் பரதீஸில் நல்ல முறையில் பிரதிபலிக்கும் மனிதருக்குத் தாராளமான என்ன ஏற்பாட்டை யெகோவா செய்கிறார்?
25 நல்ல முறையில் பிரதிபலிக்கும் மனிதருக்கு எத்தகைய தாராளமான ஏற்பாட்டை யெகோவா செய்கிறார்! அந்தப் புத்துயிரளிக்கும் தண்ணீர்களில் அவர்கள் பங்குகொள்வதுமட்டுமல்லாமல் அந்த விருட்சங்களிலிருந்து, தொடர்ந்து பல்வகை கனிகளைத் தரும் உயிருக்கு ஆதரவளிக்கும் கனிகளை அவர்கள் பறித்துக்கொள்ளலாம். ஏதேனின் பரதீஸில் நம்முடைய முதல் பெற்றோர் இதைப்போன்ற “விரும்பத்தக்க” ஏற்பாட்டில் திருப்தியுடனிருந்திருந்தால் எவ்வளவு நலமாயிருந்திருக்கும்! (ஆதியாகமம் 2:9, NW) ஆனால் இப்பொழுது உலகளாவிய ஒரு பரதீஸ் இங்கேயுள்ளது, மேலும் “தேசங்கள் ஆரோக்கியமடைகிறதற்கு” அந்த அடையாளக் குறிப்பான மரங்களின் இலைகள் மூலமும் யெகோவா ஏற்பாடு செய்கிறார்.c இன்று அளிக்கப்படும் மூலிகைகளாலான அல்லது அதுபோன்ற எந்த மருந்துக்கும் மிக மேலாக, ஆற்றி ஆறுதல்படுத்தும் அந்த அடையாளக்குறிப்பான இலைகளைப் பயன்படுத்துவது, விசுவாசிக்கும் மனிதவர்க்கத்தை ஆவிக்குரிய மற்றும் உடலுக்குரிய பரிபூரணத்துக்கு உயர்த்தும்.
26. அந்த ஜீவ விருட்சங்கள் எதை உட்படுத்தலாம், ஏன்?
26 அந்த நதியின் தண்ணீரை நன்கு பெறுகிற அந்த விருட்சங்கள், ஆட்டுக்குட்டியானவரின் மனைவியாகிய 1,44,000 உறுப்பினர்களை உட்படுத்தலாம். பூமியிலிருக்கையில் இவர்களும் இயேசு கிறிஸ்துவின் மூலம் கடவுள் செய்துள்ள உயிரடைவதற்கான ஏற்பாட்டில் பருகுகின்றனர். ஆவியால் பிறப்பிக்கப்பட்டவர்களும் இயேசுவின் சகோதரர்களுமாகிய இவர்கள், “நீதியின் [“பெரிய,” NW] விருட்சங்கள்” என தீர்க்கதரிசன ரீதியில் அழைக்கப்படுவது சுவாரஸ்யமான விஷயமாகும். (ஏசாயா 61:1-3; வெளிப்படுத்துதல் 21:6) இவர்கள் ஏற்கெனவே யெகோவாவுக்குத் துதியுண்டாக மிகுந்த ஆவிக்குரிய கனிகளைக் கொடுத்திருக்கிறார்கள். (மத்தேயு 21:43) அந்த ஆயிர ஆண்டு ஆட்சியின்போது, பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் “தேசங்கள் ஆரோக்கியமடைய” சேவிக்கும் மீட்பின் ஏற்பாடுகளை வழங்குவதில் அவர்கள் பங்குபெறுவர்.—1 யோவான் 1:7-ஐ ஒத்துப்பாருங்கள்.
இனிமேலும் இரவு கிடையாது
27. புதிய எருசலேமுக்குள் பிரவேசிக்கும்படியான சிலாக்கியம்பெற்றவர்களுக்கு மேலுமான என்ன ஆசீர்வாதங்களை யோவான் குறிப்பிடுகிறார், “இனி ஒரு சாபமுமிராது” என்று ஏன் சொல்லப்பட்டிருக்கிறது?
27 புதிய எருசலேமுக்குள் பிரவேசிப்பது—நிச்சயமாகவே, இதைப்பார்க்கிலும் அதிசயமான சிலாக்கியம் இருக்க முடியாது! சற்று சிந்தித்துப்பாருங்கள்—ஒருகாலத்தில் தாழ்வான, அபூரண மானிடராக இருந்த அவர்கள், இத்தகைய மகிமையான ஏற்பாட்டின் பாகமாவதற்கு இயேசுவைப் பின்பற்றிப் பரலோகத்துக்குள் செல்வர்! (யோவான் 14:2) இவர்கள் அனுபவிக்கவிருக்கிற ஆசீர்வாதங்களைப்பற்றி ஓரளவு எண்ணத்தைக் கொடுப்பவராய் யோவான் பின்வருமாறு கூறுகிறார்: “இனி ஒரு சாபமுமிராது. தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனம் அதிலிருக்கும். அவருடைய ஊழியக்காரர் [அடிமைகள், NW] அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும்.” (வெளிப்படுத்துதல் 22:3, 4) இஸ்ரவேலரின் ஆசாரியத்துவம் கேடடைந்தபோது, அது யெகோவாவின் சாபத்தை அனுபவித்தது. (மல்கியா 2:2) எருசலேமின் உண்மையற்ற ‘ஆலயம்’ கைவிடப்பட்டதென இயேசு அறிவித்தார். (மத்தேயு 23:37-39) ஆனால் புதிய எருசலேமில், “இனி ஒரு சாபமுமிராது.” (சகரியா 14:11-ஐ ஒத்துப்பாருங்கள்.) அதன் குடிமக்கள் யாவரும் இங்கே பூமியில் துன்ப அனுபவங்களின் அக்கினியில் சோதிக்கப்பட்டுத்தீர்ந்து, வெற்றி பெற்றிருப்பதால், அவர்கள் ‘அழியாமையையும் சாவாமையையும் தரித்திருப்பார்கள்.’ இவர்களுடைய காரியத்தில், யெகோவா இயேசுவைக் குறித்துத் தாம் அறிந்திருக்கிறதுபோலவே, இவர்கள் ஒருபோதும் இடறிவிழமாட்டார்களென அறிந்திருக்கிறார். (1 கொரிந்தியர் 15:53, 57) மேலும், அந்த நகரத்தின் நிலையை நித்திய காலமெல்லாம் பாதுகாப்புடையதாக்குவதாய், “தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனம்” அங்கிருக்கும்.
28. புதிய எருசலேமின் உறுப்பினர்கள் ஏன் கடவுளுடைய பெயர் தங்கள் நெற்றியில் எழுதப்பட்டிருக்கின்றனர், உணர்ச்சியார்வமூட்டும் என்ன எதிர்பார்ப்பு அவர்களுக்கு முன் வைக்கப்பட்டிருக்கிறது?
28 யோவான்தானே இருப்பதுபோல், அந்தப் பரலோக நகரத்தின் எதிர்கால உறுப்பினர் யாவரும் கடவுளின் “அடிமைகள்.” இவ்வாறாக, அவர் தங்களை உடைமையாகக் கொண்டவரென்பதை அடையாளங்காட்டி, தங்கள் நெற்றிகளில் கடவுளுடைய பெயர் முனைப்பாய்த் தோன்றும் முறையில் எழுதப்பட்டதாகக் கொண்டிருக்கின்றனர். (வெளிப்படுத்துதல் 1:1; 3:12) புதிய எருசலேமின் பாகமாக இருந்து, அவருக்குப் பரிசுத்த சேவை செய்வதை விலைமதியா சிலாக்கியமாக அவர்கள் கருதுவார்கள். இயேசு பூமியிலிருந்தபோது, இத்தகைய எதிர்கால அரசர்களுக்கு உணர்ச்சியார்வமூட்டும் ஒரு வாக்கை கொடுத்தார், அவர் சொன்னதாவது: “இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள் [மகிழ்ச்சியுள்ளவர்கள், NW]; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.” (மத்தேயு 5:8) உண்மையாக யெகோவாவை நேரில் பார்த்து வணங்குவது இந்த அடிமைகளுக்கு எவ்வளவு மகிழ்ச்சியாயிருக்கும்!
29. ஏன் “அங்கே இராக்காலமிராது” என்று பரலோகப் புதிய எருசலேமைக் குறித்து யோவான் சொல்கிறார்?
29 யோவான் தொடர்ந்து சொல்வதாவது: “அங்கே இராக்காலமிராது; விளக்கும் சூரியனுடைய வெளிச்சமும் அவர்களுக்கு வேண்டுவதில்லை; தேவனாகிய கர்த்தரே [யெகோவாவே, NW] அவர்கள்மேல் பிரகாசிப்பார்.” (வெளிப்படுத்துதல் 22:5அ) பூர்வ எருசலேம், பூமியிலுள்ள மற்ற எந்த நகரத்தைப் போலவே, பகலில் வெளிச்சத்துக்காக சூரியன்மீது சார்ந்திருந்தது, இரவில் நிலாவொளியின்மீதும் செயற்கை விளக்கொளியின்மீதும் சார்ந்திருந்தது. ஆனால் பரலோகப் புதிய எருசலேமில், இத்தகைய ஒளிசாதனங்களின் தேவையிரா. யெகோவாதாமே அந்த நகரத்தை வெளிச்சமாக்குகிறார். ‘இரவு’ என்பது உருவகமான கருத்தில், துன்பத்தை அல்லது யெகோவாவிடமிருந்து பிரிதலைக் குறிப்பதற்கும் பயன்படுத்தப்படலாம். (மீகா 3:6; யோவான் 9:4; ரோமர் 13:11, 12) சர்வவல்லமையுள்ள கடவுளின் மகிமையான, பிரகாசமுள்ள சமுகத்தில் அந்த வகையான இரவு ஒருபோதும் இருக்க முடியாது.
30. இந்த உயர்சிறப்பு வாய்ந்த தரிசனத்தை யோவான் எவ்வாறு முடிக்கிறார், எதைக் குறித்து வெளிப்படுத்துதல் நமக்கு உறுதியளிக்கிறது?
30 கடவுளுடைய இந்த அடிமைகளைப்பற்றிப் பின்வருமாறு சொல்லி, யோவான் இந்த உயர்சிறப்பு வாய்ந்த தரிசனத்தை முடிக்கிறார்: “அவர்கள் சதாகாலங்களிலும் அரசாளுவார்கள்.” (வெளிப்படுத்துதல் 22:5ஆ) உண்மைதான், அந்த ஆயிர ஆண்டுகளின் முடிவில் மீட்பின் நன்மைகள் முழுமையாய்ப் பயன்படுத்தி முடிந்திருக்கும், மேலும் இயேசு, பரிபூரணராக்கப்பட்ட மனித குலத்தைத் தம்முடைய பிதாவிடம் ஒப்படைப்பார். (1 கொரிந்தியர் 15:25-28) அதன்பின்பு இயேசுவுக்கும் 1,44,000 பேருக்கும் யெகோவா மனதில் என்ன வைத்திருக்கிறார் என்பதை நாம் அறியோம். ஆனால் அவர்களுடைய சிலாக்கியமாகிய யெகோவாவுக்குச் செய்யும் பரிசுத்த சேவை சதா காலத்துக்கும் தொடரும் என வெளிப்படுத்துதல் நமக்கு உறுதியளிக்கிறது.
வெளிப்படுத்துதலின் மகிழ்ச்சியுள்ள உச்சக்கட்டம்
31. (அ) புதிய எருசலேமின் தரிசனத்தால் என்ன உச்சநிலை குறிக்கப்படுகிறது? (ஆ) மனிதவர்க்கத்தில் உண்மையுள்ள மற்றவர்களுக்குப் புதிய எருசலேம் எதை நிறைவேற்றுகிறது?
31 ஆட்டுக்குட்டியானவருடைய மணவாட்டியாகிய புதிய எருசலேமைப்பற்றிய இந்தத் தரிசனத்தின் மெய்யான நிறைவேற்றமே வெளிப்படுத்துதல் குறிப்பிட்டுக் காட்டுகிற அந்த மகிழ்ச்சியான உச்சக்கட்டம், பொருத்தமாகவே அவ்வாறுள்ளது. இந்தப் புத்தகம் முதன்முதல் முகவரியிடப்பட்ட, யோவானின் முதல் நூற்றாண்டு உடன் கிறிஸ்தவர்கள் எல்லாரும், இயேசு கிறிஸ்துவோடு அழியாமையுடைய ஆவிகளாயிருக்கும் துணை அரசர்களாக அந்த நகரத்துக்குள் பிரவேசிப்பதை ஆவலோடு எதிர்பார்த்தனர். பூமியில் இன்று இன்னும் உயிரோடிருக்கும் அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் மீதிபேர் அதே நம்பிக்கையுடையோராக இருக்கின்றனர். இவ்வாறு, பூர்த்தியாக்கப்பட்ட இந்த மணவாட்டி ஆட்டுக்குட்டியானவரோடு ஒன்றிணைக்கப்பட்டு வருகையில், வெளிப்படுத்துதல் அதன் மகத்தான உச்சக்கட்டத்தை நோக்கி முன்னேறுகிறது. அடுத்தபடியாக, புதிய எருசலேமைக் கருவியாகக் கொண்டு, மீட்கும்பொருளான இயேசுவினுடைய பலியின் நன்மைகள் மனிதவர்க்கத்துக்குப் பயன்படுத்தப்படும், இவ்வாறு, உண்மையுள்ளோராக நிலைத்திருப்போர் யாவரும் முடிவில் நித்திய ஜீவனுக்குள் பிரவேசிப்பார்கள். இம்முறையில், இந்த மணவாட்டியாகிய புதிய எருசலேம், தன் மணவாள அரசருக்குப் பற்றுறுதியுள்ள வாழ்க்கைத்துணைவியாக, நீதியுள்ள ஒரு புதிய பூமியை நித்தியத்துக்குமாகக் கட்டியெழுப்புவதில் பங்குகொள்ளும்—எல்லாம் ஈடற்ற பேரரசரான நம்முடைய கர்த்தராகிய யெகோவாவின் மகிமைக்கே.—மத்தேயு 20:28; யோவான் 10:10, 16; ரோமர் 16:27.
32, 33. வெளிப்படுத்துதலிலிருந்து நாம் எதைக் கற்றறிந்தோம், நம்முடைய இருதயப்பூர்வமான பிரதிபலிப்பு என்னவாக இருக்க வேண்டும்?
32 அவ்வாறெனில், இந்த வெளிப்படுத்துதல் புத்தகத்தின் நம் ஆராய்ச்சி முடிவுக்கு வருகையில், எத்தகைய மகிழ்ச்சியை நாம் உணருகிறோம்! சாத்தானும் அவனுடைய வித்தும் எடுக்கும் முடிவான முயற்சிகள் அறவே தோல்வியடைய செய்யப்பட்டு யெகோவாவின் நீதியுள்ள நியாயத்தீர்ப்புகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டதை நாம் கண்டோம். மகா பாபிலோன் என்றென்றுமாக இல்லாது ஒழிந்து போகவேண்டும், இதைப் பின்தொடர்ந்து சாத்தானுடைய உலகத்தின் படுமோசமாய்ச் சீரழிந்த மற்ற எல்லா அம்சங்களும் ஒழிந்துபோகவிருக்கின்றன. சாத்தான்தானேயும் அவனுடைய பேய்களும் அபிஸ்ஸுக்குட்படுத்தப்பட்டு பின்னால் அழிக்கப்படுவர். உயிர்த்தெழுதலும் நியாயத்தீர்ப்பும் தொடருகையில், புதிய எருசலேம் கிறிஸ்துவுடன் பரலோகங்களிலிருந்து ஆளும், பரிபூரணராக்கப்பட்ட மனிதவர்க்கத்தினர் முடிவில் பரதீஸ் பூமியில் நித்திய ஜீவனை அனுபவித்து மகிழ்வோராவர். இந்தக் காரியங்கள் எல்லாவற்றையும் வெளிப்படுத்துதல் எவ்வளவு உயிர்ப்புள்ள முறையில் வருணித்துக் காட்டுகிறது! இந்த நித்திய நற்செய்தியை மகிழ்ச்சிக்குரிய செய்தியாக, இன்று பூமியிலுள்ள ‘சகல தேசத்தாருக்கும் கோத்திரத்தாருக்கும் பாஷைக்காரருக்கும் ஜனக்கூட்டத்தாருக்கும் அறிவிக்கும்படி’ இது எவ்வளவாய் நம்முடைய தீர்மானத்தை உறுதிப்படுத்துகிறது! (வெளிப்படுத்துதல் 14:6, 7) இந்தப் பெரிய வேலையில் நீங்கள் உங்களை முழுமையாக ஈடுபடுத்துகிறீர்களா?
33 நம்முடைய இருதயங்கள் நன்றியறிதலால் அவ்வளவாய் நிரம்பியிருக்க, வெளிப்படுத்துதலின் முடிவான வார்த்தைகளுக்கு நாம் கவனம் செலுத்துவோமாக.
[அடிக்குறிப்புகள்]
a பயன்படுத்தப்பட்ட அளவுகோல் “மனுஷனுடைய அளவின்படி, அதே சமயத்தில் தூதனுடையதன்படி” இருந்த இந்த உண்மை, அந்த நகரம் தொடக்கத்தில் மனிதராயிருந்து ஆனால் பின்பு தூதர்களுக்குள் ஆவி சிருஷ்டிகளாய்விட்ட 1,44,000 ஆட்கள் அமைந்ததாயிருக்கும் இந்த உண்மையோடு சம்பந்தப்பட்டதாக இருக்கலாம்.
b ‘ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புஸ்தகச்சுருள்,’ ஆவிக்குரிய இஸ்ரவேலரான 1,44,000 ஆட்களின் பெயர்களை மாத்திரமே கொண்டுள்ளதென்பதைக் கவனியுங்கள். இவ்வாறு அது, பூமியில் உயிர்பெறுவோருடைய பெயர்களும் அடங்கியுள்ள ‘ஜீவ புஸ்தகச்சுருளிலிருந்து’ வேறுபடுகிறது.—வெளிப்படுத்துதல் 20:12.
c “தேசங்கள்” என்ற இந்தப் பதம் ஆவிக்குரிய இஸ்ரவேலரல்லாதவர்களை அடிக்கடி குறிப்பிடுகிறதென்பதைக் கவனியுங்கள். (வெளிப்படுத்துதல் 7:9; 15:4; 20:3; 21:24, 26, NW) இங்கே இந்தப் பதம் பயன்படுத்தியிருப்பது, அந்த ஆயிர ஆண்டு ஆட்சியின்போது மனிதவர்க்கம் வெவ்வேறு தேசியத் தொகுதிகளாகத் தொடர்ந்து அமைக்கப்பட்டிருப்பரென்ற எண்ணத்தைக் கொடுக்கிறதில்லை.