வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்துக்குத் தயாரிக்க தேவையான தகவல்கள்
அக்டோபர் 5-11
பைபிளில் இருக்கும் புதையல்கள் | யாத்திராகமம் 31-32
“சிலை வழிபாட்டிலிருந்து விலகி ஓடுங்கள்”
w09 5/15 பக். 11 பாரா 11
‘யெகோவாவுடைய பெரிய நாள் சமீபம்’—முதிர்ச்சியை நோக்கி முன்னேறுங்கள்
11 பைபிளில் நாம் கற்றுக்கொள்ளும் விஷயங்களைக் கடைப்பிடிப்பது சவாலாக இருக்கலாம்; அதுவும் கஷ்டமான சந்தர்ப்பங்களில் சொல்லவே வேண்டாம். உதாரணமாக, யெகோவா இஸ்ரவேலர்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்த சில காலத்திலேயே அவர்கள் “மோசேயோடே வாதாடி” திரும்பத் திரும்ப ‘யெகோவாவை . . . பரிட்சை பார்த்தார்கள்.’ ஏன்? குடிக்கத் தண்ணீர் கிடைக்காததால். (யாத். 17:1-4) அவர்கள் யெகோவாவுடன் ஓர் ஒப்பந்தத்திற்குள் வந்து, ‘அவர் அருளின எல்லா வார்த்தைகளின்படியும் செய்வோம்’ என்று ஒத்துக்கொண்டு இரண்டு மாதங்கள்கூட முடியவில்லை; அதற்குள்ளேயே உருவ வழிபாடு சம்பந்தமான அவரது கட்டளையை மீறினார்கள். (யாத். 24:3, 12-18; 32:1, 2, 7-9) ஓரேப் மலையில் கடவுளிடமிருந்து அறிவுரைகளைப் பெற்றுக்கொண்டிருந்த மோசே பல நாட்களாகத் திரும்பி வராததால் அவர்கள் பயந்துபோனார்களா? முன்பு அமலேக்கியர்கள் அவர்களைத் தாக்கியபோது, மோசே தன் கையை உயர்த்தி வைத்ததால்தான் அவர்கள் வெற்றி அடைந்தார்கள்; ஆகவே, இப்போது மோசே இல்லாததால் அமலேக்கியர்கள் திரும்பவும் வந்து தங்களைத் தாக்கிவிடுவார்கள் என்று நினைத்தார்களா? (யாத். 17:8-16) ஒருவேளை அப்படி நினைத்திருக்கலாம். காரணம் எதுவாக இருந்தாலும், இஸ்ரவேலர்கள் ‘கீழ்ப்படிய மறுத்தார்கள்.’ (அப். 7:39-41) வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் நுழைவதற்குப் பயந்த இஸ்ரவேலர்களின் மாதிரியை, அதாவது, ‘கீழ்ப்படியாதவர்களுடைய மாதிரியை, பின்பற்றிப் பாவத்தில் விழுந்துவிடாதபடி’ ‘தங்களால் முடிந்த அனைத்தையும் செய்யுமாறு’ பவுல் கிறிஸ்தவர்களிடம் சொன்னார்.—எபி. 4:3, 11.
கடவுளுக்குக் கீழ்ப்படியுங்கள், அவரது வாக்குறுதிகளிலிருந்து நன்மை அடையுங்கள்
12 யெகோவா இஸ்ரவேலரோடு செய்த உடன்படிக்கைக்கு இசைய உடனடியாகச் செயல்பட ஆரம்பித்தார்; அதில் தாம் வாக்குறுதி அளித்திருந்தபடியே, ஆசரிப்புக்கூடாரத்தை அமைக்க ஏற்பாடு செய்தார், அதோடு அபூரண மனிதர்கள் தம்மை அணுகுவதற்காகக் குருத்துவ வகுப்பைத் தேர்ந்தெடுத்தார். இஸ்ரவேலரோ அவருக்குக் கொடுத்த வாக்கை சீக்கிரத்திலேயே மறந்துபோனார்கள், ‘இஸ்ரவேலின் பரிசுத்தரை மட்டுப்படுத்தினார்கள்,’ அதாவது வேதனைப்படுத்தினார்கள். (சங். 78:41) உதாரணத்திற்கு, சீனாய் மலையிலே மோசே கடவுளிடமிருந்து மேலும் பல அறிவுரைகளைப் பெற்றுக்கொண்டிருந்த சமயத்தில் இஸ்ரவேலர் பொறுமை இழந்தார்கள், கடவுள்மேல் விசுவாசத்தை இழந்தார்கள், மோசே தங்களைக் கைவிட்டுச் சென்றதாகத் தப்புக்கணக்கு போட்டார்கள். எனவே, பொன் கன்றுக்குட்டி ஒன்றைச் செய்து, ‘இஸ்ரவேலரே, உங்களை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உங்கள் தெய்வம் இதுவே’ என்றார்கள். (யாத். 32:1, 4) பின்பு, ‘யெகோவாவுக்குப் பண்டிகை’ என்ற பெயரில் கொண்டாட்டத்தில் இறங்கினார்கள், தாங்கள் உருவாக்கிய அந்தச் சிலைக்குமுன் விழுந்து வணங்கினார்கள், பலிகள் செலுத்தினார்கள். யெகோவா அதைப் பார்த்தபோது மோசேயிடம், “அவர்களுக்கு நான் விதித்த வழியை அவர்கள் சீக்கிரமாய் விட்டு விலகினார்கள்” என்றார். (யாத். 32:5, 6, 8) அப்போதிருந்தே, கடவுளுக்கு வாக்குறுதிகளைக் கொடுப்பதும் அவற்றை மீறுவதும் இஸ்ரவேலரின் வழக்கமாகிப்போனது.—எண். 30:2.
“யார் யெகோவாவின் பக்கம் இருக்கிறீர்கள்?”
14 சிலைகளை வணங்குவது தவறு என்பது இஸ்ரவேலர்களுக்குத் தெரிந்திருந்தது. (யாத். 20:3-5) அப்படியிருந்தும், தங்கத்தால் செய்யப்பட்ட கன்றுக்குட்டி சிலையை எவ்வளவு எளிதில் வணங்க ஆரம்பித்துவிட்டார்கள்! யெகோவாவுடைய கட்டளையை மீறியிருந்தும், இன்னமும் தாங்கள் யெகோவாவின் பக்கம் இருப்பதாக நினைத்துக்கொண்டு, அவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொண்டார்கள். ஆரோன் இன்னும் ஒரு படி மேலே போய், ‘யெகோவாவுக்குப் பண்டிகை கொண்டாடுவோம்’ என்று அறிவித்தார். இதைப் பார்த்தபோது யெகோவாவுக்கு எப்படி இருந்தது? அவர் மோசேயிடம், இந்த “ஜனங்கள் தறிகெட்டுப் போய்விட்டார்கள் . . . என் வழியைவிட்டு விலகிவிட்டார்கள்!” என்று சொன்னார். அந்த முழு தேசத்தையும் அடியோடு அழிக்க நினைக்குமளவுக்கு யெகோவாவுக்குப் பயங்கரக் கோபம் வந்தது.—யாத். 32:5-10.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
வேலை செய்வதற்கும் ஓய்வு எடுப்பதற்கும் “ஒரு நேரம் இருக்கிறது”
4 கடினமாக உழைக்கிற விஷயத்தில் யெகோவாவும் இயேசுவும் நமக்கு முன்மாதிரி வைத்திருக்கிறார்கள் என்று சொல்லும்போது, நாம் ஓய்வே எடுக்கக் கூடாது என்று அர்த்தமா? இல்லை! யெகோவாவுக்குக் களைப்பு என்பதே கிடையாது; அதனால், ஓய்வு என்பது அவருக்கு அவசியம் இல்லை. ஆனால், வானத்தையும் பூமியையும் படைத்துவிட்டு அவர் ‘ஓய்வெடுத்ததாக’ பைபிள் சொல்கிறது. (யாத். 31:17) அப்படியென்றால், படைப்பு வேலைகளை நிறுத்திவிட்டு, தான் படைத்தவற்றைப் பார்த்து ரசிப்பதற்கு யெகோவா நேரம் எடுத்துக்கொண்டார் என்று தெரிகிறது! இயேசுவைப் பற்றி என்ன சொல்லலாம்? இந்தப் பூமியில் இருந்தபோது அவர் கடினமாக உழைத்தார். அதேசமயத்தில், தன்னுடைய நண்பர்களோடு சேர்ந்து ஓய்வெடுக்கவும் உணவை ரசித்து ருசித்து சாப்பிடவும் நேரம் ஒதுக்கினார்.—மத். 14:13; லூக். 7:34.
w87-E 9/1 பக். 29
வாசகர் கேட்கும் கேள்விகள்
ஒருவருக்கு கடவுளுடைய அங்கீகாரம் கிடைத்துவிட்டது, அதாவது அவருடைய பெயர் “வாழ்வின் புத்தகத்தில்” எழுதப்பட்டுவிட்டது, என்பதற்காக முடிவில்லாத வாழ்க்கை அவருக்கு முன்தீர்மானிக்கப்பட்டுவிட்டது என்றும் அதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் சொல்ல முடியாது. இஸ்ரவேலர்களைப் பற்றி மோசே யெகோவாவிடம் இப்படிக் கேட்டார்: “உங்களுக்கு இஷ்டம் இருந்தால், இவர்களுடைய பாவத்தை மன்னியுங்கள். இல்லையென்றால், தயவுசெய்து உங்களுடைய புத்தகத்திலிருந்து என் பெயரை அழித்துவிடுங்கள்.” அதற்கு யெகோவா, “யாரெல்லாம் எனக்கு எதிராகப் பாவம் செய்தார்களோ, அவர்களுடைய பெயரைத்தான் என் புத்தகத்திலிருந்து துடைத்தழிப்பேன்” என்று சொன்னார். (யாத்திராகமம் 32:32, 33) கடவுளுடைய அங்கீகாரம் பெற்று அவருடைய புத்தகத்தில் ஒருவருடைய பெயர் எழுதப்பட்டாலும், அவர் பிற்பாடு, கீழ்ப்படியாமல் போய்விடலாம் அல்லது விசுவாசத்தைவிட்டு விலகிப்போய்விடலாம். அப்படி நடந்தால் அவருடைய பெயரைக் கடவுள் ‘வாழ்வின் புத்தகத்திலிருந்து துடைத்தழித்துவிடுவார்.’—வெளிப்படுத்துதல் 3:5.
அக்டோபர் 12-18
பைபிளில் இருக்கும் புதையல்கள் | யாத்திராகமம் 33-34
“யெகோவாவின் தங்கமான குணங்கள்”
it-2-E பக். 466-467
பெயர்
கடவுள் இருக்கிறார் என்பதை படைப்புகள் உறுதிப்படுத்துகின்றன. ஆனால், அவருடைய பெயரை அவை தெரியப்படுத்துவதில்லை. (சங் 19:1; ரோ 1:20) ஒருவர் கடவுளுடைய பெயரைத் தெரிந்துகொள்வதற்கு “யெகோவா” என்ற அந்த வார்த்தையைத் தெரிந்துகொண்டால் மட்டும் போதாது. (2நா 6:33) ஒரு நபராக அவரைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டும். அதாவது, பைபிளில் சொல்லப்பட்டுள்ள அவருடைய நோக்கங்களையும் செயல்களையும் குணங்களையும் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். (1ரா 8:41-43-ஐ ஒப்பிடுங்கள்; 1ரா 9:3, 7; நெ 9:10) உதாரணத்துக்கு, யெகோவா மோசேயின் ‘பெயரைத் தெரிந்துவைத்திருந்தார்,’ அதாவது அவரை மிகவும் நன்றாகத் தெரிந்துவைத்திருந்தார். (யாத் 33:12, அடிக்குறிப்பு) ஒருசமயம், யெகோவாவுடைய மகிமையைப் பார்ப்பதற்கான பாக்கியம் மோசேக்கு கிடைத்தது. அதோடு, அவருடைய பெயர் அறிவிக்கப்படுவதைக் கேட்பதற்கான பாக்கியமும் கிடைத்தது. (யாத் 34:5) அப்படி அறிவிக்கப்பட்டபோது யெகோவா என்ற பெயர் மட்டும் திரும்பத் திரும்ப சொல்லப்படவில்லை, அவருடைய குணங்கள், செயல்கள் பற்றியும் சொல்லப்பட்டது. “யெகோவா, யெகோவா, இரக்கமும் கரிசனையும் உள்ள கடவுள், சீக்கிரத்தில் கோபப்படாதவர், மாறாத அன்பை அளவில்லாமல் காட்டுபவர், உண்மையுள்ளவர், ஆயிரமாயிரம் தலைமுறைகளுக்கு மாறாத அன்பைக் காட்டுபவர், குற்றத்தையும் மீறுதலையும் பாவத்தையும் மன்னிப்பவர். ஆனால், குற்றவாளியை அவர் ஒருபோதும் தண்டிக்காமல் விடமாட்டார். தகப்பன்கள் செய்த குற்றத்துக்காக அவர்களுடைய மகன்களையும் பேரன்களையும் மூன்றாம் நான்காம் தலைமுறைகளைச் சேர்ந்தவர்களையும் தண்டிப்பார்” என்று சொல்லப்பட்டது. (யாத் 34:6, 7) அதேபோல், மோசே பாடிய பாடலில், “யெகோவாவின் பெயரை நான் புகழ்வேன்” என்ற வார்த்தைகள் இருக்கின்றன. இந்த வார்த்தைகள் கடவுளுடைய சுபாவத்தையும் இஸ்ரவேலர்களுக்கு அவர் செய்த எல்லாவற்றையும் விவரிக்கின்றன.—உபா 32:3-44.
w09 10/1 பக். 28 பாரா. 3-5
யெகோவா தம்மைப் பற்றி வர்ணித்தபோது
யெகோவா தம்மைப் பற்றிச் சொல்கிற முதல் விஷயம், தாம் “இரக்கமும் பரிவும் உள்ள இறைவன்” என்பதே. (வசனம் 6, பொது மொழிபெயர்ப்பு) ஓர் அறிஞரின்படி, ‘இரக்கம்’ என்பதற்குரிய எபிரெய வார்த்தை, ‘ஓர் அப்பா தன் பிள்ளைகளிடம் காட்டுகிற கரிசனைக்கு ஒப்பான’ கரிசனையைக் கடவுள் காட்டுகிறார் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. ‘பரிவு’ என மொழிபெயர்க்கப்பட்டுள்ள வார்த்தை, “தேவையில் இருக்கும் ஒருவருக்கு நெஞ்சார உதவுவதைச் சித்தரிக்கிற” வினைச்சொல்லுடன் சம்பந்தப்பட்டிருக்கிறது. பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்குத் தேவையானதையெல்லாம் கனிவான அன்போடும் ஆழ்ந்த அக்கறையோடும் கொடுத்துப் பராமரிப்பதைப் போல யெகோவாவும் தம்மை வணங்குபவர்களைப் பராமரிக்கிறார்; இதை நாம் அறிந்துகொள்ள வேண்டுமென்று அவர் விரும்புவது தெளிவாகத் தெரிகிறது.—சங்கீதம் 103:8, 13.
அடுத்ததாக, தாம் “சினம் கொள்ளத் தயங்குபவர்” என யெகோவா சொல்கிறார். (வசனம் 6, ஈஸி டு ரீட் வர்ஷன்) அவர் பூமியிலுள்ள தம்முடைய ஊழியர்களிடம் அவ்வளவு எளிதில் கோபப்படுவதில்லை. மாறாக, அவர்களிடம் பொறுமையாக நடந்துகொள்கிறார், அவர்களுடைய குற்றங்குறைகளைச் சகித்துக்கொள்கிறார்; அதேசமயத்தில், அவர்கள் தங்களுடைய பாவங்களைவிட்டு விலகுவதற்குக் காலம் தருகிறார்.—2 பேதுரு 3:9.
மேலும், தாம் “மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன்” எனக் கடவுள் சொல்கிறார். (வசனம் 6) மகா தயை, அதாவது பற்றுமாறா அன்பு என்ற பொன்னான குணத்தின் மூலமாக யெகோவா தமக்கும் தம் மக்களுக்கும் இடையே பாசப்பிணைப்பை ஏற்படுத்திக்கொள்கிறார்; இந்தப் பிணைப்பு உறுதியானது, நிலையானது. (உபாகமம் 7:9) யெகோவா சத்தியத்தின் ஊற்றுமூலராகவும் இருக்கிறார். அவர் யாரையும் ஏமாற்ற மாட்டார், அவரை யாரும் ஏமாற்றவும் முடியாது. அவர் ‘சத்தியத்தின் கடவுளாக’ இருப்பதால், எதிர்காலத்தைப் பற்றிய அவருடைய எல்லா வாக்குறுதிகளிலும், சொல்லப்போனால் அவருடைய ஒவ்வொரு வார்த்தையிலும் நாம் முழுநம்பிக்கை வைக்கலாம்.—சங்கீதம் 31:5, NW.
w09 10/1 பக். 28 பாரா 6
யெகோவா தம்மைப் பற்றி வர்ணித்தபோது
யெகோவா தம்மைப் பற்றிய மற்றொரு முக்கியமான விஷயத்தையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டுமென விரும்புகிறார்; அவர் “அக்கிரமத்தையும் மீறுதலையும் பாவத்தையும்” மன்னிக்கிறவர் என்று சொல்கிறார். (வசனம் 7) ஆம், பாவிகள் மனந்திரும்பும்போது அவர் ‘மன்னிக்கிறார்.’ (சங்கீதம் 86:5) அதேசமயத்தில் தவறுகளை அவர் கண்டும் காணாமல் விட்டுவிடுவதில்லை. தவறு செய்கிறவர்களை அவர் ‘தண்டனைக்குத் தப்பவிட மாட்டார்’ என்றும் சொல்கிறார். (வசனம் 7, பொ.மொ.) அவர் பரிசுத்தமும் நீதியும் உள்ளவராக இருப்பதால், வேண்டுமென்றே பாவம் செய்கிறவர்களைத் தண்டிக்காமல் விடமாட்டார். அவர்கள் தங்கள் பாவத்தின் விளைவுகளை ஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள் சந்தித்தே தீர வேண்டும்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
யாத்திராகம புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
33:11, 20—மோசேயிடம் கடவுள் எப்படி “முகமுகமாய்” பேசினார்? அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த நெருக்கமான உரையாடலை இந்த வார்த்தை குறிக்கிறது. கடவுளுடைய பிரதிநிதியுடன் மோசே பேசினார், அவர் மூலம் யெகோவாவிடமிருந்து வாய்மொழி அறிவுரைகளையும் பெற்றார். ஆனால் மோசே யெகோவாவை பார்க்கவில்லை; ஏனென்றால் ‘ஒரு மனுஷனும் கடவுளைக் கண்டு உயிரோடு இருக்க முடியாது.’ உண்மையில், யெகோவாவே நேரடியாக மோசேயிடம் பேசவில்லை. நியாயப்பிரமாண சட்டமும்கூட ‘தேவதூதரைக் கொண்டு மத்தியஸ்தர் மூலமாய் கொடுக்கப்பட்டது’ என கலாத்தியர் 3:19 குறிப்பிடுகிறது.
முக்கியமானதற்கே முதலிடம்!
இஸ்ரவேலர்களிலும் இஸ்ரவேலராக மதம் மாறியவர்களிலும் ஆண் மக்கள் ஒவ்வொருவரும் வருடத்திற்கு மூன்று முறை யெகோவாவுக்கு முன்பாக கூடிவரும்படி கட்டளையிடப்பட்டிருந்தனர். இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் முழுக் குடும்பமும் ஆவிக்குரிய விதமாக பயனடையும் என்பதை உணர்ந்த அநேக குடும்பத் தலைவர்கள் தங்கள் மனைவிகளையும் பிள்ளைகளையும் தங்களுடன் அழைத்துச் சென்றனர். இப்படி எல்லாரும் போய்விட்டால் வீடு வாசலையும் காடு கழனியையும் எதிரியிடமிருந்து யார் பாதுகாப்பார்? யெகோவா இவ்வாறு உறுதியளித்திருந்தார்: “வருஷத்தில் மூன்றுதரம் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதிக்கு முன்பாகக் காணப்படப் போயிருக்கும்போது ஒருவரும் உங்கள் தேசத்தை இச்சிப்பதில்லை.” (யாத்திராகமம் 34:24) ஆவிக்குரிய காரியங்களுக்கு முதலிடம் கொடுக்கையில் பொருள் சம்பந்தமாக எதையும் இழந்துபோக மாட்டார்கள் என்பதை நம்புவதற்கு இஸ்ரவேலர்களுக்கு விசுவாசம் தேவைப்பட்டது. யெகோவா தாம் சொன்னபடியே செய்தாரா? நிச்சயமாகவே செய்தார்!
அக்டோபர் 19-25
பைபிளில் இருக்கும் புதையல்கள் | யாத்திராகமம் 35-36
“யெகோவாவின் வேலையைச் செய்ய எப்படித் தகுதி பெறலாம்?”
மனதார கொடுக்கிறவர்களை யெகோவா ஆசீர்வதிக்கிறார்
இஸ்ரவேலர்கள் கொண்டுவந்த பொருள்களைவிட அவர்களுடைய நல்ல மனதை பார்த்துத்தான் யெகோவா சந்தோஷப்பட்டார். இஸ்ரவேலர்கள், அவர்களுடைய நேரத்தையும் சக்தியையும் யெகோவாவுக்காக கொடுத்தார்கள். உதாரணத்திற்கு, திறமையுள்ள பெண்கள் அவர்கள் கைகளாலேயே நூல் செய்தார்கள் என்று பைபிள் சொல்கிறது. எல்லாவித கைவேலைகளையும் பெசலெயேலும் அகோலியாபும் முழு மனதோடு செய்தார்கள். அவர்கள் செய்த எல்லா வேலையையும் யெகோவா ஆசீர்வதித்தார். அவர்களுக்குத் தேவையான “ஞானத்தையும் புரிந்துகொள்ளுதலையும் திறமையையும் அறிவையும்” கொடுத்தார்.—யாத். 35:25, 26, 30-35, NW.
கடவுளுடைய சக்தியால் வழிநடத்தப்பட்ட பூர்வ கால விசுவாசிகள்
6 மோசேயின் காலத்தில் வாழ்ந்த பெசலெயேலின் உதாரணம், கடவுளுடைய சக்தி செயல்படும் விதத்தைப் புரிந்துகொள்ள பெருமளவு உதவுகிறது. (யாத்திராகமம் 35:30-35-ஐ வாசியுங்கள்.) ஆசரிப்புக் கூடாரத்திற்குத் தேவையான பொருள்களை உண்டுபண்ணுகிற வேலையை முன்நின்று வழிநடத்த பெசலெயேல் நியமிக்கப்பட்டார். இந்தப் பிரமாண்டமான வேலையை எப்படிச் செய்வதென அவர் முன்னரே அறிந்திருந்தாரா? அறிந்திருக்கலாம், ஆனாலும் இதற்குமுன் அவர் எகிப்தியர்களுக்குச் செங்கல்களைச் செய்து கொடுக்கும் பணியிலேயே ஈடுபட்டிருந்திருக்க வேண்டும். (யாத். 1:13, 14) எனவே, ஆசரிப்புக் கூடாரம் சம்பந்தப்பட்ட கஷ்டமான வேலையை அவர் எப்படிச் செய்து முடித்தார்? ‘அவர் விசித்திரமான வேலைகளை யோசித்துச் செய்யவும், . . . சகல விநோதமான வேலைகளைச் செய்யவும், அவருக்கு ஞானத்தையும் புத்தியையும் அறிவையும் [யெகோவா] அருளி, அவர் சகலவித வேலைகளையும் செய்யும்படி [தமது சக்தியினாலே] அவரை நிரப்பினார்.’ பெசலெயேலிடம் ஏற்கெனவே ஏதேனும் திறமை இருந்திருந்தால் அதைக் கடவுளுடைய சக்தி மேலும் மெருகூட்டியது. அகோலியாபைப் பொறுத்ததிலும் இதுவே உண்மை. பெசலெயேலும் அகோலியாபும் வேலையை நன்கு கற்றுக்கொண்டிருக்க வேண்டும்; ஏனென்றால், அவர்கள் நன்கு வேலை செய்ததோடு மற்றவர்களும் நன்கு வேலை செய்யக் கற்றுக்கொடுத்தார்கள்.
கடவுளுடைய சக்தியால் வழிநடத்தப்பட்ட பூர்வ கால விசுவாசிகள்
7 பெசலெயேலும் அகோலியாபும் கடவுளுடைய சக்தியால் வழிநடத்தப்பட்டார்கள் என்பதற்கு மற்றொரு அத்தாட்சி, அவர்கள் செய்த பொருள்கள் காலத்தால் அழியாதிருந்தன. சுமார் 500 வருடங்களுக்குப் பிறகும் அவை பயன்படுத்தப்பட்டு வந்தன. (2 நா. 1:2-6) இன்றைய உற்பத்தியாளர்களைப் போல் அல்லாமல், அவர்கள் இருவரும் தாங்கள் உருவாக்கிய பொருள்களில் தங்கள் பெயரையோ முத்திரையையோ பதிப்பதில் ஆர்வம் காட்டவே இல்லை. தங்களுடைய சாதனைகள் அனைத்துக்கும் யெகோவாவுக்கே புகழ் சேர்த்தார்கள்.—யாத். 36:1, 2.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
யெகோவாவின் வழிகளை அறிதல்
14 ஆன்மீக காரியங்களுக்கு முதலிடம் கொடுங்கள். ஆன்மீக காரியங்களுக்கு கவனம் செலுத்த முடியாதபடி சரீரத் தேவைகளுக்கு இஸ்ரவேலர் அதிக முக்கியத்துவம் கொடுத்துவிடக் கூடாது. அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை உலக நாட்டங்களுக்கு முழுமையாக அர்ப்பணித்துவிடக் கூடாது. பரிசுத்த காரியங்களுக்காக, அதாவது மெய்க் கடவுளை வழிபடுவது சம்பந்தமான காரியங்களுக்காக, வாரத்தில் ஒரு நாளை ஒதுக்கி யெகோவா அதைப் பரிசுத்தமாக்கினார். (யாத்திராகமம் 35:1-3; எண்ணாகமம் 15:32-36) பரிசுத்த மாநாடுகளுக்காக ஒவ்வொரு வருடமும் அவர்கள் கூடுதலாக நேரத்தை ஒதுக்கி வைக்க வேண்டியிருந்தது. (லேவியராகமம் 23:4-44) யெகோவாவின் வல்லமைமிக்க செயல்களைப் பற்றி கலந்தாராய்வதற்கும் அவருடைய வழிகளை ஞாபகப்படுத்துவதற்கும், அவருடைய எல்லா நற்குணத்திற்கும் நன்றி தெரிவிப்பதற்கும் இவை வாய்ப்பளிக்கும். ஜனங்கள் தங்களுடைய பக்தியை யெகோவாவுக்குக் காட்டும்போது, அவர்கள் தேவ பயத்திலும் அன்பிலும் பெருகுவார்கள், அவருடைய வழிகளில் நடப்பதற்கும் உதவி அளிக்கப்படுவார்கள். (உபாகமம் 10:12, 13) அந்தக் கட்டளைகளில் பொதிந்திருந்த ஆரோக்கியமான நியமங்கள் இன்று யெகோவாவின் ஊழியர்களுக்குப் பயனளிக்கின்றன.—எபிரெயர் 10:24, 25.
தாராளம் ததும்புகையில் பொங்கும் சந்தோஷம்
இஸ்ரவேலர் எப்படி உணர்ந்திருப்பார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள். கசப்பான அடிமைத்தனத்தையும் இழப்பையும் பல தலைமுறைகளாக அனுபவித்திருந்தார்கள். இப்போது அவர்கள் விடுதலை பெற்று பொருளாதார உடைமைகளை பேரளவில் பெற்றிருந்தார்கள். இந்த உடைமைகளில் கொஞ்சத்தைக் கொடுத்துவிட வேண்டுமென்றால் அவர்களுக்கு எப்படி இருக்கும்? அவற்றை அவர்கள் சம்பாதித்ததாகவும் அவற்றை வைத்துக்கொள்ளும் உரிமை அவர்களுக்கு இருக்கிறது என்றும் நினைத்திருக்கலாம். என்றாலும், உண்மை வணக்கத்துக்காக நன்கொடை அளிக்க வேண்டும் என்று கேட்கப்பட்டபோது அவர்கள் கட்டாயத்தினாலோ கஞ்சத்தனமாகவோ அல்ல ஆனால் மனமுவந்து கொடுத்தார்கள். இந்த பொருளாதார சம்பத்து அனைத்தும் யெகோவாவால்தான் கிடைத்தது என்பதை அவர்கள் மறக்கவில்லை. ஆகவே அவர்கள் தங்களிடமிருந்த வெள்ளியையும் பொன்னையும் ஆடுமாடுகளையும் தாராளமாகக் கொடுத்தார்கள். கொடுக்கும் ‘மனமுள்ளவர்களாய்’ இருந்தார்கள். அவர்களுடைய ‘இருதயம் அவர்களை எழுப்பியது.’ ‘அவர்கள் உள்ளூர தூண்டப்பட்டனர்.’ அது உண்மையிலேயே ‘யெகோவாவுக்குக் கொடுக்கப்பட்ட மனப்பூர்வமான காணிக்கையாக’ இருந்தது.—யாத்திராகமம் 25:1-9; 35:4-9, 20-29, NW; 36:3-7.
அக்டோபர் 26–நவம்பர் 1
பைபிளில் இருக்கும் புதையல்கள் | யாத்திராகமம் 37-38
“வழிபாட்டுக் கூடாரத்திலுள்ள பீடங்களும் உண்மை வணக்கத்தில் அவற்றின் பங்கும்”
it-1-E பக். 82 பாரா 3
பீடம்
தூபப் பீடம். தூபப் பீடம், “தங்கப் பீடம்” என்றும் அழைக்கப்பட்டது. (யாத் 39:38) இது வேல மரத்தால் செய்யப்பட்டது. இதன் மேல்பகுதிக்கும் சுற்றுப்பகுதிக்கும் தங்கத் தகடு அடிக்கப்பட்டிருந்தது. அதன் விளிம்பைச் சுற்றிலும் தங்க வேலைப்பாடு செய்யப்பட்டிருந்தது. அது சதுரமாக இருந்தது. அதன் நீளம் 44.5 செ.மீ. (17.5 அங்.), உயரம் 89 செ.மீ. (2.9 அடி). அதன் நான்கு மூலைகளிலும் “கொம்புகள்” இருந்தன. தங்கத்தால் தகடு அடிக்கப்பட்ட வேல மரக் கம்புகளைச் செருகி அந்தப் பீடத்தைத் தூக்கிக்கொண்டு போவதற்காக அதன் இரண்டு பக்கங்களிலும் இரண்டிரண்டு தங்க வளையங்கள் பொருத்தப்பட்டிருந்தன. (யாத் 30:1-5; 37:25-28) தினமும் காலையிலும் மாலையிலும் அந்தப் பீடத்தில் ஒரு விசேஷ தூபப்பொருள் எரிக்கப்பட்டது. (யாத் 30:7-9, 34-38) தூபப்பொருளை எரிப்பதற்குத் தூபக் கரண்டி பயன்படுத்தப்பட்டதாக பைபிளின் மற்ற பகுதிகளில் சொல்லப்பட்டிருக்கிறது. தூபப் பீடத்திலும் இந்தக் கரண்டி பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். (லேவி 16:12, 13; எபி 9:4; வெளி 8:5; 2நா 26:16, 19-ஐ ஒப்பிடுங்கள்.) இந்தத் தூபப் பீடம் வழிபாட்டுக் கூடாரத்துக்குள் மகா பரிசுத்த அறையின் திரைச்சீலைக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்தது. அதனால்தான் இது “சாட்சிப் பெட்டிக்கு முன்பக்கம்” வைக்கப்பட்டதாக பைபிள் சொல்கிறது.—யாத் 30:1, 6; 40:5, 26, 27.
it-1-E பக். 1195
தூபப்பொருள்
வனாந்தரத்தில் அமைக்கப்பட்ட வழிபாட்டுக் கூடாரத்தில் பயன்படுத்திய தூபப்பொருள், இஸ்ரவேலர்கள் கொடுத்த காணிக்கையிலிருந்து தயாரிக்கப்பட்டது. (யாத் 25:1, 2, 6; 35:4, 5, 8, 27-29) இந்தத் தூபப்பொருளை நான்கு கட்டங்களாகத் தயாரிக்க வேண்டியிருந்தது. இதைப் பற்றி மோசேயிடம் யெகோவா இப்படிச் சொன்னார்: “நறுமணப் பிசின், ஒனிக்கா, கல்பான், சுத்தமான சாம்பிராணி ஆகிய வாசனைப் பொருள்களைச் சரிசமமாக எடுத்துக்கொள். அதையெல்லாம் பக்குவமாகக் கலக்கி, உப்பு சேர்த்து தூபப்பொருளாகத் தயாரி. அது தூய்மையாகவும் பரிசுத்தமாகவும் இருக்க வேண்டும். நீ அதிலிருந்து கொஞ்சம் எடுத்து நன்றாகப் பொடியாக்கி, நான் உனக்குமுன் தோன்றும் சந்திப்புக் கூடாரத்திலுள்ள சாட்சிப் பெட்டியின் எதிரே வை. அது உங்களுக்கு மகா பரிசுத்தமானதாக இருக்க வேண்டும்.” பிறகு, இந்தத் தூபப்பொருள் யெகோவாவுக்கு மட்டுமே உரியது என்பதையும் அது பரிசுத்தமானது என்பதையும் மக்களுக்குப் புரியவைப்பதற்காக யெகோவா இப்படிச் சொன்னார்: “அதன் வாசனையை அனுபவித்து மகிழ்வதற்காக அதே போன்ற தூபப்பொருள் கலவையைத் தயாரிக்கிற எவனும் கொல்லப்பட வேண்டும்.”—யாத் 30:34-38; 37:29.
it-1-E பக். 82 பாரா 1
பீடம்
வழிபாட்டுக் கூடாரத்திலிருந்த பீடங்கள். கடவுள் கொடுத்த மாதிரியின்படி வழிபாட்டுக் கூடாரத்தில் இரண்டு பீடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அதில் ஒன்று, தகன பலிக்கான பலிபீடம் (இது “செம்புப் பலிபீடம்” என்றும் அழைக்கப்பட்டது [யாத் 39:39]). வேல மரத்தால் கீழேயும் மேலேயும் திறந்திருக்கிற ஒரு பெட்டியைப் போல் அது செய்யப்பட்டிருந்தது. இந்த சதுர வடிவ பெட்டியின் நீளம் 2.2 மீ. (7.3 அடி), உயரம் 1.3 மீ. (4.4 அடி). அதன் நான்கு மூலைகளிலும் “கொம்புகள்” வைக்கப்பட்டிருந்தன. இந்தப் பலிபீடம் செம்பினால் தகடு அடிக்கப்பட்டிருந்தது. செம்பினால் செய்யப்பட்ட ஒரு கம்பிவலை பலிபீடத்தின் விளிம்புக்கு “கீழே பாதி உயரத்தில்” செருகி வைக்கப்பட்டிருந்தது. செம்புக் கம்பிவலைக்குப் பக்கத்தில் நான்கு மூலைகளிலும் செம்பு வளையங்கள் பொருத்தப்பட்டிருந்தன. செம்புத் தகடு அடிக்கப்பட்ட வேல மரக் கம்புகளைச் செருகி, இந்தப் பலிபீடத்தைத் தூக்கிச் செல்வதற்கு இந்த வளையங்கள் பொருத்தப்பட்டதாகத் தெரிகிறது. அப்படியானால், பலிபீடத்தின் இரண்டு பக்கங்களிலும் செம்புக் கம்பிவலையைச் செருகுவதற்கான திறப்புகளும் அவற்றின் பக்கத்தில் வளையங்களும் இருந்திருக்க வேண்டும். இதைக் குறித்து அறிஞர்கள் மத்தியில் வித்தியாசமான கருத்துகள் இருக்கின்றன. அதில் எட்டு வளையங்கள் இருந்திருக்கலாம் என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். அவற்றில் நான்கு வளையங்கள், அதாவது கம்புகளைச் செருகி அதைத் தூக்கிக்கொண்டு போவதற்கான நான்கு வளையங்கள், பலிபீடத்தின் வெளிப் பக்கம் பொருத்தப்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறார்கள். சாம்பலை அள்ளுவதற்கான சட்டிகள் மற்றும் கரண்டிகள், மிருகங்களின் இரத்தத்தைப் பிடித்துவைப்பதற்கான கிண்ணங்கள், இறைச்சியை எடுப்பதற்கான முள்கரண்டிகள், தணல் அள்ளும் கரண்டிகள் ஆகியவை செம்பினால் செய்யப்பட்டிருந்தன.—யாத் 27:1-8; 38:1-7, 30; எண் 4:14.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-1-E பக். 36
வேல மரம்
பரந்துவிரிந்த கிளைகளையுடைய வேல மரத்தில் நீளமான நிறைய முட்கள் இருக்கும். இதன் கிளைகள், பக்கத்தில் இருக்கும் வேல மரக் கிளைகளோடு பின்னிப்பிணைந்து அடர்த்தியாகக் காணப்படும். அதனால்தான் பைபிளில் பெரும்பாலான இடங்களில் சித்தீம் என்று பன்மையில் சொல்லப்பட்டுள்ளது. வேல மரம் 6 முதல் 8 மீ. (20 முதல் 26 அடி) உயரத்திற்கு வளரும். ஆனால், பெரும்பாலும் பார்ப்பதற்கு புதர்ச் செடிப்போல் அடர்த்தியாக இருக்கும். இது இறகு போன்ற மென்மையான இலைகளையும் வாசனையான மஞ்சள் நிறப் பூக்களையும் கொண்டது. இதன் தடித்த காய்கள் பீன்ஸ்/பட்டாணி வகையைப் போன்று வளைந்து இருக்கும். உறுதியான இந்த மரத்தின் பட்டைகள் கறுப்பு நிறத்தில் சொரசொரப்பாக இருக்கும். அதனால் இந்த மரம் சீக்கிரத்தில் உளுத்துப்போகாது. இந்தக் காரணங்களாலும், வனாந்தரத்தில் இது அதிகமாக காணப்படுவதாலும் வழிபாட்டுக் கூடாரத்தையும் அதன் எல்லா பொருள்களையும் செய்வதற்கு வேல மரம் ஏற்றதாக இருந்தது. ஒப்பந்தப் பெட்டி (யாத் 25:10; 37:1), படையல் ரொட்டி வைப்பதற்கான மேஜை (யாத் 25:23; 37:10), பீடங்கள் (யாத் 27:1; 37:25; 38:1), அவற்றைத் தூக்கிச்செல்வதற்கான கம்புகள் (யாத் 25:13, 28; 27:6; 30:5; 37:4, 15, 28; 38:6), மறைப்புகளையும் திரைச்சீலைகளையும் தொங்கவிடுவதற்கான தூண்கள் (யாத் 26:32, 37; 36:36), செங்குத்தான சட்டங்கள் (யாத் 26:15; 36:20), அந்தச் சட்டங்களை இணைப்பதற்கான கம்புகள் (யாத் 26:26; 36:31) ஆகியவற்றைச் செய்வதற்கு இந்த மரங்கள் பயன்படுத்தப்பட்டன.
உங்களுக்குத் தெரியுமா?
பைபிள் காலங்களில் பயன்படுத்தப்பட்ட கண்ணாடிகள், இன்று நாம் பயன்படுத்துகிற கண்ணாடிகளைப் போன்றவை அல்ல. அப்போதெல்லாம், நன்றாகப் பளப்பளப்பாக்கப்பட்ட உலோகத்தைத்தான் கண்ணாடியாகப் பயன்படுத்தினார்கள். பெரும்பாலும் வெண்கலத்தைப் பயன்படுத்தினார்கள். செம்பு, வெள்ளி, தங்கம், அல்லது வெள்ளியும் தங்கமும் கலந்த உலோகத்தையும் பயன்படுத்தியிருக்கலாம். வழிபாட்டுக் கூடாரத்தை அமைப்பது சம்பந்தமான பதிவில்தான் முதல்முறையாக கண்ணாடிகளைப் பற்றி பைபிள் குறிப்பிடுகிறது. பரிசுத்தமான செம்புத் தொட்டியையும் அதன் தாங்கியையும் செய்வதற்கு பெண்கள் கண்ணாடிகளை நன்கொடையாகக் கொடுத்தார்கள். (யாத் 38:8) அந்தக் கண்ணாடிகளை உருக்கித்தான் அந்தத் தொட்டியைச் செய்திருப்பார்கள் என்று தெரிகிறது.