தேவ ஆவி சொல்வதைக் கேளுங்கள்!
‘ஆவி சபைகளுக்கு சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்.’—வெளிப்படுத்துதல் 3:22.
1, 2. வெளிப்படுத்துதல் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஏழு சபைகளுக்கு இயேசு சொன்ன செய்திகளில் என்ன ஆலோசனை திரும்பத் திரும்ப கொடுக்கப்பட்டிருக்கிறது?
வெ ளிப்படுத்துதல் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஏழு சபைகளுக்கு ஆவியின் வழிநடத்துதலால் இயேசு அறிவித்த வார்த்தைகளை யெகோவாவின் ஊழியர்கள் காதுகொடுத்துக் கேட்க வேண்டும். இச்செய்திகள் ஒவ்வொன்றிலும், ‘ஆவி சபைகளுக்கு சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்’ என்ற ஆலோசனை அடங்கியுள்ளது.—வெளிப்படுத்துதல் 2:7, 11, 17, 29; 3:6, 13, 22.
2 எபேசு, சிமிர்னா, பெர்கமு ஆகிய சபைகளின் தூதர்களுக்கு அதாவது கண்காணிகளுக்கு இயேசு சொன்ன செய்திகளை நாம் ஏற்கெனவே சிந்தித்தோம். அப்படியானால், மீதமுள்ள நான்கு சபைகளுக்கு பரிசுத்த ஆவியின் மூலமாக அவர் சொன்ன விஷயங்களிலிருந்து நாம் எவ்வாறு பயனடையலாம்?
தியத்தீராவில் இருந்த தூதனுக்கு
3. தியத்தீரா எங்கிருந்தது, எதற்கு அது பிரபலமாக விளங்கியது?
3 தியத்தீரா சபையை “தேவகுமாரன்” பாராட்டினார், அதோடு கண்டிக்கவும் செய்தார். (வெளிப்படுத்துதல் 2:18-29-ஐ வாசிக்கவும்.) மேற்கு ஆசியா மைனரிலுள்ள கடிஸ் (பண்டைய ஹர்மஸ்) என்ற நதியின் ஒரு கிளையோரமாக தியத்தீரா (தற்போது அகிஸார்) அமைந்திருந்தது. இந்நகரம் பல்வகை கைத்தொழில்களுக்கு புகழ்பெற்று விளங்கியது. சிறப்பு பெற்ற சிவப்பு அல்லது இரத்தாம்பர நிற சாயத்தை உண்டாக்குவதற்கு மஞ்சிட்டியின் (madder) வேரை சாயத்தொழிலாளிகள் பயன்படுத்தினார்கள். கிரீஸிலிருந்த பிலிப்பி பட்டணத்துக்கு பவுல் விஜயம் செய்த சமயத்தில் கிறிஸ்தவளாக மாறிய லீதியாள் என்ற பெண்மணி “தியத்தீரா ஊராளும் இரத்தாம்பரம் விற்கிறவளு”மாக இருந்தாள்.—அப்போஸ்தலர் 16:12-15.
4. எந்தக் காரணங்களுக்காக தியத்தீரா சபை பாராட்டப்பட்டது?
4 நற்செயல்கள், அன்பு, விசுவாசம், சகிப்புத்தன்மை, ஊழிய வேலை ஆகியவற்றிற்காக தியத்தீரா சபையை இயேசு பாராட்டினார். பார்க்கப்போனால், அந்தச் சபை “முன்பு செய்த கிரியைகளிலும் பின்பு செய்த கிரியைகள் அதிகமாயிரு”ந்தன. இதே விதமாக, நாமும் நல்ல பெயரை இதுவரை சம்பாதித்திருந்தாலும் ஒழுக்கநெறி சம்பந்தப்பட்டவற்றில் அசட்டையாக இருந்து விடக்கூடாது.
5-7. (அ) “யேசபேல் என்னும் ஸ்திரீ” யார், அவளுடைய செல்வாக்குக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்தது? (ஆ) தியத்தீரா சபைக்கு கிறிஸ்து சொன்ன செய்தி தேவபக்தியுள்ள பெண்களுக்கு எப்படி உதவுகிறது?
5 விக்கிரகாராதனை, பொய் போதனைகள், பாலின ஒழுக்கக்கேடு ஆகியவற்றிற்கு தியத்தீரா சபை இடமளித்திருந்தது. அவர்களுக்குள் “யேசபேல் என்னும் ஸ்திரீ” இருந்தாள்; அதாவது இஸ்ரவேலின் பத்துக் கோத்திர ராஜ்யத்தின் கெட்ட ராணியான யேசபேலைப் போன்ற குணம் படைத்த பெண்கள் நிறையபேர் அவர்கள் மத்தியில் இருந்திருக்கலாம். தியத்தீராவின் இந்தத் ‘தீர்க்கதரிசினிகள்,’ வியாபார சங்கத்தாரின் தெய்வங்களையும் தேவிகளையும் வணங்கும்படியும் விக்கிரகங்களுக்கு படையலிடப்பட்ட விழாக்களில் கலந்துகொள்ளும்படியும் கிறிஸ்தவர்களை தூண்ட முயற்சி செய்திருக்கலாம் என சில அறிஞர்கள் சொல்கிறார்கள். இப்படி இன்றுள்ள கிறிஸ்தவ சபையில் யாரும் தங்களையே தீர்க்கதரிசினிகளாக ஆக்கிக்கொண்டு மற்றவர்களை கைப்பாவைகளாக ஆட்டி வைக்க முயலாதிருப்பார்களாக!
6 கிறிஸ்து, ‘அந்த யேசபேலை கட்டில் கிடையாக்கி, அவளோடு விபசாரம் செய்தவர்கள் தங்களுடைய கிரியைகளை விட்டு மனந்திரும்பாவிட்டால் அவர்களையும் மிகுந்த உபத்திரவத்திலே தள்ளுவார்.’ அவளுடைய இத்தகைய விஷ போதனைகளுக்கும் செல்வாக்கிற்கும் கண்காணிகள் ஒருபோதும் அடிபணிந்து விடக்கூடாது; ஆன்மீக வேசித்தனத்திலோ சரீரப்பிரகாரமான வேசித்தனத்திலோ விக்கிரக வழிபாட்டிலோ ஈடுபட்டால்தான் “சாத்தானுடைய ஆழங்கள்” முழுக்க முழுக்க தீங்கானவை என்று புரிந்துகொள்ள முடியுமென எந்த கிறிஸ்தவரும் நினைக்கத் தேவையில்லை. இயேசுவின் எச்சரிக்கைக்கு செவிகொடுத்தால், ‘நமக்குள்ளதை பற்றிக்கொண்டிருப்போம்.’ அதோடு, பாவமும் நம்மை ஆட்டிப்படைக்காது. தேவபக்தியற்ற பழக்கவழக்கங்களையும் இச்சைகளையும் லட்சியங்களையும் விட்டொழித்ததால்தான் உயிர்த்தெழுப்பப்பட்ட அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் “ஜாதிகள் மேல் அதிகார”த்தை பெற்று, கிறிஸ்துவுடன் சேர்ந்து அவற்றை சுக்கு நூறாக நொறுக்குவார்கள். இன்றுள்ள சபைகள் அடையாளப்பூர்வ நட்சத்திரங்களை கொண்டிருக்கின்றன; அதோடு, அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் பரலோகத்திற்கு உயிர்த்தெழுப்பப்பட்ட பின்பு, “பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திர”மாகிய மணவாளன் இயேசு கிறிஸ்துவை பெறுவார்கள்.—வெளிப்படுத்துதல் 22:16.
7 விசுவாச துரோகத்தில் ஈடுபடும் பெண்களின் விஷ செல்வாக்கிற்கு தியத்தீரா சபை இடமளித்து விடக்கூடாதென எச்சரிக்கப்பட்டது. தேவ ஆவியின் உந்துதலால் கிறிஸ்து சொன்ன செய்தி, கடவுள் தங்களுக்கென்று நியமித்திருக்கும் ஸ்தானத்தில் நிலைத்திருப்பதற்கு தேவபக்தியுள்ள பெண்களுக்கு இன்று உதவுகிறது. ஆண்கள் மீது அதிகாரம் செலுத்த இப்பெண்கள் முயலுவதில்லை. அதோடு, ஆன்மீக அல்லது சரீர வேசித்தனத்தில் ஈடுபடும்படி அவர்களை வசீகரிப்பதுமில்லை. (1 தீமோத்தேயு 2:12) மாறாக, இப்படிப்பட்ட பெண்கள் நற்செயல்களிலும் ஊழியத்திலும் முன்மாதிரிகளாக திகழ்கிறார்கள், இவ்வாறு கடவுளுக்கு துதி சேர்க்கிறார்கள். (சங்கீதம் 68:11, NW; 1 பேதுரு 3:1-6) சுத்தமான போதனைகளையும், நடத்தையையும் காத்துக்கொண்டு, மதிப்புமிக்க ராஜ்ய சேவையை ஒரு சபை தொடர்ந்து செய்தால் கிறிஸ்து நியாயந்தீர்க்க வரும்போது அதற்கு தண்டனையை அல்ல, அருமையான ஆசீர்வாதங்களையே தருவார்.
சர்தையில் இருந்த தூதனுக்கு
8. (அ) சர்தை எங்கிருந்தது, அதைப் பற்றின சில விஷயங்கள் யாவை? (ஆ) சர்தையில் இருந்த சபைக்கு ஏன் உதவி தேவைப்பட்டது?
8 சர்தையில் இருந்த சபைக்கு உடனடி உதவி தேவைப்பட்டது; காரணம்? அது ஆவிக்குரிய விதத்தில் செத்திருந்தது. (வெளிப்படுத்துதல் 3:1-6-ஐ வாசிக்கவும்.) தியத்தீராவுக்கு தெற்கே ஏறக்குறைய 50 கிலோமீட்டர் தூரத்திலிருந்த சர்தை செழித்தோங்கிய பட்டணமாக இருந்தது. வணிகம், நிலவளம், கம்பளி ஆடைகள் கம்பளி ஜமுக்காளங்களின் உற்பத்தி ஆகியவற்றால் அங்கு செல்வம் கொழித்தது. ஒரு காலத்தில் சுமார் 50,000 பேர் அங்கே குடியிருந்தார்கள். பொ.ச.மு. முதல் நூற்றாண்டில் யூதர்களின் ஒரு பெரும் தொகுதி சர்தையில் இருந்ததாக சரித்திராசிரியர் ஜொசிஃபஸ் குறிப்பிட்டிருக்கிறார். ஒரு ஜெப ஆலயமும் எபேசுவின் தேவதையான அர்டிமெஸுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்த ஒரு கோவிலும் அந்தப் பட்டணத்தின் இடிபாடுகளில் காணப்படுகின்றன.
9. நம்முடைய ஊழியம் கடனுக்கு செய்யப்படுகிறதாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்?
9 சர்தையின் தூதனுக்கு கிறிஸ்து இவ்வாறு சொன்னார்: “உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், நீ உயிருள்ளவனென்று பெயர் கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய்.” நாம் ஆவிக்குரிய காரியங்களில் விழிப்புள்ளவர்கள் என்ற நற்பெயரை மட்டும் சம்பாதித்துவிட்டு, கிறிஸ்தவ சிலாக்கியங்களை அசட்டை செய்கிறவர்களாக இருந்தால், நம் ஊழிய வேலைகள் ஏதோ கடனுக்கு செய்யப்பட்டு வந்தால், அவை ஆவிக்குரிய விதத்தில் ‘சாகிறதற்கேதுவாகவும்’ இருந்தால் என்ன செய்வது? அப்படி இருந்தால், நாம் ராஜ்ய செய்தியை ‘கேட்டுப் பெற்றுக் கொண்ட விதத்தை நினைவுகூர’ வேண்டும்; அதோடு, பரிசுத்த சேவையில் நாம் எடுக்கும் முயற்சிகளை தீவிரப்படுத்த வேண்டும். கிறிஸ்தவ கூட்டங்களிலும் கண்டிப்பாக முழு இருதயத்தோடு பங்கெடுக்க ஆரம்பிக்க வேண்டும். (எபிரெயர் 10:24, 25) சர்தை சபையை கிறிஸ்து எச்சரித்தார்: “நீ விழித்திராவிட்டால், திருடனைப்போல் உன்மேல் வருவேன்; நான் உன்மேல் வரும் வேளையை அறியாதிருப்பாய்.” இந்த எச்சரிப்பு நம் நாளுக்கும் பொருந்துகிறதா? சீக்கிரத்தில் நாமும் கணக்கு கொடுக்க வேண்டியிருக்கும்.
10. சர்தை சபைக்கு ஒத்த ஒரு சூழ்நிலையின் மத்தியிலும், சில கிறிஸ்தவர்கள் எப்படி இருக்கலாம்?
10 சர்தை சபைக்கு ஒத்த ஒரு சூழ்நிலையின் மத்தியிலும், “தங்கள் வஸ்திரங்களை அசுசிப்படுத்தாத” சிலர் இருக்கலாம்; அவர்கள் ‘பாத்திரவான்களானபடியால் வெண் வஸ்திரந்தரித்து கிறிஸ்துவோடுகூட நடப்பார்கள்.’ அவர்கள் இவ்வுலகின் ஒழுக்க தராதரங்களாலும் மதங்களாலும் தங்களை கறைபடுத்திக் கொள்ளாமல் மாசற்றவர்களாக இருந்து தங்கள் கிறிஸ்தவ அடையாளத்தை காத்துக் கொள்கிறார்கள். (யாக்கோபு 1:27) ஆகவே, இயேசு ‘ஜீவபுஸ்தகத்திலிருந்து அவர்களுடைய பெயரை கிறுக்கிப் போடமாட்டார், அதற்கு பதிலாக பிதா முன்பாகவும் தேவதூதர்கள் முன்பாகவும் அவர்கள் பெயரை அறிக்கையிடுவார்.’ கிறிஸ்துவோடுகூட நடப்பதற்கு அபிஷேகம் செய்யப்பட்ட மணவாட்டி வகுப்பினர் தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டதால், அவர்கள் சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரத்தை தரித்துக்கொள்வார்கள்; அந்த மெல்லிய வஸ்திரம் தேவனுடைய பரிசுத்தவான்களின் நீதியுள்ள செயல்களை அடையாளப்படுத்துகிறது. (வெளிப்படுத்துதல் 19:8) ஆகவே, அருமையான பரலோக சிலாக்கியங்களைப் பெறும் எதிர்பார்ப்பே இவ்வுலகை ஜெயிப்பதற்கு அவர்களுக்கு உத்வேகத்தை அளிக்கிறது. பூமியில் நித்திய வாழ்க்கையை அனுபவிக்கப் போகிறவர்களுக்கும் ஆசீர்வாதங்கள் காத்திருக்கின்றன. அவர்களுடைய பெயர்களும் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன.
11. ஆன்மீக காரியங்களில் நாம் கண் அயர்வதைப் போல உணர்ந்தால் என்ன செய்ய வேண்டும்?
11 நம்மில் யாருமே சர்தை சபையிலிருந்த பரிதாபமான ஆன்மீக நிலையை அடைய விரும்ப மாட்டோம். ஆனாலும், ஆன்மீக காரியங்களில் நாம் மெல்ல மெல்ல கண் அயர்வதைப் போல உணர்ந்தால் என்ன செய்வது? நம் சொந்த நன்மைக்காக சடுதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருவேளை தேவபக்தியற்ற வழிகளில் செல்ல ஈர்க்கப்படும்போதோ கூட்டங்களையும் ஊழியத்தையும் அடிக்கடி தவறவிடும்போதோ நாம் யெகோவாவின் உதவிக்காக ஊக்கத்துடன் ஜெபிக்க வேண்டும். (பிலிப்பியர் 4:6, 7, 13) தினமும் பைபிளை வாசிப்பதும் வசனங்களை ஆழ்ந்து படிப்பதும் ‘உண்மையுள்ள விசாரணைக்காரன்’ கொடுக்கும் பிரசுரங்களை படிப்பதும் ஆன்மீக காரியங்களில் தொடர்ந்து விழிப்புள்ளவர்களாக இருப்பதற்கு நமக்கு உதவும். (லூக்கா 12:42-44) அவ்வாறு செய்தால், சர்தையில் கிறிஸ்துவின் அங்கீகாரத்தைப் பெற்ற சிலரைப் போல நாமும் இருப்போம், அத்துடன் சக விசுவாசிகளுக்கு உற்சாகத்தையும் அளிப்போம்.
பிலதெல்பியாவில் இருந்த தூதனுக்கு
12. பூர்வ பிலதெல்பியாவில் நிலவிய மத சூழலை எவ்வாறு விளக்குவீர்கள்?
12 பிலதெல்பியாவில் இருந்த சபையை இயேசு பாராட்டினார். (வெளிப்படுத்துதல் 3:7-13-ஐ வாசிக்கவும்.) மேற்கு ஆசியா மைனரில் திராட்சை ரச உற்பத்திக்கு மையமாக பிலதெல்பியா (இப்போது அலஷஹர்) கொடிகட்டிப் பறந்தது. சொல்லப்போனால், திராட்சை ரசத்தின் கடவுளாக கருதப்பட்ட டையனைசஸ் அங்கு முக்கிய தெய்வமாக வணங்கப்பட்டது. பிலதெல்பியாவில் இருந்த யூதர்கள், நியாயப்பிரமாண சட்டத்தின் சில பழக்கவழக்கங்களை விட்டுவிடாதிருக்கும்படி அல்லது மறுபடியும் கடைப்பிடிக்க ஆரம்பிக்கும்படி அங்கிருந்த யூத கிறிஸ்தவர்களை தூண்டினார்கள்; ஆனால் அவர்கள் முயற்சி தோல்வி கண்டது.
13. “தாவீதின் திறவுகோலை” கிறிஸ்து எவ்வாறு பயன்படுத்தியிருக்கிறார்?
13 கிறிஸ்துவிடம் ‘தாவீதின் திறவுகோல்’ இருக்கிறது; எனவே எல்லா ராஜ்ய அக்கறைகளும் விசுவாச குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. (ஏசாயா 22:22; லூக்கா 1:32) இயேசு அந்தத் திறவுகோலைப் பயன்படுத்தி பூர்வ பிலதெல்பியாவிலும் மற்ற இடங்களிலும் இருந்த கிறிஸ்தவர்களுக்கு ராஜ்யம் சம்பந்தப்பட்ட பொறுப்புகளையும் வாய்ப்புகளையும் திறந்து வைத்தார். எந்த எதிரியாலும் அடைக்க முடியாத, ராஜ்ய பிரசங்க வேலைக்கு வழிவிடும் ‘ஒரு பெரிய கதவை’ 1919 முதற்கொண்டு ‘உண்மையுள்ள விசாரணைக்காரனுக்காக’ அவர் திறந்து வைத்திருக்கிறார். (1 கொரிந்தியர் 16:9; கொலோசெயர் 4:2-4) உண்மைதான், ஆவிக்குரிய இஸ்ரவேலர் அல்லாத ‘சாத்தானுடைய கூட்டத்தாருக்கு’ ராஜ்ய சிலாக்கியங்களுக்கான கதவு அடைக்கப்பட்டே இருக்கிறது.
14. (அ) பிலதெல்பியா சபைக்கு இயேசு என்ன வாக்குறுதி அளித்தார்? (ஆ) ‘சோதனைக் காலத்தில்’ விழுந்து விடாதிருக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
14 பூர்வ பிலதெல்பியா சபையிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு இந்த வாக்குறுதியை இயேசு அளித்தார்: “என் பொறுமையை [“சகிப்புத்தன்மையை,” NW] குறித்துச் சொல்லிய வசனத்தை நீ காத்துக் கொண்டபடியினால், பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிக்கும்படியாகப் பூச்சக்கரத்தின் மேலெங்கும் வரப்போகிற சோதனை காலத்திற்குத் தப்பும்படி நானும் உன்னைக் காப்பேன்.” இயேசு காண்பித்ததைப் போன்ற பொறுமை [“சகிப்புத்தன்மை,” NW] பிரசங்க வேலைக்கு தேவை. அவர் தம் எதிரியிடம் ஒருபோதும் பணிந்து போகவில்லை, மாறாக எப்போதும் தம் பிதாவின் சித்தத்தையே செய்து வந்தார். அதன் காரணமாக, உயிர்த்தெழுப்பப்பட்டு பரலோகத்தில் சாவாமையுள்ள வாழ்க்கையைப் பெற்றர். நாமும் யெகோவாவை மட்டுமே வணங்கும் திடதீர்மானத்துடன் நற்செய்தியை பிரசங்கித்து ராஜ்யத்தை ஆதரித்தால் தற்போதைய ‘சோதனைக் காலத்தில்’ விழுந்துவிடாதபடி காக்கப்படுவோம். அப்படிப்பட்ட ராஜ்ய அக்கறைகளை முன்னேற்றுவிக்க பாடுபடுவதன் மூலம் கிறிஸ்துவிடமிருந்து பெற்றுக்கொண்டதை நாம் தொடர்ந்து ‘பற்றிக்கொள்வோம்.’ இப்படி செய்யும்போது அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் விலைமதிக்க முடியாத பரலோக கிரீடத்தை பெறுவார்கள்; அவர்களுடைய உண்மைப் பற்றுறுதியுள்ள தோழர்களோ பூமியில் நித்திய வாழ்க்கையை அடைவார்கள்.
15. ‘கடவுளுடைய ஆலயத்தில் தூண்களாக’ இருக்கப் போகிறவர்களிடம் என்ன எதிர்பார்க்கப்படுகிறது?
15 கிறிஸ்து மேலுமாக சொல்கிறார்: “ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன், . . . என் தேவனுடைய நாமத்தையும் என் தேவனால் பரலோகத்திலிருந்திறங்கி வருகிற புதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும், என் புதிய நாமத்தையும் அவன் மேல் எழுதுவேன்.” அபிஷேகம் செய்யப்பட்ட கண்காணிகள் உண்மை வணக்கத்தை ஆதரிக்க வேண்டும். தொடர்ந்து ‘புதிய எருசலேமின்’ அங்கத்தினர்களாக இருப்பதற்கு அவர்கள் கடவுளுடைய ராஜ்யத்தைப் பிரசங்கிக்க வேண்டும், அத்துடன் ஆவிக்குரிய சுத்தத்தைக் காத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், மகிமை பொருந்திய பரலோக ஆலயத்தின் தூண்களாகவும், தேவனுடைய நகரத்தின் பெயரைத் தரித்து அதன் பரலோக குடிமக்களாகவும், கிறிஸ்துவின் பெயரை ஏற்றிருக்கும் அவருடைய மணவாட்டியாகவும் இருப்பதற்கு இவை அத்தியாவசியம். அதோடு, அவர்கள் கண்டிப்பாக, ‘ஆவி சபைகளுக்கு சொல்லுகிறதைக் கேட்பதற்கு’ காதுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும்.
லவோதிக்கேயாவில் இருந்த தூதனுக்கு
16. லவோதிக்கேயாவைப் பற்றிய சில உண்மைகள் யாவை?
16 மெத்தனமாக இருந்த லவோதிக்கேயா சபையை கிறிஸ்து கண்டித்தார். (வெளிப்படுத்துதல் 3:14-22-ஐ வாசிக்கவும்.) எபேசுவுக்கு கிழக்கே சுமார் 150 கிலோமீட்டர் தூரத்திலிருந்த லைக்யுஸ் நதியின் வளமான பள்ளத்தாக்கிலுள்ள முக்கிய வணிக மார்க்கத்தின் சந்திப்பில் லவோதிக்கேயா அமைந்திருந்தது; அது சீரும் சிறப்புமிக்க தொழில் நகரமாகவும் பணப்புழக்கத்தின் மையமாகவும் திகழ்ந்தது. அங்கே உற்பத்தி செய்யப்பட்ட கருப்பு நிற கம்பளி ஆடைகளுக்கு எங்கும் மவுசு இருந்தது. பிரபலமான ஒரு மருத்துவ கல்லூரி அங்கு இருந்ததால் பிரிஜியத் தூள் என்ற கண் மருந்து ஒருவேளை லவோதிக்கேயாவில் தயாரிக்கப்பட்டிருக்கலாம். மருத்துவத்தின் கடவுளாக கருதப்பட்ட அஸ்க்லீப்பியஸ் அந்நகரத்தின் முக்கிய தெய்வமாக இருந்தது. லவோதிக்கேயாவில் கணிசமானளவு யூதர்கள் இருந்ததாகத் தெரிகிறது, அவர்களில் சிலர் செல்வச் சீமான்களாக இருந்திருக்கலாம்.
17. லவோதிக்கேயர்கள் எதற்காக கண்டிக்கப்பட்டனர்?
17 ‘உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கும்’ இயேசு அதிகாரம் பெற்றவராக லவோதிக்கேயா சபையிடம் அதன் ‘தூதன்’ மூலம் பேசினார். (கொலோசெயர் 1:13-16) லவோதிக்கேயர்கள் ஆவிக்குரிய காரியங்களில் ‘குளிருமில்லாமல் அனலுமில்லாமல்’ இருந்ததற்கு கண்டிக்கப்பட்டனர். இப்படி அவர்கள் வெதுவெதுப்பாக இருந்தபடியால் இயேசு அவர்களை வாயினின்று வாந்தி பண்ணவிருந்தார். இந்த உவமையை புரிந்துகொள்வது அவர்களுக்கு அப்படியொன்றும் கடினமாக இருந்திருக்காது. எராப்போலியாவுக்கு அருகில் வெந்நீர் ஊற்றுகள் இருந்தன, ஆனால் கொலோசெயில் குளிர்ந்த தண்ணீர் இருந்தது. வெகு தூரத்திலிருந்து குழாய்கள் மூலம் லவோதிக்கேயாவிற்கு தண்ணீர் கொண்டு வர வேண்டியிருந்ததால், அது இங்கு வந்து சேருவதற்குள் ஒருவேளை வெதுவெதுப்பாகியிருக்கலாம். கொஞ்ச தூரத்திற்கு அந்தத் தண்ணீர் ஒரு கால்வாய் வழியாக விடப்பட்டிருந்தது. லவோதிக்கேயாவுக்கு அருகே ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட கற்பாளங்கள் வழியாக அது ஓடியது.
18, 19. லவோதிக்கேயர்களைப் போன்று இன்றுள்ள கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு உதவலாம்?
18 லவோதிக்கேயர்களைப் போன்று இன்றுள்ள சிலர் அனலோடு ஊக்கமளிப்பவர்களாகவும் இல்லை, ஜில்லென்று புத்துணர்ச்சி அளிப்பவர்களாகவும் இல்லை. ஆகவே, வெதுவெதுப்பான தண்ணீர் வாயிலிருந்து துப்பப்படுவதைப் போல அவர்கள் துப்பப்படுவார்கள்! அவர்கள் இயேசுவின் சார்பாக பேசும் பிரதிநிதிகளாக, அதாவது ‘கிறிஸ்துவின்’ அபிஷேகம் செய்யப்பட்ட ‘ஸ்தானாபதிகளாக’ ஆவதை அவர் விரும்பவில்லை. (2 கொரிந்தியர் 5:20) அவர்கள் மனந்திரும்பாவிட்டால் ராஜ்யத்தை அறிவிக்கும் சிலாக்கியத்தையே இழந்து விடுவார்கள். அந்த லவோதிக்கேயர்கள் உலகப்பிரகாரமான பொன்னையும் பொருளையும்தான் நாடித்தேடினார்கள்; ஆனால், தாங்கள் ‘நிர்ப்பாக்கியமானவர்கள், பரிதபிக்கப்படத்தக்கவர்கள், தரித்திரர்கள், குருடர்கள், நிர்வாணிகள் என்பதையெல்லாம் அறியாமல்’ இருந்தார்கள். இன்று அவர்களைப் போன்றவர்கள் தங்கள் ஆவிக்குரிய தரித்திரத்தையும் குருட்டுத்தன்மையையும் நிர்வாணத்தையும் அறவே நீக்கிவிட வேண்டுமானால், சோதிக்கப்பட்ட விசுவாசமாகிய “நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னை”யும், நீதியாகிய “வெண்வஸ்திரங்களை”யும், ஆன்மீக ஒளியை அதிகரிக்கும் ‘கண் மருந்தையும்’ (NW) கிறிஸ்துவிடமிருந்து வாங்கிக்கொள்ள வேண்டும். கிறிஸ்தவ கண்காணிகள், அப்படிப்பட்டவர்களில் ஆன்மீக தேவைக்கான உணர்வை தட்டியெழுப்புவதன் மூலம் அவர்களை “விசுவாசத்தில் ஐசுவரியவான்களாக” ஆக்குவதில் சந்தோஷம் காண்கிறார்கள். (யாக்கோபு 2:5; மத்தேயு 5:3, NW) மேலும், ஆவிக்குரிய ‘கண் மருந்தை’ தடவுவதற்கு, அதாவது இயேசுவின் போதனைகளையும் ஆலோசனைகளையும் முன்மாதிரியையும் மனோபாவத்தையும் உளமாற ஏற்று, அதைப் பின்பற்றுவதற்கு கண்காணிகள் அவர்களுக்கு உதவ வேண்டும். இது ‘மாம்சத்தின் இச்சையையும், கண்களின் இச்சையையும், ஜீவனத்தின் பெருமையையும்’ முறித்துவிடும் ஒரு மருந்தாகும்.—1 யோவான் 2:15-17.
19 யாரையெல்லாம் இயேசு நேசிக்கிறாரோ அவர்களையெல்லாம் அவர் கடிந்துகொண்டு சிட்சிக்கிறார். அவர் தலைமையில் செயல்படும் கண்காணிகளும் கனிவோடு அவ்வாறே செய்ய வேண்டும். (அப்போஸ்தலர் 20:28, 29) லவோதிக்கேயர்கள் ‘ஆர்வம் கொண்டு மனந்திரும்பி’ (NW) தங்கள் சிந்தையிலும் வாழ்க்கைப் பாணியிலும் மாற்றங்கள் செய்ய வேண்டியிருந்தது. ஆனால், நம்மில் சிலர் கடவுளுடைய பரிசுத்த சேவைக்கு அதிக முக்கியத்துவம் தராத வாழ்க்கை போக்கிலே மூழ்கிவிட்டிருக்கிறோமா? அப்படியானால், ‘இயேசுவிடமிருந்து கண்மருந்தை வாங்கிக் கொள்வோமாக.’ அப்போதுதான், ஆர்வத்துடன் ராஜ்யத்தை முதலாவதாக தேடுவதன் முக்கியத்துவத்தை தெளிவாக காண முடியும்.—மத்தேயு 6:33.
20, 21. இன்று இயேசு கதவைத் ‘தட்டும்போது’ யார் உண்மையில் திறக்கிறார்கள், அவர்களுடைய எதிர்கால நம்பிக்கைகள் யாவை?
20 கிறிஸ்து சொன்னார், “இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம் பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம் பண்ணுவான்.” உணவு அருந்துகையில் பெரும்பாலும் இயேசு ஆவிக்குரிய அறிவுரைகளை அளித்தார். (லூக்கா 5:29-39; 7:36-50; 14:1-24) இன்று லவோதிக்கேயாவைப் போன்றிருக்கும் சபையின் கதவை அவர் தட்டுகிறார். தட்டும் சத்தத்தைக் கேட்டு அந்தச் சபையார் கதவைத் திறப்பார்களா, பழையபடி அவரிடம் அன்பு காட்டுவார்களா, தங்களிடத்திற்கு அவரை வரவேற்பார்களா, தங்களுக்குக் கற்றுத் தர அவரை அனுமதிப்பார்களா? ஆம் என்பது பதிலானால், அவர்களுடன் கிறிஸ்து விருந்துண்பார், அதன் பலனாக ஆவிக்குரிய விதத்தில் அவர்கள் பெரிதும் நன்மையடைவார்கள்.
21 இன்றைய ‘வேறே ஆடுகள்’ அடையாள அர்த்தத்தில் இயேசுவை உள்ளே அனுமதித்துக் கொண்டிருக்கிறார்கள்; இந்தச் செயலே அவர்களை நித்திய ஜீவனுக்கு இட்டுச் செல்லும். (யோவான் 10:16; மத்தேயு 25:34-40, 46) ‘கிறிஸ்து ஜெயங்கொண்டு தம் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடுகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்பவர்கள் தம்முடைய சிங்காசனத்தில் தம்மோடேகூட உட்காரும்’ சிலாக்கியத்தை கிறிஸ்து அருளுவார். ஆம், ஜெயங்கொள்ளும் அபிஷேகம் செய்யப்பட்ட ஒவ்வொருவருக்கும், பரலோகத்தில் தம் பிதாவின் வலது பாரிசத்திலுள்ள தம் சிங்காசனத்திலே அமரும் மகத்தான பரிசை கொடுப்பதாக இயேசு வாக்குறுதி அளிக்கிறார். ஜெயங்கொள்ளும் வேறே ஆடுகளோ அந்த ராஜ்ய ஆட்சியில் பூமியிலே அருமையான இடத்தில் வாழ்வதற்காக ஆவலுடன் எதிர் நோக்கியிருக்கிறார்கள்.
நம் அனைவருக்கும் படிப்பினை
22, 23. (அ) ஏழு சபைகளுக்கு கொடுக்கப்பட்ட இயேசுவின் வார்த்தைகளிலிருந்து எல்லா கிறிஸ்தவர்களுமே எவ்வாறு நன்மையடையலாம்? (ஆ) நாம் என்ன தீர்மானத்துடன் இருக்க வேண்டும்?
22 ஆசியா மைனரில் இருந்த ஏழு சபைகளுக்கு கொடுக்கப்பட்ட இயேசுவின் வார்த்தைகளிலிருந்து எல்லா கிறிஸ்தவர்களுமே பெருமளவு நன்மையடையலாம் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது. உதாரணத்திற்கு, கிறிஸ்து ஏற்ற சமயங்களில் பாராட்டியதை மனதில் வைத்து, அன்பான கிறிஸ்தவ மூப்பர்களும் ஆவிக்குரிய காரியங்களில் நன்கு செயல்படும் தனி நபர்களையும் சபைகளையும் பாராட்டும்படி தூண்டப்படுகிறார்கள். சக விசுவாசிகளுக்கு பலவீனங்கள் இருந்தால் வசனங்களில் காணப்படும் புத்திமதியைப் பின்பற்ற மூப்பர்கள் அவர்களுக்கு உதவுகிறார்கள். சொல்லப்போனால், நாம் எல்லாருமே ஏழு சபைகளுக்கு கிறிஸ்து கொடுத்த ஆலோசனைகளின் பல்வேறு அம்சங்களிலிருந்து தொடர்ந்து பயனடையலாம்; ஆனால் ஊக்கமான ஜெபத்துடனும் உடனடியாகவும் அவற்றை கடைப்பிடிக்கும்போதுதான் நாம் அவற்றிலிருந்து பயனடைய முடியும்.a
23 இந்தக் கடைசி நாட்கள், மெத்தனமாக இருப்பதற்கும் பொருளாசைக்கும் பெயரளவில் மட்டுமே கடவுளுக்கு சேவை செய்வதற்குமான சமயமல்ல. ஆகவே, இயேசுவினால் அதனதனிடத்தில் தக்க வைக்கப்படும் பொன் குத்துவிளக்குகளைப் போல எல்லா சபைகளுமே பிரகாசமாய் ஜொலித்துக் கொண்டே இருக்கட்டும். உண்மைக் கிறிஸ்தவர்களான நாம் கிறிஸ்து பேசுகையில் தொடர்ந்து கவனம் செலுத்தி, தேவ ஆவி சொல்வதையெல்லாம் கேட்க தீர்மானமாய் இருப்போமாக, அப்படிச் செய்தால், யெகோவாவை மகிமைப்படுத்தும்படி ஒளி ஏந்திச் செல்வோராக நிரந்தர சந்தோஷத்தை அனுபவிப்போம்.
[அடிக்குறிப்பு]
a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது! என்ற புத்தகத்தில் 7 முதல் 13 அதிகாரங்களில் வெளிப்படுத்துதல் 2:1–3:22 வரையான வசனங்கள் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளன.
உங்கள் பதிலென்ன?
• “யேசபேல் என்னும் ஸ்திரீ” யார், தேவபக்தியுள்ள பெண்கள் ஏன் அவளைப் போல் நடந்துகொள்வதில்லை?
• சர்தை சபையில் என்ன நிலைமை இருந்தது, அங்கிருந்த அநேக கிறிஸ்தவர்களைப் போல் நாம் ஆகாதிருக்க என்ன செய்யலாம்?
• பிலதெல்பியா சபைக்கு இயேசு என்ன வாக்குறுதிகளைக் கொடுத்தார், அவை இன்று எவ்வாறு பொருந்துகின்றன?
• லவோதிக்கேயர்கள் எதற்காக கண்டிக்கப்பட்டனர், ஆனால் ஆர்வமுள்ள கிறிஸ்தவர்களுக்கு என்ன எதிர்கால நம்பிக்கைகள் உள்ளன?
[பக்கம் 16-ன் படம்]
“யேசபேல் என்னும் ஸ்திரீ”யின் தீய வழிகளை அறவே ஒதுக்கிட வேண்டும்
[பக்கம் 18-ன் படங்கள்]
இயேசு தம்மை பின்பற்றுபவர்களுக்கு ராஜ்ய சிலாக்கியங்களைப் பெற்றுக்கொள்ள வழிநடத்தும் ‘ஒரு பெரிய கதவை’ திறந்து வைத்திருக்கிறார்
[பக்கம் 20-ன் படம்]
நீங்கள் இயேசுவை வரவேற்று, அவர் பேசுவதை கேட்கிறீர்களா?