ஆவி சபைகளுக்குச் சொல்வதைக் கேளுங்கள்
“ஆவி சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்.” —வெளிப்படுத்துதல் 3:22.
தேசத்திலுள்ள மக்கள் அளவுகடந்த சுயாதீனத்தைக் கொண்டிருந்தனர், ஆனால் போதுமான மகிழ்ச்சி இல்லை என்று சில ஆண்டுகளுக்கு முன்பு ஐக்கிய மாகாணங்களிலுள்ள ஒரு சமுதாய ஆய்வு நூலர் கூறினார். “மகிழ்ச்சி தங்களிடமிருந்து தப்பிச்சென்றுவிட்டதை மக்கள் காண்கின்றனர். தங்களுக்கு வாக்களித்துக்கொண்ட பரதீஸ் வெறுமையாகத் தோன்றுகிறது,” என்று தொடர்ந்து கூறினார். இதைக் கவனிக்கும்போது, வெளிப்படுத்துதல் 1:3-லுள்ள அப்போஸ்தலனாகிய யோவானின் வார்த்தைகள் நற்செய்தியாக இருக்கிறது, ஏனென்றால் நாம் மகிழ்ச்சியை எவ்விதம் கண்டடையலாம் என்று அவன் கூறுகிறான்: “இந்தத் தீர்க்கதரிசன வார்த்தைகளைச் சப்தமாய் வாசிக்கிறவனும், கேட்கிறவனும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்கிறவனும் சந்தோஷமுள்ளவன்; குறித்த காலம் சமீபமாயிருக்கிறது.” அவன் குறிப்பிடும் “தீர்க்கதரிசனம்” வெளிப்படுத்துதல் புத்தகத்தில் பதிவுசெய்யப்பட்டிருக்கும் தீர்க்கதரிசனமாகும். “குறித்த காலம்,” இந்த வெளிப்படுத்துதல் தீர்க்கதரிசனம் நிறைவேற்றமடைய வேண்டிய காலமாகும். யோவானின் வார்த்தைகள் நமக்கு ஆழ்ந்த அர்த்தத்தைக் கொண்டிருக்கின்றன.
2 வெளிப்படுத்துதல் புத்தகத்தை எழுதுவதற்கு 60 ஆண்டுகளுக்கு முன்பு, அபிஷேகம்பண்ணப்பட்ட கிறிஸ்தவ சபை ஸ்தாபிக்கப்பட்ட சமயமாகிய பெந்தெகொஸ்தே நாளில் யோவான் அங்கு இருந்தான். இப்பொழுது, பொ.ச. 96-ல், அந்தச் சபை அதன் ஆரம்ப உறுப்பினர் எண்ணிக்கையாகிய 120-லிருந்து ஒரு பெரிய அகில உலக அமைப்பாக வளர்ந்திருக்கிறது. ஆனால் பிரச்னைகள் இருந்திருக்கின்றன. இயேசு, பவுல், பேதுரு ஆகியவர்கள் எச்சரித்திருந்த விதமாக விசுவாச துரோகங்களும் பிரிவினைகளும் தோன்ற ஆரம்பித்ததால், எதிர்காலம் என்னவாக இருக்குமோ என்று யோவான் யோசனைசெய்திருப்பான்.—மத்தேயு 13:24–30, 36–43; அப்போஸ்தலர் 20:29, 30; 2 பேதுரு 2:1–3.
3 “சீக்கிரத்தில் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு, தேவன் இயேசு கிறிஸ்துவுக்கு ஒப்புவித்ததும், இவர் . . . வெளிப்படுத்தினதுமான விசேஷத்தை”ப் பெற்றுக் கொண்டபோது அவனுடைய மகிழ்ச்சியைக் கற்பனைச் செய்துபாருங்கள். (வெளிப்படுத்துதல் 1:1) யெகோவாவின் நோக்கங்கள் நிறைவேற்றம் அடையும், விசுவாசமுள்ள கிறிஸ்தவர்களின் சகிப்புத்தன்மை ஆச்சரியமான விதத்தில் பலனளிக்கப்படும் என்பதை யோவான் கண்டான். அவன் இயேசுவிடமிருந்து ஏழு சபைகளுக்குமான செய்திகளையும் பெற்றான்; இவை இயேசு தம்முடைய ராஜ்ய மகிமையில் வருவதற்கு முன்பு கிறிஸ்தவர்களுக்குக் கொடுத்த அவருடைய கடைசி நேரடியான ஆலோசனைகளாக இருந்தன.
ஏழு சபைகள்
4 அபிஷேகம்பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களாலான ஏழு சபைகளும் ஏழு குத்துவிளக்குகளாகப் பிரதிநிதித்துவம் செய்யப்பட்டன; அவற்றிலிருந்த அபிஷேகம்பண்ணப்பட்ட மூப்பர்கள் கிறிஸ்துவின் வலது கையிலிருந்த ஏழு நட்சத்திரங்களாவர். (வெளிப்படுத்துதல் 1:12, 16) இந்த வெளிப்படையான காட்சியின் மூலம், உண்மையுள்ள கிறிஸ்தவ சபைகள் ஒளிவிளக்காய், இருண்ட இவ்வுலகில் ஒளியேற்றப்பட்ட குத்துவிளக்குகளாய் இருக்க வேண்டும் என்பதை யோவான் காண முடிந்தது. (மத்தேயு 5:14–16) இயேசு மூப்பர்களைத் தம்முடைய வலது கரத்தில் ஏந்தியிருப்பது, தான் மூப்பர்களை முன்னின்று வழிநடத்துகிறார், அவர்களைக் கண்காணிக்கிறார் என்பதைக் காண்பித்தது.
5 இயேசு யோவானிடம் பின்வருமாறு சொல்லுகிறார்: “நீ காண்கிறதை ஒரு புஸ்தகத்தில் எழுதி, ஆசியாவிலிருக்கிற எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா என்னும் பட்டணங்களிலுள்ள ஏழு சபைகளுக்கும் அனுப்பு.” (வெளிப்படுத்துதல் 1:11) இந்தச் சபைகள் யோவானின் நாட்களில் உண்மையிலேயே இருந்தவை, எனவே யோவான் வெளிப்படுத்துதலை எழுதி முடித்த போது, அந்த ஒவ்வொரு சபையும் ஒரு நகலைப் பெற்றது என்பதில் நாம் நிச்சயமாயிருக்கலாம். ஆனால் ஹேஸ்டிங்ஸின் பைபிள் அகராதி (Dictionary of the Bible) வெளிப்படுத்துதல் குறித்து என்ன குறிப்பிடுகிறது என்பதைக் கவனியுங்கள்: “இரண்டாவது நூற்றாண்டிலே புதிய ஏற்பாட்டில் வேறு எந்தப் புத்தகமும் இவ்வளவு நன்றாக சான்றளிக்கப்பட்டதாயில்லை.” வெளிப்படுத்துதல் புத்தகம் ஏழு சபைகளிலுள்ள கிறிஸ்தவர்களால் மட்டும் அறியப்பட்டதும் வாசிக்கப்பட்டதுமாயில்லை, ஆனால் தீர்க்கதரிசன வார்த்தைகளைப் படிக்க விரும்பிய அநேகராலும் அறியப்பட்டதும் வாசிக்கப்பட்டதுமாயிருந்தது என்று அர்த்தங்கொள்கிறது. ஆம், இயேசுவின் ஆலோசனை அபிஷேகம்பண்ணப்பட்ட எல்லா கிறிஸ்தவர்களுக்கும் உரியதாக இருந்தது.
6 ஆனால் ஏழு சபைகளுக்கான இந்தச் செய்திகள் பேரளவான பொருத்தமுடையவையாக இருக்கின்றன. வெளிப்படுத்துதல் 1:10-ல் யோவான் சொல்லுகிறான்: “ஆவியினால் ஏவப்பட்டவனாய் நான் கர்த்தருடைய நாளில் இருக்கலானேன்.” (NW) வெளிப்படுத்துதலைப் புரிந்துகொள்வதற்கு இந்த வசனம் திறவுகோலாக இருக்கிறது. இது அடிப்படையில் “கர்த்தருடைய நாளுக்குப்” பொருந்துவதாய் இருக்கிறது, இது 1914-ல் இயேசு அரசரான போது ஆரம்பமானது. ஏழு சபைகளுக்கு இயேசு கொடுத்த செய்திகள் இந்தத் தெளிவை உறுதிப்படுத்துகிறது. “நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வருகிறேன்,” என்று பெர்கமு சபைக்குச் சொல்லப்பட்ட வார்த்தைகளுக்கு ஒப்பான கூற்றுகளை அவற்றில் காண்கிறோம். (வெளிப்படுத்துதல் 2:16; 3:3, 11) பொ.ச. 96-க்குப் பின்பு 1914-ல் இயேசு அரசராக முடிசூட்டப்படும் வரை அவர் குறிப்பிடத்தக்க எந்தவிதத்திலும் வரவில்லை. (அப்போஸ்தலர் 1:9–11) பின்பு மல்கியா 3:1-ன் நிறைவேற்றமாக அவர் 1918-ல் திரும்பவும் ‘வந்தார்,’ முதலாவது தேவனுடைய வீட்டாரை நியாயந்தீர்க்க அவர் யெகோவாவின் ஆலயத்துக்கு வந்தார். (1 பேதுரு 4:17) அவர் சமீப எதிர்காலத்தில் இன்னொரு முறை ‘வருவார்,’ அப்பொழுது அவர் “தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள ஆக்கினையைச் செலுத்துவார்.”—2 தெசலோனிக்கேயர் 1:7, 8; மத்தேயு 24:42–44.
7 இதை மனதிற் கொண்டு, அந்த ஏழு சபைகளும், 1914-க்குப் பின்னால் அபிஷேகம்பண்ணப்பட்டவர்களின் எல்லா சபைகளுக்கும் படமாக இருக்கிறது என்றும், அந்த ஏழு நட்சத்திரங்களும் அந்தச் சபைகளிலிருக்கும் அபிஷேகம்பண்ணப்பட்ட எல்லா மூப்பர்களையும் பிரதிநிதித்துவம் செய்கிறது என்றும் அறியவருகிறோம். மேலும், இதன் தொடராக, “வேறே ஆடுகளைச்” சேர்ந்த மூப்பர்களுங்கூட இயேசுவின் வலது கையின் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றனர். (யோவான் 10:16) மற்றும் ஏழு சபைகளுக்குக் கொடுக்கப்பட்ட ஆலோசனை, நியமத்தின் அடிப்படையில், இன்று உலக முழுவதிலுமுள்ள கடவுளுடைய மக்களின் சபைகளுக்குப் பொருந்துகிறது. இதில் பூமிக்குரிய நம்பிக்கையுடைய கிறிஸ்தவர்களாலான சபைகளும் அடங்குகின்றன.
8 இயேசு 1918-ல் கிறிஸ்தவர்களெனப்பட்டவர்களை பார்வையிட வந்தபோது, தீர்க்கதரிசனத்தின் வார்த்தைகளைக் கடைபிடிப்பதில் கடினமாக உழைத்துக்கொண்டிருந்த அபிஷேகம்பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களை அவர் கவனித்தார். 1870-கள் முதல் அவர்கள் 1914-ன் முக்கியத்துவத்தைக் குறித்து மக்களை எச்சரித்துவந்தனர். அவர்கள் முதல் உலக மகா யுத்தத்தின்போது கிறிஸ்தவமண்டலத்தின் கரங்களில் அதிகமாகத் துன்பமனுபவித்தனர். 1918-ல் காவற்கோபுர சங்கத்தின் தலைமை அதிகாரிகள் பொய்க் குற்றச்சாட்டின்கீழ் சிறையில் போடப்பட்ட போது, அவர்களுடைய வேலை ஏறக்குறைய நின்றுவிட்டது. ஆனால் அந்தச் சமயத்தில் அவர்களுக்கு ஏற்பட்ட இந்த அனுபவம் வெளிப்படுத்துதலிலுள்ள தீர்க்கதரிசனங்களுக்கு இசைவாயிருந்தன. மற்றும் ஏழு சபைகளுக்கு இயேசு சொன்ன வார்த்தைகளுக்குச் செவிகொடுக்க அவர்கள் தீர்மானமாயிருந்ததுதானே, அவர்களை இந்த இருள்சூழ்ந்த உலகில் ஒளிதாங்கிய கிறிஸ்தவர்களாக அடையாளங்காட்டியது என்பதில் சந்தேகமில்லை. இன்று, வெளிப்படுத்துதலின் பல பகுதிகளின் நிறைவேற்றத்தைக் காணவும் அதில் பங்குகொள்ளவும் இந்த மீதியானவர்கள் யோவான் வகுப்பினராக இருக்கின்றனர்.
புத்திமதியும் போற்றுதலும்
9 வெளிப்படுத்துதல் 3:8-ல் இயேசு பிலதெல்பியா சபைக்குச் சொன்னதாவது: “உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; உனக்காகக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே, அந்தத் திறந்த வாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான்.” தெளிவாகவே, பிலதெல்பியாவிலுள்ள கிறிஸ்தவர்கள் சுறுசுறுப்பாக இருந்து வந்தார்கள், இப்பொழுதோ அவர்களுக்கு வாய்ப்பு என்னும் கதவு திறக்கப்படுவதாயிருந்தது.
10 இந்தச் செய்தி இக்காலத்தில் உண்மையாக இருப்பது கடவுளுடைய மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. 1918-ல் அவர்களுக்கிருந்த சோதனையான அனுபவங்களுக்குப் பின்பு, அவர்கள் ஆவிக்குரிய பிரகாரமாய்த் திரும்ப நிலைநாட்டப்பட்டனர், மேலும் 1919-ல் இயேசு அவர்களுக்கு வாய்ப்பு என்னும் கதவைத் திறந்தார். சகல தேசங்களுக்கும் ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கிக்கும் வேலையைச் செய்வதற்கு அவர்கள் ஒப்புக்கொண்ட போது அவர்கள் அந்தக் கதவு வழியாய்ப் பிரவேசித்தார்கள். அவர்கள் மீது யெகோவாவின் ஆவி இருந்ததால் இந்த வேலையை எதுவுமே தடை செய்ய முடியவில்லை. இயேசு வந்திருத்தலுக்கு அமையும் அடையாளத்தில் ஒரு முக்கியமான அம்சத்தை நிறைவேற்றும் ஒரு பெரிய சிலாக்கியத்தை இந்த விசுவாசமுள்ள கிறிஸ்தவர்கள் பெற்றிருந்தார்கள். (மத்தேயு 24:3, 14) அவர்களுடைய உண்மையுள்ள பிரசங்க வேலையின் பலனாக, 1,44,000 பேரில் மீதியாக இருந்தவர்கள் அழைப்பு பெற்று அபிஷேகம்பண்ணப்பட்டார்கள், மேலும் “திரள் கூட்டத்”தாரும் திரளான எண்ணிக்கையில் கூட்டிச்சேர்க்கப்பட்டார்கள். (வெளிப்படுத்துதல் 7:1–3, 9) கடவுளுடைய மக்களுக்கு இது என்னே மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது!
11 இந்த மகிழ்ச்சியை எந்த ஒரு காரியமாவது பறிக்கக்கூடுமா? ஆம், உதாரணமாக, பெர்கமு சபையின் மூப்பர்கள், சகிப்புத்தன்மையின் ஒரு சிறந்த பதிவைக் கொண்டிருந்த போதிலும், நிக்கொலாய் மதஸ்தருடைய போதகத்தைச் சபையிலிருந்து அப்புறப்படுத்த முடியாதவர்களாயிருந்தனர். (வெளிப்படுத்துதல் 2:15) வகுப்புவாதங்கள் ஓங்கிட ஆரம்பித்தன. அதுபோல, இந்தக் கடைசி நாட்கள் முழுவதுமாக, சில தனிப்பட்ட நபர்கள் விசுவாச துரோகிகளாக மாறி, யெகோவாவின் அமைப்பைக் கெடுக்க முயன்றிருக்கின்றனர். மூப்பர்கள் மொத்தமாக அதை எதிர்த்திருக்கின்றனர், ஆனால், அவர்களில் சிலர் மோசம்போக்கப்பட்டிருப்பது வருத்தத்துக்குரிய காரியம். விசுவாச துரோகிகள் நம்முடைய மகிழ்ச்சியைப் பறித்துப்போட நாம் எந்தச் சமயத்திலும் அனுமதியாதிருப்போமாக!
12 “பிலேயாமுடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு” எதிராகவும் இயேசு பெர்கமு சபையில் இருந்தவர்களை எச்சரித்தார். (வெளிப்படுத்துதல் 2:14) இது என்ன போதனையாக இருந்தது? பிலேயாம் வனாந்தரத்தில் இஸ்ரவேலரைக் கெடுத்த அதேவிதமாக பெர்கமுவில் யாரோ ஒருவன் கிறிஸ்தவர்களைக் கெடுத்துக் கொண்டிருந்தான்: “விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிப்பதற்கும் வேசித்தனம்பண்ணுதற்கும்” ஏதுவாக அவர்களை உற்சாகப்படுத்துவதன் மூலம் கெடுத்துக்கொண்டிருந்தான். (எண்ணாகமம் 25:1–5; 31:8) “யேசபேல் என்னும் ஸ்திரீ”யானவளுக்கு எதிராக இயேசு தியத்தீரா சபையை எச்சரித்தார். இந்தப் பெண்கூட “விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிப்பதற்கும் வேசித்தனம்பண்ணுதற்கும்” கிறிஸ்தவர்களுக்குப் போதித்துக்கொண்டிருந்தாள். (வெளிப்படுத்துதல் 2:20) இன்று சாத்தான் கிறிஸ்தவ சபைகளுக்குள் யேசபேல் அல்லது பிலேயாம் செல்வாக்கைச் செலுத்திட முயன்றிருக்கிறானா? அவன் நிச்சயமாகவே அப்படிச் செய்திருக்கிறான். எப்படியெனில், ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய 40,000 பேர்—அவர்களில் பலர் பாலுறவு சம்பந்தப்பட்ட ஒழுக்கக்கேட்டிற்காக—சபைநீக்கம் செய்யப்படுகின்றனர். எப்பேர்ப்பட்ட கவலைக்கிடமான காரியம்! பிலேயாம் போன்ற ஆண்களும் யேசபேல் போன்ற பெண்களும் மூப்பர்களுக்கு விரோதமாக எழும்பி சபையைக் கெடுப்பதற்கு முயன்றிருக்கின்றனர். அப்படிப்பட்ட அசுத்தமான செல்வாக்கை நம்முடைய எல்லா பலத்தோடும் நாம் எதிர்த்துத் தடுத்திடுவோமாக!—1 கொரிந்தியர் 6:18; 1 யோவான் 5:21.
13 வெளிப்படுத்துதல் 3:15, 16-ல், இயேசு லவோதிக்கேயா சபைக்குப் பின்வருமாறு சொன்னார்: உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; நீ குளிருமல்ல அனலுமல்ல; நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும். இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப் போடுவேன்.” வெதுவெதுப்பாயிருக்கும் நிலையை இயேசு எவ்வளவாக அருவருக்கிறார் என்பதற்கு என்னே விவரமான விளக்கம்! அவர் தொடர்ந்து கூறுகிறார்: “நான் ஐசுவரியவானென்றும், திரவியசம்பன்னனென்றும், எனக்கு ஒரு குறைவுமில்லையென்றும் சொல்லுகிறாய்.” ஆம், லவோதிக்கேயா சபையைப் பொருளாசை பற்றிக்கொண்டது. அவர்கள் சுயதிருப்தியுற்றவர்களாகவும் அக்கறையற்றவர்களாகவும் இருந்தார்கள். ஆனால் இயேசு அவர்களிடம், “நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல்” இருக்கிறாய் என்று சொன்னார். (வெளிப்படுத்துதல் 3:17) நாம் இயேசுவின் பார்வையில் ‘நிர்ப்பாக்கியமுள்ளவரும், பரிதபிக்கப்படத்தக்கவரும், தரித்திரரும், குருடரும், நிர்வாணியுமாய்’ இருக்க விரும்புகிறோமா? நிச்சயமாக விரும்பமாட்டோம்! எனவே நாம் பொருளாசையுள்ளவர்களாக அல்லது வெதுவெதுப்பாக இருப்பதை எல்லா வழிகளிலும் எதிர்த்துப் போராடுவோமாக.—1 தீமோத்தேயு 6:9–12.
முடிவுபரியந்தம் சகித்து நிலைத்திருங்கள்
14 வெதுவெதுப்பாக இல்லாத ஒரு சபை சிமிர்னாவில் இருந்தது. இந்தக் கிறிஸ்தவர்களுக்கு இயேசு சொன்னார்: “உன் கிரியைகளையும், உன் உபத்திரவத்தையும், நீ ஐசுவரியமுள்ளவனாயிருந்தும் உனக்கிருக்கிற தரித்திரத்தையும், தங்களை யூதரென்று சொல்லியும் யூதராயிராமல் சாத்தானுடைய கூட்டமாயிருக்கிறவர்கள் செய்யும் தூஷணத்தையும் அறிந்திருக்கிறேன். நீ படப்போகிற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படும்பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்துநாள் உபத்திரவப்படுவீர்கள்.” (வெளிப்படுத்துதல் 2:8–10) இன்றைய கிறிஸ்தவர்களின் அனுபவத்திற்கு இது எவ்வளவு நன்றாய்ப் பொருந்துகிறது! அபிஷேகம்பண்ணப்பட்டவர்களும் வேறே ஆடுகளுமாகிய இன்றைய கிறிஸ்தவர்களுங்கூட இன்றைய “சாத்தானுடைய கூட்ட”மாகிய கிறிஸ்தவமண்டலத்தினின்று வரும் கடுமையான எதிர்ப்புகளைச் சகித்துவந்திருக்கின்றனர். தங்களுடைய உத்தமத்தை விட்டுக்கொடுக்காததால் முதல் உலக மகா யுத்தம் முதல் இது வரையுமாக, ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும், பிள்ளைகளும் அடிக்கப்பட்டு, சிறைப்படுத்தப்பட்டு, வாதிக்கப்பட்டு, கற்பழிக்கப்பட்டு அல்லது கொல்லப்பட்டுமிருக்கின்றனர்.
15 அப்படிப்பட்ட அனுபவங்கள் மகிழ்ச்சியளிக்கின்றனவா? அந்த அனுபவங்கள்தானே அப்படியாக இல்லை. ஆனால் “அவருடைய [இயேசுவுடைய] நாமத்துக்காக அவமானமடைவதற்குப் பாத்திரராக எண்ணின” அப்போஸ்தலர்களைப் போல, சோதனைகளில் சகித்திருக்கும் உண்மையுள்ள கிறிஸ்தவர்கள் தங்களுக்குள் ஓர் ஆழ்ந்த மகிழ்ச்சியின் அனுபவத்தைக் கொண்டிருக்கின்றனர். (அப்போஸ்தலர் 5:41) அவர்களுடைய விரோதிகள் தங்களுக்கு என்ன செய்தாலும், தங்கள் உத்தமத்தைக் காத்துக்கொண்டதற்கான பலனைப் பெறுவதற்கான குறித்த காலம் சமீபமாயிருக்கிறது என்பதையும், பலன் உண்மையிலேயே மகத்தான ஒன்று என்பதையும் அறிந்திருப்பதால், அவர்கள் மகிழ்ச்சியுடன் நிலைத்திருக்கிறார்கள். சிமிர்னாவிலுள்ள கிறிஸ்தவர்களிடம் இயேசு இப்படியாகச் சென்னார்: “நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்.” (வெளிப்படுத்துதல் 2:10) சர்தையிலுள்ளவர்களுக்கு அவர் சொன்னார்: “ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்படும். ஜீவபுஸ்தகத்திலிருந்து அவனுடைய நாமத்தை நான் கிறுக்கிப்போடேன்.”—வெளிப்படுத்துதல் 3:5.
16 உண்மைதான், இந்த வாக்குறுதிகள் குறிப்பாக அபிஷேகம்பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களுக்குப் பொருந்துகின்றன. இவை அவர்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கும் அழியாத பரலோக வாழ்க்கை என்ற பரிசை அவர்களுக்கு ஞாபகப்படுத்திக்கொண்டிருக்கின்றன. ஆனால் வேறே ஆடுகளைச் சேர்ந்தவர்களுங்கூட இந்த வார்த்தைகளால் பலப்படுத்தப்படுகின்றனர். அவர்கள் வைராக்கியமாக இருந்து சகித்து நிலைத்திருப்பார்களானால், யெகோவா அவர்களுக்கும் ஒரு வெகுமதியை ஆயத்தமாக வைத்திருக்கிறார். கிறிஸ்துவின் கரங்களிலிருக்கும் ராஜ்யத்தின்கீழ் பரதீஸான ஒரு பூமியில் நித்திய ஜீவனைச் சுதந்தரிக்கும் ஒரு மகத்தான எதிர்பார்ப்பையுடையவர்களாய் இருக்கிறார்கள். இந்த உலக மக்கள் காணத் தவறும் பரதீஸை அங்கு அவர்கள் காண்பார்கள்.
17 இயேசு தம்முடைய ஒவ்வொரு செய்தியையும் பின்வரும் வார்த்தைகளோடு முடித்தார்: “ஆவி சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்.” (வெளிப்படுத்துதல் 3:22) ஆம், பிரதான மேய்ப்பனின் வார்த்தைகளை நாம் கேட்டு அவற்றிற்குக் கீழ்ப்படிய வேண்டும். நாம் அசுத்தத்தையும் விசுவாச துரோகத்தையும் வெறுத்தொதுக்கி, நம்முடைய வைராக்கியத்தைக் காத்துக்கொள்ள வேண்டும். நாம் வெகுமதியைப் பெற்றுக்கொள்ளும் காரியம் அதன் பேரில் சார்ந்திருக்கிறது. வெளிப்படுத்துதலிலுள்ள கூடுதலான தகவல்களை நாம் சிந்திக்கும்போது, அதைத்தானே செய்ய நாம் இன்னும் அதிக தீர்மானமாயிருக்கிறோம்.
சுருளின் முத்திரைகள்
18 உதாரணமாக 4 மற்றும் 5 அதிகாரங்களில், யோவான், யெகோவாவின் மகிமைப்பொருந்திய பரலோக நீதிமன்றத்தைக் காண்கிறான். தேவனுடைய ஆட்டுக்குட்டியானவராகிய இயேசு கிறிஸ்து அங்கே இருக்கிறார். அவர் ஏழு முத்திரைகளைக் கொண்ட ஒரு சுருளைப் பெற்றுக்கொள்கிறார். ஆறாவது அதிகாரத்தில், இயேசு அவ்வேழு முத்திரைகளில் ஆறு முத்திரைகளை ஒன்றன் பின் ஒன்றாக உடைக்கிறார். முதலாவது உடைக்கப்பட்டபோது, ஒரு வெள்ளைக் குதிரையின் மீது ஒருவர் சவாரி செய்வதைப் பார்க்கிறான். அவருக்கு ஒரு கிரீடம் கொடுக்கப்படுகிறது, அவர் “ஜெயிக்கிறவராகவும் ஜெயிப்பவராகவும்” செல்லுகிறார். (வெளிப்படுத்துதல் 6:2) இவர்தான் இயேசு, புதிதாக முடிசூட்டப்பட்ட அரசர். அவர் 1914-ல் அரசராக சவாரி செய்ய ஆரம்பித்தபோது, மூன்று குதிரைகளும் அவற்றில் சவாரிசெய்பவர்களும் தோன்றுகின்றனர். இவை அச்சந்தரும் காட்சிகள், மனிதரின் போர்களையும், பஞ்சத்தையும், கொள்ளை நோயினாலும் மற்ற காரணங்களாலும் ஏற்படும் மரணத்தையும் பிரதிநிதித்துவம் செய்கின்றன. இயேசு ராஜரீக வல்லமையில் பரலோகத்தில் வந்திருப்பது பூமியில் மகா யுத்தங்களாலும், பஞ்சங்களாலும், கொள்ளைநோய்களாலும், நிலநடுக்கங்களாலும், மற்ற பேரழிவுகளாலும் குறிக்கப்படும் என்ற அவருடைய மகா தீர்க்கதரிசனத்தை அவை உறுதிப்படுத்துகின்றன. (மத்தேயு 24:3, 7, 8; லூக்கா 21:10, 11) அப்படிப்பட்ட ஒரு காலத்தில் கிறிஸ்தவர்கள் சகித்து நிலைத்திருக்க வேண்டுமானால், இயேசு ஏழு சபைகளுக்கும் சொன்ன வார்த்தைகளை அவர்கள் உண்மையிலேயே கேட்டு கடைபிடிக்கவேண்டும்.
19 ஐந்தாவது முத்திரையை உடைக்கும்போது, காணக்கூடாத ஆவிப் பிரதேசத்தில் நடக்கும் ஒரு சம்பவம் வெளிப்படுத்தப்படுகிறது. தங்களுடைய விசுவாசத்துக்காக மரித்த அபிஷேகம்பண்ணப்பட்ட கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு வெள்ளை அங்கி கொடுக்கப்படுகிறது. தெளிவாகவே, கிறிஸ்துவின் பிரசன்னம் இப்பொழுது ஓர் உண்மை நிலையிலிருக்க, பரலோக உயிர்த்தெழுதல் துவங்கிவிட்டது. (1 தெசலோனிக்கேயர் 4:14–17; வெளிப்படுத்துதல் 3:5) அடுத்து ஆறாவது முத்திரை உடைக்கப்படுகிறது, அப்பொழுது “பூமி,” சாத்தானின் பூமிக்குரிய காரியங்களின் ஒழுங்குமுறை ஒரு பெரிய பூமியதிர்ச்சியால் அதிர்ச்சியுறுகிறது. (2 கொரிந்தியர் 4:4) சாத்தானின் ஆதிக்கத்திலிருக்கும் மனித ஆட்சியாகிய “வானம்,” அப்புறப்படுத்தப்படுவதற்கு ஆயத்தமாக, ஒரு பழைய சுருளைப் போல சுருட்டப்படுகிறது. பயந்திருக்கும், கலகக்கார மனிதர் என்ன செய்வதென்று அறியாமல் கன்மலைகளை நோக்கி: “நீங்கள் எங்கள்மேல் விழுந்து, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய முகத்திற்கும், ஆட்டுக்குட்டியானவருடைய கோபத்திற்கும் எங்களை மறைத்துக்கொள்ளுங்கள்; அவருடைய கோபாக்கினையின் மகா நாள் வந்து விட்டது, யார் நிலைநிற்கக்கூடும்?” என்றார்கள்.—வெளிப்படுத்துதல் 6:13, 14, 16, 17.
20 யார் நிலைநிற்கக்கூடும்? ஏன், இயேசு ஏற்கெனவே அந்தக் கேள்விக்குப் பதிலளித்துவிட்டார். “ஆவி சபைகளுக்குச் சொல்வதைக் கேட்பவர்கள்” கோபாக்கினையின் அந்த மகா நாளில் நிலைநிற்பார்கள். இதை உறுதிப்படுத்தும் வகையில், 1,44,000 பேரில் கடைசியாக இருப்பவர்கள் முத்திரை போடப்படுதலைக் குறித்தும், “மிகுந்த உபத்திரவத்தைத்” தப்பிப்பிழைப்பதற்காக எல்லா தேசங்களிலிருந்தும் ஒரு திரளான கூட்டத்தினர் கூட்டிச்சேர்க்கப்படுவது குறித்தும் யோவான் அறிந்துகொள்ளுகிறான். (வெளிப்படுத்துதல் 7:1–3, 14) ஆனால் அந்தச் சுருளின் ஏழாவது முத்திரை உடைக்கப்படுவதற்கும், அதிக திருப்பங்களையுடைய காட்சிகளை யோவானுக்கும், அவன் மூலமாக இன்று நமக்கும் காண்பிப்பதற்கு இப்பொழுது நேரமாகிவிட்டது. இவற்றில் சிலவற்றை அடுத்த கட்டுரை கலந்தாராய்கிறது. (w89 4⁄1)
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ இயேசுவுக்கும் சபை மூப்பர்களுக்கும் இடையே இருக்கும் உறவு என்ன?
◻ பெர்கமுவிலும் தியத்தீராவிலும் மூப்பர்கள் எதிர்ப்பட்ட பிரச்னைகள் என்ன? அதுபோன்ற பிரச்னைகள் இன்று சபைகளை எவ்வாறு பாதித்திருக்கின்றன?
◻ லவோதிக்கேயா சபை என்ன வினைமையான தவறைச் செய்தது? அதுபோன்ற தவறு செய்வதை நாம் எப்படித் தவிர்க்கலாம்?
◻ இந்த 20-வது நூற்றாண்டில் கிறிஸ்தவர்கள் எவ்விதம் சகித்து நிலைத்திருக்கவேண்டியதாயிருந்தது? அப்படிச் செய்ய அவர்களுக்கு இயேசுவின் என்ன வாக்குறுதிகள் உதவியாயிருந்திருக்கின்றன?
◻ இந்தத் தேசங்கள் அர்மகெதோனில் அனுபவிக்கப்போகும் நம்பிக்கையிழந்த கவலைக்கிடமான நிலையை நாம் எப்படித் தவிர்க்கலாம்?
[கேள்விகள்]
1. மகிழ்ச்சியற்ற இந்த உலகில் வெளிப்படுத்துதலின் எந்த வார்த்தைகள் நற்செய்தியாக இருக்கின்றன? “தீர்க்கதரிசனம்” மற்றும் “குறித்த காலம்” என்ன காரியங்களைக் குறிப்பிடுகின்றன?
2. முதல் நூற்றாண்டு முடியும் தருவாயிலிருந்த அந்தச் சமயம் யோவான் எதைக் குறித்து யோசனை செய்திருப்பான்?
3. யோவான் பார்த்து பதிவுசெய்த தரிசனங்கள் எதற்கு உத்தரவாதமளிக்கின்றன?
4. (எ) உண்மையுள்ள கிறிஸ்தவ சபைகளுக்கு என்ன பொறுப்பு இருக்கிறது? (பி) அபிஷேகம் செய்யப்பட்ட மூப்பர்கள் கிறிஸ்துவின் வலது கையில் ஏழு நட்சத்திரங்களாகக் காணப்படுவது எதைக் குறிக்கிறது?
5. ஏழு சபைகளுக்கும் கொடுக்கப்பட்ட செய்திகள் யோவானின் நாட்களிலிருந்த யாருக்குரியவையாயிருந்தன?
6, 7. (எ) வெளிப்படுத்துதலின் வார்த்தைகள் முக்கியமாக எப்போது பொருத்தமாயிருக்கின்றன? இது நமக்கு எப்படித் தெரியும்? (பி) ஏழு நட்சத்திரங்களாலும் ஏழு சபைகளாலும் இன்று பிரதிநிதித்துவம் செய்யப்படுவது யார்?
8. இயேசு 1918-ல் கிறிஸ்தவர்களெனப்பட்டவர்களை பார்வையிட வந்தபோது என்ன நிலைமையைக் கண்டார்?
9, 10. இயேசுவின் எந்த வார்த்தைகளின் நிறைவேற்றம் இந்நாள் கிறிஸ்தவர்களுக்குப் பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது? விளக்குங்கள்.
11. யோவானின் நாட்களில் வகுப்புவாதங்கள் யெகோவாவின் அமைப்பை எவ்விதத்தில் கெடுக்க முயன்றன? அவை எப்படி நம்முடைய நாளிலும் அவ்விதமாகச் செய்திருக்கின்றன?
12. (எ) பிலேயாம் மற்றும் யேசபேல் செல்வாக்கு என்பது என்ன? (பி) இக்காலத்திலே சாத்தான் கிறிஸ்தவ சபைகளுக்குள் பிலேயாம் அல்லது யேசபேல் செல்வாக்கைச் செலுத்திட முயன்றிருக்கிறானா?
13. (எ) வெதுவெதுப்பாயிருக்கும் நிலையை இயேசு எவ்வளவாக அருவருக்கிறார் என்பதை விளக்குங்கள். (பி) லவோதிக்கேயர் ஏன் வெதுவெதுப்பாயிருந்தனர்? இந்தப் பலவீனத்தை இன்று நாம் எவ்விதம் தவிர்க்கலாம்?
14. (எ) சிமிர்னா சபை என்ன கஷ்டங்களை எதிர்ப்பட்டது? (பி) சிமிர்னாவின் அனுபவங்களுக்கு இணையாக தற்காலத்தில் என்ன அனுபவங்கள் இருக்கின்றன?
15, 16. (எ) அபிஷேகம்பண்ணப்பட்ட கிறிஸ்தவர்கள் துன்புறுத்துதலின் மத்தியிலும் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும்? (பி) வேறே ஆடுகளுக்கு இருக்கும் என்ன விசேஷமான வெகுமதிகள் மகிழ்ச்சியாக இருக்க அவர்களுக்கு உதவுகிறது?
17. இயேசு தம்முடைய ஒவ்வொரு செய்தியையும் எந்த வார்த்தைகளைக் கொண்டு முடித்தார்? அவருடைய வார்த்தைகள் நமக்கு எதை அர்த்தப்படுத்துகின்றன?
18. (எ) இயேசு பரலோக நீதிமன்றத்தில் எதைப் பெற்றுக்கொள்கிறார்? (பி) வெளிப்படுத்துதல் 6-வது அதிகாரத்தின் குதிரைகளில் சவாரி செய்கிறவர்களில் மூவரின் சவாரி இன்றுள்ள மனிதவர்க்கத்துக்கு எதைக் குறிக்கிறது?
19. (எ) கிறிஸ்துவின் பிரசன்னத்தின்போது, ஏற்கெனவே மரித்துவிட்டிருக்கும் உண்மையுள்ள அபிஷேகம்பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு என்ன வெகுமதி கொடுக்கப்படுகிறது? (பி) ஆறாவது முத்திரையை உடைப்பது என்ன பயங்கரமான சம்பவங்களுக்கு முன் நிழலாக இருக்கிறது? இது என்ன கேள்விக்கு வழிநடத்துகிறது?
20. யெகோவாவுடையதும் ஆட்டுக்குட்டியானவருடையதுமான கோபாக்கினையின் மகா நாளில் யார் நிலைநிற்கக்கூடும்?
[பக்கம் 13-ன் படம்]
நாஸி கான்சன்ட்ரேஷன் முகாம்களில் துன்புற்ற சில உண்மையுள்ள கிறிஸ்தவர்கள்
[படத்திற்கான நன்றி]
DÖW, Vienna, Austria
[பக்கம் 10-ன் பெட்டி]
பக்கங்கள் 10 முதல் 21 முடிய காணப்படும் தகவல் 1988-ல் நடைபெற்ற யெகோவாவின் சாட்சிகளின் தெய்வீக நீதி மாவட்ட மாநாடுகளில், “குறித்த காலம் சமீபமாயிருக்கிறது,” என்ற தொடர்பேச்சுகளின் ஆரம்பப் பேச்சாகக் கொடுக்கப்பட்டது.