மகிமையின் ராஜாவான கிறிஸ்துவை வாழ்த்துங்கள்!
“உமது மகத்துவத்திலே வெற்றிவாகை சூட செல்வீர்.”—சங். 45:4, NW.
1, 2. சங்கீதம் 45, நமக்கு ஏன் ஆர்வத்துக்குரியது?
மகிமையான ஒரு ராஜா, சத்தியத்தையும் நீதியையும் முன்னிட்டு எதிரிகளைத் தோற்கடிக்கப் புறப்படுகிறார். இறுதியில் அவர்களை வீழ்த்துகிறார். அதன்பின் அழகிய மணமகளை மணம் முடிக்கிறார். தலைமுறை தலைமுறையாக மக்கள் மனதில் இடம் பிடிக்கிறார்; என்றென்றும் போற்றிப் புகழப்படுகிறார். இதுவே 45-ஆம் சங்கீதத்தின் சாராம்சம்.
2 இந்தச் சங்கீதம், வெறுமனே இனிதே முடிவடையும் சுவாரஸ்யமான கதை அல்ல. இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் சம்பவங்கள் நமக்கு அதிக அர்த்தமுள்ளவை. இன்றைய வாழ்க்கையோடும், எதிர்கால வாழ்க்கையோடும் சம்பந்தப்பட்டவை. ஆகவே, இந்தச் சங்கீதத்தைக் கூர்ந்த கவனத்தோடு இப்போது ஆராயலாம்.
“என் இருதயம் நல்ல விசேஷத்தினால் பொங்குகிறது”
3, 4. (அ) சங்கீதம் 45-ல் குறிப்பிடப்பட்டிருக்கும் ‘நல்ல’ செய்தி என்ன, அது நம்மை என்ன செய்யத் தூண்டுகிறது? (ஆ) நாம் எப்படி ‘ராஜாவைக் குறித்துப் பாடுகிறோம்’, நம்முடைய நாவு எப்படி “விரைவாய் எழுதுகிறவனுடைய எழுத்தாணி” போல ஆகிறது?
3 சங்கீதம் 45:1-ஐ வாசியுங்கள். ராஜாவைப் பற்றிய ஒரு ‘நல்ல விசேஷம்,’ அதாவது ஒரு நல்ல செய்தி, சங்கீதக்காரனின் இருதயத்தைத் தொடுகிறது. அதனால், அவருடைய இருதயம் உற்சாகத்தில் “பொங்குகிறது.” அதைப் பற்றிப் பேச, அவருடைய நாவு “விரைவாய் எழுதுகிறவனுடைய எழுத்தாணி” போல ஆகிறது.
4 நம்மைப் பற்றி என்ன சொல்லலாம்? மேசியானிய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தி நம்முடைய இருதயத்தையும் தொடுகிறது. இந்தச் செய்தி குறிப்பாக, 1914-ல் “நல்ல” செய்தியாக ஆனது. அதுமுதற்கொண்டு, நமக்கு இந்த நற்செய்தி ஏதோ எதிர்கால அரசாங்கத்தைப் பற்றிய செய்தியாக இல்லாமல், இப்போது பரலோகத்தில் செயல்பட்டு வருகிற நிஜமான அரசாங்கத்தைப் பற்றிய செய்தியாக ஆனது. ‘இந்த நற்செய்தியையே,’ ‘உலகமெங்கும் உள்ள எல்லாத் தேசத்தாருக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கிறோம்.’ (மத். 24:14) இந்தச் செய்தியால் நம் இருதயம் “பொங்குகிறதா?” அதைப் பற்றி நாம் வைராக்கியமாகப் பிரசங்கிக்கிறோமா? சங்கீதக்காரனைப் போலவே, நாமும் ‘ராஜாவைக் குறித்து பாடுகிறோம்.’ அந்த ராஜாவாகிய இயேசு கிறிஸ்து, பரலோகத்திலுள்ள மேசியானிய அரசாங்கத்தின் முடிசூட்டப்பட்ட மன்னர் என அறிவிக்கிறோம். அதோடு, பூமியின் ஆட்சியாளர்களையும் மக்களையும் அவருடைய ஆட்சிக்கு அடிபணியும்படி அழைக்கிறோம். (சங். 2:1, 2, 4-12) பிரசங்க வேலையில் பைபிளை அதிகமாகப் பயன்படுத்துவதன் மூலம் நம்முடைய நாவும் “விரைவாய் எழுதுகிறவனுடைய எழுத்தாணி” போல ஆகிறது.
‘இனிய பேச்சு ராஜாவின் உதடுகளிலிருந்து பொழிகிறது’
5. (அ) இயேசு எப்படி ‘மிகவும் அழகானவராக’ இருந்தார்? (ஆ) ‘இனிய பேச்சு ராஜாவின் உதடுகளிலிருந்து பொழிந்தது’ எப்படி, இதை நாம் எப்படிப் பின்பற்றலாம்?
5 சங்கீதம் 45:2-ஐ வாசியுங்கள்.a இயேசுவின் தோற்றத்தைப் பற்றி பைபிள் அவ்வளவாகச் சொல்வதில்லை. பரிபூரண மனிதரான அவர் ‘மிகவும் அழகானவராக’ இருந்தார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இருந்தாலும் அவருடைய அழகுக்குக் காரணம், யெகோவாவிடம் அவர் உண்மையாகவும் உத்தமமாகவும் இருந்ததே. அதோடு, ‘மனங்கவரும்’ இனிய வார்த்தைகளால் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய செய்தியை அவர் அறிவித்தார். (லூக். 4:22; யோவா. 7:46) பிரசங்கிக்கையில், நாமும் அவருடைய மாதிரியைப் பின்பற்றுகிறோமா? மக்களுடைய இருதயத்தைத் தொடும் வார்த்தைகளைப் பயன்படுத்துகிறோமா?—கொலோ. 4:6.
6. இயேசுவைக் கடவுள் எப்படி ‘என்றென்றைக்குமாக’ ஆசீர்வதித்தார்?
6 இயேசு இருதயப்பூர்வமான பக்தியைக் காட்டியதால், பூமியில் அவர் செய்த ஊழியத்தை யெகோவா ஆசீர்வதித்தார்; அவருடைய உயிரைப் பலியாகக் கொடுத்ததற்கான பலனையும் அளித்தார். அதைப் பற்றி பவுல் இவ்வாறு விவரிக்கிறார்: “அவர் [இயேசு] மனிதராக வந்தபோது சாகுமளவுக்கு, ஆம், கழுமரத்தில் சாகுமளவுக்கு, தம்மையே தாழ்த்திக் கீழ்ப்படிதலைக் காட்டினார். அதனால்தான், கடவுள் அவரை மேலான நிலைக்கு உயர்த்தி, மற்றெல்லாப் பெயர்களுக்கும் மேலான பெயரை அவருக்குத் தந்தருளினார்; பரலோகத்திலும் பூமியிலும் மண்ணுக்குள்ளும் இருக்கிற எல்லாரும் இயேசுவின் பெயரில் முழங்கால்படியிட வேண்டும் என்பதற்காகவும், இயேசு கிறிஸ்துவே எஜமானர் என எல்லா நாவுகளும் வெளிப்படையாக ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும் அப்படிச் செய்தார்; இவையெல்லாம், பரலோகத் தகப்பனாகிய கடவுளுடைய மகிமைக்கே.” (பிலி. 2:8-11) அழியாத வாழ்க்கைக்கு அவரை உயிர்த்தெழுப்பியதன் மூலம் இயேசுவை ‘என்றென்றைக்குமாக’ ஆசீர்வதித்தார்.—ரோ. 6:9.
ராஜா அவருடைய ‘தோழருக்கும்’ மேலாக உயர்த்தப்படுகிறார்
7. இயேசுவைக் கடவுள் எப்படி அவருடைய ‘தோழருக்கும்’ மேலாக அபிஷேகம் செய்தார்?
7 சங்கீதம் 45:6, 7-ஐ வாசியுங்கள். இயேசு நீதியை மிகவும் நேசித்தார்; அவருடைய தகப்பனுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் அனைத்தையும் அறவே வெறுத்தார். அதனால், யெகோவா அவரை மேசியானிய அரசாங்கத்தின் ராஜாவாக முடிசூட்டினார். அவருடைய ‘தோழருக்கும்’ மேலாக, அதாவது தாவீதின் வம்சாவளியில் வந்த யூதாவின் ராஜாக்களுக்கும் மேலாக, இயேசுவை ‘ஆனந்த தைலத்தினால் அபிஷேகம்பண்ணினார்.’ எப்படி? இயேசுவை யெகோவா நேரடியாக நியமித்தார். அதுமட்டுமல்ல, அவரை ராஜாவாகவும் தலைமைக் குருவாகவும் நியமித்தார். (சங். 2:2; எபி. 5:5, 6) மேலும் தைலத்தினால் அல்ல, தம்முடைய சக்தியினால் அவரை அபிஷேகம் செய்தார். அதோடு, இயேசுவின் அரசாட்சி பூமிக்குரியதல்ல, பரலோகத்துக்குரியது.
8. ‘தேவனே இயேசுவின் சிங்காசனமாக இருக்கிறார்’ என எப்படிச் சொல்லலாம், அவருடைய அரசாட்சியில் நீதி நிலவும் என நாம் ஏன் நம்பலாம்?
8 யெகோவா அவருடைய மகனை 1914-ல் பரலோகத்தில் மேசியானிய ராஜாவாக நியமித்தார். ‘அவருடைய ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாயிருக்கிறது.’ அதனால், அவருடைய ஆட்சியில் நீதியும் சமத்துவமும் தழைத்தோங்கும் என்பதில் சந்தேகமே இல்லை. ‘தேவனே அவருடைய சிங்காசனமாக’ இருப்பதால், (NW) அவருடைய அதிகாரம் சட்டப்பூர்வமானது. அதாவது, அவரை ஆட்சியில் அமர்த்தியது யெகோவாவே. அதோடு, இயேசுவின் சிங்காசனம் “என்றென்றைக்குமுள்ளது.” கடவுளால் நியமிக்கப்பட்ட ராஜாவுக்கு அடிபணிந்து யெகோவாவுக்குச் சேவை செய்வதில் நீங்கள் பெருமைப்படுகிறீர்கள், அல்லவா?
ராஜா ‘பட்டயத்தை அரையிலே கட்டுகிறார்’
9, 10. (அ) கிறிஸ்து பட்டயத்தை எப்போது அரையிலே கட்டினார், அதை எப்படி உடனடியாக பயன்படுத்தினார்? (ஆ) கிறிஸ்து அதை இன்னும் எப்படிப் பயன்படுத்தப் போகிறார்?
9 சங்கீதம் 45:3-ஐ வாசியுங்கள். ‘பட்டயத்தை அரையிலே கட்டுமாறு’ ராஜாவிடம் யெகோவா சொல்வதன் மூலம் தம்முடைய பேரரசுரிமையை எதிர்ப்பவர்களுக்கு எதிராகப் போரிடவும், அவர்களை நியாயந்தீர்க்கவும் இயேசுவுக்கு அதிகாரம் அளிக்கிறார். (சங். 110:2) கிறிஸ்து, யாராலும் வெல்ல முடியாத மாவீரராக இருப்பதால் ‘சவுரியவான்,’ அதாவது வல்லமையுள்ளவர் என அழைக்கப்படுகிறார். 1914-ல் அவர் பட்டயத்தை அரையிலே கட்டினார். அந்த ஆண்டில் சாத்தானையும் அவனுடைய பேய்களையும் பூமிக்குத் தள்ளியதன் மூலம் வெற்றி பெற்றார்.—வெளி. 12:7-9.
10 ராஜாவுடைய வெற்றிச் சவாரியின் ஓர் ஆரம்பமே இது. அவர் இன்னும் ‘ஜெயித்து முடிக்க வேண்டும்.’ (வெளி. 6:2) ஆம், பூமியில் சாத்தானுடைய ஆதிக்கத்தில் இருக்கிற அனைத்தின்மீதும் யெகோவாவின் நியாயத்தீர்ப்பை நிறைவேற்ற வேண்டும்; சாத்தானையும் அவனுடைய பேய்களையும் செயலற்ற நிலைக்குத் தள்ள வேண்டும். அதற்கு முன்பாக, பொய் மத உலகப் பேரரசான மகா பாபிலோன் ஒழிய வேண்டும். அரசியல் தலைவர்களைப் பயன்படுத்தி அந்த ‘விலைமகளை’ யெகோவா அழிப்பார். (வெளி. 17:16, 17) அடுத்ததாக, மாவீரரான ராஜா, சாத்தானுடைய அரசியல் அமைப்புகளை ஒன்றுமில்லாமல் செய்துவிடுவார். ‘அதலபாதாளத்தின் தேவதூதரான’ கிறிஸ்து, சாத்தானையும் அவனுடைய பேய்களையும் அதலபாதாளத்திற்குள் தள்ளியடைத்து தம்முடைய வெற்றிச் சவாரியை முடிப்பார். (வெளி. 9:1, 11; 20:1-3) சிலிர்ப்பூட்டும் இந்தச் சம்பவங்களை, 45-ஆம் சங்கீதம் எப்படி முன்னறிவித்திருக்கிறது என்பதை இப்போது பார்க்கலாம்.
ராஜா ‘சத்தியத்தினிமித்தம்’ சவாரி செய்கிறார்
11. கிறிஸ்து எப்படி ‘சத்தியத்தினிமித்தம்’ சவாரி செய்கிறார்?
11 சங்கீதம் 45:4-ஐ வாசியுங்கள். வீரமிகு ராஜா, நாடுகளைக் கைப்பற்றுவதற்காகவோ மக்களை அடிமைப்படுத்துவதற்காகவோ அல்ல, உன்னத நோக்கங்களுக்காகவே போரிடுகிறார். அவர், “சத்தியத்தினிமித்தமும், நீதியுடன் கூடிய சாந்தத்தினிமித்தமும் [அதாவது, மனத்தாழ்மையின் நிமித்தம்]” சவாரி செய்கிறார். யெகோவாவால் மட்டுமே சர்வலோகத்தையும் சரியாக ஆட்சி செய்ய முடியும் என்ற மிக முக்கியமான சத்தியம் நிரூபிக்கப்பட வேண்டும். ஏனென்றால், யெகோவாவை எதிர்த்து சாத்தான் கலகம் செய்தபோது, அவருடைய பேரரசாட்சிக்கு எதிராகச் சவால் விடுத்தான். அதுமுதற்கொண்டு, பேய்களும் மனிதர்களும் யெகோவாவின் ஆட்சியை எதிர்த்து வந்திருக்கிறார்கள். ஆகவே, ராஜாவாக நியமிக்கப்பட்டவருக்கு யெகோவாவுடைய பேரரசாட்சியை என்றென்றைக்குமாக நிலைநாட்டுவதற்கான நேரம் இப்போது வந்துவிட்டது.
12. ராஜா எவ்விதங்களில் ‘மனத்தாழ்மையின் நிமித்தம்’ சவாரி செய்கிறார்?
12 ராஜா, ‘மனத்தாழ்மையின் நிமித்தமும்’ சவாரி செய்கிறார். கடவுளுடைய ஒரே மகனான அவர், தம்முடைய தந்தையின் பேரரசாட்சிக்கு மனத்தாழ்மையோடும் உண்மையோடும் கீழ்ப்பட்டு நடப்பதில் மிகச்சிறந்த முன்மாதிரி வைத்திருக்கிறார். (ஏசா. 50:4, 5; யோவா. 5:19) ராஜாவின் உண்மையுள்ள குடிமக்கள், அவரைப் பின்பற்றி எல்லா விஷயங்களிலும் யெகோவாவின் பேரரசாட்சிக்குத் தாழ்மையோடு கீழ்ப்பட்டு நடக்க வேண்டும். அப்படிச் செய்பவர்கள் மட்டுமே கடவுள் வாக்குக் கொடுத்திருக்கும் புதிய உலகில் வாழ அனுமதிக்கப்படுவார்கள்.—சக. 14:16, 17.
13. கிறிஸ்து எவ்வாறு ‘நீதியினிமித்தம்’ விரைந்து செல்கிறார்?
13 கிறிஸ்து ‘நீதியினிமித்தமும்’ வீரதீரத்துடன் விரைந்து செல்கிறார். அவர், ‘கடவுளுடைய நீதிக்காக’ போரிடுகிறார். கடவுளுடைய நீதி என்பது, எது சரி எது தவறு என்பதற்கு யெகோவா வகுத்திருக்கும் நீதிநெறிகளை அர்த்தப்படுத்துகிறது. (ரோ. 3:21; உபா. 32:4) “ஒரு ராஜா நீதியாக அரசாளுவார்” என்று இயேசு கிறிஸ்துவைப் பற்றி ஏசாயா முன்னறிவித்தார். (ஏசா. 32:1) இயேசுவின் ஆட்சியின்போது, ‘நீதி குடிகொண்டுள்ள புதிய வானமும் புதிய பூமியும் உண்டாகும்.’ (2 பே. 3:13) அந்தப் புதிய உலகில் வாழப்போகும் ஒவ்வொருவரும் யெகோவாவின் நீதிநெறிகளுக்கு இசைய தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.—ஏசா. 11:1-5.
ராஜா “பயங்கரமானவைகளை” சாதிக்கிறார்
14. கிறிஸ்துவின் வலதுகரம் எப்படி “பயங்கரமானவைகளை” சாதிக்கும்? (கட்டுரையின் முதல் படத்தைப் பாருங்கள்.)
14 பட்டயத்தை அரையிலே கட்டிக்கொண்டு ராஜா சவாரி செய்கிறார். (சங். 45:3) அவர், பட்டயத்தை உருவி வலது கையால் தாக்குதல் நடத்தும் நேரம் வருகிறது. ‘அவருடைய வலதுகரம் பயங்கரமானவைகளை’ சாதிக்கும் என சங்கீதக்காரன் முன்னறிவிக்கிறார். (சங். 45:4) அர்மகெதோனில் யெகோவாவின் நியாயத்தீர்ப்புகளை நிறைவேற்றுவதற்காக இயேசு கிறிஸ்து சவாரி செய்கையில், அவருடைய விரோதிகளுக்கு எதிராக “பயங்கரமானவைகளை” சாதிப்பார். அவர் எதைப் பயன்படுத்தி சாத்தானுடைய உலகை அழிக்கப்போகிறார் என்பது நமக்குத் தெரியாது. ஆனால், அவர் நடவடிக்கை எடுக்கும்போது அவருடைய ஆட்சிக்குக் கீழ்ப்படியுமாறு கொடுக்கப்பட்ட எச்சரிப்பை அசட்டை செய்தவர்களின் இருதயம் பயத்தால் கலங்கும். (சங்கீதம் 2:11, 12-ஐ வாசியுங்கள்.) “உலகத்திற்கு என்ன நேரிடுமோ என்கிற பயத்தில் மக்களுக்குத் தலைசுற்றும். ஏனென்றால், வான மண்டலங்கள் அசைக்கப்படும்” என கடைசி நாட்களைப் பற்றிய தீர்க்கதரிசனத்தில் இயேசு சொன்னார். “பின்பு, மனிதகுமாரன் வல்லமையுடனும் மிகுந்த மகிமையுடனும் மேகத்தில் வருவதை அவர்கள் பார்ப்பார்கள்” என்றும் சொன்னார்.—லூக். 21:26, 27.
15, 16. கிறிஸ்துவோடு போரில் பங்கெடுக்கும் ‘பரலோகப் படையில்’ யாரெல்லாம் இருப்பார்கள்?
15 நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுவதற்காக, “வல்லமையுடனும் மிகுந்த மகிமையுடனும்” ராஜா வருவதைப் பற்றி வெளிப்படுத்துதல் புத்தகம் இவ்வாறு சொல்கிறது: “பரலோகம் திறந்திருப்பதைப் பார்த்தேன்; இதோ! ஒரு வெள்ளைக் குதிரை காணப்பட்டது. அதன்மேல் உட்கார்ந்திருந்தவர், உண்மையுள்ளவர் என்றும் சத்தியமுள்ளவர் என்றும் அழைக்கப்படுகிறவர்; அவர் நீதியாய் நியாயந்தீர்க்கிறவர், நீதியாய்ப் போர் செய்கிறவர். அதோடு, பரலோகப் படைவீரர்கள் வெள்ளைக் குதிரைகளின் மேல் ஏறி, அவரைப் பின்தொடர்ந்து சென்றார்கள்; அவர்கள் வெண்மையும் சுத்தமுமான நார்ப்பட்டு ஆடையை அணிந்திருந்தார்கள். தேசத்தாரை வெட்டிப் போடுவதற்காகக் கூர்மையான நீண்ட வாள் ஒன்று அவருடைய வாயிலிருந்து வெளிப்பட்டது; இரும்புக்கோலால் அவர்களை அவர் நொறுக்குவார்; அதோடு, சர்வ வல்லமையுள்ள கடவுளுடைய கடுங்கோபமாகிய திராட்சை ரச ஆலையில் திராட்சைப் பழங்களை மிதிப்பார்.”—வெளி. 19:11, 14, 15.
16 கிறிஸ்துவைப் பின்தொடர்ந்து வரும் பரலோக “படைவீரர்கள்” யார்? சாத்தானையும் பேய்களையும் பரலோகத்திலிருந்து பூமிக்குத் தள்ளுவதற்காக அவர் முதன்முதலில் பட்டயத்தை அரையிலே கட்டியபோது, இயேசுவுடன் ‘அவருடைய தூதர்கள்’ இருந்தார்கள். (வெளி. 12:7-9) அப்படியென்றால், அர்மகெதோன் போரின்போதும் கிறிஸ்துவோடு பரலோகத் தூதர்கள் இருப்பார்கள் என்ற முடிவுக்கு வருவது நியாயமானதே. அவருடைய படையில் வேறு யாராவது இருப்பார்களா? பரலோக நம்பிக்கையுள்ள தம் சகோதரர்களுக்கு இயேசு இவ்வாறு வாக்கு கொடுத்தார்: ‘என் தகப்பனிடமிருந்து நான் அதிகாரம் பெற்றதுபோல், முடிவுவரை என் கட்டளைகளைக் கடைப்பிடித்து ஜெயிக்கிறவன் எவனோ அவனுக்குத் தேசங்கள்மீது நான் அதிகாரத்தைக் கொடுப்பேன். அவன் இரும்புக் கோலால் தேசங்களை நொறுக்குவான்; அவற்றை மண் பாத்திரங்களைப் போல் சுக்குநூறாக்குவான்.’ (வெளி. 2:26, 27) பரலோக நம்பிக்கையுள்ள சகோதரர்கள் எல்லோரும் அந்தச் சமயத்திற்குள்ளாக உயிர்த்தெழுப்பப்பட்டிருப்பார்கள். ஆகவே, அந்தப் படையில் அவர்களும் இருப்பார்கள் எனத் தெரிகிறது. ஆம், அவர் இரும்புக் கோலால் தேசங்களை நொறுக்கும்போது, “பயங்கரமானவைகளை” சாதிப்பார்; அப்போது, அவருடைய சக ராஜாக்கள் அவரோடு இருப்பார்கள்.
ராஜா ஜெயித்து முடிக்கிறார்
17. (அ) கிறிஸ்து சவாரி செய்யும் வெள்ளைக் குதிரை எதை அடையாளப்படுத்துகிறது? (ஆ) வாளும் வில்லும் எதற்கு அடையாளமாக இருக்கின்றன?
17 சங்கீதம் 45:5-ஐ வாசியுங்கள். இயேசு வெள்ளைக் குதிரையின் மீது உட்கார்ந்திருப்பது, அவர் தொடுக்கும் போர் யெகோவாவின் கண்களில் தூய்மையாகவும் நீதியாகவும் இருக்கும் என்பதை அர்த்தப்படுத்துகிறது. (வெளி. 6:2; 19:11) வாளோடுகூட அவர் கையில் வில்லும் இருக்கிறது. இதைப் பற்றி நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “ஒரு வெள்ளைக் குதிரை வந்தது; அதன்மேல் உட்கார்ந்திருந்தவரின் கையில் ஒரு வில் இருந்தது; அவருக்கு ஒரு கிரீடம் கொடுக்கப்பட்டது; அவர் ஜெயிக்கிறவராகப் புறப்பட்டுச் சென்றார், ஜெயித்து முடிப்பதற்காகப் புறப்பட்டுச் சென்றார்.” வாளும் வில்லும், கிறிஸ்து தம்முடைய எதிரிகளை அழிப்பதற்குப் பயன்படுத்தப்போகும் முறைகளுக்கு அடையாளமாக இருக்கின்றன.
18. கிறிஸ்துவின் “அம்புகள் கூர்மையானவை” என்று எப்படிச் சொல்லலாம்?
18 “ராஜாவின் அம்புகள் கூர்மையானவைகள், அவைகள் ராஜாவுடைய சத்துருக்களின் இருதயத்திற்குள் பாயும்” என்றும் ‘ஜனசதளங்கள் அவருக்குக் கீழே விழுவார்கள்’ என்றும் கவிதை நடையில் சங்கீதக்காரன் முன்னறிவித்தார். அப்போது பூமி முழுவதும் பிணக்குவியலாக இருக்கும். இதைப் பற்றி எரேமியா இவ்வாறு முன்னறிவித்தார்: “அக்காலத்திலே பூமியின் ஒருமுனை துவக்கிப் பூமியின் மறுமுனைமட்டும் கர்த்தரால் கொலையுண்டவர்கள் கிடப்பார்கள்.” (எரே. 25:33) இதற்கு இணையான இன்னொரு தீர்க்கதரிசனம் இவ்வாறு சொல்கிறது: “ஒரு தேவதூதர் சூரியனில் நிற்பதைப் பார்த்தேன்; அவர் நடுவானத்தில் பறக்கிற எல்லாப் பறவைகளையும் நோக்கி, உரத்த குரலில், ‘இங்கே வாருங்கள், கடவுள் கொடுக்கிற மாபெரும் விருந்துக்குக் கூடிவாருங்கள்; ராஜாக்களின் சதையையும், படைத் தளபதிகளின் சதையையும், பலமிக்கவர்களின் சதையையும், குதிரைகளின் சதையையும், அவற்றின்மீது ஏறியிருந்தவர்களின் சதையையும், சுதந்திர மக்கள், அடிமைகள், சிறியவர்கள், பெரியவர்கள் என எல்லாருடைய சதையையும் சாப்பிட வாருங்கள்’ என்று அழைத்தார்.”—வெளி. 19:17, 18.
19. கிறிஸ்து எப்படி ‘வெற்றிவாகை சூட செல்வார்’? அதன்பின் எப்படி ஜெயித்து முடிப்பார்?
19 சாத்தானுடைய சீர்கெட்ட உலகை அழித்த பின்னர், கிறிஸ்து ‘தமது மகத்துவத்திலே,’ ‘வெற்றிவாகை சூட செல்வார்’. (சங். 45:4, NW) சாத்தானையும் அவனுடைய பேய்களையும் ஆயிரம் வருடங்களுக்கு அதலபாதாளத்திற்குள் தள்ளியடைப்பார்; அப்போது ஜெயித்து முடிப்பார். (வெளி. 20:2, 3) சாத்தானும் அவனுடைய பேய்களும் மரணத்திற்கு ஒத்த நிலையில், அதாவது எதுவுமே செய்ய முடியாத நிலையில் இருப்பார்கள். அப்போது, பூமியின் குடிகள் அவனுடைய தொல்லையின்றி வெற்றிவாகை சூடிய மகிமையான ராஜாவுக்கு முழுமையாகக் கீழ்ப்பட்டு வாழ்வார்கள். பூமி படிப்படியாக ஓர் அழகிய பூஞ்சோலையாய் மாறும். அதைப் பார்த்து மகிழ்வதற்குமுன், அவர்கள் தங்களுடைய ராஜாவோடும் அவருடைய பரலோகத் தோழர்களோடும் சேர்ந்து மற்றொரு சந்தோஷத்தை அனுபவித்து மகிழ்வார்கள். அந்த இனிய சம்பவத்தை அடுத்த கட்டுரையில் சிந்திப்போம்.
a சங்கீதம் 45:2 (NW): “எந்த மனிதரையும்விட நீர் மிகவும் அழகானவர். இனிய பேச்சு உங்களுடைய உதடுகளிலிருந்து பொழிகிறது. அதனால், கடவுள் உங்களை என்றென்றும் ஆசீர்வதித்திருக்கிறார்.”
ராஜாவான இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நல்ல செய்தியை மகிழ்ச்சிபொங்க அறிவிக்கிறோம்
[பக்கம் 7-ன் படம்]
பூமியைச் சுத்தப்படுத்துவதற்காக பறவைகளுக்கு அழைப்பு விடுக்கப்படும் (பாரா 18)