புதுச் சிருஷ்டிகள் உருவாக்கப்படுகின்றன!
ஞானியான சாலொமோன் ராஜா ஒரு சமயம் சொன்னார்: “சூரியனுக்குக் கீழே நூதனமானது ஒன்றுமில்லை.” (பிரசங்கி 1:9) நாம் வாழும் இந்தச் சடப்பொருள் சார்ந்த உலகின் சம்பந்தமாக அது உண்மையாக இருக்கிறது, ஆனால் யெகோவாவின் மாபெரும் ஆவிக்குரிய சிருஷ்டிப்புப் பகுதியைப் பற்றியதென்ன? அந்தப் பகுதியில் சாலொமோனைவிட பெரியவரும், ஆம், எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப்பெரிய ஒரு மனிதருமானவர் குறிப்பிடத்தக்க ஒரு புதுச் சிருஷ்டியானார். இது எவ்வாறு நிகழ்ந்தது?
நம்முடைய பொது சகாப்தம் 29-ஆம் ஆண்டில், பரிபூரண மனிதராகிய இயேசு யோர்தான் நதியில் யோவானால் முழுக்காட்டப்படத் தன்னை அளித்தார். “இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ, வானம் அவருக்குத் திறக்கப்பட்டது; தேவ ஆவி புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார். அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.” (மத்தேயு 3:16, 17) இவ்விதமாக மனிதனாகிய கிறிஸ்து இயேசுவே கடவுளுடைய சித்தத்தைச் செய்வதற்கு அபிஷேகம் பண்ணப்பட்ட புதுச் சிருஷ்டியில் முதலாவதானவராக இருந்தார். பின்னர், இயேசு, அவருடைய பலிக்குரிய மரணத்தின் அடிப்படையில், கடவுளுக்கும் தெரிந்துகொள்ளப்பட்ட ஒரு மனித தொகுதிக்குமிடையே புதிய உடன்படிக்கையின் மத்தியஸ்தராக ஆனார். இவர்களில் ஒவ்வொருவரும் பரலோக ராஜ்யத்தில் இயேசுவோடுகூட ஆட்சிசெய்யும் எதிர்பார்ப்போடு பரலோக நம்பிக்கைக்குக் கடவுளுடைய ஆவியால் பிறப்பிக்கப்பட்ட ஒரு “புதுச் சிருஷ்டி”யாக ஆகியிருக்கிறார்.—2 கொரிந்தியர் 5:17; 1 தீமோத்தேயு 2:5, 6; எபிரெயர் 9:15.
நூற்றாண்டுகளினூடாக, இந்த அபிஷேகம்பண்ணப்பட்ட, ஆவியால்-பிறப்பிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள், மெய்யான கிறிஸ்தவ சபையாக கிறிஸ்துவோடு ஐக்கியத்திற்குள் கூட்டிச்சேர்க்கப்பட்டு வந்திருக்கிறார்கள். இந்த மெய்யான கிறிஸ்தவ சபைதானேயும் ஒரு புதுச் சிருஷ்டியாக இருக்கிறது. பேதுரு அப்போஸ்தலன் சொல்கிறவிதமாகவே, ஒரு நோக்கத்துக்காக அதை இந்த உலகத்தினின்று வெளியே அழைத்திருக்கிறார்: “நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.” (1 பேதுரு 2:9) கடவுளுடைய முதல் புதுச் சிருஷ்டியான கிறிஸ்து இயேசுவைப் போல, அடுத்துவந்த இந்தப் புதுச் சிருஷ்டிக்கு நற்செய்தியைப் பிரசங்கிக்கும் அடிப்படையான கடமை இருக்கிறது. (லூக்கா 4:18, 19) கடைசியாக எண்ணிக்கையில் 1,44,000-மாக இருக்கும் அதன் அங்கத்தினர்கள், தனிப்பட்டவர்களாக, கட்டாயமாகவே “மெய்யான நீதியிலும், பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ள” வேண்டும். (எபேசியர் 4:24; வெளிப்படுத்துதல் 14:1, 3) இது கலாத்தியர் 5:22, 23-ல் விவரிக்கப்பட்டிருக்கும் “ஆவியின் கனிகளை” வளர்த்துக்கொண்டு தங்களுடைய உக்கிராணக்கார வேலையை உண்மையுடன் கவனித்துக்கொள்வதைத் தேவைப்படுத்துகிறது.—1 கொரிந்தியர் 4:2; 9:16.
நவீன காலங்களில் இந்தப் புதுச் சிருஷ்டியைப் பற்றி என்ன? பைபிள் காலஅட்டவணை காண்பிக்கிறபடியே, 1914-ம் ஆண்டு, வெளிப்படுத்துதல் 11:15-லுள்ள வார்த்தைகள் நிறைவேற்றமடைந்தன: “அப்பொழுது உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், [யெகோவா] அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின; அவர் சதாகாலங்களிலும் ராஜ்யபாரம்பண்ணுவார்.” புதிதாக ஏற்படுத்தப்பட்ட அரசராக கிறிஸ்துவின் முதல் செயல், சாத்தானையும் அவனுடைய பேய் தூதர்களையும் பரலோகத்திலிருந்து பூமிக்குக் கீழேத் தள்ளுவதாக இருந்தது. இது முதல் உலகப் போர் மற்றும் அதோடு சேர்ந்து வந்த வேதனைகளின் வடிவில் “பூமிக்கு ஐயோ”வாக இருந்தது.—வெளிப்படுத்துதல் 12:9, 12, 17.
இது அவர்கள் இயேசுவின் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றுவதில் பங்குகொள்ளவேண்டும் என்பதற்கு, பூமியின் மீதிருந்த புதுச் சிருஷ்டியின் மீதியானோருக்கு எச்சரிக்கையாகவும்கூட சேவித்தது: “[ஸ்தாபிக்கப்பட்ட] ராஜ்யத்தினுடைய இந்த நற்செய்தி குடியிருக்கப்பட்ட பூமி முழுவதிலுமுள்ள [NW] சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.” அந்த “முடிவு” என்ன? இயேசு தொடர்ந்து விளக்குகிறார்: “உலகமுண்டானது முதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும். அந்நாட்கள் குறைக்கப்படாதிருந்தால், ஒருவனாகிலும் தப்பிப்போவதில்லை; தெரிந்துகொள்ளப்பட்டவர்களினிமித்தமோ அந்த நாட்கள் குறைக்கப்படும்.”—மத்தேயு 24:3-14, 21, 22.
இந்தப் பூமியில் இதுவரையாக ஒருபோதும் மேற்கொள்ளப்பட்டிராத மிக விரிவான பிரசங்க ஏற்பாட்டில் சுறுசுறுப்பாய் ஈடுபட யெகோவாவின் ஆவி அவருடைய புதுச் சிருஷ்டியின் அபிஷேகம்பண்ணப்பட்டவர்களைத் தூண்டியது. ஒருசில ஆயிரங்களாக 1919-ல் இருந்த இந்த வைராக்கியமுள்ள ராஜ்ய அறிவிப்பாளர்களின் எண்ணிக்கை 1930-களின் மத்திபத்திற்குள் சுமார் 50,000-மாக அதிகரித்தது. முன்னறிவிக்கப்பட்டபடியே, “அவைகளின் சத்தம் பூமியெங்கும் அவைகளின் வசனங்கள் பூச்சக்கரத்துக்குக் கடைசிவரைக்கும்” சென்றது.—ரோமர் 10:18.
புதுச் சிருஷ்டியின் மீதியானவர்கள் மாத்திரமே இரட்சிப்புக்காக கூட்டிச்சேர்க்கப்படுவார்களா? இல்லை. பரலோகத்துக்குச் செல்ல ஆயத்தமாயிருக்கும் இந்த ஆவிக்குரிய இஸ்ரவேலர் மாத்திரமல்லாமல், ஆனால் “சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள்” கூட்டிச்சேர்க்கப்படுவது பூர்த்தியாகும் வரையாகவும் கடவுளுடைய தூதர்கள் மகா உபத்திரவத்தின் காற்று அடியாதபடிக்குப் பிடித்திருப்பதாக தீர்க்கதரிசனம் குறிப்பிட்டிருந்தது. அவர்களுடைய முடிவு என்னவாயிருக்கும்? ஏன், அவர்கள் ஒரு பரதீஸிய பூமியில் நித்திய ஜீவனை அனுபவிப்பதற்காக “மிகுந்த உபத்திரவத்திலிருந்து” சிறிதும் தீங்கிழைக்கப்படாமல் வெளியே வருவார்கள்!—வெளிப்படுத்துதல் 7:1-4, 9, 14.
மகிழ்ச்சிகரமாக, சுமார் 229 தேசங்களிலிருந்து கூட்டிச்சேர்க்கப்பட்ட இந்தத் திரள் கூட்டம் ஏறக்குறைய 45,00,000 சுறுசுறுப்புள்ள சாட்சிகளைக் கொண்டதாக வளர்ச்சியடைந்திருக்கிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் 17-ம் தேதி இயேசுவின் நினைவு ஆசரிப்பு நாளுக்கு வந்திருந்த ஆஜர் எண்ணிக்கை 1,14,31,171 இன்னும் அநேகர் வந்துகொண்டிருப்பதைக் காண்பிக்கிறது. இந்த எல்லா லட்சக்கணக்கான ஆட்களிலும், புதுச் சிருஷ்டியின் பூமியிலிருக்கும் மீதியானோராக உரிமைபாராட்டும் 8,683 பேர் மாத்திரமே நினைவு ஆசரிப்புச் சின்னங்களில் பங்குகொண்டனர். இந்தச் சிறிய தொகுதியிலுள்ளவர்கள், தாங்களாகவே, இன்றைய மிகப் பெரிய பிரசங்கிப்பு வேலையை ஒருபோதும் செய்து முடித்திருக்க முடியாது. திரள் கூட்டத்தை உண்டுபண்ணும் லட்சக்கணக்கானோர் இப்பொழுது வேலையை செய்துமுடிப்பதில் அவர்களோடு தோளோடு தோள் நின்று வேலை செய்கின்றனர். (செப்பனியா 3:9) மேலுமாக, இஸ்ரவேல் அல்லாத நிதனீமியர்கள் எருசலேமின் மதில்களைப் பழுதுபார்ப்பதில் ஆசாரியர்களோடு சேர்ந்து வேலைசெய்தது போலவே, திரள் கூட்டத்தைச் சேர்ந்த நன்கு-பயிற்றுவிக்கப்பட்ட உறுப்பினர்கள் ஆவிக்குரிய இஸ்ரவேலின் அபிஷேகம்பண்ணப்பட்ட ஆளும் குழுவினரோடு சேர்ந்து இப்பொழுது நிர்வாக மற்றும் மற்ற பொறுப்புள்ள வேலைகளைச் செய்துவருகிறார்கள்.—நெகேமியா 3:22-26.
“புதிய வானத்தையும் புதிய பூமியையும்” சிருஷ்டித்தல்
இந்தக் கூட்டிச்சேர்ப்போடு சேர்ந்துவரும் மகிழ்ச்சிதான் என்னே! யெகோவா சொன்னவிதமாகவே இது இருக்கிறது: “நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறேன்; முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை. நான் சிருஷ்டிக்கிறதினாலே நீங்கள் என்றென்றைக்கும் மகிழ்ந்து களிகூர்ந்திருங்கள்; இதோ, எருசலேமைக் களிக்கூருதலாகவும், அதின் ஜனத்தை மகிழ்ச்சியாகவும் சிருஷ்டிக்கிறேன். நான் எருசலேமின்மேல் களிகூர்ந்து, என் ஜனத்தின்மேல் மகிழ்ச்சியாயிருப்பேன்; அழுகையின் சத்தமும், கூக்குரலின் சத்தமும் அதில் இனிக் கேட்கப்படுவதில்லை.” (ஏசாயா 65:17-19) யெகோவா சிருஷ்டிக்கும் புதிய வானங்கள் கடைசியாக கிறிஸ்து இயேசுவும் கடந்த 19 நூற்றாண்டுகளாக மனிதவர்க்கத்தின் மத்தியிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்ட புதுச் சிருஷ்டியின் உயிர்த்தெழுப்பப்பட்ட 1,44,000 உறுப்பினர்களும் அடங்கியதாக இருக்கும். இது சொல்லர்த்தமான எருசலேமில், சாலொமோனின் நாட்களிலும்கூட ஆட்சிசெய்த எந்தப் பூமிக்குரிய அரசாங்கத்தைக் காட்டிலும் மிக மிக அதிக மகிமைப்பொருந்தினதாய் இருக்கிறது. இது வெளிப்படுத்துதல் அதிகாரம் 21-ல் ஒளிவீசும் அதனுடைய எல்லா அழகோடும்கூட விவரிக்கப்பட்டிருக்கும் பரிசுத்த நகரமாகிய புதிய எருசலேமோடு இணைந்துவிடுகிறது.
புதிய எருசலேம் என்பது கிறிஸ்துவின் ஆவிக்குரிய மணவாட்டியாக, தங்கள் மரணத்துக்கும் ஆவிக்குரிய உயிர்த்தெழுதலுக்கும் பின்பு பரலோகத்தில் தங்கள் மணவாளனைச் சேர்ந்துகொள்ளும் அவரைப் பின்பற்றிவரும் அபிஷேகம்பண்ணப்பட்ட 1,44,000 பேராக இருக்கிறார்கள். அவர்கள் வெளிப்படுத்துதல் 21:1-4-ல் “தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கி” வருவதாக, அதாவது, இங்கே பூமியில் மனிதவர்க்கத்துக்கு ஆசீர்வாதங்களைக் கொண்டுவருவதில் அவரால் பயன்படுத்தப்படுவதாக வருணிக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்விதமாக தீர்க்கதரிசனம் நிறைவேறுகிறது: “இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார். அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின.”
அந்தப் புதிய வானங்களைக் கடவுள் சிருஷ்டிப்பதற்காக நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கலாம்! இத்தனை நீண்டகாலமாக மனிதவர்க்கத்தைத் தொல்லைக்குட்படுத்தியிருக்கும் நிலையில்லாத, ஊழல்மிகுந்த ஆட்சிகளைப் போல் இல்லாமல், கடவுளுடைய இந்த அரசாங்க ஏற்பாடு நிரந்தரமானதாக இருக்கும். புதுச் சிருஷ்டியும் அவர்களுடைய ஆவிக்குரிய சந்ததியான திரள் கூட்டத்தாரும், கடவுளுடைய மேலுமான வாக்குறுதிகளில் களிகூருகிறார்கள்: “நான் படைக்கப்போகிற புதிய வானமும் புதிய பூமியும் எனக்கு முன்பாக நிற்பதுபோல, உங்கள் சந்ததியும் உங்கள் நாமமும் நிற்குமென்று கர்த்தர் [யெகோவா, NW] சொல்லுகிறார்.”—ஏசாயா 66:22.
“புதிய பூமி” அபிஷேகம்பண்ணப்பட்டவர்களாலான புதுச்சிருஷ்டியின் இந்தச் சந்ததியோடு ஆரம்பமாகிறது. இது பூமியின் மீது புதிய, கடவுள்-பயமுள்ள மனிதவர்க்க சமுதாயமாக இருக்கிறது. இன்று மனித சமுதாயத்திலுள்ள பகைமை, குற்றச்செயல், வன்முறை, ஊழல் மற்றும் ஒழுக்கக்கேடு, நன்மைசெய்ய விருப்பமுள்ள புதிய வானங்களுடைய வழிநடத்தலின் கீழ் இயங்கும் ஒரு புதிய மனித சமுதாயமாக முழுமையாக மாற்றப்படுவதற்குரிய தேவையை வலியுறுத்துகிறது. அதுதானே யெகோவாவின் நோக்கமாக இருக்கிறது. புதிய வானங்களைச் சிருஷ்டித்தது போலவே, சமாதானமுள்ள புதிய உலக சமுதாயத்தின் கருவாக திரள்கூட்டமான ஜனங்களைக் கூட்டிச்சேர்ப்பதன் மூலம் அவர் ஒரு புதிய பூமியை சிருஷ்டித்துக்கொண்டிருக்கிறார். இந்தச் சமுதாயம் மட்டுமே “மிகுந்த உபத்திரவத்திலிருந்து” உயிரோடே பாதுகாக்கப்படும்.—வெளிப்படுத்துதல் 7:14.
மிகுந்த உபத்திரவத்தைத் தொடர்ந்து நாம் என்ன எதிர்பார்க்கலாம்? புதிய பூமியை ஆளப்போகும் புதிய வானங்களை உண்டுபண்ணும் ஆரம்ப அங்கத்தினர்களாகியத் தம்முடைய அப்போஸ்தலர்களிடம் பேசுகையில், இயேசு இவ்விதமாக வாக்களித்தார்: “மறுஜென்மகாலத்திலே [மறுசிருஷ்டிப்பின்காலத்திலே, NW] மனுஷகுமாரன் தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும்போது, என்னைப் பின்பற்றின நீங்களும், பன்னிரண்டு சிங்காசனங்களின்மேல் வீற்றிருப்பீர்கள்.” (மத்தேயு 19:28) இந்தப் புதிய எருசலேமைச் சேர்ந்த 1,44,000 பேரும் மனிதவர்க்கத்தை நியாயந்தீர்ப்பதில் இயேசுவோடு பங்குகொள்வர். தன்னலம் மற்றும் பகைமையின் மீது கட்டியெழுப்பப்பட்டிருக்கும் மனித சமுதாயத்தில் அதற்குப் பதிலாக அப்போது அன்பு இருக்கும். குல, இன, தேசீய பிரச்னைகள் அடியோடு அழிக்கப்படும். உயிர்த்தெழுதல் படிப்படியாக அன்பானவர்களைத் திரும்பக்கொண்டுவரும். கோடிக்கணக்கில் இருக்கும் உண்மையுள்ள மனிதவர்க்கம், பரதீஸாக மாற்றப்பட்ட பூமியின் மீது நித்திய ஜீவனுக்கு உயர்த்தப்பட்ட ஒரு பெரிய ஐக்கியப்பட்ட குடும்பமாக இருக்கும்.
இது ஒரு கற்பனை உலகத்துக்கும் அல்லது ஒளிவிடத்து பரதீஸிக்கும் மிக அதிகமாக இருக்கும். அது ஒரு நிரந்தரமான சிருஷ்டிப்பாக இருக்கும்—“அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்”! (2 பேதுரு 3:13) நிச்சயமாகவே இது ஒரு மகத்தான எதிர்பார்ப்பாகும், “இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்,” என்று சொல்லிவிட்டு “இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள்,” என்பதாக விசுவாசத்தை-ஏற்படுத்தும் கூற்றைச் சேர்த்துச் சொன்னவருடைய நேர்த்தியான வாக்குறுதியாக இருக்கிறது.—வெளிப்படுத்துதல் 21:5.