படிப்பு 3
பைபிள்—நமது முக்கிய பாடப்புத்தகம்
1 தேவராஜ்ய ஊழியப் பள்ளியில், நமது முக்கிய பாடப்புத்தகம் பைபிளாகும். நற்செய்தியின் ஊழியர்களாக நாம் அதில் நன்கு பழக்கப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அது எவ்விதமாக உருவானது, அதில் என்ன அடங்கியிருக்கிறது மற்றும் அதை எவ்விதமாக பயன்படுத்துவது என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும்.
2 பைபிள் எழுதுதல், பொ.ச.மு. 1513-ல் மோசே பதிவை எழுதும்படியாக கட்டளையிடப்பட்ட சமயத்தில் ஆரம்பமானது. அப்போஸ்தலன் யோவான் பொ.ச. முதல் நூற்றாண்டின் பிற்பகுதியில்—சுமார் பதினாறு நூற்றாண்டுகளுக்குப்பின் தன்னுடைய எழுத்துக்களை முடித்து, இவ்விதமாக பைபிள் எழுதுதலை முடிவுக்குக் கொண்டுவந்தார். இன்று பைபிள் முழுமையாகவோ பகுதியாகவோ சுமார் 2,000 மொழிகளில் கிடைக்கிறது. ஒருசில புத்தகங்களே லட்சக்கணக்கான பிரதிகள் விநியோகத்தை எட்டுகையில், பைபிள் கோடிக்கணக்கில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. வேறு எந்தப் புத்தகமும் அந்தப் பதிவுக்கு ஈடாக முடியாது. நிச்சயமாகவே, ஒரு மதப்புத்தகம் வெறுமனே எழுதப்படுவதும், நூற்றுக்கணக்கான ஆண்டுகள் அது பாதுகாக்கப்படுவதும் லட்சக்கணக்கானோர் அதை உயர்வாக மதிப்பதும், அது தெய்வீக மூலத்திலிருந்து வந்தது என்று நிரூபிப்பதில்லை. அது கடவுளால் ஏவப்பட்டெழுதப்பட்டது என்பதைக் காண்பிக்கும் தெய்வீக எழுத்துரிமைச் சான்றுகளைத் தாங்கியிருக்க வேண்டும். பைபிளை கவனமாக ஆராய்வது, இது உண்மையில் இத்தகைய ஆதார சான்றுகளை கொண்டிருக்கிறது என்பதை உண்மை மனதுடைய ஆட்களை நம்பவைக்கிறது.
3 ஆரம்பத்தில் எபிரெயு, அரமேயிக் மற்றும் கிரேக்குவில் எழுதப்பட்ட பைபிள், நமக்குத் தெரிந்திருக்கிறபடி அறுபத்தாறு புத்தகங்களைக் கொண்டிருக்கிறது. புத்தகங்களின் சரியான எண்ணிக்கையோ (ஒருசில இணைக்கப்பட்டிருக்கிறதா தனித்தனியாக இருக்கிறதா), அல்லது ஒன்று மற்றொன்றைத் தொடர்ந்துவரும் குறிப்பிட்ட வரிசையோ முக்கியமில்லை. அதிகாரப்பூர்வமாக உண்மையென ஏற்றுக்கொள்ளப்பட்ட பைபிள் புத்தகங்களின் பட்டியல் அல்லது ஏவப்பட்டெழுதப்பட்ட புத்தகங்களின் அட்டவணை முடிவுசெய்யப்பட்டு நீண்ட காலமான பின்னும்கூட புத்தகங்கள் தனித்தனி சுருள்களாகவே இருந்தன. பண்டைய அட்டவணைகளில் புத்தகங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ள வரிசைமுறை வித்தியாசப்படுகின்றன. ஆனால் அதிக முக்கியமானதென்னவென்றால் எந்தப் புத்தகங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன என்பதே. உண்மையில், இப்பொழுது அதிகாரப்பூர்வமாக உண்மையென ஏற்றுக்கொள்ளப்பட்ட பைபிள் புத்தகங்களின் பட்டியலில் இருக்கும் அந்தப் புத்தகங்கள் மாத்திரமே ஏவப்பட்டெழுதப்பட்டதற்கு உறுதியான எந்த உரிமைபாராட்டலையும் கொண்டிருக்கமுடியும். பூர்வ காலங்களிலிருந்தே மற்ற எழுத்துக்களைச் சேர்ப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் தடுத்துநிறுத்தப்பட்டிருக்கின்றன.
4 ஆரம்பத்தில் பைபிள் தொடர்ச்சியாக, எழுத்துக்கள் வரிசையாக இடைவெளியில்லாமல் எழுதப்பட்டது. பொ.ச. ஒன்பதாம் நூற்றாண்டில்தானே, நிறுத்தக்குறிகளின் மூலமாக வாக்கியங்களைப் பிரிக்கும் ஒரு முறை உருவாக்கப்பட்டது. நம்முடைய நவீன முறையான நிறுத்தக் குறிகளின் முக்கிய அம்சங்கள் அச்சடிப்பு அறிமுகப்படுத்தப்பட்டதன் விளைவாக பொ.ச. பதினைந்தாம் நூற்றாண்டில் தோன்றின. அதிகாரங்களாகவும் வசனங்களாகவும் பைபிளின் உட்பிரிவை (கிங் ஜேம்ஸ் வர்ஷன் 1,189 அதிகாரங்களையும் 31,102 வசனங்களையும் கொண்டிருக்கிறது) மூல எழுத்தாளர்கள் செய்யவுமில்லை. இது பல நூற்றாண்டுகளுக்குப் பின்னரே வந்தது. யூத கல்விமான்களாகிய யூதப் புலவர்கள் (Masoretes), எபிரெய வேதாகமத்தை வசனங்களாகப் பிரித்தனர். பின்னர் பொ.ச. பதிமூன்றாம் நூற்றாண்டில், அதிகாரங்களின் பிரிவுகள் சேர்க்கப்பட்டன.
5 ஏவப்பட்டெழுதப்பட்ட புத்தகங்களின் தொகுப்பு. யெகோவாவின் ஏவப்பட்டெழுதப்பட்ட வார்த்தையைப் பதிவுசெய்வதற்கு, ஒரே சிறந்த ஆசிரியருக்குச் செயலர்களாக சுமார் நாற்பது வித்தியாசமான ஆட்கள் சேவித்தனர். ‘வேதவாக்கியங்களெல்லாம் கடவுளால் ஏவப்பட்டெழுதப்பட்டிருக்கிறது,’ இது “மற்ற வேதவாக்கியங்க”ளோடுகூட கிறிஸ்தவ கிரேக்க வேதாகம எழுத்துக்களையும் உட்படுத்துகிறது. (2 தீ. 3:16, NW; 2 பே. 3:15, 16) “ஏவப்பட்டெழுதப்பட்டது” என்பது (உலகியல் ஓவியர்கள் அல்லது கவிஞர்களைப் பற்றி அடிக்கடி சொல்லப்படுவது போல) உயர்ந்தளவான சாதனைக்காக அறிவாற்றலையும் உணர்ச்சிகளையும் வெறுமனே ஊக்குவிப்பதை அர்த்தப்படுத்தாமல், கடவுள்தாமே எழுதியது போன்று அதே அதிகாரத்தையுடைய தவறில்லாத எழுத்துக்களைப் படைப்பதாக இருக்கிறது. கடவுள் தம்முடைய வழிநடத்துதலின்பேரில், காரியங்களைப் பதிவுசெய்வதற்காக அவர் பயன்படுத்திய உண்மையுள்ள மனிதர்கள்மேல் தம்முடைய சொந்த ஆவி செயல்படும்படி செய்தார். இந்தக் காரணத்தினிமித்தமாக, அப்போஸ்தலன் பேதுரு இவ்வாறு அறிவிக்க முடிந்தது: “தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்தஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்.” (2 பே. 1:21) இருப்பினும், குறைந்தபட்சம் ஒரு சமயத்திலாவது, கடவுள்தாமே எழுத்துருவில் தகவல் அளித்திருக்கிறார். இதுவே “தேவனுடைய விரலினால் எழுதப்பட்ட கற்பலகைகளாகிய சாட்சியின் இரண்டு பலகைகளை” கடவுள் மோசேயிடம் கொடுத்த பத்துக் கற்பனைகளாகும்.—யாத். 31:18.
6 சில சந்தர்ப்பங்களில், தகவல் வாய்மொழி கட்டளையின் மூலம் வார்த்தைக்கு வார்த்தை ஒப்படைக்கப்பட்டது. (யாத். 34:27) தீர்க்கதரிசிகளும்கூட தெரிவிப்பதற்கு அடிக்கடி திட்டவட்டமான செய்திகள் கொடுக்கப்பட்டனர். (1 இரா. 22:14; எரே. 1:7) இருப்பினும் வேதாகமத்தைப் பதிவுசெய்ய கடவுள் பயன்படுத்திய மனிதர்கள் எப்பொழுதுமே எழுதுவதற்குச் சொன்ன பொருளை வெறுமனே பதிவுசெய்யவில்லை என்பதை அத்தாட்சி காண்பிக்கின்றது. உதாரணமாக, யோவான் வெளிப்படுத்துதலை கடவுளுடைய தூதன் மூலமாக “அடையாளங்களில்” பெற்றுக்கொண்டு பின்வருமாறு சொல்லப்பட்டார்: “நீ காண்கிறதை ஒரு புஸ்தகத்தில் எழுது.” (வெளி. 1:1 [NW], 2, 10, 11) ஆகவே பைபிள் எழுத்தாளர்கள் கண்ட தரிசனங்களை வருணிக்க வார்த்தைகளையும் சொற்றொடர்களையும் தெரிவுசெய்ய அனுமதிப்பதைக் கடவுள் நல்லதென்று கண்டதாக தெரிகிறது. முடிவான பொருள் திருத்தமாகவும் தம்முடைய நோக்கத்துக்கு இசைவாகவும் இருக்கும்பொருட்டு அவற்றின்பேரில் போதுமான வழிகாட்டுதலை எப்பொழுதும் கொடுத்துவந்திருக்கிறார். (பிர. 12:10) தெளிவாகவே இது பைபிள் புத்தகங்களில் காணப்படும் வித்தியாசப்பட்ட எழுத்துநடைகளை விளக்குவதாயுள்ளது.
7 உட்புற சான்றுகளை முன்னிட்டுப்பார்க்கையில், மோசேயின் எழுத்துக்கள் கடவுளால் ஏவப்பட்டெழுதப்பட்டன என்பதற்கு எந்தச் சந்தேகமும் இருக்கமுடியாது. இஸ்ரவேலரின் தலைவனாய் ஆக வேண்டும் என்பது மோசேயின் எண்ணமாக இருக்கவில்லை. முதலில் மோசே இந்த யோசனையின்பேரில் பின்வாங்கினார். (யாத். 3:10, 11; 4:10-14) மாறாக, கடவுள் மோசேயை எழுப்பி, அற்புதமான வல்லமைகளை அவருக்குக் கொடுத்தார். மந்திரவாதிகளும்கூட மோசே செய்தது கடவுளிடமிருந்து தோன்றியது என ஒப்புக்கொள்ளவேண்டியதாக இருந்தது. (யாத். 4:1-9; 8:16-19) கடவுளுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிதலாகவும், பரிசுத்த ஆவியின் தெய்வீக ஆதார சான்றுகளோடும், மோசே முதலாவதாக பேசவும் பின்னர் பைபிளின் ஒரு பகுதியை எழுதவும் உந்துவிக்கப்பட்டார். (யாத். 17:14) மோசேயின் மரணத்தைத் தொடர்ந்து, யோசுவா, சாமுவேல், காத், நாத்தான் ஆகியோரின் எழுத்துக்கள் (யோசுவா, நியாயாதிபதிகள், ரூத், 1 மற்றும் 2 சாமுவேல்) சேர்க்கப்பட்டன. இராஜாக்கள் தாவீது மற்றும் சாலொமோன் பரிசுத்த எழுத்துக்களுடைய உருவாகிவந்த பைபிள் புத்தகங்களை எழுதுவதில் பங்குகொண்டு உதவினர். பின்னர் யோனா முதல் மல்கியா வரையான தீர்க்கதரிசிகள் தோன்றி ஒவ்வொருவரும் பைபிள் புத்தகங்களை எழுதுவதில் பங்குகொண்டு உதவினர். ஒவ்வொருவரும் யெகோவா குறிப்பிட்டிருந்த உண்மை தீர்க்கதரிசிகளுக்குரிய தேவைகளை நிறைவுசெய்தனர்: அவர்கள் யெகோவாவின் பெயரில் பேசினார்கள், அவர்கள் சொன்ன தீர்க்கதரிசனங்கள் நிறைவேறின, மற்றும் மக்களை அவர்கள் கடவுளிடமாகத் திருப்பினர்.—உபா. 13:1-3; 18:20-22.
8 யெகோவா மனிதர்களை எழுதும்படி ஏவியவிதமாகவே, ஏவப்பட்ட இந்த எழுத்துக்கள் தொகுக்கப்படுவதை அவர் வழிநடத்துவார் என்பது நியாயமாகவே இருக்கிறது. யூத பாரம்பரியத்தின்படி, நாடுகடத்தப்பட்ட யூதர்கள் மீண்டும் யூதாவில் குடியேறிய பின்பு எஸ்றா இந்த வேலையில் கைகொடுத்தார். ஏவப்பட்ட பைபிள் எழுத்தாளர்களில் ஒருவராக, ஓர் ஆசாரியராக, மற்றும் ‘மோசேயின் நியாயப்பிரமாணத்தை நகல் எடுப்பதில் கைதேர்ந்தவராக,’ அவர் இந்த வேலைக்கு மிகவும் தகுதிபெற்றவராய் இருந்தார். (எஸ்றா 7:1-11) பொ.ச.மு. ஐந்தாம் நூற்றாண்டின் முடிவுக்குள் எபிரெய வேதாகமத்தினுடைய அதிகாரப்பூர்வமாக உண்மையென ஏற்றுக்கொள்ளப்பட்ட பைபிள் புத்தகங்களின் பட்டியல் சரியாக நிர்ணயிக்கப்பட்டாயிற்று. இன்று நாம் வைத்திருப்பதும், இப்பொழுது முப்பத்தொன்பது புத்தகங்களாக பிரிக்கப்பட்டுள்ளதுமான அதே எழுத்துக்களை அது உடையதாய் இருந்தது. மனிதர்களின் எந்த ஒரு குழுவும் அவற்றை அதிகாரப்பூர்வமாக உண்மையென ஏற்றுக்கொள்ளப்பட்ட பைபிள் புத்தகப் பட்டியலாக ஆக்கவில்லை; அவற்றின் ஆரம்பத்திலிருந்தே அவை தெய்வீக அங்கீகாரத்தைக் கொண்டிருந்தன. அதிகாரப்பூர்வமாக உண்மையென ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் எபிரெய வேதாகம புத்தகங்களின் பட்டியலுக்கு அதிக முடிவான நிரூபணம், இயேசு கிறிஸ்து மற்றும் கிறிஸ்தவ கிரேக்க வேதாகம எழுத்தாளர்களின் குற்றஞ்சாட்டப்பட முடியாத வார்த்தையாகும். ஏவப்பட்டெழுதப்பட்ட எபிரெய வேதாகமத்தை தாராளமாக பயன்படுத்தியபோதிலும், அவர்கள் ஒருபோதும் தள்ளுபடியாகம புத்தகங்களிலிருந்து மேற்கோள் காட்டவில்லை.—லூக். 24:44, 45.
9 எபிரெய வேதாகமத்தைப் போலவே கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் இருபத்தேழு புத்தகங்கள் எழுதப்பட்டு தொகுக்கப்பட்டன. கிறிஸ்து “மனுஷர்களுக்கு வரங்களை அளித்தார்,” ஆம் “அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும் போதகராகவும் ஏற்படுத்தினார்.” (எபே. 4:8, 11-13) தங்கள்மீது கடவுளுடைய பரிசுத்த ஆவியை கொண்டிருந்த காரணத்தால், அவர்கள் கிறிஸ்தவ சபைக்கு ஆரோக்கியமான கோட்பாட்டை தெரிவித்துவந்தனர். கடவுளுடைய ஆவி அவர்களுக்குப் போதித்து, அவர்களை வழிநடத்தி, தம்மிடமிருந்து கேட்ட காரியங்களை நினைப்பூட்டி, அவர்களுக்கு உதவிசெய்து, வரப்போகிற காரியங்களையும் வெளிப்படுத்தும் என்பதாக இயேசு தம்முடைய அப்போஸ்தலருக்கு உறுதியளித்தார். (யோவா. 14:26; 16:13) இது அவர்களுடைய சுவிசேஷ பதிவுகளின் உண்மைத்தன்மைக்கும் திருத்தமானத் தன்மைக்கும் உறுதியளித்தது.
10 அதிகாரப்பூர்வமாக உண்மையென ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு உண்மையான பரிசோதனையானது, எத்தனை தடவைகள் அல்லது எந்த அப்போஸ்தலரல்லாத எழுத்தாளரால் குறிப்பிட்ட ஒரு புத்தகம் மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது என்பது அல்ல. புத்தகத்தின் பொருளடக்கம்தானே அது பரிசுத்த ஆவியின் விளைபொருள் என்பதற்குரிய ஆதாரத்தை அளிக்க வேண்டும். இதன் விளைவாக, அது மூடநம்பிக்கை, பேய்க் கொள்கை அல்லது சிருஷ்டி வழிபாட்டை ஊக்குவிக்க முடியாது. அது பைபிளின் மீதமுள்ள பாகத்தோடு முழு இசைவாக இருக்க வேண்டும். ஒவ்வொரு புத்தகமும் தெய்வீக “ஆரோக்கியமான வசனங்களின் சட்டத்”துக்கு ஏற்பவும் இயேசுவின் போதனைகளுக்கு இசைவாகவும் இருக்க வேண்டும். (2 தீ. 1:13) அப்போஸ்தலர் தெளிவாகவே தெய்வீக அதிகாரத்தோடே பேசினார்கள். பரிசுத்த ஆவியின் மூலமாக இப்படிப்பட்டவை கடவுளுடையதோ அல்லவோ என்பதாக ‘ஆவிகளைப் பகுத்தறிய’ முடிகிறவர்களாக இருந்தார்கள். (1 கொ. 12:4, 10) கடைசி அப்போஸ்தலன் யோவானின் மரணத்தோடு, தேவாவியால் ஏவப்பட்டிருந்த மனிதர்களின் இந்த நம்பகமான சங்கிலித்தொடர் முடிவுக்கு வந்தது. ஆகவே வெளிப்படுத்துதலோடும், யோவானின் சுவிசேஷம் மற்றும் அவருடைய கடிதங்களோடும் அதிகாரப்பூர்வமாக உண்மையென ஏற்றுக்கொள்ளப்பட்ட பைபிள் புத்தகங்களின் பட்டியல் முடிவுற்றது. நம்முடைய பைபிளின் அறுபத்தாறு புத்தகங்கள், அவற்றின் ஒத்திசைவின் மூலமாக பைபிளின் மாறா நிலைக்குச் சான்றளித்து, அது நிச்சயமாகவே யெகோவாவின் ஏவப்பட்டெழுதப்பட்ட சத்திய வார்த்தை என்பதாக நமக்குப் பரிந்துரை செய்கின்றன.
11 பொருளடக்கம். மற்றபடி மனிதருக்குக் கிடைக்கக்கூடாத தகவலை பைபிள் உடையதாக இருக்கிறது. உதாரணமாக ஆதியாகமப் பதிவு பூமியின் சிருஷ்டிப்புபற்றி நமக்குத் தகவலளிக்கிறது; மனிதன் காட்சியில் தோன்றுவதற்கு முன்னரே சம்பவித்த காரியங்களைப் பற்றிய அறிவை நமக்குத் தருகிறது. (ஆதி. 1:1-31) கடவுள் தகவல் அளித்தாலன்றி எந்த மனிதர்களின் காதுகளுக்கும் கேட்க முடியாத, பரலோகத்தில் நடந்த சம்பாஷணைகளைப் பற்றியும்கூட பைபிள் நமக்குச் சொல்கிறது.—யோபு 1:6-12; 1 இரா. 22:19-23.
12 அதிமுக்கியமாக பைபிள் யெகோவாவோடு நம்மை பழக்கப்படுத்துகிறது. யெகோவா தயவுகூர்ந்ததினால் அவருடைய ஊழியர்கள் பெற்ற அவரைப்பற்றிய அற்புதமான தரிசனங்களின் விவரங்களை அது எடுத்துரைக்கிறது. (தானி. 7:9, 10) எபிரெய வேதாகமத்தினுடைய வேதபாரகரின் பாரம்பரிய வாசகத்தில் 6,800-க்கும் மேற்பட்ட தடவைகள்வரும் “யெகோவா” என்ற கடவுளின் பெயரையும்கூட பைபிள் நமக்குப் பழக்கப்படுத்துகிறது. பைபிளில் அன்பு, ஞானம், நீதி, இரக்கம், நீடியபொறுமை, தயாளம், அறிவில் பரிபூரணம், மாறாத தன்மை போன்ற யெகோவாவின் குறிப்பிடத்தக்க குணாதிசயங்களைப்பற்றி நாம் கற்றறிகிறோம். (யாத். 34:6, 7, NW) மேலுமாக, பைபிள் கடவுளுடைய குமாரனைப்பற்றியும் கடவுளுடைய நோக்கங்களில் அவர் வகிக்கும் முக்கிய இடத்தைப்பற்றியும் அதிகத்தை நமக்குச் சொல்கிறது. (கொலோ. 1:17, 18; 2:3; 2 கொ. 1:20) வேறு எதைக்காட்டிலும், கடவுளுடைய குமாரன் பூமியிலிருந்தபோது அதிகமாக யெகோவாவோடு நம்முடைய பரிச்சயத்தை விரிவுபடுத்தக்கூடியவராய் இருந்தார். ஏனென்றால், “என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்,” என்பதாக அவரால் சொல்லமுடிந்தது.—யோவா. 14:9.
13 கடவுளுடைய நோக்கத்தின் அபிவிருத்திப்பற்றிய விவரங்கள் பைபிளில் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன. கீழ்ப்படிதலுள்ள மனிதனுக்கு முன்னுரைக்கப்பட்ட எல்லா ஆசீர்வாதங்களும், யெகோவா எழுப்பவிருந்த வாக்குப்பண்ணப்பட்ட இரட்சகரையே மையமாக கொண்டிருந்தன. ஏதேன் தோட்டத்தில் கடவுளால் இவர் கடவுளுடைய ஸ்திரீயின் “வித்து” என்பதாக விவரிக்கப்பட்டிருந்தார். (ஆதி. 3:15) காலப்போக்கில் கடவுள், இந்த வித்து ஆபிரகாமின் மூலமாக வரும் என்பதாக வாக்களித்தார். (ஆதி. 22:18) வாக்குப்பண்ணப்பட்ட இரட்சகர், நித்திய ராஜாவாகவும் “மெல்கிசேதேக்கின் முறைமையின்படி” ஆசாரியராகவும் இருப்பார் என்பதை அவர் காண்பித்தார். (சங். 110:4; எபி. 7:1-28) அவர் இஸ்ரவேலுக்கு நியாயப்பிரமாண உடன்படிக்கையை கொடுத்தார், ஆசாரியத்துவத்தையும் பலிகளையும் கொண்ட இவை அனைத்தும் “வரப்போகிற நன்மைகளின் . . . நிழலாய்” இருந்தன. (எபி. 10:1; கொலோ. 2:17) தாவீதுக்கு, ராஜரீகம் என்றென்றுமாக அவருடைய குடும்பத்தில் தங்கியிருக்கும் என்ற வாக்கு கொடுக்கப்பட்டது. (2 சா. 7:11-16) அந்த வாக்குத்தத்தத்தின் சுதந்தரவாளியும் மற்ற எல்லா தீர்க்கதரிசனங்களும் மீட்பர் என்றும் சுட்டிக்காண்பித்த அந்த நபர் இயேசு கிறிஸ்து என்று காண்பிக்கப்பட்டிருக்கிறது. ஆம், அதன் பக்கங்கள் முழுவதிலும், பைபிள் ஏவப்பட்ட எழுத்துக்களின் தலைப்பின்மேல் அதாவது, யெகோவா தம்முடைய நோக்கத்தை நிறைவேற்ற வழிமுறையாக அளித்திருக்கும் இயேசு கிறிஸ்துவின் கைகளிலுள்ள கடவுளுடைய ராஜ்யத்தின்மேல் கவனத்தை ஒருமுகப்படுத்துகிறது.
14 ஒரு தீர்க்கதரிசன புத்தகமாக பைபிள் குறிப்பிடத்தக்கதாயுள்ளது. இவ்விதமாக வரலாற்றின் சம்பவங்களுக்கு முக்கியத்துவமளித்து சம்பவங்கள் அவ்விதமாக சம்பவித்ததற்கு காரணத்தை கொடுக்கிறது. (லூக். 19:41-44) தற்போதுள்ள எல்லா உலக அரசாங்கங்களின் எதிர்காலத்தையும் காண்பிக்கிறது. (தானி. 2:44) இந்தப் பழைய ஒழுங்கின் முன்னறிவிக்கப்பட்ட முடிவின் சமயத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருப்பதைக் காண்பிக்கும் நம்முடைய நாளின் சம்பவங்களை விளக்கி, சீக்கிரத்தில் கடவுள் எல்லா பொல்லாப்பையும் அழித்துவிடுவார் என்று விளக்குகிறது.—2 தீ. 3:1-5; சங். 37:9, 10.
15 பைபிள் இல்லாவிடில் வாழ்க்கையின் உண்மையான நோக்கத்தை நாம் அறியமுடியாது. (பிர. 12:13) மனிதன் குருட்டுத்தனமான தற்செயலின் விளைவு அல்ல, ஆனால் மனிதவர்க்கத்துக்காக அன்புள்ள ஒரு நோக்கத்தையுடைய கடவுளின் சிருஷ்டிப்பு என்பதை அது தெளிவுபடுத்துகிறது. இப்பொழுது நமக்காக கடவுளுடைய சித்தம் என்ன என்பதையும், வாழ்க்கையில் நாம் எவ்விதமாக உண்மையான மனநிறைவை கண்டடையலாம் என்பதையும் விளக்குகிறது.—வெளி. 4:11; 1 தீ. 2:3, 4; சங். 16:11.
16 கடவுள்மீது சார்ந்திராமல் மனிதன் தன் நடைகளை வெற்றிகரமாக நடத்திக்கொள்ள முடியாது என்பதை மனித சரித்திரம் காண்பிக்கிறது. பைபிள் மாத்திரமே அவனுக்குத் தேவைப்படும் வழிநடத்துதலை அளிக்கிறது. கடவுள் கண்டனம் செய்வது என்ன, அவர் அங்கீகரிப்பது என்ன என்பதைக் காண்பித்து ஒழுக்கங்கள் சம்பந்தமாக அது வழிநடத்துதலைக் கொடுக்கிறது. (கலா. 5:19-23) ஒழுக்கக்கட்டுப்பாட்டைத் தூக்கியெறிந்துவிட்டிருக்கும் உலகின் மத்தியில் அதிக நடைமுறையான ஓர் உதவியாக நிரூபித்திருக்கிறது. கடவுளுடைய நோக்குநிலையைப் பெற்றுக்கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிருக்கவும் நமக்கு உதவிசெய்கிறது. மேலும் கடவுளுடைய புதிய உலகில் நித்திய ஜீவனுக்குப்போகும் வழியை நமக்குக் காண்பிக்கிறது.—யோவா. 17:3.
17 மிக முக்கியமான இந்தப் புத்தகம் படிப்புக்கு ஏன் நம்முடைய முக்கிய பாடப்புத்தகமாக இருக்க வேண்டும் என்பது தெளிவாயிருக்கிறதல்லவா? எல்லாவற்றுக்கும் மேலாக, கிறிஸ்தவர்கள் இந்தப் புத்தகத்தை ஆராய்ந்து பார்ப்பது குறித்து ஆழ்ந்த அக்கறையுள்ளவர்களாக இருக்கின்றனர். இதன் ஆசிரியரிடமாக கடவுளுடைய குமாரன் சொன்னார்: “உம்முடைய வசனமே சத்தியம்.” (யோவா. 17:17) ஆகவே பைபிள்தானே தேவராஜ்ய ஊழியப் பள்ளியின் படிப்பு பயிற்சியில் முதலிடத்தை எடுத்துக்கொள்கிறது.
[கேள்விகள்]
1, 2.பைபிள் எழுதுதல் எப்பொழுது ஆரம்பமாகி, எப்பொழுது முடிவுக்கு வந்தது, பைபிள் எந்தளவுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது?
3, 4. பைபிள் ஆரம்பத்தில் என்ன வடிவில் எழுதப்பட்டது, அது எப்போது அதிகாரங்களாகவும் வசனங்களாகவும் பிரிக்கப்பட்டது?
5, 6. பைபிள் என்ன கருத்தில் ஏவப்பட்டெழுதப்பட்டது, அதில் அடங்கியுள்ள வித்தியாசமான எழுத்துநடைகளை எது விளக்குகிறது?
7. எபிரெய வேதாகமத்தின் ஒருசில எழுத்தாளர்கள் யார், உண்மை தீர்க்கதரிசிகளுடைய என்ன தேவைகளை அவர்கள் அனைவரும் நிறைவுசெய்தனர்?
8. அதிகாரப்பூர்வமாக உண்மையென ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் எபிரெய வேதாகமத்தின் புத்தகங்களுடைய பட்டியலுக்கு அதிக முடிவான நிரூபணம் என்ன?
9, 10. கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் புத்தகங்கள் உண்மையில் அதிகாரப்பூர்வமாக உண்மையென ஏற்றுக்கொள்ளப்பட்ட பைபிள் புத்தகங்களின் பட்டியலின் பாகமாகவே இருக்கின்றன என்பதற்கு என்ன உறுதி இருக்கிறது?
11. மற்றபடி மனிதர்களுக்குக் கிடைக்கக்கூடாத என்ன தகவலை பைபிள் கொண்டிருக்கிறது?
12, 13. வேதாகமத்திலிருந்து யெகோவாவையும் இயேசு கிறிஸ்துவையும்பற்றி நாம் என்ன கற்றறிகிறோம்?
14-17. பைபிள் தீர்க்கதரிசனமும் ஒழுக்கத்தின்பேரில் பைபிள் ஆலோசனையும் ஏன் நம் அனைவருக்கும் அதிக மதிப்புள்ளதாக இருக்கின்றன?