நம்முடைய நாளுக்காக தேவதூதர் மூலம் கொடுக்கப்பட்ட செய்திகள்
“கடவுள் . . . தம்முடைய தூதரை அனுப்பி அடையாளங்களாக விளங்கச்செய்தார்.”—வெளிப்படுத்துதல் 1:1, NW.
திருவெளிப்பாடு. இந்த இருபதாம் நூற்றாண்டில் அந்தப் பெயர் எவ்வளவு அடிக்கடிக் கேட்கப்பட்டிருக்கிறது—ஆனால் எவ்வளவு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது! பைபிள் கருத்தில் மனித குலம் முழுவதுமே ஓர் அணு ஆயுத பேரழிவில் அழிந்துபோவதைக் குறிப்பிடுவதில்லை. மாறாக இந்தக் கிரேக்க வார்த்தை “திறந்து காட்டுதல்” என்று பொருள்படுகிறது. தீர்க்கதரிசன காட்சிகள் மூலமாக திருவெளிப்பாடு அல்லது வெளிப்படுத்துதல் என்ற பைபிள் புத்தகம் மனிதவர்க்கத்துக்கு நித்திய மகிழ்ச்சியின் ஒரு சகாப்தம் ஏற்படுவதில் விளைவடையும் ஓர் உச்சக்கட்டத்திற்கு வழிநடத்தும் காரியங்களைத் திறந்து காட்டுகிறது. இப்படியாக இயேசுவின் அப்போஸ்தலனாகிய யோவான் வெளிப்படுத்துதலைப் பின்வருமாறு அறிமுகப்படுத்துகிறான்: “இந்தத் தீர்க்கதரிசன வார்த்தைகளை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள்; காலம் சமீபம்.—வெளிப்படுத்துதல் 1:3.
2 இன்றைய உலகம் மகிழ்ச்சியாக இல்லை. இதன் மகிழ்ச்சியின்மைக்குக் காரணம் ஏறக்குறைய 3,460 ஆண்டுகளுக்கு முன் மோசே இயற்றிய ஓர் பாடலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது: “அவர்களோ தங்களைக் கெடுத்துக் கொண்டார்கள், அவர்கள் அவருடைய [தேவனுடைய] பிள்ளைகள் அல்ல; இதுவே அவர்களுடைய காரியம்; அவர்கள் மாறுபாடும் தாறுமாறுமுள்ள சந்ததியார்.” (உபாகமம் 32:5) அந்த வார்த்தைகள் தற்கால சந்ததிக்கு எவ்வளவு நன்றாகப் பொருந்துகிறது? இவர்களுடைய மதிப்பீடுகள் எவ்வளவாய்த் தாறுமாறும் கோணலுமாக இருக்கிறது! உதாரணமாக, உலக இராணுவமும் சமுதாய செலவுகளும் 1987-88 (World Military and Social Expenditures 1987-88) நேரடியாகக் குறிப்பிடுகிறதாவது: “எல்லா தேசங்களிலுமுள்ள மக்களின் வாழ்க்கை ஆயுதப் போட்டியால் சீர்கெட்டுவிட்டது. ஐக்கிய மாகாணங்களும் சோவியத் யூனியனும் சேர்ந்து இராணுவ தற்காப்புக்காக நாள் ஒன்றுக்கு ரூ.2,000 கோடி செலவுசெய்கிறது. என்றாலும் குழந்தைகளின் சாவு எண்ணிக்கையில் எல்லா நாடுகளுடனும் ஒப்பிடும்போது பதினெட்டாவது இடத்தையும், சோவியத் ரஷ்யா நாற்பத்தாறாவது இடத்தையும் வகிக்கிறது. வளரும் நாடுகள் தங்களுடைய மக்கள் உடல் நல திட்டத்திற்காகச் செய்யும் செலவை விட இராணுவ தளவாடங்களுக்காக நான்கு மடங்கு அதிகமாக செலவு செய்கின்றன. அதே சமயத்தில் அந்நாடுகளில் இலட்சக்கணக்கானோர் பசி பட்டினியில் வாடுகின்றனர்; அவர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகளில் 20 சதவிகிதத்தினர் தங்களுடைய ஐந்தாவது பிறந்தநாளுக்கு முன்பாக மரித்துவிடுகின்றனர்.”
3 இந்தக் கேடான வழிக்கு மற்ற அம்சங்களும் காரணமாக இருக்கின்றன—ஒழுக்கத்திலும் குடும்ப ஏற்பாட்டிலும் முறிவு, பூமியில் தாண்டவமாடும் குற்றச்செயலும் பயங்கரவாதமும், இன்றைய தலைமுறையின் அன்பற்ற தன்மையும் அக்கிரமமுமாகும். “பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுப்பதற்கு” யெகோவா நோக்கங்கொண்டிருக்கிறார் என்பதில் நாம் எவ்வளவாய் மகிழலாம்! (வெளிப்படுத்துதல் 11:18) இதை அவர் எவ்விதம் நிறைவேற்றப் போகிறார் என்பதை வெளிப்படுத்துதல் என்ற பைபிள் புத்தகம் தொடர்ச்சியான 16 தரிசனங்கள் வாயிலாக கிளர்ச்சியூட்டும் வகையில் விளக்குகிறது.
“தேவதூதர்களும்” “அடையாளங்களும்”
4 பைபிளின் முதல் தீர்க்கதரிசனமாகிய ஆதியாகமம் 3:15-ஐ வெளிப்படுத்துதல் விளங்கச்செய்கிறது; சாத்தானுக்கும் கடவுளுடைய ஸ்திரீ போன்ற அமைப்புக்கும் அவர்களுடைய இரண்டு ‘வித்துக்களுக்கும்’ இடையிலான பகை எப்படி தீர்வு காண்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது. தம்முடைய பகைவர்களுக்கும் தம்மை நேசித்து தம்முடைய அரசுரிமையை ஆதரிப்பவர்களுக்கும் யெகோவாவின் நியாயத்தீர்ப்பு என்ன என்பதை வெளிப்படுத்துகிறது. வெளிப்படுத்துதல் ஒரு தேவதூதன் மூலம் யோவானுக்கு “அடையாளங்களாகக்” கொடுக்கப்படுகிறது. மற்ற தூதர்கள், அல்லது தூதறிவிப்பவர்கள் அந்த அடையாளங்களைத் தெரியப்படுத்துவதிலும் நடிப்பதிலும் பங்குகொள்கின்றனர். மிகப் பிரபலமான தூதன் வெளிப்படுத்துதல் 1:5-ல் “உண்மையுள்ள சாட்சியும், மரித்தோரிலிருந்து முதற்பிறந்தவரும், பூமியின் ராஜாக்களுக்கு அதிபதியுமாகிய இயேசு கிறிஸ்து” என்று அறிமுகப்படுத்தப்படுகிறார். “அடையாளங்கள்” அல்லது தரிசனங்கள் அவரை ஒரு “சிங்க”மாகவும், “ஆட்டுக்குட்டி”யாகவும், “மிகாவேலாக”வும் அநேக சமயங்களில் பலமுள்ள தூதனாகவும் சித்தரிக்கின்றன.—வெளிப்படுத்துதல் 5:5, 13; 9:1, 11; 10:1; 12:7; 18:1.
5 வெளிப்படுத்துதல் 1:10–3:22-லுள்ள முதல் தரிசனம் மகிமைப்படுத்தப்பட்ட இயேசு “கர்த்தருடைய நாளில்” பூகோள முழுவதுமுள்ள யெகோவாவின் சாட்சிகளின் சபைகளுக்குப் படமாக இருக்கும் ஆசியாவிலுள்ள ஏழு சபைகளின் “தூதர்களுக்கு,” அல்லது கண்காணிகளுக்குத் தெரிவிக்கும் உணர்ச்சி மிகுந்த செய்திகளைக் கொண்டிருக்கிறது. எனவே அவை நமக்குரிய செய்திகள்! “ஆவி சபைகளுக்குச் சொல்லுகிறதைக் கேட்பதற்கு” நாம் ஊக்கமான கவனம் செலுத்துகிறவர்களாக இருக்கவேண்டும், ஏனென்றால் இந்த எச்சரிப்புகளும் புத்திமதிகளும் நம்முடைய உற்சாகத்திற்காக, நாம் உண்மையுள்ளவர்களாயிருக்க—நம்முடைய கிரியைகளாலும் நம்முடைய “அன்பினாலும் விசுவாசத்தினாலும் ஊழியத்தினாலும் சகிப்புத்தன்மையினாலும்” அங்கீகரிப்பைப் பெற்றிட இருக்கின்றன.—வெளிப்படுத்துதல் 1:10; 2:7, 10, 19.
6 எபேசு சபையைப் போன்று, நாம் உண்மையுடன் உழைத்திருக்கக்கூடும், பிரிவினைகளை உண்டாக்கும் விசுவாச துரோகிகளை வெறுத்திருக்கக்கூடும். ஆனால் நம்முடைய சொந்த அன்பு ஏதாவது ஒரு விதத்தில் குறைந்துவிட்டிருக்குமானால், மனந்திரும்பி, கொழுந்துவிட்டு எரியும் உற்சாகத்தை உள்ளடக்கிய நம்முடைய ஆதி அன்புக்குத் திரும்பக்கடவோம்! ஆவிக்குரிய பிரகாரமாய் ஐசுவரியவான்களாயிருந்த சிமிர்னா கிறிஸ்தவர்களைப் போல, பலனைப் பெற பயமின்றி உழைப்போமாக, அவசியப்பட்டால் “மரணபரியந்தம் உண்மையாயிருப்”போமாக. பெர்கமு சபையிலுள்ளவர்கள் சாத்தானால் சோதிக்கப்பட்டது போல, நாமும் கடந்த கால விக்கிரகாராதனை, ஒழுக்கங்கெட்ட நடத்தை, அல்லது பிரிவினைகள் ஆகிய காரியங்களிலிருந்து மனந்திரும்ப வேண்டும். தியத்தீரா சபையாரும் அதுபோன்ற கவர்ச்சிகளிலிருந்து, விசேஷமாக யேசபேல் செல்வாக்கிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ளும்படிச் சொல்லப்பட்டனர். நாமும் ஜாக்கிரதையாயிருக்க வேண்டும்! சரிதை சபையிலுள்ளவர்களைப் போல ஆவிக்குரிய பிரகாரமாய் மரித்த நிலைக்குள்ளானவர்கள் காலம் கடந்து போவதற்கு முன்பு விழித்திட வேண்டும். பிலதெல்பியா சபையாருக்கு முன் திறந்துவைக்கப்பட்டிருந்தது போல், ஊழியத்தின் திறந்த வாசல் நமக்கு முன்னால் திறந்துவைக்கப்பட்டிருக்கிறது; அவர்கள் செய்தது போல் சோதனையின் நேரத்தில் ஜெயங்கொள்ள பெலன் கொண்டிருப்போமாக! நம்மில் எவராவது லவோதிக்கேயரைப் போல குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாகிவிட்டிருப்போமானால், நம்முடைய ஆவிக்குரிய நிர்வாணத்தை உணர்ந்து விழித்து மனந்திரும்பவேண்டும். இயேசு வாசற்படியில் நின்று தட்டுகிறார். நாம் எல்லாருமே அவரை வரவேற்று, உலகமுழுவதுமுள்ள நம்முடைய 55,000 சபைகளிலும் அவரோடுகூட ஆவிக்குரிய பந்தியில் விருந்தனுபவிப்போமாக!—வெளிப்படுத்துதல் 1:11; 2:7, 10, 11, 17, 29; 3:6, 13, 22.
கடவுளுடைய சிங்காசனமும், ஒரு சுருளும், ஒரு கேள்வியும்
7 இரண்டாவது தரிசனத்தில் யோவான் யெகோவாவின் மகிமைப்பொருந்திய பரலோக சிங்காசனத்தைக் காண்கிறான். வருணனைக்கு அப்பாற்பட்ட மகிமை சூழ, நான்கு கேரூபீன்களும், திரளான தூதர்களும், உயிர்த்தெழுப்பப்பட்ட கிறிஸ்தவ வெற்றி வீரர்களும் பணிவிடை செய்ய, நம்முடைய மகத்துவமான தேவன் தோன்றுகிறார். அவர்களுடைய துதிபாடல் ஆத்துமாவை உருக்குகிறது: “யெகோவாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர்; நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர்; உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது”! சுருளைத் திறப்பதற்குப் பாத்திரமுள்ளவரிடம்—யூதா கோத்திரத்துச் சிங்கமும் நம்முடைய மீட்பருமாகிய அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவரிடம்—யெகோவா ஒரு சுருளை ஒப்படைக்கிறார். அனைத்து சிருஷ்டியும் யெகோவாவையும் ஆட்டுக்குட்டியானவரையும் துதிக்கிறது.—வெளிப்படுத்துதல் 4:11; 5:2–5, 11–14.
8 இதோ, மூன்றாவது தரிசனம்! ஆட்டுக்குட்டியானவர் சுருளின் ஏழு முத்திரைகளையும் உடைக்கிறார். நாம் எதைப் பார்க்கிறோம்? முதலாவதாக, புதிதாய் முடிசூட்டப்பட்ட இயேசு பரலோகத்தில் ஒரு வெள்ளை குதிரையில் சவாரி செய்கிறார், இது நீதியுள்ள போரைக் குறிப்பிடுகிறது. அடுத்து சிவப்பான குதிரையில் சவாரி செய்பவன் பூமியை முழு அளவான போரில் ஆழ்த்துகிறான். அடுத்து வருவதுதான் பஞ்சத்தின் கறுப்புக் குதிரை. அதைத் தொடருவது கொள்ளைநோயின் மங்கிய நிற குதிரை, இதில் சவாரி செய்பவனுக்கு மரணம் என்று பெயர்! பாதிக்கப்பட்ட இலட்சக்கணக்கானோரை விழுங்குவதற்கு ஹேடீஸ் பின்தொடருகிறது. இவை எல்லாமே 1914–18-ல் மனிதவர்க்கத்தைக் கடுமையாகத் தாக்கிய “வேதனைகளின்” ஆரம்பமாக இருந்தது, அதைத் தப்பிப்பிழைத்துள்ள வயோதிபரடங்கிய அந்தச் சந்ததி நன்கு நினைவிற்கொண்டுள்ளனர். (மத்தேயு 24:3–8) அந்தக் குதிரைகளில் சவாரி செய்பவர்கள் தொடர்ந்து செல்கிறார்கள்! ஐந்தாவது ஆறாவது முத்திரைகள் உடைக்கப்பட, சம்பவங்கள் ‘யெகோவாவின் மற்றும் ஆட்டுக்குட்டியானவரின் கோபாக்கினையின் மகாநாளை’ நோக்கிச் செல்கின்றன. கேட்கப்படுகிற கேள்வி: “யார் நிலைநிற்கக்கூடும்?”—வெளிப்படுத்துதல் 6:1–17.
‘நிலைநிற்கக்கூடியவர்கள்’
9 நான்காவது தரிசனம், கடவுளுடைய கோபாக்கினையின் நாளை யார் தப்புவார்கள், ஏன் என்று காண்பிக்கிறது. ஆவிக்குரிய இஸ்ரவேலர்—1,44,000 பேர்—முத்திரையிடப்படுவது முற்றுபெறுவதற்காகத் தேவதூதர்கள் பூமியின் மேல் வரும் அழிவாகிய நான்கு காற்றுகளைப் பிடித்துக்கொண்டிருக்கின்றனர். “இவைகளுக்குப் பின்பு” தரிசனம் அச்சமூட்டுகின்ற பரந்த காட்சிகளோடு விரிவடைகிறது: “இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்துவந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக்கண்டேன். அவர்கள் மகா சத்தமிட்டு: ‘இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக,’ என்று ஆர்ப்பரித்தார்கள்.” (வெளிப்படுத்துதல் 7:1–10) இந்தப் படத்தில் உங்களை நீங்கள் காண்கிறீர்களா?
10 1935-ம் ஆண்டில் இயேசுவின் மரண ஞாபகார்த்த ஆசரிப்புக்கு உலகமுழுவதும் ஆஜராயிருந்தவர்களின் எண்ணிக்கை 32,795. இவர்களில் 27,006 பேர், 1,44,000 பேரில் பூமியிலிருக்கும் மீதியானோராக அப்பம் திராட்சரசமாகிய அந்தச் சின்னங்களில் பங்குகொண்டனர். இவர்களுடைய நம்பிக்கை பரலோகத்துக்குரியது. பின்பு அதே ஆண்டில் திரள் கூட்டத்தினர் தெளிவாக அடையாளங்காணப்பட்டனர். ஒரு பரதீஸிய பூமியில் நித்திய ஜீவனை எதிர்நோக்கியிருக்கும் இந்தச் சாந்தகுணமுள்ள ஆட்களுங்கூட இயேசு சிந்திய இரத்தித்தில் விசுவாசம் கொண்டிருக்கின்றனர்; இவர்கள் யெகோவாவுக்குத் தங்களை ஒப்புக்கொடுத்து, முழுக்காட்டுதலுக்குக் கீழ்ப்படுத்தி, “மிகுந்த உபத்திரவத்தை” உயிரோடு தப்பிப்பிழைக்கும் அந்த மகிழ்ச்சியான எதிர்பார்ப்புடையவர்களாய்க் கடவுளை வைராக்கியத்தோடு சேவிக்கின்றனர். 1987-ம் ஆண்டு ஞாபகார்த்தத்துக்கு வருகைதந்தவர்களின் எண்ணிக்கை 89,65,221; 8,808 பேர் மட்டுமே சின்னங்களில் பங்குகொண்டனர். எனவே இலட்சக்கணக்கானோர் திரள் கூட்டத்தினரின் பாகமாக இருக்கிறார்கள் அல்லது அதன் பாகமாகும் விருப்பமுடையவர்களாயிருக்கிறார்கள் என்பதை இது குறிப்பாய்க் காட்டுகிறது. ‘யெகோவாவின் மற்றும் ஆட்டுக்குட்டியானவரின் கோபாக்கினையின் மகாநாளில்’ இவர்களில் ஒருவராக நீங்கள் “நிலைநிற்கக்கூடுமோ”? இது உங்கள் இரட்சிப்பையும் அதற்கேற்ற படிகளை மேற்கொள்வதையும் அர்த்தப்படுத்துகிறது.—வெளிப்படுத்துதல் 6:15–17; 7:14–17.
கடவுளுடைய நியாயத்தீர்ப்பை எக்காளம் மூலம் தெரியப்படுத்துதல்
11 ஏழாவது முத்திரை திறக்கப்பட்டிருக்கிறது! வெளிப்படுத்துதலின் ஐந்தாம் தரிசனத்தின் காட்சி. கடவுளுக்கு முன்பாக ஏழு தூதர்கள் நிற்கிறார்கள். அவர்களுக்கு ஏழு எக்காளங்கள் கொடுக்கப்படுகிறது. அவற்றின் மூலம் செய்திகளை ஒலிக்கிறார்கள்; இவை யெகோவாவின் மக்களால் 1919 முதல் பூமி முழுவதும் எதிரொலிக்கப்பட்டிருக்கிறது. முதல் நான்கு, மனிதவர்க்கத்தின் “மூன்றில் ஒரு பங்கு” மீது, தெளிவாகவே கிறிஸ்தவமண்டலத்தில் இருப்பவர்கள் மீது நியாயத்தீர்ப்புகளை அறிவிக்கிறது. இந்த எக்காளங்கள் “பூமியின்” (நிரந்திரமாகக் காணப்படும் சாத்தானின் காரிய ஒழுங்குமுறையின்) பாகமாக இருக்கும் கிறிஸ்தவமண்டலமும், “சமுத்திரமும்” (அமைதியிழந்த மனிதவர்க்கப் பெருங்கூட்டமும்), அவளுடைய ‘ஆறுகளும் நீரூற்றுகளும் (கிறிஸ்தவமண்டலத்தின் கோட்பாடுகளும் தத்துவங்களும்) இருளடைந்த அவளுடைய சுடர்களும் (ஆவிக்குரிய ஒளியிழந்த குருவர்க்கமும்), ஆகிய எல்லாமே கடவுளுடைய கோபாக்கினையின் இலக்காக இருக்கின்றன. அடுத்து ஒரு தேவதூதனுக்குப் படமாகப் பறந்துகொண்டிருக்கும் “கழுகு” வானத்தின் மத்தியிலே காணப்படுகிறது; இனிமேல் வரப்போகும் மூன்று எக்காள சத்தங்களும் “பூமியில் குடியிருக்கிறவர்களுக்கு ஐயோ, ஐயோ, ஐயோ (ஆபத்துவரும்)” என்பதைக் குறிக்கும் என்று அறிவிக்கிறது.—வெளிப்படுத்துதல் 8:1–13.
12 ஆக ஐந்தாம் தூதன் தன்னுடைய எக்காளத்தை ஊதுகிறான். இதோ பாருங்கள்! “ஒரு நட்சத்திரம்”—ஆண்டவராகிய இயேசு—அபிஸின் புகைமிகுந்த பாதாளத்தைத் திறந்தார். அப்பொழுது திரளான வெட்டுக்கிளிகள் புறப்படுகின்றன. பொருத்தமாகவே, இயேசு, 1919-ல் கடவுளுடைய அபிஷேகம்பண்ணப்பட்ட சாட்சிகளைச் செயலற்ற நிலையிலிருந்து விடுவிப்பதைக் குறிப்பிடுகிறது. தெய்வீக அதிகாரம் பெற்றவர்களாய் “ஐந்து மாதமளவும்”—சாதாரணமாக ஒரு வெட்டுக்கிளியின் ஆயுள் காலம்—அவர்களுடைய பொய் போதனைகளையும் மாய்மாலத்தனத்தையும் வெளியாக்குவதன் மூலம் இவர்கள் குருவர்க்கத்தினரின் புல்வெளியை நாசமாக்கிவிடுகின்றனர். யெகோவாவும் கிறிஸ்துவும் தேசங்களை முழுமையாக நியாயந்தீர்த்து முடியும் வரை தற்கால வெட்டுக்கிளி சந்ததி “ஒழிந்துபோகாது” என்பதை இது உறுதிபடுத்துகிறது. இந்த வெட்டுக்கிளி கூட்டம் ஏற்கெனவே தேள்களின் வால்களைப்போல் கொட்டிடும் ஆக்கினைத்தீர்ப்பான செய்திகளைக்கொண்ட பல்லாயிர இலட்சக்கணக்கான பைபிள் பிரசுரங்களை மக்களிடம் விட்டிருக்கிறது. யோவான் கூறுவதாவது: “முதலாம் ஆபத்து கடந்துபோயிற்று; இவைகளுக்குப் பின்பு இன்னும் இரண்டு ஆபத்துகள், இதோ, வருகிறது.”—வெளிப்படுத்துதல் 9:1–12; மத்தேயு 24:34; 25:31–33.
13 ஆறாவது எக்காளம் தொனிக்கிறது, இரண்டாம் “ஆபத்து” அறிமுகப்படுத்தப்படுகிறது. ஐபிராத்து நதியண்டையிலே கட்டப்பட்டிருக்கிற நான்கு தூதர்கள் அவிழ்த்துவிடப்படுகின்றனர்: இது பொருத்தமாகவே, 1919-ல் கடவுளுடைய அபிஷேகம்பண்ணப்பட்ட சாட்சிகள் மகா பாபிலோனின் சிறையிருப்பிலிருந்து விடுவிக்கப்பட்டதற்குப் படமாக இருக்கிறது. கிறிஸ்தவமண்டல குருவர்க்கம் யெகோவாவின் பார்வையில் மரித்தவர்கள் என்பதை தெரியப்படுத்தும் வகையில் அவர்கள் “மனுஷரில் மூன்றிலொரு பங்கைக் கொல்ல” ஆயத்தப்படுத்தப்பட்டிருக்கின்றனர். ஆனால் இந்தச் சாட்சி-கொடுக்கும் வேலையை விரிவுபடுத்துவதற்கு உதவி தேவை, இதை யெகோவா ஒரு திரள் கூட்டமான உடன் வேலையாட்களைக் கொண்டுவருவதன் மூலம் பூர்த்திசெய்கிறார். அபிஷேகம்பண்ணப்பட்ட சாட்சிகளும் இந்த உதவியாளர்களும் “இருபதுகோடி” என்ற ஏராளமான சேனையைப் போல ஒன்றுசேர்ந்து படையெடுக்கின்றனர். அவர்களுடைய வல்லமை “அவைகளுடைய வாய்களிலிருக்கிறது”, அதாவது, யெகோவாவின் நியாயத்தீர்ப்புச் செய்தியை மக்களுடைய வீடுகளில் அறிவிக்கின்றனர், மற்றும் “அவைகளுடைய வால்களிலிருக்கிறது” அதாவது, வேகமாக நெருங்கிக்கொண்டிருக்கும் அவருடைய பழிவாங்கும் நாளை அறிவிக்கும் பைபிள் பிரசுரங்களைப் பின்னால் விட்டுச்செல்கின்றனர்.—வெளிப்படுத்துதல் 9:13–21; அப்போஸ்தலர் 20:20, 21.
14 இப்பொழுது ஆறாவது தரிசனம் தோன்றுகிறது. நாம் ஒரு “பலமுள்ள தூதனை,” ஒரு விசேஷ ஸ்தானத்தில் ஆண்டவராகிய இயேசுவைப் பார்க்கிறோம். அவர் தம்முடைய கையில் ஒரு சுருளை வைத்திருக்கிறார். குரல்களும் இடிமுழக்கங்களும் கேட்கின்றன, அப்பொழுது தூதன் நம்முடைய மகத்துவமான சிருஷ்டிகர்மேல் ஆணையிட்டுச் சொல்லுகிறான்: “இனி காலம் செல்லாது . . . ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களிலே அவன் எக்காளம் ஊதப்போகிறபோது தேவரகசியம் நிறைவேறும்.” யோவான் அந்தச் சிறு சுருளை எடுத்து அதைப் புசிக்கும்படியாக சொல்லப்படுகிறான். “புதிய வானத்தையும் புதிய பூமியையும்” பற்றிய அதன் வாக்குப்பண்ணப்பட்ட ஆசீர்வாதங்களுடன்கூடிய ராஜ்ய செய்தி இன்று அபிஷேகம்பண்ணப்பட்ட யோவான் வகுப்பினருக்கும் அதன் தோழருக்கும் இருக்கும் விதமாகவே, அது அவனுடைய வாய்க்கு “தேனைப் போல மதுரமாயிருக்கிறது.” ஆனால், எதிர்மாறாக, “ஜனங்களையும், ஜாதிகளையும், பாஷைக்காரரையும், ராஜாக்களையுங்குறித்து” கடவுளுடைய பழிவாங்கும் நாளை அறிவிக்கும்படி கொடுக்கப்பட்டிருக்கும் கட்டளை சிலருக்கு ஜீரணிக்க முடியாததாக இருக்கும். என்றாலும் திடன் கொள்ளுங்கள்! அவருடைய பழிவாங்கும் நாளைக் குறித்து அறிவிக்கும் உங்களுக்குத் தேவையான பெலத்தை யெகோவா அளிப்பார் என்ற விசுவாசத்தில் உறுதியாயிருங்கள்.—வெளிப்படுத்துதல் 10:1–11; 21:1, 4; 1 யோவான் 5:4; ஏசாயா 40:29–31; 61:1, 2.
ஏழாவது எக்காளமும் மூன்றாவது ஆபத்தும்
15 1918-ல் கடவுளுடைய சாட்சிகளைக் “கொன்றுபோடு”வதற்கான எதிரியின் முயற்சியைக் குறித்து முன்னறிவித்தப் பின்பும், பூகோள அளவான ஒரு சாட்சி கொடுப்பதற்காகக் குறிப்பிடத்தக்கவிதத்திலே 1919-ல் “தேவனிடத்திலிருந்து ஜீவ ஆவி” அவர்களுக்கு எவ்வாறு புத்துயிரளித்தது என்பதை விவரித்தப் பின்பும், யோவான் எழுதுகிறாதாவது: “இரண்டாம் ஆபத்து கடந்துபோயிற்று; இதோ, மூன்றாம் ஆபத்து சீக்கிரமாய் வருகிறது.” எந்த விதத்தில்? பதிவு தொடருகிறது: “ஏழாம் தூதன் எக்காளம் ஊதினான்.” எனவே மூன்றாவது ஆபத்து அந்தக் கடைசி எக்காளம் ஊதப்படுவதுடன் சம்பந்தப்பட்டிருக்கிறது. கவனியுங்கள்! “அப்பொழுது ‘உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும் [யெகோவாவுக்கும்] அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின; அவர் சதாகாலங்களிலும் ராஜ்யபாரம் பண்ணுவார்’ என்னும் கெம்பீர சத்தங்கள் வானத்தில் உண்டாயின.” இதுதான் கிறிஸ்து இயேசுவின் மூலமான கடவுளுடைய ராஜ்யம். இவர் தம்முடைய 1,44,000 உடன் சுதந்தரவாளிகளுடன் சேர்ந்து சர்வவல்லமையுள்ள தேவனாகிய யெகோவாவின் நித்திய அரசுரிமையை மகிமைப்படுத்துகிறவராகக் கடவுளுடைய பரிசுத்த இரகசியத்தை நிறைவுக்குக் கொண்டுவருகிறார். இந்த ராஜ்ய அறிவிப்பு ஓர் ஆபத்தா? ஆம், துன்மார்க்கருக்கு! ஏனென்றால் கடவுள் “பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுப்பார்” என்று அது காண்பிக்கிறது.—வெளிப்படுத்துதல் 11:1–19.
16 ஏழாவது தரிசனத்தின் காட்சி! அதோ பாருங்கள், கடமையுணர்வுகொண்ட பரலோக அமைப்பு, அவருடைய “ஸ்திரீ.” அவள் கர்ப்பமாயிருக்கிறாள், வெகு காலமாக எதிர்நோக்கியிருந்த பிள்ளை பிறப்புக்கான பிரசவ வேதனையிலிருக்கிறாள். வெளிப்படுத்துதலில் முதல் முறையாக—கடைசியாக அல்ல—ஒரு சிவப்பான பெரிய வலுசர்ப்பம், “உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பு,” அந்தக் குழந்தையைப் பிறப்பிலேயே பட்சித்துப்போட முழு ஆயத்தத்துடன் தோன்றுகிறது. முன்னறிவிக்கப்பட்ட “[சர்ப்பத்தின்] வித்துக்கும் ஸ்திரீயின் வித்துக்கும் பகை” கடைசி கட்டத்தை நெருங்குகிறது! ஸ்திரீ “ஆண்பிள்ளையைப்” பெற்றிட, அது உடனடியாகக் கடவுளுடைய சிங்காசனத்தினிடத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.—வெளிப்படுத்துதல் 12:1–6, 9; ஆதியாகமம் 3:15; தானியேல் 2:44; 7:13, 14.
17 இதுதான் சரித்திர முக்கியத்துவமுடைய ஆண்டாகிய 1914-ல் பரலோகத்தில் ஸ்தாபிக்கப்பட்ட ஆண்-பிள்ளை ராஜ்யம். இதன் ராஜா, கிறிஸ்து இயேசு, மிகாவேல் என்று அழைக்கப்படுகிறார், இதன் அர்த்தம் “கடவுளைப்போல் இருப்பது யார்?” இவர் சாத்தானுக்கு விரோதமாக யுத்தம்பண்ணி அந்தப் பழைய பாம்பையும் அவனுடைய பேய்களையும் பூமிக்குத் தள்ளுவதன் மூலம் அந்தக் கேள்விக்குத் தாமதமின்றி பதிலளிக்கிறார். “பூமியிலும் சமுத்திரத்திலும் குடியிருக்கிறவர்களே! ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்காலமாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால், உங்களுக்கு ஆபத்துவரும்” என்ற நிலை 1914 முதல் இருந்துவந்திருக்கிறது. எனவே மனிதவர்க்கத்தின் பரிதபிக்கத்தக்க நிலையில் பிரதிபலிக்கப்படும் இந்த ஆபத்தை, யெகோவா துன்மார்க்கரை நியாயந்தீர்க்கிறவராக அவர்கள் மீது கொண்டுவரும் அந்த ‘மூன்று ஆபத்து’களுடன் குழப்பிவிடக்கூடாது.—வெளிப்படுத்துதல் 12:7–12.
18 பூமியிலிருக்கும் யெகோவாவின் உண்மையுள்ள ஊழியர்களுக்கும் ஆபத்து உண்டாக்க பிசாசு முயன்றிருக்கிறான். கடவுளுடைய ஸ்திரீ போன்ற அமைப்பின் “மற்றவர்களுடைய”—மனிதவர்க்கத்தினிடையே இன்னும் தொடர்ந்து சேவித்துவரும் 1,44,000 பேரைச் சேர்ந்தவர்களுடைய வேலையை அமிழ்த்திட இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போதும் அதற்கு முன்பும் துன்புறுத்தலாகிய பெருவெள்ளத்தை ஏற்படுத்தினான். இந்தப் பூமி, அதாவது சாத்தானின் சொந்த காரிய ஒழுங்குமுறைதானே அந்த வெள்ளத்தை விழுங்கிவிடும்படிச் செய்தார் யெகோவா. என்றபோதிலும், மிகுந்த கோபங்கொண்டிருக்கும் சாத்தான் தொடர்ந்து யெகோவாவின் சாட்சிகளுடன் யுத்தம்பண்ண தீர்மானமாயிருக்கிறான். (வெளிப்படுத்துதல் 12:13–17) இறுதி விளைவு என்னவாக இருக்கும்? இன்னும் ஒன்பது தரிசனங்கள் வரவேண்டியிருக்கிறது, இவை நமக்குச் சொல்லும்!—ஆபகூக் 2:3.
(w88 12⁄15)
விமர்சனக் கேள்விகள்
◻ வெளிப்படுத்துதல் புத்தகம் சம்பந்தமாக யெகோவா தேவதூதர்களை எவ்வாறு பயன்படுத்தினார்?
◻ ஏழு சபைகளுக்குக் கொடுக்கப்பட்ட இயேசுவின் செய்திகள் நம்மை எவ்விதம் பாதிக்க வேண்டும்?
◻ ஏழு எக்காளங்களை ஊதினதன் விளைவு என்ன?
◻ வெட்டுக்கிளிக் கூட்டத்தாலும் எண்ணற்ற சேனையாலும் குறிப்பிடப்படுவது என்ன?
◻ கடவுளுடைய ராஜ்யத்தின் பிறப்பு ஏன் “மூன்றாம் ஆபத்து”டன் இணைக்கப்பட்டிருக்கிறது?
[கேள்விகள்]
1. திருவெளிப்பாடு என்ற பெயர் எப்படி தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது? எதிர்காலம் குறித்து வெளிப்படுத்துதல் வெளிப்படுத்துவது என்ன?
2, 3. ஏன் இந்த உலகம் இந்தளவுக்கு மகிழ்ச்சியற்றதாயிருக்கிறது? யெகோவா என்ன செய்ய நோக்கங்கொண்டிருக்கிறார்?
4. வெளிப்படுத்துதலில் தேவதூதர்கள் எப்படி உட்படுகிறார்கள்? மிகப்பிரபலமான தூதரை தரிசனங்கள் எப்படி சித்தரிக்கின்றன?
5. வெளிப்படுத்துதலின் முதல் தரிசனத்தில் என்ன அடங்கியிருக்கிறது? அது நம்மை எவ்விதம் உட்படுத்துகிறது?
6. ஆசியாவிலுள்ள ஏழு சபைகளுக்கு அனுப்பப்பட்ட ஒவ்வொரு செய்தியிலுமிருந்தும் நாம் எப்படி நன்மையடையலாம்?
7. இரண்டாம் தரிசனத்தில் என்ன துதிப்பாடல்கள் பாடப்படுகின்றன? நீங்கள் எப்படி பிரதிபலிக்கிறீர்கள்?
8. வெளிப்படுத்துதலின் மூன்றாவது தரிசனத்தில் நாம் பார்ப்பது என்ன? இது நம்முடைய நாளுக்கு எவ்வாறு சம்பந்தப்படுகிறது?
9. நான்காவது தரிசனத்தில் கிளர்ச்சியூட்டும் என்ன தகவல் வெளிப்படுத்தப்படுகிறது?
10. (எ) 1935 மற்றும் 1987-ன் ஞாபகார்த்த அறிக்கைகளை ஒப்பிட்டுப் பார்க்கையில் நான்காவது தரிசனத்தின் நிறைவேற்றம் சம்பந்தமாகக் குறிப்பாய்க் காட்டப்படுவது என்ன? (பி) இப்பொழுது நம் ஒவ்வொருவரையும் உட்படுத்தும் கேள்வி என்ன? ஏன்?
11. ஐந்தாவது தரிசனத்தில் எக்காளங்கள் மூலம் தெரிவிக்கப்படும் நியாயத்தீர்ப்புகள் என்ன? இது நம்முடைய நாளுக்கு எவ்வாறு சம்பந்தப்படுகிறது?
12. அபிஸின் பாதாளத்தைத் திறப்பது யார்? தற்காலத்தில் ஒரு “வெட்டுக்கிளிக்” கூட்டம் எவ்வாறு குருவர்க்கத்தினரை கொட்டியிருக்கிறது?
13. (எ) ஐபிராத்து நதியண்டையிலிருந்து அவிழ்த்துவிடப்பட்ட நான்கு தூதர்கள் யாருக்குப் படமாக இருக்கின்றனர்? அவர்களுக்கு என்ன வேலை இருக்கிறது? (பி) கோடிக்கணக்கானோர் அடங்கிய அந்த சேனை யார்? அவர்களுடைய வல்லமை எவ்வாறு “அவைகளின் வாயிலேயும் வாலிலேயும் இருக்கிறது”?
14. (எ) ஆறாவது தரிசனத்தில் அந்தப் “பலமுள்ள தூதன்” யார்? அவர் என்ன செய்கிறார்? என்ன சொல்லுகிறார்? (பி) அந்தச் சிறு சுருள் “தேனைப் போல மதுரமாயிருப்பதும்,” என்றாலும் “வயிற்றுக்குக் கசப்பாயிருப்பதும்” எதைக் குறிக்கிறது?
15. (எ) மூன்றாவது ஆபத்து அறிவிக்கப்பட்டு ஏழாம் தூதன் தன் எக்காளத்தை ஊதும்போது என்ன சம்பவிக்கிறது? (பி) ராஜ்ய அறிவிப்பு எந்த விதத்தில் ஒரு ஆபத்தாக இருக்கிறது?
16. ஏழாவது தரிசனத்தில் திருப்பங்களைக்கொண்ட என்ன காரியங்கள் வெளிப்படுத்தப்பட்டன?
17. (எ) மிகாவேல் யார்? அவர் எப்படி 1914 முதல் தம்முடைய பெயருக்கேற்ப இருந்துவந்திருக்கிறார்? (பி) அந்த ‘மூன்று ஆபத்துகளுக்கும்’ வெளிப்படுத்துதல் 12:12-ன் ‘பூமிக்கு வரும் ஆபத்துக்கும்’ இருக்கும் வித்தியாசத்தைக் குறிப்பிடுங்கள்.
18. (எ) யெகோவாவின் உண்மையுள்ள ஊழியர்களுக்கு இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போதும் அதற்கு முன்பாகவும் சாத்தான் என்ன ஆபத்து உண்டாக்க முயன்றான்? (பி) இன்னும் என்ன செய்ய பிசாசு தீர்மானமாயிருக்கிறான்? எஞ்சியிருக்கும் தரிசனங்கள் என்ன காரியங்களை வெளிப்படுத்தும்?
[பக்கம் 20-ன் பெட்டி]
ஒவ்வொரு தரிசனமும் காணப்படும் அதிகாரங்களும் வசனங்களும்:
◻ 1-வது தரிசனம் 1:10–3:22
◻ 2-வது தரிசனம் 4:1–5:14
◻ 3-வது தரிசனம் 6:1–17
◻ 4-வது தரிசனம் 7:1–17
◻ 5-வது தரிசனம் 8:1–9:21
◻ 6-வது தரிசனம் 10:1–11:19
◻ 7-வது தரிசனம் 12:1–17
◻ 8-வது தரிசனம் 13:1–18
◻ 9-வது தரிசனம் 14:1–20
◻ 10-வது தரிசனம் 15:1–16:21
◻ 11-வது தரிசனம் 17:1–18
◻ 12-வது தரிசனம் 18:1–19:10
◻ 13-வது தரிசனம் 19:11–21
◻ 14-வது தரிசனம் 20:1–10
◻ 15-வது தரிசனம் 20:11–21:8
◻ 16-வது தரிசனம் 21:9–22:5
[பக்கம் 21-24–ன் பெட்டி/படங்கள்]
திருவெளிப்பாட்டின் 16 தரிசனங்கள்—சில சிறப்பு அம்சங்கள்
1 ஏழு குத்துவிளக்குகளாகிய சபைகளின் மத்தியிலிருக்கும் இயேசு ஏழு நட்சத்திரங்களாகிய அபிஷேகம்பண்ணப்பட்ட கண்காணிகள் மூலம் அன்பான செய்திகளை அனுப்புகிறார்
2 வெற்றிகொள்ளும் ஆட்டுக்குட்டியானவர் யெகோவாவின் உன்னத மகிமைபொருந்திய சிங்காசனத்திற்கு முன் நியாயத்தீர்ப்பு செய்திகளடங்கிய சுருளைப் பெறுகிறார்
3 மற்ற குதிரைவீரர்கள் மனிதவர்க்கத்தைப் பாதிக்க, மற்றும் கடவுளுடைய கோபாக்கினையின் நாள் நெருங்கிவர கிறிஸ்து இயேசு வெற்றிவீரராக முன்னேறுகிறார்.
4 தேவதூதர்கள் மிகுந்த உபத்திரவத்தை இழுத்துப்பிடிக்க, 1,44,000 பேரும் திரள் கூட்டத்தாரும் கூட்டிச்சேர்க்கப்படுவது நிறைவுபெறுகிறது
5 தேவதூதர்கள் நியாயத்தீர்ப்புச் செய்திகளை எக்காளம் மூலம் தெரியப்படுத்துகின்றனர், யெகோவாவின் சாட்சிகள் திரளான வெட்டுக்கிளிகளைப் போல் பொய் மதத்தை வெளியாக்குகின்றனர்
6 ஏழாவது எக்காளம் ஊதப்படுகையில், வந்துகொண்டிருக்கும் யெகோவாவின் மற்றும் தம்முடைய கிறிஸ்துவின் ராஜ்யத்தை அறிவிக்க “சாட்சிகள்” புத்துயிரளிக்கப்படுகின்றனர்
7 1914-ல் ராஜ்ய பிறப்பைப் பின்தொடர்ந்து, கிறிஸ்து சாத்தானையும் அவனுடைய பேய்களையும் பூமியினிடமாகத் தள்ளுகிறார்
8 இரண்டு மூர்க்க மிருகங்கள் தோன்றுகின்றன, இரண்டாம் அரசியல் மிருகம் முதல் மிருகத்தின் ஒரு சொரூபத்திற்கு உயிர் கொடுக்கிறது, ஐ.நா. இணைகிறது
9 மனிதவர்க்கத்தில் “தேவனுக்குப் பயந்து அவரை மகிமைப்படுத்தும்” மக்கள் நித்திய ஜீவனுக்கென்று அறுவடை செய்யப்படுகிறார்கள், மற்றவர்கள் அழிவுக்கென்று அறுவடை செய்யப்படுகிறார்கள்
10 கடவுளுடைய ஏழு கோபகலசங்கள் ஊற்றப்படுவது சாத்தானால் அசுத்தப்படுத்தப்பட்ட “காற்றால்” உந்துவிக்கப்பட்ட அனைவரும் அழிக்கப்படுவதில் நிறைவுபெறுகிறது
11 மகா வேசி, பொய் மதம், அரசியல் “மிருகத்”திலிருந்து தள்ளப்படுகிறாள், பின்பு அது அவளை பாழக்கிப்போடுகிறது
12 மகா பாபிலோனின் அழிவைப் பின்தொடர்ந்து, ஆட்டுக்குட்டியானவரும் அவருடைய மணவாட்டியுமாகிய 1,44,000 பேரும் விவாகமாவதற்கான ஆயத்தங்கள் முடிவுசெய்யப்படுகிறது
13 மகா வேசியின் மரணத்துக்குப் பின்பு, சாத்தானின் மற்ற பூமிக்குரிய ஒழுங்குமுறையை அழிப்பதற்கு இயேசு பரலோக சேனையை வழிநடத்துகிறார்
14 சாத்தானை அபிஸில் போடுவது கிறிஸ்துவின் மற்றும் அவருடைய மணவாட்டியாகிய 1,44,000 பேரின் ஆயிர வருட ஆட்சிக்கு வழிவகுக்கிறது
15 கிறிஸ்து இயேசுவின் மற்றும் அவருடைய மணவாட்டியின் “புதிய வானத்”தின் கீழ், “புதிய பூமி”யின் மனித சமுதாயம் யெகோவாவிடமிருந்து சொல்லிலடங்கா ஆசீர்வாதங்களை அனுபவித்து மகிழும்
16 மனிதவர்க்கம் சுகமடைவதற்கும் ஜீவனடைவதற்குமான கடவுளுடைய ஏற்பாடுகள் மகிமையான புதிய எருசலேம் மூலம் பாய்ந்துவருகிறது