“எல்லா நாட்களிலும் முக்கியத்துவம் வாய்ந்த நாள் இதுவே”
“கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானேன்.”—வெளிப்படுத்துதல் 1:10.
“எல்லா நாட்களிலும் முக்கியத்துவம் வாய்ந்த நாள் இதுவே. இதோ, ராஜா ராஜரீகம் பண்ணுகிறார்!” அப்போது 1922-ல் காவற்கோபுரம் பைபிள் மற்றும் துண்டுப் பிரதி சங்கத்தின் இரண்டாவது தலைவர் சொன்ன மெய்சிலிர்க்க வைக்கும் இந்த வார்த்தைகள் இன்னும் நம்மைக் கிளர்ச்சியடையச் செய்கின்றன. பைபிள் “கர்த்தருடைய நாள்” என்பதாக அழைக்கின்ற, சரித்திரத்திலேயே மிகவும் கிளர்ச்சியூட்டும் ஒரு காலத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம் என்பதை அவைத் தொடர்ந்து நமக்கு நினைப்பூட்டிக் கொண்டிருக்கின்றன. (வெளிப்படுத்துதல் 1:10) ஆம், இதுவே “எல்லா நாட்களிலும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும்”, ஏனென்றால் யெகோவா கிறிஸ்துவினுடைய ராஜ்யத்தின் மூலமாக தம்முடைய எல்லா மகத்தான நோக்கங்களையும் நிறைவேற்றி எல்லாச் சிருஷ்டிகளுக்கு முன்பாகவும் தம்முடைய தூய நாமத்தை பரிசுத்தஞ் செய்யும் ஒரு காலமாக இது இருக்கிறது.
2 இந்த நாள் கடவுளுடைய ராஜ்யத்தில் இயேசு ராஜாவாக பதவியில் அமர்த்தப்பட்ட ஆண்டாகிய 1914-ல் ஆரம்பமானது. இது ஆயிரம் வருட ஆட்சியின் முடிவு வரையாக தொடர்ந்திருக்கும். அப்போது கிறிஸ்து ‘தேவனும் பிதாவுமாயிருக்கிறவருக்கு ராஜ்யத்தை ஒப்புக் கொடுப்பார்.’ (1 கொரிந்தியர் 15:24) உண்மையுள்ள கிறிஸ்தவர்கள் பல நூற்றாண்டுகளாக கர்த்தருடைய நாளை எதிர் நோக்கியிருந்திருக்கிறார்கள். இப்போது கடைசியாக அது வந்துவிட்டது! “எல்லா நாட்களிலும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாகிய” இது கடவுளுடைய ஜனங்களுக்கும் பொதுவில் உலகத்துக்கும் எதை அர்த்தப்படுத்துகிறது?
3 கர்த்தருடைய நாளைப் பற்றி நமக்கு அதிகத்தைச் சொல்லும் பைபிள் புத்தகம், வெளிப்படுத்துதலாகும். பெரும்பாலும் இந்தப் புத்தகத்தின் தீர்க்கதரிசனங்கள் அனைத்துமே கர்த்தருடைய நாளின் போது நிறைவேறி வருகின்றன. ஆனால் அந்த நாளைப் பற்றி நமக்கு வரிசையாகச் சொல்லும் தீர்க்கதரிசனப் புத்தகங்களின் உச்சக்கட்டமாக மாத்திரமே வெளிப்படுத்துதல் இருக்கிறது. மற்றவர்களோடுகூட ஏசாயா, எரேமியா, எசேக்கியேல் மற்றும் தானியேலும்கூட நமக்கு அதைப் பற்றிச் சொல்கிறார்கள். அநேகமாக அவர்கள் சொல்லும் காரியங்கள் வெளிப்படுத்துதலிலுள்ள தீர்க்கதரிசனங்களை நல்லவிதமாகப் புரிந்துகொள்ள நமக்கு உதவி செய்கின்றன. கர்த்தருடைய நாளின் போது, வெளிப்படுத்துதலின் நிறைவேற்றத்தை விளங்கிக் கொள்ள எவ்விதமாக குறிப்பாக எசேக்கியேல் புத்தகம் உதவி செய்கிறது என்பதை நாம் பார்க்கலாம்.
நான்கு குதிரை வீரர்கள்
4 உதாரணமாக வெளிப்படுத்துதல் ஆறாம் அதிகாரத்தில் அப்போஸ்தலனாகிய யோவான் கிளர்ச்சியூட்டும் ஒரு காட்சியை விவரிக்கிறான்: “நான் பார்த்தபோது, இதோ, ஒரு வெள்ளைக் குதிரையைக் கண்டேன்; அதன் மேல் ஏறியிருந்தவன் வில்லைப் பிடித்திருந்தான்; அவனுக்கு ஒரு கிரீடங் கொடுக்கப்பட்டது; அவன் ஜெயிக்கிறவனாகவும் ஜெயிப்பவனாகவும் புறப்பட்டான்.” (வெளிப்படுத்துதல் 6:2) ஜெயங்கொள்ளுகிற இந்தக் குதிரைவீரன் யார்? கடவுளுடைய ராஜ்யத்தின் ராஜாவாக அமர்த்தப்பட்டு தம்முடைய சத்துருக்களை ஜெயங்கொள்ள சவாரி செய்து வரும் இயேசு கிறிஸ்துவேயன்றி வேறு எவருமில்லை. (சங்கீதம் 45:3–6; 110:2) இயேசுவின் வெற்றிக் களிப்போடுக்கூடிய சவாரி கர்த்தருடைய நாளின் ஆரம்பத்திலேயே 1914-ல் ஆரம்பமானது. (சங்கீதம் 2:6) சாத்தானையும் அவனுடைய பேய்களையும் பூமிக்குத் தள்ளியது அவருடைய முதல் வெற்றியாக இருந்தது. மனிதவர்க்கத்துக்கு இதனால் ஏற்பட்ட விளைவு? “பூமியிலும் சமுத்திரத்திலும் குடியிருக்கிறவர்களே ஐயோ.”—வெளிப்படுத்துதல் 12:7–12.
5 அங்கே காட்சியில் பின்தொடர்வது மூன்று கொடிய உருவங்களாகும்: யுத்தத்தை அடையாளப்படுத்தும் சிவப்பான ஒரு குதிரை, பஞ்சத்தை அடையாளப்படுத்தும் கருப்பான ஒரு குதிரை, மங்கின நிறமுள்ள குதிரை, அதன் மேல் ஏறியிருந்தவன் பெயர் “மரணம்” என்பதாகும். இந்த நான்காவது குதிரையைப் பற்றி நாம் வாசிப்பதாவது: “நான் பார்த்தபோது, இதோ, மங்கின நிறமுள்ள ஒரு குதிரையைக் கண்டேன்; அதின் மேல் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர். பாதாளம் அவன் பின்சென்றது. பட்டயத்தினாலும் பஞ்சத்தினாலும் சாவினாலும் பூமியின் துஷ்ட மிருகங்களினாலும் பூமியின் காற்பங்கிலுள்ளவர்களை கொலை செய்யும்படியான அதிகாரம் அவைகளுக்குக் கொடுக்கப்பட்டது.”—வெளிப்படுத்துதல் 6:3–8; மத்தேயு 24:3, 7, 8; லூக்கா 21:10, 11.
6 தீர்க்கதரிசனத்தின்படி மனிதவர்க்கம் பயங்கரமான போரையும் பஞ்சத்தையும் கொள்ளைநோயையும் 1914 முதற்கொண்டு அனுபவித்து வந்திருக்கிறது. ஆனால் நான்காவது குதிரைவீரன், “பூமியின் துஷ்ட மிருகங்களினாலும்”கூட கொலை செய்கிறான். இது 1914 முதற்கொண்டு குறிப்பிடத்தக்க ஓர் அம்சமாக இருந்து வருகிறதா? எசேக்கியேலினால் உரைக்கப்பட்ட இது போன்ற ஒரு தீர்க்கதரிசனத்தை சிந்திப்பது, தீர்க்கதரிசனத்தின் இந்த அம்சத்தை சரியான நோக்குநிலையில் காண உதவி செய்கிறது.
7 பொ.ச.மு. 607-ல் எருசலேம் அழிக்கப்படுவதற்கு முன்பாக எழுதுகையில் எசேக்கியேல் யூதர்களுக்கு அவர்களுடைய உண்மையற்றதன்மைக்குப் பயங்கரமான தண்டனையை முன்னறிவித்தான். ஆவியினால் ஏவப்பட்டு அவன் எழுதியதாவது: “நான் மனுஷரையும் மிருகங்களையும் நாசம் பண்ணும்படி எருசலேமுக்கு விரோதமாகப் பட்டயம், பஞ்சம், துஷ்ட மிருகங்கள், கொள்ளைநோய் என்னும் இந்நான்கு கொடிய தண்டனைகளையும் அனுப்பும் போது எவ்வளவு அதிக சங்காரமாகும்.” (எசேக்கியேல் 14:21; 5:17) அந்தச் சமயத்தில் இது சொல்லர்த்தமாக நிறைவேறியதா? எருசலேமுக்கு அதன் அழிவு நெருங்கி வருகையில் நிச்சயமாகவே அது பஞ்சத்தினாலும் பட்டயத்தினாலும் துன்பமனுபவித்தது. பஞ்சம் பொதுவாக கொள்ளை நோயை உண்டு பண்ணுகிறது. (2 நாளாகமம் 36:1–3, 6, 13, 17–21; எரேமியா 52:4–7; புலம்பல் 4:9, 10) அந்தச் சமயத்தில் சொல்லர்த்தமாகவே துஷ்ட மிருகங்களின் தொல்லையும்கூட இருந்ததா? எரேமியாவும்கூட இதை முன்னறிவித்ததன் காரணமாக மனிதர்கள் மிருகங்களால் இழுத்துச் செல்லப்படுவதும் கொல்லப்படுவதும்கூட நடந்தது.—லேவியராகமம் 26:22–33; எரேமியா 15:2, 3.
8 இன்றைய நாளைப் பற்றியதென்ன? வளர்ச்சியடைந்துள்ள தேசங்களில், துஷ்ட மிருகங்கள் ஒரு சமயம் இருந்ததுபோல ஆபத்தான பிரச்னையாக இல்லை. என்றபோதிலும் மற்ற தேசங்களில், “பூமியிலுள்ள காட்டு மிருகங்களில்” பாம்புகளையும் முதலைகளையும் சேர்த்துக் கொள்வோமேயானால், துஷ்ட மிருகங்கள் தொடர்ந்து மனிதர்களை பலிவாங்கிக் கொண்டிருக்கின்றன. இப்படிப்பட்ட அவலமான மரணங்கள் பன்னாட்டு செய்தித் துறையினால் எப்போதாவது அறிவிக்கப்பட்டாலும் அவை குறிப்பிடத்தக்கவையாகும். பூமி கிரகம்—ஜலப்பிரளயம் (Planet Earth—Flood) புத்தகம், வெள்ளப் பெருக்கிலிருந்து தப்ப முயலுகையில் “விஷப் பாம்புக் கடியின் வேதனையில் உயிரிழந்த” அநேகரைப் பற்றிப் பேசுகிறது. இன்றைய இந்தியா (India Today) பத்திரிகை மேற்கு வங்காளத்திலுள்ள ஒரு கிராமத்தில் புலிகளின் தாக்குதலில் தங்கள் கணவன்மாரை இழந்த 60 பெண்களைப் பற்றி அறிக்கைச் செய்திருக்கிறது. மனித சமுதாயம் சீர்குலைந்து பஞ்சம் அதிகரிக்கையில், இப்படிப்பட்ட சோக சம்பவங்கள் இன்னும் அதிக வழக்கமான நிகழ்ச்சிகளாகிவிடவும்கூடும்.
9 ஆனால் எசேக்கியேல் பின்வருமாறு சொன்னபோது மற்றொரு விதமான ஒரு “மிருகத்தை”ப் பற்றிக் குறிப்பிட்டு பேசினான்: “அதிலுள்ள தீர்க்கதரிசிகள் அதின் நடுவில் கட்டுப்பாடு பண்ணுகிறார்கள். கெர்ச்சிக்கிற சிங்கம் இரை கவ்வுகிறது போல, ஆத்துமாக்களை அவர்கள் பட்சிக்கிறார்கள் . . . அதின் நடுவில் இருக்கிற அதன் பிரபுக்கள் இரைக் கவ்வுகிற ஓநாய்களைப் போல் இருக்கிறார்கள்.” (எசேக்கியேல் 22:25, 27) ஆகவே மனிதர்களும்கூட மிருகங்களைப் போல் நடந்துகொள்ள முடியும், நம்முடைய நூற்றாண்டில் இப்படிப்பட்ட கொள்ளைக்காரர்களிடமிருந்து மனிதவர்க்கம் எவ்வளவு வேதனையை அனுபவித்திருக்கிறது! மிருகத்தனமான குற்றவாளிகளின் கைகளிலும் பயங்கரவாதிகளின் கைகளிலும் அநேகர் உயிரிழந்திருக்கின்றனர். ஆம், ஒன்றுக்கும் மேற்பட்ட விதங்களில் “பூமியிலுள்ள காட்டுமிருகங்களினால்” மரணம் மிகுதியான பலியாட்களை அறுவடை செய்திருக்கிறது.
10 யோவானின் தரிசனத்தில் போரும், பஞ்சமும், கொள்ளைநோயும், துஷ்ட மிருகங்களும் வரிசைப்படுத்தப்பட்டிருப்பது, பொ.ச.மு. 607-ல் எருசலேம் அனுபவித்த வேதனைகள் நம்முடைய நாளில் அநேக சந்தர்ப்பங்களில் இணைப்பொருத்தமுள்ளதாக இருக்க வேண்டும் என்பதைக் காண நமக்கு உதவி செய்கிறது. இதன் காரணமாக கர்த்தருடைய நாள் உலகத்துக்கு ஏற்கெனவே வேதனையை அர்த்தப்படுத்தியிருக்கிறது. மனிதவர்க்கத்தின் ஆட்சியாளர்கள், முதல் குதிரைவீரனாகிய, சிங்காசனத்தில் அமர்த்தப்பட்டிருக்கும் ராஜாவாகிய இயேசு கிறிஸ்துவுக்குத் தங்களை கீழ்ப்படுத்த மறுத்திருப்பதே பெரும்பாலும் இதற்கு காரணமாக இருந்திருக்கிறது. (சங்கீதம் 2:1–3) ஆனால் கடவுளுடைய ஜனங்களைப் பற்றி என்ன? கர்த்தருடைய நாள் அவர்களுக்கு எதை அர்த்தப்படுத்தியிருக்கிறது?
ஆலயத்தை அளத்தல்
11 வெளிப்படுத்துதல் 11:1-ல் அப்போஸ்தலனாகிய யோவான் சொல்வதாவது: “கைக்கோலுக்கு ஒப்பான ஓர் அளவுகோல் என்னிடத்தில் கொடுக்கப்பட்டது. அப்பொழுது தேவதூதன் நின்று, என்னை நோக்கி: ‘நீ எழுந்து தேவனுடைய ஆலயத்தையும் பலிபீடத்தையும் அதில் தொழுது கொள்கிறவர்களையும் அளந்துப்பார்.’” காட்சியில் ஆலயத்தை இப்படியாக அளப்பது, கடவுளுடைய ஜனங்களுக்கு வெகுவாக அர்த்தமுள்ளதாக இருந்தது. யோவான் எந்த ஆலயத்தை அளந்து பார்த்தான்? கிறிஸ்தவனாக ஆவதற்கு முன்பு யோவான் ஒரு சமயம் தொழுது வந்த அந்தச் சொல்லர்த்தமான யூத ஆலயத்தை அல்ல. அந்த ஆலயம் யெகோவாவால் தள்ளப்பட்டு அது பொ.ச. 70-ல் அழிக்கப்பட்டுவிட்டது. (மத்தேயு 23:37–24:2) மாறாக, யெகோவாவின் மாபெரும் ஆவிக்குரிய ஆலய ஏற்பாடாக அது இருந்தது. இந்த அடையாள அர்த்தமுள்ள ஆலயத்தில், அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்கள் பூமிக்குரிய பிரகாரத்தில் உதவி ஆசாரியர்களாக சேவிக்கிறார்கள்.—எபிரெயர் 9:11, 12, 24; 10:19–22; வெளிப்படுத்துதல் 5:10.
12 இயேசு பிரதான ஆசாரியனாக நியமிக்கப்பட்ட போது, பொ.ச. 29-ல் அந்த ஆலயம் ஏற்பட்டது. (எபிரெயர் 3:1; 10:5) அது 1,44,000 துணை ஆசாரியர்களைக் கொண்டிருக்க வேண்டியதாக இருந்தது. இவர்களில் பெரும்பாலானோர் முதல் நூற்றாண்டில் தெரிந்துகொள்ளப்பட்டு, முத்தரிக்கப்பட்டு பின்னர் உண்மையுள்ளவர்களாக மரித்தனர். (வெளிப்படுத்துதல் 7:4; 14:1) ஆனால் அந்த முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் மரித்த போது, அவர்கள் கல்லறையில் நித்திரைப் பண்ணுகிறவர்களாக இருந்தனர். உடனடியாக அவர்கள் பரலோகத்துக்கு உயிர்த்தெழுப்பப்படவில்லை. (1 தெசலோனிக்கேயர் 4:15) மேலுமாக, முதல் நூற்றாண்டுக்குப் பின் விசுவாச துரோகம் ஏற்பட்டு, ஆசாரியத்துவ அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்கள், செழித்தோங்கிய விசுவாச துரோக “களைகளால்” சூழப்பட்டிருந்தார்கள். (மத்தேயு 13:24–30) அப்போதிலிருந்து நூற்றாண்டுகளினூடாக, பின்வருமாறு கேட்கப்பட்டிருக்கலாம்: ‘எல்லா 1,44,000 துணை ஆசாரியர்களும் எப்போதாவது முத்தரிக்கப்படுவார்களா?’ ‘உண்மையுள்ளவர்களாக மரித்தவர்கள் பரலோக ஆலயத்தில் சேவிப்பதற்காக எப்போதாவது உயிர்த்தெழுப்பப்படுவார்களா?’ காட்சியில் ஆலயம் அளக்கப்பட்டதானது இந்தக் கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் ஆம் என்ற பதிலை காண்பித்தது. ஏன்?
13 ஏனென்றால் பைபிள் தீர்க்கதரிசனத்தில், எதையாவது ஒன்றை அளப்பது பொதுவாக, அந்தக் காரியத்தின் சம்பந்தமாக யெகோவாவின் நோக்கம் நிச்சயமாக முழுமையாக நிறைவேறும் என்பதை சுட்டிக் காண்பிக்கிறது. (2 இராஜாக்கள் 21:13; எரேமியா 31:39; புலம்பல் 2:8) ஆகவே, யோவான், காட்சியில் ஆலயத்தை அளந்தது, கர்த்தருடைய நாளில், ஆலயத்தின் சம்பந்தமாக யெகோவாவின் நோக்கங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பதற்கு உத்தரவாதமளிப்பதாக இருந்தது. இதற்கிசைவாகவும் எல்லா அத்தாட்சிகளின்படியும் உண்மையுள்ளவர்களாக இருந்து ஏற்கெனவே மரித்துப் போன அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள், 1918 முதற்கொண்டு அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட இடமாகிய பரலோக ஆலயத்துக்கு உயிர்த்தெழுப்பப்பட ஆரம்பித்தார்கள். (1 தெசலோனிக்கேயர் 4:16; வெளிப்படுத்துதல் 6:9–11) ஆனால் 1,44,000 பேரில் மீதமுள்ளவர்களைப் பற்றி என்ன?
14 கர்த்தருடைய நாள் ஆரம்பமாவதற்கு முன்பேயும்கூட, விசுவாச துரோக கிறிஸ்தவ மண்டலத்திலிருந்து வெளியேறியவர்கள் தனிப்பட்ட ஓர் அமைப்புக்குள் ஒன்றுகூடி வர ஆரம்பித்தார்கள். அவர்கள் 1914-ம் ஆண்டின் முக்கியத்துவத்தை உண்மையுடன் அறிவித்ததில் ஒரு சிறந்த பதிவை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள். ஆனால் முக்கியத்துவம் வாய்ந்த அந்த ஆண்டில், முதல் உலகப் போர் தீவிரமடைந்து வந்த போது, அவர்கள் ஒடுக்குதலை ‘மிதிக்கப்படுதலை’ அனுபவிக்க ஆரம்பித்தார்கள். இது 1918-ல் உச்சக் கட்டத்தை எட்டியது. அப்போது காவற்கோபுரம் சங்கத்தின் நிர்வாகிகள் சிறையிலடைக்கப்பட்டு, ஒழுங்குபடுத்தி அமைக்கப்பட்ட பிரசங்க வேலை ஏறக்குறைய நின்றேவிட்டது. அந்தச் சமயத்தில் அவர்கள் உண்மையாகவே ‘கொன்று போடப்பட்டார்கள்.’ (வெளிப்படுத்துதல் 11:2–7) ஆலயம் அளக்கப்பட்டது, இந்தக் கிறிஸ்தவர்களுக்கு எதை அர்த்தப்படுத்தியது?
15 பொ.ச.மு. 593-ம் ஆண்டில், எருசலேமிலிருந்த யெகோவாவின் ஆலயம் அழிக்கப்பட்டு 14 ஆண்டுகளான பின்பு எசேக்கியேல், தேவதரிசனத்தில் யெகோவாவினுடைய ஆலயத்தைக் கண்டான். அவன் இந்த ஆலயத்திற்குள் பல இடங்களுக்கும் அழைத்துச் செல்லப்பட்டு, அதன் ஒவ்வொரு அம்சமும் கவனமாக அளக்கப்படுவதை அவன் பார்த்தான். (எசேக்கியேல் அதிகாரங்கள் 40–42) இது எதை அர்த்தப்படுத்துகிறது? யெகோவா தாமே இதை விளக்கினார்: ஆலயத்தை அளப்பது, எசேக்கியேலின் மக்களுக்கு ஒரு சோதனையைக் குறிப்பதாக இருந்தது. அவர்கள் தங்களைத் தாங்களே தாழ்த்தி தங்கள் குற்றங்களுக்காக மனந்திரும்பி யெகோவாவின் கட்டளைகளின்படி செய்வார்களேயானால் ஆலயத்தின் அளவுகள் அவர்களுக்குச் சொல்லப்படும். இது, யெகோவாவின் மக்கள் ஒரு நாள் பாபிலோனிலிருந்து விடுதலையடைந்து மறுபடியுமாக யெகோவாவை அவருடைய சொல்லர்த்தமான ஆலயத்தில் வணங்குவர் என்ற நம்பிக்கையில் அவர்களைத் தெளிவாகவே உற்சாகப்படுத்துவதாக இருக்கும்—எசேக்கியேல் 43:10, 11.
16 அதேவிதமாகவே, 1918-ல் சோர்வுற்றிருந்த கிறிஸ்தவர்கள் தங்களைத் தாங்களே தாழ்த்தி, அவர்கள் செய்திருக்கக்கூடிய தவறுகளிலிருந்து மனந்திரும்பி வருவார்களேயானால், அவர்கள் யெகோவாவின் ஆசீர்வாதத்தைக் கொண்டிருக்கவும் அவருடைய ஆலய ஏற்பாட்டில் ஒரு முழு பங்கை வகிக்கவும் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள். இதுதானே சம்பவித்தது. வெளிப்படுத்துதல் 11:11-ன் பிரகாரம் அவர்கள் ‘காலூன்றி நின்றார்கள்’ அல்லது அடையாள அர்த்தத்தில் உயிர்த்தெழுப்பப்பட்டார்கள். எசேக்கியேலில் இது போன்ற உயிர்த்தெழுதல் சம்பந்தப்பட்ட ஒரு காட்சி, யூதர்கள் அவர்களுடைய தாயகம் திரும்புவதற்கு முன்நிழலாக இருந்தது. (எசேக்கியேல் 37:1–14) இந்த நவீன நாளைய உயிர்த்தெழுதல், சோர்வுற்று ஏறக்குறைய செயலற்ற நிலையிலிருந்த கடவுளுடைய மக்கள் யெகோவாவின் ஊழியத்தில் முழுமையான ஒரு பங்கை கொண்டிருப்பதற்காக உயிர்த்துடிப்புள்ள, சுறுசுறுப்பான நிலைமைக்குப் புதுப்பிக்கப்படுவதாக இருந்தது. இப்படிப்பட்ட ஓர் ‘உயிர்த்தெழுதல்’ 1919-ல் சம்பவித்தது.
ஒரு சிறிய புஸ்தகச் சுருள்
17 வெளிப்படுத்துதல் 10:1-ல், யோவான் “பலமுள்ள வேறொரு தூதன் வானத்திலிருந்து இறங்கிவரக்” கண்டான். “மேகம் அவனைச் சூழ்ந்திருந்தது, அவனுடைய சிரசின் மேல் வானவில்லிருந்தது, அவனுடைய முகம் சூரியனைப் போலவும் அவனுடைய கால்கள் அக்கினி ஸ்தம்பங்களைப் போலவும் இருந்தது.” இது ஓரளவு முன்பு எசேக்கியேலாலும் பின்னர் யோவானாலும் காணப்பட்ட யெகோவாவின் தரிசனங்களுக்கு ஒத்திருக்கிறது. (எசேக்கியேல் 8:2; வெளிப்படுத்துதல் 4:3) ஆனால் யோவான் இங்கே யெகோவாவை அல்ல, ஒரு தூதனையே பார்த்தான். ஆகவே அது “அதரிசனமான தேவனுடைய தற்சுரூப”மாயிருக்கும், யெகோவாவின் உன்னதமான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவாக இருக்க வேண்டும். (கொலோசெயர் 1:15) மேலுமாக, வெளிப்படுத்துதல் 10:2, இயேசு உயர் அதிகார ஸ்தானத்தில் “தன் வலது பாதத்தைச் சமுத்திரத்தின் மேலும், தன் இடது பாதத்தைப் பூமியின் மேலும் வைத்துக்” கொண்டும் நிற்பதாக வருணிக்கிறது. ஆகவே தூதன், கர்த்தருடைய நாளில் இயேசுவை பிரதிநிதித்துவம் செய்கிறான்.—சங்கீதம் 8:4–8; எபிரெயர் 2:5–9 பார்க்கவும்.
18 இயேசு இந்த மகத்துவமான தரிசன ரூபத்தில் தம்முடைய கையில் ஒரு சிறிய புஸ்தகச் சுருளை வைத்திருக்கிறார். யோவான் அதைப் போய் வாங்கிப் புசிக்கும்படியாக கட்டளையிடப்படுகிறான். (வெளிப்படுத்துதல் 10:8, 9) இந்த விதத்தில் ஒரு தரிசன சுருளை புசிக்கும்படியாக கட்டளையிடப்பட்ட எசேக்கியேலின் அனுபவத்தைப் போன்ற, அதேவிதமான அனுபவத்தை யோவான் அடைகிறான். எசேக்கியேலின் விஷயத்தில், யெகோவாவே தீர்க்கதரிசியிடமாகச் சுருளைக் கொடுக்கிறார். அதில் எசேக்கியேல் “புலம்பல்களும், தவிப்பும், ஐயோ என்பதும் எழுதி”யிருந்ததை காண்கிறான். (எசேக்கியேல் 2:8–10) எசேக்கியேல் அறிவிக்கிறான்: “அப்பொழுது நான் அதைப் புசித்தேன்; அது என் வாய்க்குத் தேனைப் போல் தித்திப்பாயிருந்தது.” (எசேக்கியேல் 3:3) ஒரு சுருளைப் புசிப்பது எசேக்கியேலுக்கு எதை அர்த்தப்படுத்தியது?
19 சுருளில் ஆவியால் ஏவப்பட்ட தீர்க்கதரிசன தகவல் இருந்தது என்பது தெளிவாக இருக்கிறது. எசேக்கியேல் சுருளைப் புசித்தபோது, அது தன்னில் ஒரு பாகமான ஆகும் வகையில் அந்த அளவுக்கு இந்தத் தகவலை அறிவிக்கும் வேலையை அவன் ஏற்றுக் கொண்டான். (எரேமியா 15:16 ஒப்பிடவும்.) ஆனால் சுருளில் அடங்கியிருந்தவை மற்றவர்களுக்கு தித்திப்பாயிருக்கவில்லை. சுருளில் “புலம்பல்களும், தவிப்பும் ஐயோ என்பதும்” நிறைந்திருந்தது. யாருக்கு இந்தக் கசப்பான செய்தி? முதலிடத்தில், எசேக்கியேலுக்குப் பின்வருமாறு சொல்லப்பட்டது: “மனுபுத்திரனே, நீ போய், இஸ்ரவேல் சந்ததியாரிடத்தில் சேர்ந்து, என் வார்த்தைகளைக் கொண்டு அவர்களோடே பேசு.” (எசேக்கியேல் 3:4) பின்னால் எசேக்கியேலின் செய்தி சுற்றியிருந்த புறமத தேசங்களையும் உட்படுத்தும் வகையில் விரிவாக்கப்பட்டது.—எசேக்கியேல் 25–32 அதிகாரங்கள்.
20 யோவானுடைய விஷயத்தில், அவன் சுருளைப் புசித்ததன் விளைவுகளும் அதேவிதமாகவே இருந்தது. அவன் அறிவிப்பதாவது: “நான் அந்தச் சிறு புஸ்தகத்தைத் தூதனுடைய கையிலிருந்து வாங்கி, அதைப் புசித்தேன்; என் வாய்க்கு அது தேனைப் போல மதுரமாயிருந்தது; நான் அதைப் புசித்தவுடனே என் வயிறு கசப்பாயிற்று.” (வெளிப்படுத்துதல் 10:10) சுருளைப் புசிப்பது யோவானுக்கும்கூட மதுரமாயிருந்தது. யெகோவாவின் வார்த்தை தன்னில் ஒரு பாகமாக ஆவது அவனை கிளர்ச்சியடையச் செய்தது. என்றாலும் அந்தச் செய்தி ஒரு கசப்பான வளையத்தைக் கொண்டிருந்தது. யாருக்கு கசப்பு? யோவான் இவ்விதமாகச் சொல்லப்பட்டான்: “நீ மறுபடியும் அநேக ஜனங்களையும் ஜாதிகளையும் பாஷைக்காரரையும் ராஜாக்களையுங் குறித்துத் தீர்க்கதரிசனஞ் சொல்ல வேண்டும்.”—வெளிப்படுத்துதல் 10:11.
21 இவை அனைத்தும் எவ்விதமாக கர்த்தருடைய நாளிலே நிறைவேற்றம் அடைந்திருக்கின்றன? சரித்திரப்பூர்வமான உண்மைகளின்படி, 1919-ல் உண்மையுள்ள கிறிஸ்தவர்கள், யெகோவாவை சேவிக்கும் சிலாக்கியத்தை அவ்வளவாக எல்லா வகையிலும் தங்களுடையதாக்கிக் கொண்டதால், அது அவர்களில் ஒரு பாகமாகி இது நிச்சயமாகவே மதுரமாயிருந்தது. ஆனால் அவர்களுடைய ஆசீர்வாதமும் சிலாக்கியமும் மற்றவர்களுக்கு விசேஷமாக கிறிஸ்தவ மண்டல குருவர்க்கத்துக்குக் கசப்பாயிருந்தது. ஏன்? ஏனென்றால் உண்மையுள்ள இந்த அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்கள் மனிதவர்க்கத்துக்கு யெகோவாவின் செய்தி அனைத்தையும் தைரியமாக அறிவித்து வந்தார்கள். அவர்கள் “ராஜ்யத்தின் நற்செய்தியை” பிரசங்கித்தது மட்டுமல்லாமல், கிறிஸ்தவ மண்டலத்தினுடைய மற்றும் பொதுவாக உலகத்தினுடைய ஆவிக்குரிய மரித்த நிலையையும்கூட அவர்கள் வெளிப்படுத்தி வந்தார்கள்.—மத்தேயு 24:14; வெளிப்படுத்துதல் 8:1–9:21; 16:1–21.
22 முத்தரிப்பதற்காக, 1,44,000 பேரில் கடைசியானவர்களைக் கூட்டிச் சேர்க்க யெகோவா உண்மையுள்ள இந்தக் கிறிஸ்தவ தொகுதியை பயன்படுத்தினார். இவர்கள் பூமிக்குரிய நம்பிக்கையுடைய திரள் கூட்டத்தாரைக் கூட்டிச் சேர்ப்பதை முன்நின்று செய்தார்கள். (வெளிப்படுத்துதல் 7:1–4, 9, 10) இந்தத் திரள் கூட்டம், இந்தப் பூமியினிடமாக யெகோவாவின் நோக்கங்களை நிறைவேற்றுவதில் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. திரள் கூட்டம் தோன்றியிருப்பது பரலோகத்திலும் பூமியிலும் அதிகமான மகிழ்ச்சியை உண்டுபண்ணியிருக்கிறது. (வெளிப்படுத்துதல் 7:11–17; எசேக்கியேல் 9:1–7) ஆகவே “எல்லா நாட்களிலும் முக்கியத்துவம் வாய்ந்த நாள்” ஏற்கெனவே சாத்தானிய உலகத்துக்கு வேதனையையும் ஆனால் யெகோவாவின் மக்களுக்கு ஐசுவரியமான ஆசீர்வாதங்களையும் அர்த்தப்படுத்தியிருக்கிறது. கர்த்தருடைய நாள் தொடருகையில் இது எவ்விதமாக தொடர்ந்து உண்மையாக இருக்கும் என்பதை நாம் பார்க்கலாம். (w88 10⁄15)
உங்களால் விளக்கமுடியுமா?
◻ கர்த்தருடைய நாள் எது?
◻ கர்த்தருடைய நாளில் “பூமியிலுள்ள காட்டு மிருகங்கள்” வகிக்கும் பங்கு என்னவாக இருக்கிறது?
◻ ஆலயத்தை யோவானை அளக்கச் செய்ததன் மூலம் யெகோவா என்ன உறுதியை அளித்தார்?
◻ யோவான் சிறு புஸ்தகத்தைப் புசித்தது 1919-ல் அபிஷேகம் பண்ணப்பட்ட மீதியானோருக்கு எதை அர்த்தப்படுத்தியது?
◻ இதுவரையாக கர்த்தருடைய நாள் கடவுளுடைய மக்களுக்கும் பொதுவில் உலகத்துக்கும் எதை அர்த்தப்படுத்தியிருக்கிறது?
[கேள்விகள்]
1. நாம் எந்த “நாளில்” வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? இந்த உண்மை ஏன் இத்தனை கிளர்ச்சியூட்டுவதாக இருக்கிறது?
2, 3. (எ) கர்த்தருடைய நாள் எவ்வளவு காலம் நீடிக்கிறது? (பி) இந்த நாளைப் பற்றி நாம் எங்கே காணலாம்?
4. வெளிப்படுத்துதல் 6-ம் அதிகாரத்தின்படி, கர்த்தருடைய நாளின் ஆரம்பத்தில் என்ன நடந்தது?
5. வெள்ளை குதிரையின் மீது சவாரி செய்பவரைத் தொடர்ந்து வரும் கொடிய உருவங்கள் யாவை? ஒவ்வொரு உருவத்துக்கும் என்ன அதிகாரமிருக்கிறது?
6. இந்த மூன்று பயங்கரமான குதிரைகளாலும் அவற்றின் மீது சவாரி செய்பவர்களாலும் பூமியின் மீது ஏற்படுத்தப்பட்ட பாதிப்பு என்னவாக இருந்திருக்கிறது?
7. (எ) எருசலேமைக் குறித்து எசேக்கியேல் என்ன தீர்க்கதரிசனம் உரைத்தான்? (பி) இந்தத் தீர்க்கதரிசனம் எவ்விதமாக நிறைவேறியது?
8. இதுவரையாக கர்த்தருடைய நாளின் போது துஷ்ட மிருகங்களின் பங்கு என்னவாக இருந்திருக்கிறது?
9. வேறு என்ன விதமான “மிருகம்” இந்த நூற்றாண்டின்போது மனிதவர்க்கத்தின் மத்தியில் அழிவையும் வேதனையையும் உண்டு பண்ணியிருக்கிறது?
10. மரணத்துக்குக் காரணமாக போரையும் பஞ்சத்தையும் கொள்ளை நோயையும் யோவான் வரிசைப்படுத்தியிருப்பது எதைக் காண நமக்கு உதவி செய்கிறது?
11. வெளிப்படுத்துதல் 11:1-ல் யோவான் என்ன செய்யும்படியாக கட்டளையிடப்பட்டான்? இது எந்த ஆலயத்தின் சம்பந்தமாக?
12. அந்த ஆலயம் எப்போது ஏற்பட்டது? அதன் சம்பந்தமாக முதல் நூற்றாண்டில் என்ன காரியங்கள் சம்பவித்தன?
13. யோவான் ஆலயத்தை அளந்தது எதற்கு உத்தரவாதமளிப்பதாக இருந்தது? கர்த்தருடைய நாளின் ஆரம்ப காலத்தில் என்ன நடந்தது?
14. முதல் உலகப் போருக்கு முன்பும், போரின் சமயத்திலும் அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு என்ன சம்பவித்தது?
15. தரிசனத்தின் ஆலயத்தை அளப்பது, எசேக்கியேலின் நாளிலிருந்த கடவுளுடைய மக்களுக்கு எதை அர்த்தப்படுத்தியது?
16. (எ) யோவான் ஆலயத்தை அளந்தது, 1918-ல் கடவுளுடைய மக்களுக்கு எதை உறுதியளித்தது? (பி) இது எவ்விதமாக நிறைவேறியது?
17. (எ) வெளிப்படுத்துதல் 10:1-ல் யோவானின் தரிசனத்தை விவரிக்கவும். (பி) யோவான் பார்த்த அந்த தூதன் யார்? எந்த நாளில் தரிசனம் நிறைவேற இருந்தது?
18. (எ) யோவான் எதைப் புசிக்கும்படியாக கட்டளையிடப்பட்டான்? (பி) அதேப் போன்ற ஒரு தரிசனத்தில், எசேக்கியேல் எதைப் புசிக்கும்படியாக கட்டளையிடப்பட்டான்? என்ன விளைவோடு?
19. (எ) எசேக்கியேல் சுருளைப் புசிப்பதால் பிரதிநிதித்துவம் செய்யப்பட்டது என்ன? (பி) எசேக்கியேல் பிரசங்கிக்கும்படியாக நியமனம் செய்யப்பட்ட கசப்பான செய்திகளை யார் பெற்றுக் கொள்ள வேண்டியதாக இருந்தது?
20. அந்தச் சிறு புஸ்தகத்தை யோவான் புசித்த போது என்ன நடந்தது? அவ்விதமாக அவன் செய்ததன் விளைவு என்னவாக இருந்தது?
21. (எ) சிறு புஸ்தகச் சுருளை யோவான் புசித்ததற்கு இணையாக, 1919-ல் அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்கள் என்ன செய்தார்கள்? என்ன விளைவோடு? (பி) கிறிஸ்தவ மண்டலத்துக்கும் பொதுவாக உலகத்துக்கும் விளைவு என்னவாக இருந்தது?
22. (எ) கர்த்தருடைய நாளில் இதுவரையாக அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள் என்ன மகத்தான வழியில் யெகோவாவால் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறார்கள்? (பி) கர்த்தருடைய நாள் சாத்தானின் உலகத்துக்கும் கடவுளுடைய மக்களுக்கும் எதை அர்த்தப்படுத்தியிருக்கிறது?
[பக்கம் 13-ன் படம்]
யோவான் ஆலயத்தை அளந்தது, கர்த்தருடைய நாளில் அபிஷேகம் பண்ணப்பட்டவர்களுக்கு மாறாத வாக்குறுதிகளைக் கொடுத்தது