அதிகாரம் 13
கடவுளுடைய சமாதான அரசாங்கம்
மனித அரசாங்கங்கள், நல்ல நோக்கங்களை உடைய அரசாங்கங்களுங்கூட மக்களின் உண்மையான தேவைகளைத் திருப்தி செய்ய தவறிவிட்டிருக்கின்றனவென்பதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? குற்றச்செயல், ஜாதி வித்தியாசப் பகைமை ஆகியவை சம்பந்தப்பட்ட பிரச்னைகளை அவற்றில் எதுவுமே தீர்த்து வைக்கவில்லை, தங்கள் மக்கள் எல்லோருக்கும் சரியான உணவையும் இருப்பிடத்தையுங்கூட அவை அளிக்கவில்லை. நோயிலிருந்து முழுமையாய்த் தங்கள் குடிமக்களை அவை விடுதலை செய்யவுமில்லை. வயோதிபமடைவதை அல்லது மரணத்தை நிறுத்த அல்லது மரித்தோரைத் திரும்ப உயிருக்குக் கொண்டுவர எந்த அரசாங்கத்தாலும் கூடாததாயிருந்திருக்கிறது. தங்கள் குடிமக்களுக்கு நிலையான சமாதானத்தையும் பாதுகாப்பையுங்கூட எந்த ஒரு அரசாங்கமும் கொண்டு வரவில்லை. மக்கள் எதிர்ப்படும் பெரிய பிரச்னைகளை மனிதரின் அரசாங்கங்கள் எம்முறையிலும் தீர்க்கமுடியாமலிருக்கின்றன.
2 மக்கள் எல்லோரும் முழு நிறைவான மகிழ்ச்சியுள்ள வாழ்க்கையை அனுபவித்து மகிழ்வதைக் கூடிய காரியமாக்கும் ஒரு நீதியுள்ள அரசாங்கம் நமக்கு எவ்வளவாய்த் தேவை என்பதை நம்முடைய சிருஷ்டிகர் அறிந்திருக்கிறார். இதன் காரணமாகவே, கடவுளுடைய வழிநடத்துதலின் கீழ் இருக்கப்போகிற ஓர் அரசாங்கத்தைப் பற்றி பைபிள் சொல்லுகிறது. உண்மையில், கடவுளால் வாக்குப்பண்ணப்பட்ட இந்த அரசாங்கமே பைபிளின் முக்கிய செய்தியாய் இருக்கிறது.
3 ஆனால், ‘கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி பைபிள் எங்கே பேசுகிறது?’ என்று நீங்கள் ஒருவேளை கேட்கலாம். உதாரணமாக, ஏசாயா 9:6, 7-ல் பைபிள் அதைப் பற்றிப் பேசுகிறது. ஆங்கில கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பின்படி இந்த வசனங்கள் பின்வருமாறு சொல்லுகின்றன: “நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; அந்த அரசாங்கம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும் . . . அவருடைய அராசங்கத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை.”
4 இங்கே பைபிள், ஒரு பிள்ளையின், ஓர் இளவரசனின் பிறப்பைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கிறது. ஏற்றக்காலத்தில் இந்த அரச குமாரன், ஒரு பெரிய அரசரும் “சமாதானப்பிரபு”வுமாகப் போகிறவராய் இருந்தார். மெய்யாகவே அதிசயமான ஓர் அரசாங்கத்தின் பொறுப்பை உடையவராயிருப்பார். இந்த அரசாங்கம் முழு பூமிக்கும் சமாதானத்தைக் கொண்டுவரும், அந்தச் சமாதானம் என்றும் நிலைத்திருக்கும். ஏசாயா 9:6, 7-ல் யாருடைய பிறப்பு முன்னறிவிக்கப்பட்டதோ அந்தப் பிள்ளை இயேசுவே கன்னிகையாகிய மரியாளுக்கு அவருடைய பிறப்பை அறிவிக்கையில், காபிரியேல் தூதன் இயேசுவைக் குறித்துப் பின்வருமாறு சொன்னான்: “அவர் . . . அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது.”—லூக்கா 1:30-33.
இந்த ராஜ்யத்தின் முக்கியத்துவத்தை அறிவுறுத்துதல்
5 தாங்கள் பூமியில் இருந்தபோது இயேசுகிறிஸ்துவும் அவரை ஆதரித்தவர்களும் செய்த முக்கியமான வேலை கடவுளுடைய வரப்போகிற ராஜ்யத்தைப் பற்றிப் பிரசங்கிப்பதும் கற்பிப்பதுமேயாகும். (லூக்கா 4:43; 8:1) பைபிளில் இந்த ராஜ்யத்தை அவர்கள் ஏறக்குறைய 140 தடவைகள் குறிப்பிடுகிறார்கள். இயேசு, “உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக,” என்று கடவுளிடம் ஜெபிக்கும்படியுங்கூட தம்மைப் பின்பற்றினவர்களுக்குக் கற்பித்தார். (மத்தேயு 6:10) இவ்வாறு கிறிஸ்தவர்கள் ஜெபிக்கிற இந்த ராஜ்யம் மெய்யான ஓர் அரசாங்கமா? நீங்கள் ஒருவேளை அப்படி நினைத்திருக்கமாட்டீர்கள், என்றாலும் அது மெய்யான ஓர் அரசாங்கம் தான். கடவுளுடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவே அந்த ராஜ்யத்தின் அரசர். இந்தப் பூமி முழுவதும் அவர் ஆளுகை செய்யும் அந்தப் பிராந்தியமாயிருக்கும். மக்கள், பல எதிரி தேசங்களாகப் பிரிக்கப்பட்டிராமல், மனிதர் எல்லோரும் கடவுளுடைய ராஜ்ய அரசாங்கத்தின் கீழ் சமாதானத்தில் ஒன்றுபடுத்தப்பட்டவர்களாக இருக்கையில் ஆ, அது எவ்வளவு மேன்மையாயிருக்கும்!
6 முழுக்காட்டுபவனாகிய யோவான்: “மனந்திரும்புங்கள், பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது,” என்று மக்களுக்குச் சொல்லி, இந்த அரசாங்கத்தைப் பற்றிப் பிரசங்கிக்கத் தொடங்கினான். (மத்தேயு 3:1, 2) யோவான் இதை ஏன் சொல்லக்கூடியவனாயிருந்தான்? ஏனென்றால் கடவுளுடைய பரலோக அரசாங்கத்தின் அரசராகப் போகிறவராகிய இயேசு, அப்பொழுது அவனால் முழுக்காட்டப்படவும் கடவுளுடைய பரிசுத்த ஆவியால் அபிஷேகம் பண்ணப்படவும் போகிறவராக இருந்தார். ஆகவே, பின்னால் இயேசு பரிசேயரிடம்: “தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் [உங்கள் நடுவில், NW] இருக்கிறதே,” என்று ஏன் சொன்னாரென்பதை நீங்கள் விளங்கிக் கொள்ளலாம். (லூக்கா 17:21) இது ஏனென்றால், கடவுள், அரசராக அபிஷேகம் செய்திருந்த இயேசு, அங்கே அவர்களுடன் இருந்தார். பிரசங்கித்தும் கற்பித்தும் வந்த அந்த அவருடைய மூன்றரை ஆண்டுகளின்போது, இயேசு, மரணம் வரையாகக் கடவுளுக்குத் தாம் உண்மைத் தவறாதவராக இருந்ததன் மூலம், அரசராக இருப்பதற்கான தம்முடைய உரிமையை நிரூபித்தார்.
7 கிறிஸ்துவின் ஊழிய காலத்தின்போது இருந்த அந்த முக்கிய விவாதம் கடவுளுடைய ராஜ்யமே என்பதைக்காட்ட, அவருடைய மரணத்துக்கு முந்தின அந்தக் கடைசி நாளில் என்ன நடந்ததென்பதை நாம் ஆழ்ந்து கவனிக்கலாம். அந்த மக்கள் பின்வருமாறு சொல்லி இயேசுவின்பேரில் குற்றஞ் சாட்டினார்கள் என்று பைபிள் நமக்குச் சொல்லுகிறது: “இவன் தன்னைக் கிறிஸ்து என்னப்பட்ட ராஜாவென்றும், ராயருக்கு வரிகொடுக்க வேண்டுவதில்லையென்றும் சொல்லி, ஜனங்களைக் கலகப்படுத்தக் கண்டோம்.” இந்தக் காரியங்களைக் கேட்டபோது, அந்த ரோம தேசாதிபதியாகிய பொந்தியு பிலாத்து இயேசுவை: “நீ யூதருடைய ராஜாவா?” என்று கேட்டான்.—லூக்கா 23:1-3.
8 இயேசு பிலாத்துவின் கேள்விக்கு நேரடியாய்ப் பதில் சொல்லவில்லை, என்றாலும்: “என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே; இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல,” என்று சொன்னார். அவருடைய ராஜ்யம் பூமிக்குரிய ஒன்றாய் இருக்கப்போவதில்லையாதலால் இயேசு இவ்வாறு பதில் கொடுத்தார். மனிதனாக பூமியில் ஏதோ ஒரு சிங்காசனத்திலிருந்து அல்ல, பரலோகத்திலிருந்து அவர் ஆட்சி செலுத்த வேண்டும். இயேசு அரசராக ஆட்சி செய்ய உரிமையுடையவராக இருந்தாரா இல்லையா என்பது விவாதமாக இருந்ததால் பிலாத்து மறுபடியுமாக: “அப்படியானால் நீ ராஜாவோ?” என்று இயேசுவைக் கேட்டான்.
9 இயேசு ஒரு புதிய அரசாங்கத்தைப் பற்றிப் பிரசங்கித்தும் கற்பித்தும் வந்திருந்ததன் காரணமாகத் தம்முடைய உயிரைக் குறித்த விசாரணையில் இருந்தார் என்பது தெளிவாய் இருக்கிறது. ஆகவே இயேசு பிலாத்துவுக்குப் பின்வருமாறு பதிலுரைத்தார்: “நீர் சொல்லுகிறபடி நான் ராஜாதான்; சத்தியத்தைக் குறித்துச் சாட்சி கொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்.” (யோவான் 18:36, 37) ஆம், கடவுளுடைய ராஜ்ய அரசாங்கத்தைப் பற்றிய இந்த அதிசயமான சத்தியத்தை மக்களுக்குச் சொல்லிவருவதில் இயேசு, பூமியில் வாழ்ந்த தம்முடைய வாழ்க்கையைச் செலவிட்டிருந்தார். இதுவே அவருடைய முக்கிய செய்தி, இன்று இன்னும் இந்த ராஜ்யம் மிக அதிக முக்கிய விவாதமாய் இருக்கிறது. என்றபோதிலும் பின்வரும் இந்தக் கேள்விகள் இன்னும் இருந்துகொண்டிருக்கின்றன: ஒருவரின் வாழ்க்கையில் எந்த அரசாங்கம் மிக முக்கியமானதாய் இருக்கிறது? அது மனிதரின் ஏதோ ஒரு அரசாங்கமா, அல்லது கிறிஸ்துவை அரசராகக் கொண்டுள்ள கடவுளுடைய ராஜ்யமா?
பூமியின் புதிய அரசாங்கத்திற்காக ஏற்பாடு செய்தல்
10 சாத்தான் தன்னுடைய கலகத்தில், ஆதாமும் ஏவாளும் தன்னோடு சேர்ந்து கொள்ளும்படி செய்தபோதே, மனிதவர்க்கத்தின்மீது ஒரு புதிய அரசாங்கம் தேவைப்படுவதை யெகோவா கண்டார். ஆகையால், இப்படிப்பட்ட ஓர் அரசாங்கத்தை ஏற்படுத்திவைப்பதற்கான தம்முடைய நோக்கத்தைப் பற்றிக் கடவுள் உடனடியாகத் தெரிவித்தார். சர்ப்பத்தின்பேரில் அவர் தீர்ப்பைக் கூறுகையில் இந்த அரசாங்கத்தைக் குறிப்பிட்டு, உண்மையில், பிசாசாகிய சாத்தானிடம் பின்வருமாறு சொன்னார்: “உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்.”—ஆதியாகமம் 3:14, 15.
11 ஆனால், ‘இதில் ஓர் அரசாங்கத்தைப் பற்றி ஏதாகிலும் எங்கே சொல்லப்பட்டிருக்கிறது?’ என்று நீங்கள் ஒருவேளை கேட்கலாம். இந்தக் கூற்றை நாம் கவனமாய் ஆராய்ந்து பார்க்கலாம், அப்பொழுது நாம் காண்போம். இந்த வேதவசனமானது, சாத்தானுக்கும் அந்த “ஸ்திரீக்கும்” இடையில் விரோதம், அல்லது பகை இருக்கப் போவதாகச் சொல்லுகிறது. கூடுதலாக, சாத்தானின் “வித்து”க்கும், அல்லது பிள்ளைகளுக்கும், அந்த ஸ்திரீயின் “வித்து”க்கும், அல்லது பிள்ளைகளுக்கும் இடையில்கூட பகை இருக்கப் போகிறது. முதலாவதாக அந்த “ஸ்திரீ” யார் என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும்.
12 அவள் பூமிக்குரிய ஒரு பெண் அல்ல. எந்த மனிதப் பெண்ணிடமாகவும் எந்தத் தனிப்பட்ட பகையும் சாத்தானுக்கு இருந்திருக்கவில்லை. இதற்கு மாறாக, இவள் ஓர் அடையாளக் குறிப்பான பெண். அதாவது, அவள் வேறு ஒன்றைக் குறிப்பிட்டு நிற்பவளாய் இருக்கிறாள். இது பைபிளின் கடைசிப் புத்தகமாகிய வெளிப்படுத்தின விசேஷத்தில் காட்டப்பட்டிருக்கிறது, அங்கே இவளைப் பற்றி மேலுமதிகமான தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. அங்கே இந்த “ஸ்திரீ” “சூரியனை அணிந்திருந்தாள், அவள் பாதங்களின் கீழே சந்திரனும், அவள் சிரசின் மேல் பன்னிரண்டு நட்சத்திரங்களுள்ள கிரீடமும் இருந்தன,” என்பதாக விவரிக்கப்பட்டிருக்கிறாள். இந்த “ஸ்திரீ” யாரைக் குறிப்பிட்டு நிற்பவளாய் இருக்கிறாள் என்பதைக் கண்டுபிடிப்பதற்கு நமக்கு உதவி செய்ய, அவளுடைய பிள்ளையைப் பற்றி வெளிப்படுத்துதல் தொடர்ந்து சொல்லிக்கொண்டு போவதைக் கவனியுங்கள்: “சகல ஜாதிகளையும் இருப்புக்கோலால் ஆளுகை செய்யும் ஆண் பிள்ளையை அவள் பெற்றாள்; அவளுடைய பிள்ளை தேவனிடத்திற்கும் அவருடைய சிங்காசனத்தினிடத்திற்கும் எடுத்துக் கொள்ளப்பட்டது.”—வெளிப்படுத்துதல் 12:1-5.
13 அந்த “ஆண் பிள்ளை” யார் அல்லது எதுவென்பதைக் கற்றறிவது அந்த “ஸ்திரீ” யாரை அல்லது எதைக் குறிப்பிடுகிறவளாய் இருக்கிறாள் என்பதைக் கண்டுபிடிக்க நமக்கு உதவிசெய்யும். அந்தப் பெண் ஒரு மெய்யான மனிதப் பெண் அல்லாதது போல இந்தப் பிள்ளையும் சொல்லர்த்தமான ஓர் ஆளல்ல. இந்த “ஆண் பிள்ளை” “சகல ஜாதிகளையும் ஆளுகை செய்யப்” போகிறான் என்று அந்த வேதவசனம் காட்டுகிறது. ஆகவே அந்தப் “பிள்ளை”, இயேசு கிறிஸ்துவை ஆளுகை செய்யும் அரசராகக் கொண்டுள்ள கடவுளுடைய அரசாங்கத்தைக் குறிப்பிடுகிறான். ஆகவே அந்த “ஸ்திரீ”, உண்மையுள்ள பரலோக சிருஷ்டிகளாலாகிய கடவுளுடைய அமைப்பைக் குறிப்பிட்டு நிற்பவளாய் இருக்கிறாள். அந்த “ஆண் பிள்ளை” அந்த “ஸ்திரீ”யிலிருந்து வந்ததைப் போலவே, அரசராகிய இயேசு கிறிஸ்துவும், அந்தப் பரலோக அமைப்பிலிருந்து, அதாவது, கடவுளுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு ஒன்றாக உழைக்கிற பரலோகத்திலுள்ள அந்த உண்மைத் தவறா ஆவி சிருஷ்டிகளாலாகிய குழுவிலிருந்து வந்தார். கலாத்தியர் 4:26 இந்த அமைப்பை “மேலான எருசலேம்” என்று அழைக்கிறது. இவ்வாறாக, ஆதாமும் ஏவாளும் முதலாவதாகக் கடவுளுடைய ஆட்சிக்கு விரோதமாய்க் கலகஞ்செய்தபோதே, யெகோவா, நீதியை நேசிக்கிறவர்களுக்கு நம்பிக்கையாகச் சேவிக்கப்போகும் ஒரு ராஜ்ய அரசாங்கத்திற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.
யெகோவா தம்முடைய வாக்குத்தத்தத்தை நினைவுகூருகிறார்
14 கடவுளுடைய அரசாங்கத்தின் அரசராக இருக்கப்போகிற ஒரு “வித்து”வை அனுப்புவதாகத் தாம் கொடுத்த வாக்கை யெகோவா மறந்துவிடவில்லை. இந்த அரசர் சாத்தானுடைய தலையை நசுக்குவதன் மூலம் அவனை அழித்துப்போடுவார். (ரோமர் 16:20; எபிரெயர் 2:14) பின்னால், இந்த வாக்குப்பண்ணப்பட்ட வித்து, உண்மையுள்ள மனிதனாகிய ஆபிரகாமின் மூலமாய் வருவாரென்று யெகோவா சொன்னார். யெகோவா ஆபிரகாமுக்குப் பின்வருமாறு கூறினார்: “உன் வித்துவைக் கொண்டு பூமியின் சகல ஜாதிகளும் நிச்சயமாகவே தங்களை ஆசீர்வதித்துக்கொள்வார்கள்.” (ஆதியாகமம் 22:18, NW) ஆபிரகாமின் வம்சப் பரம்பரை மூலமாய் வருவாரென்று வாக்குப்பண்ணப்பட்ட இந்த “வித்து” யார்? பின்னால் பைபிள் பின்வருமாறு சொல்லி இதற்குப் பதிலைக் கொடுக்கிறது: “ஆபிரகாமுக்கும் அவனுடைய சந்ததிக்கும் வாக்குத்தத்தங்கள் பண்ணப்பட்டன; சந்ததிகளுக்கு என்று அநேகரைக் குறித்துச் சொல்லாமல், உன் சந்ததிக்கு [வித்துக்கு] என்று ஒருவனைக் குறித்துச் சொல்லியிருக்கிறார், அந்தச் சந்ததி [வித்து] கிறிஸ்துவே.” (கலாத்தியர் 3:16) மேலும் கடவுளுடைய “ஸ்திரீ”யின் இந்த “வித்து” அவர்களுடைய வம்சப் பரம்பரையின் மூலமாய் வருவாரென்று யெகோவா, ஆபிரகாமின் குமாரனாகிய ஈசாக்குக்கும் பேரனாகிய யாக்கோபுக்குங்கூட கூறினார்.—ஆதியாகமம் 26:1-5; 28:10-14.
15 இந்த “வித்து” ஓர் ஆளும் அரசராக இருப்பார் என்பதைத் தெளிவுபடுத்துகிறவனாய், யாக்கோபு பின்வருமாறு தன்னுடைய குமாரனாகிய யூதாவுக்குக் கூறினான்: “ஷைலோ வரும்வரை, செங்கோல் [ஆளும் அதிகாரம்] யூதாவை விட்டு அப்பால் விலகிப் போகாது, அதிகாரியின் கோலும் அவன் பாதங்களுக்கிடையிலிருந்து நீங்கிப் போகாது, அவருக்கே ஜனங்களின் கீழ்ப்படிதல் உரியதாயிருக்கும்.” (ஆதியாகமம் 49:10, NW) இயேசுகிறிஸ்து யூதாவின் கோத்திரத்திலிருந்து வந்தார். அவரே, “ஜனங்களின் கீழ்ப்படிதல் உரியதாயிருக்கும்” இந்த “ஷைலோ”வாக நிரூபித்தார்.—எபிரெயர் 7:14.
16 யூதாவுக்கு இது சொல்லப்பட்டு ஏறக்குறைய 700 ஆண்டுகளுக்குப் பின், யூதா கோத்திரத்தானாகிய தாவீதைக் குறித்து யெகோவா பின்வருமாறு கூறினார்: “என் தாசனாகிய தாவீதைக் கண்டுபிடித்தேன்; . . . அவன் சந்ததி என்றென்றைக்கும் நிலைத்திருக்கவும், அவன் ராஜாசனம் வானங்களுள்ளமட்டும் நிலைநிற்கவும் செய்வேன்.” (சங்கீதம் 89:20, 29) தாவீதின் “சந்ததி” (அல்லது வித்து) “என்றென்றைக்கும்” நிலைத்திருக்கச் செய்யப்படும் என்றும், “அவன் ராஜாசனம் வானங்களுள்ளமட்டும்” நீடித்திருக்குமென்றும் கடவுள் சொல்லுகையில், அவர் கருதுவது என்ன? தம்முடைய நியமிக்கப்பட்ட அரசராகிய இயேசு கிறிஸ்துவின் கைகளில் இந்த ராஜ்ய அரசாங்கம் என்றும் நிலைத்திருக்கும் என்ற இந்த உண்மையையே யெகோவா தேவன் குறிப்பிடுகிறார். இது நமக்கு எப்படித் தெரியும்?
17 யெகோவாவின் தூதனாகிய காபிரியேல், மரியாளுக்குப் பிறக்கப்போவதாயிருந்த அந்தப் பிள்ளையைப் பற்றி அவளிடம் என்ன சொன்னான் என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். “அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக,” என்று அவன் சொன்னான். ஆனால் இயேசு வெறும் ஒரு பிள்ளையாகவே, அல்லது மனிதனாகவேயுங்கூட, பூமியில் நிலைத்திருக்கப் போவதில்லை; காபிரியேல் மேலும் தொடர்ந்து: “அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய [யெகோவா, NW] தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது,” என்று சொன்னான். (லூக்கா 1:31-33) தம்மை நேசித்து நம்புகிறவர்களின் நித்திய நன்மைக்காக நீதியுள்ள ஓர் அரசாங்கத்தை நிலைநாட்ட யெகோவா ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார் என்பது மெய்யாகவே அதிசயமாய் இருக்கிறதல்லவா?
18 இந்த உலகத்தின் எல்லா விதமான அரசாங்கங்களையும் அழிப்பதற்குக் கடவுளுடைய ராஜ்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப்போகிற அந்தக் காலம் இப்பொழுது நெருங்கிவிட்டது. இயேசு கிறிஸ்து அப்பொழுது வெற்றிச் சிறந்த அரசராக போர் நடவடிக்கையில் ஈடுபடுவார். இந்தப் போரை விவரிப்பதாய், பைபிள் பின்வருமாறு சொல்லுகிறது: “அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப் பண்ணுவார்; . . . அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.” (தானியேல் 2:44; வெளிப்படுத்துதல் 19:11-16) மற்ற எல்லா அரசாங்கங்களும் வழியிலிருந்து விலக்கிப் போடப்பட்டிருக்க, கடவுளுடைய அரசாங்கம் மக்களின் உண்மையான தேவைகளைத் திருப்தியாக்கும். அரசராகிய இயேசுகிறிஸ்து, தம்முடைய உண்மைத் தவறா குடிமக்களில் ஒருவரும் நோயோ, முதுமையோ, மரணமோ அடையாதபடி பார்த்துக்கொள்வார். குற்றச்செயல், குடியிருப்பு வசதியில்லாமை, பசி, இன்னும் இப்படிப்பட்ட மற்ற எல்லா பிரச்னைகளும் தீர்க்கப்படும். பூமியெங்கும் மெய்ச் சமாதானமும் பாதுகாப்பும் இருக்கும். (2 பேதுரு 3:13; வெளிப்படுத்துதல் 21:3-5) என்றபோதிலும், கடவுளுடைய இந்த ராஜ்ய அரசாங்கத்தில் அரசாட்சி செய்யப்போகிறவர்களைப் பற்றி மேலுமதிகமானவற்றை நாம் கற்றுக் கொள்ளவேண்டும்.
[கேள்விகள்]
1. மனித அரசாங்கங்கள் என்ன செய்ய தவறி விட்டிருக்கின்றன?
2. பைபிளின் முக்கிய செய்தி என்ன?
3. கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி ஏசாயா 9:6, 7 என்ன சொல்லுகிறது?
4. கடவுளுடைய அரசாங்கத்தின் அரசராகிற அந்தப் பிள்ளை யார்?
5. (எ) இந்த ராஜ்யத்தின் முக்கியத்துவம் பைபிளில் எப்படிக் காட்டப்பட்டிருக்கிறது? (பி) கடவுளுடைய ராஜ்யம் என்றாலென்ன, அது என்ன செய்யும்?
6. இயேசு பூமியில் இருந்தபோது, இந்த ராஜ்யம் ‘சமீபித்திருப்பதாக’வும், “உங்கள் நடுவில்” இருப்பதாகவும் ஏன் சொல்லப்பட்டது?
7. இயேசு பூமியில் இருந்தபோது, இந்த ராஜ்யமே ஒரு முக்கிய விவாதமாயிருந்ததென்று எது காட்டுகிறது?
8. (எ) இயேசு, தாம் ராஜாவா என்று கேட்கப்பட்டபோது எப்படிப் பதிலளித்தார்? (பி) தம்முடைய ராஜ்யம் “இவ்விடத்திற்குரியதல்ல” என்று இயேசு சொன்னபோது என்ன அர்த்தங்கொண்டார்?
9. (எ) எந்த அதிசயமான சத்தியத்தை இயேசு தெரிவித்தார்? (பி) இன்று எவை பெரிய கேள்விகளாக இருக்கின்றன?
10. (எ) கடவுள் எப்பொழுது ஒரு புதிய அரசாங்கம் தேவைப்படுவதைக் கண்டார்? (பி) பைபிளில் எங்கே இந்த அரசாங்கம் முதலாவதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது? (சி) சர்ப்பத்தால் குறிப்பிடப்படுகிறவன் யார்?
11. எவருக்கிடையில் பகை இருக்கப்போவதாக இருந்தது?
12. அந்த “ஸ்திரீயை”ப் பற்றி வெளிப்படுத்துதல் 12-ம் அதிகாரத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது?
13. அந்த “ஆண் பிள்ளை”யும் அந்த “ஸ்திரீ”யும் எவரை அல்லது எவற்றைக் குறிப்பிடுகிறவர்களாக இருக்கிறார்கள்?
14. (எ) சாத்தானை நசுக்கப்போகிற ஒரு “வித்து”வைப் பற்றிய தம்முடைய வாக்கைத் தாம் நினைவுகூர்ந்தாரென்று யெகோவா எப்படிக் காட்டினார்? (பி) வாக்குப்பண்ணப்பட்ட இந்த “வித்து” யார்?
15, 16. இந்த “வித்து” ஆளும் அரசராக இருக்கப் போகிறார் என்று எது நிரூபிக்கிறது?
17. வாக்குப்பண்ணப்பட்ட அந்த அரசர் இயேசுகிறிஸ்துவே என்று நாம் எப்படித் தெரிந்து கொள்கிறோம்?
18. (எ) பூமிக்குரிய அரசாங்கங்களின் முடிவை பைபிள் எப்படி விவரிக்கிறது? (பி) கடவுளுடைய அரசாங்கம் மக்களுக்காக என்ன செய்யும்?
[பக்கம் 112, 113-ன் படம்]
கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிப் பிரசங்கிக்கும் இந்த முக்கியமான வேலையைச் செய்யும்படி இயேசு தம்மைப் பின்பற்றினவர்களை அனுப்பினார்
[பக்கம் 114-ன் படம்]
தம்முடைய உயிரைக் குறித்த விசாரணையின்போதும் இயேசு தொடர்ந்து கடவுளுடைய ராஜ்யத்தைப் பிரசங்கித்தார்
[பக்கம் 119-ன் படம்]
இயேசுவை நீங்கள் எப்படி கருதுகிறீர்கள்—வெற்றிச் சிறந்த ஓர் அரசராகவா அல்லது செயலற்ற ஒரு குழந்தையாகவா?