அதிகாரம் 39
போர்வீரரான-அரசர் அர்மகெதோனில் வெற்றிபெறுகிறார்
தரிசனம் 13—வெளிப்படுத்துதல் 19:11-21
பொருள்: சாத்தானின் காரிய ஒழுங்குமுறையை அழிப்பதற்கு இயேசு பரலோக சேனைகளை வழிநடத்துகிறார்
நிறைவேற்றத்தின் காலம்: மகா பாபிலோனின் அழிவுக்குப் பின்பு
1. அர்மகெதோன் என்பது என்ன, எது அதற்கு வழிநடத்துகிறது?
அர்மகெதோன்—பலருக்குத் திகிலூட்டும் ஒரு சொல்! ஆனால் நீதியை நேசிப்போருக்கு, யெகோவா, ராஜ்யங்களின்மீது முடிவான நியாயத்தீர்ப்பை நிறைவேற்றவிருக்கிற நெடுங்காலம் காத்திருக்கப்பட்ட அந்த நாளை அது குறித்துக்காட்டுகிறது. இது மனிதனின் போர் அல்ல, ஆனால் “சர்வவல்ல கடவுளுடைய மகா நாளின் யுத்தம்”—பூமியின் அதிபதிகளுக்கு எதிராகப் பழிதீர்க்கும் அவருடைய நாள். (வெளிப்படுத்துதல் 16:14, 16, தி.மொ.; எசேக்கியேல் 25:17) மகா பாபிலோனைப் பாழாக்குவதோடு, இந்த மிகுந்த உபத்திரவம் ஏற்கெனவே தொடங்கிவிட்டிருக்கும். பின்பு, சாத்தானால் தூண்டுவிக்கப்பட்டு, அந்தச் சிவப்புநிற மூர்க்க மிருகமும் அதன் பத்துக் கொம்புகளும் யெகோவாவின் ஜனங்கள்பேரில் தங்கள் தாக்குதலை ஒருமிக்க ஊன்றவைக்கும். பிசாசானவன், கடவுளுடைய ஸ்திரீயைப்போன்ற அமைப்பின்பேரில் முன்னொருபோதும் கொண்டிருந்ததைப் பார்க்கிலும் மிக அதிகக் கோபாவேசத்தோடு, அவளுடைய வித்தின் மீதிபேரை முற்றிலுமாய் அழித்துத்தீரும்படி போர்செய்வதில் தன் மோசடிக்காரர்களைப் பயன்படுத்த தீர்மானித்திருக்கிறான். (வெளிப்படுத்துதல் 12:17) இதுவே சாத்தானின் கடைசி வாய்ப்பு!
2. மாகோகின் கோகு யார், தம்முடைய சொந்த ஜனங்களை அவன் தாக்கும்படி யெகோவா எவ்வாறு திட்டமிட்டு செய்விக்கிறார்?
2 பிசாசானவனின் கொடிய வன்முறைத் தாக்குதல் எசேக்கியேல் 38-ம் அதிகாரத்தில் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட சாத்தான் அங்கே, “மாகோகு தேசத்தானாகிய கோகு” என அழைக்கப்படுகிறான். யெகோவா அடையாளக்குறிப்பான துறடுகளைக் கோகின் தாடைகளில் மாட்டி, அவனையும் அவனுடைய திரளான இராணுவ சேனையையும், தாக்க வரும்படி இழுக்கிறார். இதை அவர் எவ்வாறு செய்கிறார்? “ஜாதியாரிடமிருந்து சேர்க்கப்பட்டு ஆடுமாடுகளையும் பொருட்களையும் சம்பாதித்து, உலகின் மத்தியில் குடியிருக்கிற” பாதுகாப்பற்ற ஜனமாகத் தம்முடைய சாட்சிகளைக் காணும்படி கோகைச் செய்வதன் மூலமே. இவர்கள் மூர்க்க மிருகத்தையும் அதன் சொரூபத்தையும் வணங்க மறுத்துவிட்ட ஒரே ஜனமாக பூமியில் மத்திப இடத்தை வகிக்கின்றன[ர்]. அவர்களுடைய ஆவிக்குரிய பலமும் செழிப்பும் கோகை மூர்க்கமடைய செய்கிறது. ஆகவே கோகும் அவனுடைய திரளான இராணுவ சேனையும், சமுத்திரத்திலிருந்து வெளிவந்த மூர்க்க மிருகமும் அதன் பத்துக் கொம்புகளும் உட்பட, கொல்லுவதற்காகத் திரண்டு வருகின்றன[ர்]. எனினும், மகா பாபிலோனைப்போல் இராமல், கடவுளுடைய சுத்தமான ஜனங்கள் தெய்வீகப் பாதுகாப்பை அனுபவித்து மகிழ்கின்றனர்!—எசேக்கியேல் 38:1, 4, 11, 12, 15, தி.மொ.; வெளிப்படுத்துதல் 13:1.
3. கோகின் இராணுவ சேனைகளை யெகோவா எவ்வாறு ஒழித்துப்போடுகிறார்?
3 கோகையும் அவனுடைய எல்லா கூட்டத்தையும் யெகோவா எவ்வாறு ஒழித்துப்போடுகிறார்? கவனியுங்கள்! “என் சகல மலைகளிலும் பட்டயத்தை அவனுக்கு விரோதமாக வரவழைப்பேன், இது யெகோவாவாகிய ஆண்டவரின் திருவாக்கு; ஒவ்வொருவன் பட்டயமும் அவன் சகோதரனுக்கு விரோதமாயிருக்கும்.” ஆனால் அணுசக்தியாயினும் அல்லது வேறுவகையான எந்தப் போர்த்தளவாடங்களாயினும் அந்தப் போரில் பயன்படாது, ஏனெனில் யெகோவா பின்வருமாறு அறிவிக்கிறார்: “கொள்ளைநோயினாலும் இரத்தத்தினாலும் நான் அவனோடே வழக்காடி அவன்மேலும் அவன் ராணுவங்களின்மேலும் அவனோடிருக்கும் பல தேசத்தாரின்மேலும் வெள்ளமாக அடிக்கும் மழையையும் பெருங் கல்மழையையும் அக்கினியையும் கந்தகத்தையும் வருஷிக்கப் பண்ணுவேன். இவ்விதமாய் நான் பல ஜாதியாரின் கண்களுக்கு முன்பாக என் மகத்துவத்தையும் என் பரிசுத்தத்தையும் விளங்கப்பண்ணி அவர்கள் என்னை அறியும்படி செய்வேன்; நானே யெகோவா என்று அப்பொழுது அறிந்துகொள்வார்கள்.”—எசேக்கியேல் 38:21-23, தி.மொ.; 39:11; ஒத்துப்பாருங்கள்: யோசுவா 10:8-14; நியாயாதிபதிகள் 7:19-22; 2 நாளாகமம் 20:15, 22-24; யோபு 38:22, 23.
‘உண்மையும் சத்தியமுமுள்ளவர்’ எனப்படுபவர்
4. இயேசு கிறிஸ்து போருக்குப் படையணிவகுத்து ஆயத்தமாயிருப்பதை யோவான் எவ்வாறு விவரிக்கிறார்?
4 யெகோவா ஒரு பட்டயத்தை வரச் செய்கிறார். இந்தப் பட்டயத்தைக் கையாளுபவர் யார்? வெளிப்படுத்துதலுக்குத் திரும்பக் கவனம் செலுத்தினால், சிலிர்ப்பூட்டும் இன்னுமொரு தரிசனத்தில் பதிலைக் கண்டடைகிறோம். உண்மையில் பயபக்தியூட்டும் ஒன்றை வெளிப்படுத்துவதற்கு யோவானின் கண்களுக்கு முன் பரலோகங்கள் திறக்கின்றன—இயேசு கிறிஸ்துதாமே போருக்குப் படையணிவகுத்து ஆயத்தமாயிருக்கிறார்! யோவான் நமக்குச் சொல்வதாவது: “பின்பு, பரலோகம் திறந்திருக்கக் கண்டேன்; இதோ, ஒரு வெள்ளைக்குதிரை காணப்பட்டது, அதின்மேல் ஏறியிருந்தவர் உண்மையும் சத்தியமுமுள்ளவரென்னப்பட்டவர்; அவர் நீதியாய் நியாயந்தீர்த்து யுத்தம்பண்ணுகிறார். அவருடைய கண்கள் அக்கினிஜுவாலையைப்போலிருந்தன, அவருடைய சிரசின்மேல் அநேக கிரீடங்கள் இருந்தன.”—வெளிப்படுத்துதல் 19:11, 12அ.
5, 6. பின்வருபவை குறிப்பிட்டுக்காட்டுவது என்ன: (அ) “வெள்ளைக்குதிரை”? (ஆ) ‘உண்மையும் சத்தியமுமுள்ளவர்’ என்ற பெயர்? (இ) கண்கள் “அக்கினிஜுவாலை”யைப்போல்? (ஈ) “அநேக கிரீடங்கள்”?
5 நான்கு குதிரைவீரர்களைப்பற்றிய முந்தின தரிசனத்தில் இருந்ததுபோல், இந்த “வெள்ளைக்குதிரை” நீதியுள்ள போருக்குப் பொருத்தமான அடையாளமாயுள்ளது. (வெளிப்படுத்துதல் 6:2) கடவுளுடைய குமாரரில், வல்லமையுள்ள இந்தப் போர்வீரரைப் பார்க்கிலும் அதிக நீதியுள்ளோராக யார் இருக்கக்கூடும்? “உண்மையும் சத்தியமுமுள்ளவரென்னப்ப”டுவதால், இவர் “உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சி”யாகிய இயேசு கிறிஸ்துவாகவே இருக்க வேண்டும். (வெளிப்படுத்துதல் 3:14) யெகோவாவின் நீதியுள்ள நியாயத்தீர்ப்புகளை நிறைவேற்றுவதற்கு அவர் போர் செய்கிறார். இவ்வாறு, யெகோவா நியமித்த நியாயாதிபதியான, “வல்லமையுள்ள தேவன்” ஆக இருக்கும் தம்முடைய ஆற்றலில் அவர் செயல்படுகிறார். (ஏசாயா 9:6) அவருடைய கண்கள், தம்முடைய சத்துருக்களுக்கு வரவிருக்கும் அக்கினியால் எரிக்கப்படுவதைப்போன்ற அழிவை நோக்கிக்கொண்டு, ‘அக்கினிஜுவாலையைப்போல்,’ திகிலூட்டுபவையாக இருக்கின்றன.
6 இந்தப் போர்வீரரான-அரசரின் தலை கிரீடங்கள் சூட்டப்பட்டதாயுள்ளது. சமுத்திரத்திலிருந்து வருவதாக யோவான் கண்ட அந்த மூர்க்க மிருகம் பத்துக் கிரீடங்களை உடையதாக இருந்தது, அவை பூமிக்குரிய காட்சியில் அதன் தற்காலிகமான ஆட்சி அதிகாரத்தைப் படமாகக் குறிப்பிட்டன. (வெளிப்படுத்துதல் 13:1) இயேசுவோவெனில், “அநேக கிரீடங்கள்” உடையவராக இருக்கிறார். அவர் “ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தா”வுமாக இருப்பதால், அவருடைய மகிமையான ஆட்சி அதிகாரம் ஈடற்றது.—1 தீமோத்தேயு 6:15.
7. இயேசு கொண்டிருந்த அந்த எழுதப்பட்ட பெயர் என்ன?
7 யோவானின் விவரிப்பு பின்வருமாறு தொடருகிறது: “அவருக்கேயன்றி வேறொருவருக்குந் தெரியாத ஒரு நாமமும் எழுதியிருந்தது.” (வெளிப்படுத்துதல் 19:12ஆ) கடவுளுடைய குமாரனைப்பற்றி பைபிளில், இயேசு, இம்மானுவேல், மிகாவேல் போன்ற பெயர்களைக்கொண்டு ஏற்கெனவே பேசப்பட்டிருக்கிறது. ஆனால் குறிப்பிடப்படாத இந்த “நாமம்,” கர்த்தருடைய நாளின்போது இயேசு அனுபவித்து மகிழும் பதவியையும் சிலாக்கியங்களையும் குறிப்பிட்டு நிற்பதாகத் தோன்றுகிறது. (வெளிப்படுத்துதல் 2:17-ஐ ஒத்துப்பாருங்கள்.) ஆண்டு 1914 முதற்கொண்டு இயேசுவை விவரித்து, ஏசாயா சொல்வதாவது: “அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.” (ஏசாயா 9:6) அப்போஸ்தலன் பவுல் பின்வருமாறு எழுதினபோது, இயேசுவின் பெயரை அவருடைய மிக உயர்ந்த ஊழிய சிலாக்கியங்களுடன் சம்பந்தப்படுத்தினார்: “தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக [இயேசுவை] உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் . . . முழங்கால் யாவும் முடங்கும்படிக்கு . . . எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.”—பிலிப்பியர் 2:9-11.
8. எழுதப்பட்ட அந்தப் பெயரை ஏன் இயேசு மாத்திரமே அறிந்துகொள்ள முடியும், தம்முடைய உயர் சிலாக்கியங்கள் சிலவற்றை அவர் யாருடன் பகிர்ந்துகொள்கிறார்?
8 இயேசுவின் சிலாக்கியங்கள் ஈடிணையற்றவை. அத்தகைய உயர்ந்த பதவியை வகிப்பதன் உட்பொருளை யெகோவாவைத் தவிர, மற்றப்படி இயேசு மாத்திரமே புரிந்துகொள்ள முடியும். (மத்தேயு 11:27-ஐ ஒத்துப்பாருங்கள்.) ஆகையால், கடவுளுடைய சிருஷ்டிகள் எல்லாரிலும், இயேசு மாத்திரமே இந்தப் பெயரை முழுமையாக மதித்துணர முடியும். இருப்பினும், இந்தச் சிலாக்கியங்கள் சிலவற்றில் இயேசு தம்முடைய மணவாட்டியைச் சேர்த்துக்கொள்கிறார். ஆகவே பின்வரும் இந்த வாக்குக் கொடுக்கிறார்: “ஜெயங்கொள்ளுகிறவனெவனோ . . . என் புதிய நாமத்தை . . . அவன்மேல் எழுதுவேன்.”—வெளிப்படுத்துதல் 3:12.
9. பின்வருபவை குறிப்பிட்டுக்காட்டுவது என்ன: (அ) இயேசு ‘இரத்தந்தெளிக்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருப்பது’? (ஆ) “தேவனுடைய வார்த்தை” என்று இயேசு அழைக்கப்படுவது?
9 யோவான் மேலும் சொல்வதாவது: “இரத்தத்தில் தோய்க்கப்பட்ட [தெளிக்கப்பட்டிருந்த, NW] வஸ்திரத்தைத் தரித்திருந்தார்; அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே.” (வெளிப்படுத்துதல் 19:13) இது யாருடைய ‘இரத்தம்’? இது மனிதவர்க்கத்துக்காகச் சிந்தின இயேசுவின் உயிர்-இரத்தமாக இருக்கலாம். (வெளிப்படுத்துதல் 1:5) ஆனால், இந்தச் சூழமைவில், தம்முடைய சத்துருக்களின்மீது யெகோவாவின் நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுகையில் சிந்தப்பட்ட அவர்களுடைய இரத்தத்தைக் குறிப்பிடுவதாகப் பெரும்பாலும் இருக்கலாம். முந்தின ஒரு தரிசனத்தில் பூமியின் திராட்சை அறுவடை செய்யப்பட்டு கடவுளுடைய கோபாக்கினைக்குரிய அந்தப் பெரிய ஆலையில், இரத்தம் “குதிரைகளின் கடிவாளங்கள்மட்டும் பெருகி” எட்டும் வரையில் மிதிக்கப்பட்டு—கடவுளுடைய சத்துருக்களின்மீது பெரும் வெற்றியை அடையாளமாகக் குறித்தது நமக்கு நினைவுக்கு வருகிறது. (வெளிப்படுத்துதல் 14:18-20) அவ்வாறே, இயேசுவின் மேலங்கியில் இரத்தம் தெளித்திருந்ததானது, அவருடைய வெற்றி உறுதித்தீர்வானதும் முழுமையானதுமென உறுதிசெய்கிறது. (ஏசாயா 63:1-6-ஐ ஒத்துப்பாருங்கள்.) இயேசு ஒரு பெயரால் அழைக்கப்படுவதைப் பற்றி இப்பொழுது மறுபடியுமாக யோவான் பேசுகிறார். இந்தத் தடவை இது விரிவாக அறியப்பட்ட பெயர்—“தேவனுடைய வார்த்தை”—இந்தப் போர்வீரரான-அரசரை யெகோவாவின் பிரதான பிரதிநிதி பேச்சாளராகவும் சத்தியத்தின் வீர ஆதரவாளராகவும் அடையாளங்காட்டுகிறது.—யோவான் 1:1; வெளிப்படுத்துதல் 1:1.
இயேசுவின் உடனிணைந்த போர்வீரர்கள்
10, 11. (அ) இந்தப் போரில் இயேசு தனிமையாக இல்லையென யோவான் எவ்வாறு காட்டுகிறார்? (ஆ) அந்தக் குதிரைகள் வெள்ளையாக இருப்பதும் குதிரைவீரர்கள் “வெண்மையும் சுத்தமுமான மெல்லிய வஸ்திரந்” தரித்திருப்பதும் எதைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது? (இ) இந்தப் பரலோக “சேனைகள்” எவர்களாலாகியவை?
10 இந்தப் போரில் போரிடுவதில் இயேசு தனிமையாக இல்லை. யோவான் நமக்குச் சொல்வதாவது: “பரலோகத்திலுள்ள சேனைகள் வெண்மையும் சுத்தமுமான மெல்லிய வஸ்திரந் தரித்தவர்களாய், வெள்ளைக் குதிரைகளின்மேல் ஏறி, அவருக்குப் பின்சென்றார்கள்.” (வெளிப்படுத்துதல் 19:14) இந்தக் குதிரைகள் “வெள்ளை”யாக இருப்பது நீதியுள்ள போர் செய்தலைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது. ‘மெல்லிய வஸ்திரம்’ இந்த அரசரின் குதிரைவீரருக்குப் பொருத்தமாயுள்ளது, மேலும் அதன் மினுமினுக்கும், சுத்தமான வெண்மை, யெகோவாவுக்கு முன்பாகத் தூய்மையான, நீதியுள்ள நிலைநிற்கையைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது. அவ்வாறெனில், இந்தச் “சேனைகள்” எவர்களாலாகியவை? சந்தேகமில்லாமல், அவற்றில் பரிசுத்த தூதர்கள் அடங்கியிருக்கின்றனர். கர்த்தருடைய நாளின் தொடக்கத்தில் மிகாவேலும் அவருடைய தூதர்களுமே சாத்தானையும் அவனுடைய பேய்களையும் பரலோகத்திலிருந்து வெளித் தள்ளினார்கள். (வெளிப்படுத்துதல் 12:7-9) மேலும், இயேசு தம்முடைய மகிமையான சிங்காசனத்தின்மீது உட்கார்ந்து பூமியிலுள்ள ராஜ்யங்களையும் ஜனங்களையும் நியாயந்தீர்க்கையில், ‘தூதர்கள் யாவரும்’ உடனிருந்து அவருக்குச் சேவை செய்வார்கள். (மத்தேயு 25:31, 32) கடவுள் அளித்துள்ள ஆக்கினைத்தீர்ப்புகளை, இந்த உறுதித்தீர்வானப் போரில் கடைமுடிவாக நிறைவேற்றுகையில், நிச்சயமாகவே, இயேசுவுடன் அவருடைய தூதர்கள் மறுபடியும் செல்வார்கள்.
11 மற்றவர்களுங்கூட உட்பட்டிருப்பர். தியத்தீராவிலிருந்த சபைக்குத் தம்முடைய செய்தியை அனுப்பினபோது, இயேசு பின்வருமாறு வாக்குக்கொடுத்தார்: “ஜெயங்கொண்டு முடிவு பரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு ஜனங்களின்மேல் அதிகாரங் கொடுப்பேன்; அவர்கள் மண்பாண்டங்கள்போல் நொறுக்கப்படுமாறு இருப்புக்கோலால் அவர்களை மேய்த்து நடத்துவான்; நான் என் பிதாவினிடமிருந்து அதிகாரம் பெற்றுக்கொண்டதுபோலாகும்.” (வெளிப்படுத்துதல் 2:26, 27, தி.மொ.) எவ்வித சந்தேகமுமில்லாமல், அந்த நேரம் வருகையில், கிறிஸ்துவின் சகோதரரில் ஏற்கெனவே பரலோகத்தில் இருப்பவர்கள் ஜனங்களையும் ராஜ்யங்களையும் அந்த இருப்புக்கோலால் மேய்ப்பதில் ஒரு பங்குடையோராக இருப்பர்.
12. (அ) அர்மகெதோனில் போரிடுவதில் பூமியிலுள்ள கடவுளுடைய ஊழியர்கள் பங்குகொள்வார்களா? (ஆ) பூமியிலுள்ள யெகோவாவின் ஜனங்கள் எவ்வாறு அர்மகெதோனில் உட்பட்டுள்ளனர்?
12 எனினும், இங்கே பூமியிலிருக்கும் கடவுளுடைய ஊழியர்களைப் பற்றியதென்ன? அர்மகெதோனில் போரிடுவதில் செயல்படும் பங்கு எதுவும் யோவான் வகுப்பாருக்கு இராது; யெகோவாவுடைய வணக்கத்தின் ஆவிக்குரிய ஆலயத்துக்குத் திரண்டோடி வந்துகொண்டிருக்கும், சகல தேசங்களிலிருந்தும் வெளிவந்துள்ள ஜனங்களாகிய அதன் உண்மைப்பற்றுள்ள தோழர்களுக்கும் எந்தப் பங்கும் இராது. இந்தச் சமாதானமான மனிதர் ஏற்கெனவே, பட்டயங்களைக் கலப்பைக்கொழுக்களாக அடித்துவிட்டனர். (ஏசாயா 2:2-4, தி.மொ.) எனினும், அவர்கள் வெகுவாய் உட்பட்டுள்ளனர்! நாம் ஏற்கெனவே கவனித்தபடி, தற்காப்பு இல்லாதவர்களாய்த் தோன்றுகிற, யெகோவாவின் ஜனங்களையே கோகும் அவனுடைய எல்லா கூட்டத்தினரும் கடுமையாய்த் தாக்குகின்றனர். யெகோவாவின் போர்வீரரான-அரசர், பரலோகத்திலுள்ள சேனைகளால் ஆதரிக்கப்பட்டு, அந்த ராஜ்யங்களுக்கு எதிராக, அடியோடு அழித்தொழிக்கும் போரைத் தொடங்குவதற்கு அதுவே அறிவிப்புக் குறி. (எசேக்கியேல் 39:6, 7, 11, தி.மொ.; தானியேல் 11:44–12:1-ஐ ஒத்துப்பாருங்கள்.) பார்வையாளர்களாக, பூமியிலிருக்கும் கடவுளுடைய ஜனங்கள் மிக அக்கறையுடையோராக இருப்பர். அர்மகெதோன் அவர்களுடைய இரட்சிப்பைக் குறிக்கும், நியாயம் நிரூபிக்கும் யெகோவாவின் மகா போரின் கண்கூடான சாட்சிகளாக இருந்து, நித்தியமாக வாழ்வர்.
13. யெகோவாவின் சாட்சிகள் எல்லா அரசாங்கத்துக்கும் எதிராக இல்லையென நாம் எவ்வாறு அறிகிறோம்?
13 இது யெகோவாவின் சாட்சிகள் எல்லா அரசாங்கத்துக்கும் எதிராக இருக்கின்றனரென பொருள்படுகிறதா? ஒருபோதும் இல்லை! அப்போஸ்தலன் பவுலின் பின்வரும் அறிவுரைக்கு அவர்கள் கீழ்ப்படிகின்றனர்: “எந்த மனுஷனும் தனக்கு மேலான அதிகாரமுள்ளவர்களுக்கு அடங்கி நடக்கக்கடவன்.” இந்தத் தற்போதைய ஒழுங்குமுறை நிலைத்திருக்கும் வரை, ‘அந்த மேலான அதிகாரமுள்ளவர்கள்’ மனித சமுதாயத்தில் ஓரளவான ஒழுங்கைக் காத்துவருவதற்காகக் கடவுளுடைய அனுமதியின்பேரில் இருக்கின்றனரென அவர்கள் தெளிவாக உணருகிறார்கள். ஆகவே, யெகோவாவின் சாட்சிகள் தங்கள் வரிகளைச் செலுத்துகிறார்கள், சட்டங்களுக்குக் கீழ்ப்படிகிறார்கள், போக்குவரத்துக் கட்டளைகளை மதிக்கிறார்கள், பதிவுகள் செய்வது, இன்னும் இவைபோன்ற மற்றவற்றிற்கு இசைந்து உடன்படுகிறார்கள். (ரோமர் 13:1, 6, 7, தி.மொ.) மேலும், உண்மையும் நேர்மையுமுள்ளவர்களாக இருப்பதில்; அயலாருக்கு அன்பு காண்பிப்பதில்; உறுதியான, ஒழுக்கமுள்ள குடும்பத்தைக் கட்டியமைப்பதில்; மற்றும் தங்கள் பிள்ளைகளை முன்மாதிரியான பிரஜைகளாக இருக்கும்படி பயிற்றுவிப்பதில் அவர்கள் பைபிள் நியமங்களைப் பின்பற்றுகின்றனர். இவ்வாறு அவர்கள் “இராயனுடையதை இராயனுக்குச்” செலுத்துவது மட்டுமல்லாமல் “தேவனுடையதைத் தேவனுக்கும்” செலுத்துகின்றனர். (லூக்கா 20:25; 1 பேதுரு 2:13-17) இந்த உலகத்தின் அரசாங்க அதிகாரங்கள் தற்காலிகமானவையென கடவுளுடைய வார்த்தை காட்டுவதால், யெகோவாவின் சாட்சிகள், சீக்கிரத்தில் கிறிஸ்துவின் ராஜ்ய ஆளுகையின்கீழ் அனுபவிக்கவிருக்கிற, நிறைவான வாழ்க்கையாகிய உண்மையான வாழ்க்கைக்கு இப்பொழுது ஆயத்தஞ்செய்கின்றனர். (1 தீமோத்தேயு 6:17-19) இந்த உலகத்தின் அதிகாரங்களைக் கவிழ்ப்பதில் தங்களுக்கு எந்தப் பங்கும் இராதெனினும், யெகோவா அர்மகெதோனில் சீக்கிரத்தில் நிறைவேற்றவிருக்கிற அந்த ஆக்கினைத்தீர்ப்பைக் குறித்து கடவுளால் ஏவப்பட்ட வார்த்தையாகிய, பரிசுத்த பைபிள் சொல்வதன்பேரில் இந்தச் சாட்சிகள் பயபக்தியான அச்சத்தை அனுபவிக்கின்றனர்.—ஏசாயா 26:20, 21; எபிரெயர் 12:28, 29.
இறுதி போருக்கு!
14. இயேசுவின் வாயிலிருந்து புறப்படும் “கூர்மையான நீண்ட பட்டயம்” எதை அடையாளமாகக் குறிப்பிடுகிறது?
14 எந்த அதிகாரத்தால் இயேசு தம்முடைய வெற்றியை முழுமையாக முடிக்கிறார்? யோவான் நமக்குத் தெரிவிப்பதாவது: “புறஜாதிகளை [ராஜ்யங்களை, NW] வெட்டும்படிக்கு அவருடைய வாயிலிருந்து கூர்மையான [நீண்ட, NW] பட்டயம் புறப்படுகிறது; இருப்புக்கோலால் அவர்களை அரசாளுவார்.” (வெளிப்படுத்துதல் 19:15அ) அந்தக் “கூர்மையான நீண்ட பட்டயம்” கடவுளுடைய ராஜ்யத்தை ஆதரிக்க மறுக்கும் யாவருக்கும் மரணாக்கினையை நிறைவேற்றுவதற்கு கட்டளை கொடுக்கும்படி இயேசுவுக்குக் கடவுள் அளித்துள்ள அதிகாரத்தைக் குறிப்பிடுகிறது. (வெளிப்படுத்துதல் 1:16; 2:16) இந்த முனைப்பான அடையாளக் குறிப்பு ஏசாயாவின் பின்வரும் வார்த்தைகளுக்கு இணையாக உள்ளது: “அவர் [யெகோவா] என் வாயைக் கூர்மையான பட்டயமாக்கி, தமது கரத்தின் நிழலினால் என்னை மறைத்து, என்னைத் துலக்கமான அம்பாக்கி”னார். (ஏசாயா 49:2) இங்கே ஏசாயா, கடவுளுடைய ஆக்கினைத்தீர்ப்புகளை அறிவித்து அவற்றைக் குறிதவறாத அம்பைக்கொண்டு நிறைவேற்றுவதுபோல், மரணாக்கினையை நிறைவேற்றும் இயேசுவைக் குறிப்பிடும் முன்நிழலாக இருந்தார்.
15. இந்தக் காலக்கட்டத்தில் யார் ஏற்கெனவே வெளிப்படுத்தி, நியாயந்தீர்க்கப்பட்டிருப்பர், இவ்வாறு எதன் தொடக்கத்தைக் குறிப்பதற்கு?
15 இந்தக் காலக்கட்டத்தில், இயேசு பவுலின் பின்வரும் வார்த்தைகளின் நிறைவேற்றமாக ஏற்கெனவே செயல்பட்டிருப்பார்: “அப்போதே அந்த அக்கிரமக்காரன் வெளிப்படுவான்; அவனை ஆண்டவராகிய இயேசு தமது வாயின் சுவாசத்தினால் அழித்துத் தமது வருகையின் பிரசன்னத்தினாலே [வந்திருத்தலின் வெளிப்படுத்தலால், NW] நாசம்பண்ணுவார்.” ஆம், அக்கிரமக்காரனாகிய, கிறிஸ்தவமண்டல பாதிரிமாரை வெளிப்படுத்தி நியாயந்தீர்ப்பதால், இயேசுவின் வந்திருத்தல் (கிரேக்கில், பரொசீயா [pa·rou·siʹa]) 1914 முதற்கொண்டு, மெய்ப்பித்துக் காட்டப்பட்டு வந்திருக்கிறது. சிவப்புநிறமுள்ள அந்த மூர்க்க மிருகத்தின் பத்துக் கொம்புகள் அந்த ஆக்கினைத்தீர்ப்பை நிறைவேற்றி, மகா பாபிலோனின் மீதியான பாகத்தோடுகூட கிறிஸ்தவமண்டலத்தைப் பாழாக்குகையில், இந்த வந்திருத்தல் முனைப்பாக வெளிப்படுத்திக் காட்டப்படும். (2 தெசலோனிக்கேயர் 2:1-3, 8, தி.மொ.) அது மிகுந்த உபத்திரவத்தின் தொடக்கமாயிருக்கும்! அதன்பின்பு, இயேசு பின்வரும் தீர்க்கதரிசனத்துக்கிசைய, சாத்தானின் அமைப்பில் மீந்திருக்கும் பாகத்துக்கு எதிராகத் தம்முடைய கவனத்தைத் திருப்புவார்: “பூமியைத் தமது வாக்கின் கோலால் அடித்து, தமது வாயின் சுவாசத்தால் துன்மார்க்கரைச் சங்கரிப்பார்.”—ஏசாயா 11:4.
16. யெகோவாவின் இந்த நியமிக்கப்பட்ட போர்வீரரான-அரசர் வகிக்கும் பாகத்தை சங்கீதங்களும் எரேமியாவும் எவ்வாறு விவரிக்கின்றனர்?
16 இந்தப் போர்வீரரான-அரசர், யெகோவாவால் நியமிக்கப்பட்டவராக, தப்பிப்பிழைக்கப்போகிறவர்களுக்கும் சாகப்போகிறவர்களுக்குமிடையே வேறுபாட்டைச் செய்வார். இந்தக் கடவுளுடைய குமாரனிடம் தீர்க்கதரிசன முறையில் பேசி, யெகோவா பின்வருமாறு கூறுகிறார்: “இருப்புக்கோலால் அவர்களை [பூமியின் அதிபதிகளை] நொறுக்கி, குயக்கலத்தைப்போல் அவர்களை உடைத்துப்போடுவீர்.” அத்தகைய ஊழல்நிறைந்த அரசாங்கத் தலைவர்களையும் அவர்களை விடாது பற்றிக்கொண்டிருப்போரையும் நோக்கிப்பேசி எரேமியா சொல்வதாவது: “மேய்ப்பவர்களே, அலறிக்கதறுங்கள், மந்தையில் பெரியவர்களே, சாம்பலில் புரளுங்கள்; நீங்கள் கொல்லப்படும் நாட்கள் வந்துவிட்டன, அருமையான பாத்திரம்போல் விழுந்து நொறுங்கிச் சிதறடிக்கப்படுவீர்கள்.” பொல்லாத உலகத்துக்கு அந்த அதிபதிகள் எவ்வளவு அருமையானவர்களாகத் தோன்றியிருந்தாலும், இந்த அரசரின் இருப்புக் கோலினால் ஒரே அடி, கவர்ச்சிகரமான ஒரு பாத்திரத்தை நொறுக்குவதைப்போல், அவர்களை நொறுக்கிச் சிதறடிக்கும். இது கர்த்தராகிய இயேசுவைக் குறித்து தாவீது பின்வருமாறு தீர்க்கதரிசனம் சொன்னதைப்போலவே இருக்கும்: “கர்த்தர் [யெகோவா, NW] சீயோனிலிருந்து உமது வல்லமையின் செங்கோலை அனுப்புவார்; நீர் உம்முடைய சத்துருக்களின் நடுவே ஆளுகைசெய்யும். உம்முடைய வலது பாரிசத்திலிருக்கிற ஆண்டவர் [யெகோவா, NW], தமது கோபத்தின் நாளிலே ராஜாக்களை வெட்டுவார். அவர் ஜாதிகளுக்குள் நியாயந்தீர்ப்பார்; எல்லா இடங்களையும் பிரேதங்களால் நிரப்புவார்.”—சங்கீதம் 2:9, 12; 83:17, 18; 110:1, 2, 5, 6; எரேமியா 25:34, தி.மொ.
17. (அ) இந்தப் போர்வீரரான-அரசர், மரணதண்டனை நிறைவேற்றும் நடவடிக்கையை யோவான் எவ்வாறு விவரிக்கிறார்? (ஆ) கடவுளுடைய கோபாக்கினையின் அந்த நாள் ராஜ்யங்களுக்கு எவ்வளவு கடுந்துன்பம் நிறைந்ததாயிருக்குமென்பதைக் காட்டும் தீர்க்கதரிசனங்கள் சிலவற்றைக் கூறுங்கள்.
17 இந்த வல்லமையுள்ள போர்வீரரான-அரசர் இந்தத் தரிசனத்தின் அடுத்தக் காட்சியில் மறுபடியும் தோன்றுகிறார்: “அவர் சர்வவல்லமையுள்ள தேவனுடைய உக்கிரகோபமாகிய மதுவுள்ள ஆலையை மிதிக்கிறார்.” (வெளிப்படுத்துதல் 19:15ஆ) முந்தின ஒரு தரிசனத்தில், “தேவனுடைய கோபாக்கினையென்னும் பெரிய ஆலையை” மிதிப்பதை யோவான் ஏற்கெனவே கண்டிருந்தார். (வெளிப்படுத்துதல் 14:18-20) ஏசாயாவும் தண்டனை நிறைவேற்றுவதற்குரிய ஓர் ஆலையை விவரிக்கிறார், மற்ற தீர்க்கதரிசிகளும், சகல ராஜ்யங்களுக்கும் கடவுளுடைய கோபாக்கினையின் அந்த நாள் எவ்வளவு கடுந்துன்பம் நிறைந்ததாக இருக்குமெனக் கூறுகின்றனர்.—ஏசாயா 24:1-6; 63:1-4; எரேமியா 25:30-33; தானியேல் 2:44; செப்பனியா 3:8; சகரியா 14:3, 12, 13; வெளிப்படுத்துதல் 6:15-17.
18. யெகோவா ஜாதியார் யாவரையும் நியாயந்தீர்ப்பதைக் குறித்து தீர்க்கதரிசி யோவேல் வெளிப்படுத்துவதென்ன?
18 தீர்க்கதரிசி யோவேல், “சுற்றிலுமுள்ள ஜாதியார் யாவரையும் நியாயந்தீர்க்க” யெகோவா வருவதோடு திராட்ச ஆலையைச் சம்பந்தப்படுத்துகிறார். மேலும், சந்தேகமில்லாமல், யெகோவாவே தம்முடைய துணை நியாயாதிபதியான இயேசுவுக்கும் அவருடைய பரலோகச் சேனைகளுக்கும் பின்வரும் கட்டளையைக் கொடுக்கிறார்: “அரிவாளையெடுத்து அறுங்கள், பயிர் முதிர்ந்தது; வந்து மிதியுங்கள், ஆலை நிரம்பியிருக்கிறது; ஆலையின் தொட்டிகள் வழிந்தோடுகிறது, அவர்கள் செய்த தீமை அதிகம். நியாயத்தீர்ப்பின் பள்ளத்தாக்கிலே ஜனங்கள் திரள் திரளாய்க் கூடியிருக்கிறார்கள்; நியாயத்தீர்ப்பின் பள்ளத்தாக்கிலே யெகோவாவின் நாள் சமீபம். சூரியனும் சந்திரனும் அந்தகாரப்படும்; நட்சத்திரங்கள் ஒளிகொடாதிருக்கும். யெகோவா சீயோனிலிருந்து கெர்ச்சித்து எருசலேமிலிருந்து சத்தமிடுவார்; வானமும் பூமியும் அசையும்; யெகோவா தமது ஜனத்துக்கு அடைக்கலம், இஸ்ரவேல் புத்திரருக்கு அரணான கோட்டை . . . நானே உங்கள் கடவுளாகிய யெகோவா என்று அப்பொழுது அறிந்துகொள்வீர்கள்.”—யோவேல் 3:12-17, தி.மொ.
19. (அ) எவ்வாறு, 1 பேதுரு 4:17-ல் கேட்கப்பட்ட கேள்வி பதிலளிக்கப்படும்? (ஆ) இயேசுவின் வஸ்திரத்தின்மேல் என்ன பெயர் எழுதப்பட்டிருக்கிறது, இது ஏன் பொருத்தமானதாக நிரூபிக்கும்?
19 கீழ்ப்படியாத ராஜ்யங்களுக்கும் மனிதருக்கும், நிச்சயமாகவே, அது அழிவுக்குரிய தண்டனைத்தீர்ப்பின் நாளாக இருக்கும், ஆனால் யெகோவாவையும் அவருடைய போர்வீரரான-அரசரையும் தங்கள் அடைக்கலமாக்கிக் கொண்டவர்கள் யாவருக்கும் துயர்த்தீர்ப்பின் ஒரு நாளாயிருக்கும்! (2 தெசலோனிக்கேயர் 1:6-10) கடவுளுடைய வீட்டிலிருந்து 1918-ல் தொடங்கின இந்த நியாயத்தீர்ப்பு அதன் உச்சநிலைவரையாக ஊடுருவிச் சென்று முடிந்து, 1 பேதுரு 4:17-லுள்ள (தி.மொ.) பின்வரும் இந்தக் கேள்விக்குப் பதிலளித்திருக்கும்: “கடவுளின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களின் முடிவு என்னவாகும்?” இந்த மகிமையான வெற்றிவீரர் அந்த ஆலையை இறுதிவரை மிதித்துத் தீர்த்து, யோவான் பின்வருமாறு அவரைக் குறித்துச் சொல்லும் அந்த உயர்த்தப்பட்டவர் தாமேயென மெய்ப்பித்துக் காட்டியிருப்பார்: “ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய வஸ்திரத்தின்மேலும் அவருடைய தொடையின்மேலும் எழுதப்பட்டிருந்தது.” (வெளிப்படுத்துதல் 19:16) பூமிக்குரிய எந்த அதிபதியையும் எந்த மனித அரசனையும் அல்லது கர்த்தரையும் பார்க்கிலும் மிக மிகப் பேரளவில் வல்லமைவாய்ந்தவராக நிரூபித்துவிட்டார். அவருடைய மதிப்புமேன்மையும் மகத்துவமும் எல்லைக்கடந்து மேம்பட்டு நிற்பவை. அவர் “சத்தியத்தினிமித்தமும், நீதியுடன்கூடிய சாந்தத்தினிமித்தமும்” போரில் சவாரிசெய்து எல்லா காலத்துக்குமாக வெற்றிபெற்றுவிட்டார்! (சங்கீதம் 45:4) இரத்தந்தெளித்திருந்த அவருடைய வஸ்திரங்களில், ஈடற்றப் பேரரசரான கர்த்தராகிய யெகோவா அவருக்கு அளித்துள்ள பெயர் எழுதப்பட்டிருக்கிறது, அவருடைய நியாயநிரூபிப்பாளரே இவர்!
கடவுள் அளிக்கும் பெரிய மாலை போஜனம்
20. ‘கடவுள் அளிக்கும் பெரிய மாலை போஜனத்தை’ யோவான் எவ்வாறு விவரிக்கிறார், இது முந்தின, ஆனால் இதற்கொப்பான, எந்தத் தீர்க்கதரிசனத்தை மனதுக்குக் கொண்டுவருகிறது?
20 எசேக்கியேலின் தரிசனத்தில், கோகினுடைய கூட்டத்தின் அழிவுக்குப்பின், பறவைகளும் காட்டு மிருகங்களும் ஒரு விருந்துக்கு அழைக்கப்படுகின்றன! அவை யெகோவாவினுடைய சத்துருக்களின் செத்த உடல்களை உண்பதால் நிலத்திலிருந்து பிணங்களை நீக்கிச் சுத்திகரிக்கின்றன. (எசேக்கியேல் 39:11, 17-20, தி.மொ.) யோவானின் அடுத்த வார்த்தைகள் அந்த முந்தின தீர்க்கதரிசனத்தை உயிர்ப்புள்ள முறையில் மனதுக்குக் கொண்டுவருகிறது: “பின்பு ஒரு தூதன் சூரியனில் நிற்கக்கண்டேன்; அவன் வானத்தின் மத்தியில் பறக்கிற சகல பறவைகளையும் பார்த்து: நீங்கள் ராஜாக்களின் மாம்சத்தையும், சேனைத்தலைவர்களின் மாம்சத்தையும், பலவான்களின் மாம்சத்தையும், குதிரைகளின் மாம்சத்தையும், அவைகளின்மேல் ஏறியிருக்கிறவர்களின் மாம்சத்தையும், சுயாதீனர் அடிமைகள், சிறியோர் பெரியோர், இவர்களெல்லாருடைய மாம்சத்தையும் பட்சிக்கும்படிக்கு, மகா தேவன் கொடுக்கும் விருந்துக்குக் [கடவுள் அளிக்கும் பெரிய மாலை போஜனத்துக்கு, NW] கூடிவாருங்கள் என்று மிகுந்த சத்தத்தோடே கூப்பிட்டான்.”—வெளிப்படுத்துதல் 19:17, 18.
21. பின்வருபவை குறிப்பிடுவதென்ன: (அ) அந்தத் தூதன் ‘சூரியனில் நிற்பது’? (ஆ) செத்தவர்கள் தரையின்மீது கிடக்க விடப்படுவது? (இ) தங்கள் பிணங்கள் தரையின்மீது கிடக்க விடப்படவிருப்போரின் பட்டியல்? (ஈ) ‘கடவுள் அளிக்கும் பெரிய மாலை போஜனம்’ என்ற கூற்று?
21 இந்தத் தூதன் ‘சூரியனில் நிற்கிறார்,’ இது பறவைகளின் கவனத்தைக் கவருவதற்கு விரிவான காட்சியையுடைய நிலை. இந்தப் போர்வீரரான-அரசரும் அவருடைய பரலோகச் சேனைகளும் கொல்லப்போகிறவர்களின் மாம்சத்தைப் பேரளவில் தின்பதற்கு ஆயத்தமாயிருக்கும்படி அவற்றிற்கு அழைப்புக் கொடுக்கிறார். செத்தவர்கள் தரையின்மீது கிடக்க விடப்படுவது, அவர்கள் யாவரறியும்படி வெட்கக்கேட்டில் சாவார்களென குறிப்பிட்டுக் காட்டுகிறது. பூர்வ யேசபேலைப்போல், அவர்களுக்கும் மதிப்புள்ள நல்லடக்கம் இராது. (2 இராஜாக்கள் 9:36, 37) தங்கள் பிணங்கள் அங்கே கிடக்க விடப்படுவோரின் இந்தப் பட்டியல் அந்த அழிவின் பரப்பெல்லையைக் காட்டுகிறது: ராஜாக்கள், சேனைத்தலைவர்கள், பலவான்கள், சுயாதீனர், மற்றும் அடிமைகள். எந்த விதிவிலக்குகளும் கிடையாது. யெகோவாவுக்கு எதிர்ப்பாயிருந்த அந்தக் கலகக்கார உலகத்தின் எல்லா கடைசி தடமும் முற்றிலும் அகற்றப்படும். இதன் பின்பு, குழப்பகரமான மனிதர்களாகிய அமைதியற்ற சமுத்திரம் இனிமேலும் இராது. (வெளிப்படுத்துதல் 21:1) இது ‘கடவுள் அளிக்கும் பெரிய மாலை போஜனம்,’ ஏனெனில் அதில் பங்குகொள்ளும்படி அந்தப் பறவைகளை அழைக்கிறவர் யெகோவாவே.
22. இந்த இறுதிப் போரின் போக்கை யோவான் எவ்வாறு சுருக்கிக் கூறுகிறார்?
22 இந்த இறுதிப் போரின் போக்கை யோவான் பின்வருமாறு சுருக்கிக் கூறுகிறார்: “பின்பு, மிருகமும் பூமியின் ராஜாக்களும் அவர்களுடைய சேனைகளும், குதிரையின்மேல் ஏறியிருக்கிறவரோடும் அவருடைய சேனையோடும் யுத்தம்பண்ணும்படிக்குக் கூடிவரக்கண்டேன். அப்பொழுது மிருகம் பிடிக்கப்பட்டது; மிருகத்தின்முன்பாகச் செய்த அற்புதங்களால் அதின் முத்திரையைத் தரித்தவர்களையும் அதின் சொரூபத்தை வணங்கினவர்களையும் மோசம்போக்கின கள்ளத்தீர்க்கதரிசியுங்கூடப் பிடிக்கப்பட்டான்; இருவரும் கந்தகம் எரிகிற அக்கினிக்கடலிலே உயிரோடே தள்ளப்பட்டார்கள். மற்றவர்கள் குதிரையின்மேல் ஏறினவருடைய வாயிலிருந்து புறப்படுகிற [நீண்ட, NW] பட்டயத்தால் கொல்லப்பட்டார்கள்; அவர்களுடைய மாம்சத்தினால் பறவைகள் யாவும் திருப்தியடைந்தன.”—வெளிப்படுத்துதல் 19:19-21.
23. (அ) எந்தக் கருத்தில் ‘சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில் நடக்கும் யுத்தம்,’ “அர்மகெதோ”னில் தொடுக்கப்படுகிறது? (ஆ) ‘பூமியின் ராஜாக்கள்’ எந்த எச்சரிக்கைக்குச் செவிகொடுக்கத் தவறினர், அதன் விளைவென்ன?
23 யெகோவாவினுடைய கோபாக்கினையின் ஆறாவது கலசத்தை ஊற்றினபின்பு, ‘பூலோகமெங்குமுள்ள ராஜாக்கள்’ பேய்த்தன பிரச்சாரத்தால் “சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில் நடக்கும் யுத்தத்திற்குக்” கூட்டிச் சேர்க்கப்பட்டனரென யோவான் அறிவித்தார். இது அர்மகெதோனில் தொடுக்கப்படுகிறது—இது சொல்லர்த்தமான இடமல்ல, யெகோவா அளித்த ஆக்கினைத்தீர்ப்பின் நிறைவேற்றத்தைத் தேவைப்படுத்தும் அந்தப் பூகோள சூழ்நிலைமையாகும். (வெளிப்படுத்துதல் 16:12, 14, 16) இப்பொழுது யோவான் போர் வரிசைகளைக் காண்கிறார். அங்கே, எல்லா “பூமியின் ராஜாக்களும் அவர்களுடைய சேனைகளும்” கடவுளுக்கு எதிராக அணிவகுத்து நிற்கின்றனர். யெகோவாவின் அரசருக்குத் தங்களைக் கீழ்ப்படுத்த அவர்கள் பிடிவாதமாய் மறுத்துவிட்டனர். தேவாவியால் ஏவப்பட்ட பின்வரும் செய்தியில் அவர் அவர்களுக்கு நியாயமான எச்சரிக்கை கொடுத்தார்: “[யெகோவா] கோபங்கொள்ளாமலும் நீங்கள் வழியிலிருந்து அழியாமலும் இருக்கும்படிக்கு, குமாரனை முத்தஞ்செய்யுங்கள்.” கிறிஸ்துவின் ஆட்சிக்குக் கீழ்ப்படுத்தாததால், அவர்கள் சாகவேண்டும்.—சங்கீதம் 2:12, NW.
24. (அ) அந்த மூர்க்க மிருகத்தின்மீதும் பொய்த் தீர்க்கதரிசியின்மீதும் என்ன ஆக்கினைத்தீர்ப்பு நிறைவேற்றப்படுகிறது, எந்தக் கருத்தில் அவை இன்னும் ‘உயிரோடு’ இருக்கின்றன? (ஆ) ‘அக்கினிக்கடல்’ ஏன் அடையாளக் குறிப்பாக இருக்க வேண்டும்?
24 சாத்தானின் அரசியலமைப்பைப் பிரதிநிதித்துவஞ்செய்யும், ஏழுதலைகளையும் பத்துக்கொம்புகளையுமுடையதாய், சமுத்திரத்திலிருந்து வெளிவந்த அந்த மூர்க்க மிருகம் இல்லாமல் ஒழிந்துபோகும்படி தள்ளப்பட்டது, அதோடுகூட பொய்த் தீர்க்கதரிசியாகிய ஏழாவது உலக வல்லரசும் ஒழிந்துபோகிறது. (வெளிப்படுத்துதல் 13:1, 11-13; 16:13) இன்னும் ‘உயிரோடு’ இருக்கையிலேயே, அல்லது பூமியிலுள்ள கடவுளுடைய ஜனங்களுக்கு விரோதமாகத் தங்கள் ஒன்றுபட்ட எதிர்ப்பில் இன்னும் செயல்பட்டுக்கொண்டிருக்கையிலேயே, அவர்கள் “அக்கினிக்கடலிலே” தள்ளப்படுகிறார்கள். இது சொல்லர்த்தமான ஓர் அக்கினிக்கடலா? இல்லை, அந்த மூர்க்க மிருகமும் அந்தப் பொய்த் தீர்க்கதரிசியும் சொல்லர்த்தமான மிருகங்கள் அல்லாததுபோலவே இதுவும் இல்லை. மாறாக, இது முழுமையான, இறுதி அழிவுக்கு, திரும்ப வருதல் இராத ஓர் இடத்துக்கு அடையாளமாக உள்ளது. பின்னால், இங்கேயே, மரணமும் ஹேடீஸும் தள்ளப்படும், பிசாசுதானேயும் தள்ளப்படுவான். (வெளிப்படுத்துதல் 20:10, 14) இது நிச்சயமாகவே பொல்லாதவர்களுக்கான, நித்திய சித்திரவதைக்குரிய ஒரு நரகம் அல்ல, ஏனெனில் அத்தகைய இடத்தைப்பற்றிய எண்ணம்தானே யெகோவாவுக்கு அறவே வெறுக்கத்தக்கதாயுள்ளது.—எரேமியா 19:5; 32:35; 1 யோவான் 4:8, 16.
25. (அ) ‘குதிரையின்மேல் ஏறியிருந்தவருடைய நீண்ட பட்டயத்தால் கொல்லப்பட்டவர்கள்’ யாவர்? (ஆ) இந்தக் ‘கொல்லப்பட்டவர்களில்’ எவருக்காவது உயிர்த்தெழுதல் இருக்குமென நாம் எதிர்பார்க்க வேண்டுமா?
25 அரசாங்கத்தின் நேர்முகமான பாகமாயிராதவர்களாயினும், இந்த நேர்மையற்ற மனிதவர்க்க உலகத்தின் சீர்திருத்தப்பட முடியாத பாகமாயிருந்த மற்ற யாவரும் அவ்வாறே ‘குதிரையின்மேல் ஏறியிருந்தவருடைய நீண்ட பட்டயத்தால் கொல்லப்பட்டார்கள்.’ அவர்களை மரணத்துக்குப் பாத்திரராக இயேசு தீர்ப்பார். இவர்களுடைய காரியத்தில் அக்கினிக்கடல் குறிப்பிடப்படாததால், இவர்களுக்கு ஓர் உயிர்த்தெழுதல் இருக்குமென நாம் எதிர்பார்க்க வேண்டுமா? அந்தச் சமயத்தில் யெகோவாவின் நியாயாதிபதி மரணாக்கினைத்தீர்ப்பை நிறைவேற்றின ஆட்கள் உயிர்த்தெழுப்பப்படுவரென ஓரிடத்திலும் நமக்குச் சொல்லப்பட்டில்லை. இயேசுதாமே சொன்னபடி, “செம்மறியாடுகளாக” இராத யாவரும் “பிசாசுக்காகவும் அவனுடைய தூதர்களுக்காகவும் ஆயத்தஞ்செய்யப்பட்டிருக்கிற நித்திய அக்கினிக்குள்,” அதாவது, “நித்திய அறுப்புண்டுபோதலுக்குள்” செல்கின்றனர். (மத்தேயு 25:33, 41, 46, NW) இது “தேவபக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்” உச்சநிலையை அடையச் செய்கிறது.—2 பேதுரு 3:7; நாகூம் 1:2, 7-9; மல்கியா 4:1.
26. அர்மகெதோனின் பலனைச் சுருக்கமாய்க் கூறுங்கள்.
26 இவ்வாறு, சாத்தானின் பூமிக்குரிய அமைப்பு முழுவதும் முடிவுக்கு வருகிறது. அரசியல் ஆட்சிக்குரிய “முந்தின வானம்” ஒழிந்துபோயிற்று. பல நூற்றாண்டுகளாகச் சாத்தான் கட்டியெழுப்பின, தோற்றத்துக்கு நிலையான ஒழுங்குமுறை போன்றிருந்த அந்தப் “பூமி,” இப்பொழுது முற்றிலும் அழிக்கப்பட்டுப் போய்விட்டது. யெகோவாவை எதிர்த்த பொல்லாத மனிதவர்க்கப் பெருங்கூட்டமாகிய ‘சமுத்திரம்’ இனிமேலும் இல்லை. (வெளிப்படுத்துதல் 21:1, 2; 2 பேதுரு 3:10) எனினும், சாத்தானுக்குத்தானே யெகோவா என்ன வைத்திருக்கிறார்? யோவான் மேலும் தொடர்ந்து நமக்குச் சொல்கிறார்.