கடவுள் நியாயத்தீர்ப்புக் கொடுக்கும் வேளை வந்தது
“தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்பு கொடுக்கும் வேளை வந்தது.”—வெளிப்படுத்துதல் 14:7.
வெளிப்படுத்துதல் புத்தகம் நம்முடைய நாளில் நிறைவேற்றமடையும் அநேகக் கிளர்ச்சியூட்டும் தீர்க்கதரிசனங்களைக் கொண்டிருக்கிறது. ஆறு அடையாள அர்த்தமுள்ள முத்திரைகள் திறக்கப்பட்டது உட்பட அவற்றில் சிலவற்றைக் கடந்த கட்டுரை சிந்தித்தது. இந்தத் திறக்கப்பட்ட முத்திரைகள், இந்தக் “கடைசி நாட்களில்,” திருவெளிப்பாட்டின் நான்கு குதிரைவீரர்களின் பாழாக்குகிற சவாரி குறித்து வெளிப்படுத்தியது. (2 தீமோத்தேயு 3:1; வெளிப்படுத்துதல் 6:1–8) அவை பரலோகத்தில் கிறிஸ்துவோடு ஆட்சி செய்பவர்களைப் பற்றியும், “மிகுந்த உபத்திரவத்தைத்” தப்பிப்பிழைத்து பூமியில் என்றுமாக வாழ்பவர்களைப் பற்றியும் கூறின. அந்த ஆறு முத்திரைகளும் கடவுள் நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுவதற்காகக் “குறித்த காலம் சமீபமாயிருக்கிறது” என்பதைக் காண்பிக்கிறது.—வெளிப்படுத்துதல் 1:3; 7:4, 9–17.
2 ஆனால் இன்னும் ஒரு முத்திரை இருக்கிறது, ஏழாவது முத்திரை. அது திறக்கப்படும்போது என்ன வெளிப்படுத்தப்படுகிறது என்பதை வெளிப்படுத்துதல் 8:2 நமக்குச் சொல்லுகிறது: “பின்பு தேவனுக்கு முன்பாக நிற்கிற ஏழு தூதர்களையும் கண்டேன்; அவர்களுக்கு ஏழு எக்காளங்கள் கொடுக்கப்பட்டது.” வசனம் 6 சொல்லுகிறது: “அப்பொழுது ஏழு எக்காளங்களையுடைய ஏழு தூதர்கள் எக்காளம் ஊதுகிறதற்குத் தங்களை ஆயத்தப்படுத்தினார்கள்.” பைபிள் காலங்களில் முக்கிமான சம்பவங்களை அறிவிக்க எக்காளங்கள் உபயோகப்படுத்தப்பட்டன. அதுபோல, இந்த ஏழு எக்காள முழக்கங்களும் நம்முடைய காலத்தில் ஜீவனையும் மரணத்தையும் உட்படுத்தும் முக்கியகாரியங்களுக்குக் கவனத்தைத் திருப்புகின்றன. தேவதூதர்கள் எக்காளத்தை ஊதுகையில் ஒவ்வொரு எக்காளத்தின் முழக்கத்தால் அறிவிக்கப்படும் முக்கிய செய்தியைப் பூமியிலுள்ள மனித சாட்சிகள் தொடர்ந்து எங்கும் பரப்புகின்றனர்.
எக்காள முழக்கங்கள் அர்த்தப்படுத்துவது என்ன
3 இந்த எக்காள முழக்கங்கள், யெகோவா மோசேயின் காலத்தில் எகிப்தின் மீது ஊற்றிய வாதைகளை நமக்கு நினைப்பூட்டுகின்றன. அந்த வாதைகள் முதல் உலக வல்லரசின் மீதும் அதன் பொய் மதத்தின் மீதும் யெகோவாவுடைய நியாயத்தீர்ப்பின் வெளிக்காட்டுகளாக இருந்தன. ஆனால் அவை கடவுளுடைய மக்கள் தப்பியோடுவதற்கும் வழியைத் திறந்து வைத்தன. அதுபோல, வெளிப்படுத்துதலின் எக்காள முழக்கங்கள் நவீன நாளைய வாதைகளாகும், இம்முறை சாத்தானின் முழு உலகத்தின் மீதும் அதன் பொய் மதத்தின் மீதும் வரும் வாதைகளாகும். என்றபோதிலும், அவை சொல்லர்த்தமான வாதைகள் அல்ல, ஆனால் யெகோவாவின் கடுமையான நியாயத்தீர்ப்புகளடங்கிய வாதிக்கும் செய்திகளாகும். அவை கடவுளுடைய மக்கள் தப்பிப்பதற்கான வழியையும் திட்டவட்டமாகத் தெரிவிக்கின்றன.
4 இந்த ஏழு எக்காள முழக்கங்களுக்கு இசைவாக, 1922 முதல் 1928 வரையாக யெகோவாவின் மக்கள் கொண்டிருந்த ஏழு விசேஷ வருடாந்தர மாநாடுகளில் சாத்தானின் உலகத்துக்கு எதிராகக் கடுமையாய்த் தாக்கும் தீர்மானங்கள் இடம்பெற்றன. இந்தத் தீர்மானங்களைக் கொண்ட பிரதிகள் கோடிக்கணக்கில் விநியோகிக்கப்பட்டன. என்றபோதிலும், அந்தக் கடுமையான செய்திகளின் எக்காளத்தை ஊதுதல் அந்த ஆண்டுகளுக்கு மட்டுமே உட்பட்டதாயிருக்கவில்லை, மாறாக, இந்தக் கடைசி நாட்கள் முழுவதுமாகத் தொடர்ந்து இருந்துவந்திருக்கிறது. முதல் உலக மகா யுத்தத்துக்குப் பின் பிரசங்கித்துக் கொண்டிருந்த சிறு தொகுதியான அபிஷேகம்பண்ணப்பட்டவர்களுடன் இலட்சக்கணக்கான “திரள் கூட்டத்”தார் தங்களுடைய குரல்களையும் கூட்டியிருப்பதால் அவற்றின் அறிவிப்பு முழக்கம் இதுவரை இருந்ததைவிட அதிக பலமாக இருக்கிறது. (வெளிப்படுத்துதல் 7:9) இப்பொழுது ஒவ்வொரு ஆண்டும் கூடுதலான பலத்துடனும் எண்ணிக்கையுடனும் இந்த இலட்சக்கணக்கானோர் சாத்தானுடைய உலகம் முழுவதும் அழிவுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிவிக்கின்றனர்.
5 வெளிப்படுத்துதல் 8:6–12-ல் முதல் நான்கு எக்காளங்கள் முழங்குகின்றன. கல்மழையும், அக்கினியும் இரத்தமும் ஊற்றப்பட்டன. இது உலகத்தின் “மூன்றிலொரு பங்கு” அழிவதில் விளைவடைந்தது. கடவுளுடைய எதிரிடையான நியாயத்தீர்ப்பின் கீழ் முதலாவது வரும் உலகின் பாகம் ஏன் “மூன்றிலொரு பங்கு” என்று குறிப்பிடப்படுகிறது? ஏனென்றால், சாத்தானுடைய ஒழுங்குமுறை முழுவதுமே கடவுளுடைய பார்வையில் குற்றமுள்ளதாயிருப்பினும், ஒரு தொகுதி அதிக குற்றமுள்ளதாயிருக்கிறது. அது எந்தத் தொகுதி? கிறிஸ்துவின் பெயரைத் தனக்கு உரிமையாக்கிக்கொண்ட அந்தத் தொகுதி—கிறிஸ்தவமண்டலம். முதல் உலக மகா யுத்தத்துக்குப் பின் கடவுளுடைய நியாயத்தீர்ப்பின் செய்திகள் அவளுக்கு எதிராக வந்தபோது, கிறிஸ்தவமண்டல ஆதிக்கம் ஏறக்குறைய மனிதவர்க்கத்தின் மூன்றிலொரு பங்கைத் தழுவியதாயிருந்தது.
6 கிறிஸ்தவமண்டல மதம் இயேசுவும் அவருடைய சீஷரும் முன்னறிவித்த மெய் கிறிஸ்தவத்திலிருந்து விலகிய 1,900 ஆண்டுகளின் விசுவாசத் துரோகத்தின் கனியாக இருக்கிறது. (மத்தேயு 13:24–30; அப்போஸ்தலர் 20:29, 30) கிறிஸ்தவமண்டலத்தின் குருவர்க்கம் கிறிஸ்தவ மதத்தின் போதகர்களாகத் தங்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்றனர், ஆனால், அவர்களுடைய கொள்கைகள் பைபிள் சத்தியத்திற்குத் தூரமானவையாயிருப்பதுடன், அவர்களுடைய சீர்க்கேடான செயல்கள் கடவுளுடைய பெயருக்குத் தொ_டர்ந்து அவமரியாதையைக் கொண்டுவருகின்றன. இருபதாவது நூற்றாண்டின் போர்களை ஆதரிப்பதனால் அவர்களுடைய இரத்தப்பழி வெளியரங்மாயிருக்கிறது. கிறிஸ்தவமண்டலம் முழு அளவில் சாத்தானின் காரிய ஒழுங்கின் பாகமாயிருக்கிறது. எனவே, அவள் தெய்வீக தயைக்குத் தகுதியற்றவள் என்பதைக் காட்டும் வகையில் யெகோவாவிடமிருந்து வல்லமைவாய்ந்த வாதிக்கும் செய்திகளை அவள் பெற்றுக்கொள்கிறாள். யெகோவா முதல் நூற்றாண்டு யூதரின் வீட்டை புறக்கணித்ததுபோல, அவர் கிறிஸ்தவமண்டலத்தின் வீட்டையும் புறக்கணித்துவிட்டார்!—மத்தேயு 23:38.
பூகோள அளவில் பிரசங்கிப்பதற்கு உயிர்ப்பிக்கப்படுதல்
7 வெளிப்படுத்துதல் 9:1-ல் ஐந்தாவது தூதன் தன் எக்காளத்தை ஊதுகிறான். அந்தத் தரிசனம் பூமிக்கு ஒரு நட்சத்திரம் வருவதை வெளிப்படுத்துகிறது. இந்த நட்சத்திரம் தன்னுடைய கையில் ஒரு திறவுகோலை வைத்திருக்கிறார். அதைக் கொண்டு அவர் வெட்டுக்கிளியின் கூட்டம் அடைப்பட்டிருந்த ஒரு பாதாளக் குழியைத் திறக்கிறார். அந்த நட்சத்திரம்தான் யெகோவாவின் புதிதாக அமர்த்தப்பட்ட பரலோக ராஜாவாகிய இயேசு கிறிஸ்து. அந்த வெட்டுக்கிளிகள் கடவுளுடைய ஊழியக்காரர்கள், துன்புறுத்தப்பட்டவர்கள், 1918-ல் இவர்களுடைய முக்கிய அலுவலக அதிகாரிகள் கைதி செய்யப்பட்ட போது நிராகரிக்கப்பட்டவர்களாகக் காணப்பட்டவர்கள். ஆனால் அவர்களுடைய வேலையை நிறுத்திவிட சதிசெய்த மதகுருமார்களைத் திகைப்பில் ஆழ்த்தும் வகையில், இப்பொழுது ராஜ்ய வல்லமையிலிருக்கும் கிறிஸ்து, பூகோள அளவில் வெளியரங்கமாகப் பிரசங்கிக்கும் வேலையை மீண்டும் தொடருவதற்கு அவர்களை விடுவிக்கிறார்.—மத்தேயு 24:14.
8 வெளிப்படுத்துதல் 9:7-ல் வெட்டுக்கிளிகள் இவ்வாறு விவரிக்கப்படுகிறது: “அந்த வெட்டுக்கிளிகளின் உருவம் யுத்தத்திற்கு ஆயத்தம் பண்ணப்பட்ட குதிரைகளுக்கு ஒப்பாயிருந்தது. அவைகளுடைய தலைகளின் மேல் பொன்மயமான கிரீடம் போன்றவைகளிருந்தன. அவைகளின் முகங்கள் மனுஷருடைய முகங்கள் போலிருந்தன.” வசனம் 10 மேலுமாகக் கூறுகிறது: “அவைகள் தேள்களின் வால்களுக்கு ஒப்பான வால்களையும் அந்த வால்களில் கொடுக்குகளையும் உடையவைகளாயிருந்தன.” இந்த வெட்டுக்கிளிகள் 1919 முதல் ஆவிக்குரிய போராட்டத்தில் மீண்டும் ஈடுபடுவதற்குப் புத்துயிர் பெற்ற ராஜ்ய சுதந்தரவாளிகளில் மீதியானோருக்குச் சரியாகவே படமாயிருக்கின்றன. புதுப்பிக்கப்பட்ட சக்தியோடு அவர்கள் விஷம்போல் கொட்டும் தன்மைவாய்ந்த கடவுளுடைய நியாயத்தீர்ப்பின் செய்தியை, விசேஷமாக சீர்கெட்ட கிறிஸ்தவமண்டலத்திற்கு எதிராக அறிவித்தனர்.
9 அடுத்து, ஆறாவது தூதன் தன் எக்காளத்தை ஊதுகிறான். (வெளிப்படுத்துதல் 9:13) இது குதிரைச் சேனைகளாகிய இராணுவங்கள் அவிழ்த்துவிடப்படுவதைக் காட்டுகிறது. அதன் தொகை “இருபது கோடியாக” (மிரியடுகள் மிரியடுகளாய், myriads of myriads, NW) இருந்தது என்று வசனம் 16 காட்டுகிறது! அவை 17-வது மற்றும் 19-வது வசனங்களில் இவ்வாறு விவரிக்கப்படுகின்றன: “குதிரைகளின் தலைகள் சிங்கங்களின் தலைகளைப் போன்றிருந்தன; அவைகளுடைய வாய்களிலிருந்து அக்கினியும், புகையும், கந்தகமும் புறப்பட்டன. . . . அவைகளுடைய வால்கள் பாம்புகளுக்கு ஒப்பானவைகள்.” இந்தச் சேனைகள் அரசராகிய கிறிஸ்து இயேசுவின் வழிநடத்துதலின் கீழ் இடிமுழக்கத்துடன் செல்கின்றன. அவை என்னே ஒரு பிரமிக்கவைக்கும் காட்சி!
10 வல்லமைவாய்ந்த இந்தக் குதிரைகள் எதைக் குறிக்கின்றன? இவை பல கோடியாக இருப்பதால், இன்று பூமியில் மீந்திருக்கிற சுமார் 8,800 அபிஷேகம்பண்ணப்பட்ட மீதியானோராக மட்டுமே இருக்கமுடியாது. இந்தப் பலகோடி குதிரைகள் வெளிப்படுத்துதல் 7-வது அதிகாரத்தின் “திரள் கூட்டத்”தாரையும் உட்படுத்த வேண்டும். பைபிளில் “மிரியடு” (myriad) என்பது அநேக சமயங்களில் மிகப் பெரிய, திட்டவட்டமாகக் குறிப்பிடப்படாத எண்ணைக் குறிப்பதாயிருக்கிறது. எனவே இந்த அடையாள அர்த்தமுள்ள குதிரைகள் எண்ணிக்கையில் குறைந்து கொண்டே போகும் அபிஷேகம்பண்ணப்பட்டவர்களை மட்டுமல்லாமல், வெட்டுக்கிளி போன்ற அபிஷேகம்பண்ணப்பட்ட மீதியானோர் துவக்கிய வெளியரங்கமாக செய்யப்படும் வேலையைத் தொடர்ந்து செய்கிறவர்களும் அதிகரித்துவருகிறவர்களும் பலமாகக் குரல்கொடுப்பவர்களுமாகிய “வேறே ஆடுகளைச்” சேர்ந்த “திரள் கூட்டத்தின்” இலட்சக்கணக்கானோரையும் உட்படுத்தும்.—யோவான் 10:16.
11 வெளிப்படுத்துதல் 9:19 கூறுகிறது: “அந்தக் குதிரைகளின் வல்லமை அவைகளின் வாயிலேயும் வால்களிலேயும் இருக்கிறது. . . . அவைகளாலே சேதப்படுத்துகிறது.” எந்த விதத்தில் அவற்றின் வாயில் வல்லமை இருக்கிறது? பல பத்தாண்டுகளாக தேவராஜ்ய ஊழியப் பள்ளியின் மூலமாகவும் மற்ற கூட்டங்கள் மூலமாகவும் கடவுளுடைய நியாயத்தீர்ப்பின் செய்திகளை வாய்மொழியாகப் பிரசங்கிக்க அவருடைய மக்கள் போதிக்கப்பட்டுவந்திருக்கிறார்கள். தங்களுடைய வால்களினால் எந்தவிதத்தில் சேதப்படுத்துகின்றன? அவர்கள் உலகளாவிய விதத்தில் கோடிக்கணக்கான பிரசுரங்களை விநியோகித்திருப்பதன் மூலம் சாத்தானின் உலகத்துக்கு எதிராக விஷம் போன்று கொட்டும் செய்திகளைத் தங்களுக்குப் பின்னால் விட்டுச் செல்கின்றனர். அவர்களை எதிர்த்துநிற்பவர்களுக்கு இந்தக் குதிரைச் சேனைகளின் இராணுவம் உண்மையில் பல கோடிகளாக, மிரியடுகள் மிரியடுகளாக, (myriads of myriads) தோன்றுகின்றன.
12 இப்படியாகக் கடவுளுடைய பழிவாங்கும் நாள் நெருங்கிவருகையில் அடையாள அர்த்தமுள்ள வெட்டுக்கிளிகளும் குதிரைகளும் அவருடைய நியாயத்தீர்ப்புச் செய்திகளை அதிக தெளிவாகவும் சப்தமாகவும் ஒலித்திட வேண்டும். நேர்மை இருதயமுள்ள ஆட்களுக்கு அந்தச் செய்திகள் பூமியிலேயே மிகச் சிறந்த செய்தியாக இருக்கும். ஆனால் சாத்தானின் உலகத்தைத் தெரிந்துகொள்கிறவர்களுக்கு அவை கெட்ட செய்திகளாக இருக்கும், ஏனென்றால் அவர்களுடைய உலகம் விரைவில் அழிவடையப் போகிறது என்பதையே அவை குறிப்பிடுகின்றன.
13 வாதிக்கும் வெட்டுக்கிளிகளும் குதிரைச் சேனைகளின் இராணுவமும் தேவனால் தீர்மானிக்கப்பட்ட மூன்று “ஆபத்துக்களில்” முதலாவது என்றும் இரண்டாவது என்றும் விவரிக்கப்பட்டிருக்கின்றன. (வெளிப்படுத்துதல் 9:12; 11:14) அந்த “மூன்றாவது ஆபத்து” என்ன? வெளிப்படுத்துதல் 10:6-ல் நாம் பின்வருமாறு கூறப்படுகிறோம்: “தேவன் தம்முடைய ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளுக்குச் சுவிசேஷமாய் அறிவித்தபடி, ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களிலே . . . தேவரகசியம் நிறைவேறும்.” இந்தத் தேவரகசியம் ஏதேன் தோட்டத்தில் முதலில் வாக்குப்பண்ணப்பட்ட “வித்துவை” உட்படுத்துகிறது. (ஆதியாகமம் 3:15) இயேசுதான் பிரதானமான அந்த “வித்து”, ஆனால் அது அவரோடு பரலோகத்தில் ஆட்சிபுரியும் அபிஷேகம்பண்ணப்பட்ட அவருடைய கூட்டாளிகளையும் உட்படுத்துகிறது. ஆக, தேவரகசியம் அல்லது பரிசுத்த இரகசியம் கடவுளுடைய பரலோக ராஜ்யத்தைப் பற்றியது. இந்த ராஜ்யம் தேவன் நோக்கங்கொண்ட மூன்றாவது “ஆபத்தைக்” கொண்டுவரும், ஏனென்றால் அது சாத்தானின் உலகத்துக்கு எதிராகக் கடவுளுடைய நியாயத்தீர்ப்புகளை முடிவாக நிறைவேற்றும்.
ராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது
14 அப்பொழுது அது சம்பவிக்கிறது! வெளிப்படுத்துதல் 11:15 பின்வருமாறு சொல்லுகிறது: “ஏழாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும் [யெகோவாவுக்கும்] அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின; அவர் சதா காலங்களிலும் ராஜ்யபாரம் பண்ணுவார் என்னும் கெம்பீர சத்தங்கள் வானத்தில் உண்டாயின.” ஆம், முக்கிய ஆண்டாகிய 1914-ல் கிறிஸ்து ஆளுகை செய்யும் கடவுளுடைய ராஜ்யம் பரலோகத்தில் ஸ்தாபிக்கப்பட்டது என்பது அறிவிக்கப்பட்டிருக்கிறது. முதல் உலக மகா யுத்தத்திற்குப் பின்பு மீதியானோர் திரும்ப நிலைநாட்டப்பட்டபோது, அவர்கள் இந்தச் செய்தியை முன்னிலைக்குக் கொண்டுவந்தனர்.
15 1922-ம் ஆண்டு ஐக்கிய மாகாணங்களில், ஒஹையோவிலுள்ள சிடர்பாய்ன்ட் என்ற இடத்தில் நடந்த யெகோவாவின் ஊழியரின் மாநாட்டில் கூடிவந்த ஆயிரக்கணக்கானோர் இந்தக் கிளர்ச்சியூட்டும் அறிவிப்பைக் கேட்டனர்: “இது எல்லா நாட்களிலும் மிக முக்கியமான நாள். பாருங்கள், ராஜா ராஜரீகம் பண்ணுகிறார்! நீங்கள் அவருடைய விளம்பர முகவர்கள். ஆகவே ராஜாவையும் அவருடைய ராஜ்யத்தையும் விளம்பரப்படுத்துங்கள், விளம்பரப்படுத்துங்கள், விளம்பரப்படுத்துங்கள்.” அது எக்காளங்களைக் கொண்டிருந்த ஏழு தூதர்களினால் அறிவிக்கப்பட்ட நியாயத்தீர்ப்புகளை உள்ளடக்கிய வெளியரங்கமான ராஜ்ய பிரசங்கிப்பின் பெரிய எழுச்சியைத் துவக்கி வைத்தது. இன்று உலகமுழுவதும் 55,000-க்கும் மேலான சபைகளில் இருக்கும் ஏறக்குறைய முப்பத்தைந்து இலட்சம் யெகோவாவின் ஊழியர்கள் இந்த உலகளாவிய ராஜ்ய பிரசங்கிப்பில் உட்பட்டிருக்கின்றனர். உண்மையிலேயே மிரியடுகள், திரளானவர்கள்!
16 ஆனால் ஏழாவது தூதன் வெளிப்படுத்த இன்னும் அநேகத்தைக் கொண்டிருக்கிறான். அப்பொழுது, “வானத்திலே யுத்தமுண்டாயிற்று” என்று வெளிப்படுத்துதல் 12:7 சொல்லுகிறது. வசனம் 9 அரசராகிய கிறிஸ்துவின் நடவடிக்கையால் ஏற்பட்ட இந்த விளைவைக் கூறுகிறது: “உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது. அதனோடேகூட அதைச் சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள்.” 12-வது வசனம் மேலும் கூறுவதாவது: “ஆகையால் பரலோகங்களே! அவைகளில் வாசமாயிருக்கிறவர்களே! களிகூருங்கள்.” ஆம், பரலோகங்கள் சாத்தானிய செல்வாக்கிலிருந்து சுத்திகரிக்கப்பட்டதுதானே உண்மையுள்ள தூதர்களிடையே மகா களிகூருதல் இருப்பதற்குக் காரணமாயிருந்தது. ஆனால் மனிதவர்க்கத்திற்கு அது எதை அர்த்தப்படுத்துகிறது? அந்த வசனமே பதிலளிக்கிறது: “பூமியிலும் சமுத்திரத்திலும் குடியிருக்கிறவர்களே! ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்ச கால மாத்திரம் உண்டென்று அறிந்து மிகுந்த கோபங்கொண்டு உங்களிடத்தில் இறங்கினபடியால் உங்களுக்கு ஆபத்து வரும்.”
17 வெளிப்படுத்துதல் 12:3 சாத்தானை ‘ஏழு தலைகளையும் பத்துக் கொம்புகளையும் உடைய பெரிய வலுசர்ப்பம்,’ ஒரு பயங்கரமான மூர்க்க மிருகம் என்று விவரிக்கிறது. இது வெளிப்படுத்துதல் 13-வது அதிகாரம் முதல் இரண்டு வசனங்களில் விவரிக்கப்பட்டிருக்கும் பூமிக்குரிய அரசியல் “மிருகத்தின்” உருவமைப்பாளன் சாத்தான்தான் என்பதைக் காண்பிக்கிறது. இந்த மிருகமும் சாத்தானுக்கு ஒப்பாக ஏழு தலைகளையும் பத்து கொம்புகளையும் கொண்டிருக்கிறது. வசனம் 2 சொல்வதாவது: “வலுசர்ப்பமானது (சாத்தான்) தன் பலத்தையும், தன் சிங்காசனத்தையும், மிகுந்த அதிகாரத்தையும் அதற்குக் கொடுத்தது.” இந்த 20-வது நூற்றாண்டில் தேசங்களுக்கிடையே நடந்த போர்களில் மட்டும் பத்து கோடிக்குமதிகமான ஆட்கள் கொல்லப்பட்டிருப்பதால் அரசியல் ராஜ்யங்களை ஒரு மூர்க்க மிருகமாகக் குறிப்பிடுவது நிச்சயமாகவே நன்கு பொருந்தும்.
18 வெளிப்படுத்துதல் 13-வது அதிகாரத்திலுள்ள அடுத்த காட்சி வெளிப்படுத்தும் காரியத்தை வசனம் 11 இப்படியாகக் கூறுகிறது: “பின்பு வேறொரு மிருகம் பூமியிலிருந்து எழும்பக் கண்டேன்; அது ஒரு ஆட்டுக்குட்டிக்கு ஒப்பாக இரண்டு கொம்புகளையுடையதாயிருந்தது, வலுசர்ப்பத்தைப் போலப் பேசினது.” இந்த இரண்டு கொம்பு மிருகம் ஆங்கில-அமெரிக்க அரசியல் கூட்டு வல்லரசு. அது ஆட்டுக்குட்டிக்கு ஒப்பாக இருக்கிறது, அதாவது, தான் தீங்கற்றதாக, அதிக அறிவொளி பெற்ற அரசாக பாசாங்கு செய்கிறது. ஆனால் அது வலுசர்ப்பமாகிய சாத்தானைப் போலப் பேசுகிறது. அதின் ஆளுகை நடவடிக்கைகள் மிருகத்தனமாக இருப்பதால் அது “வேறொரு மூர்க்க மிருகம்” என்று அழைக்கப்படுகிறது. தன்னுடைய ஆட்சி முறை எங்கெல்லாம் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லையோ, அங்கெல்லாம் அழுத்தங்களைக் கொண்டுவருவதோடு, அச்சுறுத்தல்களையும் வன்முறையையும்கூட பயன்படுத்துகிறது. அது கடவுளுடைய ராஜ்யத்துக்குக் கீழ்ப்படிவதை ஊக்கப்படுத்துவதில்லை, மாறாக, சாத்தானிய உலகத்துக்குக் கீழ்ப்படிவதையே ஊக்கப்படுத்துகிறது. ஆகவேதான் 14-வது வசனம், “அது பூமியின் குடிகளை மோசம்போக்குகிறது,” என்று சொல்லுகிறது.
19 மெய்க்கிறிஸ்தவர்களுக்கான இயேசுவின் கட்டளைக்கு இசைவாக உலகத்தின் பாகமாக இல்லாதவர்கள் சாத்தானிய ஆதிக்கத்தின் கீழான இந்த உலகில் வாழ்வது கடினமே. (யோவான் 17:16) இப்படியாக, இன்று உலகம் முழுவதிலுமுள்ள யெகோவாவின் ஊழியக்காரர்கள் உத்தமத்தைக் காத்துக்கொண்டும், ஐக்கியமாக யெகோவாவையும் அவருடைய நீதியான வழிகளையும் மகிமைப்படுத்தியும் வருவது அவருடைய வல்லமை மற்றும் ஆசீர்வாதத்தின் மிகச் சிறந்த வெளிக்காட்டாக இருக்கிறது. இதை அவர்கள் கடுமையான எதிர்ப்பின் மத்தியிலும், துன்புறுத்துதலின் மத்திலிலும், மரணத்தை எதிர்ப்படும் நிலையிலும் செய்கிறார்கள்.
20 கிறிஸ்துவோடு உடன் அரசர்களாக இருக்கப் போவதனால் அபிஷேகம்பண்ணப்பட்ட மீதியானோர் சாத்தானின் விசேஷித்த இலக்குகளாக இருந்துவந்திருக்கின்றனர். ஆனால் வெளிப்படுத்துதல் 14-வது அதிகாரம், அவர்களுடைய முழு எண்ணிக்கையான 1,44,000 பேர் வெற்றிகரமாக ராஜ்ய அதிகாரத்திலுள்ள கிறிஸ்துவோடு சேர்க்கப்படுவதாகக் காண்பிக்கிறது. அவர்கள் தங்களுடைய எஜமானரை உத்தமத்தோடு பற்றியிருக்கின்றனர். ஏனென்றால், 4-வது வசனம் சொல்லுகிறது: “இவர்களே ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் அவரைப் பின்பற்றுகிறவர்கள்.” இது சாத்தான் அவர்கள் மீது கொண்டுவரும் கொடிய துன்புறுத்துதலின் மத்தியிலும் உண்மையாயிருக்கிறது.
கடவுளுடைய நியாயத்தீர்ப்புகளை முதலாவது பெறுதல்
21 வெளிப்படுத்துதல் 14:7-ல் ஒரு தூதன் மிகுந்த சத்தத்துடன் பின்வருமாறு சொல்லுகிறான்: “தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்புக் கொடுக்கும் வேளை வந்தது; வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் நீரூற்றுகளையும் உண்டாக்கினவரையே தொழுதுகொள்ளுங்கள்.” இப்பொழுது ஒரு கேள்வி: கடவுளுடைய எதிரிடையான நியாயத்தீர்ப்பை முதலில் பெறுவது யார்? வசனம் 8 விடையளிக்கிறது: “வேறொரு தூதன் பின்சென்று, பாபிலோன் மகா நகரம் விழுந்தது! விழுந்தது! தன் வேசித்தனமாகிய உக்கிரமான மதுவைச் சகல ஜாதிகளுக்கும் குடிக்கக் கொடுத்தாளே!” இங்கேதான் வெளிப்படுத்துதல் புத்தகம் முதல் முறையாக, “மகா பாபிலோனைப்” பற்றி, உலக பொய்மதப் பேரரசைப் பற்றி பேசுகிறது, ஆனால் கடைசி முறையாக அல்ல.
22 உலகின் பற்பல பகுதிகளில் மதம் இன்னும் செல்வாக்கைக் கொண்டிருப்பதால் அந்தத் தூதன் ஏன் மகா பாபிலோன் ஏற்கெனவே விழந்துவிட்டது என்று அறிவிக்கிறான்? பூர்வீக பாபிலோன் பொ.ச.மு. 539-ல் விழுந்தபோது, ஆனால் இன்னும் முழுமையாக அழிக்கப்படாதபோது, என்ன ஏற்பட்டது? ஏன், சிறையிருப்பிலிருந்த யெகோவாவின் ஊழியர்கள் தங்களுடைய தாயகம் திரும்பி உண்மை வணக்கத்தை மீண்டும் நிலைநாட்டினர்! அதுபோலவே, 1919-ல் கடவுளுடைய மக்கள் புதுப்பிக்கப்பட்ட செயல் நடவடிக்கைக்கும் ஆவிக்குரிய செழுமைக்கும் திரும்ப நிலைநாட்டப்பட்ட காரியம் மகா பாபிலோன் கடவுளுடைய பார்வையில் கீழாகக் கவிழ்ந்தது என்பதற்குத் தெளிவான அத்தாட்சியாக இருக்கிறது. அங்கே பின்னால் அவளுக்கு வரும் அழிவுக்கான கண்டனத் தீர்ப்பை அளித்தார்.
23 தனக்கு வரும் அழிவுக்கு முன்னோடியாக நவீன பாபிலோன் ஏற்கனவே கடுமையான ஆபத்துக்குள் வந்துவிட்டிருக்கிறாள். அவளுடைய சீர்க்கேடு, படுமோசமான ஒழுக்கக்கேடும், நேர்மையின்மை, மற்றும் அரசியல் தலையீடு ஆகியவையும் எவ்விடத்தும் வெளியரங்கமாக்கப்பட்டிருக்கின்றன. ஐரோப்பாவின் பெரும்பகுதியில், அநேகர் சர்ச்சுகளுக்குச் செல்வதை நிறுத்திவிட்டிருக்கின்றனர். அநேக சோஷியலிச நாடுகளில் மதம் “மக்களின் போதைப் பொருள்” என்று கருதப்படுகிறது. மேலும், கடவுளுடைய வார்த்தையின் சத்தியத்தை ஆவலடு நேசிப்பவர்களின் பார்வையில் மகா பாபிலோன் வெட்கப்படுத்தப்படுகிறது. எனவே, தனக்குத் தகுதியான தண்டனையை அடைவதற்கு மரண வரிசையில் காத்துக்கொண்டிருக்கிறாள். ஆம், உலகை நிலைகுலைய வைக்கும் காரியங்கள் சம்பவிப்பதற்கான “குறித்த காலம் சமீபமாயிருக்கிறது!” அந்த மத “வேசி”க்கும் சாத்தானின் இந்த முழு ஒழுங்குமுறைக்கும் வரும் அழிவைக் குறித்து அடுத்த காவற்கோபுரம் பத்திரிகையில் வெளிவரும் படிப்புக் கட்டுரைகள் கலந்தாராயும். (w89 4⁄1)
நீங்கள் எவ்விதம் பதிலளிப்பீர்கள்?
◻ வெளிப்படுத்துதல் 8-வது அதிகாரத்தில் ஆரம்பமாகும் ஏழு எக்காளங்கள் ஊதப்படுவது நம்முடைய நாளுக்கு எதைக் குறிக்கிறது?
◻ கடவுளுடைய எதிரிடையான நியாயத்தீர்ப்பின் கீழ் கிறிஸ்தவமண்டலம் முதலாவது வருவதற்குக் காரணம் என்ன?
◻ அபிஷேகம்பண்ணப்பட்ட மீதியானோரும் “திரள் கூட்டத்”தாரும் செய்யும் பிரசங்க வேலை வெளிப்படுத்துதல் 9-வது அதிகாரத்தில் எவ்விதம் விவரிக்கப்படுகிறது?
◻ வெளிப்படுத்துதல் 11:15-ல் காணப்படும் அறிவிப்பு பரலோகத்துக்கும் பூமிக்கும் எதை அர்த்தப்படுத்துகிறது?
◻ வெளிப்படுத்துதல் 14:8-ல் விவரிக்கப்பட்டிருப்பதுபோல், மத பாபிலோன் எப்படி 1919-ல் விழுந்தது? இது அவளுக்கு எதைக் குறிக்கிறது?
[கேள்விகள்]
1. வெளிப்படுத்துதலின் ஆரம்ப அதிகாரங்கள் என்ன காரியங்களை உட்படுத்துகின்றன?
2. வெளிப்படுத்துதல் 8-வது அதிகாரத்தின் அடையாள அர்த்தமுள்ள ஏழு எக்காளங்கள் எவ்விதம் பயன்படுத்தப்படுவதாயிருக்கிறது?
3. ஏழு எக்காளங்கள் முழங்குவது எதை அர்த்தப்படுத்துகின்றன?
4. ஏழு எக்காளங்கள் முழங்குவது நம்முடைய காலத்தில் எப்படி நிறைவேற்றத்தைக் கண்டிருக்கிறது?
5. எதிரிடையாக நியாயந்தீர்க்கப்படும் உலகத்தின் “மூன்றிலொரு பங்கு” யார்?
6. யெகோவா ஏன் கிறிஸ்தவமண்டலத்தை அழிவுக்குத் தீர்ப்பளித்துவிட்டார்?
7, 8. (எ) வெளிப்படுத்துதல் 9-வது அதிகாரத்தில், ஐந்தாவது எக்காளத்தின் முழக்கம் வெளிப்படுத்துவது என்ன? (பி) வெட்டுக்கிளிகள் யாரை அடையாளப்படுத்துகிறது?
9, 10. (எ) ஆறாவது எக்காளத்தின் முழக்கம் எதை வெளிப்படுத்துகிறது? (பி) மிரியடுகளாயிருக்கும் பலகோடி பலமான குதிரைகளில் யார் உட்படுகின்றனர்?
11. “அந்தக் குதிரைகளின் வல்லமை அவைகளின் வாயில் இருக்கிறது,” என்று ஏன் சொல்லப்படுகிறது? அவை எப்படி தங்களுடைய ‘வால்களால் சேதப்படுத்துகின்றன’?
12. அடையாள அர்த்தமுள்ள வெட்டுக்கிளிகளும் குதிரைகளும் தொடர்ந்து என்ன செய்ய வேண்டும்? பலன் என்னவாயிருக்கும்?
13. ஏழாவது எக்காள முழக்கத்துடன் சம்பந்தப்பட்ட “மூன்றாவது ஆபத்து” எதை உட்படுத்துகிறது? அது எப்படி ஓர் “ஆபத்து”?
14. வெளிப்படுத்துதல் 11:15-ன் ஏழாவது எக்காள முழக்கம் என்ன அறிவிப்பைக் கொடுத்தது?
15. 1922-ல் எந்த சம்பவம் ராஜ்ய பிரசங்கிப்பில் ஒரு புதிய எழுச்சியை ஏற்படுத்தியது?
16. வெளிப்படுத்துதல் 12-வது அதிகாரத்தில், ஏழாவது எக்காளம், பரலோகத்திலும் பூமியிலும் உட்படுத்திய மேலுமான என்ன விளைவுகளை வெளிப்படுத்தின?
17. வெளிப்படுத்துதல் 13-வது அதிகாரத்தில் உலக அரசாங்கத்தை “மூர்க்க மிருக”மாகக் குறிப்பிடுவது ஏன் பொருத்தமாயிருக்கிறது?
18. வெளிப்படுத்துதல் 13:11-ன் இரண்டு கொம்புள்ள மிருகம் எது? அதன் செயல்கள் அதை அடையாளங்காண எவ்விதம் உதவுகிறது?
19, 20. (எ) யெகோவாவின் ஊழியர்கள் உத்தமத்தைக் காத்துக்கொள்வது எதை விளக்கிக்காட்டுகிறது? (பி) அபிஷேகம்பண்ணப்பட்ட மீதியானவர்கள் சாத்தானிய உலகத்தின் மீது நிச்சயமாக வெற்றிகொள்வர் என்பது நமக்கு எப்படித் தெரியும்?
21, 22. (எ) வெளிப்படுத்துதல் 14:7, 8-ல் தேவதூதர்கள் என்ன அறிவிப்பைச் செய்கின்றனர்? (பி) மதத்தை உள்ளடக்கிய பாபிலோன் இருக்கும்போதே அந்தத் தூதன் ஏன் அதன் வீழ்ச்சியை அறிவிக்கிறான்?
23. (எ) மகா பாபிலோனின் அழிவுக்காக எவ்விதம் வழி வகுக்கப்படுகிறது? (பி) காவற்கோபுரம் பத்திரிகையின் அடுத்த இதழில் வேறு எந்தத் தீர்க்கதரிசனங்கள் கலந்தாராயப்படும்?