மூர்க்க மிருகத்தையும் அதின் முத்திரையையும் அடையாளம் காணுதல்
புதிருக்கு விடை கண்டுபிடிக்க உங்களுக்கு இஷ்டமா? விடைக்கு ஏதாவது துப்புகள் கிடைக்குமா என முதலில் தேடிப் பார்ப்பீர்கள் அல்லவா? வெளிப்படுத்துதல் 13-ம் அதிகாரத்தில் விவரிக்கப்பட்டுள்ள மூர்க்க மிருகத்தின் 666 என்ற எண் சம்பந்தமாக தேவையான துப்புகளை கடவுள் தமது வார்த்தையாகிய பைபிளில் கொடுத்திருக்கிறார்.
இந்தக் கட்டுரையில், அந்த மிருகத்தின் எண்ணை அடையாளம் காண உதவும் நான்கு முக்கியமான வழிகளை—இன்றியமையா துப்புகளை—நாம் சிந்திக்கப் போகிறோம். (அ) பைபிளிலுள்ள பெயர்கள் சிலசமயங்களில் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன, (ஆ) அந்த மூர்க்க மிருகத்தின் அடையாளம் என்ன, (இ) 666 என்ற மனுஷ இலக்கம் எதை குறிக்கிறது, (ஈ) 6 என்ற எண்ணின் முக்கியத்துவமும், அது மூன்று ஸ்தானங்களில், அதாவது 600 பிளஸ் 60 பிளஸ் 6, அல்லது 666 என எழுதப்பட்டிருப்பதற்குரிய காரணமும் என்ன என்பதை ஆராய்வோம்.—வெளிப்படுத்துதல் 13:18.
பைபிளிலுள்ள பெயர்கள்—வெறும் அடைமொழிகள் அல்ல
பைபிளிலுள்ள பெயர்களுக்கு, குறிப்பாக கடவுளால் சூட்டப்பட்ட பெயர்களுக்கு பெரும்பாலும் விசேஷ முக்கியத்துவம் இருக்கிறது. உதாரணமாக, ஆபிராம் சகல தேசத்தாருக்கும் பிதாவாக ஆவார் என்பதால், அவரது பெயரை ஆபிரகாம் என கடவுள் மாற்றினார்; அதன் அர்த்தம் ‘திரளான ஜாதிகளுக்குத் தகப்பன்’ என்பதாகும். (ஆதியாகமம் 17:5) மரியாளுக்குப் பிறக்கும் குழந்தைக்கு இயேசு என பெயரிடும்படி யோசேப்பிடமும் மரியாளிடமும் கடவுள் கூறினார்; அதன் அர்த்தம் “யெகோவாவே இரட்சிப்பு” என்பதாகும். (மத்தேயு 1:21; லூக்கா 1:31) அர்த்தமுள்ள இந்தப் பெயருக்கு இசைவாக, இயேசுவின் ஊழியம் மற்றும் பலிக்குரிய மரணத்தின் வாயிலாக நமக்கு இரட்சிப்பை யெகோவா சாத்தியமாக்கினார்.—யோவான் 3:16.
அது போலவே, கடவுளால் கொடுக்கப்பட்ட 666 என்ற பெயரும் அந்த மிருகத்திற்கே உரிய பண்புகளை விவரிப்பதாக இருக்க வேண்டும். அப்படியானால், அந்தப் பண்புகளைப் புரிந்துகொள்வதற்கு, முதலாவதாக அந்த மிருகத்தை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும், பின்பு அதன் நடவடிக்கைகளைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும்.
அந்த மிருகம் அம்பலப்படுத்தப்படுகிறது
அடையாளப்பூர்வமான மிருகங்களின் அர்த்தத்தைப் பற்றி தானியேல் என்ற பைபிள் புத்தகம் நிறைய தகவல்களைத் தருகிறது. 7-ம் அதிகாரம், ‘நாலு பெரிய மிருகங்களைப்’ பற்றி, அதாவது சிங்கம், கரடி, சிறுத்தை, மற்றும் இரும்புப் பற்களைக் கொண்ட பயங்கரமான ஒரு மிருகத்தைப் பற்றி தெளிவாக சித்தரிக்கிறது. (தானியேல் 7:2-7) இந்த மிருகங்கள் ‘ராஜாக்களை,’ அதாவது பரந்த சாம்ராஜ்யங்களை ஒன்றன்பின் ஒன்றாக ஆளுகை செய்யும் அரசியல் ராஜ்யங்களை குறிக்கின்றனவென தானியேல் நமக்கு தெரிவிக்கிறார்.—தானியேல் 7:17, 23.
வெளிப்படுத்துதல் 13:1, 2-ல் சொல்லப்பட்டுள்ள மிருகம், “தானியேல் தரிசனத்தில் வரும் நான்கு மிருகங்களின் மொத்த பண்புகளையும் பெற்றிருக்கிறது . . . ஆகவே, [வெளிப்படுத்துதல் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள] இந்த முதல் மிருகம் கடவுளுக்கு விரோதமாக இந்தப் பூமியில் செயல்படும் எல்லா அரசியல் ஆட்சியையும் குறிப்பதாக” தி இன்டர்பிரிட்டர்ஸ் டிக்ஷ்னரி ஆஃப் த பைபிள் சுட்டிக்காட்டுகிறது. இதை வெளிப்படுத்துதல் 13:7 உறுதிப்படுத்துகிறது, அந்த மிருகத்தைப் பற்றி அவ்வசனம் இவ்வாறு கூறுகிறது: ‘ஒவ்வொரு கோத்திரத்தின் மேலும் பாஷைக்காரர் மேலும் ஜாதிகள் மேலும் அதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது.’a
மனித ஆட்சிக்கு சின்னங்களாக ஏன் மிருகங்களை பைபிள் பயன்படுத்துகிறது? குறைந்தபட்சம் இரண்டு காரணங்களின் நிமித்தம் அவ்வாறு பயன்படுத்துகிறது. முதலாவது காரணம் என்னவென்றால், நூற்றாண்டுகளாக அரசாங்கங்கள் மூர்க்க மிருகங்களைப் போல பெருமளவில் இரத்தம் சிந்தியிருக்கின்றன. “போரே சரித்திரத்தில் முக்கிய அம்சமாக திகழ்கிறது, நாகரிகமும் ஜனநாயகமும் வளர்ந்தபோதும் இது தணியவில்லை” என உவில் மற்றும் ஏரியெல் டியூரன்ட் என்ற சரித்திராசிரியர்கள் எழுதினர். ‘மனுஷன் தனக்கே கேடுண்டாக வேறொரு மனுஷனை ஆண்டு வந்திருக்கிறான்’ என்பது எவ்வளவு உண்மை! (பிரசங்கி 8:9) இரண்டாவது காரணம் என்னவென்றால், ‘வலுசர்ப்பமானது [சாத்தான்] தன் பலத்தையும் தன் சிங்காசனத்தையும் மிகுந்த அதிகாரத்தையும் மிருகத்திற்குக் கொடுத்தது.’ (வெளிப்படுத்துதல் 12:9; 13:2) எனவே மனித ஆட்சிக்கு காரண கர்த்தா பிசாசு என்பது உறுதி; அதனால்தான் அவனுடைய மிருகத்தனமான, வலுசர்ப்பத்தைப் போன்ற குணத்தை மனித ஆட்சி பிரதிபலிக்கிறது.—யோவான் 8:44; எபேசியர் 6:12.
என்றாலும், மனித ஆட்சியாளர்கள் ஒவ்வொருவருமே சாத்தானுடைய கைப்பாவைகள் என்பதை இது அர்த்தப்படுத்தாது. சொல்லப்போனால், ஒரு கருத்தில், மனித அரசாங்கங்கள் ‘தேவ ஊழியக்காரனாக’ செயல்பட்டு, மனித சமுதாயத்திற்கு ஸ்திரத்தன்மையைக் கொடுத்திருக்கின்றன, அது இல்லாவிட்டால் குளறுபடியே மிஞ்சும். மேலும், மெய் வணக்கம் சாத்தானுக்குப் பிடிக்காத ஒன்றாக இருந்தபோதிலும், அதில் ஈடுபடுவதற்கான உரிமையையும் மற்ற அடிப்படை மனித உரிமைகளையும் அரசாங்கத் தலைவர்கள் சிலர் பாதுகாத்திருக்கிறார்கள். (ரோமர் 13:3, 4; எஸ்றா 7:11-27; அப்போஸ்தலர் 13:7) இருந்தாலும், சாத்தானுடைய செல்வாக்கின் காரணமாக எந்தவொரு மனிதனும் அல்லது மனித ஸ்தாபனமும் மக்களுக்கு நிரந்தர சமாதானத்தையும் பாதுகாப்பையும் ஒருபோதும் கொண்டுவர முடியவில்லை.b—யோவான் 12:31.
‘மனுஷ இலக்கம்’
666 என்ற எண்ணை அடையாளம் காண உதவும் மூன்றாவது துப்பு, அது ‘மனுஷனுடைய இலக்கம்’ என்று அழைக்கப்படுவதாகும். இந்த எண் தனிப்பட்ட ஒரு மனிதனை குறிக்க முடியாது, ஏனென்றால் எந்த மனிதனுமல்ல, சாத்தானே இந்த மிருகத்தின் மீது அதிகாரம் செலுத்துகிறான். (லூக்கா 4:5, 6; 1 யோவான் 5:19; வெளிப்படுத்துதல் 13:2, 18) இந்த மிருகம் ‘மனுஷனுடைய இலக்கத்தை’ அல்லது குறியீட்டை பெற்றிருப்பது, இது ஆவியோ பிசாசோ அல்ல ஆனால் மனித தன்மையுடையது என்பதையும் சில மனித பண்புகளை வெளிப்படுத்துகிறது என்பதையும் குறிக்கிறது. அந்தப் பண்புகள் யாவை? இதற்கான பதிலை பைபிள் இவ்வாறு சொல்கிறது: ‘எல்லாரும் பாவஞ்செய்து, தேவ மகிமையற்றவர்களானோம்.’ (ரோமர் 3:23) ஆகவே, இந்த மிருகம் ‘மனுஷ இலக்கத்தை’ பெற்றிருப்பது, தாழ்த்தப்பட்ட மனித நிலைமையை, அதாவது பாவம் மற்றும் அபூரண சுபாவத்தை அரசாங்கங்கள் பிரதிபலிப்பதை சுட்டிக்காட்டுகிறது.
சரித்திரம் இதற்கு சான்றளிக்கிறது. “இதுவரை தோன்றிய எல்லா நாகரிகமும் கடைசியில் அழிந்துபோனது” என ஐ.மா.-வின் முன்னாள் அரசு செயலர் ஹென்றி கிஸிங்கர் சொன்னார். “சரித்திரம் என்பது தோல்விகண்ட முயற்சிகளைப் பற்றிய, நிறைவேறாத இலட்சியங்களைப் பற்றிய பதிவு. . . . ஆகவே, ஒரு சரித்திராசிரியனாக, தவிர்க்க முடியாத பேரழிவை எதிர்நோக்கியே வாழ வேண்டியிருக்கிறது.” கிஸிங்கருடைய நேர்மையான மதிப்பீடு, ‘மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்ல, தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்ல’ என்ற அடிப்படை பைபிள் சத்தியத்தை உறுதிப்படுத்துகிறது.—எரேமியா 10:23.
நாம் இப்பொழுது அந்த மிருகத்தின் அடையாளத்தையும் அதை கடவுள் எப்படி கருதுகிறார் என்பதையும் புரிந்துகொண்டோம். ஆகவே, நம்முடைய புதிரின் கடைசி கட்ட ஆய்வுக்கு—ஆறு என்ற எண்ணுக்கும் அது ஏன் மூன்று ஸ்தானங்களில், அதாவது 666, அல்லது 600 பிளஸ் 60 பிளஸ் 6 என எழுதப்பட்டுள்ளது என்பதற்கும்—வருகிறோம்.
ஆறு என்ற எண் மும்முறை வருகிறது—ஏன்?
வேதாகமத்தில், சில எண்களுக்கு அடையாளப்பூர்வ அர்த்தமுள்ளது. உதாரணமாக, ஏழு என்ற எண் கடவுளுடைய பார்வையில் முழுமையை, அல்லது பரிபூரணத்தை குறிப்பதற்கு பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. உதாரணமாக, கடவுளுடைய படைப்பின் வாரம் ஏழு ‘நாட்களைக்’ கொண்டது; நீடித்த காலப்பகுதிகளைக் குறிக்கும் அந்த நாட்களில், பூமியின் சம்பந்தமாக கடவுள் தமது படைப்பின் நோக்கத்தை முழுமையாக நிறைவேற்றுகிறார். (ஆதியாகமம் 1:3–2:3) கடவுளுடைய “சொற்கள்” “ஏழுதரம் உருக்கி, புடமிடப்பட்ட” வெள்ளியைப் போல இருக்கின்றன; அதாவது பரிபூரணமாக சுத்திகரிக்கப்பட்டிருக்கின்றன. (சங்கீதம் 12:6; நீதிமொழிகள் 30:5, 6) நாகமான் என்ற குஷ்டரோகி யோர்தான் நதியில் ஏழு தடவை மூழ்கி குளிக்கும்படி சொல்லப்பட்டான், அதன்பின் அவன் முழுமையாக சுகம் பெற்றான்.—2 இராஜாக்கள் 5:10, 14.
ஆறு என்பது ஏழைவிட ஒரு இலக்கம் குறைவுபடும் எண்ணாகும். அப்படியானால், இது கடவுளுடைய பார்வையில் அபூரணமான, குறைவுபட்ட ஒன்றிற்கு பொருத்தமான ஓர் அடையாளம் அல்லவா? ஆம், பொருத்தமான அடையாளமே! (1 நாளாகமம் 20:6, 7) அதுமட்டுமல்ல, ஆறு என்ற எண்ணை மும்முறை 666 என எழுதுகையில் அது அபூரணத்தை நன்கு வலியுறுத்திக் காட்டுகிறது. நாம் ஏற்கெனவே பார்த்தபடி, 666 என்ற எண் ‘மனுஷ இலக்கமே’ என்பதும் இதை நிரூபிக்கிறது. ஆகவே, மிருகத்தைப் பற்றிய பதிவும், அதன் ‘மனுஷ இலக்கமும்,’ 666 என்ற எண்ணும் ஒரேவொரு காரியத்தையே சுட்டிக்காட்டுகின்றன, அதாவது யெகோவாவின் பார்வையில் முற்றிலும் குறைவுபட்டிருப்பதை, தகுதியற்றிருப்பதை சுட்டிக்காட்டுகின்றன.
மிருகத்தின் குறைபாடுகளைப் பற்றிய இந்த சித்தரிப்புகள், பூர்வ பாபிலோனிய அரசன் பெல்ஷாத்சாரைக் குறித்து சொல்லப்பட்ட விஷயத்தை நினைப்பூட்டுகின்றன. “நீ தராசிலே நிறுக்கப்பட்டு, குறையக் காணப்பட்டாய்” என அந்த அரசனிடம் தானியேல் மூலம் யெகோவா சொன்னார். அன்று இரவிலேயே பெல்ஷாத்சார் கொலை செய்யப்பட்டார், வலிமைமிக்க பாபிலோனிய சாம்ராஜ்யமும் வீழ்ந்தது. (தானியேல் 5:27, 30) அவ்வாறே, இந்த அரசியல் மிருகத்தின் மீதும் அதன் அடையாளத்தை தரித்திருப்பவர்கள் மீதும் வரப்போகும் கடவுளுடைய நியாயத்தீர்ப்பு, அதற்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் வரப்போகும் முடிவைக் குறிக்கிறது. ஆனால் இம்முறை, ஒரேவொரு அரசியல் ஆட்சியை மட்டுமன்றி மனித ஆட்சியின் தடயமே இல்லாதபடி அதை முற்றிலும் கடவுள் நீக்கிப் போடுவதைக் குறிக்கிறது. (தானியேல் 2:44; வெளிப்படுத்துதல் 19:19, 20) அப்படியானால், இந்த மிருகத்தின் அழிவுக்கேதுவான அடையாளத்தை நாம் தவிர்ப்பது எவ்வளவு முக்கியம்!
அந்த எண்ணை அடையாளம் காணுதல்
வெளிப்படுத்துதல் புத்தகம் 666 என்ற இந்த எண்ணை குறிப்பிட்டவுடன், அதற்கு அடுத்தாற்போல் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுகிற 1,44,000 பேரைப் பற்றி குறிப்பிடுகிறது; இவர்களுடைய நெற்றிகளில் ஆட்டுக்குட்டியானவராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரும் அவருடைய பிதாவாகிய யெகோவாவின் பெயரும் எழுதப்பட்டிருந்ததாக அது குறிப்பிடுகிறது. இந்தப் பெயர்களைத் தாங்கியிருப்பது இவர்கள் யெகோவாவுக்கும் அவரது குமாரனுக்கும் சொந்தமானவர்கள் என்பதை சுட்டிக்காட்டுகிறது; யெகோவாவையும் குமாரனையும் குறித்து இவர்கள் பெருமிதத்துடன் சாட்சி கொடுக்கிறார்கள். இது போலவே, மிருகத்தின் முத்திரையை உடையவர்கள் மிருகத்திற்கு தொண்டு செய்வதை வெளிப்படையாகக் காட்டுகிறார்கள். ஆகவே, அடையாள அர்த்தத்தில் சொல்லும்போது, இந்த முத்திரை வலது கையில் இருந்தாலும் சரி நெற்றியில் இருந்தாலும் சரி, இதைப் பெற்றிருப்பவர் மிருகத்தைப் போன்ற இவ்வுலக அரசியல் அமைப்புகளுக்கு வணக்கப்பூர்வ ஆதரவு அளிப்பவர் என அர்த்தப்படுத்துகிறது. இந்த முத்திரையை பெற்றிருப்பவர்கள் கடவுளுக்கு மட்டுமே உரியதை “இராயனுக்கு” அளிக்கிறார்கள். (லூக்கா 20:25; வெளிப்படுத்துதல் 13:4, 8; 14:1) எப்படி? அரசாங்கம், அதன் சின்னங்கள், அதன் படை பலம் ஆகியவற்றிற்கு வணக்கத்தோடுகூடிய மதிப்பை கொடுப்பதன் மூலம் அளிக்கிறார்கள்; நம்பிக்கைக்கும் இரட்சிப்புக்கும் அவற்றையே நாடுகிறார்கள். அவர்கள் வெறுமனே உதட்டளவில்தான் மெய்க் கடவுளுக்கு வணக்கம் செலுத்துகிறார்கள்.
இதற்கு முற்றிலும் மாறாக, பைபிள் நமக்கு இவ்வாறு அறிவுறுத்துகிறது: “பிரபுக்களையும், இரட்சிக்கத் திராணியில்லாத மனுபுத்திரனையும் நம்பாதேயுங்கள். அவனுடைய ஆவி பிரியும், அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான்; அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்துபோம்.” (சங்கீதம் 146:3, 4) ஞானமான இந்த ஆலோசனைக்கு கவனம் செலுத்துவோர், அரசாங்கங்களின் வாக்குறுதிகள் நிறைவேறாமல் போனாலோ ஆற்றல்மிக்க தலைவர்களின் புகழ் மங்கிவிட்டாலோ நிலைகுலைந்து போவதில்லை.—நீதிமொழிகள் 1:33.
ஆனால், மெய்க் கிறிஸ்தவர்கள் மனிதகுலத்தின் கஷ்டங்களைக் கண்டுகொள்ளாதிருப்பதாக இது அர்த்தப்படுத்துவதில்லை. மாறாக, மனிதகுலத்தின் பிரச்சினைகளைத் தீர்க்கப்போகிற ஒரே அரசாங்கமாகிய கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி அவர்கள் மும்முரமாக அறிவித்து வருகிறார்கள். அந்த அரசாங்கத்தின் ஆதரவாளர்களாக தங்களை பிரதிநிதித்துவம் செய்கிறார்கள்.—மத்தேயு 24:14.
கடவுளுடைய ராஜ்யம் —மனிதகுலத்தின் ஒரே நம்பிக்கை
இயேசு பூமியில் வாழ்ந்தபோது, கடவுளுடைய ராஜ்யம் என்ற பொருளின் அடிப்படையிலேயே பிரசங்கித்தார். (லூக்கா 4:43) பரமண்டல ஜெபம் என அழைக்கப்படும் தமது மாதிரி ஜெபத்தில் அந்த ராஜ்யம் வரும்படியும் கடவுளுடைய சித்தம் பூமியில் செய்யப்படும்படியும் ஜெபிக்க தம் சீஷர்களுக்கு இயேசு கற்றுக் கொடுத்தார். (மத்தேயு 6:9, 10) அந்த ராஜ்யம் பூமி முழுவதையும் ஆட்சி செய்யும் ஓர் அரசாங்கமாகும். அது பூமிக்குரிய ஒரு தலைநகரத்திலிருந்து அல்ல, ஆனால் பரலோகத்திலிருந்து ஆட்சி செய்யும். ஆகவேதான், அதை “பரலோக ராஜ்யம்” என இயேசு அழைத்தார்.—மத்தேயு 11:12.
வருங்கால குடிமக்களுக்காக தமது உயிரையே கொடுத்த இயேசு கிறிஸ்துவைத் தவிர வேறு யார்தான் அந்த ராஜ்யத்திற்கு மிகப் பொருத்தமான ராஜாவாக இருக்க முடியும்? (ஏசாயா 9:6, 7; யோவான் 3:16) இப்போது வல்லமைமிக்க ஆவி ஆளாக இருக்கும் இந்தப் பரிபூரண ஆட்சியாளர், விரைவில் மிருகத்தையும் அதன் ராஜாக்களையும் சேனைகளையும் நித்திய அழிவுக்கு அடையாளமாக இருக்கும் “கந்தகம் எரிகிற அக்கினிக் கடலிலே” தள்ளிவிடுவார். ஆனால் அத்துடன் எல்லாம் முடிந்துவிடுவதில்லை. சாத்தானையும்கூட இயேசு ஒழித்துக்கட்டுவார், இது மனிதரால் சாதிக்க முடிகிற ஒன்றல்ல.—வெளிப்படுத்துதல் 11:15; 19:16, 19-21; 20:2, 10.
கீழ்ப்படிதலுள்ள குடிமக்கள் அனைவருக்கும் கடவுளுடைய ராஜ்யம் சமாதானத்தை அளிக்கும். (சங்கீதம் 37:11, 29; 46:8, 9) துயரம், வேதனை, சாவு ஆகியவையும் இனி இருக்காது. மிருகத்தின் முத்திரையை பெறாமல் விலகியிருப்பவர்களுக்கு எப்பேர்ப்பட்ட மகத்தான ஓர் எதிர்பார்ப்பு அது!—வெளிப்படுத்துதல் 21:3, 4.
[அடிக்குறிப்புகள்]
a இந்த வசனங்களைப் பற்றி விவரமாக தெரிந்துகொள்ள யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது! என்ற புத்தகத்தில் 28-ம் அதிகாரத்தைக் காண்க.
b மனித ஆட்சி பெரும்பாலும் மிருகத்தைப் போன்றது என்பதை அறிந்திருந்தாலும், பைபிள் கட்டளையிடுகிறபடி, மெய்க் கிறிஸ்தவர்கள் “மேலான அதிகாரமுள்ள” அரசாங்கங்களுக்குக் கீழ்ப்படிகிறார்கள். (ரோமர் 13:1) ஆனால் இத்தகைய அதிகாரமுள்ளவர்கள் கடவுளுடைய சட்டத்திற்கு முரணாக செயல்படுவதற்கு கட்டளையிட்டால், அவர்கள் ‘மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும் தேவனுக்கே கீழ்ப்படிகிறார்கள்.’—அப்போஸ்தலர் 5:29.
[பக்கம் 5-ன் பெட்டி]
666—அர்த்தம் கண்டுபிடிக்க துப்புகள்
1. பைபிள் பெயர்கள் பெரும்பாலும் அந்தப் பெயரை தாங்கியிருப்பவருடைய பண்புகளை அல்லது வாழ்க்கையைப் பற்றி வெளிப்படுத்துகின்றன; உதாரணம் ஆபிரகாம், இயேசு, இன்னும் பலர். இதைப் போலவே, அந்த மிருகத்தின் எண்ணும் அதன் பண்புகளைக் குறிக்கிறது.
2. தானியேல் என்ற பைபிள் புத்தகத்தில், பல்வேறு மிருகங்கள் அடுத்தடுத்து வரும் மனித ராஜ்யங்களை அல்லது பேரரசுகளைக் குறிக்கின்றன. வெளிப்படுத்துதல் 13:1, 2-ல் சொல்லப்பட்டுள்ள அந்தக் கூட்டு மிருகம், உலகளாவிய அரசியல் ஒழுங்குமுறையைக் குறிக்கிறது, இது சாத்தானால் அதிகாரமளிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்படுகிறது.
3. அந்த மிருகத்திற்கு ‘மனுஷனுடைய இலக்கம்’ கொடுக்கப்பட்டிருப்பது, அது ஒரு மனித ஸ்தாபனம், பேய் அல்ல என்பதை சுட்டிக் காட்டுகிறது. ஆகவேதான், பாவத்தினாலும் அபூரணத்தினாலும் வந்த மனித குறைபாடுகளை அது பிரதிபலிக்கிறது.
4. கடவுளுடைய பார்வையில், ஆறு என்ற எண், பைபிள் ரீதியில் ஏழு என்ற முழுமையிலிருந்து அல்லது பரிபூரணத்திலிருந்து குறைவுபடுவதால், அது அபூரணத்தைக் குறிக்கிறது. 666 என்ற முத்திரை மும்முறை திரும்பத் திரும்ப வருவது, உச்ச அளவில் குறைவுபடுவதை வலியுறுத்திக் காட்டுகிறது.
[பக்கம் 6-ன் படங்கள்]
மனித ஆட்சி குறைவுபட்டது என்பதற்கு 666 என்ற எண் பொருத்தமான அடையாளம்
[படத்திற்கான நன்றி]
பசியால் வாடும் குழந்தை: UNITED NATIONS/Photo by F. GRIFFING
[பக்கம் 7-ன் படங்கள்]
இயேசு கிறிஸ்து இப்பூமியில் பரிபூரண ஆட்சியை நிலைநாட்டுவார்