-
கிறிஸ்து தமது சபையை தலைமைதாங்கி நடத்துகிறார்காவற்கோபுரம்—2002 | மார்ச் 15
-
-
5, 6. (அ) அப்போஸ்தலன் யோவானுக்குக் கிடைத்த ஒரு தரிசனத்தில், ‘ஏழு பொன் குத்துவிளக்குகளும்,’ ‘ஏழு நட்சத்திரங்களும்’ எதை படமாக காட்டுகின்றன? (ஆ) அந்த ‘ஏழு நட்சத்திரங்கள்’ இயேசுவின் வலது கரத்தில் இருப்பது எதைத் தெரிவிக்கிறது?
5 இந்த உண்மையும் விவேகமுமுள்ள அடிமை நேரடியாக இயேசு கிறிஸ்துவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக பைபிள் புத்தகமாகிய வெளிப்படுத்துதல் காட்டுகிறது. ‘கர்த்தருடைய நாளைப்’ பற்றிய ஒரு தரிசனத்தில், அப்போஸ்தலன் யோவான் “ஏழு பொன் குத்துவிளக்குகளையும், அந்த ஏழு குத்துவிளக்குகளின் மத்தியிலே,” ‘தமது வலதுகரத்திலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக்கொண்டிருந்த மனுஷ குமாரனுக்கொப்பானவரையும்’ கண்டார். இத்தரிசனத்தை யோவானுக்கு விளக்குகையில், இயேசு இவ்வாறு சொன்னார்: “என் வலதுகரத்தில் நீ கண்ட ஏழு நட்சத்திரங்களின் இரகசியத்தையும், ஏழு பொன் குத்துவிளக்குகளின் இரகசியத்தையும் எழுது; அந்த ஏழு நட்சத்திரங்களும் ஏழு சபைகளின் தூதர்களாம்; நீ கண்ட ஏழு குத்துவிளக்குகளும் ஏழு சபைகளாம்.”—வெளிப்படுத்துதல் 1:1, 10-20.
6 அந்த ‘ஏழு பொன் குத்துவிளக்குகள்,’ 1914-ல் தொடங்கின “கர்த்தருடைய நாளில்” இருந்துவரும் உண்மையான கிறிஸ்தவ சபைகள் எல்லாவற்றையும் படமாக குறிக்கின்றன. ஆனால் அந்த ‘ஏழு நட்சத்திரங்களைப்’ பற்றியதென்ன? ஆரம்பத்தில், முதல் நூற்றாண்டு சபைகளைக் கவனித்து வந்த ஆவியால் பிறப்பிக்கப்பட்ட அபிஷேகம் செய்யப்பட்ட கண்காணிகள் அனைவரையும் அடையாளமாக குறித்தன.a கண்காணிகள் இயேசுவின் வலது கரத்தில் இருந்தார்கள், அதாவது, அவருடைய கட்டுப்பாட்டுக்கும் வழிநடத்துதலுக்கும் உட்பட்டிருந்தார்கள். ஆம், பலர் அடங்கிய அடிமை வகுப்பை கிறிஸ்து இயேசு வழிநடத்தினார். எனினும், அபிஷேகம் செய்யப்பட்ட இந்தக் கண்காணிகள் இப்போது எண்ணிக்கையில் வெகு சிலரே இருக்கிறார்கள். உலகெங்கும் இருக்கும் யெகோவாவின் சாட்சிகளின் 93,000-க்கும் மேற்பட்ட சபைகளுக்கு கிறிஸ்துவின் தலைமை வகிப்பு எவ்வாறு செலுத்தப்படுகிறது?
7. (அ) பூமி முழுவதிலுமுள்ள சபைகளை வழிநடத்துவதற்கு ஆளும் குழுவை இயேசு எவ்வாறு பயன்படுத்துகிறார்? (ஆ) கிறிஸ்தவ கண்காணிகள் பரிசுத்த ஆவியால் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று ஏன் சொல்லலாம்?
7 முதல் நூற்றாண்டில் இருந்ததுபோல், அபிஷேகம் செய்யப்பட்ட கண்காணிகளில் தகுதிபெற்ற ஒரு சிறிய தொகுதியான ஆண்கள், உண்மையும் விவேகமுமுள்ள அடிமையை பிரதிநிதித்துவம் செய்யும் ஆளும் குழுவாக இப்போது சேவிக்கிறார்கள். தகுதி பெற்ற ஆண்களை—ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்டவர்களாக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி—சபை மூப்பர்களாக நியமிப்பதற்கு இந்த ஆளும் குழுவை நம் தலைவர் பயன்படுத்துகிறார். இவ்விஷயத்தில், இயேசு பயன்படுத்துவதற்கு யெகோவா அதிகாரம் அளித்திருக்கிற பரிசுத்த ஆவி மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. (அப்போஸ்தலர் 2:32, 33) முதலாவதாக, பரிசுத்த ஆவியால் ஏவப்பட்ட கடவுளுடைய வார்த்தையில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைகளை இந்தக் கண்காணிகள் பூர்த்தி செய்ய வேண்டும். (1 தீமோத்தேயு 3:1-7; தீத்து 1:5-9; 2 பேதுரு 1:20, 21) மூப்பர்களுக்கான சிபாரிசுகளும் நியமிப்புகளும், ஜெபத்தோடும் பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலோடும் செய்யப்படுகின்றன. கூடுதலாக, நியமிக்கப்பட்ட நபர்கள் அந்த ஆவியின் கனிகளைப் பிறப்பிப்பதன் அத்தாட்சியை அளிக்கிறார்கள். (கலாத்தியர் 5:22, 23) அப்படியானால், பவுலின் அறிவுரை, அபிஷேகம் செய்யப்பட்டவர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், மூப்பர்கள் எல்லாருக்குமே சரிசமமாய்ப் பொருந்துகிறது: “உங்களைக் குறித்தும், . . . பரிசுத்த ஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங் குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள்.” (அப்போஸ்தலர் 20:28) நியமிக்கப்பட்ட இவர்கள், ஆளும் குழுவினிடமிருந்து வழிநடத்துதலைப் பெற்று, மனப்பூர்வமாய் சபையைக் கண்காணிக்கிறார்கள். இவ்வாறு, கிறிஸ்து இப்போது நம்மோடிருந்து ஊக்கத்துடன் சபையை வழிநடத்துகிறார்.
-
-
கிறிஸ்து தமது சபையை தலைமைதாங்கி நடத்துகிறார்காவற்கோபுரம்—2002 | மார்ச் 15
-
-
a இந்த ‘நட்சத்திரங்கள்’ சொல்லர்த்தமான தூதர்களை குறிக்கிறதில்லை. காணக்கூடாத ஆவி சிருஷ்டிகளின் நன்மைக்கான தகவலை பதிவு செய்வதற்கு ஒரு மனிதனை இயேசு நிச்சயமாக பயன்படுத்த மாட்டார். ஆகையால் இந்த ‘நட்சத்திரங்கள்’ இயேசுவின் செய்தியாளராக சித்தரிக்கப்பட்ட சபையிலுள்ள மனித கண்காணிகளை அல்லது மூப்பர்களை குறிக்க வேண்டும். அவர்களுடைய எண்ணிக்கை ஏழு என குறிப்பிடப்பட்டிருப்பது, கடவுளுடைய தராதரத்தின்படி முழுமையைக் குறிக்கிறது.
-