யெகோவாவின் வார்த்தை ஜீவனுள்ளது
வெளிப்படுத்துதல் புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்—இரண்டாம் பகுதி
யெகோவா தேவனை வழிபடுவோருக்கும் வழிபடாதோருக்கும் எதிர்காலம் எப்படி இருக்கும்? சாத்தானுக்கும் அவனுடைய பேய்களுக்கும் என்ன நடக்கும்? கீழ்ப்படிந்து நடக்கிற மனிதர்கள் கிறிஸ்துவின் ஆயிரமாண்டு ஆட்சியில் எப்படிப்பட்ட ஆசீர்வாதங்களை அனுபவிப்பார்கள்? இந்தக் கேள்விகளுக்கும் முக்கியமான பிற கேள்விகளுக்கும் வெளிப்படுத்துதல் 13:1–22:21 பதிலளிக்கிறது.a முதலாம் நூற்றாண்டு அஸ்தமிக்கும் தறுவாயில் அப்போஸ்தலன் யோவானுக்குக் கிடைத்த 16 தரிசனங்களில் கடைசி 9 தரிசனங்கள் இந்த அதிகாரங்களில் அடங்கியுள்ளன.
“இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள்” என்று யோவான் எழுதுகிறார். (வெளி. 1:3; 22:7) வெளிப்படுத்துதல் புத்தகத்தை வாசித்து அதிலுள்ளவற்றை நம் வாழ்வில் கடைப்பிடிக்கும்போது, கடவுளைச் சேவிக்க வேண்டுமென்ற ஆசை நம் உள்ளத்தில் பொங்கிவழியும்; கடவுள் மீதும் அவருடைய குமாரன் இயேசு கிறிஸ்து மீதும் நாம் வைத்திருக்கிற விசுவாசம் விழுதுவிட்டு தழைக்கும்; வருங்காலத்தைப் பற்றிய வண்ணமயமான நம்பிக்கையும் நமக்குக் கிடைக்கும்.b—எபி. 4:12.
கடவுளுடைய கோபம் என்ற ஏழு கலசங்கள் ஊற்றப்படுகின்றன
‘ஜாதிகள் கோபித்தார்கள், அப்பொழுது தேவனுடைய கோபம் மூண்டது; . . . பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுக்கிறதற்கும், காலம் வந்தது’ என்று வெளிப்படுத்துதல் 11:18 சொல்கிறது. கடவுளுடைய கோபத்திற்கான காரணத்தை எட்டாவது தரிசனம் காட்டுகிறது; இதில் ‘ஏழு தலைகளும் பத்துக் கொம்புகளும் கொண்ட ஒரு மிருகத்தின்’ செயல்கள் விவரிக்கப்பட்டுள்ளன.—வெளி. 13:1.
ஒன்பதாவது தரிசனத்தில், ‘சீயோன் மலையின்மேல் ஆட்டுக்குட்டியானவரும்,’ “மனுஷரிலிருந்து . . . மீட்டுக்கொள்ளப்பட்ட” ‘இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேரும்’ நிற்பதை யோவான் காண்கிறார். (வெளி. 14:1, 4) அதைத் தொடர்ந்து தேவதூதர்கள் உரைக்கிற அறிவிப்புகள் கேட்கின்றன. அடுத்த தரிசனத்தில், “ஏழு வாதைகளையுடைய ஏழு தூதரை” யோவான் பார்க்கிறார். சாத்தானுடைய உலகத்தின் பல்வேறு பாகங்கள்மீது ‘தேவனுடைய [“ஏழு,” NW] கோபக் கலசங்களை ஊற்றும்படி’ இந்தத் தூதர்களுக்கு யெகோவாவே கட்டளையிடுகிறார். கடவுளுடைய நியாயத்தீர்ப்பு பற்றிய அறிவிப்புகளும் எச்சரிக்கைகளும் இந்தக் கலசங்களில் உள்ளன. (வெளி. 15:1; 16:1) மூன்றாம் ஆபத்தோடும் ஏழாம் எக்காளத்தை ஊதுவதோடும் தொடர்புடைய கூடுதலான நியாயத்தீர்ப்புகளைப் பற்றி இவ்விரண்டு தரிசனங்களும் விரிவான விளக்கமளிக்கின்றன. இவை ராஜ்யம் சம்பந்தமான நியாயத்தீர்ப்புகள்.—வெளி. 11:14, 15.
வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:
13:8—‘ஆட்டுக்குட்டியினுடைய ஜீவ புஸ்தகம்’ என்றால் என்ன? இது ஓர் அடையாளப்பூர்வமான புத்தகம்; இயேசு கிறிஸ்துவுடன் பரலோக ராஜ்யத்தில் அரசாளுகிறவர்களின் பெயர்கள் மட்டுமே இதில் உள்ளன. இன்னும் பூமியில் வாழ்ந்துகொண்டிருக்கிற பரலோக நம்பிக்கையுடைய கிறிஸ்தவர்களின் பெயர்களும் இதில் அடங்கும்.
13:11-13—இரண்டு கொம்புகளையுடைய மிருகம் எப்படி வலுசர்ப்பத்தைப் போல் செயல்பட்டு, பரலோகத்திலிருந்து பூமியின்மீது அக்கினியை இறங்கச் செய்கிறது? இரண்டு கொம்புகளையுடைய மிருகம், அதாவது ஆங்கிலோ அமெரிக்க உலக வல்லரசு, வலுசர்ப்பத்தைப் போல் பேசுவது அதன் அதிகாரத்தை ஏற்றுக்கொள்ளும்படி மக்களை அச்சுறுத்துவதையும், வன்முறையைப் பயன்படுத்தி அவர்களைப் பணிய வைப்பதையும் சுட்டிக்காட்டுகிறது. பரலோகத்திலிருந்து அக்கினியை இறங்கச் செய்வதன் மூலம் தன்னை ஒரு தீர்க்கதரிசியைப் போல் காட்டிக்கொள்கிறது. அதாவது, 20-ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற இரண்டு உலகப் போர்களில் கெட்டவர்களை அழித்துவிட்டதாகவும், கம்யூனிஸத்தை வென்றுவிட்டதாகவும் பெருமை பாராட்டிக்கொள்வதன் மூலம் அக்கினியை இறங்கச் செய்கிறது.
16:17—ஏழாம் கலசம் ‘காற்றில்’ (NW) ஊற்றப்படுகிறது, அப்படியென்றால் அந்தக் ‘காற்று’ எது? ‘காற்று’ என்பது சாத்தானுடைய சிந்தையை, அதாவது, “கீழ்ப்படியாதவர்களிடம் தற்போது செயல்படுகிற சிந்தையை” அடையாளப்படுத்துகிறது. விஷமிக்க இந்தக் காற்றை சாத்தானுடைய முழு பொல்லாத உலகமும் சுவாசிக்கிறது.—எபே. 2:2, NW.
நமக்குப் பாடம்:
13:1-4, 18. மனித அரசாங்கங்களை அடையாளப்படுத்துகிற “ஒரு மிருகம்” “சமுத்திரத்திலிருந்து,” அதாவது கொந்தளிக்கும் மனித சமுதாயத்திலிருந்து, ஏறிவருகிறது. (ஏசா. 17:12, 13; தானி. 7:2–8, 17) இந்த மிருகம் சாத்தானால் உருவாக்கப்பட்டது, அவனால் அதிகாரமளிக்கப்பட்டது; இது, 666 என்ற எண்ணைப் பெற்றிருக்கிறது; இந்த மிருகம் மகா மகா குறைபாடுள்ளது என்பதை இந்த எண் சுட்டிக்காட்டுகிறது. இந்த மிருகம் எதைக் குறிக்கிறது என்பதை நாம் புரிந்துகொண்டால், உலகத்தாரைப் போல் அதை ஆச்சரியத்தோடு பார்த்து, பின்பற்றவோ வணங்கவோ மாட்டோம்.—யோவா. 12:31; 15:19.
13:16, 17. அன்றாட வேலைகளில் ஈடுபடும்போது, அதாவது ‘கொள்வதிலோ விற்பதிலோ’ ஈடுபடும்போது, நமக்கு என்ன கஷ்டங்கள் வந்தாலும்சரி, இந்த மிருகம் நம்முடைய வாழ்க்கையை ஆட்டிப்படைக்க நாம் அனுமதித்துவிடக் கூடாது. ‘கைகளிலாவது நெற்றிகளிலாவது . . . இந்த மிருகத்தின் முத்திரையைப்’ பெறுவது நம்முடைய செயல்களை அல்லது நம்முடைய சிந்தையை இந்த மிருகம் ஆட்டிப்படைக்க அனுமதிப்பதற்குச் சமம்.
14:6, 7. ஸ்தாபிக்கப்பட்டுள்ள கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை அவசர உணர்வுடன் அறிவிக்க வேண்டும் என்பதையே தேவதூதருடைய அறிவிப்பு நமக்குக் கற்பிக்கிறது. கடவுள்மீது பயபக்தியை வளர்த்துக்கொள்வதற்கும் யெகோவாவுக்கே மகிமை சேர்ப்பதற்கும் பைபிள் மாணாக்கருக்கு நாம் உதவி செய்ய வேண்டும்.
14:14-20. ‘பூமியின் பயிரை அறுப்பதற்குரிய’ காலம், அதாவது மீட்பு பெறுகிறவர்களைக் கூட்டிச் சேர்ப்பதற்குரிய காலம் முடிவடையும்போது, “பூமியின் திராட்சப்பழங்களை” சேகரித்து “தேவனுடைய கோபாக்கினையென்னும் பெரிய ஆலையிலே” தேவதூதன் போடுவார். அந்தத் திராட்சைப்பழங்கள், அதாவது மனிதகுலத்தை ஆளுகிற சாத்தானுடைய காணக்கூடிய உலக அரசாங்கங்களும் கெட்ட கனிகளைத் தருகிற அதன் ‘குலைகளும்,’ என்றென்றும் அழிக்கப்படும். பூமியிலுள்ள இந்தத் திராட்சைப்பழங்கள் நம்மைக் களங்கப்படுத்த விடாமல் நாம் உறுதியுடன் நிலைத்திருக்க வேண்டும்.
16:13-16. “அசுத்த ஆவிகள் [“அசுத்தமான செய்திகள்,” NW]” என்பது சாத்தானுடைய பிரச்சாரத்தைக் குறிக்கின்றன. கடவுளுடைய கோபாக்கினை என்ற ஏழு கலசங்களிலிருந்து ஊற்றப்படுவதைப் பார்த்து, பூமியின் ராஜாக்கள் மனம் மாறிவிடாமல் இருப்பதற்காகவும் யெகோவாவுக்கு விரோதமாகச் செயல்படுவதற்காகவும் சாத்தான் இந்தப் பிரச்சாரத்தைச் செய்கிறான்.—மத். 24:42, 44.
16:21. இந்த உலகத்தின் முடிவு நெருங்குகையில், சாத்தானுடைய பொல்லாத உலகத்திற்கு எதிராக அறிவிக்கப்படும் யெகோவாவின் நியாயத்தீர்ப்புகள் வழக்கத்திற்கு மாறாக மிகவும் கடுமையாக இருக்கலாம். அதனால்தான், பெரிய கல்மழை விழுமென சொல்லப்படுகிறது போலும். என்றாலும், மனிதரில் பெரும்பாலானோர் கடவுளைத் தொடர்ந்து தூஷித்துக்கொண்டேதான் இருப்பார்கள்.
வெற்றிவாகை சூடும் ராஜா அரசாளுகிறார்
பொய்மத உலகப் பேரரசான “மகா பாபிலோன்” சாத்தானுடைய பொல்லாத உலகத்தின் ஓர் அருவருப்பான பாகமாக இருக்கிறாள். “சிவப்பு நிறமுள்ள மிருகத்தின்மேல்” அமர்ந்திருக்கிற அவளை “மகா வேசி” என்று 11-வது தரிசனம் வர்ணிக்கிறது. அவளைச் சுமந்து கொண்டிருக்கிற ‘பத்து கொம்புகளையுடைய’ அதே மிருகம் அவளை அடியோடு அழிக்கப்போகிறது. (வெளி. 17:1, 3, 5, 16) அடுத்துவரும் தரிசனம் அந்த வேசியை ‘மகா நகரத்திற்கு’ ஒப்பிட்டு, அவளுக்கு வரப்போகும் அழிவைப் பற்றி அறிவிக்கிறது; கடவுளுடைய மக்கள் ‘அவளைவிட்டு வெளியே வரும்படி’ ஓர் அவசர அழைப்பும் விடுக்கிறது. அந்த மகா நகரத்தின் அழிவைக் குறித்து பலர் அழுது புலம்புகிறார்கள். ஆனால், பரலோகத்தில் உள்ளவர்கள் “ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது” என்று சொல்லி மகிழ்ச்சியடைகிறார்கள். (வெளி. 18:4, 9, 10, 15–19; 19:7) 13-வது தரிசனத்தில், ‘வெள்ளைக் குதிரையில்’ சவாரி செய்கிறவர் தேசங்களுடன் போர் புரிவதற்குச் செல்கிறார். சாத்தானுடைய பொல்லாத உலகத்திற்கு முடிவுகட்டுகிறார்.—வெளி. 19:11–16.
‘பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பைப்’ பற்றியென்ன? ‘அக்கினியும் கந்தகமுமான கடலிலே அவன் தள்ளப்படுவது’ எப்போது? 14-வது தரிசனத்தில் வரும் சம்பவங்கள் இவற்றைப் பற்றி குறிப்பிடுகின்றன. (வெளி. 20:2, 10) கடைசி இரண்டு தரிசனங்கள், ஆயிரமாண்டு ஆட்சியில் நிலவும் வாழ்க்கையைப் பற்றி சுருக்கமாகச் சுட்டிக்காட்டுகின்றன. ‘வெளிப்படுத்தின விசேஷம்’ உச்சக்கட்டத்திற்கு வரும்போது, “ஜீவத் தண்ணீருள்ள சுத்தமான நதி” ‘நகரத்து வீதியின் மத்தியில் ஓடிவருவதையும்’ ‘தாகமாயிருக்கிற’ எவரும் அதை வாங்கிப் பருகும்படி அழைப்பு கொடுக்கப்படுவதையும் யோவான் காண்கிறார்.—வெளி. 1:1; 22:1, 2, 17.
வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:
17:16; 18:9, 10—தாங்களே பாழாக்கிய ஸ்திரீக்காக ஏன் ‘பூமியின் ராஜாக்கள்’ அழுது புலம்புகிறார்கள்? சுயநலத்தின் காரணமாகவே அவர்கள் அழுது புலம்புகிறார்கள். மகா பாபிலோன் அழிக்கப்பட்டபின், தங்களுக்கு அவள் எந்தளவு பிரயோஜனமாக இருந்தாள் என்பதைப் பூமியின் ராஜாக்கள் உணர ஆரம்பிக்கிறார்கள். மதத்தின் பெயரில் மற்றவர்களை ஒடுக்குவதற்கு அவர்களை அவள் அனுமதித்திருக்கிறாள். இளைஞர்களைப் போர்க்களத்திற்கு அனுப்புவதில் மகா பாபிலோன் கைகொடுத்திருக்கிறாள். அதோடு, மக்களை அடிபணியச் செய்வதில் அவள் முக்கிய பாகம் வகித்திருக்கிறாள்.
19:12—எந்த அர்த்தத்தில் இயேசுவைத் தவிர வேறொருவருக்கும் அந்தப் பெயர் தெரியாது? கர்த்தருடைய நாளில் இயேசுவுக்குக் கிடைக்கிற விசேஷ ஸ்தானத்தையும் பாக்கியங்களையும், உதாரணத்திற்கு ஏசாயா 9:6-ல் குறிப்பிடப்பட்டுள்ள ஸ்தானத்தையும் பாக்கியங்களையும், இந்தப் பெயர் சுட்டிக்காட்டுவதாகத் தெரிகிறது. அவர் அனுபவிக்கும் பாக்கியங்கள் தனிச்சிறப்பானவை, அப்படிப்பட்ட உயர் பதவி வகிப்பதில் என்ன அடங்கியிருக்கிறது என்பதை அவர் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்; இந்த அர்த்தத்தில்தான் அந்தப் பெயர் அவரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. என்றாலும், இயேசு தம்முடைய மணவாட்டி வகுப்பைச் சேர்ந்தவர்களுடன் அந்தப் பாக்கியங்களில் சிலவற்றைப் பகிர்ந்துகொள்கிறார்; அதாவது, ‘புதிய நாமத்தை அவர்கள் மேல் எழுதுகிறார்.’—வெளி. 3:12.
19:14—அர்மகெதோனில் இயேசுவுடன் யார் சவாரி செய்வார்கள்? கடவுளுடைய போரில் இயேசுவுடன் சேர்ந்துகொள்ளும் ‘பரலோகத்திலுள்ள சேனைகளில்’ தேவதூதர்களும், பரலோகப் பரிசை வென்ற அபிஷேகம் செய்யப்பட்டவர்களும் இருப்பார்கள்.—மத். 25:31, 32; வெளி. 2:26, 27.
20:11-15—‘ஜீவ புஸ்தகத்தில்’ யாருடைய பெயர்கள் எழுதப்பட்டுள்ளன? நித்திய ஜீவனைப் பெறப்போகிற எல்லாருடைய பெயர்களும் இப்புத்தகத்தில் உள்ளன; அதாவது அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுடைய பெயர்களும் திரள் கூட்டத்தினருடைய பெயர்களும் ‘உயிர்த்தெழுந்து வரும் நீதிமான்களுடைய’ பெயர்களும் இதில் உள்ளன. (அப். 24:15; வெளி. 2:10; 7:9) ‘அநீதிமான்களின் உயிர்த்தெழுதலில்’ வருகிறவர்கள், ஆயிரமாண்டில் கொடுக்கப்படுகிற “அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படி” நடந்தால் மட்டுமே அவர்களுடைய பெயர்கள் இந்த ‘ஜீவ புஸ்தகத்தில்’ எழுதப்படும். என்றாலும், அதில் எழுதப்படுகிறவர்களுடைய பெயர்கள் நிரந்தரமானதல்ல. அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் தங்களுடைய மரணம்வரை உண்மையுடன் நிலைத்திருந்தால் அவர்களுடைய பெயர்கள் நிரந்தரமாக இருக்கும். (வெளி. 3:5) பூமியில் ஜீவனைப் பெறுகிறவர்கள் ஆயிரமாண்டின் கடைசியில் வரும் பரீட்சையில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அவர்களுடைய பெயர்கள் அழியாமல் என்றென்றும் இருக்கும்.—வெளி. 20:7, 8.
நமக்குப் பாடம்:
17:3, 5, 7, 16. “ஸ்திரீயினுடைய இரகசியத்தையும், . . . இவளைச் சுமக்கிற [சிவப்பு நிற] மிருகத்தினுடைய இரகசியத்தையும்” புரிந்துகொள்வதற்குப் ‘பரத்திலிருந்து வருகிற ஞானம்’ நமக்குத் துணைபுரிகிறது. (யாக். 3:17) அடையாளப்பூர்வமான இந்த மிருகம் முதலில் சர்வதேச சங்கமாக உருவெடுத்தது; பிறகு ஐக்கிய நாட்டுச் சங்கம் என்ற பெயரில் மீண்டும் உயிர்பெற்று வந்தது. இந்த இரகசியம் நமக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது; அப்படியானால், கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை வைராக்கியத்துடன் பிரசங்கித்து, யெகோவாவின் நியாயத்தீர்ப்பு நாளை அறிவிப்பதற்கு இது நம்மைத் தூண்ட வேண்டுமல்லவா?
21:1-6. கடவுளுடைய ராஜ்யம் சம்பந்தமாக முன்னறிவிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிச்சயம் நிறைவேறும் என்பதில் உறுதியுடன் இருக்கலாம். ஏன்? ஏனென்றால், அவையனைத்தும் “ஆயிற்று,” அதாவது நிறைவேறிவிட்டது என பைபிளில் சொல்லப்பட்டுள்ளது.
22:1, 17. ‘ஜீவத் தண்ணீருள்ள நதி’ என்பது கீழ்ப்படிந்து நடக்கிற மனிதர்களைப் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுவிப்பதற்காக யெகோவா செய்திருக்கும் ஏற்பாடுகளைக் குறிக்கிறது. இந்தத் தண்ணீர் இப்போதே ஓரளவுக்குக் கிடைக்கிறது. “ஜீவத் தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்” என்ற அழைப்பை நன்றியுடன் ஏற்றுக்கொள்வதோடு, மற்றவர்களுக்கும் அந்த அழைப்பை ஆர்வத்துடன் விடுப்போமாக!
[அடிக்குறிப்புகள்]
a வெளிப்படுத்துதல் 1:1–12:17 வரையுள்ள வசனங்களின் விளக்கத்திற்கு, “வெளிப்படுத்துதலிலிருந்து சிறப்பு குறிப்புகள்—முதல் பகுதி”யை ஜனவரி 15, 2009 காவற்கோபுர இதழில் காண்க.
b வெளிப்படுத்துதல் புத்தகத்திலுள்ள ஒவ்வொரு வசனத்தின் விளக்கத்திற்கும், வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபம்! என்ற புத்தகத்தைக் காண்க.
[பக்கம் 5-ன் படம்]
கீழ்ப்படிந்து நடக்கும் மனிதர்களுக்குக் கடவுளுடைய ராஜ்யத்தில் எப்பேர்ப்பட்ட மகத்தான ஆசீர்வாதங்கள்!