இவர்கள் ‘ஆட்டுக்குட்டியானவரைப் பின்பற்றுகிறார்கள்’
“ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் அவரைப் பின்பற்றுகிறவர்கள் இவர்களே.” —வெளி. 14:4.
1. மற்றவர்கள் இயேசுவின் போதனையைக் கேட்டு பின்வாங்கிச் சென்றபோது, அவருடைய உண்மையான சீஷர்கள் என்ன செய்தார்கள்?
இயேசு தமது ஊழியத்தை ஆரம்பித்து சுமார் இரண்டரை ஆண்டுகள் ஓடியிருக்கும். ஒருமுறை ‘கப்பர்நகூமிலுள்ள ஜெபஆலயத்தில் உபதேசித்துக் கொண்டிருந்தார்.’ அப்போது அவருடைய பேச்சைக் கேட்டு மக்கள் அதிர்ந்துபோனார்கள். எனவே, “சீஷரில் அநேகர் அவருடனேகூட நடவாமல் பின்வாங்கிப்போனார்கள்.” இந்தச் சமயத்தில் இயேசு தமது 12 சீஷர்களைப் பார்த்து, ‘நீங்களும் என்னைவிட்டுப் போகப்போகிறீர்களா?’ என்று கேட்டார். “ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே. நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நாங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிறோம்” என்று சீமோன் பேதுரு பதிலளித்தார். (யோவா. 6:48, 59, 60, 66-69) இயேசுவின் உண்மையான சீஷர்கள் அவரைவிட்டுப் பின்வாங்கவில்லை. அவர்கள் கடவுளுடைய சக்தியால் அபிஷேகம் செய்யப்பட்ட பிறகு, இயேசுவின் வழிநடத்துதலுக்குத் தொடர்ந்து கீழ்ப்படிந்தார்கள்.—அப். 16:7-10.
2. (அ) “உண்மையும் விவேகமும் உள்ள அடிமை” அல்லது ‘உண்மையுள்ள விசாரணைக்காரன்’ யார்? (ஆ) ஆட்டுக்குட்டியானவரைப் பின்பற்றும் விஷயத்தில் இந்த அடிமை வகுப்பார் எப்படி மிகச் சிறந்த முன்மாதிரி வைத்திருக்கிறார்கள்?
2 சரி, இக்காலத்திலுள்ள அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களைப் பற்றி என்ன சொல்லலாம்? ‘தமது பிரசன்னத்திற்கும், இந்தச் சகாப்தத்தின் இறுதிக்கட்டத்திற்குமான அடையாளத்தைப்’ பற்றிய தீர்க்கதரிசனத்தை இயேசு உரைத்தபோது, அவர்கள் யார் என்பதைச் சுட்டிக்காட்டினார்; கடவுளுடைய சக்தியால் அபிஷேகம் செய்யப்பட்ட தொகுதியினரை “உண்மையும் விவேகமும் உள்ள அடிமை” அல்லது ‘உண்மையுள்ள விசாரணைக்காரன்’ என்று அவர் குறிப்பிட்டார். (மத். 24:3, 45, NW; லூக். 12:42) ‘ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் அவரைப் பின்பற்றிச் செல்வதில்’ இந்த அடிமை வகுப்பார் ஒரு தொகுதியாக மிகச் சிறந்த முன்மாதிரி வைத்திருக்கிறார்கள். (வெளிப்படுத்துதல் 14:4, 5-ஐ வாசியுங்கள்.) பொய் மத உலகப் பேரரசான ‘மகா பாபிலோனின்’ நம்பிக்கைகளாலும் பழக்கவழக்கங்களாலும் தங்களைக் கறைபடுத்தாமல் ஆன்மீக ரீதியில் கற்புள்ளவர்களாக இருக்கிறார்கள். (வெளி. 17:5) “இவர்களுடைய வாயிலே” எந்தவித பொய்க் கோட்பாடுகளும் ‘காணப்படுவதில்லை.’ சாத்தானுடைய உலகினால் ‘மாசுபடாமல்’ தங்களைக் காத்துக்கொள்கிறார்கள். (யோவா. 15:19) வருங்காலத்தில், பூமியில் மீந்துள்ள அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் ஆட்டுக்குட்டியானவரைப் ‘பின்பற்றி’ பரலோகத்திற்குச் செல்வார்கள்.—யோவா. 13:36.
3. அடிமை வகுப்பார்மீது நாம் நம்பிக்கை வைப்பது ஏன் முக்கியம்?
3 உண்மையும் விவேகமுமுள்ள அடிமையை இயேசு ‘தம்முடைய வேலைக்காரரின்’ மீது, அதாவது அடிமை வகுப்பைச் சேர்ந்த தனிநபர்கள் மீது, அதிகாரியாக நியமித்திருக்கிறார்; இவர்களுக்கு ‘ஏற்ற வேளையிலே போஜனம் கொடுப்பதற்காக’ நியமித்திருக்கிறார். ‘தம் ஆஸ்திகள் எல்லாவற்றின்மேலும் விசாரணைக்காரனாக’ இருப்பதற்கும் இந்த அடிமையை நியமித்திருக்கிறார். (மத். 24:45-47) எண்ணிக்கையில் பெருகிவரும் ‘வேறே ஆடுகளான’ ‘திரள் கூட்டத்தினரும்’ இந்த ‘ஆஸ்திகளில்’ அடங்குவர். (வெளி. 7:9; யோவான் 10:16) அபிஷேகம் செய்யப்பட்டவர்களையும் ‘வேறே ஆடுகளையும்’ சேர்ந்த தனிநபர்கள் தங்கள்மீது நியமிக்கப்பட்டிருக்கும் அடிமைமீது நம்பிக்கை வைக்க வேண்டுமல்லவா? இந்த அடிமை வகுப்பார் ஏன் நம்முடைய நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள் என்பதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் மிக முக்கியமான இரு காரணங்கள்: (1) இந்த அடிமையை யெகோவா நம்புகிறார். (2) இயேசுவும் இந்த அடிமையை நம்புகிறார். இப்போது, உண்மையும் விவேகமுமுள்ள இந்த அடிமைமீது யெகோவா தேவனும் இயேசு கிறிஸ்துவும் முழு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதற்கான அத்தாட்சியை நாம் ஆராயலாம்.
யெகோவா இந்த அடிமையை நம்புகிறார்
4. உண்மையும் விவேகமுமுள்ள அடிமை அளிக்கும் ஆன்மீக உணவை நாம் ஏன் நம்பிக்கையோடு ஏற்றுக்கொள்ளலாம்?
4 உண்மையும் விவேகமுமுள்ள அடிமை வகுப்பாரால் காலத்திற்கேற்ற, சத்தான ஆன்மீக உணவை எப்படி வழங்க முடிகிறதெனக் கவனியுங்கள். “நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்” என்று யெகோவா சொல்கிறார். அதோடு, “உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்” என்றும் கூறுகிறார். (சங். 32:8) ஆம், யெகோவாதான் அடிமை வகுப்பாருக்கு வழிநடத்துதல் கொடுக்கிறார். எனவே, வேதவசனங்களிலிருந்து அவர்கள் அளிக்கிற ஆழமான போதனையையும் விளக்கத்தையும் வழிநடத்துதலையும் முழு நம்பிக்கையோடு நாம் ஏற்றுக்கொள்ளலாம்.
5. அடிமை வகுப்பாருக்குக் கடவுள் தமது சக்தியைத் தந்து பலமளிக்கிறார் என எது காட்டுகிறது?
5 யெகோவா தம்முடைய சக்தியைத் தருவதன் மூலமும் அடிமை வகுப்பாரை ஆசீர்வதிக்கிறார். யெகோவாவின் சக்தியை நம் கண்ணால் காண முடியாதபோதிலும், அது யார்மீது செயல்படுகிறதோ அந்த நபர்மீது அது ஏற்படுத்தும் தாக்கத்தை நம்மால் காண முடியும். யெகோவா தேவனையும் அவருடைய குமாரனையும் ராஜ்யத்தையும் பற்றி உலகெங்கிலும் சாட்சி கொடுப்பதில் உண்மையும் விவேகமுமுள்ள அடிமை செய்திருக்கும் சாதனையைச் சிந்தித்துப் பாருங்கள். 230-க்கும் அதிகமான நாடுகளிலும் தீவுகளிலும் ராஜ்ய செய்தியை யெகோவாவின் மக்கள் சுறுசுறுப்பாக அறிவித்து வருகிறார்கள். இந்த அடிமைக்குக் கடவுள் தமது சக்தியைத் தந்து பலமளிக்கிறார் என்பதற்கு இது மறுக்கமுடியாத அத்தாட்சி! (அப்போஸ்தலர் 1:8-ஐ வாசியுங்கள்.) உலகமுழுவதிலும் இருக்கிற யெகோவாவின் மக்களுக்குக் காலத்திற்கேற்ற ஆன்மீக உணவைத் தயாரித்து வழங்க அடிமை வகுப்பார் முக்கியமான தீர்மானங்களை எடுத்தாக வேண்டும். அப்படி அவர்கள் தீர்மானங்கள் எடுக்கும்போதும்சரி அவற்றை அமல்படுத்தும்போதும்சரி, அன்பையும் சாந்தத்தையும் கடவுளுடைய சக்தியினால் பிறப்பிக்கப்படுகிற மற்ற குணங்களையும் காட்டுகிறார்கள்.—கலா. 5:22, 23.
6, 7. உண்மையுள்ள அடிமைமீது யெகோவா எந்தளவுக்கு நம்பிக்கை வைத்திருக்கிறார்?
6 உண்மையுள்ள இந்த அடிமை வகுப்பார்மீது யெகோவா எந்தளவுக்கு நம்பிக்கை வைத்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள அவர்களுக்கு அவர் அளித்திருக்கும் வாக்குறுதியைச் சற்று சிந்தித்துப் பாருங்கள். “எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம். அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ள வேண்டும்” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (1 கொ. 15:52, 53) கிறிஸ்துவைப் பின்பற்றி கடவுளுக்கு உண்மையுடன் சேவை செய்கிற அபிஷேகம் செய்யப்பட்டோர், அழிந்துபோகும் தன்மையுள்ள மானிட உடலில் மரித்து, என்றென்றும் வாழும் தேவதூதர்களைவிட மேலான நிலைக்கு உயிர்த்தெழுப்பப்படுகிறார்கள். ஆம், அவர்களுக்குச் சாகாவரம் கொடுக்கப்படுகிறது, அதாவது முடிவில்லாமையும் அழியாமையும் கொடுக்கப்படுகிறது. அதோடு, அழிந்துபோகாத உடல் அவர்களுக்கு அளிக்கப்படுகிறது, உயிர்வாழத் தேவையான எதையும் அவர்கள் சார்ந்திருக்க வேண்டியதில்லை. உயிர்த்தெழுப்பப்பட்ட இவர்கள் தங்களுடைய தலையில் பொற்கிரீடம் சூடிக்கொண்டு சிம்மாசனங்களில் அமர்ந்திருப்பதாக வெளிப்படுத்துதல் 4:4 விவரிக்கிறது. அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு ராஜ மகிமை காத்திருக்கிறது. ஆனால் அதைவிட மேலான காரியங்களும் இருக்கின்றன.
7 “ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம் பண்ணினாள் என்று சொல்லக் கேட்டேன். சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரம் தரித்துக்கொள்ளும்படி அவளுக்கு அளிக்கப்பட்டது; அந்த மெல்லிய வஸ்திரம் பரிசுத்தவான்களுடைய நீதிகளே” என்று வெளிப்படுத்துதல் 19:7, 8 கூறுகிறது. தமது மகனுக்கு மணவாட்டியாக இருப்பதற்கு அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களை யெகோவா தேர்ந்தெடுத்திருக்கிறார். அழியா உடல், சாவாமை, அரசதிகாரம் “ஆட்டுக்குட்டியானவருடன் கலியாணம்”—ஆஹா, இவையெல்லாம் எப்பேர்ப்பட்ட அற்புதமான பரிசுகள்! “ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் அவரைப் பின்பற்றுகிற” அபிஷேகம் செய்யப்பட்டவர்கள்மீது கடவுள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு இவையெல்லாம் மெய்சிலிர்க்க வைக்கும் அத்தாட்சிகள்.
இந்த அடிமையை இயேசு நம்புகிறார்
8. அபிஷேகம் செய்யப்பட்டவர்கள்மீது இயேசு நம்பிக்கை வைத்திருப்பதை எப்படிக் காட்டுகிறார்?
8 அபிஷேகம் செய்யப்பட்டவர்களை இயேசு முழுமையாக நம்புகிறார் என்பதற்கு என்ன அத்தாட்சி இருக்கிறது? தாம் சாவதற்கு முந்தின இரவன்று இயேசு தமது உண்மையுள்ள 11 அப்போஸ்தலர்களுக்கு ஒரு வாக்குறுதி கொடுத்தார். “எனக்கு நேரிட்ட சோதனைகளில் என்னோடேகூட நிலைத்திருந்தவர்கள் நீங்களே. ஆகையால், என் பிதா எனக்கு ஒரு ராஜ்யத்தை ஏற்படுத்தினதுபோல், நானும் உங்களுக்கு ஏற்படுத்துகிறேன். நீங்கள் என் ராஜ்யத்திலே என் பந்தியில் போஜனபானம் பண்ணி, இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாய்ச் சிங்காசனங்களின்மேல் உட்காருவீர்கள்” என்று அவர்களிடம் சொன்னார். (லூக். 22:28-30) அந்த 11 பேரிடம் இயேசு செய்த ஒப்பந்தம் அபிஷேகம் செய்யப்பட்ட 1,44,000 கிறிஸ்தவர்களுக்கும் பொருந்தும். (லூக். 12:32; வெளி. 5:9, 10; 14:1) இயேசுவுக்கு அவர்கள்மீது நம்பிக்கை இல்லையென்றால், ராஜ்யத்தில் தம்முடன் சேர்ந்து ஆட்சி செய்ய அவர்களுடன் ஒப்பந்தம் செய்திருப்பாரா?
9. கிறிஸ்துவின் ‘ஆஸ்திகளில்’ எவையெல்லாம் உட்பட்டுள்ளன?
9 அதோடு, உண்மையும் விவேகமுமுள்ள இந்த அடிமையை இயேசு கிறிஸ்து ‘தம் ஆஸ்திகள் எல்லாவற்றின்மேலும் விசாரணைக்காரனாக’ நியமித்திருக்கிறார், அதாவது ராஜ்யம் சம்பந்தப்பட்ட பூமிக்குரிய அனைத்து காரியங்களின் மீதும் விசாரணைக்காரனாக நியமித்திருக்கிறார். (மத். 24:47) யெகோவாவின் சாட்சிகளுடைய தலைமை அலுவலகம், பல்வேறு நாடுகளிலுள்ள கிளை அலுவலகங்கள், உலகமுழுவதிலும் இருக்கிற மாநாட்டு மன்றங்கள், ராஜ்ய மன்றங்கள் ஆகிய அனைத்தும் இந்த ஆஸ்திகளில் அடங்கும். ராஜ்ய பிரசங்கிப்பு வேலையும் சீஷராக்கும் வேலையும்கூட இவற்றில் அடங்கும். மதிப்புமிக்க ஆஸ்திகளை நிர்வகிப்பதற்கு தன் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இல்லாத ஒருவரை யாராவது நியமிப்பார்களா?
10. அபிஷேகம் செய்யப்பட்டவர்களுடன் இயேசு கிறிஸ்து இருக்கிறார் என்பதை எது காட்டுகிறது?
10 உயர்த்தெழுப்பப்பட்ட இயேசு பரலோகத்துக்குச் செல்வதற்குச் சற்று முன்பு, தமது உண்மையுள்ள சீஷர்களுக்குத் தோன்றி இந்த வாக்குறுதியை அளித்தார்: “இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்.” (மத். 28:20) இந்த வாக்குறுதியை இயேசு நிறைவேற்றினாரா? கடந்த 15 வருடங்களில், உலகெங்கிலும் உள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளின் எண்ணிக்கை சுமார் 70,000-லிருந்து 1,00,000-க்கும் அதிகமாய் உயர்ந்திருக்கிறது—40 சதவீதத்திற்கு மேலான அதிகரிப்பு! புதிய சீஷர்களின் எண்ணிக்கையைப் பற்றி என்ன சொல்லலாம்? கடந்த 15 ஆண்டுகளில் சுமார் 45 லட்சம் சீஷர்கள் ஞானஸ்நானம் பெற்றிருக்கிறார்கள். சராசரியாகப் பார்த்தால், நாளொன்றுக்கு 800 பேருக்கும் அதிகமானோர்! சபைக் கூட்டங்களில், அபிஷேகம் செய்யப்பட்ட ஊழியர்களை கிறிஸ்து வழிநடத்துகிறார், அவர்கள் செய்கிற சீஷராக்கும் வேலையை ஆதரித்து வருகிறார் என்பதற்கு இந்த மகத்தான அதிகரிப்பு தெளிவான அத்தாட்சி அளிக்கிறது.
இந்த அடிமை வகுப்பார் உண்மையுள்ளவர்கள், விவேகமுள்ளவர்கள்
11, 12. இந்த அடிமை வகுப்பார் எப்படி உண்மையுடனும் விவேகத்துடனும் நடந்திருக்கிறார்கள்?
11 யெகோவா தேவனும் இயேசு கிறிஸ்துவும் உண்மையும் விவேகமுமுள்ள அடிமைமீது முழு நம்பிக்கை வைத்திருப்பதால், நாமும் அவர்கள்மீது முழு நம்பிக்கை வைக்க வேண்டுமல்லவா? இந்த அடிமை வகுப்பார் தங்களுக்கு நியமிக்கப்பட்ட வேலையை உண்மையுடன் செய்து வந்திருக்கிறார்கள். உதாரணமாக, காவற்கோபுரம் பத்திரிகை சுமார் 130 வருடங்களாகப் பிரசுரிக்கப்பட்டு வருகிறது. யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களும், வட்டார மாநாடுகளும் மாவட்ட மாநாடுகளும் தொடர்ந்து நம்மை ஆன்மீக ரீதியில் பலப்படுத்தி வருகின்றன.
12 உண்மையுள்ள அடிமை வகுப்பார் விவேகத்துடனும் செயல்படுகிறார்கள்; கடவுள் தெளிவாக வழிநடத்துதல் கொடுப்பதற்கு முன்பே அவர்கள் முந்திக்கொண்டு செயல்படுவதுமில்லை, ஒரு விஷயத்தின் பேரில் கடவுளுடைய வழிநடத்துதல் தெளிவாக இருக்கும்போது அதை செய்யத் தயங்குவதுமில்லை. உதாரணமாக, பொய் மதத் தலைவர்கள் உலக மக்களுடைய சுயநலமான போக்கையும் தேவபக்தியற்ற நடத்தையையும் மௌனமாக ஆமோதிக்கிறார்கள் அல்லது இவையெல்லாம் சகஜம்தான் என்பதுபோல் கண்டும்காணாமலும் இருக்கிறார்கள்; அடிமை வகுப்பாரோ சாத்தானுடைய உலகத்தின் படுகுழிகளைக் குறித்து எச்சரிக்கை விடுக்கிறார்கள். யெகோவா தேவனும் இயேசு கிறிஸ்துவும் அடிமை வகுப்பாரை ஆசீர்வதிப்பதால் ஞானமான, காலத்திற்கேற்ற எச்சரிக்கைகளை இவர்களால் கொடுக்க முடிகிறது. ஆகவே, இந்த அடிமை வகுப்பார் நம்முடைய முழு நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள். அப்படியானால், உண்மையும் விவேகமுமுள்ள அடிமை வகுப்பார்மீது நாம் நம்பிக்கை வைத்திருக்கிறோம் என்பதை எப்படிக் காட்டலாம்?
ஆட்டுக்குட்டியானவரைப் பின்பற்றுகிற அபிஷேகம் செய்யப்பட்டோருடன் ‘போங்கள்’
13. சகரியா தீர்க்கதரிசனத்தின்படி, உண்மையும் விவேகமுமுள்ள அடிமைமீது நாம் நம்பிக்கை வைத்திருக்கிறோம் என்பதை எப்படிக் காட்டலாம்?
13 “பத்து மனுஷர்” ஒரு யூதனை அணுகி, “உங்களோடேகூடப் போவோம்” என்று சொல்வதாக சகரியா புத்தகம் கூறுகிறது. (சகரியா 8:23-ஐ வாசியுங்கள்.) ‘ஒரு யூதனைப்’ பார்த்து, “உங்களோடேகூட” என்று அந்த மனுஷர் சொல்வதால் அந்த யூதன் ஒரு தொகுதியினரையே குறிக்க வேண்டும். நம்முடைய காலத்தில், அந்த யூதன் அபிஷேகம் செய்யப்பட்ட மீதியானோரை, அதாவது ‘தேவனுடைய இஸ்ரவேலரின்’ பாகமாய் இருப்போரைக் குறிக்கிறான். (கலா. 6:16) “பலவித பாஷைக்காரராகிய புறஜாதியாரில் பத்து மனுஷர்” வேறே ஆடுகளைச் சேர்ந்த திரள் கூட்டத்தினரைக் குறிக்கின்றனர். இயேசு எங்கே போனாலும் அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் அவரையே பின்பற்றுவதுபோல், திரள் கூட்டத்தினரும் உண்மையும் விவேகமுமுள்ள அடிமையோடுகூட ‘போகின்றனர்.’ ‘பரம அழைப்புக்குப் பங்குள்ளவர்களின்’ தோழர்களெனத் தங்களைச் சொல்லிக்கொள்ள திரள் கூட்டத்தினர் ஒருபோதும் வெட்கப்படக்கூடாது. (எபி. 3:1) அபிஷேகம் செய்யப்பட்டவர்களைத் தம்முடைய ‘சகோதரர்கள்’ என்று அழைப்பதற்கு இயேசு வெட்கப்படுவதில்லை.—எபி. 2:11.
14. கிறிஸ்துவின் சகோதரர்களுக்கு எப்படி உண்மையுடன் ஆதரவு காட்டலாம்?
14 அவருடைய சகோதரர்களுக்கு நாம் உண்மையுடன் ஆதரவு காட்டும்போது அதை தமக்கே காட்டுவதாக இயேசு கிறிஸ்து கூறினார். (மத்தேயு 25:40-ஐ வாசியுங்கள்.) அப்படியானால், பூமிக்குரிய நம்பிக்கையுடையவர்கள் கிறிஸ்துவின் அபிஷேகம் செய்யப்பட்ட சகோதரர்களுக்கு எப்படி ஆதரவு காட்டலாம்? முக்கியமாக, ராஜ்ய பிரசங்க வேலையைச் செய்வதில் அவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் ஆதரவு காட்டலாம். (மத். 24:14; யோவா. 14:12) கடந்த ஆண்டுகளில் அபிஷேகம் செய்யப்பட்டவர்களுடைய எண்ணிக்கை குறைந்து வருகிறபோதிலும், வேறே ஆடுகளுடைய எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பூமிக்குரிய நம்பிக்கையுடையவர்கள் சாட்சி கொடுக்கும் வேலையில் பங்குகொள்ளும்போது, முடியுமானால் முழுநேர ஊழியர்களாகச் சேவை செய்யும்போது, சீஷராக்கும் வேலையைச் செய்துமுடிப்பதில் அபிஷேகம் செய்யப்பட்டவர்களுக்கு உதவுகிறார்கள். (மத். 28:19, 20) அதேசமயம், பல்வேறு வழிகளில் நன்கொடை வழங்குவதன் மூலமும் இந்த வேலையை ஆதரிக்கலாம் என்பதையும் மறந்துவிடக்கூடாது.
15. அடிமை தரும் காலத்திற்கேற்ற ஆன்மீக உணவைக் குறித்து நாம் ஒவ்வொருவரும் எப்படி உணர வேண்டும், அமைப்பு சம்பந்தமாக அடிமை எடுக்கும் தீர்மானங்களுக்கு நாம் எப்படிப் பிரதிபலிக்க வேண்டும்?
15 பைபிள் பிரசுரங்கள் வாயிலாகவும் கிறிஸ்தவக் கூட்டங்கள் வாயிலாகவும் உண்மையுள்ள அடிமை வழங்கும் காலத்திற்கேற்ற ஆன்மீக உணவைக் குறித்து நாம் ஒவ்வொருவரும் எப்படி உணருகிறோம்? அவற்றை நாம் நன்றியுடன் உட்கொள்கிறோமா? கற்றுக்கொண்டவற்றை உடனடியாக வாழ்க்கையில் கடைப்பிடிக்கிறோமா? அமைப்பு சம்பந்தமாக அடிமை எடுக்கும் தீர்மானங்களுக்கு நாம் எப்படிப் பிரதிபலிக்கிறோம்? கொடுக்கப்படும் வழிநடத்துதலுக்கு மனப்பூர்வமாய்க் கீழ்ப்படியும்போது யெகோவாவின் ஏற்பாடுகளில் நமக்கு விசுவாசம் இருப்பதைக் காட்டுகிறோம்.—யாக். 3:17.
16. கிறிஸ்தவர்கள் அனைவரும் ஏன் கிறிஸ்துவின் சகோதரர்களுக்குச் செவிகொடுக்க வேண்டும்?
16 “என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது” என்று இயேசு சொன்னார். (யோவா. 10:27) இது அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் விஷயத்தில் உண்மையாக இருக்கிறது. சரி, ‘அவர்களோடேகூட’ போகிறவர்களைப் பற்றியென்ன? அவர்கள் இயேசுவுக்குக் கண்டிப்பாகச் செவிகொடுக்க வேண்டும். அவருடைய சகோதரர்களுக்கும் செவிகொடுக்க வேண்டும். சொல்லப்போனால், கடவுளுடைய மக்களின் ஆன்மீக நலனைக் கவனித்துக்கொள்ளும் முக்கிய பொறுப்பு அவர்களிடம்தான் கொடுக்கப்பட்டுள்ளது. அப்படியானால், கிறிஸ்துவின் சகோதரர்களுடைய சத்தத்திற்குச் செவிகொடுப்பதில் என்ன உட்பட்டுள்ளது?
17. அடிமை வகுப்பாருக்குச் செவிகொடுப்பது எதைக் குறிக்கிறது?
17 இன்றுள்ள ஆளும் குழு உண்மையும் விவேகமுமுள்ள அடிமையைப் பிரதிநிதித்துவம் செய்கிறது. இந்த ஆளும் குழுவே உலகெங்கும் நடைபெறுகிற ராஜ்ய பிரசங்க வேலையை வழிநடத்தி, ஒழுங்கமைக்கிறது. ஆளும் குழுவைச் சேர்ந்த அங்கத்தினர்கள் அனுபவமிக்கவர்கள், அபிஷேகம் செய்யப்பட்ட மூப்பர்கள். குறிப்பாக இவர்களே நம்மை ‘தலைமைதாங்கி நடத்துகிறவர்கள்.’ (எபி. 13:7, NW) அபிஷேகம் செய்யப்பட்ட இந்தக் கண்காணிகள் உலகெங்கும் 1,00,000-க்கும் அதிகமான சபைகளில் உள்ள கிட்டத்தட்ட 70,00,000 பிரஸ்தாபிகளைக் கவனித்துக்கொள்ள வேண்டியிருப்பதால், ‘நம் எஜமானருடைய வேலையில் அதிகமதிகமாய் ஈடுபடுகிறார்கள்.’ (1 கொ. 15:58, NW) அடிமை வகுப்பாருக்குச் செவிகொடுப்பது என்பது அதன் ஆளும் குழுவுக்கு நம்முடைய முழு ஒத்துழைப்பையும் தருவதைக் குறிக்கிறது.
அடிமை வகுப்பாருக்குச் செவிகொடுக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
18, 19. (அ) உண்மையும் விவேகமுமுள்ள அடிமை வகுப்பாருக்குச் செவிகொடுப்பவர்கள் எப்படி ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்? (ஆ) நம்முடைய தீர்மானம் என்ன?
18 உண்மையும் விவேகமுமுள்ள அடிமை வகுப்பார் நியமிக்கப்பட்டது முதற்கொண்டு, அவர்கள் ‘அநேகரை நீதிக்குட்படுத்தியிருக்கிறார்கள்.’ (தானி. 12:3) தற்போதைய பொல்லாத உலகத்தைத் தப்பிப்பிழைக்கும் நம்பிக்கையுடைய மக்களும் இவர்களில் அடங்குவர். கடவுளுடைய பார்வையில் நீதியுள்ளவர்களாக இருப்பது எப்பேர்ப்பட்ட ஆசீர்வாதம்!
19 வருங்காலத்தில், ‘புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப் போல ஆயத்தமாக்கப்பட்டிருந்த புதிய எருசலேமாகிய [1,44,000 பேரடங்கிய] பரிசுத்த நகரம் தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கி வரும்போது,’ அடிமை வகுப்பாருக்குச் செவிகொடுப்பவர்களுக்கு என்ன ஆசீர்வாதம் கிடைக்கும்? “தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து, . . . அவர்களுடைய கண்ணீர் யாவையும் . . . துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின” என்று பைபிள் சொல்கிறது. (வெளி. 21:2-4) ஆகவே, கிறிஸ்துவுக்கும் அவருடைய நம்பிக்கைக்குரிய அபிஷேகம் செய்யப்பட்ட சகோதரர்களுக்கும் செவிகொடுக்க நாம் தீர்மானமாய் இருப்போமாக.
என்ன கற்றுக்கொண்டீர்கள்?
• உண்மையும் விவேகமுமுள்ள அடிமையை யெகோவா நம்புகிறார் என்பதற்கு என்ன அத்தாட்சி இருக்கிறது?
• இந்த அடிமையை இயேசு கிறிஸ்து முழுமையாக நம்புகிறார் என்று எது காட்டுகிறது?
• இந்த உண்மையுள்ள விசாரணைக்காரனை நாம் ஏன் நம்ப வேண்டும்?
• இந்த அடிமையை நம்புகிறோம் என்று நாம் எப்படிக் காட்டலாம்?
[பக்கம் 25-ன் படம்]
யெகோவா தமது மகனுக்கு வருங்கால மணவாட்டியாக யாரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்று உங்களுக்குத் தெரியுமா?
[பக்கம் 26-ன் படங்கள்]
இயேசு கிறிஸ்து தம்முடைய ‘ஆஸ்திகளை’ உண்மையும் விவேகமுமுள்ள அடிமையிடம் ஒப்படைத்திருக்கிறார்
[பக்கம் 27-ன் படம்]
சாட்சி கொடுக்கும் வேலையில் நாம் பங்குகொள்ளும்போது, அபிஷேகம் செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவு காட்டுகிறோம்