‘விழிப்புடனிருங்கள்’—நியாயத்தீர்ப்பு வேளை வந்துவிட்டது!
இந்தப் படிப்புக் கட்டுரையிலுள்ள தகவல்கள் விழிப்புடன் இருங்கள்! என்ற சிற்றேட்டின் அடிப்படையிலானவை. இச்சிற்றேடு 2004/05-ல் நடைபெற்ற மாவட்ட மாநாடுகளில் உலகெங்கிலும் வெளியிடப்பட்டது.
“உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள்.”—மத்தேயு 24:42.
நீங்கள் வசிக்கும் பகுதியில் திருடன் ஒருவன் சுற்றித்திரிவதாக உங்களுக்குத் தெரிந்தால் என்ன செய்வீர்கள்? உங்கள் வீட்டில் உள்ளவர்களையும் விலையுயர்ந்த பொருட்களையும் பாதுகாப்பதற்கு எப்போதும் உஷாராக, விழிப்பாக இருப்பீர்கள். ஏனென்றால் ஒரு திருடன் எப்போது வருவானென்று கடிதம் போட்டுக்கொண்டு வருவதில்லை. அரவமில்லாமல் திடீரென்றுதான் வருவான்.
2 திருடன் செயல்படும் விதங்களை இயேசு பல தடவை உதாரணமாக பயன்படுத்தினார். (லூக்கா 10:30; யோவான் 10:10) கடைசி காலத்திலும் தாம் நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுவதற்கு முன்பும் நிகழப்போகும் சம்பவங்களைப் பற்றி இயேசு பின்வரும் எச்சரிப்பைக் கொடுத்தார்: “உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள். திருடன் இன்ன ஜாமத்தில் வருவானென்று வீட்டெஜமான் அறிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிடவொட்டானென்று அறிவீர்கள்.” (மத்தேயு 24:42, 43) ஆகவே, இயேசு தமது வருகையை திருடனுடைய வருகைக்கு ஒப்பிட்டுப் பேசினார்—அதாவது எதிர்பாராத விதமாக இருக்குமென சொன்னார்.
3 இந்த உதாரணம் பொருத்தமாக இருந்தது, ஏனென்றால் இயேசு எப்பொழுது வருவார் என்ற தேதி துல்லியமாக சொல்லப்படவில்லை. இதற்கு முன்பு, இதே தீர்க்கதரிசனத்தில் இயேசு இவ்வாறு கூறினார்: “அந்த நாளையும் அந்த வேளையையும் பற்றித் தந்தை ஒருவருக்குத் தவிர வேறு எவருக்கும் தெரியாது. விண்ணகத் தூதருக்கோ மகனுக்கோகூடத் தெரியாது.” (மத்தேயு 24:36, பொது மொழிபெயர்ப்பு) ஆகவே, தமக்கு செவிகொடுத்துக் கேட்டுக்கொண்டிருந்தவர்களிடம், “ஆயத்தமாயிருங்கள்” என்று இயேசு அறிவுறுத்தினார். (மத்தேயு 24:44) யெகோவாவின் நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுபவரான இயேசு எப்பொழுது வந்தாலும்சரி, அவருடைய எச்சரிக்கைக்குச் செவிசாய்ப்பவர்கள் ஆயத்தமாக இருப்பார்கள், தகுந்த முறையில் நடந்துகொள்வார்கள்.
4 இப்பொழுது, முக்கியமான சில கேள்விகள் எழும்புகின்றன: அந்த உவமையிலுள்ள எச்சரிக்கை உலகத்தாருக்கு மட்டுமா, அல்லது மெய் கிறிஸ்தவர்களும் ‘விழிப்புடனிருக்க’ வேண்டுமா? ‘விழிப்புடன் இருப்பது’ ஏன் அவசரம், இதில் என்ன உட்பட்டுள்ளது?
யாருக்கு எச்சரிக்கை?
5 உலகத்தாரைப் பொறுத்தவரை, கர்த்தருடைய வருகை திருடன் வருகிற விதமாய் இருக்கும் என்பது உண்மைதான்; ஏனென்றால் வரப்போகும் அழிவைப் பற்றிய எச்சரிக்கைக்கு அவர்கள் செவிசாய்ப்பதில்லை. (2 பேதுரு 3:3-7) ஆனால், மெய் கிறிஸ்தவர்களைப் பற்றியென்ன? சக விசுவாசிகளுக்கு அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: ‘இரவிலே திருடன் வருகிற விதமாய் யெகோவாவுடைய நாள் வருமென்று நீங்களே நன்றாய் அறிந்திருக்கிறீர்கள்.’ (1 தெசலோனிக்கேயர் 5:2) ‘யெகோவாவின் நாள்’ வருகிறது என்பதில் நமக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், நாம் விழிப்புடன் இருப்பதன் அவசியத்தை இது குறைத்துவிடுகிறதா? ‘நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்’ என்று இயேசு சொன்னது அவருடைய சீஷர்களிடம் என்பதை கவனியுங்கள். (மத்தேயு 24:44) இதற்கு முன்பு, ராஜ்யத்தை தொடர்ந்து தேடும்படி இயேசு தமது சீஷர்களை உந்துவித்தபோது, ‘நீங்கள் நினையாத நேரத்தில் மனுஷகுமாரன் வருகிறபடியால் ஆயத்தமாயிருங்கள்’ என்று எச்சரித்தார். (லூக்கா 12:31, 40) ஆகவே, தம்மைப் பின்பற்றுகிறவர்களை மனதில் வைத்தே ‘விழிப்புடனிருங்கள்’ என்று இயேசு எச்சரித்தார் என்பது தெளிவாக தெரிகிறது, அல்லவா?
6 நாம் ஏன் ‘விழிப்புடனும்’ ‘ஆயத்தமாயும்’ இருக்க வேண்டும்? இயேசு இவ்வாறு விளக்கினார்: “இரண்டு பேர் வயலில் இருப்பார்கள்; ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், ஒருவன் கைவிடப்படுவான். இரண்டு ஸ்திரீகள் ஏந்திரம் அரைத்துக் கொண்டிருப்பார்கள்; ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், ஒருத்தி கைவிடப்படுவாள்.” (மத்தேயு 24:40, 41) ஆயத்தமாக இருப்பவர்கள் தேவபக்தியற்ற இந்த உலகம் அழிக்கப்படுகையில் ‘ஏற்றுக்கொள்ளப்படுவார்கள்,’ அதாவது காப்பாற்றப்படுவார்கள். மற்றவர்களோ ‘கைவிடப்படுவார்கள்,’ அதாவது அழிக்கப்படுவார்கள். ஏனென்றால் அவர்கள் தங்களுடைய சொந்த காரியங்களையே சுயநலத்துடன் நாடிக்கொண்டு இருந்திருக்கிறார்கள். இவர்கள் ஒரு காலத்தில் சத்தியத்தைக் கற்றவர்களாக, ஆனால் தொடர்ந்து விழிப்புடன் இல்லாதவர்களாக இருக்கலாம்.
7 இந்த ஒழுங்குமுறைக்கு எந்தத் தேதியில் முடிவு வருமென நமக்குத் திட்டவட்டமாக தெரியாதிருப்பது, நாம் நல்ல நோக்கத்தோடுதான் கடவுளுக்கு சேவை செய்கிறோம் என்பதை மெய்ப்பிக்க நமக்கு வாய்ப்பளிக்கிறது. எப்படி? முடிவு வருவதற்கு நீண்ட காலமாகும் என்பது போல் தோன்றலாம். இப்படி நினைக்கிற சிலர் யெகோவாவின் சேவையில் தங்களுடைய ஆர்வம் தணிந்துபோக அனுமதித்திருக்கிறார்கள். என்றாலும், யெகோவாவுக்கு நம்மை ஒப்புக்கொடுக்கையில், எந்த நிபந்தனையுமின்றி அவருக்கு சேவை செய்ய மனப்பூர்வமாக நம்மை அளித்திருக்கிறோம். கடைசி நிமிடத்தில் ஆர்வத்துடன் யெகோவாவுக்குச் சேவை செய்து அவருடைய மனதில் இடம்பிடிக்க முடியாது என்பது அவரை அறிந்தவர்களுக்குத் தெரியும். ஏனென்றால் அவர் இருதயத்தைப் பார்க்கிறார்.—1 சாமுவேல் 16:7.
8 நாம் யெகோவாவை உண்மையிலேயே நேசிப்பதால் அவருடைய சித்தத்தைச் செய்வதில் மிகுந்த சந்தோஷத்தைக் காண்கிறோம். (சங்கீதம் 40:8; மத்தேயு 26:39) அதோடு, யெகோவாவுக்கு என்றென்றும் சேவை செய்யவும் விரும்புகிறோம். நாம் எதிர்பார்த்ததைவிட சற்று அதிக காலம் காத்திருக்க வேண்டியிருப்பதால் அந்த எதிர்பார்ப்பு மதிப்புக் குறைந்த ஒன்றாக ஆகிவிடாது. எல்லாவற்றிற்கும் மேலாக, நாம் தொடர்ந்து விழிப்புடன் இருக்கிறோம், ஏனென்றால் யெகோவா தமது நோக்கத்தை நிறைவேற்றும் அந்த நாள் தனிச்சிறப்புமிக்கதாக இருக்கும். கடவுளைப் பிரியப்படுத்த வேண்டுமென்ற ஊக்கமான ஆசை, அவருடைய வார்த்தை தரும் அறிவுரையின்படி நடப்பதற்கும் வாழ்க்கையில் அவருடைய ராஜ்யத்திற்கு முதலிடம் கொடுப்பதற்கும் நம்மை உந்துவிக்கிறது. (மத்தேயு 6:33; 1 யோவான் 5:3) விழிப்புடன் இருப்பது நாம் எடுக்கும் தீர்மானங்களிலும் நம் அன்றாட வாழ்க்கை முறையிலும் எப்படி செல்வாக்கு செலுத்த வேண்டுமென இப்பொழுது சிந்திக்கலாம்.
உங்கள் வாழ்க்கை எங்கே போய்க்கொண்டிருக்கிறது?
9 பயங்கரமான பிரச்சினைகளும் அதிர்ச்சியூட்டும் சம்பவங்களும் அன்றாட செய்தியாக இருப்பதை இன்று அநேகர் உணருகிறார்கள். அவர்களுடைய சொந்த வாழ்க்கை போக்கே அவர்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம். என்றாலும், உலக நிலைமைகளின் உண்மையான அர்த்தத்தை அவர்கள் அறிந்திருக்கிறார்களா? இந்த ‘உலகத்தின் முடிவில்’ நாம் வாழ்கிறோம் என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்களா? (மத்தேயு 24:3) இப்பொழுது தன்னலமும் வன்முறையும் தேவபக்தியில்லாமையும் சர்வசாதாரணமாகக் காணப்படுவது ‘கடைசி நாட்களை’ அடையாளப்படுத்துகிறது என்பதை அவர்கள் புரிந்திருக்கிறார்களா? (2 தீமோத்தேயு 3:1-5) இவை எல்லாவற்றின் முக்கியத்துவத்தை அவர்கள் உணர்ந்து விழித்தெழுவதும் தங்கள் வாழ்க்கை எங்கே போய்க்கொண்டிருக்கிறது என்பதை சிந்தித்துப் பார்ப்பதும் மிகமிக அவசரம்.
10 நம்மைப் பற்றியென்ன? நம் வேலை, நம் உடல்நலம், நம் குடும்பம், நம் வழிபாடு சம்பந்தமாக தினம்தினம் பல தீர்மானங்களை எடுக்க வேண்டிய சூழ்நிலையில் நாம் இருக்கிறோம். அதன் சம்பந்தமாக பைபிள் என்ன சொல்கிறது என்பதை நாம் அறிந்திருக்கிறோம், அதைப் பின்பற்றவும் முயலுகிறோம். ஆகையால், நம்மையே இப்படிக் கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘வாழ்க்கை கவலைகள் என்னை திசைதிருப்ப அனுமதிக்கிறேனா? உலக தத்துவங்களும் சிந்தனைகளும் என்மீது செல்வாக்கு செலுத்த அனுமதிக்கிறேனா? (லூக்கா 21:34-36; கொலோசெயர் 2:8) நம் சுயபுத்தியின் மேல் சாயாமல், முழு இருதயத்தோடும் யெகோவாவில் நம்பிக்கையாக இருப்பதை தொடர்ந்து செயலில் காட்டுவது அவசியம். (நீதிமொழிகள் 3:5) அப்பொழுதுதான், ‘மெய்யான வாழ்க்கையை,’ அதாவது கடவுளுடைய புதிய உலகில் நித்திய ஜீவனை ‘உறுதியாய் பற்றிக்கொள்வோம்.’—1 தீமோத்தேயு 6:12, 19, NW.
11 எச்சரிப்பூட்டும் அநேக உதாரணங்கள் பைபிளில் உள்ளன, நாம் விழிப்புடனிருக்க அவை உதவும். நோவாவின் நாளில் என்ன நடந்தது என்பதை சிந்தித்துப் பாருங்கள். வெகு காலத்திற்கு முன்பே எச்சரிக்கை கொடுப்பதற்கு கடவுள் ஏற்பாடு செய்தார். ஆனால் நோவாவையும் அவருடைய வீட்டாரையும் தவிர யாருமே எச்சரிக்கைக்குக் கவனம் செலுத்தவில்லை. (2 பேதுரு 2:5) இதைப் பற்றி இயேசு இவ்வாறு கூறினார்: “நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும். எப்படியெனில், ஜலப்பிரளயத்துக்கு முன்னான காலத்திலே நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள் வரைக்கும், ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண் கொண்டும் பெண் கொடுத்தும், ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டு போகுமட்டும் உணராதிருந்தார்கள்; அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும்.” (மத்தேயு 24:37-39) இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? வாழ்க்கையில் ஆன்மீக காரியங்களுக்கு முதலிடம் கொடுக்கும்படி கடவுள் நம்மை அறிவுறுத்துகிறார்; நம்மில் யாரேனும் அப்படிப்பட்ட காரியங்களுக்கு நேரமே இல்லாத அளவுக்கு அன்றாட அலுவல்களில் மூழ்கியிருந்தால், நம்முடைய சூழ்நிலையைக் குறித்து கவனமாக சிந்தித்துப் பார்ப்பது அவசியம்.—ரோமர் 14:17.
12 லோத்தின் நாட்களில் நடந்ததையும் சிந்தித்துப் பாருங்கள். லோத்தும் அவருடைய குடும்பத்தாரும் வசித்து வந்த சோதோம் நகரம் செல்வச் செழிப்பான நகரம். ஆனால் அங்கு ஒழுக்கக்கேடு தலைவிரித்தாடியது. அந்த இடத்தை அழிக்க யெகோவா தமது தூதர்களை அனுப்பினார். திரும்பிப் பார்க்காமல் சோதோமைவிட்டு ஓடிப் போகும்படி லோத்தையும் அவரது குடும்பத்தாரையும் தேவதூதர்கள் அவசரப்படுத்தினார்கள். அதனால் அவர்கள் அந்த நகரத்தைவிட்டு வெளியேறினார்கள். ஆனால் லோத்தின் மனைவியுடைய எண்ணமெல்லாம் சோதோம் நகரத்திலிருந்த தன் வீட்டின் மீதே இருந்தது. கீழ்ப்படியாமல் அவள் திரும்பிப் பார்த்தாள், அதனால் தன் ஜீவனையே இழந்தாள். (ஆதியாகமம் 19:15-26) நாம் வாழும் காலத்தைப் பற்றி இயேசு இவ்வாறு எச்சரித்தார்: “லோத்தின் மனைவியை நினைத்துக் கொள்ளுங்கள்.” நாம் அந்த எச்சரிக்கைக்குக் கீழ்ப்படிந்து நடக்கிறோமா?—லூக்கா 17:32.
13 கடவுள் கொடுத்த எச்சரிக்கைகளுக்குக் கீழ்ப்படிந்தவர்கள் காப்பாற்றப்பட்டார்கள். நோவா மற்றும் அவருடைய குடும்பத்தார் விஷயத்திலும், லோத்து மற்றும் அவருடைய மகள்கள் விஷயத்திலும் இதுவே நடந்தது. (2 பேதுரு 2:9) இந்த உதாரணங்களில் உள்ள எச்சரிக்கையை தியானிக்கையில், நீதியை நேசிப்போருக்கு கொடுக்கப்படும் பாதுகாப்பின் செய்தியாலும் நாம் நம்பிக்கை அளிக்கப்படுகிறோம். ‘நீதி வாசமாயிருக்கும் புதிய வானத்தையும் புதிய பூமியையும்’ பற்றிய கடவுளுடைய வாக்குறுதி நிச்சயமாக நிறைவேறும் என்ற நம்பிக்கையால் அது நம் இருதயத்தை நிரப்புகிறது.—2 பேதுரு 3:13.
“நியாயத்தீர்ப்புக் கொடுக்கும் வேளை வந்தது”!
14 நாம் விழிப்புடன் இருக்கும்போது எதை எதிர்பார்க்கலாம்? கடவுளுடைய நோக்கம் சம்பந்தமாக படிப்படியாக நிகழும் சம்பவங்களை வெளிப்படுத்துதல் புத்தகம் குறிப்பிடுகிறது. நாம் ஆயத்தமாய் இருக்கிறோமென நிரூபிக்க வேண்டுமாகில், அது சொல்கிறபடி செயல்படுவது இன்றியமையாதது. “கர்த்தருடைய நாளில்,” அதாவது 1914-ல் பரலோகத்தில் கிறிஸ்து சிங்காசனத்தில் அமர்த்தப்பட்டது முதற்கொண்டு நிகழ்கிற சம்பவங்களை இந்தத் தீர்க்கதரிசனம் தெள்ளத் தெளிவாக படம்பிடித்துக் காட்டுகிறது. (வெளிப்படுத்துதல் 1:10) ‘நித்திய சுவிசேஷத்தையுடைய’ ஒரு தேவதூதனிடம் வெளிப்படுத்துதல் நம் கவனத்தை ஈர்க்கிறது. “தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்புக் கொடுக்கும் வேளை வந்தது” என பலத்த சத்தமாக அவர் அறிவிக்கிறார். (வெளிப்படுத்துதல் 14:6, 7) நியாயத்தீர்ப்புக் கொடுக்கும் அந்த “வேளை” ஒரு குறுகிய காலப்பகுதி; அந்தத் தீர்க்கதரிசனத்தில் விவரிக்கப்பட்டுள்ள நியாயத்தீர்ப்புகளை அறிவிப்பதையும் அவற்றை நிறைவேற்றுவதையும் இது உட்படுத்துகிறது. நாம் இப்பொழுது அந்தக் காலப்பகுதியில்தான் வாழ்ந்து வருகிறோம்.
15 இப்பொழுது, அந்த நியாயத்தீர்ப்பு வேளை முடிவடைவதற்கு முன்பு, நாம் இவ்வாறு அறிவுறுத்தப்படுகிறோம்: “தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்.” இதில் என்ன உட்பட்டுள்ளது? சரியான தேவபயம் தீமையை விட்டுவிலகுவதற்கு நம்மை உந்துவிக்க வேண்டும். (நீதிமொழிகள் 8:13) நாம் கடவுளை கனப்படுத்தினால், ஆழ்ந்த மரியாதையுடன் அவருக்கு செவிசாய்ப்போம். அவருடைய வார்த்தையாகிய பைபிளை தவறாமல் படிப்பதற்கு நேரமே இல்லாத அளவுக்கு வேறு காரியங்களில் மூழ்கிவிட மாட்டோம். கிறிஸ்தவ கூட்டங்களுக்குப் போகும்படி அவர் கொடுத்த புத்திமதியை நாம் லேசாக எடுத்துக்கொள்ள மாட்டோம். (எபிரெயர் 10:24, 25) கடவுளுடைய மேசியானிய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்கும் சிலாக்கியத்தை நாம் பொக்கிஷமாகப் போற்றி, அதை வைராக்கியத்தோடு அறிவிப்போம். எப்பொழுதும் யெகோவாமீது முழு இருதயத்துடன் நம்பிக்கை வைப்போம். (சங்கீதம் 62:8) யெகோவாவை சர்வலோக பேரரசராக ஏற்றிருப்பதால், நம் வாழ்க்கையில் அவருடைய பேரரசாட்சிக்கு மனப்பூர்வமாக கீழ்ப்படிந்து அவரை கனப்படுத்துகிறோம். நீங்கள் உண்மையிலேயே கடவுளுக்குப் பயந்து, இத்தகைய வழிகளில் அவருக்கு மகிமை சேர்க்கிறீர்களா?
16 நியாயத்தீர்ப்பு வேளையில் நடக்கும் தனிச்சிறப்புமிக்க அநேக சம்பவங்களைப் பற்றி வெளிப்படுத்துதல் 14-ஆம் அதிகாரம் தொடர்ந்து விவரிக்கிறது. முதலாவதாக, மகா பாபிலோனைப் பற்றி, அதாவது பொய் மத உலகப் பேரரசைப் பற்றி, குறிப்பிடப்பட்டுள்ளது: “வேறொரு தூதன் பின்சென்று: பாபிலோன் மகா நகரம் விழுந்தது! விழுந்தது!” என்று சொன்னான். (வெளிப்படுத்துதல் 14:8) ஆம், கடவுளுடைய பார்வையில், மகா பாபிலோன் ஏற்கெனவே வீழ்ந்துவிட்டது. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மக்கள்மீதும் தேசங்கள்மீதும் செல்வாக்கு செலுத்திவந்த பாபிலோனிய கோட்பாடுகளிலிருந்தும் பழக்கவழக்கங்களிலிருந்தும் யெகோவாவின் அபிஷேகம்பண்ணப்பட்ட ஊழியர்கள் 1919-ல் விடுவிக்கப்பட்டார்கள். (வெளிப்படுத்துதல் 17:1, 15) அதுமுதல் மெய் வணக்கத்தை முன்னேற்றுவிப்பதற்கு அவர்கள் தங்களை அர்ப்பணிக்க முடிந்திருக்கிறது. அப்போதிருந்து கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தி உலகெங்கும் பிரசங்கிக்கப்பட்டு வருகிறது.—மத்தேயு 24:14.
17 ஆனால் மகா பாபிலோனுக்கு எதிரான கடவுளுடைய நியாயத்தீர்ப்பு அத்துடன் முடிந்துவிடவில்லை. இறுதியான அழிவு சீக்கிரத்தில் வரப்போகிறது. (வெளிப்படுத்துதல் 18:21) நல்ல காரணத்தோடுதான் உலகெங்கும் உள்ள மக்களை பைபிள் இவ்வாறு அறிவுறுத்துகிறது: ‘நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமல் இருக்கும்படி . . . அவளைவிட்டு [அதாவது, மகா பாபிலோனைவிட்டு] வெளியே வாருங்கள்.’ (வெளிப்படுத்துதல் 18:4, 5) மகா பாபிலோனிலிருந்து எப்படி நாம் வெளியே வருகிறோம்? பொய் மதத்தோடுள்ள எல்லாத் தொடர்புகளையும் வெறுமனே துண்டித்துக்கொள்வதைக் காட்டிலும் நிறைய விஷயங்கள் இதில் உட்பட்டுள்ளன. பாபிலோனிய செல்வாக்கு பல்வேறு பிரபல கொண்டாட்டங்களிலும் பழக்கவழக்கங்களிலும் காணப்படுகிறது; பாலியல் காரியங்களில் மனம்போல் ஈடுபடும் உலகின் போக்கிலும் காணப்படுகிறது; அதோடு, பிரபலமாகிவரும் ஆவியுலகத் தொடர்பு சம்பந்தப்பட்ட பொழுதுபோக்குகளில் காணப்படுகிறது; இதுபோல இன்னும் அநேக விஷயங்களில் இது காணப்படுகிறது. தொடர்ந்து விழிப்புடன் இருப்பதற்கு, நம் செயல்களிலும்சரி நம் மனதில் எழும் ஆசைகளிலும்சரி, எல்லா விதத்திலும் மகா பாபிலோனிலிருந்து உண்மையிலேயே நாம் விலகியிருக்கிறோம் என்பதற்கு அத்தாட்சி அளிக்க வேண்டும்.
18 வெளிப்படுத்துதல் 14:9, 10-ல் ‘நியாயத்தீர்ப்பு வேளையின்’ மற்றொரு அம்சம் விவரிக்கப்பட்டுள்ளது. மற்றொரு தேவதூதன் இவ்வாறு சொல்கிறான்: ‘மூர்க்க மிருகத்தையும் (NW) அதின் சொரூபத்தையும் வணங்கித் தன் நெற்றியிலாவது தன் கையிலாவது அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளுகிறவனெவனோ, அவன் . . . கடவுளுடைய உக்கிரமாகிய மதுவைக் குடிப்பான்.’ ஏன்? ஏனென்றால் ‘மூர்க்க மிருகமும் அதின் சொரூபமும்’ மனித ஆட்சியை அடையாளப்படுத்துகின்றன, அவை யெகோவாவின் பேரரசாட்சியை ஏற்றுக்கொள்வதில்லை. மெய்த் தேவனாகிய யெகோவாவின் உன்னத பேரரசாட்சியை ஏற்றுக்கொள்ள மறுக்கிறவர்களுக்கு அடிமையாக இருப்பதாக தங்களுடைய மனப்பான்மையிலோ செயலிலோ செல்வாக்கு செலுத்தப்படுவதற்கு அல்லது குறியிடப்படுவதற்கு தங்களை அனுமதிக்காதவாறு விழிப்புள்ள கிறிஸ்தவர்கள் கவனமாக இருக்கிறார்கள். கடவுளுடைய ராஜ்யம் ஏற்கெனவே பரலோகத்தில் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் அனைத்து மனித அரசாங்கங்களையும் அழித்து அதுவே என்றென்றும் நிலைநிற்கும் என்பதையும் கிறிஸ்தவர்கள் அறிந்திருக்கிறார்கள்.—தானியேல் 2:44.
உங்கள் அவசரவுணர்வை இழந்துவிடாதீர்கள்!
19 முடிவு நெருங்க நெருங்க, அழுத்தங்களும் சோதனைகளும் தீவிரமாகத்தான் செய்யும். நாம் இவ்வுலகத்தில் வாழும்வரை, சொந்த அபூரணங்களால் அவதிப்படும்வரை, மோசமான உடல்நிலை, முதுமை, நேசத்துக்குரியவரை இழத்தல், புண்பட்ட உணர்ச்சிகள், கடவுளுடைய வார்த்தையைப் பிரசங்கிக்க முயற்சியெடுத்தும் நல்ல பலன் கிடைக்காமல் ஏமாற்றமடைதல் போன்ற பல காரியங்களால் நாம் பாதிக்கப்படுகிறோம். இத்தகைய அழுத்தங்களை சாத்தான் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, நாம் நற்செய்தியைப் பிரசங்கிப்பதை அல்லது கடவுளுடைய தராதரங்களின்படி வாழ்வதை நிறுத்திவிடுவதற்கு அவன் முயலுவான் என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். (எபேசியர் 6:11-13) நாம் வாழும் காலம் நம் அவசரவுணர்வை இழந்துவிடுவதற்குரிய காலம் அல்ல!
20 நற்செய்தியைப் பிரசங்கிப்பதை அல்லது கடவுளுடைய தராதரங்களின்படி வாழ்வதை நிறுத்திவிடுவதற்கு அதிக அழுத்தத்தை நாம் எதிர்ப்படுவோமென இயேசு அறிந்திருந்தார், அதனால் நமக்கு அவர் இவ்வாறு அறிவுரை கூறினார்: “உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள்.” (மத்தேயு 24:42) அப்படியானால், கால ஓட்டத்தில் நாம் எங்கே இருக்கிறோம் என்பதை உணர்ந்து எப்பொழுதும் அதிக விழிப்புடன் இருப்போமாக. ஆன்மீக ரீதியில் நம்மை மந்தமாக்குவதற்கு அல்லது சத்தியத்தில் நடப்பதை நிறுத்திவிடுவதற்குத் தூண்டுகிற சாத்தானுடைய சூழ்ச்சிகளைக் குறித்து நாம் கவனமாக இருப்போமாக. கடவுளுடைய ராஜ்ய நற்செய்தியை அதிக ஆர்வத்தோடும் உறுதியோடும் பிரசங்கிப்பதில் திடத்தீர்மானமாய் இருப்போமாக. ‘விழிப்புடனிருங்கள்’ என்ற இயேசுவின் எச்சரிக்கைக்கு செவிசாய்த்து நம் அவசரவுணர்வை காத்துக்கொள்வோமாக. அப்படி செய்வதன் மூலம் யெகோவாவுக்குத் துதியைக் கொண்டுவருவோம், நித்திய ஆசீர்வாதங்களைப் பெறும் நம்பிக்கையுள்ளோர் மத்தியிலும் இருப்போம்.
எப்படி பதிலளிப்பீர்கள்?
• ‘விழிப்புடனிருங்கள்’ என்ற இயேசுவின் எச்சரிக்கை மெய் கிறிஸ்தவர்களுக்குப் பொருந்துகிறதென நமக்கு எப்படித் தெரியும்?
• ‘விழிப்புடன் இருப்பதற்கு’ பைபிள் தரும் என்ன எச்சரிப்பு உதாரணங்கள் நமக்கு உதவும்?
• நியாயத்தீர்ப்பு வேளை என்றால் என்ன, அது முடிவடையும் முன்பு என்ன செய்யும்படி நாம் அறிவுறுத்தப்படுகிறோம்?
[கேள்விகள்]
1, 2. இயேசு தமது வருகையை பொருத்தமாகவே எதற்கு ஒப்பிட்டுப் பேசினார்?
3, 4. (அ) இயேசுவின் வருகையைப் பற்றிய எச்சரிக்கைக்குச் செவிசாய்ப்பதில் என்ன உட்பட்டுள்ளது? (ஆ) என்ன கேள்விகள் எழும்புகின்றன?
5. ‘விழிப்புடனிருங்கள்’ என்ற எச்சரிக்கை மெய் கிறிஸ்தவர்களுக்குப் பொருந்துகிறதென எப்படித் தெரியும்?
6. ‘விழிப்புடன் இருப்பது’ ஏன் அவசியம்?
7. முடிவு எப்போது வருமென தெரியாதிருப்பது எதைச் செய்ய நமக்கு வாய்ப்பளிக்கிறது?
8. விழிப்புடன் இருப்பதற்கு யெகோவாவின் மீதுள்ள அன்பு நம்மை எப்படி உந்துவிக்கிறது?
9. உலக ஜனங்கள் தாங்கள் வாழும் காலங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து விழித்தெழ வேண்டிய அவசரத் தேவை ஏன் இருக்கிறது?
10. நாம் விழிப்புடன் இருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள என்ன செய்ய வேண்டும்?
11-13. (அ) நோவாவின் நாளில் (ஆ) லோத்தின் நாளில் சம்பவித்த உதாரணங்களிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
14, 15. (அ) நியாயத்தீர்ப்பு “வேளை” என்பது எதை உட்படுத்துகிறது? (ஆ) ‘தேவனுக்குப் பயந்து அவரை மகிமைப்படுத்துவதில்’ என்ன உட்பட்டுள்ளது?
16. வெளிப்படுத்துதல் 14:8-ல் குறிப்பிடப்பட்டுள்ள மகா பாபிலோனுக்கு எதிரான நியாயத்தீர்ப்பு ஏற்கெனவே நிறைவேறிவிட்டதென ஏன் சொல்லலாம்?
17. மகா பாபிலோனைவிட்டு வெளியே வருவதில் என்ன உட்பட்டுள்ளது?
18. வெளிப்படுத்துதல் 14:9, 10-ல் விவரிக்கப்பட்டுள்ளதைக் கவனிக்கையில், விழிப்புள்ள கிறிஸ்தவர்கள் எதைத் தவிர்ப்பதற்குக் கவனமாக இருக்கிறார்கள்?
19, 20. (அ) முடிவு நெருங்க நெருங்க, சாத்தான் என்ன செய்ய முயலுவான் என்பதில் நாம் நிச்சயமாக இருக்கலாம்? (ஆ) என்ன செய்ய நாம் திடத்தீர்மானமாக இருக்க வேண்டும்?
[பக்கம் 23-ன் படம்]
இயேசு தமது வருகையை ஒரு திருடனுடைய வருகைக்கு ஒப்பிட்டுப் பேசினார்
[பக்கம் 24-ன் படம்]
மகா பாபிலோனின் அழிவு விரைவில்
[பக்கம் 25-ன் படங்கள்]
மிகுந்த ஆர்வத்தோடும் உறுதியோடும் பிரசங்கிப்பதற்கு நாம் திடத்தீர்மானமாய் இருப்போமாக