கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதில் கடவுள் தாமதிக்கவில்லை
“கர்த்தாவே, நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன், நீர் கேளாமலிருக்கிறீரே!” இவை பொ.ச.மு. 7-வது நூற்றாண்டில் வாழ்ந்த எபிரெய தீர்க்கதரிசி ஆபகூக்கின் வார்த்தைகள். ஆனால் இதேப் போன்ற வார்த்தைகளை எங்கேயோ கேட்டதுபோல இருக்கிறதல்லவா? நாம் ஆசைப்படுவதை எல்லாம் உடனே அல்லது வெகு சீக்கிரத்தில் பெறவேண்டும் என விரும்புவது மனித இயல்பே. அதுவும், உடனடி திருப்தியை விரும்பும் இந்தச் சகாப்தத்தில் இது நூற்றுக்கு நூறு உண்மை.—ஆபகூக் 1:2.
கடவுள் தம்முடைய வாக்குறுதிகளை முன்னரே நிறைவேற்றியிருக்க வேண்டும் என நினைத்த சிலர் முதல் நூற்றாண்டில் இருந்தனர். அவர்கள் அந்தளவு பொறுமையிழந்து போனதனால் கடவுள் தாமதிக்கிறார் அல்லது மெதுவாக செயல்படுகிறார் என்று நினைத்தனர். ஆகவே, நேரத்தைப் பற்றிய கடவுளுடைய நோக்குநிலை நம்முடைய நோக்குநிலையிலிருந்து மிகவும் வித்தியாசப்பட்டதென அப்போஸ்தலன் பேதுரு அவர்களுக்கு நினைப்பூட்ட வேண்டியிருந்தது. “பிரியமானவர்களே, கர்த்தருக்கு ஒரு நாள் ஆயிரம் வருஷம்போலவும், ஆயிரம் வருஷம் ஒருநாள்போலவும் இருக்கிறதென்கிற இந்த ஒரு காரியத்தை நீங்கள் அறியாதிருக்க வேண்டாம்” என பேதுரு எழுதினார்.—2 பேதுரு 3:8.
நேரத்தை இவ்வாறு கணக்கிட்டால், 80 வயது மனிதர் ஒருவர் சுமார் இரண்டு மணிநேரம்தான் வாழ்ந்திருக்கிறார்; அது மட்டுமல்ல, மனிதவர்க்கத்தின் முழு சரித்திரமும் சுமார் ஆறே நாட்களுக்குள் அடங்கிவிடும். இதை மனதில் வைத்து காரியங்களை நோக்குகையில், கடவுள் நம்மோடு தொடர்புகொள்ளும் விதத்தைப் புரிந்துகொள்வது சுலபம்.
இருந்தாலும், கடவுள் நேரத்தைப் பற்றி கவலைப்படாதவர் அல்ல. மாறாக அவர் நேரத்தைக் கடைப்பிடிப்பதில் இம்மியும் பிசகாதவர். (அப்போஸ்தலர் 1:7) ஆகவே பேதுரு தொடர்ந்து கூறுகிறார்: “தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக் குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.” (2 பேதுரு 3:9) நேரம் கடந்துபோவதற்கு முன்பு காரியங்களைச் செய்து முடிக்கவேண்டும் என அவசரப்படும் மனிதர்களைப் போல கடவுள் இல்லை. அவர் ‘நித்தியத்தின் ராஜாவாக’ இருப்பதால் காரியங்களை அவரால் முழுமையாக புரிந்துகொள்ள முடியும். காலவோட்டத்தில், தாம் எப்போது செயல்பட்டால் அனைவருக்கும் மிகுந்த நன்மை கிடைக்கும் என்பதையும் அவர் முழுமையாக அறிந்திருக்கிறார்.—1 தீமோத்தேயு 1:17.
கடவுள் தாமதிப்பதாக தோன்றுவதற்கு என்ன காரணம் என்பதை விளக்கிய பிறகு பேதுரு இந்த எச்சரிப்பைத் தருகிறார்: “கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்.” அதாவது, யாரும் எதிர்பார்க்காத சமயத்தில் அந்த நியாயத்தீர்ப்பு நாள் வரும். அதற்கடுத்த வசனத்தில், “பரிசுத்தமான நடத்தையும் தேவபக்திக்குரிய செயல்களும்” செய்பவர்களுக்கு இருக்கும் சிறந்த எதிர்பார்ப்பை பேதுரு கூறுகிறார்; அதுவே, கடவுள் வாக்குறுதி கொடுத்திருக்கும் ‘புதிய வானம், புதிய பூமிக்குள்’ அவர்கள் தப்பிப்பிழைக்கலாம்.—2 பேதுரு 3:10-13, NW.
ஆகவே, கடவுள் இன்னும் நியாயந்தீர்க்காமல் இருப்பதற்காக நாம் நன்றியுடன் இருக்க வேண்டும். அவருடைய பொறுமையின் காரணமாகவே, அவருடைய நோக்கத்தைப் பற்றி அறியவும் அவர் வாக்குறுதி கொடுத்திருக்கும் ஆசீர்வாதங்களைப் பெற நம் வாழ்க்கையை மாற்றியமைத்துக் கொள்ளவும் நமக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆதலால் பேதுரு சொல்கிற விதமாகவே, “நம்முடைய கர்த்தரின் நீடியபொறுமையை இரட்சிப்பென்று” எண்ண வேண்டாமா? (2 பேதுரு 3:15) இருந்தாலும், கடவுள் பொறுமையாய் இருப்பதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது.
அக்கிரமம் இன்னமும் நிறைவாகவில்லை
திருந்துவதற்கு வாய்ப்பேதும் இல்லாமல் போகும்வரைக்கும் கடவுள் தம்முடைய நியாயத்தீர்ப்புகளை தள்ளிப்போடுவார் என்பதை அவர் முற்காலங்களில் மனிதவர்க்கத்தோடு வைத்திருந்த தொடர்புகளிலிருந்து அறிய வருகிறோம். உதாரணமாக, கானானியர்கள் மீது தம்முடைய நியாயத்தீர்ப்புகளை நிறைவேற்றுவதன் சம்பந்தமாக அவர்களுடைய பாவங்களைப் பற்றி ஆபிரகாமிடம் வெகு காலத்திற்கு முன்பே கூறியிருந்தார். ஆனாலும் நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுவதற்கான காலம் அப்போது வரவில்லை. ஏன்? “ஏனென்றால் எமோரியருடைய [கானானியருடைய] அக்கிரமம் இன்னும் நிறைவாகவில்லை” என்று பைபிள் கூறுகிறது அல்லது க்னாக்ஸ் மொழிபெயர்ப்பு கூறுகிறபடி, “எமோரியருடைய துன்மார்க்கம் அதன் முழு அளவை எட்டவில்லை.”—ஆதியாகமம் 15:16. a
ஆனாலும், ஏறக்குறைய 400 வருடங்களுக்கு பின்னர் கடவுளுடைய நியாயத்தீர்ப்பு நாள் வந்தது; ஆபிரகாமின் சந்ததியாரான இஸ்ரவேலர் தேசத்தைக் கைப்பற்றினர். ராகாப், கிபியோனியர் போன்ற சில கானானியரின் மனநிலையும் செயல்களும் நல்லவையாய் இருந்தபடியால் அவர்கள் காப்பாற்றப்பட்டனர். ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் அக்கிரமத்தின் உச்சக்கட்டத்தையே அடைந்திருந்தனர்; நவீன நாளைய புதைபொருள் ஆராய்ச்சிகள் வெளிப்படுத்துவதும் இதையே. இனப்பெருக்க உறுப்புகளின் வணக்கம், தேவதாசி முறை, குழந்தைகள் நரபலி போன்றவற்றில் ஈடுபட்டனர். ஹேலீஸ் பைபிள் ஹேண்டுபுக் இவ்வாறு கூறுகிறது: “கானானிய பட்டணங்களின் இடிபாடுகளை தோண்டியெடுக்கும் புதைபொருள் ஆய்வாளர்கள், கடவுள் அவற்றை அழிக்காமல் ஏன் இவ்வளவு காலம் விட்டுவைத்தார் என யோசிக்கின்றனர்.” கடைசியில், கானானியர்களின் ‘பாவம் அதன் முழு அளவை எட்டியது,’ அவர்களுடைய ‘அக்கிரமம் நிறைவானது.’ அப்போது, நல்மனமுள்ளவர்களைப் பாதுகாத்து அந்தத் தேசத்தைத் துடைத்தழிக்க கடவுள் செயல்பட்டது அநீதியானதென எவரும் நியாயமாய் குற்றஞ்சாட்ட முடியாது.
நோவாவின் நாட்களிலும் இதேப் போன்ற காரியம்தான் நிகழ்ந்தது. ஜலப்பிரளயத்திற்கு முன்பிருந்த மக்கள் துன்மார்க்கராய் இருந்தபோதிலும் கடவுள் தம்முடைய இரக்கத்தின் காரணமாக அவர்களுடைய வாழ்க்கை இன்னும் 120 வருடங்கள் தொடரட்டும் என்று தீர்மானித்தார். அந்தச் சமயத்தில் கொஞ்சம் காலம்தான் நோவா “நீதியைப் பிரசங்கி”ப்பவராய் சேவித்தார். (2 பேதுரு 2:5) காலம் செல்லச்செல்ல அவர்களுடைய துன்மார்க்கமும் முற்றியது. “தேவன் பூமியைப் பார்த்தார்; இதோ அது சீர்கெட்டதாயிருந்தது; மாம்சமான யாவரும் பூமியின்மேல் தங்கள் வழியைக் கெடுத்துக் கொண்டிருந்தார்கள்.” (ஆதியாகமம் 6:3, 12) அவர்களுடைய ‘பாவம் அதன் முழு அளவை எட்டியது’; காலம் உருண்டோடுகையில் அவர்களுடைய தவறான மனச்சாய்வுகள் உச்சநிலையை அடைந்தன. கடவுள் நடவடிக்கை எடுத்தபோது அது முற்றிலும் நியாயமாய் இருந்தது. கடவுளுடைய பார்வையில் நீதிமான்களாய் இருந்த எட்டு பேரை மாத்திரமே அவர் காப்பாற்றினார்.
கடவுள் இஸ்ரவேலை நடத்திய விதத்திலும் இது தெளிவாய் தெரிகிறது. உண்மையற்றவர்களாய் அவர்கள் துரோகம் செய்தபோதிலும், நூற்றுக்கணக்கான வருடங்கள் கடவுள் அவர்களிடம் பொறுமையாய் இருந்தார். “கர்த்தர் தமது ஜனத்தை . . . காப்பதற்கான இரக்கமுள்ளவராயிருந்தபடியால், அவர்களிடத்துக்குத் தம்முடைய ஸ்தானாபதிகளை ஏற்கெனவே [“திரும்பத்திரும்ப,” NW] அனுப்பினார். ஆனாலும் அவர்கள் . . . அவருடைய வார்த்தைகளை அசட்டைசெய்து, அவருடைய தீர்க்கதரிசிகளை நிந்தித்தபடியால், கர்த்தருடைய உக்கிரம் அவருடைய ஜனத்தின்மேல் மூண்டது; சகாயமில்லாமல் போயிற்று” என பதிவு கூறுகிறது. (2 நாளாகமம் 36:15, 16) திருந்துவதற்கு வாய்ப்பே இல்லாத ஒரு கட்டத்தை அந்த மக்கள் அடைந்தனர். எரேமியாவோடு இன்னும் சிலர் மட்டுமே காப்பாற்றப்பட தகுதியுள்ளவர்களாய் இருந்தனர். கடைசியில், கடவுள் மற்றவர்கள் மீது நியாயத்தீர்ப்பைக் கொண்டுவந்தபோது அவரை யாரும் குற்றப்படுத்தவே முடியாது.
கடவுள் செயல்படுவதற்கான நேரம் இதுவே
இந்த உதாரணங்களிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? தக்க நேரம் வரும்வரை மட்டுமே தற்போதைய காரிய ஒழுங்குமுறை மீது நியாயத்தீர்ப்பு கொண்டுவருவதை கடவுள் நிறுத்தி வைத்திருக்கிறார் என்பதையே. கடவுளுடைய நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுபவரை அடையாளப்படுத்துபவரிடம் சொல்லப்பட்ட ஆணையிலிருந்து இதைத் தெரிந்துகொள்கிறோம்: “பூமியின் திராட்சப்பழங்கள் பழுத்திருக்கிறது, கருக்குள்ள உமது அரிவாளை நீட்டி, அதின் குலைகளை அறுத்துவிடும் . . . அப்பொழுது அந்தத் தூதன் தன் அரிவாளைப் பூமியின்மேலே நீட்டி, பூமியின் திராட்சப்பழங்களை அறுத்து, தேவனுடைய கோபாக்கினையென்னும் பெரிய ஆலையிலே போட்டான்.” மனிதவர்க்கத்தின் துன்மார்க்கம் “பழுத்திருக்கிறது” என்பதை கவனியுங்கள்; அதாவது திருந்துவதற்கான வாய்ப்பே இல்லாத ஒரு கட்டத்தை எட்டிவிட்டது. கடவுள் நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுகையில் அவர் செய்தது சரியா தவறா என்ற சந்தேகமே எழாது.—வெளிப்படுத்துதல் 14:18, 19.
இதை சிந்திக்கையில், இந்த உலகத்தை கடவுள் நியாயந்தீர்க்கும் நேரம் மிகவும் அருகில் உள்ளது என்பது தெளிவாய் இருக்கிறதல்லவா? ஏனென்றால், முற்காலங்களில் கடவுள் நடவடிக்கை எடுத்தபோது என்ன நிலைமைகள் இருந்தனவோ அதே நிலையில்தான் இன்றைய உலகமும் உழல்கிறது. நோவா நாளைய ஜலப்பிரளயத்திற்கு முன்பு இருந்ததுபோல இன்று பூமியில் எங்கும் துன்மார்க்கம் நிறைந்திருக்கிறது. ஆதியாகமம் 6:5-ல் விவரிக்கப்பட்டிருப்பது போல ஜனங்களுடைய குணங்களும் தொடர்ந்து மாறிவருகின்றன: “[மனுஷனுடைய] இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே.” கானானியர்கள் மீது கடவுள் நியாயத்தீர்ப்பைக் கொண்டுவர காரணமாய் இருந்த பொல்லாத பாவங்கள்கூட இப்போது சர்வசாதாரணம் ஆகிவிட்டன.
முக்கியமாய், முதல் உலக யுத்தத்திற்கு பிறகு திகைக்க வைக்கும் மாற்றங்களை மனிதவர்க்கம் அனுபவித்திருக்கிறது. கோடிக்கணக்கானோரின் இரத்தத்தால் இந்தப் பூமி குளிப்பாட்டப்பட்டிருக்கிறது. யுத்தம், இனப் படுகொலை, வன்முறை, குற்றச்செயல், துன்மார்க்கம் ஆகியவை உலகமுழுவதும் தலைதூக்கி இருக்கின்றன. பஞ்சம், நோய், ஒழுக்கக்கேடு ஆகியவை பூமியில் பீடுநடை போடுகின்றன. “இவைகளெல்லாம் சம்பவிக்கு முன்னே இந்தச் சந்ததி ஒழிந்துபோகா[தென]” இயேசு கூறிய துன்மார்க்க சந்ததியின் மத்தியில் இப்போது நாம் வாழ்கிறோம் என்பதையே எல்லா அத்தாட்சிகளும் சுட்டிக்காட்டுகின்றன. (மத்தேயு 24:34) இந்த உலகத்தின் பாவம் “அதன் முழு அளவை” எட்டிவருகிறது. “பூமியின் திராட்சப்பழங்கள்” அறுவடைக்கு தயாராக பழுத்திருக்கின்றன.
நீங்கள் செயல்பட வேண்டிய நேரம்
நியாயத்தீர்ப்பு காலம் நெருங்குகையில் இரண்டு விதமான பழுத்தல் நடைபெறும் என்பதை அறிவிக்கும்படி அப்போஸ்தலன் யோவானிடம் சொல்லப்பட்டது. ஒருபுறத்தில், “அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்.” மறுபுறத்திலோ, “நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.” (வெளிப்படுத்துதல் 22:10, 11) யெகோவாவின் சாட்சிகள் உலகமுழுவதிலும் பைபிளைப் போதிப்பதால் இந்த இரண்டாவது காரியம் நிறைவேறி வருகிறது. நித்திய ஜீவனைப் பெற தகுதியடையும்படி கடவுள் அவர்களிடம் எதைத் தேவைப்படுத்துகிறார் என்பதை மக்களுக்கு போதிப்பதே இந்த வேலையின் முக்கிய நோக்கமாகும். சுமார் 87,000 சபைகள் மூலமாக உலகின் 233 தேசங்களில் இந்த வேலை செய்யப்படுகிறது.
கடவுள் தாமதிக்கவில்லை. அவருடைய ஆசீர்வாதங்களை பெறும்படி ஒவ்வொருவரும் “புதிய மனுஷனை தரித்துக்கொ[ள்ள]” அவர் பொறுமையோடு நேரம் அனுமதித்திருக்கிறார். (எபேசியர் 4:24) இன்று, இந்த உலகத்தின் நிலைமை தொடர்ந்து மோசமாகிக்கொண்டே வந்தும் கடவுள் பொறுமையோடு காத்திருக்கிறார். உலக முழுவதிலுமுள்ள யெகோவாவின் சாட்சிகள், நித்திய ஜீவனுக்கு வழிநடத்தும் அறிவைத் தங்கள் அயலாரும் பெறவேண்டும் என்பதற்காக தங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்ய முயலுகின்றனர். (யோவான் 17:3, 17) அதன் விளைவாக, ஒவ்வொரு வருடமும் 3,00,000-த்திற்கும் அதிகமான ஆட்கள் சாதகமாக செயல்பட்டு முழுக்காட்டுதல் பெறுகிறார்கள் என்பது சந்தோஷமான விஷயம் அல்லவா?
இது தாமதிப்பதற்கான காலம் அல்ல, மாறாக நித்திய ஜீவனை மனதில் வைத்து செயல்படுவதற்கான நேரம். அப்போதுதான், “உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்” என்ற இயேசுவின் வாக்குறுதி சீக்கிரத்தில் நிறைவேறுவதைக் காணும் பாக்கியம் பெறுவோம்.—யோவான் 11:26.
[அடிக்குறிப்புகள்]
a த சான்ஸீனோ குமாஷ்-ல் இந்த வசனத்திற்கான ஓர் அடிக்குறிப்பு கூறுகிறது: “துரத்திவிடுவதற்கு தகுந்த, ஏனென்றால் ஒரு தேசத்தின் பாவம் முழு நிறைவடையும் வரை கடவுள் அதை தண்டிக்க மாட்டார்.”
[பக்கம் 6-ன் படம்]
பூமியின் திராட்சப்பழங்கள் பழுத்த பிறகு அவற்றை அறுக்க தன் அரிவாளை நீட்டும்படி கடவுளுடைய நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுபவரிடம் சொல்லப்பட்டது
[பக்கம் 7-ன் படம்]
கடவுளுடைய நித்திய கால ஆசீர்வாதங்களை பெற உலக முழுவதிலுமுள்ள மக்களுக்கு யெகோவாவின் சாட்சிகள் உதவுகின்றனர்