அதிகாரம் 1
“இவர்தான் நம் கடவுள்!”
1, 2. (அ) கடவுளிடம் என்ன கேள்விகளை கேட்க விரும்புவீர்கள்? (ஆ) கடவுளிடம் மோசே எதைக் கேட்டார்?
கடவுளோடு நீங்கள் உரையாடுவதாக கற்பனை செய்துபார்க்க முடிகிறதா? இந்த பிரபஞ்சத்தின் உன்னதப் பேரரசர் உங்களிடம் பேசுவதை நினைத்தாலே பயபக்தியும் பிரமிப்பும் நெஞ்சில் சுரக்கிறதல்லவா! முதலில் நீங்கள் திகைத்துப்போய் நிற்கிறீர்கள், பிறகு எப்படியோ சமாளித்துக் கொண்டு பதிலளிக்க ஆரம்பிக்கிறீர்கள். அவர் கேட்கிறார், பதிலளிக்கிறார், தயங்காமல் எந்த கேள்வியையும் கேட்கத் தோன்றும் அளவுக்கு உங்கள் பயத்தை எல்லாம் போக்குகிறார். இப்போது என்ன கேள்வியை கேட்பீர்கள்?
2 வெகு காலத்திற்கு முன்பு வாழ்ந்த ஒருவர் இதே நிலையில்தான் இருந்தார். அவரது பெயர் மோசே. ஆனால் அவர் என்ன கேள்வியைக் கேட்டார் என தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்பட்டு போவீர்கள். அவர் தன்னைப் பற்றியோ தன் எதிர்காலத்தைப் பற்றியோ மனிதகுலத்தின் மோசமான நிலையைப் பற்றியோகூட கேட்கவில்லை. மாறாக கடவுளுடைய பெயரைக் கேட்டார். இது உங்களுக்கு விசித்திரமாக இருக்கலாம், ஏனெனில் கடவுளுடைய பெயரை மோசே ஏற்கெனவே அறிந்திருந்தார். அப்படியென்றால் அவரது கேள்விக்கு ஆழமான அர்த்தம் இருந்திருக்க வேண்டும். சொல்லப்போனால், அதைவிட முக்கியமான ஒரு கேள்வியை மோசே கேட்டிருக்கவே முடியாது. அக்கேள்விக்கான பதில் நம் அனைவர் மீதும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. கடவுளிடம் நெருங்கிச் செல்வது சம்பந்தமாக முக்கியமான படியை எடுக்க அது உங்களுக்கு உதவும். எப்படி? முக்கியத்துவம் வாய்ந்த அந்த உரையாடலை சற்று கவனிக்கலாம்.
3, 4. மோசே கடவுளோடு உரையாடியதற்கு முன் நிகழ்ந்த சம்பவங்கள் யாவை, அவர்களது உரையாடலின் சாராம்சம் என்ன?
3 மோசேக்கு அப்போது 80 வயது. எகிப்தில் அடிமைகளாக இருந்த தன் மக்களாகிய இஸ்ரவேலர்களை விட்டுப் பிரிந்து 40 ஆண்டுகள் தனியே காலம் கழித்திருந்தார். ஒருநாள், தன் மாமனாரது மந்தைகளை மேய்த்துக் கொண்டிருக்கையில் ஒரு வினோத காட்சியைக் கண்டார். ஒரு முட்செடி எரிந்துகொண்டிருந்தது, ஆனால் அது கருகவே இல்லை. மலையோர கலங்கரைவிளக்கம் போன்று அது தொடர்ந்து ஒளிவீசிக்கொண்டிருந்தது. மோசே அதை உற்றுப் பார்க்க கிட்டே சென்றார். அக்கினியின் நடுவிலிருந்து ஒரு குரல் பேசியதைக் கேட்டு எப்படி திடுக்கிட்டுப் போயிருப்பார்! அதன்பின், தேவதூதன் மூலமாக கடவுளும் மோசேயும் விலாவாரியாக பேசினார்கள். பிறகு, பயத்தில் தயங்கிய மோசேக்கு கடவுள் ஒரு நியமிப்பை கொடுத்தார்; அமைதியான வாழ்க்கையை விட்டு, எகிப்திற்குப் போய் இஸ்ரவேலர்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கும்படி அவர் மோசேயிடம் சொன்னதை நீங்கள் அறிந்திருக்கலாம்.—யாத்திராகமம் 3:1-12.
4 அந்த சமயத்தில் மோசே கடவுளிடம் எந்தக் கேள்வியை வேண்டுமானாலும் கேட்டிருக்கலாம். ஆனால் அவர் என்ன கேள்வியை கேட்க தீர்மானித்தார் என்பதை கவனியுங்கள்: “நான் இஸ்ரவேலர்களிடம் போய், ‘உங்கள் முன்னோர்களின் கடவுள் என்னை உங்களிடம் அனுப்பினார்’ என்று சொல்லும்போது, ‘அவருடைய பெயர் என்ன?’ என்று அவர்கள் கேட்டால் என்ன சொல்வது?” என்று கேட்டார்.—யாத்திராகமம் 3:13.
5, 6. (அ) மோசேயின் கேள்வி என்ன எளிய, முக்கியமான உண்மையை நமக்கு கற்பிக்கிறது? (ஆ) கடவுளுடைய தனிப்பட்ட பெயர் சம்பந்தமாக கண்டனத்திற்குரிய என்ன காரியம் செய்யப்பட்டிருக்கிறது? (இ) கடவுள் மனிதவர்க்கத்திற்கு தமது பெயரை வெளிப்படுத்தியிருப்பது ஏன் அந்தளவு குறிப்பிடத்தக்கது?
5 அந்தக் கேள்வி, கடவுளுக்கு ஒரு பெயர் இருக்கிறது என்பதை முதலாவதாக நமக்கு கற்பிக்கிறது. இந்த எளிய உண்மையை நாம் அசட்டை செய்யக்கூடாது. இருந்தாலும் அநேகர் அப்படித்தான் அசட்டை செய்கிறார்கள். கடவுளுடைய தனிப்பட்ட பெயர் எண்ணற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது; அதற்குப் பதிலாக “கர்த்தர்,” “தேவன்” போன்ற பதங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. மதத்தின் பெயரில் செய்யப்பட்டிருக்கும் மிக வருத்தகரமான, மிகுந்த கண்டனத்துக்குரிய காரியங்களில் இதுவும் ஒன்று. சற்று யோசித்துப் பாருங்கள், பொதுவாக ஒருவரை சந்திக்கும்போது நீங்கள் முதலில் என்ன செய்வீர்கள்? அவரது பெயரைத்தானே கேட்பீர்கள்? கடவுளை தெரிந்துகொள்ளும் விஷயத்திலும் இதுவே உண்மை. அவர் நம் அறிவுக்கு அல்லது புரிந்துகொள்ளுதலுக்கு எட்டாத, பெயரற்ற, யாரிடமும் ஒட்டுதலில்லாத ஏதோவொரு சக்தியல்ல. நம் கண்ணுக்கு புலப்படாதவர் என்றாலும், அவர் ஒரு நிஜமான நபர். அவருக்கு ஒரு பெயரும் உண்டு; அதுவே, யெகோவா.
6 மேலும், கடவுள் தம் தனிப்பட்ட பெயரை வெளிப்படுத்துகையில், புல்லரிக்க வைக்கும் குறிப்பிடத்தக்க மற்றொன்று பின்தொடருகிறது. அதாவது, தம்மை அறிந்துகொள்ள அவர் நம்மை அழைக்கிறார். நாம் வாழ்க்கையில் தலைசிறந்த தெரிவை செய்யும்படி—தம்மிடம் நெருங்கி வரும்படி—அவர் விரும்புகிறார். ஆனால் யெகோவா தம் பெயரை மட்டுமே நமக்கு சொல்லவில்லை. அந்தப் பெயரைத் தாங்கியவர் எப்படிப்பட்டவர் என்பதையும் நமக்குக் கற்பித்திருக்கிறார்.
கடவுளுடைய பெயரின் அர்த்தம்
7. (அ) கடவுளுடைய தனிப்பட்ட பெயரின் அர்த்தம் என்னவென்று புரிந்துகொள்ளப்படுகிறது? (ஆ) கடவுளிடம் அவரது பெயரைக் கேட்டபோது மோசே உண்மையில் எதை தெரிந்துகொள்ள விரும்பினார்?
7 யெகோவாவே தம் பெயரை தேர்ந்தெடுத்தார், அது அர்த்தம் செறிந்தது. “யெகோவா” என்ற பெயரின் அர்த்தம் “ஆகும்படி செய்கிறவர்” என்று புரிந்துகொள்ளப்படுகிறது. பிரபஞ்சத்திலேயே யெகோவாவுக்கு நிகர் வேறு யாரும் இல்லை. ஏனென்றால் அவர்தான் எல்லாவற்றையும் உண்டாக்கினார். அதோடு, தம் நோக்கங்கள் எல்லாவற்றையும் அவர் நிறைவேற்றுகிறார். தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகத் தன்னுடைய பாவ இயல்புள்ள ஊழியர்கள் எப்படியெல்லாம் ஆக வேண்டுமோ, அப்படியெல்லாம் அவரால் அவர்களை ஆக்கவும் முடியும். இவையெல்லாம் நமக்குப் பயபக்தியையும் பிரமிப்பையும் ஏற்படுத்துகிறது. ஆனால், யெகோவா என்ற பெயருக்கு படைப்பாளர் என்று மட்டுமே அர்த்தமா? கடவுளுடைய பெயர் யெகோவா என்பதையும் யெகோவாதான் படைப்பாளர் என்பதையும் மோசே நன்கு அறிந்திருந்தார். இருந்தாலும், அவரைப் பற்றி இன்னும் அதிகமாகத் தெரிந்துகொள்ள விரும்பினார். யெகோவா என்ற பெயர் ஒன்றும் புதிதல்ல, மக்கள் அதை பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தி வந்திருந்தனர். ஆகவே மோசே கடவுளுடைய பெயரைக் கேட்டபோது அந்தப் பெயரைத் தாங்கிய நபரை பற்றியே உண்மையில் கேட்டார். வேறு வார்த்தைகளில் சொன்னால், ‘உம் மீதுள்ள விசுவாசத்தை பலப்படுத்தும் விதத்திலும் நீர் கண்டிப்பாக விடுதலை அளிப்பீர் என்பதில் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் விதத்திலும் உம் மக்களாகிய இஸ்ரவேலர்களுக்கு உம்மைப் பற்றி நான் என்ன சொல்வது?’ என்று கேட்டார்.
8, 9. (அ) யெகோவா எவ்வாறு மோசேயின் கேள்விக்கு பதிலளித்தார், அவரது பதில் பெரும்பாலும் எவ்வாறு தவறாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது? (ஆ) “நான் எப்படியெல்லாம் ஆக நினைக்கிறேனோ அப்படியெல்லாம் ஆவேன்” என்ற வாக்கியத்தின் அர்த்தம் என்ன?
8 யெகோவா மோசேயின் கேள்விக்கு பதிலளித்து, தம் குணாதிசயத்தின் ஓர் அருமையான அம்சத்தைத் தெரியப்படுத்தினார்; அது அவர் பெயரின் அர்த்தத்தோடு சம்பந்தப்பட்டது. அவர் மோசேயிடம், “நான் எப்படியெல்லாம் ஆக நினைக்கிறேனோ அப்படியெல்லாம் ஆவேன்” என்று சொன்னார். (யாத்திராகமம் 3:14) அநேக மொழிபெயர்ப்புகள் இதை “இருக்கிறவராக இருக்கிறேன்” என மொழிபெயர்க்கின்றன. ஆனால் கவனத்தோடு மொழிபெயர்க்கப்பட்டுள்ள சில பைபிள் மொழிபெயர்ப்புகள், கடவுள் தாம் இருப்பதை மட்டுமே உறுதிப்படுத்தவில்லை என்பதைக் காட்டுகின்றன. மாறாக, யெகோவா தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு ‘எப்படியெல்லாம் ஆக வேண்டுமோ அப்படியெல்லாம் ஆவார்’ என்பதை மோசேக்கும்—அதன் மூலம் நம் அனைவருக்கும்கூட—விளக்கினார். ஜே. பி. ராதர்ஹாமின் மொழிபெயர்ப்பு இந்த வசனத்தை இப்படி தெளிவாக மொழிபெயர்க்கிறது: “நான் விரும்புகிறபடியெல்லாம் ஆவேன்.” பைபிளில் பயன்படுத்தப்பட்ட எபிரெயு மொழியை ஆராயும் ஒரு நிபுணர் இந்தச் சொற்றொடரை பின்வருமாறு விளக்குகிறார்: “சூழ்நிலை அல்லது தேவை என்னவாக இருந்தாலும் . . . , கடவுள் அந்தத் தேவையின் தீர்வாக ‘ஆவார்.’”
9 இது இஸ்ரவேலர்களுக்கு எதை அர்த்தப்படுத்தியது? எவ்வளவு பெரிய இடையூறு ஏற்பட்டாலும், எவ்வளவு சிக்கலான பிரச்சினையில் தவித்தாலும், அவர்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்கு அழைத்துச் செல்வதற்கு எப்படியெல்லாம் ஆக வேண்டுமோ அப்படியெல்லாம் யெகோவா ஆவார். நிச்சயமாகவே அந்தப் பெயர் கடவுள்மீது நம்பிக்கையை வளர்த்தது. அவ்வாறே நம் நம்பிக்கையையும் அது வளர்க்க முடியும். (சங்கீதம் 9:10) ஏன்?
10, 11. யெகோவாவின் பெயர் அவரை, பல ஸ்தானங்கள் ஏற்பதில் வல்லவராகவும் கற்பனை செய்ய முடிந்ததிலேயே தலைசிறந்த தகப்பனாகவும் கருதத் தூண்டுவது எப்படி? உதாரணம் தருக.
10 உதாரணத்திற்கு: பிள்ளைகளை வளர்க்கையில் எத்தனை ஸ்தானங்களை ஏற்க வேண்டியிருக்கிறது என்பதை பெற்றோர் அறிவார்கள். ஒரே நாளில், நர்ஸாக, சமையல்காரராக, ஆசிரியராக, கண்டிப்பவராக, நடுவராக என எத்தனையோ ஸ்தானங்களை ஏற்க வேண்டியிருக்கலாம். இப்படி பலதரப்பட்ட பாகங்களை வகிக்கும்படி எதிர்பார்க்கப்படுகையில் அநேகர் திக்குமுக்காடிப் போகிறார்கள். சிறுபிள்ளைகள் எவ்வாறு தங்கள்மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதைக் குறித்து பெற்றோர்கள் சொல்கிறார்கள்; காயத்தை குணமாக்கவும், சண்டைகளையெல்லாம் தீர்க்கவும், உடைந்த விளையாட்டு சாமான்களை சரிப்படுத்தவும், துருதுருக்கும் தங்கள் மனங்களில் ஓயாமல் எழும் கேள்விகளுக்கு விடையளிக்கவும் அப்பாவால் அல்லது அம்மாவால் முடியுமா என பிள்ளைகள் ஒருபோதும் சந்தேகிப்பதில்லை. சில பெற்றோர் அந்த நம்பிக்கைக்கு தகுதியற்றவர்களாக உணருகிறார்கள்; சிலசமயம் தங்கள் சொந்த வரம்புகளை நினைத்து சோர்வடைகிறார்கள். மேற்கண்ட பல ஸ்தானங்களை நிறைவேற்ற துளியும் தகுதி இல்லாதவர்களாக உணர்ந்து வருந்துகிறார்கள்.
11 யெகோவாவும் அன்பான தகப்பன்தான். இருந்தாலும், தமது சொந்த பரிபூரண தராதரங்களின் எல்லைக்குள், தமது பூமிக்குரிய பிள்ளைகளை மிகச் சிறந்த விதத்தில் பராமரிப்பதற்கு அவரால் ஏற்க முடியாத ஸ்தானம் எதுவுமே இல்லை. ஆகவே யெகோவா என்ற அவரது பெயர், கற்பனை செய்ய முடிந்ததிலேயே தலைசிறந்த தகப்பனாக அவரை கருதும்படி நம்மை தூண்டுகிறது. (யாக்கோபு 1:17) யெகோவா தமது பெயருக்கு ஏற்ப நடந்துகொள்கிறவர் என்பதை அனுபவத்தின் மூலம் மோசேயும் உண்மையுள்ள மற்ற எல்லா இஸ்ரவேலர்களும் விரைவில் உணர்ந்துகொண்டனர். அவர், தோற்கடிக்க முடியாத படைத்தலைவராகவும், இயற்கை சக்திகள் அனைத்திற்கும் எஜமானராகவும், நிகரற்ற சட்ட ஸ்தாபகராகவும், நீதிபதியாகவும், கட்டடக் கலைஞராகவும், உணவும் நீரும் வழங்குபவராகவும், உடையையும் காலணிகளையும் பாதுகாப்பவராகவும், இன்னும் பலவாறும் ஆவதை அவர்கள் பிரமிப்போடு கவனித்தனர்.
12. யெகோவாவின்மீது பார்வோனுக்கு இருந்த மனப்பான்மை, எவ்வாறு மோசேயின் மனப்பான்மையிலிருந்து வித்தியாசமாக இருந்தது?
12 இவ்வாறு கடவுள் தம் தனிப்பட்ட பெயரை தெரியப்படுத்தியிருக்கிறார், அந்தப் பெயரைத் தாங்கியவரைப் பற்றிய அற்புதமான விஷயங்களை வெளிப்படுத்தியிருக்கிறார். அதோடு, தம்மைப் பற்றி அவர் சொல்வதெல்லாம் உண்மை என்பதை நிரூபித்தும் காட்டியிருக்கிறார். தம்மைப் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டுமென அவர் விரும்புவதில் சந்தேகமே இல்லை. நாம் எந்தளவுக்கு அவரைப் பற்றி அறிந்துகொள்கிறோம்? மோசே கடவுளைப் பற்றி அறிந்துகொள்ள விரும்பினார். அந்தப் பேராவல் அவருடைய வாழ்க்கை முறையை வடிவமைத்தது, அவரது பரலோக தந்தையிடம் அதிகமாக நெருங்கி வர உதவியது. (எண்ணாகமம் 12:6-8; எபிரெயர் 11:27) மோசேயின் காலத்தில் வாழ்ந்தவர்களில் வெகு சிலருக்கே அப்படிப்பட்ட ஆவல் இருந்ததென்பது வருத்தமான விஷயம். மோசே பார்வோனிடம் யெகோவாவின் பெயரைக் குறிப்பிட்டபோது, அந்த எகிப்திய அரசன் ஆணவத்தோடு “யார் அந்த யெகோவா?” என கேட்டான். (யாத்திராகமம் 5:2) யெகோவாவைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள பார்வோனுக்கு விருப்பமில்லை. மாறாக, ‘இஸ்ரவேலின் கடவுள் யாராக அல்லது எப்படிப்பட்டவராக இருந்தால் எனக்கென்ன?’ என்பதுபோல் ஏளனமாக பேசினான். அதே மனப்பான்மை இன்றும் வெகு சகஜமாக காணப்படுகிறது. அது, எல்லாவற்றைக் காட்டிலும் முக்கியமான சத்தியத்தை—யெகோவாவே உன்னதப் பேரரசர் என்ற சத்தியத்தை—மக்களின் மனக்கண்களிலிருந்து மறைத்துவிடுகிறது.
உன்னதப் பேரரசராகிய யெகோவா
13, 14. (அ) யெகோவாவிற்கு பைபிளில் ஏன் பற்பல பட்டப்பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன, அவற்றில் சில யாவை? (பக்கம் 14-ல் உள்ள பெட்டியைக் காண்க.) (ஆ) யெகோவா “உன்னதமான கடவுள்” என அழைக்கப்படுவதற்கு ஏன் ஒப்பற்ற தகுதிபெற்றிருக்கிறார்?
13 யெகோவா பலதரப்பட்ட ஸ்தானங்களை ஏற்பதால் வேதாகமத்தில் பற்பல பட்டப்பெயர்களை பெற்றிருப்பது சரியானதே. இவை அவரது தனிப்பட்ட பெயரை எவ்விதத்திலும் விஞ்சுவதில்லை; மாறாக, அவருடைய பெயர் பிரதிநிதித்துவம் செய்கிறவற்றைப் பற்றியே அதிகமாக கற்பிக்கின்றன. உதாரணத்திற்கு அவர் ‘உன்னதப் பேரரசர்’ என அழைக்கப்படுகிறார். (2 சாமுவேல் 7:22) பைபிளில் பல தடவை வரும் இந்த உயரிய பட்டப்பெயர், யெகோவாவின் அந்தஸ்தை சுட்டிக்காட்டுகிறது. இந்த பிரபஞ்சத்தின் உன்னத அரசராக இருக்கும் உரிமை அவருக்கு மட்டுமே உண்டு. ஏன் என்பதை கவனியுங்கள்.
14 யெகோவா மட்டுமே படைப்பாளராக ஒப்பற்று விளங்குகிறார். வெளிப்படுத்துதல் 4:11 இவ்வாறு சொல்கிறது: “எங்கள் கடவுளாகிய யெகோவாவே, நீங்கள் மகிமையும் மாண்பும் வல்லமையும் பெற்றுக்கொள்ளத் தகுதியானவர். ஏனென்றால், நீங்கள்தான் எல்லாவற்றையும் படைத்தீர்கள், உங்களுடைய விருப்பத்தின்படியே அவை உண்டாயின, படைக்கப்பட்டன.” மாட்சிமை பொருந்திய இந்த வார்த்தைகள் வேறு எவருக்குமே பொருந்தாது. இந்த அண்டத்தில் உள்ள அனைத்தும் உருவானதற்கு யெகோவாவே காரணம்! உன்னதப் பேரரசருக்கும் அனைத்தின் படைப்பாளருக்கும் உரிய மகிமையையும் மாண்பையும் வல்லமையையும் பெறுவதற்கு யெகோவா தகுந்தவர் என்பதில் சந்தேகமே இல்லை.
15. யெகோவா ஏன் “என்றென்றுமுள்ள ராஜா” என அழைக்கப்படுகிறார்?
15 யெகோவாவிற்கு மட்டுமே பொருந்தும் மற்றொரு பட்டப்பெயர், “என்றென்றுமுள்ள ராஜா.” (1 தீமோத்தேயு 1:17; வெளிப்படுத்துதல் 15:3) இதன் அர்த்தம் என்ன? மட்டுப்பட்ட நம் மனங்களால் இதை புரிந்துகொள்வது கடினம்; ஆனால் யெகோவா, கடந்தகாலத்தை பொறுத்ததிலும் நித்தியமானவர், எதிர்காலத்தை பொறுத்ததிலும் நித்தியமானவர். “என்றென்றும் கடவுளாக இருக்கிறவர் நீங்கள்தான்” என சங்கீதம் 90:2 சொல்கிறது. ஆக யெகோவாவிற்கு ஆரம்பமே இல்லை; அவர் எப்போதுமே இருந்திருக்கிறார். அவர் “யுகம் யுகமாக வாழ்கிறவர்” என சரியாகவே அழைக்கப்படுகிறார்; ஏனெனில், இந்த பிரபஞ்சத்தில் வேறு எதுவும் அல்லது எவரும் தோன்றுவதற்கு முன்பே அவர் நித்திய காலமாக வாழ்ந்து வந்திருக்கிறார்! (தானியேல் 7:9, 13, 22) உன்னதப் பேரரசராக இருக்கும் அவரது உரிமையைக் குறித்து யாரால் நியாயமாக கேள்வி கேட்க முடியும்?
16, 17. (அ) நம்மால் ஏன் யெகோவாவை பார்க்க முடியாது, இதைக் குறித்து நாம் ஏன் ஆச்சரியப்பட வேண்டியதில்லை? (ஆ) நாம் காணும் அல்லது தொடும் எதைக் காட்டிலும் யெகோவா எந்த அர்த்தத்தில் அதிக நிஜமானவர்?
16 ஆனால் பார்வோனைப் போல சிலர் அந்த உரிமையைக் குறித்து கேள்வி கேட்கத்தான் செய்கிறார்கள். இப்பிரச்சினைக்கு ஒரு காரணம், அபூரண மனிதர்கள் தங்கள் கண்களால் காண முடிந்தவற்றின்மீது அளவுக்கு அதிகமான நம்பிக்கை வைப்பதே. நம்மால் உன்னதப் பேரரசரை காண முடியாது. அவர் பார்க்க முடியாத உருவத்தில் இருக்கிறார்; மனித கண்களுக்கு புலப்படாதவர். (யோவான் 4:24) அதுமட்டுமின்றி, மாம்சமும் இரத்தமும் உடைய மனிதன் யெகோவா தேவனுக்கு அருகில் சென்றால் உயிரையே இழக்க நேரிடும். யெகோவாவே மோசேயிடம் இப்படி சொன்னார்: “நீ என் முகத்தைப் பார்க்க முடியாது. ஏனென்றால், என்னைப் பார்க்கிற எந்த மனுஷனும் உயிரோடு இருக்க முடியாது.”—யாத்திராகமம் 33:20; யோவான் 1:18.
17 இதைக் குறித்து நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. யெகோவாவுடைய மகிமையின் ஒரு பகுதியை மட்டுமே ஒரு தேவதூத பிரதிநிதியின் மூலமாக மோசேயினால் காண முடிந்தது. ஆனாலும் என்ன நடந்தது? அதற்கு பிறகு கொஞ்ச நேரத்திற்கு மோசேயின் முகம் “ஒளிவீசியது.” மோசேயின் முகத்தை நேரடியாக பார்ப்பதற்கும்கூட இஸ்ரவேலர்கள் பயந்தனர். (யாத்திராகமம் 33:21-23; 34:5-7, 29, 30) ஆகவே, உன்னதப் பேரரசரை அனைத்து மகிமையோடும் பார்க்க எந்த சாதாரண மனிதனாலும் நிச்சயமாகவே முடியாது! அப்படியென்றால் பார்க்கவும் தொடவும் முடிந்த பொருட்களைப்போல் அந்தளவு அவர் நிஜமானவரல்ல என அர்த்தமா? இல்லை. காற்று, வானொலி அலை, சிந்தனைகள் போன்ற கண்ணால் காண முடியாத அநேக காரியங்களை நாம் நிஜமானதாக நம்புகிறோமே. அதோடு, யெகோவா நிரந்தரமானவர், கால ஓட்டத்தால்—கோடானு கோடி ஆண்டுகளால்கூட—பாதிக்கப்படாதவர்! கண்ணுக்கு புலப்படும் சடப்பொருட்களோ பழமையடைகின்றன, பாழாகின்றன. இந்த அர்த்தத்தில்தான், காண அல்லது தொட முடிந்த எதைக் காட்டிலும் யெகோவா அதிக நிஜமானவராக இருக்கிறார். (மத்தேயு 6:19) இருந்தாலும், புரிந்துகொள்ள முடியாத, பண்புகளற்ற வெறும் ஒரு சக்தியாக அல்லது ஏதோவொரு தெளிவற்ற மூலகாரணமாக அவரை நாம் கருத வேண்டுமா? இதை கொஞ்சம் சிந்திக்கலாம்.
ஆளுமை உள்ள ஒரு கடவுள்
18. எசேக்கியேலுக்கு என்ன தரிசனம் காட்டப்பட்டது, யெகோவாவின் அருகில் இருக்கும் ‘ஜீவன்களின்’ நான்கு முகங்கள் எதை குறிக்கின்றன?
18 நம்மால் கடவுளை பார்க்க முடியாவிட்டாலும், பரலோக காட்சிகளை விவரிக்கக்கூடிய சிலிர்ப்பூட்டும் விவரங்கள் பைபிளில் இருக்கின்றன. எசேக்கியேல் முதலாம் அதிகாரம் இதற்கு ஓர் உதாரணம். யெகோவாவுடைய சர்வலோக அமைப்பின் பரலோக பாகத்தை எசேக்கியேல் தரிசனத்தில் பார்த்தார்; அந்த அமைப்பை மாபெரும் பரம ரதமாக அவர் தரிசனத்தில் கண்டார். விசேஷமாக, யெகோவாவை சூழ்ந்திருக்கும் வல்லமையுள்ள ஆவி சிருஷ்டிகளின் விவரிப்பு மனதைக் கவருகிறது. (எசேக்கியேல் 1:4-10) இந்த “ஜீவன்கள்” யெகோவாவோடு நெருங்கிய தொடர்புள்ளவை; அவற்றின் தோற்றம், அவை சேவிக்கும் கடவுளைப் பற்றி முக்கியமான ஒன்றை வெளிக்காட்டுகிறது. அவை ஒவ்வொன்றிற்கும் நான்கு முகங்கள்—காளை முகம், சிங்க முகம், கழுகு முகம், மனுஷ முகம்—உண்டு. இவை யெகோவாவுடைய அற்புதமான சுபாவத்தின் அடிப்படையாக இருக்கும் நான்கு பண்புகளை குறிப்பதாக தோன்றுகின்றன.—வெளிப்படுத்துதல் 4:6-8, 10.
19. இவை என்ன பண்புகளை அடையாளப்படுத்துகின்றன: (அ) காளை முகம், (ஆ) சிங்க முகம், (இ) கழுகு முகம், (ஈ) மனுஷ முகம்.
19 பைபிளில் காளை பெரும்பாலும் வல்லமையை பிரதிநிதித்துவம் செய்கிறது. இது பொருத்தமானதும்கூட, ஏனெனில் அது அபார பலம் படைத்த ஒரு மிருகம். மறுபட்சத்தில், சிங்கம் பெரும்பாலும் நீதியை அடையாளப்படுத்துகிறது; ஏனெனில், மெய்யான நீதி தைரியத்தை தேவைப்படுத்துகிறது, இந்தத் தைரியத்திற்கு பெயர்போனதுதான் சிங்கம். கழுகுகள் கூர்மையான பார்வைக்கு பெயர்போனவை, சின்னஞ்சிறு பொருட்களை நூற்றுக்கணக்கான மீட்டர் தூரத்திலிருந்தும் அவற்றால் காண முடியும். ஆகவே கழுகு முகம், கடவுளுடைய தொலைநோக்கு ஞானத்தை நன்கு படம்பிடித்துக் காட்டுகிறது. மனுஷ முகம் எதை குறிக்கிறது? கடவுளுடைய சாயலில் உண்டாக்கப்பட்ட மனிதன், அவரது பிரதான பண்பாகிய அன்பை வெளிக்காட்டும் ஒப்பற்ற திறனை பெற்றிருக்கிறான். (ஆதியாகமம் 1:26) யெகோவாவுடைய ஆளுமையின் இந்த அம்சங்கள்—வல்லமை, நீதி, ஞானம், அன்பு ஆகியவை—வேதாகமத்தில் அவ்வளவு அடிக்கடி சிறப்பித்துக் காட்டப்படுவதால் அவற்றை கடவுளின் முதன்மையான பண்புகள் என்றே அழைக்கலாம்.
20. யெகோவாவின் ஆளுமை மாறிவிட்டிருக்கலாம் என நினைத்து நாம் கவலைப்பட வேண்டுமா, ஏன் அப்படி சொல்கிறீர்கள்?
20 பைபிளில் விவரிக்கப்பட்ட சமயத்திலிருந்து இந்த ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் கடவுள் மாறியிருப்பார் என நினைத்து நாம் கவலைப்பட வேண்டுமா? வேண்டியதில்லை, கடவுளுடைய ஆளுமை மாறுவதே இல்லை. “நான் யெகோவா; நான் மாறுவதில்லை” என அவர் நமக்கு சொல்கிறார். (மல்கியா 3:6) யெகோவா, மனம் போகிற போக்கில் திடீர் திடீரென மாறுவதற்கு பதிலாக, தலைசிறந்த தகப்பன் என்பதை நிரூபிக்கும் விதத்தில் ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஏற்ப செயல்படுகிறார். எந்த பண்புகளை வெளிக்காட்டுவது மிகப் பொருத்தமாக இருக்குமோ அவற்றை வெளிக்காட்டுகிறார். யெகோவாவுக்கு இருக்கும் எல்லா பண்புகளிலும் மேலோங்கியிருப்பது அவரது அன்பே. அவரது ஒவ்வொரு செயலிலும் அன்பு இழையோடுகிறது. அவர் தமது வல்லமையையும் நீதியையும் ஞானத்தையும் அன்பான விதத்தில் வெளிக்காட்டுகிறார். சொல்லப்போனால், கடவுளையும் இந்தக் குணத்தையும் பற்றி குறிப்பிடத்தக்க ஒன்றை பைபிள் சொல்கிறது. “கடவுள் அன்பாகவே இருக்கிறார்” என அது சொல்கிறது. (1 யோவான் 4:8) கடவுளுக்கு அன்பு இருக்கிறது அல்லது கடவுள் அன்பு காட்டுகிறவர் என சொல்லாமல் கடவுள் அன்பாகவே இருக்கிறார் என அது சொல்வதைக் கவனியுங்கள். அவரது இயல்பின் அடிப்படை அம்சமாகிய அன்பு, அவரது எல்லா செயல்களுக்கும் உந்துதலாக இருக்கிறது.
“இவர்தான் நம் கடவுள்!”
21. யெகோவாவின் பண்புகளை அதிகமதிகமாக தெரிந்துகொள்ளும்போது நாம் எப்படி உணருவோம்?
21 ஒரு சிறு பிள்ளை நண்பர்களிடம் தன் அப்பாவைக் காட்டி, ‘அதுதான் என் அப்பா’ என சந்தோஷப் பெருமிதத்தோடு கள்ளங்கபடம் இல்லாமல் சொல்வதைக் கேட்டிருக்கிறீர்களா? யெகோவாவைக் குறித்தும் அவரது வணக்கத்தார் அவ்வாறே உணர தகுந்த காரணம் உண்டு. “இவர்தான் நம் கடவுள்!” என உண்மையுள்ள மக்கள் அனைவரும் ஆனந்தமாய் ஆர்ப்பரிக்கும் ஒரு காலத்தைப் பற்றி பைபிள் முன்னறிவிக்கிறது. (ஏசாயா 25:8, 9) யெகோவாவின் பண்புகளை எவ்வளவு ஆழமாக புரிந்துகொள்கிறீர்களோ அவ்வளவு அதிகமாக அவரே தலைசிறந்த தகப்பன் என்பதை உணருவீர்கள்.
22, 23. பைபிள் நம் பரலோக தகப்பனை எப்படி சித்தரிக்கிறது, நாம் அவரோடு நெருங்கியிருக்க வேண்டுமென அவர் விரும்புவது நமக்கு எப்படி தெரியும்?
22 இந்தத் தகப்பன், உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல், ஒதுங்கியிருப்பவர் அல்ல; கறாரான மதவாதிகள் சிலரும் தத்துவஞானிகள் சிலரும் அப்படி கற்பித்திருந்தாலும் அது உண்மையல்ல. உணர்ச்சிகளற்ற ஒரு கடவுளிடம் நாம் ஈர்க்கப்படவே மாட்டோம், பைபிள் நம் பரலோக தந்தையை அப்படி சித்தரிப்பதும் இல்லை. மறுபட்சத்தில் அவரை “சந்தோஷமுள்ள கடவுள்” என அழைக்கிறது. (1 தீமோத்தேயு 1:11) அவருக்கு வலிமையான உணர்ச்சிகளும் உண்டு, மென்மையான உணர்ச்சிகளும் உண்டு. புத்திக்கூர்மையுள்ள தம் சிருஷ்டிகளின் நலனுக்காக கொடுத்த வழிகாட்டுதல்களை ஒருசமயம் அவர்கள் மீறியபோது, அவருடைய ‘உள்ளம் மிகவும் வேதனைப்பட்டது.’ (ஆதியாகமம் 6:6; சங்கீதம் 78:41) ஆனால் அவரது வார்த்தைக்கு இசைவாக ஞானமாய் நடக்கும்போது நாம் அவரது ‘இருதயத்தைச் சந்தோஷப்படுத்துகிறோம்.’—நீதிமொழிகள் 27:11.
23 நம் தகப்பன், நாம் அவரோடு நெருங்கியிருக்க வேண்டும் என்றே விரும்புகிறார். ‘அவரை . . . தட்டித் தடவியாவது கண்டுபிடியுங்கள்’ என்று அவரது வார்த்தை நம்மை உற்சாகப்படுத்துகிறது; ஏனென்றால் ‘அவர் நம் ஒருவருக்கும் தூரமானவராக இல்லை’ என்கிறது. (அப்போஸ்தலர் 17:27) இருந்தாலும், சாதாரண மனிதர்கள் உன்னதப் பேரரசரிடம் எப்படி நெருங்கி வர முடியும்?