அதிகாரம் 31
யெகோவாவின் செயல்கள்—மகத்துவமும் ஆச்சரியமுமானவை
தரிசனம் 10—வெளிப்படுத்துதல் 15:1–16:21
பொருள்: யெகோவா தமது மகா பரிசுத்த ஸ்தலத்தில் இருக்கிறார்; அவருடைய கோபத்தின் ஏழு கலசங்கள் பூமிக்குள் ஊற்றப்படுகின்றன
நிறைவேற்றத்தின் காலம்: 1919-லிருந்து அர்மகெதோன் வரை
1, 2. (அ) எந்த மூன்றாவது அடையாளத்தை யோவான் அறிவிக்கிறார்? (ஆ) தூதர் வகிக்கும் என்ன பாகத்தை யெகோவாவின் ஊழியர்கள் வெகு காலமாக அறிந்திருக்கின்றனர்?
ஒரு பெண் ஓர் ஆண் குழந்தையைப் பிறப்பிக்கிறாள்! ஒரு பெரிய வலுசர்ப்பம் அந்தக் குழந்தையை விழுங்கிப்போட நாடுகிறது! வெளிப்படுத்துதல் 12-ம் அதிகாரத்தில் அவ்வளவு உயிர்ப்புள்ள முறையில் விளக்கமாக வருணிக்கப்பட்டுள்ள இந்தப் பரலோக அடையாளங்கள் இரண்டும், கடவுளுடைய ஸ்திரீயின் வித்தும், சாத்தானும் அவனுடைய பேய்த்தன வித்தும் உட்பட்ட நீடித்தக்கால விவாதப் போராட்டம் அதன் உச்ச நிலையை எட்டுகிறதென்பதை நம்முடைய நினைவுக்குக் கொண்டுவந்தது. இந்தச் சின்னங்களை முனைப்பாய் எடுத்துக் காட்டி, யோவான் பின்வருமாறு சொல்லுகிறார்: “ஒரு பெரிய அடையாளம் வானத்தில் காணப்பட்டது . . . வேறொரு அடையாளமும் வானத்தில் காணப்பட்டது.” (வெளிப்படுத்துதல் 12:1, 3, 7-12) இப்பொழுது ஒரு மூன்றாவது அடையாளத்தை யோவான் அறிவிக்கிறார்: “பின்பு மற்றுமோர் அடையாளத்தை வானத்தில் கண்டேன், அது பெரியது, ஆச்சரியகரமானது; ஏழு வாதைகளையுடைய ஏழு தூதரைக் கண்டேன். இவையே கடைசி வாதைகள், இவற்றோடு கடவுளின் கோபாக்கினை முற்றுப்பெறும்.” (வெளிப்படுத்துதல் 15:1, தி.மொ.) இந்த மூன்றாம் அடையாளமும் யெகோவாவின் ஊழியர்களுக்கு முக்கிய உட்பொருளைக் கொண்டிருக்கிறது.
2 கடவுளுடைய சித்தத்தை நிறைவேற்றுவதில் தேவதூதர்கள் மறுபடியும் வகிக்கும் இந்த முக்கியமான பாகங்களைக் கவனியுங்கள். இந்த உண்மையை யெகோவாவின் ஊழியர்கள் வெகு காலமாக அறிந்துள்ளனர். பூர்வகால சங்கீதக்காரன் தேவாவியின் ஏவுதலின்கீழ் இத்தகைய தூதர்களிடம் பேசி, அவர்களைப் பின்வருமாறு ஊக்கப்படுத்தியும் இருக்கிறார்: “யெகோவாவினுடைய சொல்லின் சத்தத்துக்குச் செவிகொடுத்து அவர் சொற்படி செய்கிற பலத்த வீரர்களே, அவர் தூதர்களே, அவரை ஸ்தோத்திரியுங்கள்”! (சங்கீதம் 103:20, தி.மொ.) இப்பொழுது, இந்தப் புதிய காட்சியில், தூதர்கள் இந்த ஏழு கடைசி வாதைகளை ஊற்றும்படி நியமிக்கப்படுகின்றனர்.
3. அந்த ஏழு வாதைகள் யாவை, அவற்றை ஊற்றுவது எதைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது?
3 இந்த வாதைகள் யாவை? அந்த ஏழு எக்காள ஊதல்களைப்போல், இவை வாதிக்கிற நியாயத்தீர்ப்பு அறிவிப்புகள், இந்த உலகத்தின் பல்வேறு அம்சங்களை யெகோவா கருதும் முறையை யாவரறிய பிரஸ்தாபித்து அவருடைய நியாயத்தீர்ப்புகளின் முடிவான விளைவைக் குறித்து எச்சரிப்பவை. (வெளிப்படுத்துதல் 8:1–9:21) அவற்றை ஊற்றுவதானது அந்த ஆக்கினைத் தீர்ப்புகளின் நிறைவேற்றத்தைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது, அப்பொழுது யெகோவாவின் உக்கிர கோபத்துக்காளானவர்கள் அவருடைய கொழுந்துவிட்டெரியும் கோபத்தின் நாளில் அழிக்கப்படுவார்கள். (ஏசாயா 13:9-13; வெளிப்படுத்துதல் 6:16, 17) இவ்வாறு, அவர்கள் மூலம் “கடவுளின் கோபாக்கினை முற்றுப் பெறும்.” ஆனால் இந்த வாதைகள் ஊற்றப்படுவதை விவரிப்பதற்கு முன்னால், அவற்றால் தீங்குண்டாகும் முறையில் பாதிக்கப்படப்போகாத சில மனிதர்களைப் பற்றி யோவான் நமக்குச் சொல்லுகிறார். மூர்க்க மிருகத்தின் முத்திரையைப் பெற மறுத்து, இந்த உண்மைத்தவறாதவர்கள், யெகோவாவின் பழிவாங்கும் நாளை அறிவித்து வருகையில் அவருக்குத் துதிகளைப் பாடுகிறார்கள்.—வெளிப்படுத்துதல் 13:15-17.
மோசேயின் மற்றும் ஆட்டுக்குட்டியானவரின் பாட்டு
4. இப்பொழுது எது யோவானின் காட்சிக்கு வெளிப்படுகிறது?
4 கவனிக்கத்தக்கப் பரந்த ஒரு காட்சி யோவானின் பார்வைக்கு வெளிப்படுகிறது: “அன்றியும், அக்கினிகலந்த கண்ணாடிக் கடல்போன்ற ஒரு கடலையும், மிருகத்திற்கும் அதின் சொரூபத்திற்கும் அதின் முத்திரைக்கும் அதின் நாமத்தின் இலக்கத்திற்கும் உள்ளாகாமல் ஜெயங்கொண்டவர்கள் தேவ சுரமண்டலங்களைப் பிடித்துக்கொண்டு அந்தக் கண்ணாடிக் கடலருகே நிற்கிறதையும் கண்டேன்.”—வெளிப்படுத்துதல் 15:2.
5. “அக்கினி கலந்த கண்ணாடிக் கடல்” என்பதால் படமாகக் குறிப்பிடப்படுவது என்ன?
5 இந்தக் “கண்ணாடிக் கடல்” கடவுளுடைய சிங்காசனத்துக்கு முன்னால் யோவான் முன்பு பார்த்ததேதான். (வெளிப்படுத்துதல் 4:6) இது சாலொமோனின் ஆலயத்தில், ஆசாரியர்கள் தங்களைச் சுத்திகரிக்க தண்ணீர் எடுத்த அந்த ‘வெண்கலக் கடலுக்கு’ (தண்ணீர் கலசத்துக்கு) ஒப்பாக இருக்கிறது. (1 இராஜாக்கள் 7:23) இவ்வாறு இது, ‘தண்ணீர் முழுக்குக்கு,’ அதாவது, அபிஷேகஞ்செய்யப்பட்ட ஆசாரிய சபையை சுத்திகரிக்க இயேசு பயன்படுத்தும் கடவுளுடைய வார்த்தைக்குச் சிறந்த குறியீடாக அமைகிறது. (எபேசியர் 5:25, 26; எபிரெயர் 10:22) இந்தக் கண்ணாடிக் கடல் “அக்கினிகலந்”திருப்பது, அபிஷேகஞ்செய்யப்பட்ட இவர்கள் தங்களுக்குக் குறித்துவைக்கப்பட்டுள்ள உயர் தராதரத்தின்படி கீழ்ப்படிந்து வருகையில் பரீட்சிக்கப்பட்டு சுத்திகரிக்கப்படுகிறார்கள் என்று குறிப்பிட்டுக் காட்டுகிறது. மேலும், கடவுளுடைய வார்த்தை அவருடைய சத்துருக்களுக்கு எதிராக அக்கினிபோன்ற நியாயத்தீர்ப்புக்குரிய வசனிப்புகளையும் அடங்கியதாக உள்ளதெனவும் நமக்கு நினைப்பூட்டுகிறது. (உபாகமம் 9:3; செப்பனியா 3:8) இந்த அக்கினிபோன்ற நியாயத் தீர்ப்புகளில் சில இப்பொழுது ஊற்றப்படவிருக்கிற இந்தக் கடைசி ஏழு வாதைகளில் வெளிப்படுத்தப்படுகின்றன.
6. (அ) பரலோகக் கண்ணாடிக் கடலுக்கு முன்பாக நிற்கும் இந்தப் பாடகர்கள் யாவர், நாம் எவ்வாறு தெரிந்துகொள்கிறோம்? (ஆ) எவ்வகையில் அவர்கள் ‘ஜெயித்தவர்கள்’?
6 சாலொமோனின் ஆலயத்திலிருந்த அந்த வெண்கலக் கடல், ஆசாரியர்கள் பயன்படுத்துவதற்காக இருந்ததானது, இந்தப் பரலோக கண்ணாடிக்கடலுக்கு முன்பாக நிற்கும் இந்தப் பாடகர்கள் ஓர் ஆசாரிய வகுப்பாரெனக் குறிப்பாகத் தெரிவிக்கிறது. இவர்கள் “தேவ சுரமண்டங்களை” உடையோராக இருக்கின்றனர், ஆகையால் நாம் இவர்களை அந்த 24 மூப்பர்களுடனும் 1,44,000 பேர்களுடனும் சம்பந்தப்படுத்துகிறோம், ஏனெனில் அந்தத் தொகுதியினரும் சுரமண்டலங்களை வாசித்துக்கொண்டு பாடுகின்றனர். (வெளிப்படுத்துதல் 5:8; 14:2) யோவான் காணும் இந்தப் பாடகர்கள் மூர்க்க ‘மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் அதின் நாம இலக்கத்தையும் ஜெயித்துத் தப்பிவந்தவர்கள்.’ ஆகையால் இவர்கள் 1,44,000 வகுப்பாரைச் சேர்ந்தவர்களாக, இந்தக் கடைசி நாட்களின்போது பூமியில் வாழ்வோராக இருக்க வேண்டும். ஒரு தொகுதியினராக, அவர்கள் நிச்சயமாகவே ஜெயித்து வெளிவருகிறார்கள். எவ்வாறெனில், 1919 முதற்கொண்ட கிட்டத்தட்ட 90 ஆண்டுகளாக, இந்த மூர்க்க மிருகத்தின் முத்திரையைப் பெற அல்லது அதன் சொரூபத்தைச் சமாதானத்துக்கான மனிதனின் ஒரே நம்பிக்கையாக நோக்க மறுத்துவிட்டிருக்கின்றனர். இவர்களில் பலர் ஏற்கெனவே மரணம் வரையிலும் உண்மையுள்ளோராக சகித்தனர், இப்பொழுது பரலோகத்தில் இருக்கிற இவர்கள், பூமியில் இன்னும் இருந்துகொண்டிருக்கும் தங்கள் சகோதரர் பாடுவதை தனிப்பட்ட இன்பத்துடன் கவனித்துக் கேட்டுக்கொண்டிருக்கின்றனர்.—வெளிப்படுத்துதல் 14:11-13.
7. பூர்வ இஸ்ரவேலில் சுரமண்டலம் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது, யோவானின் தரிசனத்தில் தேவ சுரமண்டலங்கள் இருப்பது நம்மை எவ்வாறு பாதிக்க வேண்டும்?
7 உண்மைத்தவறாதிருந்து வெற்றிப்பெற்ற இவர்கள் தேவ சுரமண்டலத்தை வைத்திருக்கின்றனர். இதில், இவர்கள், சுரமண்டலங்களை வாசித்துக்கொண்டு பாடி யெகோவாவை வணங்கின பூர்வகால ஆலய லேவியர்களைப்போல் இருக்கின்றனர். சிலர் சுரமண்டலங்களை வாசித்துக்கொண்டு தீர்க்கதரிசனமும் உரைத்தனர். (1 நாளாகமம் 15:16; 25:1-3) இந்தச் சுரமண்டலத்தின் அழகிய ஓசைகள் இஸ்ரவேலரின் மகிழ்ச்சிக்குரிய பாட்டுகளுக்கும் யெகோவாவுக்குச் செலுத்தும் துதிக்கும் நன்றியறிதலுக்குமுரிய ஜெபங்களுக்கும் சுவை பெருக்கிற்று. (1 நாளாகமம் 13:8; சங்கீதம் 33:2; 43:4; 57:7, 8) சோர்வுற்ற அல்லது சிறையிருப்பு காலங்களில் சுரமண்டலம் கேட்கப்படவில்லை. (சங்கீதம் 137:2) தரிசனத்தில் தேவ சுரமண்டலங்கள் இருப்பதைக் காண்பது நம்முடைய கடவுளுக்குத் துதியும் நன்றியறிதலையும் செலுத்தும் களிகூருதலின், வெற்றிப் பாட்டைப் பாடுவதற்கான நம் எதிர்பார்ப்பின் ஆவலைத் தூண்டி பெருக்க வேண்டும்.a
8. என்ன பாட்டு பாடப்படுகிறது, அதன் வார்த்தைகள் யாவை?
8 இதையே யோவான் அறிவிக்கிறார்: “அவர்கள் தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் பாட்டையும் ஆட்டுக்குட்டியானவருடைய பாட்டையும் பாடி, சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, [யெகோவாவே, NW] தேவரீருடைய கிரியைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள், பரிசுத்தவான்களின் [நித்தியத்தின், NW] ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள். கர்த்தாவே, [யெகோவாவே, NW], யார் உமக்குப் பயப்படாமலும், உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருக்கலாம்? தேவரீர் ஒருவரே பரிசுத்தர், எல்லா ஜாதிகளும் வந்து உமக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்கள்; உம்முடைய நீதியான செயல்கள் வெளியரங்கமாயின என்றார்கள்.”—வெளிப்படுத்துதல் 15:3, 4, தி.மொ.
9. ஏன் இந்தப் பாட்டு, ஓரளவில், ‘மோசேயின் பாட்டு’ என்று அழைக்கப்படுகிறது?
9 இந்த ஜெயித்தவர்கள் “மோசேயின் பாட்டை,” அதாவது, இதைப்போன்ற சூழ்நிலைமைகளில் மோசே பாடினதைப்போன்ற ஒரு பாட்டைப் பாடுகிறார்கள். இஸ்ரவேலர் எகிப்தில் அந்தப் பத்து வாதைகளையும் சிவந்த சமுத்திரத்தில் எகிப்தியரின் சேனைகளின் அழிவையும் கண்கூடாகக் கண்டபின்பு, மோசே யெகோவாவுக்கு வெற்றித் துதி பாடும் இத்தகைய ஒரு பாட்டைப் பாடுவதில் அவர்களை வழிநடத்தி, “யெகோவா சதாகாலங்களாகிய என்றென்றைக்கும் அரசாட்சி செய்வார்” என்று கூறி பாடினார். (யாத்திராகமம் 15:1-19, NW) யோவானின் தரிசனத்தில் மூர்க்க மிருகத்தின்மேல் வெற்றிப்பெற்று வருவோரும் ஏழு கடைசி வாதைகளை யாவரறிய அறிவிப்பதில் உட்பட்டிருப்போருமான இந்தப் பாடகர்களுங்கூட ‘நித்தியத்தின் ராஜாவுக்குத்’ துதி பாடவேண்டியது எவ்வளவு பொருத்தமாயிருக்கிறது!—1 தீமோத்தேயு 1:17.
10. வேறு என்ன பாட்டையும் மோசே இயற்றினார், அதன் கடைசி வசனம் எவ்வாறு இன்றைய திரள் கூட்டத்தாருக்குச் சம்பந்தப்படுகிறது?
10 இஸ்ரவேலர் கானானை வென்று கைப்பற்றுவதற்கு ஆயத்தஞ்செய்கையில் இயற்றின மற்றொரு பாட்டில், முதிர்வயதிலிருந்த மோசே அந்த ஜனத்தினிடம் பின்வருமாறு கூறினார்: “யெகோவா திருநாமம் பிரசித்தம்பண்ணுவேன்; நமது கடவுளுக்கு மகத்துவம் செலுத்துக”! இந்தப் பாட்டின் கடைசி வசனமும் இஸ்ரவேலரல்லாதவர்களுக்கு ஊக்கமூட்டுதலைக் கொடுத்தது, தேவாவியால் ஏவப்பட்ட மோசேயின் பின்வரும் வார்த்தைகள் இன்றைய திரள் கூட்டத்தார் வரையாகவும் எட்டுகின்றன: “ஜாதிகளே அவர் ஜனங்களோடுகூடக் களிகூருங்கள்.” அவர்கள் ஏன் களிகூர வேண்டும்? ஏனெனில் இப்பொழுது யெகோவா “தமது ஊழியர் இரத்தத்திற்குப் பழிவாங்குவார்; தமது விரோதிகளுக்குப் பதில்செய்வார்.” இந்த நீதியுள்ளத் தீர்ப்பின் நிறைவேற்றம் யெகோவாவில் நம்பிக்கை வைத்திருக்கிற யாவருக்கும் பெருமகிழ்ச்சி ஆரவாரத்தைக் கொண்டுவரும்.—உபாகமம் 32:3, 43, தி.மொ.; ரோமர் 15:10-13; வெளிப்படுத்துதல் 7:9.
11. யோவான் கேட்ட அந்தப் பாட்டு எவ்வாறு தொடர்ந்து ஒரு நிறைவேற்றத்தை உடையதாக இருக்கிறது?
11 மோசேதானே இப்பொழுது கர்த்தருடைய நாளில் இருந்து, இந்தப் பரலோக சேர்ந்திசையோடுகூட சேர்ந்து பின்வருமாறு பாடிக்கொண்டிருப்பதில் எவ்வளவாய்க் களிகூர்ந்திருப்பார்: ‘சகல ஜாதிகளும் வருவார்கள், உமது முன் பணிவார்கள்!’ இந்த மிக மேம்பட்ட பாட்டு, வெறும் தரிசனத்தில் மட்டுமல்ல, நாம் காண்கிறபடி, ‘ஜாதிகளி’லிருந்து லட்சக்கணக்கான ஆட்கள் யெகோவாவின் பூமிக்குரிய அமைப்புக்கு மகிழ்ச்சியுடன் திரண்டு வருவதில், நிகழும் உண்மையாக இன்று தொடர்ந்து அதிசயமான நிறைவேற்றத்தை உடையதாக இருக்கிறது.
12. ஜெயங்கொண்டவர்களின் அந்தப் பாட்டு ஏன் ‘ஆட்டுக்குட்டியானவருடைய பாட்டு’ என்றும் அழைக்கப்படுகிறது?
12 எனினும், இந்தப் பாட்டு மோசேயினுடையது மட்டுமல்ல “ஆட்டுக்குட்டியானவரு”டையதாகவும் இருக்கிறது. எவ்வாறு? மோசே இஸ்ரவேலுக்கு யெகோவாவின் தீர்க்கதரிசியாக இருந்தார், ஆனால் தன்னைப் போன்ற ஒரு தீர்க்கதரிசியை யெகோவா எழுப்புவாரென மோசேதானே தீர்க்கதரிசனம் உரைத்தார். இவர் ஆட்டுக்குட்டியானவராகிய இயேசு கிறிஸ்துவாக நிரூபித்தார். மோசே ‘கடவுளின் அடியானாக’ இருந்தார், இயேசுவோ கடவுளுடைய குமாரனாக, உண்மையில், மோசேயைப் பார்க்கிலும் பெரியவராக இருந்தார். (உபாகமம் 18:15-19; அப்போஸ்தலர் 3:22, 23; எபிரெயர் 3:5, 6) ஆகவே, இந்தப் பாடகர்கள் “ஆட்டுக்குட்டியானவருடைய பாட்டையும்” பாடினார்கள்.
13. (அ) இயேசு மோசேயைப் பார்க்கிலும் பெரியவராக இருக்கிறபோதிலும் எவ்வாறு மோசேயைப்போல் இருக்கிறார்? (ஆ) இந்தப் பாடகர்களோடு நாம் எவ்வாறு ஒருமனப்படலாம்?
13 மோசேயைப் போல், இயேசு யாவரறிய வெளியரங்கமாய்க் கடவுளுடைய துதிகளைப் பாடி சகல சத்துருக்களின்மீதும் அவருடைய வெற்றியைப் பற்றித் தீர்க்கதரிசனம் உரைத்தார். (மத்தேயு 24:21, 22; 26:30; லூக்கா 19:41-44) ஜாதிகள் யெகோவாவைத் துதிப்பதற்கு உள்ளே வரும் அந்தக் காலத்தை இயேசுவும் ஆவலோடு எதிர்பார்த்தார், மேலும், இதை சாத்தியமாக்க அவர் தம்மையே தியாகம் செய்யும் “தேவ ஆட்டுக்குட்டியாகத்” தம்முடைய மனித உயிரைப் பலியாகக் கொடுத்தார். (யோவான் 1:29; வெளிப்படுத்துதல் 7:9; ஒப்பிடுங்கள்: ஏசாயா 2:2-4; சகரியா 8:23.) மோசே கடவுளுடைய பெயராகிய, யெகோவா என்பதை உயர்வாய் மதித்துணர்ந்தவராகி, அந்தப் பெயரை மிக உயர்வாய்ப் புகழ்ந்ததைப்போல், இயேசுவும் கடவுளுடைய பெயரை வெளிப்படுத்தினார். (யாத்திராகமம் 6:2, 3; சங்கீதம் 90:1, 17, தி.மொ.; யோவான் 17:6) யெகோவா உண்மையுள்ளவராதலால், அவருடைய மகிமையான வாக்குகள் நிச்சயமாக நிறைவேறும். அப்படியானால், பின்வரும் இந்தப் பாட்டின் வார்த்தைகளுக்கு ஒப்புதல் தெரிவிப்பதில் நாமும் இந்த உண்மைத்தவறாத பாடகர்களுடனும் ஆட்டுக்குட்டியானவருடனும், மோசேயினுடனும் ஒருமனப்பட்டிருக்கிறோம்: “கர்த்தாவே [யெகோவாவே, NW], யார் உமக்குப் பயப்படாமலும், உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருக்கலாம்?”
தூதர்கள் கலசங்களுடன்
14. அந்த மகா பரிசுத்த ஸ்தலத்திலிருந்து யார் புறப்பட்டு வருவதை யோவான் காண்கிறார், அவர்களுக்கு என்ன கொடுக்கப்படுகிறது?
14 அபிஷேகஞ்செய்யப்பட்ட இந்த வெற்றிச் சிறந்தோரின் பாட்டை நாம் கேட்பது பொருத்தமாயுள்ளது. ஏன்? ஏனெனில் அவர்கள், கடவுளுடைய கோபாக்கினை நிறைந்த அந்தக் கலசங்களில் அடங்கிய நியாயத்தீர்ப்புகளை பூமியில் யாவரறிய பிரஸ்தாபித்திருக்கிறார்கள். ஆனால் இந்தக் கலசங்களை ஊற்றுவது, யோவான் பின்வருமாறு மேலும் தொடர்ந்து காட்டுவதுபோல், வெறும் மனிதர்களைப் பார்க்கிலும் அதிகத்தை உட்படுத்துகிறது: “இவைகளுக்குப் பின்பு, நான் பார்த்தபோது, இதோ, பரலோகத்திலே சாட்சியின் கூடாரமாகிய ஆலயம் திறக்கப்பட்டது; அந்த ஆலயத்திலிருந்து [மகா பரிசுத்த ஸ்தலத்திலிருந்து, NW] ஏழு வாதைகளையுடைய அவ்வேழு தூதர்களும் சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரந்தரித்து, மார்பருகே பொற்கச்சைகளைக் கட்டிக்கொண்டு புறப்பட்டார்கள். அப்பொழுது அந்த நான்கு ஜீவன்களில் ஒன்று, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிற தேவனுடைய கோபாக்கினையால் நிறைந்த பொற்கலசங்கள் ஏழையும் அந்த ஏழு தூதர்களுக்குங் கொடுத்தது.”—வெளிப்படுத்துதல் 15:5-7.
15. இந்த ஏழு தூதர்கள் மகா பரிசுத்த ஸ்தலத்திலிருந்து புறப்பட்டு வருவது ஏன் ஆச்சரியமல்ல?
15 பரலோகக் காரியங்களை அடையாளமாகக் குறிப்பிட்ட சின்னங்களடங்கிய, இஸ்ரவேலரின் ஆலயத்தை குறித்ததில், அந்த மகா பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரதான ஆசாரியன் மாத்திரமே பிரவேசிக்க முடியும். (எபிரெயர் 9:3, 7) இது பரலோகத்தில் யெகோவா இருக்கும் இடத்தை அடையாளமாகக் குறிக்கிறது. எனினும், பரலோகத்தில்தானே, யெகோவாவின் முன்னிலையில் பிரவேசிக்கும் சிலாக்கியம் பிரதான ஆசாரியராகிய இயேசு கிறிஸ்துக்கு மட்டுமல்ல தேவதூதர்களுக்கும் உண்டு. (மத்தேயு 18:10; எபிரெயர் 9:24-26) அவ்வாறெனில், இந்த ஏழு தூதர்களும் பரலோகத்திலுள்ள மகா பரிசுத்த ஸ்தலத்திலிருந்து வருவதைக் காண்பது ஆச்சரியமல்ல. யெகோவா தேவனிடமிருந்தே அவர்களுக்குக் கட்டளை பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது: கடவுளின் கோபாக்கினை நிறைந்த கலசங்களை ஊற்றுங்கள்.—வெளிப்படுத்துதல் 16:1.
16. (அ) இந்த ஏழு தூதர்களும் தங்கள் வேலைக்கு நன்றாய்த் தகுதிபெற்றிருக்கின்றனரென எது காண்பிக்கிறது? (ஆ) அடையாளக் குறிப்பான கலசங்களை ஊற்றும் அந்தப் பெரிய வேலைப்பொறுப்பில் மற்றவர்களும் உட்பட்டுள்ளனரென எது குறிப்பாகக் காட்டுகிறது?
16 இந்தத் தூதர்கள் இந்த வேலைக்கு நன்றாய்த் தகுதிபெற்றிருக்கிறார்கள். அவர்கள் சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய உடை தரித்திருக்கின்றனர், இது அவர்கள் யெகோவாவின் பார்வையில் ஆவிக்குரிய பிரகாரமாய்ச் சுத்தமாயும் பரிசுத்தமாயும், நீதியுள்ளோராயும் இருக்கிறார்களெனக் காட்டுகிறது. மேலும் அவர்கள் பொற்கச்சைகளைத் தரித்திருக்கின்றனர். கச்சைகள் ஒருவர் ஒரு வேலையை நிறைவேற்றுவதற்குத் தன் ஆடைகளை இறுக்கிக் கட்டிக்கொள்வதற்குப் பொதுவாய்ப் பயன்படுத்தப்படுகின்றன. (லேவியராகமம் 8:7, 13; 1 சாமுவேல் 2:18; லூக்கா 12:37; யோவான் 13:4, 5) ஆகவே இந்தத் தூதர்கள், நியமிக்கப்பட்ட ஒரு வேலையை நிறைவேற்றுவதற்காகக் கச்சை அணிந்திருக்கின்றனர். மேலும், அவர்களுடைய கச்சைகள் பொன்னாலாகியவை. பூர்வ ஆசரிப்புக் கூடாரத்தில், தெய்வீக, பரலோகக் காரியங்களைச் சின்னமாகக் குறித்துக் காட்டுவதற்குப் பொன் பயன்படுத்தப்பட்டது. (எபிரெயர் 9:4, 11, 12) இது இந்தத் தூதர்கள் நிறைவேற்றுவதற்குக் கடவுள் கட்டளையிட்டு பொறுப்பளித்துள்ள மதிப்புமிகுந்த, ஒரு சேவையை உடையோராக இருக்கின்றனரெனக் குறிக்கிறது. மற்றவர்களுங்கூட இந்தப் பெரிய வேலை பொறுப்பில் உட்பட்டுள்ளனர். அந்த நான்கு ஜீவன்களில் ஒன்று அந்த உண்மையான கலசங்களை அவர்களிடம் ஒப்படைக்கிறது. சந்தேகமில்லாமல், இது அந்த ஜீவன்களில் முதலாவதாகும், இது சிங்கத்தின் சாயலாக இருந்ததானது யெகோவாவின் ஆக்கினைத்தீர்ப்புகளை யாவரறிய அறிவிப்பதற்குத் தேவைப்படும் பயமற்றத் தீரத்தையும் தளர்வுறாத தைரியத்தையும் அடையாளமாகக் குறித்தது.—வெளிப்படுத்துதல் 4:7.
யெகோவா தம்முடைய மகா பரிசுத்த ஸ்தலத்தில்
17. அந்த மகா பரிசுத்த ஸ்தலத்தைப்பற்றி யோவான் நமக்கு என்ன சொல்லுகிறார், இது எவ்வாறு பூர்வ இஸ்ரவேலில் இருந்த பரிசுத்த ஸ்தலத்தைப்பற்றி நமக்கு நினைப்பூட்டுகிறது?
17 கடைசியாக, தரிசனத்தின் இந்தப் பாகத்தை முடித்து, யோவான் நமக்குப் பின்வருமாறு சொல்லுகிறார்: “அப்பொழுது, தேவனுடைய மகிமையினாலும் அவருடைய வல்லமையினாலும் உண்டான புகையினாலே தேவாலயம் நிறைந்தது; ஏழு தூதர்களுடைய ஏழு வாதைகளும் முடியும்வரைக்கும் ஒருவரும் தேவாலயத்திற்குள் [மகா பரிசுத்த ஸ்தலத்துக்குள், NW] பிரவேசிக்கக் கூடாதிருந்தது.” (வெளிப்படுத்துதல் 15:8) சொல்லர்த்தமான பரிசுத்த ஸ்தலத்தை மேகம் மூடின சந்தர்ப்பங்கள் இஸ்ரவேலின் சரித்திரத்தில் இருந்தன, மேலும் யெகோவாவின் மகிமையின் இந்த வெளிப்பாடு ஆசாரியர்கள் அதற்குள் பிரவேசிப்பதைத் தடுத்து வைத்தது. (1 இராஜாக்கள் 8:10, 11; 2 நாளாகமம் 5:13, 14; ஏசாயா 6:4, 5-ஐ ஒப்பிடுங்கள்.) இவை பூமியில் படிப்படியாய் ஏற்பட்ட காரியங்களோடு யெகோவா செயல்படுவோராக உட்பட்ட காலங்கள்.
18. யெகோவாவிடம் அறிக்கை செய்வதற்கு இந்த ஏழு தூதர்களும் எப்பொழுது திரும்பிச் செல்வார்கள்?
18 இப்பொழுது பூமியில் சம்பவித்துக்கொண்டிருக்கும் காரியங்களிலும் யெகோவா ஆழ்ந்த அக்கறையுடையவராக இருக்கிறார். அந்த ஏழு தூதர்கள் தங்கள் வேலை பொறுப்பை முழுமையாகச் செய்து முடிக்கும்படி அவர் விரும்புகிறார். சங்கீதம் 4-6-ல் (தி.மொ.) விவரிக்கப்பட்டிருக்கிறபடி, இது நியாயத்தீர்ப்பின் முக்கிய உச்சக்கட்ட காலம்: “யெகோவா தமது பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார், யெகோவாவின் சிங்காசனம் பரலோகத்திலிருக்கிறது; அவருடைய கண்கள் மனுமக்களைப் பார்க்கும், அவருடைய இமைகள் மனுமக்களைச் சோதித்தறியும். யெகோவா நீதிமான்களைச் சோதித்தறிவார், தெய்வபயமற்றவனையும் இம்சைசெய்வதில் விருப்பமுள்ள யாவரையும் அவர் திருவுள்ளம் வெறுக்கும். தெய்வபயமற்றவர்கள் சிக்கிக்கொள்வதற்கென்று கண்ணிகளை அவர் வருஷிப்பார், அக்கினியும் கந்தகமும் தீக்காற்றும் அவர்களுக்குரிய பங்காகும்.” பொல்லாதவர்கள் மீது இந்த ஏழு வாதைகளும் ஊற்றப்பட்டுத்தீரும் வரையில், இந்த ஏழு தூதர்கள் யெகோவாவின் உன்னத சமுகத்துக்குத் திரும்பிச்செல்ல மாட்டார்கள்.
19. (அ) என்ன கட்டளைப் பிறப்பிக்கப்பட்டது, யாரால்? (ஆ) இந்த அடையாளக் குறிப்பான கலசங்களை ஊற்றுவது எப்போது தொடங்கியிருக்க வேண்டும்?
19 திகிலூட்டும் இந்தக் கட்டளை இடிமுழக்கம்போல் வெளிவருகிறது: “அப்பொழுது தேவாலயத்திலிருந்து [மகா பரிசுத்த ஸ்தலத்திலிருந்து, NW] உண்டான ஒரு பெருஞ்சத்தம் அந்த ஏழு தூதருடனே நீங்கள் போய்த் தேவனுடைய கோபகலசங்களைப் பூமியின்மேல் ஊற்றுங்கள் என்று சொல்லக்கேட்டேன்.” (வெளிப்படுத்துதல் 16:1) இந்தக் கட்டளையைப் பிறப்பிக்கிறவர் யார்? இது கட்டாயமாக யெகோவாவாகவே இருக்க வேண்டும், ஏனெனில் அவருடைய மகிமையின் மற்றும் வல்லமையின் பிரகாசம் மகா பரிசுத்த ஸ்தலத்துக்குள் வேறு எவரும் பிரவேசிக்காதபடி தடுத்து வைத்தது. நியாயத்தீர்ப்பு வேலைக்காக 1918-ல் யெகோவா தம்முடைய ஆவிக்குரிய ஆலயத்துக்கு வந்தார். (மல்கியா 3:1-5) அவ்வாறெனில், அந்தத் தேதிக்குச் சற்றுப் பின்பே கடவுளுடைய கோப கலசங்களை ஊற்றும்படி அவர் கட்டளை கொடுத்திருக்க வேண்டும். உண்மையில், அந்த அடையாளக் குறிப்பான கலசங்களில் அடங்கியிருந்த நியாயத்தீர்ப்புகள் 1922-ல் தீவிரமாய் யாவரறிய அறிவிக்கப்படத் தொடங்கப்பட்டது. அவற்றின் பகிரங்க அறிவிப்பு இன்று படிப்படியாய் உச்சநிலைக்குப் பெருகிக்கொண்டிருக்கிறது.
இந்தக் கலசங்களும் எக்காள ஊதல்களும்
20. யெகோவாவின் கோப கலசங்கள் எதை வெளிப்படுத்துகின்றன மற்றும் எச்சரிக்கின்றன, அவை எவ்வாறு ஊற்றப்படுகின்றன?
20 யெகோவாவின் இந்தக் கோப கலசங்கள், உலகக் காட்சியின் அம்சங்களை யெகோவா கருதுகிறபடி வெளிப்படுத்திக் காட்டி யெகோவா நிறைவேற்றவிருக்கிற நியாயத்தீர்ப்புகளைப்பற்றி எச்சரிக்கின்றன. இந்தத் தூதர்கள், மோசேயின் பாட்டையும் ஆட்டுக்குட்டியானவருடைய பாட்டையும் பாடும், பூமியிலுள்ள அபிஷேகஞ்செய்யப்பட்டவர்களின் கிறிஸ்தவ சபையைக் கருவியாகக் கொண்டு அதன்மூலம் கலசங்களிலுள்ளவற்றை ஊற்றுகின்றனர். நற்செய்தியாக ராஜ்யத்தை யாவரறிய அறிவிக்கையில், யோவான் வகுப்பார் இந்தக் கோப கலசங்களில் அடங்கியவற்றை தைரியமாய் வெளிப்படுத்திக் கூறினர். (மத்தேயு 24:14; வெளிப்படுத்துதல் 14:6, 7) இவ்வாறு, அவர்களுடைய இரட்டிப்பான செய்தி, விடுதலையை வெளிப்படையாய் அறிவிப்பதில் சமாதானமானதாயும், ஆனால் “நமது கடவுள் பழிவாங்கும் நாளைக்” குறித்து எச்சரிப்பதில் போர் தன்மைவாய்ந்ததாயும் இருந்து வருகிறது.—ஏசாயா 61:1, 2, தி.மொ.
21. கடவுளுடைய கோப கலசங்கள் முதல் நான்கின் தாக்கும் குறியிலக்குகள் எவ்வாறு அந்த முதல் நான்கு எக்காள ஊதல்களுக்கு ஒத்திருக்கின்றன, அவை எங்கே வேறுபடுகின்றன?
21 கடவுளுடைய கோப கலசங்களில் முதல் நான்கின் தாக்கும் குறியிலக்குகள் அந்த முதல் நான்கு எக்காள ஊதல்களின் குறியிலக்குகளோடு ஒத்திருக்கின்றன, அவையாவன, இந்தப் பூமி, சமுத்திரம், நதிகளும் நீரூற்றுகளும், வானத்திலுள்ள ஒளிமூலங்கள். (வெளிப்படுத்துதல் 8:1-12) ஆனால் எக்காள ஊதல்கள் ‘மூன்றிலொருபங்கின்’ மீதே வாதைகளை வெளிப்படையாக அறிவித்தன, கடவுளுடைய கோப கலசங்களை ஊற்றுவதோவெனில் முழுவதையும் தாக்குகிறது. இவ்வாறு, கிறிஸ்தவமண்டலம், ‘மூன்றிலொருபங்காக’ கர்த்தருடைய நாளின்போது முதல் கவனத்தைப் பெற்றிருக்கையில், சாத்தானின் ஒழுங்குமுறையின் வேறு எந்தப் பாகமுங்கூட, யெகோவாவின் தொல்லைதரும் ஆக்கினைத்தீர்ப்பு செய்திகளாலும் அவை கொண்டுவரும் துயரங்களாலும் வாதிக்கப்படுவதிலிருந்து விலக்கப்பட்டில்லை.
22. கடைசி மூன்று எக்காளங்கள் எவ்வாறு வேறுபட்டன, அவை யெகோவாவின் கோப கலசங்கள் கடைசி மூன்றுடன் எவ்வாறு சம்பந்தப்படுகின்றன?
22 கடைசி மூன்று எக்காள ஊதல்கள் வேறுபட்டன, ஏனெனில் அவை ‘ஆபத்துகள்’ என்று அழைக்கப்பட்டன. (வெளிப்படுத்துதல் 8:13; 9:12, தி.மொ.) இவற்றில் முதல் இரண்டு, முக்கியமாய் வெட்டுக்கிளிகளும் குதிரைச் சேனைகளும் அடங்கியவை, மூன்றாவதானதோ யெகோவாவின் ராஜ்யத்தின் பிறப்பை அறிமுகப்படுத்திற்று. (வெளிப்படுத்துதல் 9:1-21; 11:15-19) நாம் காணப்போகிறபடி, அவருடைய கோப கலசங்களின் கடைசி மூன்றுங்கூட இந்த அம்சங்களில் சிலவற்றைக் கொண்டுள்ளன, ஆனால் அவை இந்த மூன்று ஆபத்துக்களிலிருந்து ஒருவாறு வேறுபடுகின்றன. யெகோவாவின் கோப கலசங்களை ஊற்றுவதிலிருந்து உண்டாகும் விளைவான உயிர்த்துடிப்புள்ள வெளிப்படுத்துதல்களுக்கு இப்பொழுது நாம் கூர்ந்த கவனம் செலுத்தலாம்.
[அடிக்குறிப்பு]
a அக்கறையைத் தூண்டுவதாய், 1921-ல் யோவான் வகுப்பார் கடவுளின் சுரமண்டலம் என்ற ஆங்கிலப் பைபிள் படிப்பு உதவி புத்தகத்தை வெளியிட்டனர், இது ஐம்பது லட்சத்துக்கும் மேலான பிரதிகள் 20-க்கு மேலான மொழிகளில் பரவலாக விநியோகிக்கப்பட்டது. அபிஷேகஞ்செய்யப்பட்ட பாடகர்கள் இன்னுமதிகமாக உள்ளே கொண்டுவர இது உதவிசெய்தது.