யெகோவாவுக்குப் பயந்து அவருடைய பரிசுத்த நாமத்தை மகிமைப்படுத்துங்கள்
“யெகோவாவே, யார் உமக்கு உண்மையில் பயப்படாமலும், உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருப்பார்? தேவரீர் ஒருவரே உண்மையுள்ளவர்.”—வெளிப்படுத்துதல் 15:4, NW.
1, 2. (எ) 1991-ன் போது யெகோவா எவ்விதமாக வானத்தின் பலகணிகளைத் திறந்தார்? (பி) என்ன வாழ்க்கை அனுபவம் “யெகோவாவுக்குப் பயந்திருங்கள்” என்ற ஆலோசனையைக் கொடுக்க ஓர் உண்மையுள்ள மிஷனரியைத் தூண்டியது? (1991 வருடாந்தர புத்தகம், பக்கங்கள் 187-9-ஐயும் பார்க்கவும்.)
யெகோவா “வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற் போகுமட்டும் ஆசீர்வாதத்தை வருஷித்தார்.’ இந்த வார்த்தைகள் சமீப காலங்களில் மறுபடியும் மறுபடியுமாக யெகோவாவின் சாட்சிகளுக்கு பொருத்தப்படலாம். (மல்கியா 3:10) உதாரணமாக, 1991 ஊழிய ஆண்டின் போது, தென் அமெரிக்காவிலுள்ள பியூனஸ் ஏர்ஸ் மற்றும் மனிலா, டாய்பே மற்றும் கிழக்கே பாங்காக்கில் நடைபெற்ற “சுத்தமான பாஷை” மாநாடுகளிலிருந்து, கிழக்கு ஐரோப்பாவில் புடபெஸ்ட், ப்ரேக் மற்றும் சாக்ரெப்பில் நடைபெற்ற “சுயாதீனப் பிரியர்” மாநாடுகள் வரையுமாக (ஆகஸ்ட் 16-18, 1991), பூமி முழுவதிலும் நடத்தப்பட்ட விசேஷ மநாடுகளில், வருகை தந்திருந்த சாட்சிகளின் உற்சாகமும், உள்ளூர் மாநாட்டுப் பிரதிநிதிகளின் உற்சாகமும் சேர்ந்து கிறிஸ்தவ ஐக்கியத்தில் பொங்கி வழிந்தது.
2 கடல் கடந்து வந்திருந்த பிரதிநிதிகளுக்கு அவ்விடங்களிலுள்ள நெடுநாளைய உண்மையுள்ள சாட்சிகளைச் சந்திப்பது என்னே சந்தோஷமாயிருந்தது! உதாரணமாக பாங்காக்கில், தாய்லாந்தில் ஒரு சமயம் ஒரே ராஜ்ய பிரஸ்தாபியாக இருந்த ஃபிராங் டிவர், தன்னுடைய 58 ஆண்டு மிஷனரி ஊழியத்தைப் பற்றி சொன்னார். அவர் வேலை செய்த பிராந்தியம் பசிபிக்கின் தீவுகளிலிருந்து தென் கிழக்கு ஆசியா வரையிலுமாகவும், சீனாவுக்குள்ளும் சென்றது. கப்பற்சேதம், புதர்காடுகளில் காட்டு மிருகங்கள், வெப்ப மண்டல நோய்கள் மற்றும் ஜப்பானின் கொடுங்கோலாட்சியிலிருந்து ஆபத்துகளை அவர் எதிர்பட்டிருக்கிறார். மாநாடு வந்திருந்தவர்களுக்கு அவர் என்ன ஆலோசனையைக் கொடுப்பார் என்பதாக கேட்கப்பட்டபோது அவருடைய பதில் எளிமையான ஒன்றாக இருந்தது: “யெகோவாவுக்குப் பயந்திருங்கள்!”
3. நாம் ஏன் தெய்வீக பயத்தைக் காண்பிக்க வேண்டும்?
3 “யெகோவாவுக்குப் பயந்திருங்கள்!” அந்த ஆரோக்கியமான பயத்தை வளர்த்துக் கொள்வது நம் அனைவருக்கும் எவ்வளவு முக்கியமாக இருக்கிறது! “கர்த்தருக்குப் [யெகோவாவுக்கு NW] பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்.” (சங்கீதம் 111:10) இந்தப் பயம் யெகோவாவிடம் ஆரோக்கியமற்ற ஒரு திகிலாக இல்லை. மாறாக, கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதன் மூலமாக நாம் பெற்றுக்கொள்ளும் உட்பார்வையின் அடிப்படையில் அமைந்த அவருடைய பிரமிப்பூட்டும் மகத்துவத்துக்கும் தெய்வீக குணாதிசயங்களுக்கும் ஓர் ஆழ்ந்த மரியாதையாக இருக்கிறது. வெளிப்படுத்துதல் 15:3, 4-ல் [NW] மோசேயின் பாட்டும் ஆட்டுக்குட்டியானவருடைய பாட்டும் இவ்விதமாக அறிவிக்கிறது: “சர்வவல்லமையுள்ள தேவனாகிய யெகோவாவே, தேவரீருடைய கிரியைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்; பரிசுத்தவான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள். யெகோவாவே, யார் உமக்கு உண்மையில் பயப்படாமலும், உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருப்பார்? தேவரீர் ஒருவரே உண்மையுள்ளவர்.” யெகோவா தம்முடைய வணக்கத்தாரிடம் உண்மையுள்ளவராக “கர்த்தருக்குப் பயந்தவர்களுக்காகவும் அவருடைய நாமத்தைத் தியானிக்கிறவர்களுக்காகவும் ஞாபக புஸ்தகம்“ ஒன்றை தமக்கு முன்பாக எழுதி வைத்திருக்கிறார். அவர்கள் நித்திய ஜீவனால் பலனளிக்கப்படுகிறார்கள்.—மல்கியா 3:16; வெளிப்படுத்துதல் 20:12, 15.
தெய்வீக பயம் வெற்றிசிறக்கிறது
4. பூர்வ காலத்தில் சம்பவித்த என்ன விடுதலை, யெகோவாவுக்குப் பயந்திருக்க நம்மை உற்சாகப்படுத்த வேண்டும்?
4 இஸ்ரவேலர் பார்வோனின் எகிப்திலிருந்து அணிவகுத்துப் புறப்பட்ட சமயத்தில், மோசே தான் யெகோவாவுக்கு மாத்திரமே பயப்படுவதைத் தெளிவாகக் காண்பித்தார். விரைவில் இஸ்ரவேலர், சிவந்த சமுத்திரத்துக்கும் எகிப்தின் பலத்த இராணுவ சேனைக்கும் இடையில் சிக்கிக்கொண்டார்கள். அவர்கள் என்ன செய்ய முடியும்? “மோசே ஜனங்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக் கர்த்தர் [யெகோவா, NW] உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள். கர்த்தர் [யெகோவா, NW] உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள்.” அற்புதமாக யெகோவா தண்ணீர்களைப் பிளந்தார். இஸ்ரவேலர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்து போனார்கள். பின்னர் தண்ணீர் மறுபடியுமாக பலத்த ஓசையுடன் கீழே வந்தது. பார்வோனின் சேனை துடைத்து அழிக்கப்பட்டது. யெகோவா கடவுள்-பயமுள்ள ஜனத்தை காப்பாற்றினார், அதே சமயம் கடவுளை-அவமதித்த எகிப்தின் மீது நியாயத்தீர்ப்பை நிறைவேற்றினார். அதேவிதமாகவே இன்று, கடவுள்-பயமுள்ள சாட்சிகளை சாத்தானின் உலகத்திலிருந்து விடுவிப்பதில் அவர் உண்மையுள்ளவராய் இருப்பதைக் காண்பித்தருளுவார்.—யாத்திராகமம் 14:13, 14; ரோமர் 15:4.
5, 6. யோசுவாவின் நாளைய என்ன சம்பவங்கள் நாம் மனுஷருக்குப் பயப்படுவதைக் காட்டிலும் யெகோவாவுக்கே பயப்பட வேண்டும் என்பதைக் காட்டுகிறது?
5 எகிப்திலிருந்து புறப்பட்டு வந்தப் பிற்பாடு, மோசே வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் 12 வேவுகாரர்களை அனுப்புகிறார். பத்து பேர், அவ்விடத்தில் வாழ்ந்து வந்த இராட்சத பிறவிகளைப் பார்த்து திகிலடைந்து, தேசத்திற்குள் பிரவேசிப்பதிலிருந்து இஸ்ரவேலை தடைசெய்ய முயன்றனர். ஆனால் யோசுவாவும் காலேபுமான மற்ற இருவர் இவ்விதமாக அறிவித்தனர்: “நாங்கள் போய்ச் சுற்றிப் பார்த்துச் சோதித்த தேசம் மகா நல்ல தேசம். கர்த்தர் [யெகோவா, NW] நம்மேல் பிரியமாயிருந்தால், அந்தத் தேசத்திலே நம்மைக் கொண்டு போய், பாலும் தேனும் ஓடுகிற அந்தத் தேசத்தை நமக்குக் கொடுப்பார். கர்த்தருக்கு விரோதமாக மாத்திரம் கலகம் பண்ணாதிருங்கள். அந்தத் தேசத்தின் ஜனங்களுக்கு நீங்கள் பயப்பட வேண்டியதில்லை; அவர்கள் நமக்கு இரையாவார்கள்; அவர்களைக் காத்த நிழல் அவர்களைவிட்டு விலகிப் போயிற்று; கர்த்தர் நம்மோடே இருக்கிறார்; அவர்களுக்குப் பயப்பட வேண்டியதில்லை.”—எண்ணாகமம் 14:7-9.
6 இருந்தபோதிலும், அந்த இஸ்ரவேலர் மனுஷருக்குப் பயப்படும் பயத்துக்குப் பலியானார்கள். இதன் விளைவாக அவர்கள் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை ஒருபோதும் சென்றடையவில்லை. ஆனால் இஸ்ரவேலரின் ஒரு புதிய தலைமுறையோடு யோசுவாவும் காலேபும் அந்த மிக நேர்த்தியான தேசத்திற்குள் பிரவேசிக்கவும் அதன் திராட்சத்தோட்டங்களையும் ஒலிவத்தோப்புகளையும் பண்படுத்தவும் சிலாக்கியம் பெற்றனர். கூடிவந்திருந்த இஸ்ரவேல் மக்களுக்குத் தன்னுடைய பிரியாவிடை பேச்சில், யோசுவா இந்த ஆலோசனையைக் கொடுத்தார்: “நீங்கள் கர்த்தருக்குப் [யெகோவாவுக்கு NW] பயந்து உத்தமமும் உண்மையுமாய்ச் சேவி”யுங்கள். மேலுமாக யோசுவா சொன்னார்: “நானும் என் வீட்டாருமோவென்றால் யெகோவாவையே சேவிப்போம்.” (யோசுவா 24:14, 15) கடவுளுடைய நீதியுள்ள புதிய உலகிற்குள் பிரவேசிக்க நாம் தயார் செய்துகொண்டிருக்கையில் குடும்பத் தலைவர்களுக்கும் மற்ற அனைவருக்குமே யெகோவாவுக்குப் பயந்திருக்க என்னே உற்சாகமூட்டும் வார்த்தைகள்!
7. கடவுளுக்குப் பயப்படும் பயத்தின் முக்கியத்துவத்தை தாவீது எவ்வாறு அழுத்திக் காண்பிக்கிறார்?
7 மேய்ப்பச் சிறுவன் தாவீதும்கூட, கடவுளுடைய நாமத்தில் கோலியாத்தை சவாலுக்கு அழைத்த போது மிக நேர்த்தியாக யெகோவாவுக்குப் பயப்படும் பயத்தை வெளிப்படுத்தினான். (1 சாமுவேல் 17:45, 47) தாவீதால் தன்னுடைய மரணபடுக்கையில் பின்வருமாறு சொல்லமுடிந்தது: “கர்த்தருடைய ஆவியானவர் என்னைக்கொண்டு பேசினார்; அவருடைய வசனம் என்னுடைய நாவில் இருந்தது. இஸ்ரவேலின் தேவனும் இஸ்ரவேலின் கன்மலையுமானவர் எனக்குச் சொல்லி உரைத்ததாவது: ‘நீதிபரராய் மனுஷரை ஆண்டு தெய்வ பயமாய்த் துரைத்தனம் பண்ணுகிறவர் இருப்பார். அவர் காலையில் மந்தாரமில்லாமல் உதித்து, மழைக்குப் பிற்பாடு தன் காந்தியினால் புல்லைப் பூமியிலிருந்து முளைக்கப் பண்ணுகிற சூரியனுடைய விடியற்கால வெளிச்சத்தைப் போல இருப்பார்.’ (2 சாமுவேல் 23:2-4) இந்த உலகின் ஆட்சியாளர்கள் மத்தியில் கடவுள் பயம் இல்லை, இதன் விளைவு எத்தனைப் பயங்கரமாக இருந்திருக்கிறது! “தாவீதின் குமாரன்,” இயேசு, யெகோவாவுக்குப் பயப்படும் பயத்தில் பூமியை ஆளுகைச் செய்யும் போது அது எத்தனை வித்தியாசமாக இருக்கும்!—மத்தேயு 21:9.
யெகோவாவுக்குப் பயப்படும் பயத்தில் செயல்படுதல்
8. யூதா யோசபாத்தின் ஆட்சியில் ஏன் விருத்தியடைந்தது? இன்று எது இதை சுட்டிக்காட்டுகிறது?
8 தாவீது மரித்து சுமார் நூறு ஆண்டுகள் ஆன பின்பு, யோசபாத் யூதாவின் ராஜாவானார். இவரும்கூட யெகோவாவுக்குப் பயந்து ஆட்சி செய்த ராஜாவாக இருந்தார். இவர் யூதாவில் தேவராஜ்ய ஒழுங்கை நிலைநாட்டி, தேசம் முழுவதிலும் நியாயாதிபதிகளை அமர்த்தி அவர்களுக்குப் பின்வரும் கட்டளைகளைக் கொடுத்தார்: “நீங்கள் மனுஷனுடைய கட்டளையினால் அல்ல, கர்த்தருடைய கட்டளையினால் நியாயம் விசாரிக்கிறீர்கள்; நியாயம் விசாரிக்கிற விஷயத்திலே அவர் உங்களுடனே இருக்கிறார். ஆதலால் கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் உங்களில் இருக்கக்கடவது, எச்சரிக்கையாயிருந்து காரியத்தை நடத்துங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்திலே அநியாயமும் முகதாட்சிணியமும் இல்லை, பரிதானம் அவரிடத்திலே செல்லாது. . . . நீங்கள் கர்த்தருக்குப் பயந்து, உண்மையோடும் உத்தம இருதயத்தோடும் நடந்து கொள்ளுங்கள்.” (2 நாளாகமம் 19:6-9) இன்று இரக்கமுள்ள கண்காணிகளின் சேவையினால் கடவுளுடைய மக்கள் பயனடைவது போலவே, யூதா யெகோவாவுக்குப் பயப்படும் பயத்தில் விருத்தியடைந்தது.
9, 10. யோசபாத் யெகோவாவுக்குப் பயப்படும் பயத்தில் எவ்விதமாக வெற்றிசிறந்தார்?
9 என்றபோதிலும் யூதாவுக்குச் சத்துருக்கள் இருந்தனர். இவர்கள் கடவுளுடைய ஜனத்தைத் துடைத்தழித்துவிட தீர்மானமாயிருந்தனர். அம்மோன், மோவாப், மற்றும் சேயீர் மலைத்தேசத்தாரின் இராணுவ சேனைகள் ஒன்றாகச் சேர்ந்து யூதேய பிராந்தியத்துக்குள் திரண்டு வந்து எருசலேமை பயமுறுத்தியது. அது பலத்த சேனையாக இருந்தது. அப்பொழுது “யூதா கோத்திரத்தார் அனைவரும், அவர்கள் குழந்தைகளும், அவர்கள் பெண்ஜாதிகளும் அவர்கள் குமாரருங்கூடக் கர்த்தருக்கு முன்பாக” நின்றுக்கொண்டிருக்க, யோசபாத் யெகோவாவிடமாக ஜெபித்தார். பின்னர், அந்த ஜெபத்திற்கு விடையாக, யெகோவாவின் ஆவி லேவியனாகிய யகாசியேல் மேல் இறங்க, அவன் பின்வருமாறு சொன்னான்: “நீங்கள் அந்த ஏராளமான கூட்டத்திற்குப் பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள் என்று கர்த்தர் உங்களுக்குச் சொல்லுகிறார்; இந்த யுத்தம் உங்களுடையதல்ல, தேவனுடையது . . . இந்த யுத்தத்தைப் பண்ணுகிறவர்கள் நீங்கள் அல்ல, யூதா மனுஷரே எருசலேம் ஜனங்களே, நீங்கள் தரித்துநின்று கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள்; நாளைக்கு அவர்களுக்கு எதிராகப் புறப்படுங்கள்; கர்த்தர் உங்களோடே இருக்கிறார்.”—2 நாளாகமம் 20:5-17.
10 அடுத்த நாள் காலை யூதா மனுஷர் அதிகாலமே எழுந்திருந்தார்கள். சத்துருவைச் சந்திக்க அவர்கள் கீழ்ப்படிதலோடு புறப்பட்டுச் செல்கையில், யோசபாத் எழுந்து நின்று இவ்வாறு சொன்னார்: “யூதாவே, எருசலேமின் குடிகளே, கேளுங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தரை நம்புங்கள், அப்பொழுது நிலைப்படுவீர்கள்; அப்பொழுது சித்திபெறுவீர்கள்.” ஆயுதம் அணிந்திருந்த மனிதர்களுக்கு முன்னாக நடந்து சென்று யெகோவாவைப் பாடியவர்கள் பின்வருமாறு சேர்த்து பாடினார்கள்: “கர்த்தரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றும் உள்ளது.” சத்துருக்கள் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் வெட்டிக்கொண்டு விழுந்து போகும்படிக்கு செய்விப்பதன் மூலம் யெகோவா தம்முடைய கிருபையை வெளிப்படுத்தினார். யூதா மனுஷர்கள் வனாந்தரத்திலுள்ள சாமக்கூட்டண்டையிலே வருவதற்குள் அவர்கள் சத்துருக்களின் பிரேதங்களை மாத்திரமே கண்டார்கள்.—2 நாளாகமம் 20:20-24.
11. பயத்தைக் குறித்ததில், தேசங்கள் எவ்விதமாக கடவுளுடைய மக்களிலிருந்து வித்தியாசப்படுகிறார்கள்?
11 அற்புதமான இந்த மீட்பைக் குறித்து சுற்றியிருந்த தேசங்கள் கேள்விபட்ட போது “தேவனைப் பற்றிய திகில்” அவர்களைப் பிடித்துக்கொண்டது. மறுபட்சத்தில் யெகோவாவுக்குப் பயப்படும் பயத்தில் கீழ்ப்படிந்த தேசம் இப்பொழுது “அமரிக்கையாயிருந்தது.” (2 நாளாகமம் 20:29, 30) அதேவிதமாகவே, யெகோவா அர்மகெதோனில் நியாயத்தீர்ப்பை நிறைவேற்றும் போது தேசங்களுக்கு “தேவனைப் பற்றிய திகிலும்” நியாயத்தீர்ப்பை நிறைவேற்றும் அவருடைய குமாரனைப் பற்றிய திகிலும் உண்டாகும், அவர்கள் தெய்வீக கோபாக்கினையின் மகா நாளில் நிற்கக்கூடாதவர்களாக இருப்பார்கள்.—வெளிப்படுத்துதல் 6:15-17.
12. யெகோவாவுக்குப் பயப்படும் பயம் பூர்வ காலங்களில் எவ்விதமாக பலனளிக்கப்பட்டிருக்கிறது?
12 யெகோவாவிடமாக ஆரோக்கியமான பயம், செழுமையான பலன்களைக் கொண்டுவருகிறது. நோவா, “பயபக்தியுள்ளவனாகி தன் குடும்பத்தை இரட்சிப்பதற்குப் பேழையை உண்டுபண்ணினான்.” (எபிரெயர் 11:7) முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களைப் பொறுத்தமட்டில், துன்புறுத்தலின் காலப்பகுதியைத் தொடர்ந்து சபைகள், “சமாதானம் பெற்று, பக்திவிருத்தியடைந்து, கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தோடும் பரிசுத்த ஆவியின் ஆறுதலோடும் நடந்து பெருகின.”—கிழக்கு ஐரோப்பாவில் இன்று நடைபெறுவது போன்றே அது இருந்தது.—அப்போஸ்தலர் 9:31.
நன்மையை நேசித்துத் தீமையை வெறுத்திடுங்கள்
13. யெகோவாவின் ஆசீர்வாதத்தை நாம் எவ்விதம் மாத்திரமே அனுபவிக்க முடியும்?
13 யெகோவா முற்றிலும் நல்லவராகவே இருக்கிறார். ஆகவே “தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம்.” (நீதிமொழிகள் 8:13) இயேசுவைக் குறித்து, “நீர் நீதியை விரும்பி அக்கிரமத்தை வெறுத்திருக்கிறீர்; ஆதலால், தேவனே, உம்முடைய தேவன் உம்மை ஆனந்த தைலத்தினால் அபிஷேகம் பண்ணினார்,” என்று எழுதியிருக்கிறது. (எபிரெயர் 1:9) இயேசுவைப் போலவே, நாம் யெகோவாவின் ஆசீர்வாதங்களை விரும்பினால், சாத்தானுடைய மேட்டிமையான உலகின் துர்க்கிரியைகளையும், ஒழுக்கமற்ற நடத்தையையும், வன்முறையையும், பேராசையையும் நாம் அருவருக்க வேண்டும். (நீதிமொழிகள் 6:16-19) நாம் யெகோவா நேசிப்பதை நேசித்து அவர் வெறுப்பதை வெறுத்திட வேண்டும். யெகோவாவைக் கோபப்படுத்திடக்கூடிய எந்தக் காரியத்தையும் செய்ய நாம் பயப்பட வேண்டும். “கர்த்தருக்குப் பயப்படுகிறதினால் மனுஷர் தீமையை விட்டு விலகுவார்கள்.”—நீதிமொழிகள் 16:6.
14. இயேசு எவ்விதமாக நமக்கு ஒரு மாதிரியை அளிக்கிறார்?
14 இயேசு அவருடைய அடிச்சுவடுகளை நெருக்கமாகப் பின்தொடர்ந்து வரும்படி நமக்கு ஒரு மாதிரியை விட்டுச்சென்றார். “அவர் வையப்படும் போது பதில் வையாமலும், பாடுபடும் போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்பு செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்.” (1 பேதுரு 2:21-23) யெகோவாவுக்குப் பயப்படுகிற பயத்தில், நாமும்கூட சாத்தானிய உலகம் நம்மீது குவிக்கின்ற நிந்தனைகளையும் பரிகாசங்களையும் துன்புறுத்துதல்களையும் சகித்துக் கொள்ள முடியும்.
15 மத்தேயு 10:28-ல் இயேசு நமக்கு இவ்விதமாக அறிவுரை கூறுகிறார்: “ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்பட வேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே [கெஹென்னாவிலே, NW]அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.” யெகோவாவுக்குப் பயப்படுகிற ஒருவர் சத்துருவால் கொல்லப்பட்டாலும்கூட மரண வேதனைகள் தற்காலிகமானதே. (ஓசியா 13:14) உயிர்த்தெழுப்பப்படுகையில், அந்த நபர், “மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே?” என்று சொல்லக்கூடியவராக இருப்பார்.—1 கொரிந்தியர் 15:55.
16. இயேசு எவ்வாறு யெகோவாவுக்குப் பயப்படுகிற பயத்தைக் காண்பித்து அவரை மகிமைப்படுத்தினார்?
16 யெகோவாவின் நீதியை நேசித்து, தீமையை வெறுக்கிற அனைவருக்கும் இயேசு மிகச் சிறந்த ஒரு முன்மாதிரியை வைக்கிறார். யோவான் 16:33-ல் காணப்படுவது போல யெகோவாவுக்குப் பயப்படுகிற அவருடைய பயத்தை, அவருடைய சீஷர்களிடம் அவர் பேசிய முடிவான வார்த்தைகள் பிரதிபலிக்கின்றன. “என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்.” யோவானின் பதிவு தொடர்ந்து சொல்கிறது: “இயேசு இவைகளைச் சொன்ன பின்பு தம்முடைய கண்களை வானத்துக்கு ஏறெடுத்து: பிதாவே வேளை வந்தது, உம்முடைய குமாரன் உம்மை மகிமைப்படுத்தும்படிக்கு நீர் உம்முடைய குமாரனை மகிமைப்படுத்தும் . . . நீர் உலகத்தில் தெரிந்தெடுத்து எனக்குத் தந்த மனுஷருக்கு உம்முடைய நாமத்தை வெளிப்படுத்தினேன்.”—யோவான் 17:1-6.
யெகோவாவுக்குப் பயந்து அவரைத் துதியுங்கள்
17. என்ன விதங்களில் நாம் இயேசுவின் முன்மாதிரியை பின்பற்றலாம்?
17 இன்று நாம் இயேசுவின் தைரியமான முன்மாதிரியைப் பின்பற்ற முடியுமா? நிச்சயமாகவே யெகோவாவுக்குப் பயப்படுகிற பயத்தில் நாம் அவ்விதமாகச் செய்ய முடியும்! யெகோவாவின் பிரசித்திப் பெற்ற பெயரையும் குணாதிசயங்களையும் பற்றி இயேசு நமக்குத் தெரிவித்திருக்கிறார். நம்முடைய கர்த்தராகிய ஆண்டவராகிய யெகோவாவுக்கு நாம் பயந்து, கிறிஸ்தவமண்டலத்தின் பெயரற்ற புரிந்துகொள்ளமுடியாத திருத்துவம் உட்பட மற்ற எல்லா கடவுட்களுக்கும் மேலாக நாம் அவரை உயர்த்துகிறோம். இயேசு யெகோவாவை ஆரோக்கியமான ஒரு பயத்தோடு சேவித்து அழிவுள்ள மனுஷனுக்குப் பயப்படும் பயத்தின் கண்ணியில் அகப்பட அவர் மறுத்தார். “அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம் பண்ணி, வேண்டுதல் செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்”பட்டார். நித்திய இரட்சிப்பை நம்முடைய இலக்காகக் கொண்டு, நாம் படும் பாடுகளிலிருந்து கீழ்ப்படிதலைத் தொடர்ந்து கற்றுக்கொண்டிருக்கையில் நாமும்கூட இயேசுவைப் போலவே யெகோவாவுக்குப் பயப்படுவோமாக.—எபிரெயர் 5:7-9.
18. நாம் எவ்விதமாக தேவபயத்தோடே பரிசுத்த சேவை செய்யக்கூடும்?
18 பின்னால், எபிரெய கிறிஸ்தவர்களுக்கு எழுதிய அந்தக் கடிதத்தில், பவுல் அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு பின்வருமாறு அறிவுரை கூறினார்: “அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை [பரிசுத்த சேவை, NW] செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக் கடவோம்.” இன்று “திரள் கூட்டத்தார்” அந்தப் பரிசுத்த சேவையில் பங்கு கொள்கிறார்கள். அதில் என்ன அடங்கியிருக்கிறது? தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவைப் பலியாக அளிப்பதில் யெகோவாவின் தகுதியற்ற தயவைக் குறித்து பேசிய பிறகு, பவுல் சொல்கிறார்: “அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர் மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்.” (எபிரெயர் 12:28; 13:12, 15) யெகோவாவின் தகுதியற்ற தயவைப் போற்றுகிறவர்களாய் நாம் கூடிய மட்டும் ஒவ்வொரு மணிநேரத்தையும் அவருடைய பரிசுத்த சேவைக்கு அர்ப்பணிக்க விரும்ப வேண்டும். அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களின் மீதியானோருடைய உண்மைத்தவறாத தோழர்களாக இன்று திரள் கூட்டத்தார் அந்தச் சேவையின் பெரும் பகுதியை நிறைவேற்றி வருகிறார்கள். இவர்கள் அடையாள அர்த்தத்தில் தேவனுடைய சிங்காசனத்துக்கு முன்னால் நின்று கொண்டு “அவருக்கு இரவும் பகலும் பரிசுத்த சேவை செய்”கையில் இரட்சிப்பை தேவனுக்கும் கிறிஸ்துவுக்குமே உரித்தாக்குகிறார்கள்.—வெளிப்படுத்துதல் 7:9, 10, 15, NW.
நித்தியத்துக்குமாக யெகோவாவை மகிமைப்படுத்துங்கள்
19, 20. “யெகோவாவின் நாளில்” என்ன இரண்டு விதமான பயங்கள் வெளிப்படையாகத் தெரியும்?
19 யெகோவா சரியென நீரூபிக்கப்படும் அந்த மகத்தான நாள் வேகமாக வந்துகொண்டிருக்கிறது! “இதோ, சூளையைப் போல எரிகிற நாள் வரும்; அப்பொழுது அகங்காரிகள் யாவரும் அக்கிரமஞ் செய்கிற யாவரும் துரும்பாயிருப்பார்கள்; வரப்போகிற அந்த நாள் அவர்களைச் சுட்டெரிக்கும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.” அந்த அழிவுக்குரிய காலமே “கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள்.” (மல்கியா 4:1, 5) அது பொல்லாதவர்கள் இருதயத்தில் “திகிலை” ஏற்படுத்தும், இவர்கள் தப்பிப்போவதில்லை.”—எரேமியா 8:15 1 தெசலோனிகேயர் 5:3.
20 என்றபோதிலும், யெகோவாவின் மக்கள் வித்தியாசமான ஒரு பயத்தினால் ஊக்கமளிக்கப்படுகிறார்கள். “நித்திய சுவிசேஷத்தை உடைய” தேவதூதன், “தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்” என்று உரத்த சத்தமாய் சொல்லி, அவர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். (வெளிப்படுத்துதல் 14:6, 7) அர்மகெதோனில் அழிவுண்டாக்கும் உச்சக்கட்டம் சாத்தானின் உலகை எரித்து சாம்பலாக்கும் போது அந்த நியாயத்தீர்ப்பில் நாம் பயபக்தியோடு நின்று கொண்டிருப்போம். யெகோவாவைப் பற்றிய ஆரோக்கியமான பயம் நம்முடைய இருதயங்களில் துடைத்தழிக்கப்பட முடியாத வகையில் பொறிக்கப்பட்டிருக்கும். அப்படியென்றால், யெகோவாவின் நாமத்தை நோக்கி கூப்பிட்டு இரட்சிக்கப்பட்ட மனிதர்கள் மத்தியில் சிலாக்கியம் பெற்றவர்களாய் நாம் நம்மைக் காண்போமாக!—யோவேல் 2:31, 32; ரோமர் 10:13.
21. யெகோவாவுக்குப் பயப்படும் பயம் என்ன ஆசீர்வாதங்களுக்கு வழிநடத்தும்?
21 எல்லா நித்தியத்துக்குள்ளுமாக பரந்து கிடக்கும் “ஆயுசின் வருஷங்கள்” உட்பட மகத்தான ஆசீர்வாதங்கள் பின்தொடரும். (நீதிமொழிகள் 9:11; சங்கீதம் 37:9-11, 29) ஆகவே நம்முடைய நம்பிக்கை, ராஜ்யத்தை சுதந்தரிப்பதாக இருந்தாலும் அல்லது அதனுடைய பூமிக்குரிய பகுதியில் சேவிப்பதாக இருந்தாலும் இப்பொழுது நாம் தொடர்ந்து கடவுளுக்கு தேவ பயத்தோடும் பக்தியோடும் பரிசுத்த சேவை செய்துகொண்டிருப்போமாக. நாம் தொடர்ந்து அவருடைய பரிசுத்த நாமத்தை மகிமைப்படுத்துவோமாக. என்ன ஆசீர்வாதமான விளைவோடு? எப்போதும் யெகோவாவுக்குப் பயந்திருக்கும்படியான ஞானமுள்ள புத்திமதியை ஏற்றுக்கொண்டதற்கு என்றுமான நன்றியுணர்வு! (w92 1/1)
நீங்கள் எவ்விதமாக பதிலளிப்பீர்கள்?
◻ “யெகோவாவுக்குப் பயப்படும் பயம்” என்பதன் பொருள் என்ன?
◻ கடவுளுக்குப் பயப்படும் பயம் எவ்விதமாக பண்டையக் கால மக்களுக்குப் பிரயோஜனமாயிருந்தது?
◻ தேவபயத்திற்குரிய என்ன மாதிரியை இயேசு நமக்காக விட்டுச் சென்றார்?
◻ யெகோவாவுக்குப் பயப்படும் பயத்தில் நாம் எவ்விதமாக உத்தமத்தன்மையைக் காத்துக்கொள்ள முடியும்?
15. சரீரத்தைக் கொல்லக்கூடியவர்களுக்குப் பயப்படுவதற்கு பதிலாக நாம் ஏன் யெகோவாவுக்குப் பயப்பட வேண்டும்?
[பக்கம் 18-ன் படம்]
வெளிப்படுத்துதல் புத்தகத்தில், இயேசுவின் சகோதரர்கள் யெகோவாவைத் துதிக்கும் ஒரு பாடலாக இருக்கும் “மோசேயின் பாட்டைப்” பாடுவது காணப்படுகிறது.
[பக்கம் 20-ன் படம்]
யோசபாத்தின் சேனை யெகோவாவுக்குப் பயப்படும் பயத்தில் வெற்றிசிறக்கிறது
[பக்கம் 23-ன் படம்]
எல்லா நித்தியத்துக்குமாக நீடித்திருக்கும் ஆயுசின் வருஷங்கள் யெகோவாவுக்குப் பயப்படுகிறவர்கள் பெறும் வெகுமதியாக இருக்கும்