விசுவாசத்தைப் பலப்படுத்தும் கிளர்ச்சியூட்டும் தரிசனங்கள்
வெளிப்படுத்துதலிலிருந்து முக்கிய குறிப்புகள்
யெகோவாவின் ஊழியக்காரனாகிய யோவான் சின்ன ஆசியாவின் மேற்கு கரையோரமாய் அமைந்த சிறிய பத்மூ தீவில் இருக்கிறான். அங்கு இந்த வயதான அப்போஸ்தலன் அதிசயமான காரியங்களைப் பார்க்கிறான்—அடையாள அர்த்தமுடையவை, பெரும்பாலும் வியப்பதிர்ச்சியூட்டுகிறவை, உண்மையிலேயே குறிப்பிடத்தக்கவை! அவன் கர்த்தருடைய நாளில் இருக்கிறான், இது இயேசு 1914-ல் சிங்காசனத்திற்கு வந்ததிலிருந்து அவருடைய ஆயிர வருட ஆட்சி முடிய நீடிக்கிறது. யோவான் மனிதவர்க்கத்தின் இருண்ட காலப்பகுதியினூடே நிகழும் சம்பவங்களைக் காண்கிறவனாய் இருந்தாலும், கிறிஸ்துவின் ஆயிர வருட ஆட்சியின் முன் காட்சி எவ்வளவாக மகிமை பொருந்தியதாய் இருக்கிறது! அந்தச் சமயத்தில் கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கம் அனுபவித்து மகிழப்போகும் ஆசீர்வாதம்தான் எப்பேர்ப்பட்டதாயிருக்கும்!
இந்தத் தரிசனங்களை யோவான் வெளிப்படுத்தின விசேஷம் என்ற பைபிள் புத்தகத்தில் பதிவு செய்தான். ஏறக்குறைய பொ.ச. 96-ல் எழுதப்பட்ட இந்தப் புத்தகம் தீர்க்கதரிசன கடவுளாகிய யெகோவாவிலும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவிலும் நம்முடைய விசுவாசத்தைப் பலப்படுத்தக்கூடும்.—விவரங்களுக்கு உவாட்ச் டவர் பைபிள் சொஸையிட்டி பிரசுரித்துள்ள வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபத்திலிருக்கிறது! (Revelation—Its Grand Climax At Hand!) என்ற ஆங்கில புத்தகத்தைப் பாருங்கள்.
கிறிஸ்து அன்பான ஆலோசனை கொடுக்கிறார்
யெகோவா கிறிஸ்துவின் மூலம் கொடுக்கும் வெளிப்படுத்துதலின் ஆரம்பத்தில் இயேசுவின் உடன் ராஜ்ய சுதந்திரவாளிகளடங்கிய ஏழு சபைகளுக்கான கடிதம் காணப்படுகிறது. (1:1–3:22) மொத்தத்தில் இந்தக் கடிதங்கள் போற்றுதல் அளிக்கிறது, பிரச்னைகளை அடையாளங்காட்டுகிறது, தவறைத் திருத்துகிறது, மற்றும்/அல்லது உற்சாகப்படுத்துகிறது, உண்மையுடன்கூடிய கீழ்ப்படிதலின் பலனாகக் கிடைக்கும் ஆசீர்வாதங்களைக் காண்பிக்கிறது. எபேசியர் சகிப்புத்தன்மையுடையவர்களாய் இருந்தபோதிலும், அவர்கள் ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டுவிட்டார்கள். ஆவிக்குரிய பிரகாரமாய் ஐசுவரியவான்களாயிருந்த சிமிர்னா கிறிஸ்தவர்கள் உபத்திரவங்கள் மத்தியில் உண்மையாயிருப்பதற்கு உற்சாகப்படுத்தப்படுகிறார்கள். துன்புறுத்தல் பெர்கமு சபையை மேற்கொள்ளவில்லை, ஆனால் அந்தச் சபை பிரிவினைகளைப் பொறுத்துவந்திருக்கிறது. தியத்தீரா கிறிஸ்தவர்கள் ஊழியத்தை அதிகரித்தபோதிலும், அங்கு யேசபேல் செல்வாக்கு இருக்கிறது. சர்தை சபை ஆவிக்குரிய பிரகாரமாய் விழித்திட வேண்டியதாயிருக்கிறது, தன்னுடைய காரியத்தில் தொடர்ந்து இருக்கும்படி பிலதெல்பியா சபை ஊக்குவிக்கப்படுகிறது, வெதுவெதுப்பாய் இருக்கும் லவோதிக்கேயருக்கு ஆவிக்குரிய சுகப்படுத்துதல் தேவையாயிருக்கிறது.
எதிர்கால பரலோக அரசர்களை—உண்மையில் எல்லா கிறிஸ்தவர்களையும் பயிற்றுவிப்பதற்கு என்னே அருமையான வார்த்தைகள்! உதாரணமாக, நம்மில் எவரேனும் வெதுவெதுப்பாய் ஆகிவிட்டிருக்கிறோமா? அப்படியென்றால் அதற்கு வேண்டிய நடவடிக்கை எடுங்கள்! ஓர் உஷ்ணமான நாளில் ஒரு குவளைத் தண்ணீரைப் போல புத்துணர்வு அளிப்பவர்களாக ஆகுங்கள். மேலும் யெகோவாவுக்கும் அவருடைய ஊழியத்திற்கும் அனலான வைராக்கியத்தை வெளிக்காட்ட துவங்குங்கள்.—மத்தேயு 11:28, 29; யோவான் 2:17 ஒப்பிடவும்.
ஆட்டுக்குட்டியானவர் சுருளைத் திறக்கிறார்
அடுத்து யெகோவா அவருடைய சிங்காசனத்தில் மகிமையில் காணப்படுகிறார். (4:1–5:14) அவரைச் சூழ 24 மூப்பர்களும் நான்கு ஜீவன்களும் இருக்கிறார்கள். ஏழு முத்திரைகளால் முத்திரிக்கப்பட்ட ஒரு சுருள் அவருடைய கையில் இருக்கிறது. அந்தச் சுருளை யார் திறக்கக்கூடும்? ஏன், ஆட்டுக்குட்டியானவராகிய இயேசு கிறிஸ்து அதைச் செய்ய பாத்திரமுள்ளவராயிருக்கிறார்!
ஆட்டுக்குட்டியானவர் அதன் ஆறு முத்திரைகளை உடைக்க, விறுவிறுப்பான சம்பவங்கள் திறக்கப்படுகின்றன. (6:1–7:17) முதல் முத்திரை உடைக்கப்படுகையில், கிறிஸ்து ஒரு வெள்ளைக் குதிரையில் தோன்றி, (1914-ல்) ஒரு கிரீடம் பெற்று, வெற்றிசிறக்கிறவராய் முன்செல்கிறார். இன்னும் மூன்று முத்திரைகள் உடைக்கப்படுகையில், மற்ற குதிரைவீரர்கள் மனிதவர்க்கத்திற்குப் போரையும், பஞ்சத்தையும், மரணத்தையும் ஏற்படுத்துகின்றனர். ஐந்தாவது முத்திரை உடைக்கப்படும்போது, கிறிஸ்துவுக்காக இரத்த சாட்சிகளாய் மரித்தவர்கள் தங்களுடைய இரத்தத்திற்குப் பழிவாங்கும்படி சத்தமாய்க் கூப்பிடுகிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு “வெள்ளை அங்கி” கொடுக்கப்பட்டார்கள், இது ராஜரீக சிலாக்கியங்களுடன் அழியாமையுள்ள ஆவியின் சிருஷ்டிகளாய் உயிர்த்தெழுப்பப்படுவதோடு சம்பந்தமுடைய ஒரு நீதியான நிலைநிற்கையைக் குறிக்கிறது. (வெளிப்படுத்துதல் 3:5; 4:4 ஒப்பிடவும்.) ஆறாவது முத்திரை உடைக்கப்படுகையில் தேவனுடைய மற்றும் ஆட்டுக்குட்டியானவருடைய கோபாக்கினையின் மகா நாள் ஒரு பூமியதிர்ச்சியால் அறிவிக்கப்படுகிறது. ஆனால் அழிவுக்குரிய ஆக்கினைத்தீர்ப்பை அடையாளப்படுத்தும் “பூமியின் நான்கு காற்றுகள்” கடவுளுடைய 1,44,000 அடிமைகள் முத்திரிக்கப்படும்வரை பிடித்துவைக்கப்படுகிறது. அவர்கள் கடவுளுடைய ஆவியால் அபிஷேகம் பண்ணப்பட்டு அவருடைய ஆவிக்குரிய குமாரர்களாகப் புத்திரசுவிகாரம் பெறும்போது, தங்களுடைய பரலோக சுதந்தரத்துக்கு முன் அடையாளமாக ஒரு முத்திரையை, அல்லது உறுதியைப் பெறுகிறார்கள். சோதிக்கப்பட்ட பின்புதானே முத்திரைப்பெறுதல் நிரந்தரமாகிறது. (ரோமர் 8:15–17; 2 கொரிந்தியர் 1:21, 22) எல்லாத் தேசங்களிலிருந்தும் “ஒரு திரளான கூட்டத்”தை—பூமிக்குரிய பரதீஸில் நித்திய ஜீவன் அடையும் நம்பிக்கையுடைய ஒரு திரள் கூட்டத்தைப் பார்ப்பதில் யோவான் எவ்வளவாய் வியப்பில் ஆழ்ந்திருக்க வேண்டும்! அவர்கள் மனிதவர்க்கத்துக்கு இணையில்லா துயரத்தின் ஒரு காலமாயிருக்கும் “மிகுந்த உபத்திரவத்திலிருந்து” வெளிவருகிறார்கள்.
ஏழாவது முத்திரை உடைக்கப்படுகையில் நிகழும் கிளர்ச்சியூட்டும் சம்பவங்கள்தான் என்னே! (8:1–11:14) அரை மணிநேர அமைதி! பரிசுத்தவான்களுடைய ஜெபங்கள் கேட்கப்படுவதற்கு நேரம் அனுமதிக்கிறது, இதைத் தொடர்ந்து பலிபீடத்திலிருந்து அக்கினி பூமியிலே கொட்டப்படுகிறது. பின்பு கிறிஸ்தவமண்டலத்தின் மீது கடவுளுடைய வாதைகளை அறிவிக்கும் வகையில் ஏழு தூதர்கள் எக்காளம் ஊதுவதற்குத் தயாராகிறார்கள். அந்த எக்காளங்கள் முடிவு நாட்கள் முழுவதும் மிகுந்த உபத்திரவம் வரை தொனித்துக்கொண்டிருக்கின்றன. நான்கு எக்காளங்கள் பூமி, சமுத்திரம், நீரூற்றுகள், சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்கள் ஆகியவை மீது வாதைகளை அறிவிக்கின்றன. ஐந்தாவது எக்காளத்தை ஊதுதல் வெட்டுக்கிளிகளை வரவழைக்கிறது, இவை 1919 முதல் போரிடுவதற்குத் திரண்டுவரும் அபிஷேகம்பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களை அடையாளப்படுத்துகிறது. ஆறாவது எக்காளம் தொனிக்க, ஒரு குதிரை சேனையின் தாக்குதல் நிகழ்கிறது. இதன் நிறைவேற்றமாக, அபிஷேகம்பண்ணப்பட்டவர்கள், 1935 முதல் “திரள் கூட்டத்”தினரின் துணைவளத்தால், கிறிஸ்தவமண்டல மதத் தலைவர்களுக்கு எதிராக வாதையாயிருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்திகளை அறிவிக்கின்றனர்.
அடுத்து யோவான் ஒரு சிறிய சுருளைப் புசிக்கிறான். அபிஷேகம்பண்ணப்பட்டவர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட நியமிப்பை ஏற்றுக்கொள்வதையும் அவர்கள் கிறிஸ்தவமண்டலத்துக்கு எதிராக அறிவிக்கும் தெய்வீக நியாயத்தீர்ப்புகளடங்கிய கடவுளுடைய வார்த்தையிலிருந்து போஷாக்கை எடுத்துக்கொள்வதையும் குறிக்கிறது. அப்போஸ்தலன் அந்த ஆலய பலிபீடத்தை அளந்துபார்க்கும்படி கட்டளையிடப்படுகிறான். இது ஆலய ஏற்பாடு சம்பந்தமான யெகோவாவின் நோக்கங்கள் நிச்சயமாய் நிறைவேறும் என்பதையும் அதோடு கூட்டுறவு கொள்கிறவர்கள் தெய்வீக தராதரங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதையும் குறிப்பிடுகிறது. பின்பு கடவுளால் அபிஷேகம்பண்ணப்பட்ட இரட்டு வஸ்திரம் உடுத்திய “இரண்டு சாட்சிகள்” தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள், கொல்லப்படுகிறார்கள், ஆனால் உயிர்ப்பிக்கப்படுகிறார்கள். இது 1918–19-ஐ குறிப்பாய்க் காண்பிக்கிறது, அந்தச் சமயத்தில் அவர்கள் செய்துவந்த பிரசங்க வேலை விரோதிகளால் ஏறக்குறைய கொல்லப்பட்ட நிலைக்குள்ளாக்கப்பட்டது, ஆனால் யெகோவாவின் ஊழியர்கள் தங்களுடைய ஊழியத்திற்காக மீண்டும் அதிசயமான விதத்தில் புத்துயிரளிக்கப்பட்டனர்.
ராஜ்யம் பிறந்திருக்கிறது!
ஏழாவது எக்காளத்தை ஊதுதல் ராஜ்ய பிறப்பை அறிவிக்கிறது. (11:15–12:17) பரலோகத்தில் அடையாள அர்த்தமுள்ள ஒரு பெண் (யெகோவா தேவனின் பரலோக அமைப்பு) ஓர் ஆண் குழந்தையை (கிறிஸ்துவை ராஜாவாகக் கொண்டிருக்கும் கடவுளுடைய ராஜ்யத்தை) பிறப்பிக்கிறது, ஆனால் வலுசர்ப்பம் (சாத்தான்) அதை விழுங்கிப்போட வீணாக முயற்சி செய்கிறது. 1914-ல் பரலோகத்தில் ராஜ்ய பிறப்பைப் பின்தொடரும் அந்தப் போரின் உச்சக்கட்டமாக வெற்றி கொள்ளும் மிகாவேல் (இயேசு கிறிஸ்து) வலுசர்ப்பத்தையும் அதன் தூதரையும் பூமியினிடமாகத் தள்ளிவிடுகிறார். இங்கு அந்த வலுசர்ப்பம் பரலோக ஸ்திரீயின் அபிஷேகம்பண்ணப்பட்ட மீதியானோருக்கு எதிராகத் தொடர்ந்து போரிடுகிறது.
யோவான் அடுத்து ஒரு மூர்க்க மிருகத்தைப் பார்க்கிறான். இதற்கு அருவருப்பான ஒரு சிலை உண்டாக்கப்படுகிறது. (13:1–18) ஏழு தலைகளும் பத்து கொம்புகளுமுடைய அரசியல் மூர்க்க மிருகம் மனித அரசாங்கங்கள் தோன்றும் கொந்தளிக்கும் மனிதத் திரளாகிய “கடலிலிருந்து” எழும்பிவருகிறது. (தானியேல் 7:2–8; 8:3–8, 20–25 ஒப்பிடவும்.) அடையாள அர்த்தமுடைய இந்த மிருகத்தின் அதிகார ஊற்று என்ன? ஏன், வலுசர்ப்பமாகிய சாத்தானைத் தவிர வேறு ஒருவரும் இருக்க முடியாது! சற்று கற்பனை செய்து பாருங்கள்! இந்த அரசியல் மூர்க்க மிருகத்திற்கு இரண்டு கொம்புகளுடைய மிருகம் (ஆங்கில அமெரிக்க உலக வல்லரசு) ஒரு “சொரூபத்தைச்” செய்வதாகத் தெரிகிறது, இது இப்பொழுது ஐக்கிய நாடுகள் சங்கம் என்று அழைக்கப்படுகிறது. அந்த மூர்க்க மிருகத்தை வணங்கும்படியும் அதன் வழியில் காரியங்களைச் செய்வதன் மூலமும் அது தங்களுடைய வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்த அனுமதிப்பதன் மூலமும் அதன் “அடையாளத்தை” ஏற்றுக்கொள்ளும்படியும் அநேகர் வற்புறுத்தப்படுகின்றனர். ஆனால் யெகோவாவின் சாட்சிகள் மூர்க்க மிருகத்தின் அந்தப் பேய்த்தன அடையாளத்தை அறவே ஏற்க மறுக்கின்றனர்!
யெகோவாவின் ஊழியர்கள் செயல்படுகிறார்கள்
கோபாக்கினையின் ஏழு கலசங்கள் ஊற்றப்படுகையில் கடவுளுடைய பல்வேறு ஊழியர்கள் செயல்படுவது காணப்படுகிறது. (14:1–16:21) கவனியுங்கள்! பரலோக சீயோன் மலையில் 1,44,000 பேர் ஒரு புதிய பாட்டு பாடுவது யோவானுக்குக் கேட்கிறது. வானத்தின் மத்தியில் பறக்கும் ஒரு தேவதூதன் பூமியின் குடிகளுக்கு அறிவிப்பதற்காக நித்திய நற்செய்தியைக் கொண்டிருக்கிறான். இது எதைக் காட்டுகிறது? ராஜ்ய செய்தியை அறிவிப்பதில் யெகோவாவின் சாட்சிகள் தேவ தூதரின் உதவியைக் கொண்டிருக்கிறார்கள் என்பதையே.
பூமியின் திராட்சப்பழங்கள் அறுவடை செய்யப்படுவதையும் கடவுளுடைய கோபாக்கினையென்னும் பெரிய ஆலையில் மிதிக்கப்படுகையில் தேசங்கள் அனைத்தும் அழிக்கப்படுவதையும் காண்பதில் யோவான் திகைப்படைந்திருக்க வேண்டும். (ஏசாயா 63:3–6; யோவேல் 3:12–14 ஒப்பிடவும்.) யெகோவாவின் கட்டளை பிறக்க, ஏழு தூதர்கள் அடுத்து தெய்வீகக் கோபாக்கினையாகிய ஏழு கலசங்களை ஊற்றுகின்றனர். பூமி, சமுத்திரம், நீரூற்றுகள் மற்றும் சூரியன், மூர்க்க மிருகத்தின் சிங்காசனம், ஐபிராத்து நதி ஆகியவை முதல் ஆறு கலசங்கள் ஊற்றப்படுவதால் பாதிக்கப்படுகின்றன. பிசாசுகளின் பிரச்சாரம் மனித அரசர்களைக் கடவுளுடைய யுத்தமாகிய அர்மகெதோனுக்குக் கூட்டிச் சேர்ப்பதைக் கவனிக்கும் யோவானின் உள்ளக் கிளர்ச்சியைக் கற்பனை செய்துபாருங்கள். ஏழாவது கலசம் ஆகாயத்தில் ஊற்றப்பட்டபோது பலன்கள் பயங்கர சேதத்தை ஏற்படுத்துவதாய் இருக்கின்றன.
அடையாள அர்த்தமுள்ள இரண்டு ஸ்திரீகள்
பொய் மத உலகப் பேரரசாகிய மகா பாபிலோனின் அழிவையும் அதைத் தொடரும் மகிழ்ச்சிகரமான சம்பவங்களையும் காண்பதில் யோவான் நிச்சயமாகவே உணர்ச்சிவசப்பட்டிருப்பான். (17:1–19:10) பரிசுத்தவான்களுடைய இரத்தத்தால் வெறிகொண்டிருக்கும் அவள் ஏழு தலைகளும் பத்து கொம்புகளுமுடைய ஒரு சிவப்பு நிற மிருகத்தின் (சர்வ தேச சங்கமும் அதைப் பின்தொடர்ந்த ஐக்கிய நாடுகள் சங்கமும்) மேல் காணப்படுகிறாள். ஆ, அந்தக் கொம்புகள் அவளுக்கு எதிராகத் திரும்பும்போது அவளுக்கு நேரிடும் மகா அழிவுதான் என்னே!
மகா பாபிலோன் அழிக்கப்பட்டதற்காக பரலோகக் குரல்கள் யெகோவாவைத் துதிப்பது கேட்கப்படுகிறது. ஆட்டுக்குட்டியானவருக்கும் உயிர்த்தெழுப்பப்பட்ட அபிஷேகம்பண்ணப்பட்டவர்களுமாகிய அவருடைய மணவாட்டிக்கும் நடக்கும் விவாகத்தை அறிவிக்கும் வகையில் அமையும் துதிகளின் இடிமுழக்க சப்தம்தான் என்னே!
கிறிஸ்து வெற்றிசிறந்து ஆளுகிறார்
யோவான் அடுத்து சாத்தானிய ஒழுங்குமுறையை அழிப்பதற்காக ராஜாதி ராஜா பரலோக சேனையை வழிநடத்திச் செல்வதைப் பார்க்கிறான். (19:11–21) ஆம், “தேவனுடைய வார்த்தை”யாகிய இயேசு, தேசங்களுக்கு எதிராக யுத்தம் பண்ணுகிறார். மூர்க்க மிருகமும் (சாத்தானின் அரசியல் அமைப்பு) கள்ளத்தீர்க்கதரிசியும் (ஆங்கில அமெரிக்க உலக வல்லரசு) முழுமையான, நித்திய அழிவுக்கு அடையாளமாயிருக்கும் “அக்கினிக் கடலில்” எரியப்படுவதை அப்போஸ்தலனாகிய யோவான் காண்கிறான்.
அடுத்து என்ன? ஏன், யோவான் சாத்தான் அபிஸில் போடப்படுவதைப் பார்க்கிறான். அதைத் தொடர்ந்து கிறிஸ்துவின் ஆயிர வருட ஆட்சியின் ஒரு முன் காட்சி. அந்தக் காலப்பகுதியில்தான் இயேசுவும் உயிர்த்தெழுப்பப்பட்ட உடன் அரசர்களும் மனிதவர்க்கத்தை நியாயந்தீர்க்கிறார்கள், கீழ்ப்படிதலுள்ளவர்களை மானிட பரிபூரணத்திற்கு உயர்த்துகின்றனர்! (20:1–10) இப்பொழுது கடைசி சோதனைக்கு நேரமாகிவிட்டது. அபிஸிலிருந்து விடுவிக்கப்படும் சாத்தான் இப்பொழுது பரிபூரண மனிதவர்க்கத்தை மோசம்போக்குவதற்காகப் புறப்படுவான், ஆனால் அழிவு கடவுளுக்கு விரோதமாயிருக்கும் அனைத்து பிசாசுகளின் மற்றும் மனிதரின் வாழ்க்கைப் பணிகளை முடிவுக்குக் கொண்டுவரும்.
காலத்தின் ஓட்டத்தில் சற்று பின்னே வந்து பார்க்கையில், மரணத்திலும், ஹேடீஸிலும் (மனிதவர்க்கத்தின் பொதுப் பிரேதக் குழி) கடலிலும் இருப்பவர்கள் அனைவரும் ஒரு மகா வெள்ளை சிங்காசனத்தில் வீற்றிருப்பவருக்கு முன்னால் உயிர்த்தெழுப்பப்பட்டு நியாயந்தீர்க்கப்படுவதைப் பார்ப்பதில் யோவான் எவ்வளவாகக் கவரப்பட்டிருப்பான்! (20:11–15) மரணமும் ஹேடீஸும் அக்கினிக் கடலில் தள்ளப்படும்போது, நீதியுள்ளவர்கள் எப்பேர்ப்பட்ட ஒரு விடுதலையை அனுபவித்து மகிழுவார்கள், அவை இனிமேல் ஒருபோதும் ஆட்களைப் பலிவாங்காது!
யோவானின் தரிசனங்கள் ஒரு முடிவுக்கு வருகையில், அவன் புதிய எருசலேமைப் பார்க்கிறான். (21:1–22:21) அந்த அரசு மாநகர் பரலோகத்திலிருந்து இறங்கிவருகிறது, மற்றும் தேசங்களுக்கு வெளிச்சத்தைக் கொண்டுவருகிறது. புதிய எருசலேமினூடே “ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி” ஒன்று பாய்கிறது, இது வேதாகம சத்தியத்தையும் கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கத்தைப் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் மீட்டுக்கொள்வதற்கும் அவர்களுக்கு நித்திய ஜீவன் அளிப்பதற்கும் இயேசு செலுத்திய பலியின் அடிப்படையில் கடவுள் செய்திருக்கும் மற்ற ஏற்பாட்டையும் சித்தரிக்கிறது. (யோவான் 1:29; 17:3; 1 யோவான் 2:1, 2) இந்த ஆற்றின் ஒவ்வொரு கரையிலும் யோவான் ஆரோக்கியம் அளிக்கும் இலைகளையுடைய விருட்சங்களைக் காண்கிறான். இது கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கத்திற்கு நித்திய ஜீவனையளிக்கும் யெகோவாவின் ஏற்பாட்டின் ஒரு பகுதியை அடையாளப்படுத்தும். கடவுளிடமிருந்தும் இயேசுவிடமிருந்தும் வரும் நிறைவு செய்திகளை ஓர் அழைப்பு தொடருகிறது. ஆவியும் மணவாட்டியும் ‘வந்து ஜீவத் தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளும்’படியாக தாகமாயிருக்கும் ஒவ்வொருவருக்கும் கொடுக்கும் அழைப்பைக் கேட்பது எவ்வளவு அருமையாய் இருக்கிறது! வெளிப்படுத்துதலின் முடிவு வார்த்தைகளை நாம் வாசிக்கையில், யோவானுடைய வியப்பின் உணர்வுகளை நாமும் பகிர்ந்துகொள்கிறோம் என்பதில் சந்தேகம் இல்லை: “ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்!” (7w91 5⁄1)
விழித்துக்கொண்டிருங்கள்: கடவுளுடைய யுத்தமாகிய அர்மகெதோன் பற்றி தீர்க்கதரிசன வார்த்தைகளின் மத்தியில் இப்படியாகச் சொல்லப்படுகிறது: “இதோ, திருடனைப்போல் வருகிறேன் (இயேசு கிறிஸ்து). தன் மானம் காணப்படத்தக்கதாக நிர்வாணமாய் நடவாதபடிக்கு விழித்துக்கொண்டு, தன் வஸ்திரங்களை [மேல் அங்கிகளை, NW] காத்துக்கொள்கிறவன் பாக்கியவான்.” (வெளிப்படுத்துதல் 16:15) இது எருசலேம் ஆலய மலைக் கண்காணி அல்லது அதிகாரியின் கடமைகளைக் குறிப்பாய்த் தெரிவிப்பதாக இருக்கக்கூடும். இரா ஜாமங்களில் லேவிய காவற் பணியாட்கள் அவர்களுடைய நிலைகளில் விழிப்பாய் இருக்கிறார்களா அல்லது தூங்கிவிட்டார்களா என்பதைக் கண்காணிக்க ஆலயத்தைச் சுற்றிவருவார். எந்த ஒரு காவற்காரனும் தூங்குவதாகக் காணப்பட்டால், அவன் ஒரு தடியால் அடிக்கப்பட்டு, வெட்கப்படும்படியான தண்டனையாக அவனுடைய மேல் அங்கி எரிக்கப்படக்கூடும். அர்மகெதோன் இப்பொழுது அவ்வளவு அண்மையில் இருப்பதால், “ராஜரீக ஆசாரியத்துவ”த்தின் அல்லது “ஆவிக்குரிய வீட்டின்” அபிஷேகம்பண்ணப்பட்டவர்களில் மீதியானோர் ஆவிக்குரியப் பிரகாரமாய் விழிப்பாயிருக்கத் தீர்மானமாயிருக்கிறார்கள். அவர்களுடைய கூட்டாளிகளாகிய பூமிக்குரிய நம்பிக்கையுள்ள “திரள் கூட்ட”மும் அப்படியே இருக்க வேண்டும், ஏனென்றால் அவர்களுங்கூட ஆலயத்தில் இரவும் பகலும் தேவனைச் சேவிக்கிறார்கள். (1 பேதுரு 2:5, 9, NW; வெளிப்படுத்துதல் 7:9–17) சபைகளில் கெட்ட நிலைமைகள் வளர்ந்துவிடாதபடிக்கு கிறிஸ்தவ கண்காணிகள் விசேஷமாக விழிப்பாய் இருக்கவேண்டும். அவர்கள் விழிப்பாய் இருப்பதால், கடவுளுடைய ஆவிக்குரிய ஆலயத்தில் உண்மையாய் வணங்குகிறவர்கள் எல்லாருமே யெகோவாவின் சாட்சிகளாக அவர்களுடைய கனம்பொருந்திய சேவையைக் குறிக்கும் தங்களுடைய “மேல் அங்கிகளை” காத்துக்கொள்கிறார்கள்.