பாபிலோன்—பொய் வணக்கத்தின் மையம்
“பாபிலோன் விழுந்தது, விழுந்தது; அதன் விக்கிரக தேவர்களையெல்லாம் தரையோடே மோதி உடைத்தார்!” ஏசாயா தீர்க்கதரிசனம் உரைத்த அந்தப் பாபிலோன் எப்படிப்பட்ட நகரமாயிருந்தது? நவீன மகா பாபிலோன் எதைக் குறிப்பிடுகிறது என்பதை நாம் அறிந்துகொள்வதற்கு அது ஒரு முக்கியமான துப்பு.—ஏசாயா 21:9.
பூர்வீக பாபிலோன் அதன் பொய்த் தேவர்கள் மற்றும் தேவதைகளின் வணக்கத்திற்கு பேர்பெற்றிருந்தது. பாபிலோனிய மற்றும் அசீரிய மதம் (Babylonian and Assyrian Religion) என்ற தன்னுடைய புத்தகத்தில் பேராசிரியர் S.H. ஹுக் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “வணங்கப்பட்டுவந்த மற்ற தெய்வங்களில் மார்துக் தெய்வம் முக்கிய இடத்தை வகித்துவந்த நகரம் பாபிலோன் நகரம். . . . நேபுகாத்நேச்சார் II ஆண்ட காலத்தில் பாபிலோனில் தெய்வங்களுக்காக ஐம்பத்தெட்டு ஆலயங்களுக்குக் குறைவாகக் காணப்படவில்லை. இதில் இதுவரை எந்தத் தெய்வங்களுக்கு உரிய ஆலயம் என்று கணிக்கப்படமுடியாதிருக்கும் ஆலயங்கள் உட்படவில்லை. எனவே, அந்த மகா நகரத்தின் வாழ்க்கையில் மதப்பூசாரி வகுப்பினர் எவ்வளவு பெரிய பங்கை வகித்தனர் என்பது தெளிவாகத் தெரிகிறது.” பாபிலோனிலுள்ள மார்துக் ஆலயத்தில் 55 உப கோவில்கள் இருந்தன என்று சொல்லப்படுகிறது. இன்றுள்ள பல கோவில்கள், சர்ச்சுகள், பெரிய ஆலயங்கள் குறைந்த முக்கியத்துவமுடைய தெய்வங்களுக்காகவும், புனிதர்களுக்காகவும் மரியாள்களுக்காகவும் உப கோவில்களைக் கொண்டிருப்பதற்கு அவை எந்தளவுக்கு நினைவுச்சின்னங்களாக இருக்கின்றன!
தெய்வ வழிபாட்டு மரபில் பாபிலோன் விக்கிரகாராதனையின் மையமாக இருந்தது. மதப்பூசாரிகளும் அம்மத விசுவாசிகளும் “தங்களுடைய புனிதமான விக்கிரகங்கள் தெய்வங்களுக்கு மத்தியஸ்தமாக விளங்குகின்றன என்று கருதி அவற்றிற்கு அளவுக்கு மிஞ்சிய கவனத்தைச் செலுத்தினர். அவ்விக்கிரகங்கள் விலையுயர்ந்த ஆடைகளாலும், பதக்கங்களாலும், வளையல்களாலும், மோதிரங்களாலும் அலங்கரிக்கப்பட்டன; அவை பெருஞ்செலவில் ஆயத்தப்படுத்தப்பட்ட மெத்தைப் படுக்கைகளில் அமர்த்தப்பட்டு நிலத்தில் மற்றும் நீரில் தேர்களிலும் தனியார் படகுகளிலும் சுமந்து செல்லப்பட்டன.”a தற்காலத்தில் இந்து மதத்திலும், புத்த மதத்திலும், கத்தோலிக்க மதத்திலும் தெய்வங்களுக்கும், புனிதர்களுக்கும், மரியாள்களுக்கும் செலுத்தப்படும் வணக்கத்திற்கு எவ்வளவு இசைவாக இருக்கிறது; தங்களுடைய விக்கிரகங்களை தெரு தெருவாகவும், ஆறுகளையும் கடல்களையும் கடந்தும் எடுத்துச்செல்கிறார்கள்!
பூர்வீக பாபிலோனுக்கும் நவீன மதத்துக்கும் இடையே ஓர் இணைபொருத்தத்துக்கு இன்னுமொரு உதாரணத்தைக் காண, அதே என்ஸைக்ளோபீடியாவிலிருந்து எடுக்கப்பட்ட பின்வரும் விவரிப்பைக் கவனியுங்கள்: “அவளுடைய விசுவாசிகள் அவளை இன்பெயர்களிட்டு தொழுதுகொள்கின்றனர்: அவள் தேவதையாகவும் பெண்ணாகவும் மட்டுமல்ல, ஆனால் இரக்கமுள்ள தாயாகவும், ஜெபங்களுக்குச் செவிகொடுப்பவளாகவும் மத்தியஸ்தம் பண்ணுகிறவளாகவும் . . . சர்வலோகத்துக்கும் மனிதவர்க்கத்துக்கும் உயிர் கொடுத்தவளாகவும் இருக்கிறாள்.” அதை எல் சான் டு ரொசாரியோ (பரிசுத்த ஜெப மாலை) ஜெபத்துடன் ஒப்பிடவும்: “பெருமாட்டியே, உம்முடைய அன்புக் கரங்களில் நாங்கள் ஒவ்வொரு நாளும் பெற்றுவரும் தயவுகளுக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம்; உம்முடைய பாதுகாப்பிலும் அடைக்கலத்திலும் எங்களை இன்றும் என்றும் கொண்டிருக்க, தாயே, தயவுகூர்ந்தருளும்.”
இந்த விவரமும் ஜெபமும் யாருக்குப் பொருந்துகிறது? “கன்னி மரியாளுக்கு” என்று அநேகர் உடனடியாகக் கூறுவர். அந்த விடை பாதிதான் சரி. அந்த ஜெபம் மரியாளுக்கே ஏறெடுக்கப்படுகிறது. ஆகிலும், லால் கிராண்டஸ் ரிலிஜன்ஸ் இல்லஸ்ட்ரேடாஸ் (Las Grandes Religiones Ilustradas) நமக்குத் தெரிவிப்பது போல், முதல் மேற்கோள் பாபிலோனிய பெண் தெய்வமாகிய இனப்பெருக்கம், காதல் மற்றும் போருக்குத் தெய்வமாகிய இஷ்டார், அதாவது “காதல் தெய்வத்தாய்” பற்றிய விவரம். சில சமயங்களில் அவள் “ஓர் ஆண் குழந்தைக்குப் பால் கொடுப்பதாகச் சித்தரிக்கப்படுகிறாள்.”b என்றபோதிலும் நவீன மதம் பூர்வீக பாபிலோனிய மதத்திலிருந்து வெகு தூரத்தில் குரல் கொடுப்பதாயில்லை என்பதற்கு இது இன்னொரு எடுத்துக்காட்டு!
பூர்வீக பாபிலோனின் மனித ஆத்துமா அழியாமை மற்றும் திரியேக தெய்வங்கள் என்ற மத நம்பிக்கைகளுக்கும் இது போன்ற நவீன மதத்தின் ஆத்துமா அழியாமை, திரித்துவ நம்பிக்கைகளுக்கும் இடையே ஒற்றுமை இருப்பதைக் காண முடிகிறது. இந்த அத்தாட்சி, “மகா பாபிலோன்” சாத்தானின் பொய் மத உலகப் பேரரசுக்குப் பொருத்தமான அடையாளம் அல்லது சின்னம் என்று நாம் அறிந்திருக்கும் காரியத்தை உறுதிப்படுத்துகிறது.
பாபிலோன்—உண்மை வணக்கத்தின் இறுமாப்பு கொண்ட விரோதி
பாபிலோன் யெகோவாவின் பூர்வீக ஜனமாகிய இஸ்ரவேலின் இறுமாப்பு கொண்ட விரோதியாகவும் உண்மை வணக்கத்தை வெறுக்கும் ஒன்றாகவும் இருந்தது. பாபிலோன் பொ.ச.மு.607-ல் எருசலேம் ஆலயத்தை அழித்தது, யெகோவாவின் வணக்கத்துக்குரிய எல்லா விலையுயர்ந்த பாத்திரங்களும் எடுத்துச்செல்லப்பட்டு, பெல்ஷாத்சாரின் விருந்தில் இந்தப் பாத்திரங்கள் பரிசுத்தக்குலைச்சலுக்கடுத்த விதத்தில் பயன்படுத்தப்பட்டன.—தானியேல் 5:3, 4.
அதுபோல, தற்காலத்திலும்கூட மகா பாபிலோன் உண்மை வணக்கத்தைத் தளராது எதிர்த்து வந்திருக்கிறது. யெகோவாவின் சாட்சிகள் துன்புறுத்தப்பட்டிருக்கும் அநேக சந்தர்ப்பங்களில் குருவர்க்கம் அரசியல் ஆட்சியாளர்களுடன் கூட்டு சேர்ந்து அதைத் தூண்டிவிட்டிருக்கிறது.
குருவர்க்கத்தினரால் தூண்டப்பட்ட இப்படிப்பட்ட எதிர்ப்புக்கு ஒரு தெளிவான உதாரணம் 1917-க்குச் செல்லுகிறது. இந்தச் செயல் அவ்வப்போது திரும்பத்திரும்ப செய்யப்பட்டிருக்கிறது. சர்வதேச பைபிள் மாணாக்கர் என்று அந்தச் சமயத்தில் அழைக்கப்பட்ட சாட்சிகள் அந்த ஆண்டில் முற்றுபெற்ற இரகசியம் (The Finished Mystery) என்ற புத்தகத்தைப் பிரசுரித்தனர். இந்தப் புத்தகத்தில் ஒருசில பக்கங்கள் அரசைக் கவிழ்ப்பதற்கான நோக்கம் கொண்டவை என்று கனடா மற்றும் ஐக்கிய மாகாணங்களின் குருவர்க்கத்தினரால் கூறப்பட்டது. இவர்களுடைய நாடுகள் முதல் உலக மகா யுத்தத்தில் ஈடுபட்டவையாயிருந்தன. இந்தப் பிரசுரத்தைக் குறித்து தங்களுடைய அரசியல் கள்ளக் காதலரிடம் அறிவிக்க விரைந்தனர். விளைவு? பேராசிரியர் மார்ட்டின் மார்ட்டி தன்னுடைய புத்தகமாகிய நவீன அமெரிக்க மதம்—அதில் அடங்கிய வஞ்சப்புகழ்ச்சி (Modern American Religion—The Irony of It All) என்பதில் பின்வருமாறு குறிப்பிட்டார்: “குருவர்க்கம் ரசல் சபையாருக்கு [சாட்சிகளுக்கு] எதிராகத் திரும்பியது மட்டுமின்றி, கைதுசெய்யப்பட்ட யெகோவாவின் சாட்சி தலைவர்களுக்கு [இராசதுரோகம் என்று குற்றச்சாட்டப்பட்டு] இருபது ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது என்று கேள்விப்படுவதில் மகிழவும் செய்தனர்.”
ஆனால் ஒருசில மாதங்களுக்குப் பின் அந்தத் தலைவர்கள் குற்றமற்றவர்களாக தீர்ப்பளிக்கப்பட்ட போது குருவர்க்கத்தினரின் பிரதிபலிப்பு என்னவாயிருந்தது? “ஆர்த்தடாக்ஸ் சர்ச் அங்கத்தினர் அது கேட்டு பூரிப்படையவில்லை.” “தங்களுடைய மதத்தின் பேரில் குடியரசு எரிச்சலடையும்நிலையை எட்டுமளவுக்கு” பைபிள் நியமங்களுக்காக சாட்சிகள் தனித்தே நின்றார்கள். சாட்சிகள் எந்தச் சமயத்திலும் அரசியல் ஆட்சியாளர்களின் கூட்டாளிகளாக இருந்ததில்லை, ஜெர்மனியில் இருந்துவந்த நாசி ஆட்சியின் கீழும், இத்தாலி, ஸ்பேய்ன் மற்றும் போர்ச்சுகலில் இருந்துவந்த பாசிச ஆட்சியின் கீழும், அப்படியிருந்ததில்லை.
பாபிலோன் வெளிப்படையாகக் கண்டனம் செய்யப்பட்டு வெட்கப்படுத்தப்பட்டது
மகா பாபிலோன் “பரிசுத்தவான்களின் இரத்தத்தினாலும், இயேசுவினுடைய சாட்சிகளின் இரத்தத்தினாலும் வெறிகொண்டிருக்கிறது” என்றும், “தீர்க்கதரிசிகளுடைய இரத்தமும் பரிசுத்தவான்களுடைய இரத்தமும் பூமியில் கொல்லப்பட்ட அனைவருடைய இரத்தமும் அவளிடத்தில் காணப்பட்டது,” என்றும் வெளிப்படுத்துதல் குறிப்பிடுவது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது. யுத்தங்களில் சுறுசுறுப்பாக ஈடுபடுவதற்கும் அல்லது அவற்றை மறைவாக ஆதரிப்பதற்கும் உண்மை கிறிஸ்தவர்களை துன்புறுத்துவதற்குமான உலகத்தின் இரத்தப்பழியை சரித்திரத்தின் நூற்றாண்டுகளினூடே காணமுடிகிறது.—வெளிப்படுத்துதல் 17:6; 18:24.
பொய் மத உலக பேரரசாகிய மகா பாபிலோன் சரித்திரம் முழுவதுமே சொகுசான வாழ்க்கையையும் அதிகாரத்தையும் அனுபவித்துவந்திருக்கிறது. ஆனால் அந்த வேசியின் மகா நாள் வரப்போகிறது என்று அந்தத் தேவதூதன் எச்சரித்தான்: “அவன் பலத்த சத்தமிட்டு: மகா பாபிலோன் விழுந்தது! விழுந்தது! அது பேய்களுடைய குடியிருப்பும், சகலவித அசுத்த ஆவிகளுடைய காவல்வீடும், அசுத்தமும் அருவருப்புமுள்ள பறவைகளுடைய கூடுமாயிற்று.”—வெளிப்படுத்துதல் 18:2.
பாபிலோன் எப்பொழுது விழும்? அல்லது ஏற்கெனவே விழுந்துவிட்டாளா? எந்த விதத்தில் அவள் விழுகிறாள்? அது உங்களை எவ்வாறு பாதிக்கிறது? இந்தக் கேள்விகளும், இது சம்பந்தமான மற்ற கேள்விகளும் காவற்கோபுரம் பத்திரிகையின் அடுத்த இதழில் விடையளிக்கப்படும். (w89 4⁄1)
[அடிக்குறிப்புகள்]
a படங்களுடன் விளக்கப்பட்ட பெரிய மதங்கள் (Las Grandes Religiones Ilustradas): புத்தகம் 20, மாட்டெள- ரிஸோலி, பார்செலோனா, ஸ்பேய்ன், 1963, பக்கம் 53. (Asiro-Babilonica).
b புத்தகம் 19, பக்கங்கள் 19, 20.
[பக்கம் 8, 9-ன் படம்]
மகா பாபிலோன் பூர்வீக பாபிலோன் மதத்தில் வேரூன்றியதாக இருக்கிறது