ராஜ்ய அறிவிப்பாளர் அறிக்கை
பிரான்ஸில் பொது மக்களை சந்திக்கும் சாட்சிகள்
அன்று வெள்ளிக்கிழமை ஜனவரி 29, 1999. கதிரவன் பிரகாசமான தன் முகத்தை காட்டுவதற்குள், பிரான்ஸ் தெருக்களில் யெகோவாவின் சாட்சிகளின் முகங்கள் பிரகாசித்துக் கொண்டிருந்தன. அங்கு அவர்கள், பிரான்ஸ் மக்களே, ஏமாறாதீர்! (ஆங்கிலம்) என்று தலைப்பிட்ட துண்டுப்பிரதியை எல்லோருக்கும் உற்சாகத்துடன் வினியோகித்துக் கொண்டிருந்தனர். அன்று காலை முதல் ஞாயிறுக்குள்ளாக, தெருக்களிலும் வீடுகளிலும் சுமார் 1 கோடியே 20 லட்சம் துண்டுப்பிரதிகளை வினியோகித்து விட்டனர். ஏன் இப்படிப்பட்ட பகிரங்கமான வினியோகிப்பு வேலை?
அந்த வெள்ளிக்கிழமை காலை பாரிஸில் நடந்த நிருபர் கூட்டம் ஒன்றில் மக்கள் மனங்களை துருவித் துளாவிக்கொண்டிருந்த ஒரு கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டது, அதாவது இந்த வினியோகிப்பு வேலைக்கான காரணம் வெளியிடப்பட்டது. இதைப் பற்றி சார்புப் பேச்சாளராக ஒரு சாட்சி விளக்கினார்: “நாங்கள் யார், நாங்கள் என்ன செய்கிறோம் என்பதை எல்லோரும் தெரிந்துகொள்ளவும், எங்களைப்பற்றி பரவி வரும் பொய்க் குற்றச்சாட்டுகளை நிறுத்தவும் இன்று இப்படிப்பட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எங்களிடம் ஏதேனும் குற்றம் குறை இருந்தால் அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள தயாராயிருக்கிறோம், ஆனால் எங்களைப் பற்றி பொய்யான குற்றச்சாட்டுகளையும், எங்கள் நற்பெயரை கெடுக்கும் எந்த அவதூறுகளையும் இனிமேலும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்.”
பிரான்ஸில், யெகோவாவின் சாட்சிகள் மூன்றாவது பெரிய கிறிஸ்தவ மதப்பிரிவாக இருந்தபோதிலும், பள்ளி செல்லும் அநேக சாட்சிப்பிள்ளைகள் அவமானத்தையும் தொந்தரவுகளையும் எதிர்ப்படுகின்றனர். அநேக பெரியவர்களும்கூட, தங்கள் வேலையை இழந்திருப்பதோடு அவர்களுடைய மத நம்பிக்கைக்காக பயமுறுத்தப்பட்டும் உள்ளனர். இதைவிட கொடுமையானது, ஏழைமக்கள் தங்கள் மதத்திற்காக கொடுக்கும் நன்கொடைகளில்கூட, 60 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட ஓரவஞ்சனையான செயலுக்கு, இந்த வினியோகிப்பு எவ்வாறு பதிலடி கொடுத்தது?
அந்த துண்டுப்பிரதி இவ்வாறு வாசிக்கிறது: “பிரான்ஸில் வாழும் 2,50,000 யெகோவாவின் சாட்சிகளும் அவர்களைச் சேர்ந்தவர்களும் போராடுகின்றனர். எதற்காக? 1900 முதல் பிரான்ஸில் செயல்பட்டு வரும் தங்களுடைய கிறிஸ்தவ மதப்பிரிவை, 1995 முதல் ஆபத்தான மதப்பிரிவுகளில் ஒன்றாக கருதுவதை எதிர்த்து. . . . அதோடு, தொடர்ந்து அவர்களைப் பாதிக்கும் தொல்லைகளுக்கு எதிராகவும் போராடுகின்றனர்.” இதன் மூலம், பிரான்ஸில் உள்ள சாட்சிகளை இலக்காக்கிய இந்த அவதூறான குற்றச்சாட்டுகளையும், சாட்சிகளைப் பற்றி பொய்யான செய்திகளைப் பரப்ப கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு திரிந்தவர்களுடைய தவறான வழிகளையும் வெளிச்சத்துக்கு கொண்டுவந்தது. அந்த துண்டுப்பிரதி இவ்வாறு சொல்லி முடிக்கிறது: “ஐரோப்பாவில் இன்று, 20 லட்சத்திற்கும் அதிகமான யெகோவாவின் சாட்சிகளும் அவர்களை சேர்ந்தவர்களும் வாழ்ந்து வருகிறார்கள். தங்களுடைய சுவிசேஷப் பிரமாணங்களுக்கு இணங்க, அவர்கள் எந்த அரசாங்கத்தின் குடிமக்களாக இருக்கிறார்களோ அதன் சட்டங்களுக்கு கீழ்ப்படிகிறார்கள். பிரான்ஸ் மக்களே இதுதான் உண்மை. இந்த உண்மைகளை உங்கள் கவனத்துக்கு கொண்டுவருவது எங்கள் கடமை!”
விரைவான, சாதகமான பிரதிபலிப்பு
முதல் நாளிலேயே லட்சக்கணக்கான துண்டுப்பிரதிகள் கொடுக்கப்பட்டன. பாரிஸில் மட்டும், நண்பகலுக்குள்ளாக 7,000 சாட்சிகள் 13 லட்சம் துண்டுப்பிரதிகளை கொடுத்துள்ளனர். திரளான சாட்சிகள் எல்லா தெருக்களிலும் துண்டுப்பிரதிகளை கொடுத்துக் கொண்டிருந்த இந்த கண்கொள்ளா காட்சியை ஜனங்கள் பார்ப்பது இதுவே முதல் தடவை. இந்த பிரமாண்டமான ஏற்பாட்டிற்கு, செய்தித்துறையும், அதாவது தேசிய மற்றும் உள்ளூர் செய்தித்தாள்களும் டிவியும் சாதகமாக பிரதிபலித்தன. லா ப்ராக்ரே ட லீஆங் என்ற செய்தித்தாள் இவ்வாறு குறிப்பிட்டது: இந்த முயற்சி . . . தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கும் ஒரு வார்த்தையை மக்களுடைய கவனத்திற்கு கொண்டுவந்துள்ளது. கடந்த பத்தாண்டுகளாக, ‘கருத்துவேறுபாட்டுக் குழு’ என்னும் வார்த்தை . . . தவறான, ஆபத்தான, மோசமான ஒரு தொகுதி என்ற அர்த்தத்தை கொடுத்துள்ளது. . . . ஆனால் யெகோவாவின் சாட்சிகள், இந்த சமுதாயத்தையே நிலைகுலைய வைக்கும் ஆபத்தான எண்ணமுடையவர்கள் அல்ல.”
யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி நன்கு தெரிந்தவர்கள், சாட்சிகளுடைய அமைதலான குணத்திற்கும், ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் சமுதாய ஒழுங்கிற்கு அவர்கள் காட்டும் ஆழ்ந்த மரியாதைக்கும், இருதயப்பூர்வமான பாராட்டுதலை தெரிவிக்கின்றனர். இவ்வாறு, இந்த வினியோகிப்பில் ஈடுபட்டிருந்த ஆயிரக்கணக்கான சாட்சிகளுக்கு, அநேகர் பாராட்டுதலையும் ஆதரவையும் தெரிவித்தனர். இந்த விநியோகிப்பு துவங்கிய சிறிது நேரத்திலேயே அந்த துண்டுப்பிரதிகளை பெற்றுக் கொண்டவர்களிடமிருந்து அதற்கு நன்றி தெரிவித்து, தொலைபேசி அழைப்புகளும், ஃபேக்ஸ் செய்திகளும், கடிதங்களும் வரத்துவங்கின. எல்லாவற்றிற்கும் மேலாக, சாட்சிகள் போலியான, தவறான கருத்துக்களுக்கு எதிரானவர்கள் என்ற உண்மையை நேர்மை இருதயமுள்ளவர்கள் தெரிந்துகொண்டனர். அதுமட்டுமின்றி சாட்சிகளுடைய நம்பிக்கைகள் திரித்துக் கூறப்பட்டிருந்த போதிலும், அவர்களுடைய நம்பிக்கைகள்மீது அவர்களுக்கு இருக்கும் வைராக்கியத்தையும் வெளிப்படுத்த ஒரு வாய்ப்பு கொடுத்தது.