இயேசு பார்ப்பதற்கு எப்படி இருந்தார்?
இயேசுவின் தோற்றம் எப்படி இருந்ததென சரித்திரம் கூறுவதைப் பார்த்தோம். ஆனால், அதன்மீது பல்வேறு காரணிகள் பெருமளவு செல்வாக்கு செலுத்தியிருக்கின்றன. ஆகவேதான் அவரை சித்தரிக்கும் படங்களில் வித்தியாசங்கள் ஏராளம்.
அந்த நாட்டின் கலாச்சாரமும் அந்தப் படம் வரையப்பட்ட காலமும் இரண்டு காரணிகளாகும். மேலுமாக, படத்தை வரைந்த ஓவியர்களின் மற்றும் அவர்களை வேலைக்கு அமர்த்தியவர்களின் மத நம்பிக்கைகளும்கூட இயேசு சித்தரிக்கப்பட்ட விதத்தில் செல்வாக்கு செலுத்தின.
பல நூற்றாண்டுகளாக, பிரசித்தி பெற்ற ஓவியர்களான மைக்கேலாஞ்சலோ, ரெம்பிரான்ட், ரூபன்ஸ் ஆகியோர் கிறிஸ்துவின் தோற்றத்தில் அதிக அக்கறை காண்பித்தனர். அவர்களுடைய சித்திரங்கள் எத்தனை எத்தனையோ அர்த்தம் கற்பித்து வசீகரிப்பவையாயும் இருந்தன; இயேசு பார்ப்பதற்கு எப்படி இருந்தார் என்ற எண்ணத்தில் அவை பெரும் செல்வாக்கு செலுத்தின. ஆனால் எதை அடிப்படையாக வைத்து அவர்கள் இந்தப் படங்களை வரைந்தார்கள்?
சரித்திரம் சொல்வதென்ன?
ரோம பேரரசர் காண்ஸ்டன்டைன் சுமார் பொ.ச. 280 முதல் 337 வரை வாழ்ந்தவர். அவருடைய காலத்திற்கு முற்பட்ட சித்திரங்களில், குட்டையான அல்லது நீளமான, சுருண்ட தலைமுடி உடைய ஓர் இளம் ‘நல்ல மேய்ப்பனாக’ இயேசு சித்தரிக்கப்பட்டிருக்கிறார். ஆனால் இந்தத் தோற்றத்தைப் பற்றி காலம் சொல்லும் கலை என்ற ஆங்கில புத்தகம் இவ்வாறு கூறுகிறது: “நல்ல மேய்ப்பன் என்ற இந்தச் சித்திரம், எகிப்திய கலையில் பிறந்து, பழமையான [புறமத] கிரேக்க கலையில் தவழ்ந்து, இப்பொழுதோ கிறிஸ்தவ மந்தையின் உண்மையுள்ள பாதுகாவலரை சித்தரிக்க உபயோகிக்கப்படுகிறது.”
காலப்போக்கில், புறமதத்தின் செல்வாக்கு இன்னும் வெளிப்படையாக தெரியவந்தது. அந்தப் புத்தகம் தொடர்ந்து கூறுகிறது: “இயேசுவின் தோற்றம், மத்தியதரைக் கடல் பிரதேசங்களில் பிரபலமாக இருந்த கடவுட்களின் தோற்றத்தோடு அதிகம் ஒத்திருந்தது. அதிலும் முக்கியமாக சூரிய கடவுளாகிய ஹீலியோஸை (அப்போல்லோவை) [அவருடைய ஒளிவட்டம்தான் பின்னர் இயேசுவுக்கும் “புனிதர்களுக்கும்” கொடுக்கப்பட்டது] அல்லது கிழக்கில் அவருக்கு நிகரான ரோம தெய்வமாகிய சால் இன்விக்டஸை (வெல்லப்படாத சூரியனை) அத்தோற்றம் ஒத்திருந்தது.” ரோமிலுள்ள செயின்ட் பீட்டர்ஸ் சர்ச்சுக்கு கீழ் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கல்லறையில், “சூரிய ரதத்தின் குதிரைகளை வானவீதியில் ஓட்டிச் செல்லும்” அப்போல்லோவாகவே இயேசு சித்தரிக்கப்பட்டிருக்கிறார்.
ஆனாலும், இளமை ததும்பும் இந்தத் தோற்றம் அதிக நாட்கள் நீடிக்கவில்லை. என்ன நடந்தது என்பதைப் பற்றி அடால்ஃப் டீடரோன், கிறிஸ்தவ உருவக்கலை என்ற தன் ஆங்கில புத்தகத்தில் இவ்வாறு கூறுகிறார்: “கிறிஸ்தவத்திற்கு வயது ஆக ஆக . . . ஒவ்வொரு நூற்றாண்டு கடந்துபோகையிலும் இளமை பொங்கிய கிறிஸ்துவின் உருவத்திலும் முதுமை தென்பட்டது.”
பியூபிலஸ் லென்டுலஸ் என்பவர் ரோம உயர்நீதி மன்றத்திற்கு எழுதியதாக உரிமைபாராட்டும் 13-வது நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு படிவம் கிடைத்திருக்கிறது. அதில் கிறிஸ்துவைப் பற்றிய பின்வரும் விவரிப்பு காணப்படுகிறது: “அவருடைய முடி பழுக்காத ஹெசல்-கொட்டை நிறம் [வெளிர் பிரௌன்], காதுகள் வரை சுருட்டை இல்லாமலும் அதற்கு பிறகு சுருண்டும் கருப்பாகவும் பளபளப்பாகவும், தோள்பட்டைகளுக்கு மேல் அசைந்தாடும்; நேர் வகிடு இருக்கும் . . . , தலைமுடி நிறத்திலேயே குட்டையான அடர்ந்த தாடி, முகவாய்க்கட்டை அருகில் இரண்டாக பிரிந்திருக்கும்; . . . , கண்களோ சாம்பல் நிறமாகவும் . . . தெளிவாகவும் இருக்கும்.” ஆதாரமற்ற இந்தச் சித்திரம்தான் பின்னர் வந்த அநேக ஓவியர்களுக்கு அடிப்படையாக அமைந்தது. “ஒவ்வொரு காலப்பகுதியிலும் வாழ்ந்த மக்கள் தங்களுக்கு விருப்பமானபடி கிறிஸ்துவை ஓவியத்தில் வடித்தனர்” என நியூ கேத்தலிக் என்ஸைக்ளோப்பீடியா கூறுகிறது.
அதைப் போலவே, வித்தியாசப்பட்ட இனங்களையும் மதங்களையும் சேர்ந்த மக்கள் இயேசுவுக்கு வித்தியாசமான உருவத்தைக் கொடுத்தனர். ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆசியா என மிஷனரிகள் கால்வைத்த இடங்களிலிருந்து பெறப்பட்ட சித்திரங்கள், மேற்கில் பிரபலமாயிருந்த நீண்ட முடியுடைய கிறிஸ்துவையே சித்தரிக்கின்றன; ஆனால் சில சமயங்களில் அவருடைய தோற்றத்தில் ஆங்காங்கே “உள்ளூர் குணநலன்கள்” தென்பட்டன என்றும் அந்த என்ஸைக்ளோப்பீடியா கூறுகிறது.
புராட்டஸ்டண்ட் ஓவியர்களும் தங்களுக்கு விருப்பமானபடி இயேசுவுக்கு வடிவம் கொடுத்தனர். கிறிஸ்துவும் அப்போஸ்தலரும்—மத உருவங்களின் மாறும் தோற்றங்கள் என்ற தன் ஆங்கில புத்தகத்தில் எஃப். எம். காட்கிரி இவ்வாறு கூறுகிறார்: “ரெம்பிரான்ட் வரைந்திருக்கும் துயரமே உருவான கிறிஸ்துவின் தோற்றம் புராட்டஸ்டண்டினரின் மனநிலையில் தோன்றியதாகும். அதாவது, துயரார்ந்த, மெலிந்த, வெளிறிப்போன, கண்டிப்பான, . . . ஆழ்ந்து சிந்திக்கும், தன்னையே வெறுக்கும் புராட்டஸ்டண்ட் எண்ணத்தில் உருவானதாகும்.” அவர் மேலும் கூறுவதாவது: “‘தாழ்மை, சோகம், பயபக்தி’ மட்டும்தான் கிறிஸ்தவம் என [ரெம்பிரான்ட்] நினைத்தார் என்பதை இயேசுவுடைய மெலிந்த சரீரமும், ஆசாபாசங்களை [வெறுத்த] அவருடைய தோற்றமும்” தெளிவாக காட்டுகின்றன.
ஆனால் கிறிஸ்தவமண்டலத்தின் சித்திரங்களில் உள்ளதைப் போன்ற மெலிந்த, ஒளிவட்டம் சூழ்ந்த, பெண்மை தன்மையுள்ள, சோகமே உருவான, நீண்ட முடியுடைய கிறிஸ்துவின் தோற்றம் உண்மைக்கு ஒத்ததல்ல என்பதை நாம் பார்க்கப்போகிறோம். உண்மையைச் சொல்ல வேண்டுமானால், இயேசுவைப் பற்றிய பைபிளின் வர்ணனையிலிருந்து அது முற்றிலும் வித்தியாசமானது.
இயேசுவின் தோற்றத்தைப் பற்றி பைபிள்
“தேவ ஆட்டுக்குட்டி”யாக இருந்ததால் இயேசுவில் எந்தக் குறைபாடும் இருக்கவில்லை. ஆகவே அவர் நிச்சயமாகவே அழகுள்ளவராக இருந்திருப்பார். (யோவான் 1:29; எபிரெயர் 7:26) மேலும், பிரபல ஓவியங்களில் காட்டப்படுவதைப் போல அவர் எந்நேரமும் சோகமே உருவானவராக இருந்திருக்கவே மாட்டார். அவருடைய வாழ்க்கையில் அநேக துயரார்ந்த நிகழ்ச்சிகள் சம்பவித்தன என்பது உண்மைதான். ஆனால் பொதுவில் அவர், ‘நித்தியானந்த தேவனாகிய’ தம்முடைய பிதாவை அப்படியே பின்பற்றினார்.—1 தீமோத்தேயு 1:11; லூக்கா 10:21; எபிரெயர் 1:3.
இயேசுவின் முடி நீளமாக இருந்ததா? நசரேய விரதம் மேற்கொண்டவர்கள் மட்டுமே முடியை வெட்டாமலும் மது அருந்தாமலும் இருக்கவேண்டும்; ஆனால் இயேசு நசரேய விரதம் மேற்கொள்ளவில்லை. ஆகவே அவர் மற்ற யூத ஆண்களைப் போலவே தன் முடியை அளவாக வளர்த்திருப்பார். (எண்ணாகமம் 6:2-7) அதுமட்டுமல்ல, மற்றவர்களோடு இருக்கையில் அவர் மிதமான அளவு திராட்சரசத்தையும்கூட அருந்தி மகிழ்ந்தார். அவர் எப்போதும் சோகமே உருவானவராக இருக்கவில்லை என்ற உண்மையையும் இது ஊர்ஜிதப்படுத்துகிறது. (லூக்கா 7:34) ஏன், கலிலேயாவிலுள்ள கானா ஊரில் நடந்த கல்யாண விருந்தில் அவர் அற்புதமான விதத்தில் திராட்சரசத்தைத் தரவில்லையா? (யோவான் 2:1-11) அவருக்கு தாடியும்கூட இருந்தது. அவர் படப்போகும் பாடுகளைப் பற்றி குறிப்பிட்ட தீர்க்கதரிசனமும் இதை உறுதிப்படுத்துகிறது.—ஏசாயா 50:6.
இயேசுவின் நிறத்தையும் சாயலையும் பற்றியென்ன? யூத இனத்தாரைப் போலவே இருந்திருக்க வேண்டும். யூத பெண்ணான அவருடைய தாய் மரியாளுடைய சாயலை அவர் பெற்றிருக்கலாம். எபிரெயர்களுடைய வம்சாவளியில் வந்த அவளுடைய முன்னோர்களும் யூதர்களே. ஆகவே, நிறத்திலும் சாயலிலும் இயேசு யூதர்களைப் போலவே இருந்திருப்பார்.
இயேசு தம்முடைய அப்போஸ்தலர் மத்தியிலும்கூட தோற்றத்தில் மிகவும் வித்தியாசமானவராக இல்லை. அவருடைய எதிரிகளிடம் அவரைக் காட்டிக்கொடுக்க யூதாஸ் முத்தம் கொடுத்து அடையாளம்காட்ட வேண்டியிருந்ததே! எனவே இயேசு கூட்டத்தோடு எளிதாக கலந்துவிட முடிந்தது. அதற்கு ஓர் உதாரணம் வேண்டுமா? ஒருமுறை கலிலேயாவிலிருந்து எருசலேமிற்கு போகும்போது ஒருவராலும் அவரை அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லையே!—மாற்கு 14:44; யோவான் 7:10, 11.
இயேசு மெலிந்தவராக இருந்திருக்க வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். அவர்கள் இவ்வாறு சொல்வதற்கு காரணம்? ஒன்று, கழுமரத்தை சுமந்துசெல்ல அவருக்கு உதவி தேவைப்பட்டது. இரண்டாவதாக, கழுமரத்தில் அறையப்பட்ட மூன்று பேரில் அவர்தான் முதலில் இறந்தார்.—லூக்கா 23:26; யோவான் 19:17, 32, 33.
இயேசு மெலிந்தவராக இல்லை
பொதுவான நம்பிக்கைக்கு மாறாக, இயேசு மெலிந்தவராகவோ பெண்மை தன்மை உள்ளவராகவோ இருந்தார் என்று பைபிள் கூறவில்லை. அதற்கு பதிலாக அவர் இளைஞனாய் இருந்தபோதே, “ஞானத்திலும், சரீர வளர்ச்சியிலும், கடவுளிடமும் மனிதர்களிடமும் உள்ள தயவிலும் மேன்மேலும் அதிகரித்து வந்தார்.” (லூக்கா 2:52, NW) ஏறத்தாழ 30 வருடங்கள் அவர் தச்சனாக இருந்தார். மெலிந்த அல்லது வலிமையில்லாத ஒருவரால் அந்த வேலையை செய்திருக்கவே முடியாது; ஏனென்றால், உடல் அலுங்காமல் வேலைசெய்ய உதவும் நவீனகால கருவிகள் எதுவும் அப்போது இல்லை. (மாற்கு 6:3) மேலுமாக அவர், ஆடு மாடுகளையும், காசுக்காரர்களையும் ஆலயத்திலிருந்து வெளியே துரத்தி காசுக்காரர்களுடைய மேஜைகளைக் கவிழ்த்துப் போட்டார். (யோவான் 2:14, 15) அவர் சரீர பலமும் ஆண்மையும் மிக்கவராக இருந்தார் என்பதையே இதுவும் நிரூபிக்கிறது.
இயேசு பூமியில் வாழ்ந்த கடைசி மூன்றரை வருடங்களில் பிரசங்கிப்பதற்காக பல நூறு கிலோமீட்டர் நடந்தே சென்றார். ஆனாலும், “சற்றே இளைப்பாறும்” என்று சீஷர்கள் அவரிடம் கூறவே இல்லை. மாறாக, இயேசுதான் அவர்களிடம், “வனாந்தரமான ஓரிடத்தில் தனித்து சற்றே இளைப்பாறும்படி போவோம் வாருங்கள் என்றார்.” அவர்களில் சிலர் கட்டுமஸ்தான உடல்கொண்ட மீனவர்களாக இருந்தபோதிலும் அவர்களிடம் இவ்வாறு கூறினார்.—மாற்கு 6:31.
“[இயேசுவுக்கு] கட்டான உடலும் நல்ல ஆரோக்கியமும் இருந்ததையே சுவிசேஷ பதிவுகள் முழுவதும் சுட்டிக்காட்டுகின்றன” என்று மெக்ளின்டாக் மற்றும் ஸ்டிராங்கின் சைக்ளோப்பீடியா கூறுகிறது. அப்படியென்றால் அவரால் ஏன் கழுமரத்தைத் தூக்கிச்செல்ல முடியவில்லை? அவர் பக்கத்தில் அறையப்பட்டிருந்த மற்றவர்கள் இறப்பதற்கு முன்பாகவே ஏன் இறந்துபோனார்?
ஒரு காரணம் தாங்கமுடியாத வேதனை. இயேசு இறப்பதற்கான சமயம் நெருங்குகையில் இவ்வாறு சொன்னார்: “ஆகிலும் நான் எடுக்கவேண்டிய ஒரு முழுக்காட்டுதல் இருக்கிறது; அதை எடுக்கும்வரை மிகவும் அதிகம் வேதனைப்படுகிறேன்.” (லூக்கா 12:50, NW) இயேசுவின் இந்த வேதனை அவருடைய கடைசி இரவில் “மரணவேதனை”யாக மாறியது: “அவர் மரணவேதனை அடைந்தவராக அதிக ஊக்கத்தோடே ஜெபம் பண்ணினார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய் தரையிலே விழுந்தது.” (லூக்கா 22:44, NW) தாம் மரணம்வரை உண்மையுள்ளவராக இருப்பதில்தான் முழு மனிதவர்க்கத்தின் நித்திய எதிர்காலமும் சார்ந்திருக்கிறது என்பதை இயேசு அறிந்திருந்தார். சுமப்பதற்கரிய என்னே ஒரு பாரம்! (மத்தேயு 20:18, 19, 28) மேலும், ‘சபிக்கப்பட்ட’ ஒரு குற்றவாளியைப் போல் கடவுளுடைய சொந்த மக்களே அவரைக் கொலை செய்வார்கள் என்பதையும் அறிந்திருந்தார். ஆகவே இது தம்முடைய பிதாவுக்கு எத்தகைய அவப்பெயரை ஏற்படுத்தும் என்பதை நினைத்தும் அதிக கவலைப்பட்டார்.—கலாத்தியர் 3:13; சங்கீதம் 40:6, 7; அப்போஸ்தலர் 8:32.
அவர் காட்டிக்கொடுக்கப்பட்ட பிறகு அநேக துன்பங்களை எதிர்ப்பட்டார். நள்ளிரவுக்கு பிறகு நடந்த ஒரு போலி விசாரணையின்போது தேசத்தின் உயர் பதவியிலிருந்த அதிகாரிகள் அவரை தூற்றினர், கைமுஷ்டியால் அடித்தனர், அவர் மீது துப்பினர். இரவு நடந்த விசாரணையை பூசிமெழுக அடுத்த நாள் காலை மற்றொரு கண்துடைப்பு விசாரணை நடந்தது. அப்போது பிலாத்து இயேசுவை விசாரணை செய்தார். பிறகு விசாரித்த ஏரோது தன் படைவீரர்களுடன் சேர்ந்து அவரை ஏளனம் செய்தார். பிறகு மறுபடியும் பிலாத்து அவரை விசாரித்து வாரினால் அடிப்பித்தார். அந்த அடி ஒவ்வொன்றும் இடிபோல் விழுந்தது. வாரினால் அடிக்கும் ரோமர்களின் பழக்கத்தைப் பற்றி அமெரிக்க மருத்துவ சங்க பத்திரிகை (ஆங்கிலம்) இவ்வாறு கூறியது:
“பல்வேறு நீளத்தில், அநேக தனித்தனியான அல்லது பின்னப்பட்ட தோல் வார்களையுடைய . . . ஒரு சிறிய சாட்டையே பொதுவாக உபயோகிக்கப்பட்டது. அதில் இரும்பு குண்டுகள் அல்லது ஆட்டு எலும்புகளின் கூர்மையான துண்டுகள் ஆங்காங்கே கட்டப்பட்டிருந்தன. . . . ரோம போர் சேவகர்கள் ஒரு குற்றவாளியின் முதுகில் ஓங்கி ஓங்கி தொடர்ந்து அடிக்கையில், இரும்பு குண்டுகள் ஆழமான காயத்தை உண்டுபண்ணும்; தோல்வார்களும் ஆட்டு எலும்புகளும் தோலையும் தோலின் கீழுள்ள இழைமங்களையும் அறுத்துவிடும். பின்பு, பட்ட இடத்திலேயே மறுபடியும் அடிபடும்போது கீழே இருக்கும் தசைநார்களை இன்னும் அதிகமாக கிழித்து, இரத்தம் கசிகையில் துடிதுடிக்கும் தசைகளை வெளியே காணமுடியும்.”
எனவே, இயேசு சுமந்துசென்ற கழுமரத்தின் பாரத்தால் நிலைகுலைந்து விழுவதற்கு வெகு முன்னரே அவருடைய பலம் மிகவும் குறைந்துபோயிருக்கும் என்பது தெளிவாகிறது. அதைப் பற்றி அமெரிக்க மருத்துவ சங்க பத்திரிகை இவ்வாறு கூறியது: “யூதர்களும் ரோமர்களும் அவருக்கு இழைத்த சரீர மற்றும் மன உபாதை, அதோடு தண்ணீரின்றி, உணவின்றி, உறக்கமின்றி இருந்ததும் சேர்ந்துகொண்டு மிகவும் பலவீனமடைந்த நிலைக்கு அவரை தள்ளின. ஆகவே இயேசுவை கழுமரத்தில் அறைவதற்கு முன்னரே அவருடைய சரீர நிலை மோசமாக, ஒருவேளை படுமோசமாகவும்கூட ஆகியிருக்கலாம்.”
தோற்றமா முக்கியம்?
கண்ணைக் கவரும் சித்திரங்களிலேயே கிறிஸ்தவமண்டலம் மோகம் கொண்டிருக்கிறது; லென்டுலஸின் ஆதாரமற்ற விவரிப்பு, பிரசித்தி பெற்ற ஓவியர்களின் சித்திரங்கள், இன்றுள்ள ஸ்டெயின்டு கிளாஸ் ஜன்னல்கள் ஆகியவையே இதற்கு சாட்சி. “இயேசு கிறிஸ்துவின் உருவம் உணர்ச்சிகளைத் தூண்டும் விசேஷ தன்மையுள்ளது; அதை நாம் பாதுகாக்க வேண்டும்” என ட்யுரினின் தலைமை குரு கூறினார். இவர், சர்ச்சைக்குள்ளான ட்யுரின் சவப்போர்வையின் பாதுகாவலர்.
ஆனாலும், இயேசுவின் தோற்றத்தைப் பற்றிய “உணர்ச்சிகளைத் தூண்டும்” விவரிப்புகளை கடவுளுடைய வார்த்தை வேண்டுமென்றே தவிர்க்கிறது. ஏன்? ஏனென்றால் நித்திய ஜீவனுக்கு வழிநடத்தும் பைபிள் அறிவிலிருந்து அது ஆட்களை திசை திருப்பக்கூடும் என்பதாலேயே. (யோவான் 17:3) நாம் பின்பற்றும் முன்மாதிரியாகிய இயேசுதாமே, ‘மனிதரின் வெளிப்புற தோற்றத்தைப் பார்ப்பதில்லை’ அல்லது அதை முக்கியமானதாக கருதுவதில்லை. (மத்தேயு 22:16; கலாத்தியர் 2:6, NW-ஐ ஒப்பிடுக.) இயேசுவின் தோற்றத்தைப் பற்றி சுவிசேஷங்கள் விவரிக்காதபோது நாம் அதற்கே அதிக முக்கியத்துவம் கொடுத்தால் சுவிசேஷங்களையே புறக்கணிப்பதைப் போலாகிவிடும் அல்லவா? உண்மையில், இயேசு இப்போது மனித உருவத்திலேயே இல்லை.a இதை ஏன் அடுத்த கட்டுரையில் வாசித்து பார்க்கக்கூடாது?
[அடிக்குறிப்புகள்]
a இயேசுவை சித்தரிக்கும் படங்களை பைபிள் படிப்பில் உபயோகிப்பதில் தவறு ஏதுமில்லை. உவாட்ச் டவர் சொஸைட்டியின் பிரசுரங்களில் இவை அடிக்கடி காணப்படுகின்றன. ஆனாலும், வசீகரிப்பதற்காகவோ, பார்ப்பவரை பிரமிப்பூட்டவோ, வேதப்பூர்வமற்ற கருத்துகளை, அடையாளங்களை அல்லது மத சின்னங்களை வணங்குவதை முன்னேற்றுவிக்கவோ இவற்றை பிரசுரிக்கவில்லை.
[பக்கம் 7-ன் படங்கள்]
கிறிஸ்தவமண்டல ஓவியர்களால் சித்தரிக்கப்படும் மெலிந்த வெளிறிப்போன கிறிஸ்துவிற்கும் பைபிள் விவரப்பதிவுகள் அடிப்படையிலான கிறிஸ்துவிற்கும் உள்ள வித்தியாசத்தை பாருங்கள்
[படத்திற்கான நன்றி]
Jesus Preaching at the Sea of Galilee by Gustave Doré