‘நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்’
‘காலத்தைப் பார்த்தால் நீங்கள் போதகராயிருக்க வேண்டும்.’—எபிரெயர் 5:12.
1. எபிரெயர் 5:12-ல் உள்ள வார்த்தைகள் சாதாரணமாகவே ஒரு கிறிஸ்தவரை ஏன் ஓரளவு கவலைப்பட வைக்கலாம்?
இந்த முக்கிய வசனத்தின் ஏவப்பட்ட வார்த்தைகளை வாசிக்கையில் உங்களை நினைத்து ஓரளவு கவலை கொள்கிறீர்களா? அப்படியென்றால், அவ்வாறு கவலைப்படுவது நீங்கள் மட்டுமே அல்ல. கிறிஸ்துவை பின்பற்றுகிற நாம் போதகர்களாயிருக்க வேண்டும் என்பதை அறிவோம். (மத்தேயு 28:19, 20) நாம் வாழும் காலப்பகுதியை கவனிக்கையில் நம்மால் முடிந்தளவு மிகச் சிறந்த விதத்தில் போதிக்க வேண்டியது அவசரம் என்பதை அறிவோம். நாம் போதிப்பதை கேட்பவர்களின் ஜீவன் அல்லது மரணம் அதில் உட்பட்டிருப்பதையும் அறிவோம். (1 தீமோத்தேயு 4:16) ஆகவே, நம்மை நாமே இவ்வாறு கேட்டுக்கொள்வது பொருத்தமானது: ‘நான் உண்மையில் அந்தளவுக்கு சிறந்த போதகனாக இருக்கிறேனா? நான் எவ்வாறு முன்னேற்றம் செய்யலாம்?’
2, 3. (அ) திறம்பட போதிப்பதற்கு அடிப்படையில் தேவைப்படுவதை ஓர் ஆசிரியர் எவ்வாறு விவரித்தார்? (ஆ) போதிக்கும் விஷயத்தில் இயேசு நமக்கு என்ன முன்மாதிரி வைத்தார்?
2 இந்த கவலைகளால் நாம் சோர்ந்துபோக வேண்டியதில்லை. விசேஷ உத்திகள் தெரிந்தால் மட்டுமே போதிக்க முடியும் என கருதினால் நம்மால் முன்னேற்றம் செய்ய முடியாது என நினைத்துவிடுவோம். ஆனால், நன்கு போதிப்பதற்கு அடிப்படையில் தேவைப்படுவது உத்தியல்ல, அதைவிட முக்கியமான ஒன்று. நன்கு போதிப்பதை பற்றிய ஒரு புத்தகத்தில் அனுபவம் வாய்ந்த ஓர் ஆசிரியர் எழுதியதை கவனியுங்கள்: “திறம்பட போதிப்பதற்கு குறிப்பிட்ட உத்திகளோ, முறைகளோ, திட்டங்களோ, செயல்களோ முக்கியமல்ல. . . . போதிப்பதற்கு அடிப்படையில் தேவைப்படுவது அன்பே.” இதை உலகப்பிரகாரமான ஆசிரியரின் கண்ணோட்டத்தில்தான் அவர் கூறுகிறார். இருந்தாலும், அவர் கூறியது கிறிஸ்தவர்களாக நமது போதிக்கும் வேலைக்கும் அதிகம் பொருந்துகிறது. எப்படி?
3 “நான் . . . உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்” என தம் சீஷர்களிடம் கூறிய இயேசு கிறிஸ்துவே போதகராக நமக்கு மிகச் சிறந்த முன்மாதிரி வைத்தவர். (யோவான் 13:15) மனத்தாழ்மை காட்டுவதில் அவர் வைத்த முன்மாதிரியை பற்றியே இயேசு இங்கு குறிப்பிட்டார்; என்றாலும், அவர் நமக்காக வைத்த முன்மாதிரியில், பூமியில் மனிதனாக இருக்கையில் அவர் செய்த அதிமுக்கிய வேலையும்—கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியை மக்களுக்கு பிரசங்கித்த வேலையும்—அடங்கும். (லூக்கா 4:43) எனவே, இயேசுவின் ஊழியத்தை ஒரே வார்த்தையில் விவரிக்க வேண்டுமென்றால் ‘அன்பு’ என்ற வார்த்தையையே நீங்கள் தெரிவு செய்வீர்கள் அல்லவா? (கொலோசெயர் 1:15; 1 யோவான் 4:8) தம் பரலோக தகப்பனாகிய யெகோவா மீது இயேசுவிற்கு இருந்த அன்பே பிரதானமானது. (யோவான் 14:31) என்றாலும், ஒரு போதகராக இயேசு மேலும் இரண்டு வழிகளில் அன்பைக் காட்டினார். அவர் போதித்த சத்தியங்களையும் நேசித்தார், அவர் போதித்த மக்களையும் நேசித்தார். அவர் நமக்காக வைத்த முன்மாதிரியின் இந்த இரண்டு விஷயங்களை இன்னும் கவனமாக ஆராய்வோமாக.
தெய்வீக சத்தியங்களிடம் நீண்ட கால அன்பு
4. யெகோவாவின் போதனைகளிடம் இயேசு எவ்வாறு அன்பை வளர்த்துக் கொண்டார்?
4 ஓர் ஆசிரியர் தான் போதிக்கும் பாடத்தை கருதும் விதம் அவருடைய போதனையின் தரத்தை பெரிதும் பாதிக்கும். அதில் அவருக்கு கொஞ்சம் ஈடுபாடு குறைந்தாலும் அது தெரிந்துவிடும், மாணவர்களையும்கூட அது தொற்றிக்கொள்ளலாம். யெகோவாவையும் அவருடைய ராஜ்யத்தையும் பற்றிய அருமையான சத்தியங்களை போதிக்கையில் இயேசு கவனக்குறைவாக இருக்கவில்லை. இந்த சத்தியங்கள்மீது இயேசுவுக்கு வெகு ஆழமான அன்பு இருந்தது. மாணவனாக இருந்தபோதே இந்த அன்பை அவர் வளர்த்துக் கொண்டார். ஒரேபேறான குமாரன் மனிதனாக வருவதற்கு முன்பு கோடானுகோடி வருடங்கள் ஆர்வத்தோடு கற்று வந்தார். ஏசாயா 50:4, 5-ல் உள்ள பின்வரும் வார்த்தைகள் மிகவும் பொருத்தமானவை: “இளைப்படைந்தவனுக்கு சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்ல நான் அறியும்படிக்கு, கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் கல்விமானின் நாவைத் தந்தருளினார்; காலைதோறும் என்னை எழுப்புகிறார்; கற்றுக்கொள்ளுகிறவர்களைப்போல, நான் கேட்கும்படி என் செவியைக் கவனிக்கச் செய்கிறார். கர்த்தராகிய ஆண்டவர் என் செவியைத் திறந்தார்; நான் எதிர்க்கவுமில்லை நான் பின்வாங்கவுமில்லை.”
5, 6. (அ) முழுக்காட்டுதல் சமயத்தில் இயேசு என்ன அனுபவத்தைப் பெற்றதாக தெரிகிறது, அது அவரை எவ்வாறு பாதித்தது? (ஆ) கடவுளுடைய வார்த்தையை உபயோகிப்பதில் இயேசுவுக்கும் சாத்தானுக்கும் என்ன வேறுபாட்டைக் காண்கிறோம்?
5 இயேசு பூமியில் மனிதராக வளர்ந்து வருகையிலும் தெய்வீக ஞானத்தை தொடர்ந்து நேசித்தார். (லூக்கா 2:52) பிறகு, முழுக்காட்டுதலின்போது அவர் விசேஷித்த அனுபவத்தைப் பெற்றார். “வானம் திறக்கப்பட்டது” என லூக்கா 3:21 கூறுகிறது. மனிதனாக வருவதற்கு முந்தைய வாழ்க்கை பற்றிய நினைவுகள் அவருக்கு மீண்டும் வந்ததாக தெரிகிறது. பிறகு, 40 நாட்கள் வனாந்தரத்தில் உபவாசமிருந்தார். பரலோகத்தில் பல தடவை யெகோவா தேவனிடமிருந்து பெற்றிருந்த போதனைகளை தியானிப்பதில் அவருக்கு பெருமகிழ்ச்சி கிடைத்திருக்கும். என்றாலும், கடவுளுடைய சத்தியங்களிடம் அவருக்கிருந்த அன்பு சீக்கிரத்திலேயே சோதிக்கப்பட்டது.
6 இயேசு களைப்பாகவும் பசியாகவும் இருந்தபோது சாத்தான் அவரை சோதிக்க முயன்றான். கடவுளுடைய இந்த இரண்டு குமாரர்கள் மத்தியிலும் எப்பேர்ப்பட்ட வேறுபாட்டைக் காண்கிறோம்! இருவருமே எபிரெய வேதாகமத்திலிருந்து மேற்கோள் காட்டினர், ஆனால் முற்றிலும் வித்தியாசப்பட்ட மனநிலையோடு அவ்வாறு செய்தனர். சாத்தான், சுயநல நோக்கத்தோடு கடவுளுடைய வார்த்தையை புரட்டினான், அவமதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் அதை உபயோகித்தான். உண்மையில், அந்தக் கலகக்காரன் தெய்வீக சத்தியங்களை அடியோடு வெறுத்தான். மறுபட்சத்தில் இயேசுவோ, அன்பு பொங்க வேதாகமத்திலிருந்து மேற்கோள் காட்டினார், ஒவ்வொரு முறை பதிலளிக்கையிலும் கடவுளுடைய வார்த்தையை வெகு கவனமாக உபயோகித்தார். ஏவப்பட்ட அந்த வார்த்தைகள் முதன்முதலாக எழுதப்படுவதற்கு வெகு முன்னரே இயேசு உயிரோடிருந்தார் என்றாலும் அவற்றை உயர்வாக மதித்தார். அவை தம் பரலோக தகப்பனிடமிருந்து வந்த மதிப்புமிக்க சத்தியங்கள் ஆயிற்றே! யெகோவாவிடமிருந்து வந்த அவ்வார்த்தைகள் உணவைவிட அதிக முக்கியம் என்று சாத்தானிடம் கூறினார். (மத்தேயு 4:1-11) ஆம், யெகோவா கற்பித்திருந்த சத்தியங்கள் அனைத்தையும் இயேசு நேசித்தார். ஆனால், ஒரு போதகராக அந்த அன்பை அவர் எவ்வாறு வெளிப்படுத்தினார்?
போதித்த சத்தியங்களை நேசித்தார்
7. இயேசு சொந்த போதனைகளை உருவாக்காமல் தவிர்க்க காரணம் என்ன?
7 இயேசு தாம் போதித்த சத்தியங்களை நேசித்தது எப்போதுமே தெளிவாக தெரிந்தது. அவர் நினைத்திருந்தால் தம் சொந்த கருத்துக்களை முன்னேற்றுவிப்பது கடினமாக இருந்திருக்காது. அறிவும் ஞானமும்தான் அவரிடம் எக்கச்சக்கமாக புதைந்து கிடந்தனவே. (கொலோசெயர் 2:3) இருந்தாலும், அவர் போதித்த அனைத்துமே தமக்கு சொந்தமானவையல்ல, தம் பரலோக தகப்பனிடமிருந்து பெற்றவையே என்பதை கேட்போரிடம் திரும்பத் திரும்ப கூறினார். (யோவான் 7:16; 8:28; 12:49; 14:10) அவர் தெய்வீக சத்தியங்களை வெகு அதிகமாக நேசித்ததால் தமது சொந்த கருத்துக்களை அவற்றிற்கு பதிலாக உபயோகிக்கவில்லை.
8. இயேசு தமது ஊழியத்தை ஆரம்பிக்கையிலேயே கடவுளுடைய வார்த்தையை ஆதாரமாக பயன்படுத்துவதில் என்ன மாதிரி வைத்தார்?
8 இயேசு தமது பொது ஊழியத்தை ஆரம்பித்தவுடனே நமக்கு மாதிரி வைத்தார். தாமே அந்த வாக்குப்பண்ணப்பட்ட மேசியா என்பதை கடவுளுடைய மக்களுக்கு அவர் முதன்முதலில் தெரிவித்த விதத்தை சிந்தித்துப் பாருங்கள். அவர் ஒரு கூட்டத்தார் முன்பாக வெறுமனே எழுந்து நின்று, தாமே கிறிஸ்து என்று கூறிவிட்டு, அதை நிரூபிக்க வியக்க வைக்கும் அற்புதங்களை செய்து காட்டினாரா? இல்லை. கடவுளுடைய மக்கள் வழக்கமாக வேத வாக்கியங்களை வாசிக்கும் தேவாலயத்திற்கு அவர் சென்றார். அங்கே, ஏசாயா 61:1, 2-ல் உள்ள தீர்க்கதரிசனத்தை சப்தமாக வாசித்துவிட்டு, அந்தத் தீர்க்கதரிசன சத்தியங்கள் தமக்கே பொருந்துகின்றன என்று விளக்கினார். (லூக்கா 4:16-22) அவர் செய்த அநேக அற்புதங்கள், யெகோவாவின் ஆதரவு அவருக்கு இருந்ததை நிரூபித்தன. இருந்தாலும், போதிக்கையில் அவர் எப்பொழுதும் கடவுளுடைய வார்த்தையையே ஆதாரமாக பயன்படுத்தினார்.
9. பரிசேயர்களோடு பேசுகையில் கடவுளுடைய வார்த்தை மீது தமக்கிருந்த பற்றுமாறா அன்பை இயேசு எவ்வாறு காண்பித்தார்?
9 மத எதிரிகள் இயேசுவை எதிர்த்தபோது அவர்களை வாதத்தால் வீழ்த்த அவர் நினைக்கவில்லை; அப்படி விவாதிக்க நினைத்திருந்தால் வெகு சுலபமாக அவர்களை வென்றிருப்பார். மாறாக, கடவுளுடைய வார்த்தையே அவர்களுடைய தவறுகளை சுட்டிக்காட்டும்படி செய்தார். உதாரணமாக, ஒரு வயலை கடந்து செல்கையில் தானியத்தை கொஞ்சம் கொய்து தின்றதால் இயேசுவை பின்பற்றுபவர்கள் ஓய்வுநாள் சட்டத்தை மீறியதாக பரிசேயர்கள் குற்றஞ்சாட்டியதை நினைத்துப் பாருங்கள். அப்போது, “தாவீதும் அவனோடிருந்தவர்களும் பசியாயிருந்தபோது செய்ததை நீங்கள் வாசிக்கவில்லையா?” என்று இயேசு கேட்டார். (மத்தேயு 12:1-5) 1 சாமுவேல் 21:1-6-ல் உள்ள அந்த ஏவப்பட்ட பதிவை சுயநீதிமான்களாகிய அவர்கள் நிச்சயமாகவே வாசித்திருக்கலாம். அப்படியென்றால் அதிலிருந்த முக்கியமான படிப்பினையை பகுத்துணர தவறிவிட்டனர். இயேசுவோ அந்தப் பதிவை வாசித்ததோடு நிறுத்திக்கொள்ளவில்லை. அதைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்து அது கற்றுத்தந்த பாடத்தை இருதயத்தில் பதித்துக்கொண்டார். அந்தப் பகுதி வாயிலாக யெகோவா கற்பித்த நியமங்களை நேசித்தார். ஆகவே, அந்தப் பதிவையும் மோசேயின் நியாயப்பிரமாணத்திலிருந்து ஓர் உதாரணத்தையும் பயன்படுத்தி நியாயப்பிரமாண சட்டம் எவ்வளவு நியாயமானது என்பதை காண்பித்தார். அதைப் போலவே, மதத் தலைவர்கள் கடவுளுடைய வார்த்தையை தங்கள் சுயநலத்திற்காக புரட்ட அல்லது மனித பாரம்பரியங்கள் என்ற சேற்றில் அதை மறைக்க முயன்றபோது அவர்களை எதிர்த்து கடவுளுடைய வார்த்தையை ஆதரிக்க பற்றுமாறா அன்பே இயேசுவை தூண்டியது.
10. தம்முடைய போதனையின் தரம் பற்றிய தீர்க்கதரிசனங்களை இயேசு எவ்வாறு நிறைவேற்றினார்?
10 இயேசு தாம் போதித்த சத்தியங்களை நேசித்ததால், ஒருபோதும் அவற்றை வெறுமனே ஒப்பிக்கவோ, சலிப்பூட்டும் வண்ணமாக அல்லது உணர்ச்சியற்ற விதமாக போதிக்கவோ இல்லை. மேசியா “இன்பமான வசனங்களை” உபயோகித்து தம் ‘உதடுகளில் அருள் பொழிய’ பேசுவார் என்று ஏவப்பட்ட தீர்க்கதரிசனங்கள் கூறியிருந்தன. (சங்கீதம் 45:2; ஆதியாகமம் 49:21) இயேசு மனதார நேசித்த சத்தியங்களை போதிக்கையில் “கிருபையுள்ள வார்த்தைகளை” உபயோகித்து தமது செய்தியை ஆர்வத்தோடும் விறுவிறுப்போடும் கூறுவதன் மூலம் அந்தத் தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றினார். (லூக்கா 4:22) உற்சாகத்தினால் அவருடைய முக பாவங்கள் பிரகாசமடைந்திருக்கும், தாம் போதிப்பவற்றில் ஆர்வமும் அக்கறையும் இருந்ததால் அவருடைய கண்கள் ஒளிவீசியிருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அவர் பேசுவதைக் கேட்பது எவ்வளவு சந்தோஷத்தை தந்திருக்கும்! நாம் கற்றவற்றை மற்றவர்களிடம் பேசுகையில் பின்பற்ற எப்பேர்ப்பட்ட அருமையான முன்மாதிரி இது!
11. போதகராக இயேசுவிற்கிருந்த திறமைகள் அவரை தற்பெருமை கொள்ளாதிருக்க செய்தது ஏன்?
11 இயேசு, தெய்வீக சத்தியங்களை நன்றாக அறிந்திருந்ததும், கவர்ந்திழுக்கும் வண்ணம் அவற்றை பேசியதும் அவரை தற்பெருமை கொள்ள செய்தனவா? மானிட ஆசிரியர்கள் மத்தியில் பெரும்பாலும் இதுவே நடக்கும். இயேசுவோ தெய்வீக பயத்தை வெளிப்படுத்தும் விதத்தில் ஞானமுள்ளவராக இருந்தார் என்பதை நினைவில் வையுங்கள். அப்படிப்பட்ட ஞானம் மேட்டிமைக்கு இடமளிக்காது, ஏனெனில், “தாழ்ந்த சிந்தையுள்ளவர்களிடத்தில் [“தன்னடக்கம் உள்ளவர்களிடத்தில்,” NW] ஞானம் உண்டு.” (நீதிமொழிகள் 11:2) தற்பெருமை அல்லது கர்வம் கொள்ளாதிருக்க மற்றொரு விஷயமும் இயேசுவுக்கு உதவியது.
இயேசு போதித்தவர்களிடம் அன்புகூர்ந்தார்
12. சீஷர்கள் தம்மைக் கண்டு பயப்பட வேண்டுமென இயேசு விரும்பாததை எவ்வாறு காண்பித்தார்?
12 இயேசுவுக்கு மக்கள் மீதிருந்த ஆழ்ந்த அன்பு அவருடைய போதனையில் எப்போதும் தெளிவாக தெரிந்தது. அவருடைய போதனை, தற்பெருமைமிக்க மனிதர்களின் போதனைகளைப் போல் மக்களை பயமுறுத்தவே இல்லை. (பிரசங்கி 8:9) இயேசு செய்த அற்புதங்களில் ஒன்றைப் பார்த்த பேதுரு பிரமித்துப் போய் அவருடைய பாதங்களில் விழுந்தார். ஆனால், சீஷர்கள் தம்மைக் கண்டு பயந்து நடுங்க வேண்டும் என இயேசு விரும்பவில்லை. “பயப்படாதே” என்று கருணையோடு கூறி, சீஷர்களை உண்டுபண்ணும் சிலிர்ப்பூட்டும் வேலையில் பேதுரு பங்குகொள்ளப் போவதைப் பற்றி அவரிடம் கூறினார். (லூக்கா 5:8-10) தங்கள் போதகரிடமுள்ள பயம் அல்ல, மாறாக கடவுளைப் பற்றிய அருமையான சத்தியங்களை நேசிப்பதே செயல்படும்படி தம் சீஷர்களைத் தூண்ட வேண்டும் என்று இயேசு விரும்பினார்.
13, 14. இயேசு என்ன வழிகளில் மக்களிடம் பரிவிரக்கம் காண்பித்தார்?
13 தாம் போதித்தவர்களிடம் இயேசுவிற்கு இருந்த அன்பு, அவர்களிடம் அவர் காண்பித்த ஒற்றுணர்விலும் தெளிவாக தெரிந்தது. “அவர் திரளான ஜனங்களைக் கண்ட பொழுது, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய் இருந்தபடியால், அவர்கள் மேல் மனதுருகி”னார். (மத்தேயு 9:36) அவர்களுடைய பரிதாபமான நிலையைக் கண்டு மனதுருகி அவர்களுக்கு உதவ முன்வந்தார்.
14 இயேசு ஒற்றுணர்வு காண்பித்த மற்றொரு சந்தர்ப்பத்தை கவனியுங்கள். இரத்தப்போக்குள்ள ஒரு ஸ்திரீ, கும்பலிலிருந்த இயேசுவை அணுகி அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தை தொட்டவுடன் அற்புதமாக குணமடைந்தாள். தம்மிடமிருந்து வல்லமை வெளியேறியதை இயேசு உணர்ந்தார், ஆனால் குணமடைந்தவர் யார் என தெரியவில்லை. அந்தப் பெண்ணைக் காண வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். ஏன்? நியாயப்பிரமாண சட்டத்தையோ பரிசேயர், வேதபாரகரின் சட்டங்களையோ மீறியதற்காக அவளை குற்றஞ்சாட்டுவதற்காக அல்ல; இப்படி நினைத்து அவளும் ஒருவேளை பயந்திருக்கலாம். ஆனால், “மகளே, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, நீ சமாதானத்தோடேபோய், உன் வேதனை நீங்கி, சுகமாயிரு” என்று அவளிடம் கூறினார். (மாற்கு 5:25-34) அந்த வார்த்தைகளில் வெளிப்படும் பரிவிரக்கத்தை கவனியுங்கள். “சுகம் பெறுவாயாக” என்று மாத்திரமே அவர் சொல்லவில்லை. அதற்கு பதிலாக, “உன் வேதனை நீங்கி, சுகமாயிரு” என்றார். இங்கு மாற்கு பயன்படுத்தியிருக்கும் வார்த்தை, “சவுக்கடி” என்ற சொல்லர்த்தமான அர்த்தத்தை தரலாம்; அது சித்திரவதை செய்வதற்காக அடிக்கடி உபயோகிக்கப்பட்ட ஒரு முறையாகும். இவ்வாறு, அந்த வியாதி அவளுக்கு துன்பத்தை—கடுமையான சரீர, மன வேதனையை—ஏற்படுத்தியிருந்ததை இயேசு ஒப்புக்கொண்டார். அவர் அவளிடம் பரிவிரக்கம் காண்பித்தார்.
15, 16. மக்களிடம் உள்ள நல்ல குணங்களைக் காண இயேசு முயன்றதை அவருடைய ஊழியத்தில் நிகழ்ந்த என்ன சம்பவங்கள் காட்டுகின்றன?
15 மக்களிடமிருந்த நல்ல குணங்களை காண்பதன் மூலமும் இயேசு அவர்களிடம் அன்பு காட்டினார். பின்னர் அப்போஸ்தலராக ஆன நாத்தான்வேலை அவர் சந்தித்தபோது நிகழ்ந்ததை கவனியுங்கள். “இயேசு நாத்தான்வேலைத் தம்மிடத்தில் வரக்கண்டு அவனைக் குறித்து: இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன் என்றார்.” இயேசு நாத்தான்வேலின் இருதயத்தை அற்புதகரமாக பார்த்து அவரைப் பற்றி அதிகத்தை அறிந்துகொண்டார். நிச்சயமாகவே, நாத்தான்வேல் பரிபூரணமானவர் அல்ல. நம் எல்லாரையும் போலவே அவருக்கும் குறைபாடுகள் இருந்தன. உண்மையில், இயேசுவைப் பற்றி கேள்விப்பட்டவுடன், “நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா” என்று நேரடியாக கேள்வி கேட்டவர் அல்லவா அவர்? (யோவான் 1:45-51) இருந்தும், நாத்தான்வேலைப் பற்றி பல விஷயங்கள் கூற முடிந்தாலும் அவருடைய போற்றத்தக்க குணமாகிய நேர்மையைத் தேர்ந்தெடுத்து அதனிடம் இயேசு கவனம் செலுத்தினார்.
16 அதைப் போலவே, புறமதத்தானாக இருந்திருக்கும் ரோம நூற்றுக்கு அதிபதி ஒருவன் வியாதியாயிருந்த தன் வேலைக்காரனை சுகப்படுத்தும்படி இயேசுவிடம் கேட்டபோது அவனிடம் குறைகள் இருந்ததை இயேசு அறிந்திருந்தார். அக்காலத்திய நூற்றுக்கு அதிபதியின் வாழ்க்கை வன்முறையும், இரத்தம் சிந்துதலும், பொய் வணக்கமும் நிறைந்ததாய் இருந்திருக்கும். எனினும் விசுவாசம் என்ற அந்த மனிதனின் தலைசிறந்த குணத்திற்கு இயேசு கவனம் செலுத்தினார். (மத்தேயு 8:5-13) பிறகு, கழுமரத்தில் தமக்கு அருகில் தொங்கிக்கொண்டிருந்த குற்றவாளியிடம் பேசுகையிலும் குற்றங்கள் நிறைந்த அவனுடைய கடந்த கால வாழ்க்கைக்காக அவனை கண்டிக்காமல் எதிர்கால நம்பிக்கை அளித்து அவனை உற்சாகப்படுத்தினார். (லூக்கா 23:43) மற்றவர்களைப் பற்றிய சாதகமற்ற, குறைகாண்கிற மனப்பான்மை அவர்களை மேலும் சோர்வுற செய்யும் என்பதை இயேசு நன்றாகவே அறிந்திருந்தார். மற்றவர்களிடம் உள்ள நல்லதை காண அவர் முயற்சி செய்தது முன்னேற்றம் செய்ய அநேகரை தூண்டியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
மக்களுக்கு சேவை செய்ய விரும்பினார்
17, 18. பூமிக்கு வரும் நியமிப்பை ஏற்கையில் மற்றவர்களுக்கு சேவை செய்ய விரும்பியதை இயேசு எவ்வாறு காண்பித்தார்?
17 தாம் போதித்தவர்களுக்கு சேவை செய்ய விரும்பியது இயேசு அவர்கள் மேல் வைத்த அன்பிற்கு மற்றொரு அசைக்க முடியாத அத்தாட்சியாகும். கடவுளுடைய குமாரன், மனிதனாக வருவதற்கு முன்பிருந்தே மனிதவர்க்கத்தை அதிகமாக நேசித்து வந்திருக்கிறார். (நீதிமொழிகள் 8:30, 31) யெகோவாவின் “வார்த்தை”யாக அல்லது பிரதிநிதி பேச்சாளராக இருந்ததால் அவர் மனிதர்களோடு தொடர்புகொண்ட அநேக சந்தர்ப்பங்களை அனுபவித்து மகிழ்ந்திருப்பார். (யோவான் 1:1) என்றாலும், பூமிக்கு வந்ததன் நோக்கத்தின் ஒரு பாகமாக, மனிதவர்க்கத்திற்கு நேரடியாய் போதிப்பதற்காக பரலோகத்திலுள்ள தமது மேலான ஸ்தானத்தைவிட்டு “தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்”தார். (பிலிப்பியர் 2:7; 2 கொரிந்தியர் 8:9) இயேசு பூமியில் இருக்கையில் மற்றவர்கள் தமக்கு சேவை செய்யும்படி எதிர்பார்க்கவில்லை. மாறாக, “மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ் செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார்” என்று கூறினார். (மத்தேயு 20:28) இயேசு அந்த வார்த்தைகளை முழுமையாக நிறைவேற்றினார்.
18 தாம் போதித்தவர்களுக்கு இருந்த தேவைகளை மனத்தாழ்மையோடு பூர்த்தி செய்து, அவர்களுக்காக தம்மையே அளிக்கவும் இயேசு தயாராயிருந்தார். வாக்குப்பண்ணப்பட்ட தேசம் முழுவதும் நடந்தே சென்று, முடிந்தவரை அநேகருக்குப் பிரசங்கிக்க பல நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரம் நடையாய் நடந்தார். பெருமை பிடித்த பரிசேயரையும் வேதபாரகரையும் போலில்லாமல் அவர் மனத்தாழ்மை உள்ளவராக, அணுக முடிந்தவராகவே இருந்தார். உயர் பதவியில் இருந்தோர், சேவகர்கள், நியாய சாஸ்திரிகள், பெண்கள், பிள்ளைகள், ஏழைகள், வியாதியஸ்தர்கள், சமுகத்தால் ஒதுக்கப்பட்டவர்கள் என சகலரும் எந்த பயமுமின்றி அவரை ஆவலோடு அணுகினார்கள். இயேசு பரிபூரணராக இருந்தாலும் மனிதராக இருந்ததால் சோர்வு, பசி போன்றவை அவரை வாட்டின. ஆனால், அவர் சோர்வாக இருந்தபோதிலும் அல்லது ஓய்வெடுக்கவோ ஜெபிக்கவோ தனிமை தேவைப்பட்டபோதிலும் தமது தேவைகளைவிட மற்றவர்களின் தேவைகளுக்கே கவனம் செலுத்தினார்.—மாற்கு 1:35-39.
19. சீஷர்களிடம் மனத்தாழ்மையாக, பொறுமையாக, தயவாக நடந்துகொண்டதில் இயேசு எவ்வாறு மாதிரியை வைத்தார்?
19 தமது சீஷர்களுக்கு சேவை செய்யவும் இயேசு அதேயளவு தயாராக இருந்தார். தயவாகவும் பொறுமையாகவும் அவர்களுக்கு போதிப்பதன் மூலம் அதைக் காட்டினார். சில முக்கிய படிப்பினைகளை அவர்கள் உடனடியாக புரிந்துகொள்ளாதபோது அவர் நம்பிக்கை இழக்கவோ, கோபப்படவோ, அவர்களை கண்டிக்கவோ இல்லை. அவர்கள் புரிந்துகொள்ள உதவியாக பல்வேறு புதிய வழிகளைக் கையாண்டார். உதாரணமாக, தங்களில் பெரியவன் யார் என சீஷர்கள் எத்தனை முறை சண்டைப் போட்டார்கள் என்பதை நினைத்துப் பாருங்கள். தாம் மரிக்கவிருந்த நாளின் முந்தின இரவு வரை, ஒருவரையொருவர் மனத்தாழ்மையுடன் நடத்த வேண்டும் என்பதை புரிய வைக்க இயேசு புது விதங்களில் திரும்பத் திரும்ப போதித்தார். மற்ற விஷயங்களைப் போலவே மனத்தாழ்மையைக் காட்டுவதிலும்கூட “நான் . . . உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்” என்று இயேசுவால் உண்மையிலேயே சொல்ல முடிந்தது.—யோவான் 13:5-15; மத்தேயு 20:25; மாற்கு 9:34-37.
20. இயேசுவின் போதிக்கும் முறை எப்படி பரிசேயரிடமிருந்து வேறுபட்டிருந்தது, அது ஏன் திறம்பட்டதாக இருந்தது?
20 அந்த மாதிரியைப் பற்றி இயேசு தம் சீஷர்களிடம் வெறுமனே சொல்லவில்லை என்பதை கவனியுங்கள்; அவர் ‘மாதிரியைக் காண்பித்தார்.’ உதாரணத்தின் மூலம் அவர்களுக்கு போதித்தார். அவர்கள் தாழ்ந்தவர்கள், தாமோ மிகவும் உயர்ந்தவர் என்பதால் செய்யும்படி அவர்களிடம் கூறியவற்றை தாம் செய்யவேண்டியதில்லை என்று நினைப்பதுபோல அவர்களிடம் பேசவில்லை. பரிசேயர்கள்தான் அவ்வாறு நடந்துகொண்டனர். “அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள்” என்று அவர்களைப் பற்றி இயேசு கூறினார். (மத்தேயு 23:3) இயேசு போதித்தவற்றிற்கு ஏற்ப வாழ்ந்து காட்டியதால் அவற்றின் அர்த்தத்தை தமது மாணவர்களுக்கு மனத்தாழ்மையோடு, தெளிவாக சுட்டிக்காண்பித்தார். ஆகவே, பொருளாசை இல்லாத, எளிமையான வாழ்க்கை வாழும்படி தம் சீஷர்களை தூண்டியபோது, அவர் சொன்னதன் அர்த்தத்தை அவர்கள் ஊகிக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. “நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு; மனுஷகுமாரனுக்கோ தலை சாய்க்க இடமில்லை” என அவர் கூறிய வார்த்தைகள் எவ்வளவு உண்மை என்பதை அவர்கள் கண்ணாரக் கண்டனர். (மத்தேயு 8:20) மனத்தாழ்மையோடு தம் சீஷர்களுக்கு மாதிரி வைப்பதன் மூலம் இயேசு அவர்களுக்கு சேவை செய்தார்.
21. அடுத்த கட்டுரையில் என்ன சிந்திக்கப்படும்?
21 பூமியில் எக்காலத்திலும் வாழ்ந்தவர்களுள் இயேசுவே மிகச் சிறந்த போதகர் என்பதில் சந்தேகமில்லை! தாம் போதித்தவற்றையும், போதித்தவர்களையும் அவர் நேசித்தது அவரைப் பார்த்த, அவர் பேசியதைக் கேட்ட நேர்மை மனமுள்ளவர்களுக்கு தெளிவாக தெரிந்தது. அவர் வைத்த மாதிரியை ஆராயும் நமக்கு இன்றும்கூட அது தெளிவாக தெரிகிறது. ஆனால், கிறிஸ்துவின் பரிபூரண முன்மாதிரியை நாம் எவ்வாறு பின்பற்றலாம்? இந்தக் கேள்விக்கான பதில் அடுத்த கட்டுரையில் சிந்திக்கப்படும்.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
• திறம்பட போதிப்பதற்கு அடிப்படை என்ன, இதற்கு முன்மாதிரியாக இருந்தவர் யார்?
• தாம் போதித்த சத்தியங்களை நேசித்ததை இயேசு எந்த வழிகளில் காண்பித்தார்?
• தாம் போதித்தவர்களிடம் இயேசு எவ்வாறு அன்பைக் காண்பித்தார்?
• தாம் போதித்தவர்களுக்கு சேவை செய்ய இயேசு மனத்தாழ்மையோடு விரும்பியதை என்ன உதாரணங்கள் காட்டுகின்றன?
[பக்கம் 12-ன் படம்]
கடவுளுடைய வார்த்தையிலுள்ள நியமங்களை நேசித்ததை இயேசு எவ்வாறு காண்பித்தார்?