உங்கள் சிறுநீரகங்கள்—உயிர்காக்கும் ஒரு வடிகட்டி
அயர்லாந்திலிருந்து விழித்தெழு! நிருபர்
இந்தப் பூமிக்கும் மனித உடலுக்கும் இடையே பொதுவான விஷயம் ஒன்று இருக்கிறது: உயிர்வாழ இரண்டுக்கும் ஒரு வடிகட்டி தேவை. சூரியனிலிருந்து தொடர்ந்து வந்து மோதும் தீங்கு விளைவிக்கும் கதிர்களிலிருந்து பூமிக்கு பாதுகாப்பு தேவை. நம் வளிமண்டலத்திலிருக்கும் ஓஸோன் அடுக்கு இவற்றை வடிகட்டிவிடுகிறது; இதன் மூலம் உயிர்காக்கும் ஒளியை பூமியினிடமாக கடந்துவரும்படி அனுமதிக்கிறது. உங்கள் உடலைப் பற்றியதென்ன? உங்கள் உடலில் ஏற்படும் பலவிதமான வேதியியல் மாற்றங்கள், நச்சுப் பொருட்களையும் கழிவுப் பொருட்களையும் உங்கள் இரத்த ஓட்டத்திற்குள் செலுத்துகின்றன. அப்படியே விட்டுவிட்டால், மரணம் உள்ளிட்ட தீவிர பிரச்சினைகளை இவை ஏற்படுத்தும். இவை தொடர்ந்து வடிகட்டப்பட்டு நீக்கப்பட வேண்டும்.
இவ்வாறு வடிகட்டுவது உங்கள் சிறுநீரகங்களுடைய முக்கிய வேலைகளுள் ஒன்று. ஆனால், இந்தச் சிறு உறுப்புகள் எவ்வாறு தீங்கு விளைவிக்கும் பொருட்களை அடையாளம் கண்டுகொண்டு, பிரித்தெடுத்து, நீக்கிவிட்டு, அதே சமயத்தில், உங்கள் உடலின் உணவுக்காகவும் வளர்ச்சிக்காகவும் உதவும் அத்தியாவசியமான பொருட்கள் நிலைத்திருக்கும்படி செய்ய முடியும்? மேலும், உங்களை ஆரோக்கியமாய் வைத்திருக்க உங்கள் சிறுநீரகங்களுக்கு நீங்கள் எப்படி உதவலாம்?
உங்கள் சிறுநீரகங்களுக்குள் இருப்பதென்ன?
மனிதர்களுக்கு சாதாரணமாக இரண்டு சிறுநீரகங்கள் இருக்கின்றன; அவை ஒவ்வொன்றும் உடலின் பின்புறமாக கீழ்ப்பகுதியில், முதுகெலும்பின் ஒவ்வொரு பக்கத்திலும் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொன்றின் நீளமும் சுமார் பத்து சென்டிமீட்டர்; அகலம் ஐந்து சென்டிமீட்டர்; பருமன் இரண்டரை சென்டிமீட்டர்; எடை 110 முதல் 170 கிராம். சிறுநீரகத்தை மேலிருந்து கீழாக இரண்டாகப் பிளந்து பார்த்தால், தெளிவாகத் தெரியும் பல அம்சங்களை நாம் காணலாம்; இவை இத்துடன் உள்ள படங்களில் காணப்படுகின்றன.
சிறுநீரகம் எவ்வாறு வேலை செய்கிறது என்பதை உங்கள் கண்முன்னால் கொண்டுவர, ஒரு நிகழ்ச்சியைக் காண ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் ஒரு ஸ்டேடியத்துக்கு வருவதாக கற்பனை செய்துகொள்ளுங்கள். முதலில், அந்தக் கூட்டம் பல சிறுசிறு வரிசைகளாக பிரிய வேண்டும். பிறகு, ஒவ்வொரு வரிசையிலுமுள்ள மக்கள் ஒவ்வொருவராய், பாதுகாப்பு போடப்பட்டுள்ள வாசல்களின் வழியாக செல்ல வேண்டும்; அங்கே, டிக்கெட்டுகள் இல்லாத நபர்கள் ஒதுக்கிவிடப்படுவர். டிக்கெட்டுகளை உடைய பார்வையாளர்கள் தங்களுக்கு நியமிக்கப்பட்ட இருக்கைகளுக்குப் போய்ச் சேருவர்.
அதைப் போலவே, உங்கள் இரத்தத்திலுள்ள பல பொருட்கள் அனைத்தும் உங்கள் உடல் முழுவதிலும் சுற்றிவர வேண்டும். என்றாலும், அவை அவ்வாறு செய்கையில், பெரிய இரத்தக்குழாய்களின் உதவியினால், உங்கள் சிறுநீரகங்களின் வழியாக திரும்பத் திரும்ப செல்ல வேண்டும்; இந்த இரத்தக்குழாய்களுக்கு சிறுநீரக தமனிகள் (renal arteries) என்று பெயர். இது, ஒவ்வொரு சிறுநீரகத்துக்கும் ஒவ்வொன்று இருக்கிறது. (பக்கம் 24-ல் உள்ள படத்தைக் காண்க.) சிறுநீரகத்திற்குள் நுழைந்ததும், சிறுநீரக தமனி சிறுநீரகத்தின் உள் மற்றும் வெளி அடுக்குகளுக்குள் சிறிய குழாய்களாகப் பிரிகிறது. இவ்வாறு, உங்கள் இரத்தத்திலுள்ள வெவ்வேறு பொருட்கள் சிறிதாகவுள்ள, சமாளிக்கவல்ல “வரிசைகளுக்குள்” செலுத்தப்படுகின்றன.
முடிவாக, அந்த இரத்தம் மிகச் சிறிய கொத்துக்களைச் சென்றடைகிறது; ஒவ்வொரு கொத்திலும், ஒன்றோடொன்று நெருக்கமாய்ப் பின்னியிருக்கும் சுமார் 40 நுண்ணிய இரத்தக்குழாய்கள் இருக்கின்றன. ஒவ்வொரு கொத்தும் குழலிமுடிச்சு (glomerulus) என்று அழைக்கப்படுகிறது; இது, போமேனின் உறை (Bowman’s capsule) எனப்படும் இரண்டு அடுக்குச் சவ்வால் சூழப்பட்டிருக்கிறது. a குழலிமுடிச்சு, போமேனின் உறை ஆகிய இவ்விரண்டும் சேர்ந்து உங்கள் சிறுநீரகத்தின் ‘பாதுகாப்பு வாசலின்’ முதல் பகுதியை உண்டாக்குகின்றன; இதுவே, சிறுநீர்ப் பிரித்தி (nephron) என்று அழைக்கப்படுகிறது; இது உங்கள் சிறுநீரகத்தின் அடிப்படையான வடிகட்டும் பிரிவாய் செயல்படுகிறது. ஒவ்வொரு சிறுநீரகத்திலும் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட சிறுநீர்ப் பிரித்திகள் உள்ளன. ஆனால் அவை அவ்வளவு சிறியவையாய் இருப்பதால், அவற்றுள் ஒன்றைப் பரிசோதிக்க உங்களுக்கு நுண்ணோக்கி தேவை!—பக்கம் 25-ல், பன்மடங்கு பெரிதாக்கப்பட்ட ஒரு சிறுநீர்ப் பிரித்தியின் படத்தைக் காண்க.
உங்கள் இரத்தத்தின் இருநிலை வடிப்பு
உங்கள் இரத்த ஓட்டத்திலுள்ள இரத்த அணுக்களும் புரோட்டீன்களும் மிகவும் அத்தியாவசியமானவை. அவை, ஆக்ஸிஜனை எடுத்துச்செல்லுதல், நோய்க்கு எதிராக போராடுதல், சேதத்தைப் பழுது பார்த்தல் போன்ற உங்கள் உடலுக்குத் தேவையான சேவைகளைச் செய்கின்றன. இரத்த அணுக்களையும் புரோட்டீன்களையும் இழப்பதைத் தடுப்பதற்காக முதல் கட்ட வடிப்பு, அவற்றை மற்ற எல்லா பொருட்களிலிருந்தும் பிரிக்கிறது. இந்த முக்கியமான வேலை, போமேனின் உறையால் நிறைவேற்றப்படுகிறது. ஆனால் எப்படி?
குழலிமுடிச்சில் நுழையும் இரத்தக்குழாய்கள், மிக இலேசான சுவர்களையுடைய மிகச் சிறிய தந்துகிக்குழாய்களாக பிரிகின்றன; இதனால் இரத்த அழுத்தமானது, கொஞ்சம் நீரையும் மற்ற சிறிய மூலக்கூறுகளையும் இத் தந்துகிக்குழாய்களின் மெல்லிய சவ்வுகளின் வழியாக, உங்கள் இரத்த ஓட்டத்திற்கு வெளியேயும் போமேனின் உறைக்குள்ளும் அத்துடன் இணைக்கப்பட்டுள்ள சுருண்ட குழாய்க்குள்ளும் செல்லும்படி அழுத்துகிறது. இந்தக் குழாய்க்கு நெளிகுழாய் (convoluted tubule) என்று பெயர். பெரிய புரோட்டீன் மூலக்கூறுகளும் மற்றெல்லா இரத்த அணுக்களும் இரத்த ஓட்டத்திலேயே இருந்து, தந்துகிக்குழாய்களின் வழியாக தொடர்ந்து பாய்கின்றன.
இப்போது வடிகட்டும் வேலை மிகவும் கவனமாக தெரிவு செய்யப்படுகிறது. உங்கள் உடலுக்குத் தேவையான எந்தப் பொருளும் தப்பிச்சென்றுவிடாதபடி உங்கள் சிறுநீரகங்கள் நிச்சயமாய் பார்த்துக்கொள்ள வேண்டும்! இந்தக் கட்டத்தில் நெளிகுழாயின் வழியாக பாயும் திரவம், நீர்ப்பாங்கான ஒரு கலவையாய் இருக்கிறது; இதில் பயனுள்ள மூலக்கூறுகள் கரைந்திருப்பதோடு, கழிவுகளும் தேவையற்ற பொருட்களும் சேர்ந்திருக்கின்றன. இவற்றிலுள்ள நீர், உப்புக்கள், சர்க்கரைகள், தாதுப்பொருட்கள், விட்டமின்கள், ஹார்மோன்கள், அமினோ அமிலங்கள் ஆகிய பயனுள்ள மூலக்கூறுகளை, நெளிகுழாயின் உட்சுவர் நெடுக இருக்கும் விசேஷமான அணுக்கள் அடையாளம் கண்டுகொள்கின்றன. இவை, நெளிகுழாயின் சுவருக்குள் மறுபடியும் உறிஞ்சப்படுவதன் மூலம் திறமையுடன் நீக்கப்படுகின்றன; பிறகு அதைச் சூழ்ந்து பின்னியுள்ள தந்துகிக்குழாய்களுக்குள் திரும்பவும் செலுத்தப்படுகின்றன. இங்கிருந்து இவை இரத்த ஓட்டத்திற்குள் மறுபடியும் சேர்ந்துகொள்கின்றன. தந்துகிக்குழாய்கள் சிறுசிறு சிரைகளாக மறுபடியும் ஒன்றுசேருகின்றன; இச் சிரைகள் அனைத்தும் சேர்ந்து சிறுநீரக சிரை (renal vein) என்று அழைக்கப்படும் இரத்தக் குழாய் ஆகிறது. இதன் மூலம் இப்போது வடிகட்டப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட உங்கள் இரத்தம், சிறுநீரகத்தை விட்டுச் சென்று, உங்கள் உடல் உயிருடன் இருக்க தொடர்ந்து உதவுகிறது.
கழிவுகளை அகற்றுதல்
ஆனால், நெளிகுழாயில் தங்கியிருக்கும் திரவத்தைப் பற்றியென்ன? இதில் உங்கள் உடலுக்குத் தேவையற்ற பொருட்கள் அடங்கியுள்ளன. இத் திரவம், பெரிதாயுள்ள சேகரக்குழாய், அல்லது சேகர நாளத்தை நோக்கி நெளிகுழாயின் வழியாக தொடர்ந்து பாயும்போது, நெளிகுழாயின் சுவரிலுள்ள மற்ற அணுக்கள், அம்மோனியா, பொட்டாசியம், யூரியா, யூரிக் அமிலம், அதிகப்படியான நீர் ஆகியவை உள்ளிட்ட திரவங்களை சுரந்து அத்துடன் வெளிவிடுகிறது. முடிவான உற்பத்திப்பொருளே சிறுநீர்.
வெவ்வேறு சிறுநீர்ப் பிரித்திகளிலுள்ள சேகர நாளங்கள் அனைத்தும் ஒன்றுசேர்ந்து, கூம்புகள் (pyramids) எனப்படுபவற்றின் நுனிகளிலுள்ள திறப்புகளின் வழியே சிறுநீரை வெளியேற்றுகின்றன. இந்தச் சிறுநீர், சிறுநீரக உட்பகுதிக்குள் செல்கிறது; பிறகு சிறுநீரகத்தையும் சிறுநீர்ப்பையையும் இணைக்கும் குழாயான சிறுநீர்க்குழாய் (ureter) வழியாக வெளியேறுகிறது. சிறுநீர் உங்கள் உடலைவிட்டு வெளியேற்றப்படுவதற்கு முன்பு உங்கள் சிறுநீர்ப்பையில் சேகரமாகிறது.
உருவில் மிகச் சிறியவையாய் இருந்தபோதிலும், உங்கள் சிறுநீரகங்களிலுள்ள 20 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறுநீர்ப் பிரித்திகள் மனங்கவரும் ஒரு வேலையைச் செய்கின்றன. த நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா குறிப்பிடுவதாவது: “சிறுநீர்ப் பிரித்திகள் . . . ஒவ்வொரு 45 நிமிடத்திலும் இரத்தத்திலுள்ள ஐந்து லிட்டர் நீரை முழுமையாய் வடிகட்டுகின்றன.” வெவ்வேறு பொருட்களை மறுபடியும் உறிஞ்சி, பல்வேறு வேலைகளைச் செய்து முடித்திருக்கும் நேரத்திற்குள், ஒரு சாதாரண, ஆரோக்கியமான உடல் ஒவ்வொரு 24 மணிநேரத்திலும் சுமார் இரண்டு லிட்டர் கழிவுப் பொருளை சிறுநீரின் வடிவத்தில் வெளியேற்றலாம். கடினமாய் உழைக்கும், செம்மையாய் வடிகட்டும் என்னே ஓர் அமைப்பு!
உங்கள் சிறுநீரகங்களைப் பராமரியுங்கள்!
உங்கள் சிறுநீரகங்கள் சுயமாய் சுத்திகரித்துக்கொள்ளும், சுயமாய் பராமரித்துக்கொள்ளும் தன்மையுடையவை; நீண்ட காலம் வேலை செய்யும் திறனுள்ளவை. என்றபோதிலும், அவை தம் வேலையைச் செய்ய அவற்றுக்கு உதவ நீங்களும் உங்கள் பங்கில் சிலவற்றைச் செய்ய வேண்டும். உங்கள் உடல் ஆரோக்கியமாய் நிலைத்திருக்க, உங்கள் சிறுநீரகங்களின் வழியாக நிறைய தண்ணீர் கடந்து செல்ல வேண்டும். உண்மையில், சிறுநீரகம் சம்பந்தமான தொற்றுக்கள் வராமலும் சிறுநீரக கற்கள் உருவாகாமலும் தடுப்பதற்கு, நீரைப் போதியளவில் பருகுவதே போதுமானது என்று கருதப்படுகிறது. b நீர் பருகுவது, உங்களுடைய செரிமான, இதயக்குழாய்த்திசு தொகுதிகளுக்கும் உதவுகின்றன என்பதாக நியூ யார்க்கின் லாங் ஐலண்ட் காலேஜ் ஆஸ்பத்திரியில் சிறுநீரியல் துறை தலைவரான டாக்டர் சி. கோடெக் குறிப்பிட்டுக் காட்டுகிறார்.
எவ்வளவு நீர்? ஒரு நபர் மற்ற உணவுப்பொருட்களையும் பானங்களையும் உட்கொள்ளுவதோடு, தினந்தோறும் இரண்டு லிட்டர் நீராவது பருக வேண்டும் என்று டாக்டர் கோடக்கும் இன்னும் பல டாக்டர்களும் சிபாரிசு செய்கின்றனர். “பலருக்கு நீரிழப்பு ஏற்படுகிறது” என்று டாக்டர் கோடெக் விழித்தெழு!-விடம் கூறினார். உங்கள் சிறுநீரகங்களிலோ, உங்கள் இதயத்திலோ நோய் ஏதும் இல்லாத வரையில், அவற்றுக்கு நீர் நல்லதே என்று அவர் குறிப்பிட்டார். “ஆனால் போதியளவு நீங்கள் பருக வேண்டும்” என்று டாக்டர் கோடெக் சொன்னார். “பலர் பருகுவதில்லை.”
நீருடன் எலுமிச்சை போன்ற நறுமணத்தைச் சேர்த்துக்கொள்வது ருசியைக் கூட்டுவதாக சிலர் காண்கின்றனர். மற்றவர்கள் ஊற்றுநீரையோ, அல்லது கிளர்வூட்டிய கரி (activated charcoal) மூலம் வடிகட்டப்பட்டிருக்கும் நீரையோ பருகுவதை ருசிமிக்கதாய்க் கண்டிருக்கின்றனர். எதுவானாலும் சரி, உங்கள் சிறுநீரகங்களுக்கு மற்ற பானங்களைக் காட்டிலும் வெறும் நீர், அல்லது இலேசாக நறுமணமூட்டப்பட்ட நீர் சிறந்தது. உண்மையில், பழரசங்களிலும் இனிப்பூட்டப்பட்ட பானங்களிலும் உள்ள சர்க்கரை, நீருக்கான உடலின் தேவையை அதிகரிக்கிறது. மதுபானம் அல்லது கேஃபின் கலந்த பானங்கள், உடலில் உள்ள நீரை இழக்கச் செய்யும்.
ஒரு நாளுக்கு இரண்டு லிட்டர் நீர் பருகும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வது, நிச்சயமாகவே ஒரு சவாலாய் இருக்கலாம். ஏனெனில், ஒரு விஷயமானது, பலருக்கு வழக்கத்துக்கு மாறாக அடிக்கடி சிறுநீர் கழிப்பது வசதிக்குறைவாகவும், தர்மசங்கடமாகவும் உள்ளது. ஆனால், இந்தக் கூடுதலான முயற்சியைச் செய்வதற்காக உங்கள் உடல் உங்களுக்கு நன்றி சொல்லும். உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவுவதோடு, போதியளவு நீர் பருகுவது உங்கள் தோற்றத்தையும்கூட முன்னேற்றுவிக்கும். ஊட்டச்சத்துள்ள சிறந்த உணவையும், அதிகப்படியான திரவ ஆகாரத்தையும் உட்கொள்வது, உங்கள் சருமம் பளபளப்பதற்காக பயன்படுத்தும் எந்தவிதமான முகப்பூச்சுக்களைக் காட்டிலும் அதிக பலனுள்ளது என்பதாக டாக்டர்கள் குறிப்பிட்டுக் காட்டுகின்றனர்.
எதிர்பாராவிதமாக, நம் உடலிலுள்ள தாக அமைப்பு குறைபாடுள்ளது; நம் வயது அதிகரிக்க அதிகரிக்க, இன்னும் இந்த உணர்வு குறைகிறது. எனவே, நமக்குத் தேவைப்படும் நீரின் அளவை தீர்மானிக்க நாம் தாகத்தை மட்டுமே சார்ந்திருக்க முடியாது. போதியளவான நீர் பருகுவதைக் குறித்து நீங்கள் எப்படி நிச்சயமாய் இருக்கலாம்? சிலர் காலையில் எழுந்ததும் இரண்டு கிளாஸ் நீரைப் பருகின பின்பே வேறு வேலை பார்க்கின்றனர்; பிறகு ஒழுங்கான இடைவெளியில் ஒவ்வொரு கிளாஸ் நீரைப் பருகுகின்றனர். மற்றவர்கள், கண்ணாடி போன்ற தெளிவான பாத்திரத்தில் நீரை ஊற்றி கண்ணில் படும்படி தங்களுக்கு அருகில் வைத்துக்கொள்கின்றனர்; இது, அந்த நாள் முழுவதும் அவ்வப்பொழுது ஒரு மடக்கு நீர் பருகிக்கொள்வதை அவர்களுக்கு நினைப்பூட்டுகிறது. நீங்கள் எந்த முறைப்படி பருகினாலும், மாசற்ற சுத்தமான நீரை நிறைய பருகுவது, உங்கள் சிறுநீரகங்களுக்கான—உங்களை உயிருடன் வாழவைக்கும் ஆச்சரியமான வடிகட்டிகளுக்கான—உங்களுடைய போற்றுதலைக் காட்டும் ஒரு நல்ல வழியாய் இருக்கிறது.
[அடிக்குறிப்பு]
a 1840-களின் ஆரம்பத்தில், ஆங்கிலேய அறுவை மருத்துவ நிபுணரும் திசுவியல் நிபுணருமான உவில்லியம் போமேன் இந்த மிகச் சிறிய உறையையும் அதன் வேலையையும் பற்றி விவரித்தார். அவருடைய பெயராலேயே அது அவ்வாறு அழைக்கப்பட்டது.
b விழித்தெழு! டிசம்பர் 8, 1993, பக்கங்கள் 15-17 மற்றும் ஜனவரி 8, 1987, பக்கம் 24 ஆகியவற்றைக் காண்க.
[பக்கம் 25-ன் பெட்டி]
சிறுநீர்ப் பிரித்தி அடிப்படையான வடிகட்டும் பிரிவு
ஒவ்வொரு சிறுநீரகத்திலும் ஒரு கோடிக்கு மேற்பட்ட சிறுநீர்ப் பிரித்திகள் இருக்கின்றன. ஒவ்வொரு தனி சிறுநீர்ப் பிரித்திக்குள்ளும் காணப்படும் குழாய் போன்ற அமைப்பின் நீளம் சராசரியாக சுமார் மூன்று சென்டிமீட்டர்; அதன் அகலமோ வெறும் 0.05 மில்லிமீட்டர். ஆனாலும், ஒரேவொரு சிறுநீரகத்தின் நெளிகுழாய்கள் அனைத்தையும் பிரித்து நீட்டி வைக்க நேரிட்டால், அவை சுமார் 30 கிலோமீட்டர் தூரம் வரை நீளும்!
போமேனின் உறை என்பது உண்மையில், சிறுநீர்ப் பிரித்தியிலுள்ள நெளிகுழாயின் பள்ளமான முனையே. இந்த நெளிகுழாயைச் சுற்றிலும் தந்துகிக் குழாய்கள் என்று அழைக்கப்படும் மிகச் சிறிய இரத்தக் குழாய்கள் பின்னியிருக்கின்றன. இந்த நெளிகுழாய், பெரியதாய் இருக்கும் சேகர நாளத்திற்குள் செல்லுகிறது; அது சிறுநீர்ப் பிரித்தியால் வடிகட்டப்பட்ட கழிவுப் பொருட்களையும் நச்சுப் பொருட்களையும் எடுத்துச் செல்லுகிறது.
[பக்கம் 24, 25-ன் படம்]
சிறுநீரக சிரை புதிதாக வடிகட்டப்பட்ட இரத்தத்தை உங்கள் உடலுக்குள் எடுத்துச் செல்லுகிறது
சிறுநீரக தமனி வடிகட்டப்படாத இரத்தத்தை சிறுநீரகத்திற்கு எடுத்துச்செல்லுகிறது
சிறுநீரக கூம்புகள் என்பவை சிறுநீரை சிறுநீரக உட்பகுதிக்கு எடுத்துச்செல்லும் கூம்பு வடிவ அமைப்புகள்
சிறுநீரக புறப்பகுதியில் ஒவ்வொரு சிறுநீர்ப் பிரித்தியின் குழலிமுடிச்சும் இருக்கிறது
சிறுநீரக உட்பகுதி என்பது சிறுநீரைச் சேகரித்து சிறுநீர்க் குழாய் வழியாக அனுப்பும் ஒரு புனல்
சிறுநீர்க் குழாய் சிறுநீரகத்திலிருந்து சிறுநீர்ப்பையில் சிறுநீரை சேர்க்கிறது
[பக்கம் 25-ன் வரைப்படம்]
சிறுநீர்ப் பிரித்திகள் சுமார் 20 லட்சம் நுண்ணிய குழாய் வடிவ வடிகட்டிகளான இரத்தத்தைச் சுத்திகரிக்கின்றன
போமேனின் உறை
குழலிமுடிச்சு
சிறுநீர் நெளி குழாயால் சேகரிக்கப்படுகிறது; பிறகு சிறுநீர்ப்பைக்குச் செல்லுகிறது
தந்துகிக் குழாய்கள்