ஆட்டுக்குட்டியானவரின் திருமணம்—மனமகிழுங்கள்!
“நாம் மனமகிழ்ந்து, சந்தோஷத்தில் துள்ளிக் குதிப்போமாக . . . ஏனென்றால், ஆட்டுக்குட்டியானவரின் திருமணம் வந்துவிட்டது.”—வெளி. 19:7.
1, 2. (அ) யாருடைய திருமணம் பரலோகத்தில் பெருமகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது? (ஆ) என்ன கேள்விகள் எழும்புகின்றன?
திருமணம் என்றாலே சில காலத்திற்கு அதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடக்கும். ஆனால், சுமார் 2,000 வருடங்களாக முன்னேற்பாடுகள் நடந்துகொண்டிருக்கும் ஒரு திருமணத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இதைப் பற்றியே நாம் இப்போது பார்க்கப்போகிறோம்; இது ஒரு ராஜாவின் திருமணம்! இந்த ராஜா தன் மணமகளைக் கரம் பிடிப்பதற்கான நேரம் மிகவும் நெருங்கிக்கொண்டிருக்கிறது. சீக்கிரத்தில், அரச மாளிகையெங்கும் இன்னிசை ஒலிக்கும். பரலோகத் தூதர்கள் இவ்வாறு பாடுவார்கள்: “மக்களே, யா என்பவரைப் புகழுங்கள்! ஏனென்றால், சர்வ வல்லமையுள்ள நம் கடவுளாகிய யெகோவா ராஜாவாக ஆட்சி செய்ய ஆரம்பித்துவிட்டார். நாம் மனமகிழ்ந்து, சந்தோஷத்தில் துள்ளிக் குதிப்போமாக, அவருக்கு மகிமை சேர்ப்போமாக; ஏனென்றால், ஆட்டுக்குட்டியானவரின் திருமணம் வந்துவிட்டது, மணமகளும் மணக்கோலத்தில் தயாராக இருக்கிறாள்.”—வெளி. 19:6, 7.
2 பரலோகத்தில் பெருமகிழ்ச்சியை ஏற்படுத்துகிற அந்தத் திருமணம் ‘ஆட்டுக்குட்டியானவரின்’ திருமணமே. இயேசு கிறிஸ்துவே அந்த ஆட்டுக்குட்டியானவர். (யோவா. 1:29) அவர் எப்படிப்பட்ட உடை அணிந்திருக்கிறார்? யார் அந்த மணமகள்? திருமணத்திற்கு அவள் எப்படித் தயாரானாள்? திருமண விழா எப்போது நடக்கும்? பூமியில் என்றென்றும் வாழும் நம்பிக்கையுள்ளவர்கள் இந்தச் சந்தோஷத்தில் பங்குகொள்வார்களா? இவற்றிற்கான பதில்களைக் காண நீங்கள் ஆவலாய் இருப்பீர்கள். 45-ஆம் சங்கீதத்தைத் தொடர்ந்து ஆராயும்போது இவற்றிற்கான பதில்களைக் கண்டுபிடிக்கலாம்.
‘அவருடைய வஸ்திரங்கள் வாசனை பொருந்தியதாயிருக்கிறது’
3, 4. (அ) மணமகனின் திருமண உடையைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது, எது அவருடைய சந்தோஷத்தைக் கூட்டுகிறது? (ஆ) ‘அரசரின் குமாரத்திகள்’ யார், மணமகனின் சந்தோஷத்தில் பங்குகொள்கிற “ராஜஸ்திரீ” யார்?
3 சங்கீதம் 45:8, 9-ஐ வாசியுங்கள். மணமகன் இயேசு கிறிஸ்து, ராஜ மகிமையில் ஜொலிக்கும் திருமண உடையை அணிந்துகொள்கிறார். அவருடைய உடையிலிருந்து ‘மேன்மையான சுகந்தவர்க்கங்களின் நறுமணம், அதாவது வெள்ளைப்போளம், லவங்கம் ஆகியவற்றின் நறுமணம் கமழ்கிறது. பூர்வ இஸ்ரவேலில், பரிசுத்த அபிஷேக தைலத்தில் இந்த நறுமணப் பொருள்கள் சேர்க்கப்பட்டன.—யாத். 30:23-25.
4 சீக்கிரத்தில் நடக்கப்போகும் திருமணத்திற்காக மணமகன் ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் வேளையில், அரச மாளிகை எங்கும் இனிய கீதம் முழங்குகிறது. இதனால் அவருடைய சந்தோஷம் இன்னும் பெருக்கெடுக்கிறது. கடவுளுடைய அமைப்பின் பரலோக பாகமான ‘ராஜஸ்திரீயும்’ அவருடைய சந்தோஷத்தில் பங்குகொள்கிறாள். இந்தப் பரலோக பாகத்தில் ‘அரசரின் குமாரத்திகளும்,’ அதாவது பரிசுத்த தூதர்களும் அடங்குவர். “நாம் மனமகிழ்ந்து, சந்தோஷத்தில் துள்ளிக் குதிப்போமாக . . . ஏனென்றால், ஆட்டுக்குட்டியானவரின் திருமணம் வந்துவிட்டது” என பரலோகத் தூதர்கள் குரலெழுப்புவதைக் கேட்பது மெய்சிலிர்க்க வைக்கிறது.
மணமகள் தயாராகிறாள்
5. “ஆட்டுக்குட்டியானவரின் மனைவி” யார்?
5 சங்கீதம் 45:10, 11-ஐ வாசியுங்கள். மணமகன் யார் என்பதைத் தெரிந்துகொண்டோம். இப்போது மணமகள் யார் என்பதைப் பார்க்கலாம். பரலோக நம்பிக்கையுள்ள 1,44,000 பேர் அடங்கிய தொகுதியே இந்த மணமகள். இவர்களின் சபைக்கு இயேசுவே தலைவர். (எபேசியர் 5:23, 24-ஐ வாசியுங்கள்.) இவர்கள் கிறிஸ்துவின் மேசியானிய அரசாங்கத்தின் பாகமாக ஆவார்கள். (லூக். 12:32) இந்த 1,44,000 பேர், ‘ஆட்டுக்குட்டியானவர் போகிற இடங்களுக்கெல்லாம் அவர் பின்னாலேயே போகிறார்கள்.’ (வெளி. 14:1-4) இவர்கள் ‘ஆட்டுக்குட்டியானவரின் மனைவியான’ பின்பு, பரலோகத்தில் அவருடனேயே தங்கியிருப்பார்கள்.—வெளி. 21:9; யோவா. 14:2, 3.
6. பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் “ராஜகுமாரத்தி” என ஏன் அழைக்கப்படுகிறார்கள், ‘உன் ஜனத்தை மறந்துவிடு’ என அவர்களிடம் ஏன் சொல்லப்படுகிறது?
6 இந்த மணமகள், “குமாரத்தி” எனவும் “ராஜகுமாரத்தி” எனவும் அழைக்கப்படுகிறாள். (சங். 45:13) அப்படியென்றால் அந்த ‘ராஜா’ யார்? யெகோவாவே அந்த ராஜா; அவர், பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களை தத்தெடுத்திருப்பதால், அவர்கள் ராஜாவுடைய ‘பிள்ளைகளாக,’ அதாவது ‘ராஜகுமாரத்தியாக’ ஆகிறார்கள். (ரோ. 8:15-17) அவர்கள், பரலோகத்தில் மணமகனைக் கரம்பிடிக்கப்போவதால், “உன் ஜனத்தையும் உன் [பூமிக்குரிய] தகப்பன் வீட்டையும் மறந்துவிடு” என சொல்லப்படுகிறது. ஆம், அவர்கள் ‘பூமிக்குரிய காரியங்கள் மீதல்ல, பரலோகத்திற்குரிய காரியங்கள் மீதே தங்கள் மனதை ஊன்ற வைக்க’ வேண்டும்.—கொலோ. 3:1-4.
7. (அ) கிறிஸ்து தம்முடைய வருங்கால மனைவியை எப்படித் தயார்படுத்தியிருக்கிறார்? (ஆ) மணமகள் தன்னுடைய வருங்கால கணவரை எப்படிக் கருதுகிறாள்?
7 பரலோகத்தில் நடக்கப்போகும் திருமணத்திற்காக, கிறிஸ்து தம் வருங்கால மனைவியை பல நூற்றாண்டுகளாக தயார்படுத்தி வந்திருக்கிறார். அதைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு விளக்கினார்: “சபைக்காகக் கிறிஸ்து தம்மையே அர்ப்பணிக்கும் அளவுக்கு அதன்மீது அன்பு காட்டி. . . கடவுளுடைய வார்த்தையாகிய தண்ணீரினால் சபையை அவர் சுத்தப்படுத்திப் புனிதமாக்கினார்; எந்தவொரு கறையோ எந்தவொரு குறையோ இல்லாமல் பரிசுத்தமான, களங்கமில்லாத சபையாக அது தமக்குமுன் பிரகாசிக்க வேண்டும் என்பதற்காக அப்படிச் செய்தார்.” (எபே. 5:25-27) கொரிந்துவிலிருந்த பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களிடம் பவுல் இப்படிச் சொன்னார்: “கடவுளைப் போலவே எனக்கும் உங்கள்மீது உள்ளப்பூர்வமான அக்கறை இருக்கிறது. ஏனென்றால், கிறிஸ்து என்ற ஒரே மணமகனுக்கு நான் உங்களை நிச்சயம் செய்துகொடுத்தேன்; அதனால் உங்களைக் கற்புள்ள கன்னிகையாக அவர்முன் நிறுத்த விரும்புகிறேன்.” (2 கொ. 11:2) மணமகனும் ராஜாவுமான இயேசு கிறிஸ்து, தம்முடைய வருங்கால மனைவியின் ஆன்மீக “அழகில்” பிரியப்படுகிறார். மணமகளும் தன்னுடைய வருங்கால கணவரை தன் ‘ஆண்டவராக,’ அதாவது எஜமானராக ஏற்றுக்கொண்டு, அவர்முன் ‘பணிந்துகொள்கிறாள்.’
மணமகள் ‘ராஜாவினிடத்தில் அழைத்துவரப்படுகிறாள்’
8. மணமகளை “பூரண மகிமையுள்ளவள்” என சித்தரிப்பது ஏன் பொருத்தமானது?
8 சங்கீதம் 45:13, 14அ-ஐ வாசியுங்கள். மணமகள், அரச மாளிகையில் நடக்கும் திருமணத்திற்கு ‘பூரண மகிமையுள்ளவளாக’ கொண்டுவரப்படுகிறாள். வெளிப்படுத்துதல் 21:2-ல் இந்த மணமகள் புதிய எருசலேமாகிய ஒரு நகரத்திற்கு ஒப்பிடப்படுகிறாள்; அவள் ‘மணமகனுக்காக அலங்கரிக்கப்பட்டிருக்கிறாள்.’ இந்தப் பரலோக நகரம் ‘கடவுளுடைய மகிமையைப் பெற்றிருக்கிறது’; ‘மிகவும் விலை உயர்ந்த மணிக்கல்லாகிய சூரியகாந்தக்கல்லைப் போல் பளபளவென ஒளிவீசுகிறது.’ (வெளி. 21:10, 11) இந்தப் புதிய எருசலேமின் மகிமையை வெளிப்படுத்துதல் புத்தகம் மிக அழகாக வர்ணிக்கிறது. (வெளி. 21:18-21) ஆகவே, இந்த மணமகளை, “பூரண மகிமையுள்ளவள்” என சங்கீதக்காரன் சித்தரிப்பதில் வியப்பேதும் இல்லை. அதுமட்டுமா, இந்த ராஜகுலத் திருமணம் பரலோகத்தில் நடைபெறுகிறதே!
9. மணமகள் எந்த ‘ராஜாவிடம்’ அழைத்துவரப்படுகிறாள், அவள் எப்படிப்பட்ட உடை அணிந்திருக்கிறாள்?
9 அந்த மணமகள், மேசியானிய ராஜாவான மணமகனிடத்திற்கு அழைத்துவரப்படுகிறாள். அவர் அவளை, ‘கடவுளுடைய வார்த்தையாகிய தண்ணீரினால் சுத்தப்படுத்தி’ தயார்படுத்தியிருப்பதால், அவள் ‘பரிசுத்தமானவளாக, களங்கமில்லாதவளாக’ இருக்கிறாள். (எபே. 5:26, 27) மணமகனைப் போலவே, அவளும் திருமணத்திற்கு ஏற்ற உடையை அணிந்திருக்கிறாள். ஆம், அவளுடைய “உடை பொற்சரிகையாயிருக்கிறது. சித்திரத்தையலாடை தரித்தவளாய், ராஜாவினிடத்தில் அழைத்துக் கொண்டுவரப்படுகிறாள்.” ஆட்டுக்குட்டியானவரின் திருமணத்திற்காக, “பளபளப்பான, சுத்தமான நார்ப்பட்டு ஆடையை அணிந்துகொள்ளும் பாக்கியம் அவளுக்கு அருளப்பட்டது; அந்த நார்ப்பட்டு ஆடை பரிசுத்தவான்களுடைய நீதியான செயல்களைக் குறிக்கிறது.”—வெளி. 19:8.
“திருமணம் வந்துவிட்டது”
10. ஆட்டுக்குட்டியானவரின் திருமணம் எப்போது நடக்கும்?
10 வெளிப்படுத்துதல் 19:7-ஐ வாசியுங்கள். ஆட்டுக்குட்டியானவரின் திருமணம் எப்போது நடக்கும்? அவருடைய ‘மணமகள் மணக்கோலத்தில் தயாராய்’ இருப்பதாக ஏழாம் வசனம் சொல்கிறது. அடுத்து வரும் வசனங்களோ, மிகுந்த உபத்திரவத்தின் கடைசி கட்டத்தைப் பற்றி விவரிக்கின்றன. (வெளி. 19:11-21) அப்படியானால், மணமகனும் ராஜாவுமான கிறிஸ்து ஜெயித்து முடிப்பதற்கு முன்பே திருமணம் நடந்துவிடும் என்று அர்த்தமா? இல்லை. ஏனென்றால், வெளிப்படுத்துதல் புத்தகத்திலுள்ள தரிசனங்கள் காலவரிசைப்படி கொடுக்கப்படவில்லை. ராஜாவான இயேசு கிறிஸ்து, பட்டயத்தை அரையில் கட்டிக்கொண்டு விரோதிகளுக்கு எதிராக ‘வெற்றிவாகை சூடுவதற்கு சென்ற’ பிறகே அவருடைய திருமணம் நடப்பதாக 45-ஆம் சங்கீதம் விவரிக்கிறது.—சங். 45:3, 4.
11. கிறிஸ்து எவ்வாறு படிப்படியாக ஜெயித்து முடிப்பார்?
11 அடுத்தடுத்து நடக்கவிருக்கும் சம்பவங்களை வெளிப்படுத்துதல் புத்தகம் சொல்கிறது. முதலில், ‘பேர்போன விலைமகளான’ மகா பாபிலோன், அதாவது பொய்மத உலகப் பேரரசு, அழிக்கப்படும். (வெளி. 17:1, 5, 16, 17; 19:1, 2) பிறகு, சாத்தானுடைய உலகில் எஞ்சியிருக்கும் அமைப்புகளை அழிப்பதற்காக கிறிஸ்து புறப்பட்டுச் செல்வார்; ‘சர்வ வல்லமையுள்ள கடவுளின் மகா நாளில் நடக்கப்போகும் அர்மகெதோன் போரில்’ அவற்றை அழிப்பார். (வெளி. 16:14-16; 19:19-21) கடைசியில், மாவீரரான ராஜா சாத்தானையும் பேய்களையும் அதலபாதாளத்திற்கு, அதாவது செயலற்ற நிலைக்கு, தள்ளுவதன் மூலம் ஜெயித்து முடிப்பார்.—வெளி. 20:1-3.
12, 13. (அ) ஆட்டுக்குட்டியானவரின் திருமணம் எப்போது நடக்கும்? (ஆ) ஆட்டுக்குட்டியானவரின் திருமணத்தின்போது பரலோகத்தில் யார் மகிழ்ச்சியில் திளைப்பார்கள்?
12 இந்தக் கடைசி நாட்களில் இறந்துபோகிற பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் உடனடியாக பரலோகத்திற்கு உயிர்த்தெழுப்பப்படுகிறார்கள். மணமகள் வகுப்பாரில் மீதமுள்ள அங்கத்தினர்களோ, மகா பாபிலோனின் அழிவுக்குப் பின் ஒரு கட்டத்தில், கிறிஸ்துவால் பரலோகத்திற்கு கூட்டிச் சேர்க்கப்படுவார்கள். (1 தெ. 4:16, 17) அப்படியானால், அர்மகெதோனுக்கு முன், “மணமகள்” வகுப்பார் எல்லோருமே பரலோகத்திற்கு சென்றிருப்பார்கள். அந்தப் போருக்குப் பிறகு, ஆட்டுக்குட்டியானவரின் திருமணம் நடைபெறும். “ஆட்டுக்குட்டியானவரின் திருமண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் சந்தோஷமானவர்கள்” என்று வெளிப்படுத்துதல் 19:9 குறிப்பிடுகிறது. ஆம், மணமகள் வகுப்பாரான 1,44,000 பேருக்கு அது மனமகிழ்வூட்டும் தருணமாக இருக்கும். தம்முடைய தோழர்கள் அத்தனை பேரும் ‘கடவுளுடைய அரசாங்கத்தில் தம்மோடு அமர்ந்து உணவும் பானமும் அருந்தும்போது’ மணமகனும் ராஜாவுமான கிறிஸ்து பூரிப்படைவார். (லூக். 22:18, 28-30) என்றாலும், ஆட்டுக்குட்டியானவரின் திருமணத்தின்போது மகிழ்ச்சியில் திளைப்பவர்கள் மணமகனும் மணமகளும் மட்டுமே அல்ல.
13 ஏற்கெனவே பார்த்தபடி பரலோகத் தூதர்கள் ஒன்றுசேர்ந்து இவ்வாறு பாடுவார்கள்: “நாம் மனமகிழ்ந்து, சந்தோஷத்தில் துள்ளிக் குதிப்போமாக, அவருக்கு [யெகோவாவுக்கு] மகிமை சேர்ப்போமாக; ஏனென்றால், ஆட்டுக்குட்டியானவரின் திருமணம் வந்துவிட்டது, மணமகளும் மணக்கோலத்தில் தயாராக இருக்கிறாள்.” (வெளி. 19:6, 7) ஆனால், பூமியிலுள்ள யெகோவாவின் ஊழியர்களைப் பற்றி என்ன சொல்லலாம்? இந்தச் சந்தோஷத்தில் இவர்களும் பங்குகொள்வார்களா?
‘அவர்கள் மகிழ்ச்சியோடு அழைத்துவரப்படுவார்கள்’
14. சங்கீதம் 45-ல் சொல்லப்பட்டுள்ள “தோழிகளாகிய கன்னிகைகள்” யார்?
14 சங்கீதம் 45:12, 14ஆ, 15-ஐ வாசியுங்கள். முடிவு காலத்தில், புறதேசத்து மக்கள் ஆன்மீக இஸ்ரவேலரில் மீதியானோருடன் மனப்பூர்வமாகச் சேர்ந்துகொள்வார்கள் என சகரியா தீர்க்கதரிசி முன்னறிவித்தார். “அந்நாட்களில் பலவித பாஷைக்காரராகிய புறஜாதியாரில் பத்து மனுஷர் ஒரு யூதனுடைய வஸ்திரத்தொங்கலைப் பிடித்துக்கொண்டு: தேவன் உங்களோடே இருக்கிறார் என்று கேள்விப்பட்டோம்; ஆகையால் உங்களோடேகூடப் போவோம் என்று சொல்லி, அவனைப் பற்றிக்கொள்வார்கள்” என்று அவர் எழுதினார். (சக. 8:23) இந்த ‘பத்து மனுஷரை’ ‘தீருவின் குமாரத்தி’ என்றும் ‘ஜனங்களில் ஐசுவரியவான்கள்’ என்றும் சங்கீதம் 45:12 அடையாள அர்த்தத்தில் குறிப்பிடுகிறது. இவர்கள் பரலோக நம்பிக்கையுள்ளவர்களில் மீதியானோரின் ஆன்மீக உதவியையும் ‘தயவையும் நாடி’, காணிக்கை கொண்டு வருவார்கள். 1935 முதற்கொண்டு, இந்த மீதியானோர் மூலம் லட்சக்கணக்கானோர் தங்களை ‘நீதிக்குட்படுத்தியிருக்கிறார்கள்.’ (தானி. 12:3) பரலோக நம்பிக்கையுள்ளவர்களின் இந்த உண்மைத் தோழர்கள், தங்களுடைய வாழ்க்கையை மாற்றி ஆன்மீக கன்னிகைகளாக ஆகியிருக்கிறார்கள். மணமகளின் இந்த “தோழிகளாகிய கன்னிகைகள்” யெகோவாவுக்குத் தங்களை அர்ப்பணித்திருக்கிறார்கள்; மணமகனும் ராஜாவுமான கிறிஸ்துவின் உண்மைக் குடிமக்கள் என்பதை நிரூபித்திருக்கிறார்கள்.
15. “தோழிகளாகிய கன்னிகைகள்” எவ்வாறு பூமியிலுள்ள மணமகள் வகுப்பாருடன் சேர்ந்து உழைக்கிறார்கள்?
15 ‘கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியை’ உலகெங்கும் உள்ள மக்களுக்கு அறிவிப்பதில் தங்களுக்கு உறுதுணையாக இருக்கிற ‘தோழிகளாகிய கன்னிகைகளுக்கு’ பூமியிலுள்ள மணமகள் வகுப்பார் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறார்கள். (மத். 24:14) ‘“வருக, வருக!” என்று கடவுளுடைய சக்தியும் மணமகளும்’ மட்டுமல்ல, அதைக் ‘கேட்கிறவர்களும் “வருக, வருக!” என்று அழைத்துக்கொண்டே இருக்கிறார்கள்.’ (வெளி. 22:17) ஆம், “வருக, வருக!” என்று அழைக்கும் மணமகள் வகுப்பாரின் சத்தத்திற்கு ‘வேறே ஆடுகள்’ செவிசாய்த்திருக்கிறார்கள். இப்போது இவர்களும், மணமகள் வகுப்பாரோடு சேர்ந்து மற்றவர்களை “வருக, வருக!” என்று அழைக்கிறார்கள்.—யோவா. 10:16.
16. வேறே ஆடுகளுக்கு யெகோவா என்ன பாக்கியத்தைக் கொடுத்திருக்கிறார்?
16 பரலோக நம்பிக்கையுள்ள இந்த மீதியானோர் தங்களுடைய தோழிகளை நேசிக்கிறார்கள். அதோடு, ஆட்டுக்குட்டியானவரின் திருமணத்தில் உண்டாகும் மகிழ்ச்சியில் பங்குபெறும் பாக்கியத்தை இந்த வேறே ஆடுகளுக்கு யெகோவா அளித்திருப்பதை அறிந்து சந்தோஷப்படுகிறார்கள். இந்த “தோழிகளாகிய கன்னிகைகள்,” “மகிழ்ச்சியோடும் களிப்போடும்” அழைத்துவரப்படுவார்கள் என்று முன்னறிவிக்கப்பட்டது. ஆம், பரலோகத்தில் ஆட்டுக்குட்டியானவரின் திருமணம் நடக்கும்போது பூமியில் என்றென்றும் வாழும் நம்பிக்கையுள்ளவர்கள் உட்பட அண்டசராசரமும் அகமகிழும். ‘திரள் கூட்டமான மக்கள் சிம்மாசனத்திற்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முன்பாக நிற்பதாக’ வெளிப்படுத்துதல் புத்தகம் சொல்கிறது. அவர்கள் ஆன்மீக ஆலயத்தின் பூமிக்குரிய முற்றத்தில் யெகோவாவுக்குப் பரிசுத்த சேவை செய்கிறார்கள்.—வெளி. 7:9, 15.
“உமது பிதாக்களுக்குப் பதிலாக உமது குமாரர் இருப்பார்கள்”
17, 18. ஆட்டுக்குட்டியானவரின் திருமணத்தால் புதிய பூமியில் இருப்போர் எப்படி நன்மையடைவார்கள்? ஆயிர வருட ஆட்சியின்போது கிறிஸ்து யாருக்குப் பிதாவாக ஆவார்?
17 சங்கீதம் 45:16-ஐ வாசியுங்கள். இந்தத் திருமணத்தால் புதிய பூமியில் பொழியும் ஆசீர்வாதங்களை மணமகளின் “தோழிகளாகிய கன்னிகைகள்” பார்க்கும்போது, அவர்களுடைய மகிழ்ச்சி இரட்டிப்பாகும். மணமகனும் ராஜாவுமான கிறிஸ்து, பூமியில் வாழ்ந்த தம்முடைய ‘பிதாக்களை’ உயிர்த்தெழுப்புவார்; அவர்கள் அவருடைய பூமிக்குரிய ‘குமாரராக’ ஆவார்கள். (யோவா. 5:25-29; எபி. 11:35) அவர்களில் சிலரை “பூமியெங்கும் பிரபுக்களாக” நியமிப்பார். புதிய உலகில் மக்களை முன்நின்று வழிநடத்துவதற்கு இன்றுள்ள உண்மையுள்ள மூப்பர்களில் சிலரையும் நியமிப்பார் என்பதில் சந்தேகமில்லை.—ஏசா. 32:1.
18 ஆயிர வருட ஆட்சியின்போது கிறிஸ்து மற்றவர்களுக்கும் பிதாவாக ஆவார். பூமியில் முடிவில்லா வாழ்வைப் பெறும் எல்லோருமே இயேசுவின் மீட்பு பலியில் விசுவாசம் வைப்பதால் இந்தப் பாக்கியத்தைப் பெறுவார்கள். (யோவா. 3:16) இவ்வாறு, கிறிஸ்து அவர்களுடைய ‘நித்திய பிதாவாக’ ஆவார்.—ஏசா. 9:6, 7.
‘அவருடைய நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்த’ தூண்டப்படுகிறோம்
19, 20. சங்கீதம் 45-லுள்ள சிலிர்ப்பூட்டும் சம்பவங்கள், உண்மை கிறிஸ்தவர்களை என்ன செய்யத் தூண்டுகிறது?
19 சங்கீதம் 45:1, 17-ஐ வாசியுங்கள். 45-ஆம் சங்கீதத்தில் சொல்லப்பட்டுள்ள சம்பவங்களுக்கும் கிறிஸ்தவர்களாகிய நமக்கும் சம்பந்தம் இருக்கிறது. மணமகள் வகுப்பாரில் மீதியானோர், சீக்கிரத்தில் பரலோகத்திலுள்ள தங்கள் சகோதரர்களோடும் மணமகனோடும் சேர்ந்துகொள்ளப்போவதை அறிந்து பெருமகிழ்ச்சி அடைகிறார்கள். வேறே ஆடுகளோ, தங்களுடைய மகத்தான ராஜாவாவுக்குக் கீழ்ப்பட்டு நடக்க இப்போது மும்முரமாகப் பாடுபடுகிறார்கள்; அதோடு, மணமகள் வகுப்பாரில் மீதியானோருடன் சேர்ந்து வேலை செய்யும் வாய்ப்புக்கு அதிக நன்றியுள்ளவர்களாக இருக்கிறார்கள். திருமணத்திற்குப் பிறகு, கிறிஸ்துவும் அவருடைய சக ராஜாக்களும் பூமியிலுள்ள குடிமக்களுக்கு ஆசீர்வாதங்களை வாரி வழங்குவார்கள்.—வெளி. 7:17; 21:1-4.
20 மேசியானிய ராஜாவைப் பற்றிய ‘நல்ல விசேஷம்’ நிறைவேறப்போவதை ஆவலோடு எதிர்பார்த்திருக்கிற நாம், ‘அவருடைய நாமத்தை பிரஸ்தாபப்படுத்த’ தூண்டப்படுகிறோம், அல்லவா? ஆகவே, ராஜாவை ‘என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் துதிப்போமாக’!