இளைஞர் கேட்கின்றனர்
ஆர்வமாய் பைபிள் வாசிப்பதற்கு நான் என்ன செய்யலாம்?
எப்போதெல்லாம் பைபிளை வாசிக்கிறீர்கள்? (ஒன்றை டிக் செய்யுங்கள்)
❑ தினமும்
❑ வாராவாரம்
❑ மற்றவை
பின்வரும் வாக்கியத்தைப் பூர்த்தி செய்யுங்கள்.
பைபிள் வாசிக்கப் பிடிக்கவில்லை, ஏனென்றால் . . . (காரணங்களை டிக் செய்யுங்கள்)
❑ ஆர்வமில்லை
❑ குழப்பமாயிருக்கிறது
❑ மனம் அலைபாய்கிறது
❑ வேறு காரணங்கள்
பைபிள் வாசிக்க உங்களுக்கு ஆர்வமில்லையா? அப்படியென்றால், 18 வயது வில் சொல்வதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள். “பைபிள் வாசிப்பதென்றால் போரடிப்பதாகத் தோன்றலாம்” என்று அவன் சொல்கிறான். ஆனால், “அதை எப்படி வாசிக்க வேண்டுமென்று நீங்கள் தெரிந்துகொண்டால் உங்களுக்குப் போரடிக்காது” என்றும் ஐடியா தருகிறான்.
பைபிளை எப்படி வாசிப்பதென நீங்கள் ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்? சரி, பின்வரும் கேள்விகளுக்கு விடை அறிய ஆசையா?
◼ சரியான தீர்மானங்களை எடுப்பது எப்படி?
◼ நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி?
◼ கவலைகளை விரட்டியடிப்பது எப்படி?
இந்த விஷயங்களைப் பற்றியும் இன்னும் எண்ணற்ற விஷயங்களைப் பற்றியும் பைபிளில் மணிமணியான ஆலோசனைகள் உள்ளன. இருந்தாலும், இந்த ஆலோசனைகளைக் கண்டுபிடிப்பதற்கு நீங்கள் முயற்சி எடுக்க வேண்டும். இதை ஒரு புதையல் வேட்டைக்கு ஒப்பிடலாம்: புதையல் தேடுவதில் எந்தளவு சவால் இருக்கிறதோ அந்தளவு சுவாரஸ்யமும் இருக்கும்!—நீதிமொழிகள் 2:1-6.
பைபிளிலுள்ள புதையல்களை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பைபிளை எப்படி வாசிக்க வேண்டும் என்பதை வலது பக்க பெட்டியில் பாருங்கள்; அதை நீங்கள் கத்தரித்து வைத்துக்கொள்ளலாம். எந்த வரிசை கிரமத்தில் வாசிக்க வேண்டும் என்பதைப் பின்பக்கத்தில் பாருங்கள். அடுத்துவரும் பக்கங்களில் வேறுசில ஆலோசனைகளும் உள்ளன. அவற்றில் உங்களுக்குப் பிடித்தமான ஆலோசனைகளைப் பின்பற்றி பாருங்கள்.
“இளைஞர் கேட்கின்றனர்” தொடர் கட்டுரைகளுக்கு: www.watchtower.org/ype
உங்களிடம் இன்டர்நெட் வசதி இருந்தால், www.watchtower.org/e/bible என்ற வெப் சைட்டுக்குச் சென்று ஆன்லைனில் பைபிள் வாசிக்கலாம்.
சிந்திப்பதற்கு
“முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும்” என்ற குறளை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
◼ பைபிள் வாசிக்கும் விஷயத்தில் இது எப்படிப் பொருந்தும்?
◼ பைபிள் வாசிக்க நீங்கள் எந்த நேரத்தைத் தேர்ந்தெடுக்கலாம்?
[பக்கம் 13-ன் பெட்டி/படம்]
பைபிளை எப்படி வாசிக்க வேண்டும்?
வாசிக்கும் முன்பு . . .
◼ அமைதியான சூழலைத் தேர்ந்தெடுங்கள், அப்போதுதான் உங்கள் சிந்தை சிதறாமல் இருக்கும்.
◼ புரிந்துகொள்வதற்காக ஜெபம் செய்யுங்கள்.
வசிக்கும் சமயத்தில் . . .
◼ பைபிளில் வரும் சம்பவங்களைக் கற்பனை செய்ய படங்களையும் பூகோள வரைபடங்களையும் எடுத்துப் பாருங்கள்.
◼ சூழலைச் சிந்தித்துப் பாருங்கள், நுட்ப விவரங்களைக் கூர்ந்து ஆராயுங்கள்.
◼ அடிக்குறிப்புகளையும் குறுக்கு-வசனங்களையும் எடுத்துப் பாருங்கள்.
◼ உங்களை இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்:
தகவல்கள்: இந்தச் சம்பவம் எப்போது நடந்தது? இந்த வார்த்தைகளை யார், யாரிடம் சொன்னார்?
அர்த்தம்: இந்த விஷயத்தை நான் எப்படி மற்றவர்களுக்கு விளக்குவேன்?
பயன்: யெகோவா தேவன் எதற்காக இந்தச் சம்பவத்தை பைபிளில் பதிவு செய்து வைத்தார்? அவரைப் பற்றி. . . அவருடைய நடவடிக்கைகளைப் பற்றி. . . இது எனக்கு என்ன கற்பிக்கிறது? இதிலிருந்து எனக்கு என்ன பாடம்?
வாசித்த பின்பு . . .
◼ கூடுதலாக ஆராய்ச்சி செய்யுங்கள். உதாரணமாக, “வேதாகமத்தின்பேரில் உட்பார்வை” (ஆங்கிலம்), “வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது, பயனுள்ளது” போன்ற புத்தகங்கள் (யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டவை) நீங்கள் அறிந்த மொழியில் இருந்தால் ஆராய்ச்சிக்குப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
◼ மறுபடியும் ஜெபம் செய்யுங்கள். நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள், அதை எப்படிக் கடைப்பிடிக்கப் போகிறீர்கள் என்பதை எல்லாம் யெகோவாவிடம் சொல்லுங்கள். பைபிளைக் கொடுத்ததற்காக அவருக்கு நன்றி தெரிவியுங்கள்.
[பக்கம் 14-ன் பெட்டி/படம்]
எந்த வரிசைக் கிரமத்தில் பைபிளை வாசிப்பீர்கள்?
சில யோசனைகள் . . .
❑ ஆரம்பத்திலிருந்து முடிவுவரை வாசியுங்கள்.
❑ காலவரிசைப்படி பிரித்து வாசியுங்கள். அது புத்தகங்கள் எழுதப்பட்ட வரிசையிலும் இருக்கலாம், சம்பவங்கள் நடந்த வரிசையிலும் இருக்கலாம்.
❑ ஒவ்வொரு நாளும் வெவ்வேறு பகுதியை வாசியுங்கள்.
திங்கள்: விறுவிறுப்பான சரித்திரப் பதிவுகள் (ஆதியாகமம்-எஸ்தர்)
செவ்வாய்: இயேசுவின் வாழ்க்கையும் போதனையும் (மத்தேயு-யோவான்)
புதன்: கிறிஸ்தவத்தின் ஆரம்பகாலம் (அப்போஸ்தலர் நடபடிகள்)
வியாழன்: தீர்க்கதரிசனம், வாழ்க்கை பாடங்கள் (ஏசாயா-மல்கியா, வெளிப்படுத்துதல்)
வெள்ளி: நெஞ்சைத் தொடும் கவிதை, பாடல் (யோபு, சங்கீதம், உன்னதப்பாட்டு)
சனி: ஞானமான ஆலோசனைகள் (நீதிமொழிகள், பிரசங்கி)
ஞாயிறு: சபைகளுக்கு எழுதப்பட்ட கடிதங்கள் (ரோமர்-யூதா)
நீங்கள் எந்த வரிசைக் கிரமத்தில் வாசித்தாலும் சரி, அதை எழுதிவைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு அதிகாரத்தையும் வாசித்த பின் ✔ போட்டுக்கொள்ளுங்கள் அல்லது வேறு ஏதாவது விதத்தில் குறித்துவைத்துக் கொள்ளுங்கள்.
இதை வெட்டி உங்கள் பைபிளில் வைத்துக்கொள்ளுங்கள்!
[பக்கம் 14-ன் பெட்டி/படம்]
வசனங்களுக்கு உயிர் கொடுத்து வாசியுங்கள்!
ஆர்வத்துடன் வாசிக்கப் பழகுங்கள். உதாரணத்திற்கு:
❑ நீண்ட பெயர் பட்டியல் வந்தால் குடும்பம் குடும்பமாகப் பிரித்து எழுதுங்கள்.
❑ விளக்க வரைபடம் வரையுங்கள். கடவுளுக்கு விசுவாசமாய் வாழ்ந்த ஒருவரைப் பற்றி வாசிக்கிறீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள். அவருடைய குணங்களையும் செயல்களையும் அவர் பெற்ற ஆசீர்வாதங்களோடு சம்பந்தப்படுத்தி வரையுங்கள்.—நீதிமொழிகள் 28:20.
[படம்]
கடவுளுடைய நண்பர்
↑ கீழ்ப்படிகிறவர்
↑ விசுவாசமுள்ளவர்
↑ ↑
ஆபிரகாம்
❑ நீங்கள் வாசிக்கும் சம்பவத்தை விவரிப்பதற்குப் படம் வரையுங்கள்.
❑ சம்பவங்கள் எந்த வரிசையில் நடந்தன என்பதை எளிமையான படங்கள் வரைந்து விளக்குங்கள். ஒவ்வொரு படத்திலும் என்ன நடக்கிறது என்பதை விவரியுங்கள்.
❑ நீங்களே ஒரு குட்டி ‘மாடல்’ செய்யுங்கள். (எ-டு) நோவாவின் பேழை.—ஜனவரி 2007 விழித்தெழு! இதழில் பக்கம் 22-ஐப் பாருங்கள்.
❑ நண்பர்களோடு அல்லது குடும்பத்தாரோடு சேர்ந்து சத்தமாக வாசியுங்கள். யோசனை: ஒருவர் விவரிப்பாளர் பாகத்தையும், மற்றவர்கள் வெவ்வேறு கதாபாத்திரங்களின் பாகங்களையும் வாசிக்கலாம்.
❑ ஒரு பதிவைத் தேர்ந்தெடுத்து அதைக் குறித்து ரிப்போர்ட் எழுதுங்கள். வெவ்வேறு நபர்களுடைய கண்ணோட்டத்திலிருந்து அதை எழுதுங்கள். முக்கிய கதாபாத்திரங்கள் மற்றும் கண்கண்ட சாட்சிகளின் “பேட்டிகளையும்” ரிப்போர்ட்டில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
❑ தவறான முடிவெடுத்த ஒருவருடைய உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள், ஆனால் முடிவை வேறுவிதமாக கற்பனை செய்து பாருங்கள்! இயேசுவை பேதுரு மறுதலித்த சம்பவத்தை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளுங்கள். (மாற்கு 14:66-72) தர்மசங்கடமான அந்தச் சூழலில் பேதுரு வேறு எப்படிப் பதிலளித்திருக்கலாம்?
❑ பைபிள் நாடகப் பதிவுகளைப் போட்டுப் பாருங்கள் அல்லது கேளுங்கள்.
❑ நீங்களே ஒரு நாடகம் எழுதுங்கள். அந்தப் பதிவிலிருந்து நமக்கு என்ன பாடம் என்பதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.—ரோமர் 15:4.
யோசனை: நீங்கள் எழுதிய நாடகத்தை உங்கள் நண்பர்கள் சிலரை வைத்து அரங்கேற்றுங்கள்.
[பக்கம் 15-ன் பெட்டி/படம்]
ஆர்வத்தை வளர்த்துக்கொள்ள. . .
◼ ஓர் இலக்கு வையுங்கள்! பைபிள் வாசிப்பு திட்டத்தை எந்த நாளிலிருந்து ஆரம்பிக்கப் போகிறீர்கள் எனக் கீழே எழுதுங்கள்.
............................
◼ உங்களுக்குப் பிடித்தமான பைபிள் பகுதியைத் தேர்ந்தெடுங்கள். (“எந்த வரிசைக் கிரமத்தில் பைபிளை வாசிப்பீர்கள்?” - பெட்டியைக் காண்க) பைபிளில் எந்தப் பகுதியை முதலில் வாசிக்கப் போகிறீர்கள் எனக் கீழே எழுதுங்கள்.
............................
◼ ஆரம்பத்தில் சிறிது நேரம் வாசியுங்கள். 15 நிமிடங்கள் வாசித்தால்கூட போதும். சுத்தமாகப் படிக்காமல் இருப்பதற்கு இது எவ்வளவோ மேல். இப்படி வாசிப்பதற்கு உங்களால் எவ்வளவு நேரம் ஒதுக்க முடியும் எனக் கீழே எழுதுங்கள்.
............................
யோசனை: வாசிப்பதற்கென்றே தனியாக ஒரு பைபிள் வைத்துக்கொள்ளுங்கள். அதில் குறிப்புகள் எழுதிக்கொள்ளுங்கள். முக்கியமாக உங்கள் மனதைத் தொட்ட வசனங்களைக் குறித்துக்கொள்ளுங்கள்.
[பக்கம் 15-ன் பெட்டி/படங்கள்]
உங்கள் சகாக்களின் கருத்துகள்
“தினமும் கொஞ்ச நேரம் பைபிள் வாசித்துவிட்டுத்தான் படுக்கப் போவேன். இதனால் தூங்குவதற்கு முன் நல்ல விஷயங்களை யோசிக்க முடிகிறது.”—மேகன்.
“ஒரேவொரு வசனத்தை எடுத்துக்கொண்டு அதை 15 நிமிடம் ஆராய்ச்சி செய்வேன். அதற்குரிய எல்லா அடிக்குறிப்புகளையும் வாசிப்பேன், எல்லா குறுக்கு-வசனங்களையும் வாசிப்பேன், கூடுதல் ஆராய்ச்சியும் செய்வேன். சில சமயங்களில் இதையெல்லாம் 15 நிமிடங்களுக்குள் என்னால் முடிக்க முடியாது. ஆனால், இப்படிப் படிப்பதால் எனக்கு நிறைய பலன் கிடைக்கிறது.”—கோரி.
“ஒருமுறை பைபிளை பத்தே மாதங்களில் வாசித்து முடித்துவிட்டேன். இந்த வேகத்தில் வாசித்ததால் ஒவ்வொரு புத்தகத்துக்கும் இடையே உள்ள தொடர்பை புரிந்துகொள்ள முடிந்தது. இதுவரை எனக்குத் தெரியாத எத்தனையோ விஷயங்களை அப்போது தெரிந்துகொண்டேன்.”—ஜான்.
[பக்கம் 15-ன் பெட்டி]
நீங்களே தேர்ந்தெடுங்கள்!
❑ ஒரு பதிவைத் தேர்ந்தெடுங்கள். பைபிளில் சுவாரஸ்யமான நிஜ கதைகள் ஏராளம். உங்களுக்குப் பிடித்த ஒன்றைத் தேர்ந்தெடுத்து, ஆரம்பத்திலிருந்து கடைசிவரை வாசியுங்கள்.
யோசனை: ஒரு கதையிலிருந்து எப்படி இன்னும் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம் என்பதைத் தெரிந்துகொள்ள இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன் தரும் விடைகள், (ஆங்கிலம்) தொகுதி 2-ல் பக்கம் 292-ஐப் பாருங்கள். இப்புத்தகம் யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.
❑ ஒரு சுவிசேஷத்தைத் தேர்ந்தெடுங்கள். மத்தேயு (முதன்முதலில் எழுதப்பட்டது), மாற்கு (விறுவிறுப்பான, சுவாரஸ்யமான சம்பவங்களுக்குப் பேர்போனது), லூக்கா (குறிப்பாக ஜெபத்திற்கும் பெண்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது), யோவான் (மற்ற மூன்று சுவிசேஷங்களில் இல்லாத பல விஷயங்களைக் கொண்டது) ஆகிய சுவிசேஷங்களில் ஒன்றை வாசியுங்கள்.
யோசனை: வாசிக்க ஆரம்பிக்கும் முன்பு அந்தப் புத்தகத்தைப் பற்றியும் அதன் எழுத்தாளரைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்துகொள்ளுங்கள், அப்போதுதான் ஒவ்வொரு சுவிசேஷத்தின் தனித்தன்மையையும் புரிந்துகொள்வீர்கள்.
❑ ஒரு சங்கீதத்தைத் தேர்ந்தெடுங்கள். உதாரணத்திற்கு:
தனிமையில் வாடினால் அல்லது நண்பர் இல்லாமல் தவித்தால் சங்கீதம் 142-ஐ வாசியுங்கள்.
உங்கள் பலவீனத்தை எண்ணி சோர்ந்துபோயிருந்தால் சங்கீதம் 51-ஐ வாசியுங்கள்.
கடவுளுடைய நெறிமுறைகளின்படி வாழ்வதால் என்ன பிரயோஜனம் என்று நினைத்தால் சங்கீதம் 73-ஐ வாசியுங்கள்.
யோசனை: நீங்கள் வாசித்ததில் குறிப்பாக உங்களுக்கு உற்சாகமளித்த சங்கீதங்களை எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.
[பக்கம் 16-ன் பெட்டி]
ஆழ்ந்து சிந்தியுங்கள்
◼ சூழலைச் சிந்தித்துப் பாருங்கள். சம்பவம் நடந்த நேரத்தை. . . இடத்தை. . . சூழ்நிலைகளை. . . ஆராயுங்கள்.
உதாரணம்: எசேக்கியேல் 14:14-ஐ வாசியுங்கள். நோவா, யோபு போன்ற நல்லவர்களின் பெயர்களோடு தானியேலின் பெயரையும் யெகோவா குறிப்பிட்டபோது தானியேலுக்கு எத்தனை வயது?
இதோ ஒரு தகவல்: பாபிலோனுக்கு தானியேல் நாடுகடத்தப்பட்டு ஐந்து ஆண்டுகள் கழித்து எசேக்கியல் 14-ஆம் அதிகாரம் எழுதப்பட்டது. நாடுகடத்தப்பட்டபோது தானியேல் பருவ வயதில் இருந்திருக்கலாம்.
புதைந்திருக்கும் மணிக்கல்: தானியேல் வயதில் சிறியவராய் இருந்ததால் அவருடைய உண்மைத்தன்மையை யெகோவா கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டாரா? அவர் எடுத்த நல்ல தீர்மானங்கள் என்னென்ன, அதனால் அவருக்குக் கிடைத்த ஆசீர்வாதங்கள் என்னென்ன? (தானியேல் 1:8-17) தீர்மானங்கள் எடுக்கும்போது தானியேலின் உதாரணத்தைச் சிந்திப்பது ஏன் நல்லது?
◼ நுட்ப விவரங்களைக் கூர்ந்து ஆராயுங்கள். சில சமயங்களில் ஓரிரு வார்த்தைகள் முக்கியமான தகவலைக் கண்டுபிடிக்க உதவலாம்.
உதாரணம்: மத்தேயு 28:7-ஐ மாற்கு 16:7-உடன் ஒப்பிடுங்கள். சீடர்களிடமும் “பேதுருவிடமும்” இயேசு தோன்றுவார் என்ற விவரத்தை மாற்கு ஏன் சேர்த்துக்கொண்டார்?
இதோ ஒரு தகவல்: இந்தச் சம்பவங்கள் நடந்தபோது மாற்கு அங்கு இருக்கவில்லை; பேதுருவிடமிருந்து அவருக்கு ஒருவேளை இந்தத் தகவல் கிடைத்திருக்கலாம்.
புதைந்திருக்கும் மணிக்கல்: பேதுருவைப் பார்க்க வேண்டுமென இயேசு சொன்னதைக் கேட்டு பேதுரு ஏன் சந்தோஷப்பட்டிருப்பார்? (மாற்கு 14:66-72) தான் ஓர் உண்மையான நண்பர் என்பதை பேதுருவுக்கு இயேசு எப்படி நிரூபித்தார்? நீங்களும் எப்படி இயேசுவைப் போலவே மற்றவர்களுக்கு உண்மையான நண்பராக இருக்கலாம்?
◼ கூடுதலாக ஆராய்ச்சி செய்யுங்கள். விளக்கங்களுக்காக பைபிள் பிரசுரங்களை எடுத்துப் பாருங்கள்.
உதாரணம்: மத்தேயு 2:7-15-ஐ வாசியுங்கள். ஜோதிடர்கள் எப்போது இயேசுவைச் சந்தித்தார்கள்?
இதோ ஒரு தகவல்: ஜனவரி 1, 2008 காவற்கோபுர இதழில் பக்கம் 31-ஐப் பாருங்கள். (யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது)
புதைந்திருக்கும் மணிக்கல்: இயேசுவின் குடும்பத்தினர் எகிப்தில் இருந்தபோது அவர்களுடைய பொருளாதாரத் தேவைகளை யெகோவா எப்படிப் பூர்த்தி செய்திருப்பார்? இக்கட்டான சூழ்நிலைகளை எதிர்ப்படுகையில் கடவுள்மீது நம்பிக்கை வைப்பது எப்படி உதவும்?—மத்தேயு 6:33, 34. (g 4/09)