‘செயலிலும் உண்மை மனதோடும்’ அன்பு காட்டுங்கள்
“உங்களுடைய சொல்லில் மட்டுமல்ல, செயலிலும் அன்பு காட்ட வேண்டும், அதை உண்மை மனதோடு காட்ட வேண்டும்.”—1 யோ. 3:18.
1. உயர்ந்த அன்பு எது, அதை நீங்கள் எப்படி விவரிப்பீர்கள்? (ஆரம்பப் படம்)
யெகோவா அன்பின் பிறப்பிடம். (1 யோ. 4:7) சரியான நியமங்களின் அடிப்படையிலான அன்புதான் உயர்ந்த அன்பு. அப்படிப்பட்ட அன்பை விளக்குவதற்கு அகாப்பே என்ற கிரேக்க வார்த்தையை பைபிள் பயன்படுத்துகிறது. மற்றவர்களிடம் காட்டப்படுகிற பாசமும் கனிவான உணர்ச்சிகளும் இந்த அன்பில் அடங்குகின்றன. ஆனால், இந்த அன்பு வெறும் உணர்ச்சிப்பூர்வமானது மட்டுமல்ல. எந்தச் சுயநலமும் இல்லாமல், மற்றவர்களுக்குப் பிரயோஜனமான காரியங்களைச் செய்வதையும் குறிக்கிறது. மற்றவர்களுக்கு நல்லது செய்ய இந்த அன்பு நம்மைத் தூண்டுகிறது. இப்படிப்பட்ட அன்பு, சந்தோஷத்தையும் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தையும் தருகிறது.
2, 3. யெகோவா எப்படி மனிதர்கள்மேல் சுயநலமில்லாத அன்பைக் காட்டினார்?
2 ஆதாமையும் ஏவாளையும் படைப்பதற்கு முன்பே யெகோவா மனிதர்கள்மேல் அன்பு காட்டினார். மனிதர்கள் உயிர்வாழ்வதற்குத் தேவையான எல்லாவற்றையுமே அவர் இந்தப் பூமியில் படைத்தார். அதுமட்டுமல்ல, அவர்கள் சந்தோஷமாக வாழ்வதற்கு ஏற்ற இடமாக அதைத் தயார்ப்படுத்தினார். அவர் தனக்காக இதைச் செய்யவில்லை, நமக்காகத்தான் செய்தார். இந்தப் பூமியைத் தயார்ப்படுத்திய பிறகுதான் அவர் மனிதர்களைப் படைத்தார். அதன்பின், பூஞ்சோலை பூமியில் என்றென்றும் வாழும் நம்பிக்கையை அவர்களுக்குக் கொடுத்தார்.
3 பிற்பாடு, யெகோவா தலைசிறந்த விதத்தில் மனிதர்கள்மேல் சுயநலமில்லாத அன்பைக் காட்டினார். ஆதாமும் ஏவாளும் கீழ்ப்படியாமல் போனபோதிலும், அவர்களுடைய பிள்ளைகளில் சிலராவது தன்னை நேசிப்பார்கள் என்று அவர் உறுதியாக நம்பினார். அதனால், தன்னுடைய மகனின் உயிரை மீட்புவிலையாகக் கொடுத்து அவர்களைக் காப்பாற்றுவதற்கு ஏற்பாடு செய்தார். (ஆதி. 3:15; 1 யோ. 4:10) மீட்புவிலை கொடுக்கப்படும் என்று யெகோவா எப்போது வாக்குறுதி தந்தாரோ, அப்போதே அது கொடுக்கப்பட்டதுபோல் அவர் கருதினார். 4,000 வருஷங்களுக்குப் பிறகு, தன்னுடைய ஒரே மகனை மனிதர்களுக்காகத் தந்தார். (யோவா. 3:16) யெகோவாவின் அன்புக்காக நாம் எவ்வளவு நன்றியோடு இருக்கிறோம்!
4. பாவ இயல்புள்ள மனிதர்களால் சுயநலமில்லாத அன்பைக் காட்ட முடியும் என்று எப்படிச் சொல்லலாம்?
4 நாம் பாவ இயல்புள்ளவர்களாக இருந்தாலும் சுயநலமில்லாத அன்பை நம்மால் காட்ட முடியுமா? நிச்சயமாக முடியும். ஏனென்றால், யெகோவா தன்னுடைய சாயலில் நம்மைப் படைத்திருக்கிறார்; அதாவது, அவரைப் பின்பற்றும் திறனோடு நம்மைப் படைத்திருக்கிறார். சுயநலமில்லாத அன்பை எல்லா சமயங்களிலும் காட்டுவது சுலபம் இல்லைதான், ஆனாலும் நம்மால் அதைக் காட்ட முடியும். ஆபேல், தன்னிடம் இருந்ததிலேயே மிகச் சிறந்ததைக் காணிக்கையாகக் கொடுத்தபோது கடவுள்மேல் சுயநலமில்லாத அன்பைக் காட்டினான். (ஆதி. 4:3, 4) நோவா, நிறைய வருஷங்களுக்குக் கடவுளுடைய செய்தியைப் பிரசங்கித்ததன் மூலம், அதுவும் மக்கள் கேட்காதபோதும் அதைத் தொடர்ந்து பிரசங்கித்ததன் மூலம், சுயநலமில்லாத அன்பைக் காட்டினார். (2 பே. 2:5) ஆபிரகாம், தன்னுடைய அன்பு மகனையே பலி கொடுக்க முன்வந்ததன் மூலம், தன்னுடைய உணர்ச்சிகளைவிட கடவுள்மேல் தான் வைத்திருந்த அன்புதான் முக்கியம் என்பதைக் காட்டினார். (யாக். 2:21) உண்மையுள்ள அந்த நபர்களைப் போலவே, நாமும் கஷ்டமான சமயங்களில்கூட அன்பு காட்ட வேண்டும்.
உண்மையான அன்பு என்றால் என்ன?
5. என்ன விதங்களில் நாம் உண்மையான அன்பைக் காட்டலாம்?
5 நாம் “சொல்லில் மட்டுமல்ல, செயலிலும் அன்பு காட்ட வேண்டும், அதை உண்மை மனதோடு காட்ட வேண்டும்” என்று பைபிள் சொல்கிறது. (1 யோ. 3:18) அப்படியென்றால், நம்முடைய அன்பை வார்த்தைகளில் வெளிக்காட்டக் கூடாது என்று அது சொல்கிறதா? இல்லை. (1 தெ. 4:18) “நான் உங்கமேல அன்பு வச்சிருக்கேன்” என்று வாயளவில் சொன்னால் மட்டும் போதாது என்றுதான் அது சொல்கிறது. நாம் உண்மையாகவே அன்பு வைத்திருப்பதைச் செயலில் காட்ட வேண்டும். உதாரணத்துக்கு, உணவு அல்லது உடை இல்லாமல் கஷ்டப்படுகிற நம் சகோதரர்களுக்கோ சகோதரிகளுக்கோ, வெறுமனே ஆறுதல் சொன்னால் போதாது. (யாக். 2:15, 16) அதேபோல், இன்னும் நிறையப் பேர் பிரசங்க வேலையில் நம்மோடு சேர்ந்துகொள்ள வேண்டுமென்று ஜெபம் செய்தால் மட்டும் போதாது; அந்த வேலையைச் சுறுசுறுப்பாகச் செய்யவும் வேண்டும்; அப்போதுதான், யெகோவா மீதும் மற்றவர்கள் மீதும் நமக்கு உண்மையான அன்பு இருக்கிறதென்று அர்த்தம்.—மத். 9:38.
6, 7. (அ) “வெளிவேஷமில்லாத அன்பு” என்றால் என்ன? (ஆ) போலித்தனமான அன்புக்குச் சில உதாரணங்களைக் கொடுங்கள்.
6 நாம் “செயலிலும் அன்பு காட்ட வேண்டும், அதை உண்மை மனதோடு காட்ட வேண்டும்” என்று அப்போஸ்தலன் யோவான் சொன்னார். அதனால், நம்முடைய அன்பு “போலியாக இருக்க” கூடாது; அது “வெளிவேஷமில்லாத” அன்பாக இருக்க வேண்டும். (ரோ. 12:9; 2 கொ. 6:6) அப்படியென்றால், அன்பு இருப்பதுபோல் நடிப்பது உண்மையான அன்புக்கு அடையாளம் அல்ல. வெளிவேஷம் போட்டுக்கொண்டு அன்பு காட்டுவதாகச் சொல்லவே முடியாது, அது உண்மையில் அன்பே கிடையாது. போலித்தனமான அன்பு வீணானது.
7 போலித்தனமான அன்புக்குச் சில உதாரணங்களை இப்போது பார்க்கலாம். ஏதேன் தோட்டத்தில் ஏவாளிடம் சாத்தான் பேசியபோது, அவளுக்கு நல்லது செய்ய விரும்புவதுபோல் காட்டிக்கொண்டான். ஆனால், அவனுடைய செயல்கள் அதற்கு நேர்மாறாக இருந்தன. (ஆதி. 3:4, 5) தாவீது ராஜாவுக்கு அகித்தோப்பேல் என்ற நண்பர் இருந்தார். ஆனால், அகித்தோப்பேல் சுயநலத்துக்காக தாவீதுக்குத் துரோகம் செய்துவிட்டார். அவர் உண்மையான நண்பராக இல்லாததை அவருடைய செயல்கள் காட்டின. (2 சா. 15:31) இன்று, சபையில் பிரிவினைகளை ஏற்படுத்துகிற விசுவாசதுரோகிகளும் மற்றவர்களும், ‘நயமாகப் பேசுகிறார்கள்,’ போலியாக ‘புகழ்கிறார்கள்.’ (ரோ. 16:17, 18) மற்றவர்கள்மேல் அக்கறை இருப்பதுபோல் அவர்கள் காட்டிக்கொள்ளலாம், ஆனால் உண்மையில் அவர்கள் சுயநலமாக நடந்துகொள்கிறார்கள்.
8. என்ன கேள்வியை நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும்?
8 பொதுவாக, மற்றவர்களை ஏமாற்றுவதற்காகத்தான் சிலர் போலித்தனமான அன்பைக் காட்டுகிறார்கள்; இது வெட்கக்கேடானது! மனிதர்களை வேண்டுமென்றால் நாம் ஏமாற்றலாம், ஆனால் யெகோவாவை ஏமாற்ற முடியாது. வெளிவேஷக்காரர்கள்போல் நடந்துகொள்கிறவர்கள் ‘மிகக் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள்’ என்று இயேசு சொன்னார். (மத். 24:51) யெகோவாவின் ஊழியர்களாகிய நாம் ஒருபோதும் வெளிவேஷம் போடக் கூடாது. ‘நான் உண்மையான அன்பு காட்டறேனா, இல்லன்னா சுயநலமாவும் போலித்தனமாவும் நடந்துக்கறேனா?’ என்று நம்மையே கேட்டுக்கொள்ள வேண்டும். ‘வெளிவேஷமில்லாத அன்பை’ காட்டுவதற்கான ஒன்பது வழிகளை இப்போது பார்க்கலாம்.
‘செயலிலும் உண்மை மனதோடும்’ அன்பு காட்டுவது எப்படி?
9. உண்மையான அன்பு என்ன செய்ய நம்மைத் தூண்ட வேண்டும்?
9 யாருமே கவனிக்காவிட்டால்கூட சந்தோஷமாக சேவை செய்யுங்கள். நாம் மற்றவர்களுக்காகச் செய்ய நினைக்கிற அன்பான செயல்கள் யாருக்குமே தெரியப்போவதில்லை என்றாலும், நாம் அவற்றைச் செய்ய வேண்டும். (மத்தேயு 6:1-4-ஐ வாசியுங்கள்.) ஆனால், அனனியாவும் சப்பீராளும் அதற்கு நேர்மாறாக நடந்துகொண்டார்கள். தாங்கள் நன்கொடை கொடுப்பது எல்லாருக்கும் தெரிய வேண்டுமென்று நினைத்தார்கள். உண்மையில் எவ்வளவு நன்கொடை கொடுத்தார்கள் என்பதை மறைத்து, பொய் சொன்னார்கள். அப்படி வெளிவேஷம் போட்டதற்காகத் தண்டிக்கப்பட்டார்கள். (அப். 5:1-10) நம்முடைய சகோதரர்களை நாம் உண்மையிலேயே நேசித்தால், சந்தோஷமாக அவர்களுக்கு உதவி செய்வோம்; அது மற்றவர்களுக்குத் தெரிய வேண்டுமென்று நினைக்க மாட்டோம். ஆன்மீக உணவு தயாரிக்க ஆளும் குழுவுக்கு உதவி செய்யும் சகோதரர்கள் இந்த விஷயத்தில் நமக்கு முன்மாதிரியாக இருக்கிறார்கள். அவர்கள் தங்களுக்குப் புகழ் தேடுவதில்லை; எதையெல்லாம் தயாரிக்க அவர்கள் உதவினார்கள் என்று மற்றவர்களுக்குச் சொல்வதில்லை.
10. நாம் எப்படி மற்றவர்களுக்கு மதிப்புக் காட்டலாம்?
10 மற்றவர்களுக்கு மதிப்புக் கொடுங்கள். (ரோமர் 12:10-ஐ வாசியுங்கள்.) இயேசு தன்னுடைய அப்போஸ்தலர்களின் பாதங்களைக் கழுவியபோது அவர்களுக்கு மதிப்புக் காட்டினார். (யோவா. 13:3-5, 12-15) இயேசுவைப் போல் மனத்தாழ்மையாக இருப்பதற்கும் மற்றவர்களுக்குச் சேவை செய்வதற்கும் நாம் கடினமாக உழைக்க வேண்டும். இயேசு செய்ததை அப்போஸ்தலர்கள் பிற்பாடுதான் புரிந்துகொண்டார்கள்; அதாவது, கடவுளுடைய சக்தி கிடைத்தபோதுதான் புரிந்துகொண்டார்கள். (யோவா. 13:7) நாம் எப்படி மற்றவர்களுக்கு மதிப்புக் காட்டலாம்? நாம் மற்றவர்களைவிட அதிகம் படித்திருந்தாலும், பணக்காரர்களாக இருந்தாலும், விசேஷ நியமிப்புகளைப் பெற்றிருந்தாலும், நம்மை உயர்வாக நினைக்கக் கூடாது. (ரோ. 12:3) அதோடு, மற்றவர்களுக்குப் பாராட்டு கிடைக்கும்போது நாம் பொறாமைப்படக் கூடாது. நமக்கும் பாராட்டு கிடைத்திருக்க வேண்டும் என்று நினைத்தால்கூட, அவர்களோடு சேர்ந்து நாம் சந்தோஷப்பட வேண்டும்.
11. நாம் ஏன் மனப்பூர்வமாகப் பாராட்ட வேண்டும்?
11 மனப்பூர்வமாகப் பாராட்டுங்கள். மற்றவர்களைப் பாராட்ட வாய்ப்புகளைத் தேடுங்கள். பாராட்டுவது மற்றவர்களை ‘பலப்படுத்தும்’ என்று நம் எல்லாருக்கும் தெரியும். (எபே. 4:29) ஆனால், நாம் மனப்பூர்வமாகப் பாராட்ட வேண்டும்; போலியாகப் புகழக் கூடாது. வெறுமனே வாயளவில் எதையாவது சொல்லக் கூடாது. அதேசமயத்தில், தேவையான ஆலோசனையைக் கொடுக்கும் பொறுப்பைத் தட்டிக்கழிக்கக் கூடாது. (நீதி. 29:5) ஒருவருடைய முகத்துக்கு நேராக அவரைப் புகழ்ந்து பேசிவிட்டு, பிறகு அவருடைய முதுகுக்குப் பின்னால் மோசமாகப் பேசினால், நாம் வெளிவேஷக்காரர்களாக இருப்போம். அப்போஸ்தலன் பவுல் உண்மையான அன்பைக் காட்டினார். கொரிந்துவில் இருந்த கிறிஸ்தவர்களுக்குக் கடிதம் எழுதியபோது, அவர்கள் செய்த நல்ல காரியங்களுக்காக அவர்களைப் பாராட்டினார். (1 கொ. 11:2) ஆனால், அவர்களுக்கு அறிவுரை தேவைப்பட்டபோது, அதற்கான காரணத்தை அன்பாகவும் தெளிவாகவும் விளக்கிச் சொன்னார்.—1 கொ. 11:20-22.
12. உபசரிக்கும்போது நாம் எப்படி உண்மையான அன்பைக் காட்டலாம்?
12 உபசரிக்கும் குணத்தைக் காட்டுங்கள். நம் சகோதர சகோதரிகளிடம் தாராள மனப்பான்மையைக் காட்ட வேண்டுமென்று யெகோவா கட்டளை கொடுத்திருக்கிறார். (1 யோவான் 3:17-ஐ வாசியுங்கள்.) ஆனால், நம்முடைய உள்நோக்கம் சரியாக இருக்க வேண்டும். அதனால், நம்மையே இப்படிக் கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘என்னோட நெருங்கிய நண்பர்களயும் சபையில யார முக்கியமானவங்களா நினைக்கிறேனோ அவங்களயும் மட்டும்தான் நான் வீட்டுக்கு கூப்பிடறேனா? யார் எனக்கு திருப்பி செய்வாங்களோ அவங்கள மட்டும் கூப்பிடறேனா? இல்லன்னா, எனக்கு ரொம்ப பழக்கம் இல்லாதவங்க கிட்டயும், எனக்கு திருப்பி செய்ய முடியாதவங்க கிட்டயும் தாராள குணத்த காட்டறேனா?’ (லூக். 14:12-14) இப்போது, இந்தச் சூழ்நிலைகளைக் கற்பனை செய்து பாருங்கள்: ஏதோவொரு தவறான தீர்மானம் எடுத்துவிட்ட சகோதரருக்கு உதவி தேவைப்பட்டால் என்ன செய்வீர்கள்? அல்லது, நீங்கள் வீட்டுக்கு அழைத்து உபசரித்த யாராவது உங்களுக்கு நன்றியே சொல்லவில்லை என்றால் என்ன செய்வீர்கள்? “முணுமுணுக்காமல் ஒருவரை ஒருவர் உபசரியுங்கள்” என்று யெகோவா நம்மிடம் சொல்கிறார். (1 பே. 4:9) சரியான உள்நோக்கத்தோடு மற்றவர்களுக்குக் கொடுக்கும்போது நாம் சந்தோஷமாக இருப்போம்.—அப். 20:35.
13. (அ) நமக்கு எப்போது அதிக பொறுமை தேவை? (ஆ) பலவீனமாக இருப்பவர்களுக்கு நாம் எப்படி உதவி செய்யலாம்?
13 பலவீனமாக இருப்பவர்களுக்கு உதவி செய்யுங்கள். “பலவீனமாக இருப்பவர்களுக்கு ஆதரவு கொடுங்கள், எல்லாரிடமும் பொறுமையாக இருங்கள்” என்ற பைபிளின் கட்டளைக்கு நாம் கீழ்ப்படியும்போதுதான் நம் அன்பு உண்மையானது என்று சொல்ல முடியும். (1 தெ. 5:14) முன்பு பலவீனமாக இருந்த நிறைய சகோதரர்கள், இப்போது விசுவாசத்தில் பலமானவர்களாக இருக்கிறார்கள். ஆனால், வேறு சில சகோதரர்களுக்கு நாம் தொடர்ந்து பொறுமையோடும் அன்போடும் உதவி செய்ய வேண்டியிருக்கிறது. அதை எப்படிச் செய்யலாம்? பைபிளைப் பயன்படுத்தி அவர்களை உற்சாகப்படுத்தலாம், நம்மோடு ஊழியம் செய்ய அவர்களைக் கூப்பிடலாம். சிலசமயங்களில், அவர்கள் பேசுவதைக் கேட்பதே அவர்களுக்கு உதவி செய்வதாக இருக்கும். நம்முடைய சகோதர சகோதரிகளை “பலமானவர்கள்” அல்லது “பலவீனமானவர்கள்” என்று முத்திரை குத்தாமல் இருக்க வேண்டும். நம் எல்லாருக்குமே பலங்களும் பலவீனங்களும் இருப்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அப்போஸ்தலன் பவுல்கூட, தனக்குப் பலவீனங்கள் இருந்ததை ஒத்துக்கொண்டார். (2 கொ. 12:9, 10) நம் எல்லாருக்குமே மற்றவர்களிடமிருந்து உதவியும் உற்சாகமும் தேவை.
14. சகோதரர்களோடு சமாதானமாக இருப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
14 சமாதானம் பண்ணுங்கள். நம் சகோதரர்களோடு சமாதானமாக இருப்பது ரொம்ப ரொம்ப முக்கியம். நம்மை யாராவது தவறாகப் புரிந்துகொண்டதாகவோ நம்மிடம் அநியாயமாக நடந்துகொண்டதாகவோ நாம் நினைத்தால்கூட, சமாதானமாகப் போவதற்குத்தான் முழுமுயற்சி எடுக்க வேண்டும். (ரோமர் 12:17, 18-ஐ வாசியுங்கள்.) நாம் யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால், மன்னிப்புக் கேட்க வேண்டியிருக்கலாம். ஆனால், அதை மனப்பூர்வமாகக் கேட்க வேண்டும். உதாரணத்துக்கு, “நான் சொன்னத நீங்க தப்பா புரிஞ்சுகிட்டீங்கனு நெனைக்கிறேன், மன்னிச்சிடுங்க” என்று சொல்வதற்குப் பதிலாக, நம்மேல் தப்பு இருப்பதை ஒத்துக்கொண்டு, “உங்க மனச நோகடிக்கற மாதிரி பேசிட்டேன், மன்னிச்சிடுங்க” என்று சொல்வது நல்லது. தம்பதிகள் சமாதானமாக இருப்பது ரொம்பவே முக்கியம். அன்பாக இருப்பதுபோல் மற்றவர்களுக்கு முன்னால் காட்டிக்கொண்டு, தனியாக இருக்கும்போது எதுவும் பேசாமல் உம்மென்று இருப்பதோ, புண்படுத்தும் விதத்தில் பேசுவதோ, அடித்து உதைப்பதோ தவறு.
15. மனதார மன்னிக்கிறோம் என்பதை நாம் எப்படிக் காட்டலாம்?
15 தாராளமாக மன்னியுங்கள். யாராவது நம்மைப் புண்படுத்திவிட்டால், அவர்மேல் மனக்கசப்பை வளர்த்துக்கொள்ளாமல் அவரை மன்னிக்க வேண்டும். நம்மைப் புண்படுத்திவிட்டதை அவர் உணரவில்லை என்றாலும் நாம் அவரை மன்னிக்க வேண்டும். ‘அன்பினால் ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொண்டு, கடவுளுடைய சக்தி தருகிற ஒற்றுமையைக் காத்துக்கொள்வதற்கும் சமாதானமாக வாழ்வதற்கும் ஊக்கமாக முயற்சி செய்யும்போது’ நாம் தாராளமாக மன்னிக்கிறவர்களாக இருப்போம். (எபே. 4:2, 3) நாம் மனதார மன்னிக்க வேண்டுமென்றால், அவர் செய்ததைப் பற்றியே நினைத்துக்கொண்டு இருக்கக் கூடாது. ஏனென்றால், அன்பு “தீங்கை கணக்கு வைக்காது.” (1 கொ. 13:4, 5) நாம் வன்மம் வைத்துக்கொண்டால், நம் சகோதரரோடு அல்லது சகோதரியோடு உள்ள பந்தத்தை இழந்துவிடுவோம்; யெகோவாவோடு உள்ள பந்தத்தையும் இழந்துவிடுவோம். (மத். 6:14, 15) நம்மைப் புண்படுத்தியவருக்காக நாம் ஜெபம் செய்யும்போது, அவரை உண்மையிலேயே மன்னிப்பதைக் காட்டுகிறோம்.—லூக். 6:27, 28.
16. யெகோவாவின் சேவையில் கிடைக்கும் விசேஷ நியமிப்புகளைப் பற்றி நாம் எப்படி உணர வேண்டும்?
16 சொந்த சௌகரியங்களை விட்டுக்கொடுங்கள். யெகோவாவின் சேவையில் நமக்கு ஒரு விசேஷ நியமிப்புக் கிடைக்கும்போது, ‘நமக்குப் பிரயோஜனமானதைத் தேடாமல், மற்றவர்களுக்குப் பிரயோஜனமானதையே தேட’ வேண்டும்; அப்போதுதான், நம்முடைய அன்பு உண்மையானது என்பதைக் காட்டுவோம். (1 கொ. 10:24) உதாரணத்துக்கு, மாநாடுகள் நடக்கும் மன்றங்களுக்கு முதலில் அட்டெண்டன்டுகள்தான் போகிறார்கள். அதனால், தங்களுக்கும் தங்கள் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும் நல்ல இருக்கைகளைப் பிடித்துவைக்க அவர்கள் நினைக்கலாம். ஆனால், அவர்களில் நிறையப் பேர் அந்தளவுக்கு சௌகரியமாக இல்லாத இருக்கைகளைத் தங்களுக்கு நியமிக்கப்பட்ட பகுதியிலேயே தேர்ந்தெடுக்கிறார்கள். இப்படி, சுயநலமில்லாத அன்பைக் காட்டுகிறார்கள். அவர்களுடைய நல்ல முன்மாதிரியை நீங்கள் எப்படிப் பின்பற்றலாம்?
17. ஒரு கிறிஸ்தவர் ஏதோவொரு பெரிய பாவத்தைச் செய்துவிட்டால், என்ன செய்ய உண்மையான அன்பு அவரைத் தூண்டும்?
17 ரகசியமாகப் பாவம் செய்வதை ஒத்துக்கொள்ளுங்கள், அதை நிறுத்துங்கள். சில கிறிஸ்தவர்கள் பெரிய பாவத்தைச் செய்துவிட்டு அதை மறைக்கப் பார்க்கிறார்கள். ஒருவேளை, அதைச் சொல்ல அவர்கள் தர்மசங்கடப்படலாம் அல்லது மற்றவர்களுக்கு ஏமாற்றமளிக்க விரும்பாமல் இருக்கலாம். (நீதி. 28:13) ஆனால், பாவத்தை மறைப்பது அன்பில்லாத செயல்; ஏனென்றால், பாவம் செய்தவருக்கும் சரி, மற்றவர்களுக்கும் சரி, அதனால் மோசமான விளைவுகள்தான் ஏற்படும். எப்படி? யெகோவா தன்னுடைய சக்தியைக் கொடுத்து சபையை ஆசீர்வதிப்பதை நிறுத்திவிடலாம்; சபையில் சமாதானமும் இல்லாமல் போய்விடலாம். (எபே. 4:30) அதனால், ஒரு கிறிஸ்தவர் ஏதோவொரு பெரிய பாவத்தைச் செய்துவிட்டால், மூப்பர்களிடம் பேசி தேவையான உதவியைப் பெறுவதற்கு உண்மையான அன்பு அவரைத் தூண்டும்.—யாக். 5:14, 15.
18. உண்மையான அன்பைக் காட்டுவது ஏன் முக்கியம்?
18 அன்புதான் தலைசிறந்த குணம். (1 கொ. 13:13) இயேசுவின் உண்மையான சீஷர்கள் யார்... அன்பின் பிறப்பிடமாகிய யெகோவாவை உண்மையிலேயே பின்பற்றுகிறவர்கள் யார்... என்பதைப் புரிந்துகொள்ள அது மக்களுக்கு உதவுகிறது. (எபே. 5:1, 2) தனக்கு அன்பு இல்லையென்றால் தான் ஒன்றுமே இல்லை என்று பவுல் சொன்னார். (1 கொ. 13:2) அதனால், நாம் ஒவ்வொருவரும் “சொல்லில் மட்டுமல்ல,” ‘செயலிலும் உண்மை மனதோடும்’ தொடர்ந்து அன்பு காட்ட தீர்மானமாக இருக்க வேண்டும்.