கதை 111
தூங்கிவிட்ட ஒரு பையன்
ஐயோ! அங்கே என்ன நடந்துகொண்டிருக்கிறது? கீழே விழுந்து கிடக்கிற அந்தப் பையனுக்கு ரொம்பவும் அடிபட்டிருக்கிறதா? இதோ பார்! வீட்டுக்குள்ளிருந்து நிறைய பேர் வந்துகொண்டிருக்கிறார்கள், அவர்களோடு பவுல் இருக்கிறார்! தீமோத்தேயுவும் அங்கு இருக்கிறார், தெரிகிறதா? அந்தப் பையன் ஜன்னலிலிருந்து தவறி கீழே விழுந்துவிட்டானா?
ஆமாம், அதுதான் நடந்திருக்கிறது. பவுல் இங்கே துரோவாவிலுள்ள சீஷர்களுக்கு ஒரு பேச்சு கொடுத்துக் கொண்டிருந்தார். அடுத்த நாள் அவர்களையெல்லாம் விட்டு அவர் கப்பலேறிப் போக வேண்டியிருந்தது. எனவே ரொம்ப நாள் கழித்துத்தான் மறுபடியும் அவர்களைப் பார்க்க முடியுமென்பதால் நள்ளிரவு வரை அவர் பேசிக்கொண்டே இருந்தார்.
ஐத்திகு என்ற இந்தப் பையன் ஜன்னலில் உட்கார்ந்தபடியே தூங்கிவிட்டான். தூக்கத்தில் மூன்றாம் மாடியிலிருந்து கீழே விழுந்துவிட்டான். அதனால்தான் அவர்கள் முகத்தில் அவ்வளவு கவலை தெரிகிறது. அவனுக்கு என்ன நடந்திருக்கும் என்று பயப்பட்டார்களோ அதுவே நடந்துவிட்டது. ஆம், அவர்கள் அந்தப் பையனைத் தூக்குகிறபோது அவன் செத்துப்போயிருந்தான்!
பையன் செத்து விட்டான் என்று பவுல் கண்டபோது அவர் அந்தப் பையன் மேல் படுத்து அவனை அணைத்துக் கொள்கிறார். பிறகு, ‘கவலைப்படாதீர்கள், அவன் நன்றாய் இருக்கிறான்!’ என்று சொல்கிறார். அவர் சொன்னது போலவே அவன் உயிரோடு இருக்கிறான்! இது ஓர் அற்புதம்! பவுல் அவனைத் திரும்ப உயிருக்குக் கொண்டு வந்திருக்கிறார்! அங்கிருந்தவர்களுக்கு ஒரே சந்தோஷமாகி விடுகிறது.
அவர்கள் எல்லோரும் மறுபடியுமாக மேல் மாடிக்குப் போய் சாப்பிடுகிறார்கள். பொழுது விடியும் வரை பவுல் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால், இந்த முறை ஐத்திகு தூங்கிவிடவில்லை! பிறகு பவுலும், தீமோத்தேயுவும், அவர்களோடு இருப்பவர்களும் படகில் ஏறுகிறார்கள். அவர்கள் எங்கே போகிறார்களென்று உனக்குத் தெரியுமா?
பவுல் இப்போது தன் மூன்றாவது ஊழியப் பயணத்தை முடித்துவிட்டு, வீடு திரும்பிக் கொண்டிருக்கிறார். இந்த ஊழியப் பயணத்தின்போது பவுல் எபேசுவில் மாத்திரமே மூன்று வருஷங்கள் தங்கியிருந்தார். அதனால் அந்தப் பயணம்தான் அவருடைய இரண்டாவது பயணத்தைவிட நீண்டது என சொல்லலாம்.
துரோவாவை விட்ட பின்பு, அந்தக் கப்பல் மிலேத்துவில் கொஞ்ச நேரம் நிற்கிறது. எபேசு பட்டணம் சில மைல் தூரத்தில்தான் இருப்பதால், அந்தச் சபையிலுள்ள மூப்பர்களிடம் கடைசி தடவையாக பேசுவதற்கு அவர்களை மிலேத்துவுக்கு வரச்சொல்லி பவுல் ஆள் அனுப்புகிறார், அவர்களும் அங்கு வருகிறார்கள். அதன் பிறகு, கப்பல் புறப்படுவதற்கான சமயம் வருகிறது, பவுல் அங்கிருந்து போவதைப் பார்த்து அவர்கள் எல்லோருக்கும் எவ்வளவு வேதனை!
கடைசியில் அந்தக் கப்பல் செசரியாவுக்குப் போய்ச் சேருகிறது. பவுல் இங்கே சீஷனாகிய பிலிப்புவின் வீட்டில் தங்கியிருக்கிறார். அப்போது அகபு என்ற ஒரு தீர்க்கதரிசி பவுலை எச்சரிக்கிறார். அதாவது, பவுல் எருசலேமுக்குப் போகும்போது அங்கே அவர் கைது செய்யப்படுவார் என்று எச்சரிக்கிறார். அவர் சொன்னது போலவே நடக்கிறது. செசரியாவில் இரண்டு வருஷங்கள் பவுல் சிறையில் இருக்கிறார், பிறகு, ரோம ஆட்சியாளன் இராயனுக்கு முன் விசாரணை செய்யப்படுவதற்காக ரோமாபுரிக்கு அனுப்பப்படுகிறார். ரோமாபுரிக்குப் போகிற வழியில் என்ன நடக்கிறதென்று நாம் பார்க்கலாம்.
அப்போஸ்தலர் 19-26 அதிகாரங்கள்.