யெகோவா கொடுத்த பரிசுக்கு நன்றி காட்டுங்கள்
“வார்த்தைகளால் விவரிக்க முடியாத அன்பளிப்பைக் கொடுக்கிற கடவுளுக்கு நன்றி.”—2 கொ. 9:15.
1, 2. (அ) ‘வார்த்தைகளால் விவரிக்க முடியாத அன்பளிப்பு’ எதைக் குறிக்கிறது? (ஆ) இந்தக் கட்டுரையில் என்ன கேள்விகளுக்குப் பதில் தெரிந்துகொள்ளப் போகிறோம்?
யெகோவா நமக்காக அவருடைய ஒரே மகனையே பூமிக்கு அனுப்பினார். அவர் நம்மீது எந்தளவு அன்பு வைத்திருக்கிறார் என்று இதிலிருந்து தெரிகிறது. இது அவர் நமக்குக் கொடுத்த மிகப் பெரிய பரிசு! (யோவா. 3:16; 1 யோ. 4:9, 10) இந்தப் பரிசை, ‘வார்த்தைகளால் விவரிக்க முடியாத அன்பளிப்பு’ என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னார். (2 கொ. 9:15) அவர் ஏன் அப்படிச் சொன்னார்?
2 யெகோவா கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம் நிச்சயம் நிறைவேறும் என்று நம்புவதற்கு இயேசுவின் பலி அத்தாட்சி அளிக்கிறது. (2 கொரிந்தியர் 1:20-ஐ வாசியுங்கள்.) ‘வார்த்தைகளால் விவரிக்க முடியாத அன்பளிப்பு’ என்பது இயேசுவின் பலியையும் யெகோவா நமக்கு கொடுக்கிற எல்லா ஆசீர்வாதங்களையும் குறிக்கிறது. அந்தப் பரிசை நம்மால் விவரிக்கவே முடியாது. அந்தப் பரிசைப் பற்றி நினைத்துப் பார்க்கும்போது நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்? மார்ச் 23, 2016 புதன்கிழமை அன்று நடக்கும் இயேசுவின் நினைவுநாள் நிகழ்ச்சிக்குத் தயாராக அந்தப் பரிசு நமக்கு எப்படி உதவும்?
கடவுளின் விசேஷ பரிசு
3, 4. (அ) உங்களுக்கு யாராவது பரிசு கொடுத்தால் எப்படி உணர்வீர்கள்? (ஆ) சில பரிசுகள் உங்கள் வாழ்க்கையை எப்படி மாற்றிவிடலாம்?
3 நமக்கு யாராவது பரிசு கொடுக்கும்போது எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்! சில பரிசுகள் நமக்கு ரொம்ப விசேஷமாக இருக்கலாம், நம் வாழ்க்கையை மாற்றிவிடலாம். உதாரணத்துக்கு, நீங்கள் ஒரு பெரிய தவறு செய்ததால் உங்களுக்கு மரண தண்டனை கிடைக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்போது திடீரென்று ஒருவர் வந்து, உங்களுக்குப் பதிலாக அவர் அந்த மரண தண்டனையை ஏற்றுக்கொள்வதாகச் சொல்கிறார். அதைக் கேட்கும்போது உங்களுக்கு எப்படி இருக்கும்? அதுதான் உங்கள் வாழ்க்கையில் கிடைத்த மிகப் பெரிய பரிசாக இருக்கும் இல்லையா!
4 அந்த நபர் செய்த தியாகத்தை யோசித்துப் பார்க்கும்போது உங்கள் வாழ்க்கையில் நிறைய மாற்றங்களைச் செய்ய விரும்புவீர்கள். ஒருவேளை நீங்கள் ரொம்ப அன்பானவராக, மன்னிக்கிறவராக, தாராள குணமுள்ளவராக மாறவும் நினைப்பீர்கள். நீங்கள் உயிரோடு இருக்கும்வரை அவரை மறக்கவே மாட்டீர்கள், அவருக்கு நன்றியோடு இருப்பீர்கள்.
5. மீட்கும் பலி விலைமதிக்க முடியாத பரிசு என்று எப்படிச் சொல்லலாம்?
5 இந்த உதாரணத்தில் பார்த்த பரிசைவிட யெகோவா கொடுத்த மீட்புப் பலி என்ற பரிசு விலைமதிக்க முடியாதது. (1 பே. 3:18) இதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்: ஆதாமினால் நம் எல்லாருக்கும் பாவமும் மரணமும் வந்தது. (ரோ. 5:12) ஆனால், யெகோவாவுக்கு மனிதர்கள்மீது அன்பு இருந்ததால்தான் “ஒவ்வொரு மனிதனுக்காகவும் மரணமடையும்படி” இயேசுவை பூமிக்கு அனுப்பினார். (எபி. 2:9) இயேசுவின் பலியினால் நமக்கு நிறைய ஆசீர்வாதங்கள் கிடைக்கப்போகிறது. முக்கியமாக, மரணமே இல்லாத வாழ்க்கை கிடைக்கப்போகிறது. (ஏசா. 25:7, 8; 1 கொ. 15:22, 26) இயேசுவின் பலியில் விசுவாசம் வைக்கிற எல்லாரும் சந்தோஷமாக வாழ்வார்கள். பரலோகத்தில் வாழ்கிற நம்பிக்கை உள்ளவர்கள் ராஜாக்களாக இருப்பார்கள், மற்றவர்கள் பூமியில் சமாதானமாக வாழ்வார்கள். (ரோ. 6:23; வெளி. 5:9, 10) யெகோவா கொடுத்த பரிசினால் நமக்கு வேறென்ன ஆசீர்வாதங்கள் கிடைக்கப்போகிறது?
6. (அ) யெகோவா கொடுக்கப்போகும் எந்த ஆசீர்வாதத்தைப் பார்க்க நீங்கள் ஆசையாக இருக்கிறீர்கள்? (ஆ) யெகோவா கொடுத்த பரிசு என்ன செய்ய நம்மைத் தூண்டுகிறது?
6 யெகோவா கொடுத்த பரிசினால் நம் வியாதிகள் எல்லாம் குணமாகும், முழு பூமியும் அழகான தோட்டமாக மாறும், இறந்தவர்களையும் திரும்ப உயிரோடு பார்க்க முடியும். (ஏசா. 33:24; 35:5, 6; யோவா. 5:28, 29) “வார்த்தைகளால் விவரிக்க முடியாத” இந்தப் பரிசைக் கொடுக்கப்போகும் யெகோவாவையும் அவருடைய மகனையும் நாம் உயிருக்கு உயிராக நேசிக்கிறோம். இந்தப் பரிசு நம்மை என்ன செய்ய தூண்டுகிறது? (1) இயேசுவைப் போல் நடந்துகொள்ளவும் (2) நம் சகோதர சகோதரிகள்மீது அன்பு காட்டவும் (3) மற்றவர்களை மனதார மன்னிக்கவும் நம்மைத் தூண்டுகிறது.
“கிறிஸ்துவின் அன்பு எங்களைத் தூண்டியெழுப்புகிறது”
7, 8. நாம் என்ன செய்ய விரும்ப வேண்டும், அதை நாம் எப்படிச் செயலில் காட்டுவோம்?
7 முதலாவதாக, இயேசுவுக்காக வாழ நாம் விரும்ப வேண்டும். “கிறிஸ்துவின் அன்பு எங்களைத் தூண்டியெழுப்புகிறது” என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னார். (2 கொரிந்தியர் 5:14, 15-ஐ வாசியுங்கள்.) இயேசுவின் அன்பைப் புரிந்துகொண்டால்தான் அவருக்காக வாழ வேண்டும் என்ற ஆசை நமக்கு வரும் என்பது பவுலுக்கு தெரியும். அப்படியென்றால், யெகோவா நமக்காக செய்திருக்கிற எல்லாவற்றையும் நாம் ஆழமாக யோசித்துப் பார்க்கும்போது அவர்மேல் இருக்கும் அன்பு அதிகமாகும்; இயேசுவுக்காக வாழ நாம் தூண்டப்படுவோம். அதை நாம் எப்படிச் செயலில் காட்டுவோம்?
8 யெகோவாமீது இருக்கும் அன்பு இயேசுவுடைய ‘அடிச்சுவடுகளை நெருக்கமாகப் பின்பற்ற’ நம்மைத் தூண்டும். (1 பே. 2:21; 1 யோ. 2:6) யெகோவாவுக்கும் இயேசுவுக்கும் கீழ்ப்படிந்து நடக்கும்போது நாம் அவர்களை நேசிக்கிறோம் என்பதைக் காட்டுகிறோம். “என் கட்டளைகளை ஏற்றுக்கொண்டு அவற்றைக் கடைப்பிடிப்பவனே என்மீது அன்பு காட்டுகிறான். என்மீது அன்பு காட்டுகிறவனிடம் என் தகப்பனும் அன்பு காட்டுவார், நானும் அவன்மீது அன்பு காட்டி என்னை அவனுக்கு வெளிப்படுத்துவேன்” என்று இயேசு சொன்னார்.—யோவா. 14:21; 1 யோ. 5:3.
9. என்ன செய்ய மற்றவர்கள் நம்மை வற்புறுத்தலாம்?
9 நாம் வாழும் விதத்தைப் பற்றி நினைவுநாள் சமயத்தில் ஆழமாக யோசித்துப் பார்ப்பது நல்லது. அதனால், உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘வாழ்க்கையில என்னென்ன விஷயங்கள்ல நான் இயேசுவை போல நடக்குறேன்? இன்னும் எந்த விஷயங்கள்ல நான் முன்னேறணும்?’ இந்தக் கேள்விகளைக் கேட்டுக்கொள்வது நல்லது. ஏனென்றால், உலக மக்கள் அவர்களுக்குப் பிடித்த விதத்தில் வாழ நம்மை வற்புறுத்தலாம். (ரோ. 12:2) நாம் கவனமாக இல்லையென்றால் உலகத்தில் இருக்கும் பிரபலங்களை, தத்துவஞானிகளை, விளையாட்டு வீரர்களைப் போல் வாழ ஆரம்பித்துவிடுவோம். (கொலோ. 2:8; 1 யோ. 2:15-17) உலக மக்களுக்கு பிடித்த மாதிரி வாழாமல் இருக்க நாம் என்ன செய்யலாம்?
10. இந்த வருஷம் நினைவுநாள் சமயத்தில் நம்மையே என்ன கேள்விகள் கேட்டுக்கொள்ளலாம், அதற்கான பதில்கள் என்ன செய்ய நம்மைத் தூண்டும்? (ஆரம்பப் படம்)
10 நாம் போடும் துணிமணிகள், பார்க்கும் படங்கள், கேட்கும் பாடல்களைப் பற்றி நினைவுநாள் சமயத்தில் யோசித்துப் பார்ப்பது நல்லது. நம்முடைய கம்ப்யூட்டரில், செல்ஃபோனில், டேப்லெட்டில் எப்படிப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன என்று பார்ப்பதும் நல்லது. உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘ஒருவேளை நான் போற ஒரு நிகழ்ச்சிக்கு இயேசுவும் வந்தார்னா நான் போட்டிருக்க துணியை பார்த்து அவர் என்ன நினைப்பார்? (1 தீமோத்தேயு 2:9, 10-ஐ வாசியுங்கள்.) ‘நான் போட்டிருக்க துணியை பார்த்து என்னை ஒரு கிறிஸ்தவர்னு மத்தவங்க சொல்வாங்களா? நான் பார்க்குற படத்தை இயேசுவும் என்கூட சேர்ந்து பார்க்க விரும்புவாரா? நான் கேட்குற பாட்டு இயேசுவுக்கும் பிடிக்குமா? என்னோட செல்ஃபோனை இல்லன்னா டேப்லெட்டை இயேசு வாங்கி பார்த்தார்னா என்னை பத்தி என்ன நினைப்பார்? நான் விளையாடுற வீடியோ கேம்ஸ் பத்தி இயேசு கேட்டா நான் என்ன சொல்வேன்?’ யெகோவாமீது நமக்கு அன்பு இருந்தால் கிறிஸ்தவர்களுக்கு பொருத்தமில்லாத எதையும் தூக்கியெறிய நாம் தயாராக இருப்போம், அது எவ்வளவு விலையாக இருந்தாலும் சரி! (அப். 19:19, 20) நம்மை அர்ப்பணித்தபோது, இனி நமக்காக வாழாமல் இயேசுவுக்காக வாழ்வோம் என்று வாக்குக் கொடுத்தோம். எனவே, இயேசுவைப் பின்பற்றுவதற்கு தடையாக இருக்கும் எதையும் தூக்கியெறிய நாம் தயாராக இருப்போம்.—மத். 5:29, 30; பிலி. 4:8.
11. (அ) யெகோவாமீதும் இயேசுமீதும் இருக்கிற அன்பு ஊழியத்தை எப்படிச் செய்ய நம்மைத் தூண்டுகிறது? (ஆ) சபையில் இருக்கிற மற்றவர்களுக்கு உதவ அந்த அன்பு எப்படி நம்மைத் தூண்டுகிறது?
11 ஆர்வமாக பிரசங்கிக்கவும் கற்பிக்கவும் இயேசுமீது இருக்கும் அன்பு நம்மைத் தூண்டும். (மத். 28:19, 20; லூக். 4:43) நினைவுநாள் சமயத்தில் உங்களால் துணை பயனியர் ஊழியம் (30 அல்லது 50 மணிநேரம்) செய்ய முடியுமா? அதற்காக உங்களுடைய தினசரி வேலைகளில் சில மாற்றங்களைச் செய்ய முடியுமா? மனைவியை இழந்த 84 வயது சகோதரர், உடல்நல பிரச்சினையினால் துணை பயனியர் ஊழியம் செய்ய முடியாது என்று நினைத்தார். ஆனால், அவர் வீட்டுக்குப் பக்கத்திலிருந்த பயனியர்கள் அவருக்கு உதவ ஆசைப்பட்டார்கள். அந்த வயதான சகோதரர் 30 மணிநேரம் ஊழியம் செய்து முடிப்பதற்காக அவருக்கு வசதியாக இருந்த ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்தார்கள்; அவர்களுடைய வண்டியிலேயே அவரை அழைத்துக்கொண்டு போனார்கள். உங்கள் சபையில் இருக்கிற யாருக்காவது மார்ச், ஏப்ரல் மாதங்களில் துணை பயனியர் ஊழியம் செய்ய உங்களால் உதவ முடியுமா? நம் எல்லாராலும் பயனியர் செய்ய முடியவில்லை என்றாலும் நம் நேரத்தையும் சக்தியையும் யெகோவாவுக்காகக் கொடுக்க முடியும். அப்படிச் செய்தால் பவுலைப் போலவே நாமும், கிறிஸ்துவின் அன்பினால் தூண்டியெழுப்பப்படுகிறோம் என்று சொல்லலாம். கடவுள் காட்டிய அன்பு வேறென்ன செய்ய நம்மைத் தூண்டுகிறது?
ஒருவருக்கொருவர் அன்பு காட்டக் கடமைப்பட்டிருக்கிறோம்
12. கடவுள் நம்மீது காட்டிய அன்பு என்ன செய்ய நம்மைத் தூண்ட வேண்டும்?
12 இரண்டாவதாக, யெகோவா நம்மீது அன்பு காட்டியதால் நாமும் சகோதர சகோதரிகள்மீது அன்பு காட்ட தூண்டப்படுகிறோம். “அன்புக் கண்மணிகளே, இவ்விதத்தில் கடவுள் நம்மீது அன்பு காட்டினார் என்றால், நாமும் ஒருவருக்கொருவர் அன்பு காட்டக் கடமைப்பட்டிருக்கிறோம்” என்று அப்போஸ்தலன் யோவான் சொன்னார். (1 யோ. 4:7-11) சகோதரர்கள்மீது நாம் அன்பு காட்டவில்லை என்றால் யெகோவாவும் நம்மீது அன்பு காட்டுவார் என்று எதிர்பார்க்க முடியாது. (1 யோ. 3:16) அப்படியென்றால், நம் சகோதரர்கள்மீது எப்படியெல்லாம் அன்பு காட்டலாம்?
13. மற்றவர்கள்மீது அன்பு காட்டுவதில் இயேசு எப்படி சிறந்த உதாரணமாக இருக்கிறார்?
13 மற்றவர்கள்மீது எப்படி அன்பு காட்டுவது என்று இயேசுவின் உதாரணத்திலிருந்து தெரிந்துகொள்ளலாம். இயேசு பூமியில் இருந்தபோது மக்களுக்கு உதவி செய்தார், முக்கியமாக கஷ்டத்தில் இருந்தவர்களுக்கு உதவி செய்தார்; வியாதிப்பட்டவர்களை, ஊனமாக இருந்தவர்களை, கண் தெரியாதவர்களை, காது கேட்காதவர்களை, பேச முடியாதவர்களைக் குணப்படுத்தினார். (மத். 11:4, 5) இயேசு, யூத மதத் தலைவர்களைப் போல் இல்லை; கடவுளைப் பற்றி தெரிந்துகொள்ள ஆசைப்பட்டவர்களுக்கு அவர் சந்தோஷமாகச் சொல்லிக்கொடுத்தார். (யோவா. 7:49) மனத்தாழ்மையான மக்களை அவர் நேசித்தார், அவர்களுக்கு சேவை செய்வதற்காகக் கடினமாக உழைத்தார்.—மத். 20:28.
14. சகோதரர்கள்மீது அன்பு காட்ட நீங்கள் என்னவெல்லாம் செய்யலாம்?
14 நினைவுநாள் சமயத்தில், சபையில் இருக்கும் சகோதர சகோதரிகளுக்கு, முக்கியமாக வயதானவர்களுக்கு, எப்படி உதவி செய்யலாம் என்று நாம் யோசித்துப் பார்க்க வேண்டும். உதாரணத்துக்கு, அவர்களை வீட்டில் போய் உங்களால் பார்க்க முடியுமா, ஏதாவது வீட்டு வேலைகளை செய்துகொடுக்க முடியுமா, சாப்பாட்டிற்காக அவர்களை அழைக்க முடியுமா, கூட்டங்களுக்கு அழைத்து வர முடியுமா, அவர்களோடு சேர்ந்து ஊழியம் செய்ய முடியுமா என்றெல்லாம் யோசித்துப் பாருங்கள். (லூக்கா 14:12-14-ஐ வாசியுங்கள்.) கடவுள் உங்கள்மீது காட்டிய அன்புக்கு நீங்கள் நன்றியோடு இருந்தால், நம் சகோதரர்கள்மீது அன்பு காட்ட தூண்டப்படுவீர்கள்!
சகோதரர்கள்மீது இரக்கம் காட்டுங்கள்
15. நாம் எதை மனதில் வைக்க வேண்டும்?
15 மூன்றாவதாக, யெகோவா நம்மீது காட்டிய அன்பு நம் சகோதர சகோதரிகளை மன்னிக்க நம்மைத் தூண்டுகிறது. ஆதாம் செய்த தவறினால் நம் எல்லாருக்குமே பாவமும் மரணமும் வந்தது. அதனால் யாருமே, ‘எனக்கு மீட்புப் பலி தேவையில்லை’ என்று சொல்ல முடியாது. யெகோவாவுக்கு கடைசிவரை உண்மையாக இருந்தவர்களுக்குக்கூட மீட்புப் பலி தேவை. அப்படியென்றால், நம் எல்லாரையும் யெகோவா பெரியளவில் மன்னித்திருக்கிறார் என்பதை மனதில் வைப்பது ரொம்ப முக்கியம். ஏன்? இதற்கு இயேசு சொன்ன உதாரணத்திலிருந்து பதில் தெரிந்துகொள்ளலாம்.
16, 17. (அ) இயேசு சொன்ன உதாரணத்திலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்? (ஆ) இயேசு சொன்ன உதாரணத்தை ஆழமாக யோசித்தப் பிறகு என்ன செய்ய நீங்கள் தீர்மானமாக இருக்கிறீர்கள்?
16 ஒரு பெரிய கடனை ரத்து செய்த ராஜாவைப் பற்றிய உதாரணத்தை இயேசு சொன்னார். தன்னிடம் 6 கோடி தினாரியைக் கடனாகப் பெற்றுக்கொண்ட அடிமைமீது இரக்கப்பட்டு அவனுடைய கடன்களையெல்லாம் அந்த ராஜா ரத்து செய்தார். ஆனால் அந்த அடிமை, தன்னிடம் 100 தினாரியைக் கடனாக பெற்றுக்கொண்ட சக அடிமைமீது கொஞ்சமும் இரக்கம் காட்டவில்லை. அந்த ராஜா காட்டிய இரக்கத்தை அந்த அடிமை கொஞ்சமாவது யோசித்துப் பார்த்திருந்தால் சக அடிமைமீது இரக்கம் காட்டியிருப்பான். ஆனால் அவன் அப்படி செய்யவில்லை. இதைக் கேள்விப்பட்டபோது ராஜாவுக்குப் பயங்கர கோபம் வந்தது. அதனால் அவர், “பொல்லாத அடிமையே, நீ என்னிடம் கெஞ்சிக் கேட்டபோது உன் கடன்களையெல்லாம் ரத்து செய்தேன். நான் உனக்கு இரக்கம் காட்டியதைப் போல் நீயும் உன்னுடைய சக அடிமைக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டாமா?” என்றார். (மத். 18:23-35) அந்த ராஜாவைப் போலவே யெகோவாவும் நம்முடைய பாவங்களை எல்லாம் மன்னித்திருக்கிறார். யெகோவா காட்டிய இரக்கமும் அன்பும் நம்மை என்ன செய்ய தூண்ட வேண்டும்?
17 நினைவுநாளுக்குத் தயாராகும் சமயத்தில் நம்மையே இப்படிக் கேட்டுக்கொள்ளலாம்: ‘சபையில இருக்குற யாராவது என் மனசை காயப்படுத்தி இருக்காங்களா? அவங்களை மன்னிக்கிறது எனக்கு கஷ்டமா இருக்கா?’ அப்படியென்றால், மன்னிக்க தயாராக இருக்கிற யெகோவாவைப் போல் நடந்துகொள்ள இதுதான் சரியான சமயம். (நெ. 9:17; சங். 86:5) யெகோவா நம்மீது பெரியளவில் இரக்கம் காட்டியதற்கு நாம் நன்றியோடு இருந்தால் நாமும் மற்றவர்கள்மீது இரக்கம் காட்டுவோம், அவர்களை மனதார மன்னிப்போம். மற்றவர்கள்மீது நாம் அன்பு காட்டவில்லை என்றால், அவர்களை மன்னிக்கவில்லை என்றால், யெகோவாவும் நம்மீது அன்பு காட்ட மாட்டார், நம்மை மன்னிக்க மாட்டார். (மத். 6:14, 15) ஒருவரை நாம் மன்னிப்பதால் அவர் செய்தது தப்பில்லை என்று ஆகிவிடாது. ஆனால், அவரை மன்னிக்கும்போது நம் வாழ்க்கை இன்னும் சந்தோஷமாக இருக்கும்.
18. ஒரு சகோதரியின் குறைகளைப் பொறுத்துக்கொள்ள சகோதரி லில்லிக்கு எது உதவியது?
18 நம் சகோதர சகோதரிகளுடைய குறைகளைப் பொறுத்துக்கொள்வது நமக்குக் கஷ்டமாக இருக்கலாம். (எபேசியர் 4:32; கொலோசெயர் 3:13, 14-ஐ வாசியுங்கள்.) அப்படிப் பொறுத்துக்கொண்ட லில்லி என்ற சகோதரியின் அனுபவத்தைக் கேளுங்கள்.[1] (பின்குறிப்பு) கணவனை இழந்த கேரல் என்ற சகோதரிக்கு லில்லி நிறைய உதவிகளைச் செய்திருக்கிறார். கேரலுக்கு எங்கேயாவது போக வேண்டியிருந்தால் அவரை வண்டியில் அழைத்துக்கொண்டு போவார். அவரைக் கடைக்கும் அழைத்துக்கொண்டு போவார், மற்ற உதவிகளையும் செய்வார். என்ன செய்தாலும் கேரல் குறை சொல்லிக்கொண்டே இருப்பார். இருந்தாலும் கேரலிடம் இருந்த நல்ல குணங்களையே லில்லி பார்த்தார். அவருக்கு உதவி செய்வது லில்லிக்கு ரொம்ப கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனாலும் கேரல் உடல்நிலை சரியில்லாமல் சாகும்வரை அவருக்கு நிறைய உதவிகளைச் செய்தார். லில்லி சொல்கிறார்: ‘கேரலுக்கு உதவி செய்றது கஷ்டமா இருந்தாலும் அவங்களை பூஞ்சோலை பூமியில பார்க்க நான் காத்துட்டு இருக்கேன். எந்த குறையும் இல்லாதப்போ அவங்க எப்படி நடந்துக்குவாங்கனு பார்க்க எனக்கு ஆசையா இருக்கு.’ கடவுள் நம்மீது காட்டும் அன்பு மற்றவர்களிடம் இருக்கும் குறைகளை மன்னிக்க நம்மைத் தூண்டுகிறது. குறை இல்லாத மனிதர்களோடு வாழவேண்டும் என்ற ஆசையையும் அதிகரிக்கிறது.
19. ‘வார்த்தைகளால் விவரிக்க முடியாத அன்பளிப்பு’ உங்களை என்ன செய்ய தூண்ட வேண்டும்?
19 ‘வார்த்தைகளால் விவரிக்க முடியாத அன்பளிப்பை’ யெகோவா நமக்குக் கொடுத்திருக்கிறார். அதற்காக நாம் அவருக்கு எப்போதும் நன்றியோடு இருக்கலாம். யெகோவாவும் இயேசுவும் நமக்காக செய்த எல்லா விஷயங்களையும் இந்த நினைவுநாள் சமயத்தில் ஆழமாக யோசித்துப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும். இவர்கள் இருவரும் காட்டிய அன்பு, இயேசுவைப் போல் நடந்துகொள்ள... சகோதர சகோதரிகளிடம் அன்பு காட்ட... அவர்களை மனதார மன்னிக்க... நம்மைத் தூண்டட்டும்!
^ [1] (பாரா 18) சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.