“முதலாம் உயிர்த்தெழுதல்”—இப்போது நடந்து வருகிறது!
“கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.”—1 தெசலோனிக்கேயர் 4:16.
1, 2. (அ) மரித்தோருக்கு என்ன நம்பிக்கை இருக்கிறது? (ஆ) எதன் அடிப்படையில் உயிர்த்தெழுதலை நீங்கள் நம்புகிறீர்கள்? (அடிக்குறிப்பைக் காண்க.)
1 ‘உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்கள்.’ ஆதாம் பாவம் செய்தது முதற்கொண்டு இது உண்மையாய் இருந்திருக்கிறது. இதுவரை உலகத்தில் பிறந்திருக்கிற எல்லாருமே என்றாவது ஒருநாள் தாங்கள் இறக்கப்போவதை அறிந்திருக்கிறார்கள்; அதுமட்டுமல்ல ‘மரணத்திற்குப்பின் என்ன நடக்கும்? மரித்தவர்களின் நிலை என்ன?’ என்றுகூட யோசித்திருக்கிறார்கள். அதற்கு பைபிள் பதில் அளிக்கிறது: “மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்.”—பிரசங்கி 9:5.
2 அப்படியானால், மரித்தோருக்கு ஏதேனும் எதிர்கால நம்பிக்கை இருக்கிறதா? ஆம், இருக்கிறது. சொல்லப்போனால், மனிதகுலத்திற்கான கடவுளுடைய ஆதி நோக்கம் நிறைவேறுவதற்கு இப்படியொரு நம்பிக்கை இருக்க வேண்டும். நூற்றாண்டுகளாகவே, கடவுளுடைய உண்மை ஊழியர்கள் வித்துவைப் பற்றி யெகோவா கொடுத்த வாக்குறுதியில் விசுவாசம் வைத்திருக்கிறார்கள்; அந்த வித்து, சாத்தானை அழித்து அவன் செய்த தீமைகளை நீக்கிப்போடுவார். (ஆதியாகமம் 3:15) அந்த உண்மை ஊழியர்களில் அநேகர் இறந்துவிட்டார்கள். யெகோவா கொடுத்த அந்த வாக்குறுதியும் பிற வாக்குறுதிகளும் நிறைவேறுவதை அவர்கள் பார்க்க வேண்டுமானால், அவர்கள் உயிர்த்தெழுப்பப்படுவது அவசியம். (எபிரெயர் 11:13) அது சாத்தியமா? ஆம், சாத்தியமே. அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு சொன்னார்: ‘நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பார்கள்.’ (அப்போஸ்தலர் 24:15) ஒருசமயம், மூன்றாம் மாடியின் ஜன்னலிலிருந்து கீழே விழுந்து, ‘மரித்தவனாய் எடுக்கப்பட்ட’ ஐத்திகு என்ற வாலிபனை பவுல் உயிர்த்தெழுப்பினார். உயிர்த்தெழுப்பப்பட்டதாக பைபிளில் குறிப்பிடப்படும் ஒன்பது நபர்களில் இந்த வாலிபன் கடைசி நபராவார்.—அப்போஸ்தலர் 20:7-12.a
3. யோவான் 5:28, 29-ல் காணப்படும் இயேசுவின் வார்த்தைகளிலிருந்து நீங்கள் தனிப்பட்ட முறையில் என்ன ஆறுதலைப் பெற்றிருக்கிறீர்கள், ஏன்?
3 பவுலின் வார்த்தைகளில் விசுவாசம் வைக்க, அந்த ஒன்பது உயிர்த்தெழுதல்களும் அஸ்திவாரமாய் அமைகின்றன. அவை, இயேசு கொடுத்த வாக்குறுதியில் நம்முடைய நம்பிக்கையைப் பலப்படுத்துகின்றன: “காலம் வருகிறது; அப்போது ஞாபகார்த்த கல்லறைகளிலுள்ள அனைவரும் [இயேசுவின்] சத்தத்தைக் கேட்டு வெளியே வருவார்கள்.” (யோவான் 5:28, 29, NW) இவை இதயத்திற்கு இதமூட்டும் வார்த்தைகள், அல்லவா? அன்பானவர்களைப் பறிகொடுத்த எண்ணற்றோருக்கு இந்த வார்த்தைகள் எவ்வளவாய் ஆறுதல் அளிக்கின்றன!
4, 5. வித்தியாசப்பட்ட என்ன உயிர்த்தெழுதல்களைப் பற்றி பைபிள் குறிப்பிடுகிறது, எந்த உயிர்த்தெழுதலைப் பற்றி இக்கட்டுரையில் ஆராயப் போகிறோம்?
4 கடவுளுடைய ராஜ்யத்தின்கீழ் பூமியெங்கும் சமாதானம் நிலவும்போது பெரும்பாலோர் உயிர்த்தெழுப்பப்படுவார்கள். (சங்கீதம் 37:10, 11, 29; ஏசாயா 11:6-9; 35:5, 6; 65:21-23) என்றாலும், அந்த உயிர்த்தெழுதலுக்கு முன்பாக பிற உயிர்த்தெழுதல்கள் நடக்க வேண்டியிருந்தது. முதலாவதாக, நம் சார்பில் தம்முடைய பலியின் மதிப்பை சமர்ப்பிப்பதற்காக இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுப்பப்பட வேண்டியிருந்தது. ஆம், பொ.ச. 33-ல் இயேசு மரித்து, உயிர்த்தெழுப்பப்பட்டார்.
5 அடுத்து, ‘தேவனுடைய இஸ்ரவேலரான’ அபிஷேகம் செய்யப்பட்டவர்கள், பரலோகத்தில் மகிமையான ஸ்தானத்தில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுடன் சேர்ந்துகொள்ள உயிர்த்தெழுப்பப்பட வேண்டும்; அங்கே அவர்கள் ‘எப்பொழுதும் கர்த்தருடனே இருப்பார்கள்.’ (கலாத்தியர் 6:16; 1 தெசலோனிக்கேயர் 4:17) இது, ‘முதலாம் உயிர்த்தெழுதல்’ என அழைக்கப்படுகிறது. (வெளிப்படுத்துதல் 20:6) இந்த உயிர்த்தெழுதல் முடிவடைந்த பிறகே, பூங்காவன பரதீஸ் பூமியில் முடிவில்லா வாழ்வைப் பெறும் எதிர்பார்ப்புடன் லட்சக்கணக்கானோர் உயிர்த்தெழுப்பப்படுவார்கள். ஆகவே, நமக்கு பரலோக நம்பிக்கை இருந்தாலும் சரி பூமிக்குரிய நம்பிக்கை இருந்தாலும் சரி, ‘முதலாம் உயிர்த்தெழுதலில்’ நாம் மிகுந்த ஆர்வமுள்ளவர்களாய் இருக்கிறோம். அந்த உயிர்த்தெழுதல் எப்படிப்பட்டதாய் இருக்கும்? அது எப்போது நடக்கும்?
‘எப்படிப்பட்ட சரீரத்தோடே வருவார்கள்?’
6, 7. (அ) அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் பரலோகத்திற்குச் செல்வதற்குமுன் அவர்களுக்கு என்ன நடக்க வேண்டும்? (ஆ) அவர்கள் எப்படிப்பட்ட மேனியுடன் உயிர்த்தெழுப்பப்படுவார்கள்?
6 கொரிந்தியர்களுக்கு எழுதிய முதல் கடிதத்தில், முதலாம் உயிர்த்தெழுதலைப் பற்றி பவுல் பின்வரும் கேள்விகளை எழுப்புகிறார்: ‘மரித்தோர் எப்படி எழுந்திருப்பார்கள், எப்படிப்பட்ட சரீரத்தோடே வருவார்கள்?’ அதன் பிறகு அக்கேள்விகளுக்கு அவரே இவ்வாறு பதில் தருகிறார்: “நீ விதைக்கிற விதை செத்தாலொழிய உயிர்க்கமாட்டாதே. . . . அதற்கு தேவன் தமது சித்தத்தின்படியே மேனியைக் கொடுக்கிறார்; . . . வானத்துக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே, பூமிக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே.”—1 கொரிந்தியர் 15:35-40.
7 பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் தங்களுடைய பரலோக வெகுமதியைப் பெறுவதற்கு முன்பாக மரிக்க வேண்டும் என்பதை பவுலின் வார்த்தைகள் காட்டுகின்றன. அவர்கள் மரிக்கையில், அவர்களுடைய மாம்ச உடல் மண்ணோடு மண்ணாகிவிடுகிறது. (ஆதியாகமம் 3:19) கடவுளுடைய உரிய காலத்தில், அவர்கள் பரலோக வாழ்க்கைக்கு ஏற்ற மேனியுடன் உயிர்த்தெழுப்பப்படுகிறார்கள். (1 யோவான் 3:2) அவர்களுக்கு சாவாமையையும் கடவுள் கொடுக்கிறார். இதைப் பிறவியிலேயே அவர்கள் பெற்றிருக்கவில்லை; அதாவது, அழியாத ஆத்துமா என்று சொல்லப்படுகிற ஒன்று அவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. ஏனென்றால், ‘சாவுக்கேதுவாகிய இது சாவாமையைத் தரித்துக்கொள்ள வேண்டும்’ என பவுல் கூறுகிறார். ஆகவே, சாவாமை என்பது கடவுள் கொடுக்கும் வரம்; முதலாம் உயிர்த்தெழுதலைப் பெறுகிறவர்கள் இதைத் ‘தரித்துக்கொள்கிறார்கள்.’—1 கொரிந்தியர் 15:50, 53; ஆதியாகமம் 2:7; 2 கொரிந்தியர் 5:1, 2, 8.
8. கடவுள் பற்பல மதங்களிலிருந்து 1,44,000 பேரைத் தேர்ந்தெடுப்பதில்லை என்பதை நாம் எப்படி அறிவோம்?
8 முதலாம் உயிர்த்தெழுதலுக்கு 1,44,000 பேர் மட்டுமே தகுதி பெற்றிருக்கிறார்கள். பொ.ச. 33-ல் இயேசுவை உயிர்த்தெழுப்பியதற்குச் சற்று பிறகு, அவர்களை யெகோவா தேர்ந்தெடுக்க ஆரம்பித்தார். அவர்கள் எல்லாருடைய “நெற்றிகளில் [இயேசுவின்] பெயரும் அவருடைய பிதாவின் பெயரும் எழுதப்பட்டிருக்கிறது.” (வெளிப்படுத்துதல் 14:1, 3, NW) ஆகவே, அவர்கள் பற்பல மதங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல. எல்லாருமே கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள், அவர்கள் பெருமிதத்தோடு பிதாவின் பெயரை, அதாவது யெகோவா என்ற பெயரைத் தரித்திருக்கிறார்கள். அவர்கள் உயிர்த்தெழுப்பப்படுகையில், பரலோகத்தில் தங்கள் நியமிப்பைப் பெறுகிறார்கள். இவ்வாறு, கடவுள் இருக்கும் இடத்திலேயே அவருக்குச் சேவை செய்யும் எதிர்பார்ப்பு அவர்களுக்கு அளவிலா ஆனந்தத்தை அளிக்கிறது.
இப்போது நடந்து வருகிறதா?
9. முதலாம் உயிர்த்தெழுதல் ஆரம்பமாகிற காலத்தைக் கணக்கிட வெளிப்படுத்துதல் 12:7 மற்றும் 17:14 வசனங்கள் எப்படி நமக்கு உதவுகின்றன?
9 முதலாம் உயிர்த்தெழுதல் எப்போது நடக்கிறது? அது இப்போதே நடந்து வருகிறது என்பதற்குப் பலமான ஆதாரம் உள்ளது. உதாரணமாக, வெளிப்படுத்துதல் புத்தகத்தின் இரண்டு அதிகாரங்களை ஒப்பிட்டுப் பாருங்கள். முதலாவதாக, வெளிப்படுத்துதல் 12-ஆம் அதிகாரத்தைப் பாருங்கள். அங்கே, புதிதாய் முடிசூட்டப்பட்ட இயேசு கிறிஸ்து தமது பரிசுத்த தூதர்களுடன் சேர்ந்து சாத்தானுக்கும் அவனுடைய பேய்களுக்கும் எதிராக போர் புரிவதைப் பற்றி வாசிக்கிறோம். (வெளிப்படுத்துதல் 12:7-9) இப்பத்திரிகையில் அநேக முறை குறிப்பிடப்பட்டிருக்கிறபடி, அந்தப் போர் 1914-ல் ஆரம்பமானது.b என்றாலும், அந்தப் பரலோகப் போரில் கிறிஸ்துவின் அபிஷேகம் செய்யப்பட்டோர் யாருமே இயேசுவுடன் இல்லாதிருப்பதைக் கவனியுங்கள். இப்போது, வெளிப்படுத்துதல் 17-ஆம் அதிகாரத்தைப் பாருங்கள். இங்கே, ஆட்டுக்குட்டியானவர் ‘மகா பாபிலோனை’ அழித்த பிறகு, தேசங்களை வென்றுவிடுவார் என வாசிக்கிறோம். “அழைக்கப்பட்டவர்களும் தெரிந்துகொள்ளப்பட்டவர்களும் உண்மையுள்ளவர்களுமாய் அவருடன் இருப்பவர்களும் வென்றுவிடுவார்கள்” எனவும் அது குறிப்பிடுகிறது. (வெளிப்படுத்துதல் 17:5, 14; NW) ‘அழைக்கப்பட்டவர்களும் தெரிந்துகொள்ளப்பட்டவர்களும் உண்மையுள்ளவர்களுமான’ இவர்கள் சாத்தானுடைய உலகத்தைக் கடைசியாக முறியடிப்பதற்கு இயேசுவுடன் இருக்கிறார்கள் என்றால், அவர்கள் ஏற்கெனவே உயிர்த்தெழுப்பப்பட்டிருக்க வேண்டும். ஆகவே, அர்மகெதோனுக்கு முன் மரிக்கிற அபிஷேகம் செய்யப்பட்டவர்கள், 1914-க்கும் அர்மகெதோனுக்கும் இடைப்பட்ட காலத்தில் உயிர்த்தெழுப்பப்படுகிறார்கள் என்ற முடிவுக்கு வருவது நியாயமானது.
10, 11. (அ) 24 மூப்பர்கள் யார், அவர்களில் ஒருவர் யோவானுக்கு எதை வெளிப்படுத்துகிறார்? (ஆ) இதிலிருந்து நாம் என்ன முடிவுக்கு வரலாம்?
10 முதலாம் உயிர்த்தெழுதல் ஆரம்பமாகிற காலத்தை இன்னும் துல்லியமாக சொல்ல முடியுமா? ஆர்வமூட்டும் ஒரு குறிப்பு வெளிப்படுத்துதல் 7:9-15-ல் உள்ளது. ‘ஒருவரும் எண்ணக்கூடாத திரளான கூட்டமாகிய ஜனங்களை’ பற்றிய தரிசனத்தை அப்போஸ்தலன் யோவான் அங்கே விவரிக்கிறார். அந்தத் திரள் கூட்டத்தார் யார் என்பதை 24 மூப்பர்களில் ஒருவர் யோவானுக்கு வெளிப்படுத்துகிறார்; இந்த மூப்பர்கள், பரலோகத்தில் மகிமையான ஸ்தானத்தில் கிறிஸ்துவோடு இருக்கிற 1,44,000 உடன் சுதந்திரவாளிகளைப் பிரதிநிதித்துவம் செய்கிறார்கள்.c (லூக்கா 22:28-30; வெளிப்படுத்துதல் 4:4) யோவானும்கூட பரலோக நம்பிக்கை உடையவராய் இருந்தார்; ஆனால், அந்த மூப்பர் அவரிடம் பேசுகையில் யோவான் இன்னும் பூமியில் மனிதனாகவே இருந்தார். ஆகவே, அந்தத் தரிசனத்தில் யோவான், பரலோக வெகுமதியை இன்னும் பெறாமல் பூமியிலிருக்கிற அபிஷேகம் செய்யப்பட்டவர்களையே பிரதிநிதித்துவம் செய்ய வேண்டும்.
11 அப்படியானால், திரள் கூட்டத்தார் யார் என்பதை இந்த 24 மூப்பர்களில் ஒருவர் யோவானுக்கு அடையாளம் காட்டுவதிலிருந்து நாம் என்ன முடிவுக்கு வரலாம்? 24 மூப்பர்களின் தொகுதியில் உள்ள ஏற்கெனவே உயிர்த்தெழுப்பப்பட்டவர்கள், இன்று கடவுளைப் பற்றிய சத்தியங்களைத் தெரிவிப்பதில் உட்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. அது ஏன் முக்கியம்? ஏனெனில், திரள் கூட்டத்தார் உண்மையில் யார் என்பது பூமியிலுள்ள கடவுளுடைய அபிஷேகம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு 1935-ல் வெளிப்படுத்தப்பட்டது. இந்த முக்கியமான சத்தியத்தைத் தெரிவிப்பதற்கு 24 மூப்பர்களில் ஒருவர் பயன்படுத்தப்பட்டிருப்பார் என்றால், அவர் 1935-க்குள் பரலோகத்திற்கு உயிர்த்தெழுப்பப்பட்டிருக்க வேண்டும். ஆக, முதலாம் உயிர்த்தெழுதல் 1914-க்கும் 1935-க்கும் இடைப்பட்ட காலத்தில் ஆரம்பமாயிருக்க வேண்டும். இதைவிடவும் துல்லியமாகச் சொல்ல முடியுமா?
12. முதலாம் உயிர்த்தெழுதல் 1918-ன் இளவேனிற்காலத்தில் ஆரம்பித்திருக்கலாம் என கருதப்படுவதற்கான காரணத்தை விளக்குங்கள்.
12 இந்தச் சந்தர்ப்பத்தில், பைபிளில் இதற்கு இணையான தகவலாக கருதப்படும் ஒன்றைச் சிந்திப்பது உதவியாய் இருக்கலாம். பொ.ச. 29 இலையுதிர் காலத்தில், கடவுளுடைய ராஜ்யத்தின் வருங்கால ராஜாவாக இயேசு கிறிஸ்து அபிஷேகம் செய்யப்பட்டார். மூன்றரை வருடங்களுக்குப்பின், பொ.ச. 33 இளவேனிற்காலத்தில் வல்லமையுள்ள ஓர் ஆவி ஆளாக அவர் உயிர்த்தெழுப்பப்பட்டார். அப்படியானால், 1914-ன் இலையுதிர் காலத்தில் இயேசு ராஜாவானதால், அவரைப் பின்பற்றுகிற உண்மையுள்ள அபிஷேகம் செய்யப்பட்டோரின் உயிர்த்தெழுதல் மூன்றரை வருடங்களுக்குப் பிறகு 1918-ன் இளவேனிற்காலத்தில் ஆரம்பமானது என்பது நியாயமாக இருக்கும், அல்லவா? அப்படியொரு சாத்தியமிருப்பது ஆர்வத்திற்குரியது. பைபிள் இதை நேரடியாக உறுதிப்படுத்தாவிட்டாலும், பிற வசனங்களோடு இது ஒத்திருக்கிறது; இந்த வசனங்கள், கிறிஸ்துவின் பிரசன்னத்தைத் தொடர்ந்து முதலாம் உயிர்த்தெழுதல் ஆரம்பமானதைக் காட்டுகின்றன.
13. முதலாம் உயிர்த்தெழுதல் கிறிஸ்துவுடைய பிரசன்னத்தின் ஆரம்பத்தில் துவங்கியது என்பதை 1 தெசலோனிக்கேயர் 4:15-17 எவ்வாறு தெரிவிக்கிறது?
13 உதாரணமாக, பவுல் இவ்வாறு எழுதினார்: “கர்த்தருடைய வருகைமட்டும் [அவருடைய பிரசன்னத்தின் முடிவுமட்டும் அல்ல] உயிரோடிருக்கும் நாம் நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக்கொள்வதில்லை. ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு, உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.” (1 தெசலோனிக்கேயர் 4:15-17) ஆகவே, கிறிஸ்துவின் பிரசன்னத்திற்கு முன் மரித்த அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள், கிறிஸ்துவின் பிரசன்னத்தின்போது வாழ்ந்துவருகிறவர்களுக்கு முன்பே பரலோக வாழ்க்கைக்கு உயிர்த்தெழுப்பப்பட்டிருக்கிறார்கள். அப்படியென்றால், கிறிஸ்துவுடைய பிரசன்னத்தின் ஆரம்ப காலத்திலேயே முதலாம் உயிர்த்தெழுதல் தொடங்கியிருக்க வேண்டும்; இந்த உயிர்த்தெழுதல் ‘அவருடைய வருகையில்,’ அதாவது பிரசன்னத்தின்போது நடந்து வருகிறது. (1 கொரிந்தியர் 15:23) இந்த முதலாம் உயிர்த்தெழுதல் ஒரே சமயத்தில் நடந்து முடிந்துவிடாமல், ஒரு காலப்பகுதியில் நடக்கிறது.
“அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டது”
14. (அ) வெளிப்படுத்துதல் 6-ஆம் அதிகாரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள தரிசனங்கள் எப்போது நிறைவேறுகின்றன? (ஆ) வெளிப்படுத்துதல் 6:9-ல் என்ன சித்தரிக்கப்பட்டுள்ளது?
14 வெளிப்படுத்துதல் 6-ஆம் அதிகாரத்தில் உள்ள அத்தாட்சியையும் கவனியுங்கள். அங்கே இயேசு வெற்றிபெறும் ராஜாவாக சவாரி செய்வதைக் காண்கிறோம். (வெளிப்படுத்துதல் 6:2) மலைக்கவைக்கும் மாபெரும் போர்களில் தேசங்கள் ஈடுபடுகின்றன. (வெளிப்படுத்துதல் 6:4) எங்கும் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. (வெளிப்படுத்துதல் 6:5, 6) உயிர்க்கொல்லி நோய்கள் மனிதகுலத்தைச் சூறையாடுகின்றன. (வெளிப்படுத்துதல் 6:8) இந்தத் தீர்க்கதரிசன சம்பவங்கள் எல்லாமே, 1914 முதற்கொண்டு காணப்படும் உலக நிலைமைகளுக்கு மிகவும் ஒத்திருக்கின்றன. ஆனால், மற்றொன்றும் நடக்கிறது. இப்போது, பலிபீடத்திடம் நம் கவனம் திருப்பப்படுகிறது. அதன்கீழ், ‘தேவவசனத்தினிமித்தமும் தாங்கள் கொடுத்த சாட்சியினிமித்தமும் கொல்லப்பட்டவர்களுடைய ஆத்துமாக்கள்’ காணப்படுகின்றன. (வெளிப்படுத்துதல் 6:9) ‘மாம்சத்தின் உயிர் [அதாவது, ஆத்துமா] இரத்தத்தில் இருப்பதால்’ பலிபீடத்தின்கீழ் கிடக்கிற ஆத்துமாக்கள் இயேசுவின் உண்மை ஊழியர்களின் இரத்தத்தையே அடையாளப்படுத்துகின்றன; இந்த உண்மை ஊழியர்கள் தைரியமாகவும் பக்திவைராக்கியமாகவும் சாட்சிகொடுத்ததால் கொல்லப்பட்டார்கள்.—லேவியராகமம் 17:11.
15, 16. வெளிப்படுத்துதல் 6:10, 11-லுள்ள வார்த்தைகள் ஏன் முதலாம் உயிர்த்தெழுதலைக் குறிப்பிடுகின்றன என்று விளக்குங்கள்.
15 நீதிமானாகிய ஆபேலின் இரத்தத்தைப் போலவே, இந்தக் கிறிஸ்தவ தியாகிகளின் இரத்தமும் நீதிகேட்டு சத்தமிடுகிறது. (ஆதியாகமம் 4:10) “அவர்கள் பரிசுத்தமும் சத்தியமுமுள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின்மேல் குடியிருக்கிறவர்களிடத்தில் எங்கள் இரத்தத்தைக்குறித்து எதுவரைக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டார்கள்.” அதன் பிறகு என்ன நடக்கிறது? “அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டது; அன்றியும், அவர்கள் தங்களைப்போலக் கொலைசெய்யப்படப் போகிறவர்களாகிய தங்கள் உடன் பணிவிடைக்காரரும் தங்கள் சகோதரருமானவர்களின் தொகை நிறைவாகுமளவும் இன்னுங்கொஞ்சக்காலம் இளைப்பாற வேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது.”—வெளிப்படுத்துதல் 6:10, 11.
16 இந்த வெள்ளை அங்கிகள் பலிபீடத்தின் கீழே உள்ள இரத்த வெள்ளத்தில் போடப்பட்டனவா? இல்லவே இல்லை! அடையாள அர்த்தத்தில் பலிபீடத்தின்கீழ் யாருடைய இரத்தம் சிந்தப்பட்டுள்ளதோ அவர்களிடம் இந்த அங்கிகள் கொடுக்கப்பட்டன. அவர்கள் இயேசுவின் பெயரில் தங்களுடைய உயிரை இழந்தவர்கள்; இப்போது ஆவி ஆட்களாக உயிர்த்தெழுப்பப்பட்டுவிட்டார்கள். இது நமக்கு எப்படித் தெரியும்? வெளிப்படுத்துதல் புத்தகத்தின் ஆரம்பத்தில் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: ‘ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்படும்; ஜீவபுஸ்தகத்திலிருந்து அவனுடைய நாமத்தை நான் கிறுக்கிப்போடுவதில்லை.’ 24 மூப்பர்கள் ‘வெண்வஸ்திரந்தரித்து, தங்கள் சிரசுகளில் பொன்முடி சூடியிருந்ததையும்’ நினைவுபடுத்திப் பாருங்கள். (வெளிப்படுத்துதல் 3:5; 4:4) ஆகவே, போர், பஞ்சம், கொள்ளைநோய் ஆகியவை பூமியைச் சூறையாட ஆரம்பித்த பிறகு, 1,44,000 பேரில் மரித்தவர்கள், அதாவது பலிபீடத்தின்கீழ் கிடந்த இரத்தத்தைப் பிரதிநிதித்துவம் செய்தவர்கள் பரலோக வாழ்க்கைக்கு உயிர்த்தெழுப்பப்பட்டார்கள், அடையாள அர்த்தத்தில் வெள்ளை அங்கிகள் அணிவிக்கப்பட்டார்கள்.
17. வெள்ளை அங்கிகளைப் பெறுபவர்கள் என்ன அர்த்தத்தில் “இளைப்பாற” வேண்டும்?
17 புதிதாக உயிர்த்தெழுப்பப்பட்டவர்கள் “இளைப்பாற” வேண்டும். கடவுளுடைய பழிவாங்கும் நாள் வரையில் அவர்கள் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும். பூமியில் இன்னும் இருக்கிற அவர்களுடைய ‘உடன் பணிவிடைக்காரராகிய’ அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் சோதனையின்கீழ் தங்களுடைய உத்தமத்தை நிரூபிக்க வேண்டியுள்ளது. கடவுள் நியாயத்தீர்ப்பு செய்வதற்கான காலம் வருகையில், அவர்களுடைய ‘இளைப்பாறுதல்’ முடிவுக்கு வரும். (வெளிப்படுத்துதல் 7:3) அப்போது, உயிர்த்தெழுப்பப்பட்டவர்கள் துன்மார்க்கரையும் குற்றமற்ற கிறிஸ்தவர்களின் இரத்தத்தைச் சிந்தியவர்களையும் அழிப்பதில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுடன் சேர்ந்துகொள்வார்கள்.—2 தெசலோனிக்கேயர் 1:7-10.
இது நமக்கு எதை அர்த்தப்படுத்துகிறது
18, 19. (அ) முதலாம் உயிர்த்தெழுதல் இப்போது நடந்து வருகிறது என்பதற்கு நீங்கள் என்ன காரணங்களை அளிக்க முடியும்? (ஆ) முதலாம் உயிர்த்தெழுதலைக் குறித்து நீங்கள் புரிந்துகொண்டது உங்களை எப்படி உணரச் செய்கிறது?
18 முதலாம் உயிர்த்தெழுதலுக்கான சரியான தேதியை கடவுளுடைய வார்த்தை தெரிவிப்பதில்லை; ஆனால், ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில், அதாவது கிறிஸ்துவின் பிரசன்னத்தின்போது நடப்பதாக அது தெரிவிக்கிறது. கிறிஸ்துவினுடைய பிரசன்னத்திற்கு முன் மரித்த அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் முதலில் உயிர்த்தெழுப்பப்படுகிறார்கள். கிறிஸ்துவின் பிரசன்ன காலத்தில், உண்மையுடன் இருந்து மரிக்கும் அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள், “ஒரு இமைப்பொழுதிலே” வல்லமையுள்ள ஆவி சிருஷ்டிகளாக மாற்றப்படுகிறார்கள். (1 கொரிந்தியர் 15:51) அபிஷேகம் செய்யப்பட்ட எல்லாருமே அர்மகெதோன் யுத்தத்திற்கு முன் பரலோக வெகுமதியைப் பெற்றுக்கொள்வார்களா? நமக்குத் தெரியாது. என்றாலும், கடவுளுடைய உரிய காலத்தில் 1,44,000 பேரில் அனைவரும் பரலோக சீயோன் மலைக்கு முன்பாக நிற்பார்கள் என்பது நமக்குத் தெரியும்.
19 இந்த 1,44,000 பேரில் பெரும்பாலோர் ஏற்கெனவே கிறிஸ்துவுடன் சேர்ந்துகொண்டார்கள் என்பதும்கூட நமக்குத் தெரியும். வெகு சொற்பமானோரே பூமியில் இன்னும் இருக்கிறார்கள். கடவுள் நியாயத்தீர்ப்பு செய்வதற்கான காலம் மிகவும் சமீபித்துவிட்டது என்பதற்கு எவ்வளவு வலுவான அத்தாட்சி இது! சீக்கிரத்திலேயே சாத்தானின் முழு உலகமும் அழிக்கப்படும். சாத்தானும் பாதாளத்தில் தள்ளப்படுவான். அதன் பிறகு, மனிதகுலத்தின் பொதுவான உயிர்த்தெழுதல் ஆரம்பமாகும்; உண்மையுள்ள மனிதர்கள் இயேசுவின் மீட்கும்பலியின் அடிப்படையில் ஆதாம் இழந்த பரிபூரணத்தை மீண்டும் பெற முடியும். ஆதியாகமம் 3:15-லுள்ள யெகோவாவின் தீர்க்கதரிசனம் அற்புதமாக நிறைவேறி வருகிறது. இக்காலத்தில் வாழ்வதற்கு நாம் பெரும் பாக்கியம் பெற்றிருக்கிறோம், அல்லவா?
[அடிக்குறிப்புகள்]
a உயிர்த்தெழுப்பப்பட்ட மற்ற எட்டுப் பேரைப் பற்றி, 1 இராஜாக்கள் 17:21-23; 2 இராஜாக்கள் 4:32-37; 13:21; மாற்கு 5:35, 41-43; லூக்கா 7:11-17; 24:34; யோவான் 11:43-45; அப்போஸ்தலர் 9:36-42 ஆகிய வசனங்களில் காண்க.
b கிறிஸ்துவின் பிரசன்னம் 1914-ல் ஆரம்பமானது என்பதற்கான பைபிள் ஆதாரத்திற்கு, யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகத்தில் 215-18 பக்கங்களைக் காண்க.
c பரலோக ஸ்தானத்தில் இருக்கிற அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள், இந்த 24 மூப்பர்களைப் பிரதிநிதித்துவம் செய்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள, யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது! என்ற புத்தகத்தில் பக்கம் 77-ஐக் காண்க.
உங்களால் விளக்க முடியுமா?
‘முதலாம் உயிர்த்தெழுதலுக்கான’ காலத்தைப் பகுத்துணர பின்வரும் வசனங்கள் நமக்கு எப்படி உதவுகின்றன?
• வெளிப்படுத்துதல் 12:7; 17:14
• 1 கொரிந்தியர் 15:23; 1 தெசலோனிக்கேயர் 4:15-17
[பக்கம் 26-ன் படங்கள்]
பூமியில் உயிர்த்தெழுதல் நடப்பதற்கு முன் என்ன உயிர்த்தெழுதல்கள் நடக்க வேண்டும்?
[பக்கம் 29-ன் படம்]
மரணத்தில் நித்திரையடைந்த சிலருக்கு என்ன அர்த்தத்தில் வெள்ளை அங்கி கொடுக்கப்படுகிறது?