பொறுமை—நம்பிக்கையோடு சகித்திருப்பது
முன்பு எப்போதையும்விட இப்போது நமக்கு ரொம்பவே பொறுமை தேவை! ஏனென்றால், சமாளிக்க முடியாத அளவுக்குக் கடினமான இந்த “கடைசி நாட்களில்” நாம் வாழ்கிறோம். (2 தீ. 3:1-5) நம்மைச் சுற்றியிருக்கும் நிறைய பேருக்கு பொறுமையே இல்லை. சுயநலவாதிகளாகவும், வாக்குவாதம் செய்கிறவர்களாகவும், சுயக்கட்டுப்பாடு இல்லாதவர்களாகவும் அவர்கள் இருக்கிறார்கள். அதனால், நம்மையே இப்படிக் கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘என்ன சுத்தியிருக்கிற மக்கள மாதிரி நானும் பொறுமை இல்லாம நடந்துக்குறேனா? பொறுமையா இருக்குறதுனா உண்மையிலேயே என்ன? பொறுமைங்குற குணத்த என் சுபாவத்தோட ஒரு பாகமா ஆக்கிக்குறதுக்கு நான் என்ன செய்யணும்?’
பொறுமை என்றால் என்ன?
பைபிளில் பயன்படுத்தப்பட்டிருக்கும் “பொறுமை” என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம்? வெறுமனே ஒரு பிரச்சினையைப் பொறுத்துக்கொள்வதை அது அர்த்தப்படுத்துவது கிடையாது. அதற்குப் பதிலாக, பிரச்சினைகளை நம்பிக்கையோடு சகித்திருப்பதைத்தான் அது அர்த்தப்படுத்துகிறது. அதாவது, நிலைமைகள் சரியாகும் என்ற நம்பிக்கையோடு இருப்பதை அது அர்த்தப்படுத்துகிறது. பொறுமையோடு நடந்துகொள்ளும் ஒருவர், தன்னைப் பற்றி மட்டுமே யோசிக்க மாட்டார்; மற்றவர்களுடைய உணர்ச்சிகளையும் கருத்தில் எடுத்துக்கொள்வார். தன்னைக் காயப்படுத்தியவர்களுடைய அல்லது அவமானப்படுத்தியவர்களுடைய உணர்ச்சிகளையும் அவர் மதிப்பார். தனக்கும் தன்னைக் காயப்படுத்தியவர்களுக்கும் இடையில் ஒரு சுமூகமான உறவு நிச்சயம் ஏற்படும் என்ற நம்பிக்கையோடு இருப்பார். அதனால்தான், அன்பு என்ற குணத்திலிருந்து பொறுமை என்ற குணம் பிறப்பதாக பைபிள் சொல்கிறது.a (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) (1 கொ. 13:4) அதோடு, பொறுமை என்ற குணம், ‘கடவுளுடைய சக்தியால் உண்டாகிற குணங்களில்’ ஒன்று! (கலா. 5:22, 23) அதனால், உண்மையிலேயே பொறுமையாக இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
பொறுமை என்ற குணத்தை எப்படி வளர்த்துக்கொள்வது?
பொறுமையை வளர்த்துக்கொள்வதற்கு, கடவுளுடைய சக்தியின் உதவியைக் கேட்டு நாம் அவரிடம் ஜெபம் செய்ய வேண்டும்; தன்னை நம்புபவர்களுக்கு அவர் அந்தச் சக்தியைக் கொடுக்கிறார். (லூக். 11:13) அந்தச் சக்திக்கு அதிக வல்லமை இருப்பது உண்மைதான்; ஆனால், நாம் செய்த ஜெபத்துக்குத் தகுந்தபடி உழைப்பது அவசியம். (சங். 86:10, 11) அதாவது, ஒவ்வொரு நாளும் பொறுமையோடு இருப்பதற்காக நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்ய வேண்டும்; அந்தக் குணத்தை நம் சுபாவத்தின் ஒரு பாகமாக ஆக்கிக்கொள்ள வேண்டும். ஆனால், சிலசமயங்களில் நாம் பொறுமை இழந்துவிடலாம். அப்படியென்றால், தொடர்ந்து பொறுமையோடு இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
இயேசுவின் பரிபூரண முன்மாதிரியைப் பற்றி வாசித்து, அதை ஆழமாக யோசித்துப்பார்க்க வேண்டும். “புதிய சுபாவத்தை” பற்றி பவுல் பேசியபோது, “கிறிஸ்து தருகிற சமாதானம் உங்கள் இதயங்களில் ஆட்சி செய்யட்டும்” என்று சொன்னார். அந்தச் சுபாவத்தில் பொறுமையும் அடங்குகிறது! (கொலோ. 3:10, 12, 15) கிறிஸ்து தருகிற சமாதானம் நம் இதயங்களில் ஆட்சி செய்ய வேண்டுமென்றால், நாம் இயேசுவின் உதாரணத்தைப் பின்பற்ற வேண்டும். அதோடு, சில விஷயங்களைச் சரியான நேரத்தில் கடவுள் சரிசெய்வார் என்று நம்ப வேண்டும். அந்த நம்பிக்கை இருந்தால், நம்மைச் சுற்றி என்ன நடந்தாலும் சரி, நாம் பொறுமை இழந்துவிட மாட்டோம்.—யோவா. 14:27; 16:33.
சீக்கிரத்தில் புதிய உலகம் வர வேண்டுமென்று நாம் எல்லாரும் ஆசைப்படுகிறோம். ஆனால், யெகோவா நம்மிடம் எவ்வளவு பொறுமையைக் காட்டியிருக்கிறார் என்பதை யோசித்துப்பார்க்கும்போது, பொறுமையோடு இருப்பதற்கு நாமும் கற்றுக்கொள்கிறோம். “யெகோவா தன்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றத் தாமதிப்பதாகச் சிலர் நினைக்கிறார்கள். ஆனால், அவர் தாமதிப்பதில்லை. ஒருவரும் அழிந்துபோகாமல் எல்லாரும் மனம் திருந்த வேண்டும் என்று அவர் விரும்புகிறார். அதனால்தான் உங்கள்மேல் பொறுமையாக இருக்கிறார்” என்று பைபிள் சொல்கிறது. (2 பே. 3:9) யெகோவா எவ்வளவு பொறுமையோடு இருக்கிறார் என்பதை யோசித்துப்பார்க்கும்போது, நாமும் மற்றவர்களிடம் பொறுமையோடு இருப்போம். (ரோ. 2:4) நாம் எந்த மாதிரியான சூழ்நிலைகளில் பொறுமை காட்ட வேண்டியிருக்கலாம்?
பொறுமை காட்ட வேண்டிய சில சூழ்நிலைகள்
நம்முடைய அன்றாட வாழ்க்கையில், பொறுமையைக் காட்ட வேண்டிய நிறைய சூழ்நிலைகள் ஏற்படுகின்றன. உதாரணத்துக்கு, முக்கியமான ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டுமென்பதற்காக, இன்னொருவர் பேசிக்கொண்டிருக்கும்போது இடையில் குறுக்கிடாமல் இருக்க நமக்குப் பொறுமை தேவை! (யாக். 1:19) யாராவது நம்மை எரிச்சலூட்டும்போதும் நமக்குப் பொறுமை தேவை! இந்த மாதிரியான சமயங்களில், நாம் பொறுமை இழந்துவிடக் கூடாது. நம்முடைய பலவீனங்களை யெகோவாவும் இயேசுவும் எப்படிப் பொறுத்துக்கொள்கிறார்கள் என்பதை நினைத்துப்பார்க்க வேண்டும். உதாரணத்துக்கு, நாம் அடிக்கடி சின்னச் சின்ன தவறுகளைச் செய்துவிடுகிறோம். ஆனால், அவர்கள் இரண்டு பேரும் அவற்றையே பார்த்துக்கொண்டிருப்பதற்குப் பதிலாக, நம்முடைய நல்ல குணங்களைத்தான் பார்க்கிறார்கள்; மாற்றங்கள் செய்வதற்குப் பொறுமையோடு காலத்தை அனுமதிக்கிறார்கள்.—1 தீ. 1:16; 1 பே. 3:12.
நாம் சொன்ன அல்லது செய்த ஏதோவொன்று தவறு என்பதாக யாராவது சுட்டிக்காட்டும்போதும் நமக்குப் பொறுமை தேவை! அதுபோன்ற சமயங்களில், ஒருவேளை நாம் உடனடியாகப் புண்பட்டுவிடலாம் அல்லது நாம் சொன்னதையோ செய்ததையோ நியாயப்படுத்தலாம். ஆனால், அப்படிச் செய்ய வேண்டாமென்று பைபிள் சொல்கிறது. “பெருமையைவிட பொறுமை நல்லது. சட்டென்று கோபப்படாதே; இது முட்டாளின் அடையாளம்” என்று அது சொல்கிறது. (பிர. 7:8, 9, அடிக்குறிப்பு) நம்மேல் சொல்லப்பட்ட குற்றச்சாட்டு முழுக்க முழுக்கத் தவறென்றாலும், பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம்; பேசுவதற்கு முன் நன்றாக யோசிப்பதும் முக்கியம். மற்றவர்கள் தன்மேல் பொய்க் குற்றம் சாட்டியபோது, இயேசு இதைத்தான் செய்தார்.—மத். 11:19.
பிள்ளைகள் தங்களுடைய மனப்பான்மையை அல்லது தவறான ஆசைகளை மாற்றிக்கொள்வதற்கு, பெற்றோர்கள் உதவ வேண்டியிருக்கலாம். அப்போது, பெற்றோர்கள் பொறுமையாக இருப்பது ரொம்பவே அவசியம். மத்தியாஸ் என்ற சகோதரரின் அனுபவத்தைப் பார்க்கலாம். அவர் இப்போது ஸ்கேண்டினேவியாவில் இருக்கும் பெத்தேலில் சேவை செய்கிறார். அவர் டீனேஜில் இருந்தபோது, அவரோடு பள்ளியில் படித்தவர்கள், அவருடைய மத நம்பிக்கைகளைப் பற்றி கேலி செய்துகொண்டே இருந்தார்களாம். ஆரம்பத்தில், இதைப் பற்றி அவருடைய அப்பா அம்மாவுக்குத் தெரியவில்லை. ஆனால், தன்னுடைய மத நம்பிக்கைகளை மத்தியாஸ் சந்தேகப்பட ஆரம்பித்ததை அவர்கள் கவனித்திருக்கிறார்கள். அந்தச் சமயங்களில், தனக்கும் தன்னுடைய மனைவிக்கும் ரொம்பவே பொறுமை தேவைப்பட்டதாக மத்தியாஸின் அப்பா கில்லிஸ் சொல்கிறார். “கடவுள் யாரு? பைபிள கடவுள்தான் கொடுத்தாருன்னு எப்படி நம்புறது? நாம அதை செய்யணும் இதை செய்யக் கூடாதுனு கடவுள்தான் சொல்றாருன்னு நமக்கு எப்படி தெரியும்?” போன்ற கேள்விகளை மத்தியாஸ் கேட்டிருக்கிறார். அதோடு, அவருடைய அப்பாவிடம், “நீங்க நம்புறதையெல்லாம் நானும் நம்பலேங்குறதுக்காக, நான் தப்பான வழியில போறேன்னு ஏன் சொல்றீங்க?” என்றும் கேட்டிருக்கிறார்.
“சிலசமயத்துல எங்க பையன் கோபமா பேசுவான். ஆனா, அந்த கோபம் என் மேலயோ அவனோட அம்மா மேலயோ இல்ல; சத்தியத்தின் மேலதான். ஏன்னா, சத்தியம் அவன் வாழ்க்கைய கட்டுப்படுத்துறதா அவன் நினைச்சான்” என்று கில்லிஸ் சொல்கிறார். தன்னுடைய மகனுக்கு கில்லிஸ் எப்படி உதவினார்? “நானும் என் பையனும் உட்கார்ந்து மணிக்கணக்கா பேசுவோம்” என்று அவர் சொல்கிறார். பொதுவாக, மத்தியாஸ் பேசுவதை கில்லிஸ் பொறுமையாகக் கேட்பாராம்; மத்தியாஸுடைய உணர்ச்சிகளையும் கருத்துகளையும் புரிந்துகொள்ள சில கேள்விகளையும் கேட்பாராம். சிலசமயங்களில், ஏதோவொரு விஷயத்தை விளக்கிவிட்டு, ஒரு நாளோ அதற்கும் மேலாகவோ அதைப் பற்றி யோசிக்கும்படியும், பிறகு அதைப் பற்றிப் பேசலாமென்றும் சொல்வாராம். மற்ற சமயங்களில், மத்தியாஸ் சொன்னதைப் பற்றி யோசித்துப்பார்க்க தனக்கு சில நாட்கள் தேவை என்று சொல்வாராம். இப்படித் தவறாமல் பேசியதன் மூலம், மீட்புவிலை... நம்மேல் யெகோவா வைத்திருக்கும் அன்பு... நம்மை ஆட்சி செய்வதற்கு யெகோவாவுக்கு இருக்கும் உரிமை... ஆகியவற்றைப் பற்றி மத்தியாஸ் நன்றாகப் புரிந்துகொண்டாராம். “இதுக்கெல்லாம் ரொம்ப நேரம் தேவைப்பட்டுச்சு. நிறைய சமயங்கள்ல கஷ்டமாத்தான் இருந்துச்சு. ஆனா, கொஞ்சம் கொஞ்சமா யெகோவாமேல இருக்குற அன்பு அவனுக்கு அதிகமாச்சு. எங்க மகனோட டீனேஜில, அவனுக்கு பொறுமையா உதவுறதுக்காக நாங்க எடுத்த முயற்சிக்கு பலன் கிடைச்சுது. நாங்க சொன்ன விஷயங்கள் அவனோட மனசுல பதிஞ்சுது. இத நினைக்குறப்போ எங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்று கில்லிஸ் சொல்கிறார்.
தங்களுடைய மகனுக்குப் பொறுமையாக உதவி செய்துகொண்டிருந்த அதேசமயத்தில், யெகோவா தங்களுக்கு உதவுவார் என்றும் மத்தியாஸின் அப்பா அம்மா நம்பிக்கையோடு இருந்தார்கள். “மத்தியாஸ நாங்க ரொம்ப நேசிக்குறதாவும், விஷயங்கள புரிஞ்சுக்க யெகோவா அவனுக்கு உதவணும்னு கேட்டு நாங்க ஊக்கமா ஜெபம் செய்றதாவும் அவன்கிட்ட அடிக்கடி சொல்வேன்” என்று கில்லிஸ் சொல்கிறார். பொறுமையோடு இருந்ததையும் விட்டுக்கொடுக்காமல் இருந்ததையும் நினைத்து கில்லிஸும் அவருடைய மனைவியும் சந்தோஷப்படுகிறார்கள்.
ரொம்ப நாட்களாக வியாதிப்பட்டிருக்கும் குடும்பத்தாரையோ நண்பர்களையோ கவனித்துக்கொள்ளும்போதும் நமக்குப் பொறுமை தேவை! எலன் என்பவருடைய அனுபவத்தைப் பார்க்கலாம்.b (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) இவரும் ஸ்கேண்டினேவியாவில்தான் இருக்கிறார்.
சுமார் எட்டு வருஷங்களுக்கு முன்பு, எலனுடைய கணவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். அது அவருடைய மூளையின் செயல்பாட்டை பாதித்தது. அதனால், சந்தோஷம்... துக்கம்... பரிதாபம்... என எந்த உணர்ச்சியும் அவருக்கு இல்லாமல் போய்விட்டது. இந்தச் சூழ்நிலையைச் சமாளிப்பது எலனுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. “ரொம்ப பொறுமையா இருக்க வேண்டியிருக்கு, நான் நிறைய ஜெபம் செய்றேன் . . . எனக்கு ரொம்ப பிடிச்ச வசனம், பிலிப்பியர் 4:13! அது எனக்கு ஆறுதலா இருக்கு. ‘என்னைப் பலப்படுத்துகிறவர் மூலம் எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பலம் இருக்கிறது’னு அந்த வசனம் சொல்லுது” என்கிறார் எலன். யெகோவா தரும் பலத்தாலும், அவருடைய ஆதரவாலும், இந்தச் சூழ்நிலையை எலன் பொறுமையாகச் சமாளித்துவருகிறார்.—சங். 62:5, 6.
யெகோவாவைப் போலவே பொறுமையோடு இருங்கள்
பொறுமையைக் காட்டுவதில் யெகோவாதான் மிகச் சிறந்த முன்மாதிரி! (2 பே. 3:15) யெகோவாவின் பொறுமையைப் பற்றி நாம் அடிக்கடி பைபிளில் படிக்கிறோம். (நெ. 9:30; ஏசா. 30:18) சோதோமை அழிப்பதென்று யெகோவா முடிவெடுத்தபோது, ஆபிரகாம் யெகோவாவிடம் அடுக்கடுக்காகக் கேள்விகளைக் கேட்டார். அப்போது யெகோவா என்ன செய்தாரென்று ஞாபகம் இருக்கிறதா? அவர் ஆபிரகாமைத் தடுக்கவில்லை! ஆபிரகாம் எழுப்பிய ஒவ்வொரு கேள்வியையும் பொறுமையோடு கேட்டார், ஆபிரகாமின் கவலைகளைப் புரிந்துகொண்டார். பிறகு, ஆபிரகாம் சொன்ன வார்த்தைகளையே திரும்பச் சொன்னதன் மூலம், அவர் பேசியபோது தான் பொறுமையோடு கேட்டுக்கொண்டிருந்ததை வெளிக்காட்டினார். சோதோம் நகரத்தில் 10 பேர் நீதிமான்களாக இருந்தால்கூட அதை அழிக்கப்போவதில்லை என்று அவருக்கு உறுதியளித்தார். (ஆதி. 18:22-33) யெகோவா எப்போதுமே பொறுமையைக் காட்டுகிறார்; அவர் ஒருபோதும் உணர்ச்சிவசப்படுவதில்லை!
பொறுமை என்ற குணம், புதிய சுபாவத்தின் ஒரு பாகம்! அது எல்லா கிறிஸ்தவர்களுக்கும் இருக்க வேண்டிய ஒரு குணம்! உண்மையிலேயே பொறுமையாக இருப்பதற்கு நம்மால் முடிந்ததையெல்லாம் செய்யும்போது, நம்மேல் அக்கறையாக இருக்கிற... நம்மிடம் பொறுமையைக் காட்டுகிற... நம் அப்பா யெகோவாவுக்கு நம்மால் புகழ் சேர்க்க முடியும். அதோடு, ‘விசுவாசத்தாலும் பொறுமையாலும் கடவுளுடைய வாக்குறுதிகளைப் பெற்றவர்களுடைய’ பட்டியலில் நாமும் ஒருவராக இருக்க முடியும்.
a ‘கடவுளுடைய சக்தியால் உண்டாகிற குணங்களை’ விளக்கும் இந்தத் தொடர்கட்டுரையில், அன்பு என்ற குணத்தைப் பற்றி முதல் கட்டுரையில் சிந்தித்தோம்.
b பெயர் மாற்றப்பட்டிருக்கிறது.