“சந்தோஷமாகவே இருக்க வேண்டும்”
“யெகோவாவுக்கு உற்சவத்தைக் [அதாவது, பண்டிகையை] கொண்டாடிச் சந்தோஷமாகவே இருக்க வேண்டும்.”—உபாகமம் 16:15, திருத்திய மொழிபெயர்ப்பு.
1. (அ) சாத்தான் எழுப்பிய விவாதங்கள் யாவை? (ஆ) ஆதாமும் ஏவாளும் கலகம்செய்த பிறகு யெகோவா எதை முன்னறிவித்தார்?
ஆதாமையும் ஏவாளையும் அவர்களுடைய படைப்பாளருக்கு விரோதமாக சாத்தான் கலகம்செய்ய வைத்தபோது, இரண்டு அதிமுக்கியமான விவாதங்களை எழுப்பினான். முதலாவது, யெகோவா உண்மையுள்ளவரா என்பதையும் அவர் ஆளும் விதம் சரியானதா என்பதையும் அவன் கேள்விக்கிடமாக்கினான். இரண்டாவது, மனிதர் சுயநல காரணங்களுக்காகவே கடவுளை வணங்குகிறார்கள் என மறைமுகமாகக் குறிப்பிட்டான். இந்த இரண்டாவது விவாதத்தை யோபுவின் காலத்தில் வெளிப்படையாகவே குறிப்பிட்டான். (ஆதியாகமம் 3:1-6; யோபு 1:9, 10; 2:4, 5) இருந்தாலும், இந்த விவாதங்களுக்குப் பதில் அளிக்க யெகோவா உடனடியாக நடவடிக்கை எடுத்தார். இவற்றைத் தாம் சரிசெய்யப் போகும் விதத்தை ஆதாமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்தில் இருக்கையிலேயே அவர் முன்னறிவித்தார். வரவிருக்கும் ‘வித்துவின்’ குதிங்கால் நசுக்கப்படும் என்றும் அந்த வித்துவோ சாத்தானின் தலையை நசுக்கி அழித்துவிடும் என்றும் அவர் முன்னறிவித்தார்.—ஆதியாகமம் 3:15.
2. ஆதியாகமம் 3:15-ல் உள்ள தீர்க்கதரிசனத்தைத் தாம் நிறைவேற்ற போகும் விதத்தைப் பற்றி என்னென்ன தகவல்களை யெகோவா அளித்தார்?
2 காலம் செல்லச்செல்ல அந்தத் தீர்க்கதரிசனத்தைப் பற்றிய கூடுதல் தகவல்களை யெகோவா அளித்தார்; அது கண்டிப்பாக நிறைவேறும் என்பதை இதன்மூலம் நிரூபித்தார். உதாரணமாக, ஆபிரகாமின் சந்ததியிலிருந்து அந்த “வித்து” வருவார் என அவரிடம் கடவுள் சொன்னார். (ஆதியாகமம் 22:15-18) ஆபிரகாமின் பேரனான யாக்கோபு, இஸ்ரவேலின் 12 கோத்திரங்களுக்குத் தகப்பனாக ஆனார். பொ.ச.மு. 1513-ல் அந்தக் கோத்திரங்கள் ஒரு தேசமாக ஆனபோது, அதற்கு ஒரு சட்டத்தொகுப்பை யெகோவா கொடுத்தார்; பல்வேறு வருடாந்தர பண்டிகைகளைக் கொண்டாடுவதும் அதில் அடங்கும். அப்பண்டிகைகள், “வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது” என அப்போஸ்தலன் பவுல் சொன்னார். (கொலோசெயர் 2:16, 17; எபிரெயர் 10:1) வித்துவைப் பற்றிய யெகோவாவின் நோக்கம் நிறைவேறுவதோடு சம்பந்தப்பட்ட முற்காட்சிகள் அப்பண்டிகைகளில் இடம்பெற்றன. அப்பண்டிகைகளைக் கொண்டாடியது இஸ்ரவேலருக்குப் பெருமகிழ்ச்சியைத் தந்தது. அவற்றைச் சுருக்கமாகச் சிந்திப்பது, யெகோவாவின் வாக்குறுதிகள் நம்பகமானவை என்பதில் நம் விசுவாசத்தைப் பலப்படுத்தும்.
வித்து வருகிறார்
3. வாக்குப்பண்ணப்பட்ட வித்து யார், அவருடைய குதிங்கால் எப்படி நசுக்கப்பட்டது?
3 முதல் தீர்க்கதரிசனத்தை யெகோவா உரைத்து 4,000-துக்கும் அதிகமான ஆண்டுகளுக்குப் பின் வாக்குப்பண்ணப்பட்ட வித்து வந்தார். அவர்தான் இயேசு. (கலாத்தியர் 3:16) ஒரு பரிபூரண மனிதனாக இயேசு மரணம்வரை உத்தமத்தைவிட்டு விலகாதிருந்தார்; இவ்வாறு, சாத்தானின் குற்றச்சாட்டுகளைப் பொய்யென நிரூபித்தார். அதோடு, இயேசு பாவமற்றவரானதால் அவருடைய மரணம் பெருமதிப்புமிக்க ஒரு பலியாக இருந்தது. அந்தப் பலியின் மூலம், ஆதாம் ஏவாளின் சந்ததியாரில் உண்மையுள்ளோருக்கு பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் இயேசு விடுதலை அளித்தார். கழுமரத்தில் அவர் மரித்தது, வாக்குப்பண்ணப்பட்ட வித்துவின் ‘குதிங்கால் நசுக்கப்படுவதற்கு’ அடையாளமாய் இருந்தது.—எபிரெயர் 9:11-14.
4. இயேசுவின் பலி எவ்வாறு முன்நிழலாகக் காட்டப்பட்டது?
4 பொ.ச. 33, நிசான் 14 அன்று இயேசு மரித்தார்.a நிசான் 14 அன்று இஸ்ரவேலில் பஸ்கா பண்டிகை சந்தோஷமாகக் கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் அந்நாளில், குடும்பத்தார் எல்லாரும் ஒன்றுசேர்ந்து விருந்துண்டார்கள்; அதில் அவர்கள் பழுதற்ற ஓர் ஆட்டுக்குட்டியை சாப்பிட்டார்கள். இவ்விதத்தில், பொ.ச.மு. 1513, நிசான் 14 அன்று எகிப்தியரின் தலைப்பிள்ளைகளைத் தேவதூதன் கொன்றபோது, இஸ்ரவேலரின் தலைப்பிள்ளைகள் பாதுகாக்கப்படுவதற்கு ஆட்டுக்குட்டியின் இரத்தம் முக்கிய பங்கு வகித்ததை அவர்கள் நினைவுகூர்ந்தார்கள். (யாத்திராகமம் 12:1-14) அந்தப் பஸ்கா ஆட்டுக்குட்டி இயேசுவுக்கு முன்நிழலாக இருந்தது; அவரைக் குறித்து அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு சொன்னார்: “நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்கிறாரே.” (1 கொரிந்தியர் 5:7) பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்தத்தைப்போல, இயேசு சிந்திய இரத்தமும் அநேகருக்கு இரட்சிப்பை அளிக்கிறது.—யோவான் 3:16, 36.
‘நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானவர்’
5, 6. (அ) இயேசு எப்போது உயிர்த்தெழுப்பப்பட்டார், நியாயப்பிரமாணத்தில் அச்சம்பவம் எப்படி முன்நிழலாகக் காட்டப்பட்டது? (ஆ) ஆதியாகமம் 3:15 நிறைவேற இயேசுவின் உயிர்த்தெழுதல் எப்படி உதவியது?
5 தம்முடைய பலியின் மதிப்பை தம் பிதாவிடம் சமர்ப்பிப்பதற்காக மூன்றாம் நாளில் இயேசு உயிர்த்தெழுப்பப்பட்டார். (எபிரெயர் 9:24) மற்றொரு பண்டிகை அவருடைய உயிர்த்தெழுதலுக்கு முன்நிழலாக இருந்தது. நிசான் 14-க்கு அடுத்த நாளிலிருந்து புளிப்பில்லா அப்பப்பண்டிகை ஆரம்பமானது. அதற்கும் அடுத்த நாள், அதாவது நிசான் 16 அன்று, இஸ்ரவேலர் தங்கள் முதல் அறுப்பில் கிடைத்த வாற்கோதுமையின் முதற்பலனாகிய கதிர்க்கட்டை, யெகோவாவின் சந்நிதியில் அசைவாட்டுவதற்காக ஆசாரியனிடம் கொண்டுவந்தார்கள். (லேவியராகமம் 23:6-14) பொ.ச. 33-ஆம் ஆண்டு அதே நாளில், தம்முடைய ‘உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியை’ என்றென்றைக்குமாக ஒழித்துக்கட்டுவதற்கு சாத்தான் எடுத்த கொடிய முயற்சிகளை யெகோவா குலைத்துப்போட்டது எவ்வளவு பொருத்தமானது! பொ.ச. 33, நிசான் 16 அன்று இயேசுவை யெகோவா உயிர்த்தெழுப்பி, ஆவி சிருஷ்டியாக சாவாமையுள்ள வாழ்க்கையைக் கொடுத்தார்.—வெளிப்படுத்துதல் 3:14; 1 பேதுரு 3:18.
6 இயேசு, ‘நித்திரையடைந்தவர்களில் மரித்தோரிலிருந்தெழுந்த முதற்பலனானார்.’ (1 கொரிந்தியர் 15:20) அவருக்கு முன் உயிர்த்தெழுந்தவர்கள் மீண்டும் மரித்தார்கள், இயேசுவோ மீண்டும் மரிக்கவில்லை. மாறாக, பரலோகத்தில் யெகோவாவின் வலதுபாரிசத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்; அங்கே, யெகோவாவின் பரலோக ராஜ்யத்தின் ராஜாவாக நியமிக்கப்படும்வரை காத்திருந்தார். (சங்கீதம் 110:1; அப்போஸ்தலர் 2:32, 33; எபிரெயர் 10:12, 13) அவர் இப்போது ராஜாவாக ஏற்படுத்தப்பட்டிருப்பதால், அவருடைய பரம விரோதியான சாத்தானின் தலையை நசுக்கி, அவனையும் அவனுடைய வித்துவையும் என்றென்றைக்குமாக ஒழித்துக்கட்ட அவரால் முடியும்.—வெளிப்படுத்துதல் 11:15, 18; 20:1-3, 10.
ஆபிரகாமுடைய வித்துவான அநேகர்
7. வாரங்களின் பண்டிகை என்பது என்ன?
7 ஏதேனில் வாக்குறுதி அளிக்கப்பட்ட வித்து இயேசுவே; அவர் மூலமாய் யெகோவா, ‘பிசாசினுடைய கிரியைகளை அழிப்பார்.’ (1 யோவான் 3:8) என்றாலும், ஆபிரகாமிடம் யெகோவா பேசியபோது, அவருடைய “வித்து” ஒன்றுக்கு மேற்பட்டதாய் இருக்கும் எனக் குறிப்பிட்டார். அவர்கள், “வானத்து நட்சத்திரங்களைப்போலவும், கடற்கரை மணலைப்போலவும்” இருப்பார்கள். (ஆதியாகமம் 22:17) அந்த ‘வித்துவின்’ பாகமான மற்றவர்கள் வருவது, மகிழ்ச்சிக்குரிய மற்றொரு பண்டிகையில் முன்நிழலாகக் காட்டப்பட்டது. நிசான் 16-லிருந்து ஐம்பது நாட்களுக்குப்பின் வாரங்களின் பண்டிகையை இஸ்ரவேலர் கொண்டாடினார்கள். இதைப்பற்றி நியாயப்பிரமாணம் இவ்வாறு குறிப்பிடுகிறது: ‘ஏழாம் ஓய்வுநாளுக்கு மறுநாளாகிய ஐம்பதாம் நாள்மட்டும் எண்ணி, கர்த்தருக்குப் புதிய போஜனபலியைச் செலுத்தக்கடவீர்கள். நீங்கள் ஒரு மரக்காலிலே பத்தில் இரண்டு பங்காகிய மெல்லிய மாவிலே புளிப்பாகப் பாகம்பண்ணப்பட்ட அசைவாட்டும் காணிக்கையாயிருக்கிற இரண்டு அப்பங்களை உங்கள் வாசஸ்தலங்களிலிருந்து கர்த்தருக்கென்று முதற்பலனாகக் கொண்டுவர வேண்டும்.’b—லேவியராகமம் 23:16, 17, 20.
8. பொ.ச. 33, பெந்தெகொஸ்தே நாளன்று என்ன குறிப்பிடத்தக்க சம்பவம் நடந்தது?
8 இயேசு பூமியில் இருந்தபோது, இந்த வாரங்களின் பண்டிகை பெந்தெகொஸ்தே பண்டிகை என அழைக்கப்பட்டது. (“ஐம்பதாவது” என்ற அர்த்தம் தரும் கிரேக்க வார்த்தையிலிருந்து பெந்தெகொஸ்தே என்ற வார்த்தை பிறந்தது.) பொ.ச. 33, பெந்தெகொஸ்தே நாளன்று, எருசலேமில் கூடியிருந்த 120 சீஷர்கள்மேல் மகா பிரதான ஆசாரியரான, உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு கிறிஸ்து பரிசுத்த ஆவியை ஊற்றினார். இவ்வாறு அவர்கள் கடவுளுடைய அபிஷேகம் செய்யப்பட்ட குமாரர்களாகவும் இயேசு கிறிஸ்துவின் சகோதரர்களாகவும் ஆனார்கள். (ரோமர் 8:15-17) அவர்கள் ஒரு புதிய தேசமாக, ‘தேவனுடைய இஸ்ரவேலராக’ ஆனார்கள். (கலாத்தியர் 6:16) சிறிய எண்ணிக்கையில் இருந்த அவர்கள் கடைசியில் 1,44,000 பேராக ஆவார்கள்.—வெளிப்படுத்துதல் 7:1-4.
9, 10. அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் சபை பெந்தெகொஸ்தே நாளன்று எவ்வாறு முன்நிழலாகக் காட்டப்பட்டது?
9 ஒவ்வொரு ஆண்டும் பெந்தெகொஸ்தே நாளின்போது யெகோவாவின் சந்நிதியில் அசைவாட்டப்பட்ட புளிப்புள்ள அப்பங்கள் இரண்டும் அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் சபைக்கு முன்நிழலாக இருந்தன. அந்த அப்பங்கள் புளிப்புள்ளவையாக இருந்தது, அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களிடம் சுதந்தரிக்கப்பட்ட பாவம் இன்னும் இருப்பதைக் காட்டியது. இருந்தாலும், இயேசுவின் மீட்கும்பலியின் அடிப்படையில் அவர்கள் யெகோவாவை அணுக முடியும். (ரோமர் 5:1, 2) ஏன் இரண்டு அப்பங்கள் செலுத்தப்பட்டன? அபிஷேகம் செய்யப்பட்ட குமாரர்கள் இரண்டு தொகுதிகளிலிருந்து, அதாவது முதலில் யூதர்களிலிருந்தும் பிற்பாடு புறஜாதிகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பதை அர்த்தப்படுத்தியிருக்கலாம்.—கலாத்தியர் 3:26-29; எபேசியர் 2:13-18.
10 பெந்தெகொஸ்தே நாளன்று அளிக்கப்பட்ட இரண்டு அப்பங்கள் கோதுமை அறுப்பின் முதற்பலனிலிருந்து செய்யப்பட்டவை. அதற்கு ஒப்பாக, ஆவியினால் பிறப்பிக்கப்பட்ட கிறிஸ்தவர்களும் ‘அவருடைய சிருஷ்டிகளில் முதற்பலன்கள்’ என அழைக்கப்படுகிறார்கள். (யாக்கோபு 1:18) இவர்களே இயேசு சிந்திய இரத்தத்தின் அடிப்படையில் பாவங்களுக்கு முதலாவதாக மன்னிப்பைப் பெறுகிறவர்கள்; இது, பரலோகத்தில் சாவில்லா வாழ்க்கையைப் பெற இவர்களுக்கு வாய்ப்பளிக்கிறது; அங்கே இயேசுவுடன் அவருடைய ராஜ்யத்தில் அவர்கள் ஆட்சி செய்வார்கள். (1 கொரிந்தியர் 15:53; பிலிப்பியர் 3:20, 21; வெளிப்படுத்துதல் 20:6) அத்தகைய ஸ்தானத்தைப் பெற்ற இவர்கள், வெகு சீக்கிரத்தில் ‘இருப்புக்கோலால் அவர்களை [தேசங்களை] ஆளுவார்கள்,’ ‘தங்களுடைய கால்களின் கீழே சாத்தான் நசுக்கப்படுவதையும்’ பார்ப்பார்கள். (வெளிப்படுத்துதல் 2:26, 27; ரோமர் 16:20) அப்போஸ்தலன் யோவான் இவ்வாறு சொன்னார்: “ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் அவரைப் பின்பற்றுகிறவர்கள் இவர்களே; இவர்கள் மனுஷரிலிருந்து தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்பலனாக மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள்.”—வெளிப்படுத்துதல் 14:4.
விடுதலையைக் குறிக்கும் நாள்
11, 12. (அ) பாவநிவாரண நாளில் என்ன செய்யப்பட்டது? (ஆ) காளையையும் வெள்ளாட்டுக்கடாக்களையும் பலி செலுத்தியதிலிருந்து இஸ்ரவேலர் என்ன நன்மைகளைப் பெற்றார்கள்?
11 திஷ்ரிc என பிற்பாடு அழைக்கப்பட்ட ஏத்தானீம் மாதம் பத்தாம் நாளில் இஸ்ரவேலர் கொண்டாடிய பண்டிகை, இயேசுவின் மீட்கும்பலியால் மனிதகுலம் எப்படி நன்மை அடையும் என்பதற்கு முன்நிழலாக இருந்தது. பாவநிவாரண நாளன்று அந்த முழு தேசத்தாரும் ஒன்றுகூடி வந்து தங்களுடைய பாவங்களைப் போக்குவதற்குப் பலிகளைச் செலுத்தினார்கள்.—லேவியராகமம் 16:29, 30.
12 பாவநிவாரண நாளன்று, பிரதான ஆசாரியன் ஓர் இளங்காளையைக் கொன்று, அதன் இரத்தத்தில் கொஞ்சத்தை உடன்படிக்கைப் பெட்டியின் மூடியின்மீது ஏழுமுறை தெளித்தார்; இவ்வாறு இரத்தத்தை அடையாள அர்த்தத்தில் யெகோவாவின் சந்நிதியில் அளித்தார். இது பிரதான ஆசாரியனுடைய பாவங்களுக்காகவும், ‘அவருடைய வீட்டாரான’ உதவி ஆசாரியர்கள், லேவியர்கள் ஆகியோரின் பாவங்களுக்காகவும் அளிக்கப்பட்டது. அதன் பிறகு பிரதான ஆசாரியன் இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களைக் கொண்டுவந்தார். அவற்றில் ஒன்றை “ஜனத்தினுடைய” பாவநிவாரண பலியாகச் செலுத்தினார். அதன் இரத்தத்திலும் கொஞ்சத்தை எடுத்து மகா பரிசுத்த ஸ்தலத்திலுள்ள பெட்டியின் மூடியின்மேல் தெளித்தார். அதன் பிறகு, இரண்டாவது வெள்ளாட்டுக்கடாவின் தலையில் பிரதான ஆசாரியன் கைகளை வைத்து இஸ்ரவேலருடைய அக்கிரமங்களை அறிக்கையிட்டார். பிறகு, அந்த வெள்ளாட்டுக்கடா இஸ்ரவேலரின் பாவங்களை அடையாள அர்த்தத்தில் சுமந்து செல்லும்படி வனாந்தரத்தில் விடப்பட்டது.—லேவியராகமம் 16:3-16, 21, 22.
13. பாவநிவாரண நாளில் நடந்த சம்பவங்கள் எவ்வாறு இயேசு வகிக்கும் பாகத்திற்கு முன்நிழலாக இருந்தன?
13 முன்நிழலாய் காட்டப்பட்ட அக்காரியங்களைப் போலவே, மகா பிரதான ஆசாரியரான இயேசுவும் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதற்காக தம்முடைய சொந்த இரத்தத்தின் மதிப்பைப் பயன்படுத்துகிறார். முதலாவதாக, அவருடைய இரத்தத்தின் மதிப்பு, ‘ஆவிக்கேற்ற மாளிகையாகிய [அதாவது, வீட்டாராகிய]’ அபிஷேகம் செய்யப்பட்ட 1,44,000 கிறிஸ்தவர்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது; இதனால், அவர்கள் நீதிமான்களாக அறிவிக்கப்படுவதற்கும் யெகோவாவுக்கு முன்பாக சுத்தமான நிலையில் இருப்பதற்கும் முடிகிறது. (1 பேதுரு 2:5; 1 கொரிந்தியர் 6:11) காளையைப் பலிசெலுத்தியது இதற்கு முன்நிழலாக இருக்கிறது. இதன் மூலம், பரலோகத்திற்குச் செல்ல அவர்களுக்கு வழி திறக்கப்படுகிறது. இரண்டாவதாக, இயேசுவுடைய இரத்தத்தின் மதிப்பு, கிறிஸ்துவில் விசுவாசம் வைக்கிற மற்ற லட்சக்கணக்கானோருக்குப் பயன்படுத்தப்படுகிறது; இதையே வெள்ளாட்டுக்கடாவின் பலி சுட்டிக்காட்டியது. இவர்கள், ஆதாமும் ஏவாளும் இழந்துபோன முடிவில்லா வாழ்வை பூமியில் பெறுவார்கள். (சங்கீதம் 37:10, 11) இஸ்ரவேலரின் பாவங்களை அடையாள அர்த்தத்தில் அந்த வெள்ளாட்டுக்கடா வனாந்தரத்திற்குச் சுமந்து சென்றதுபோலவே இயேசுவும் தாம் சிந்திய இரத்தத்தின் அடிப்படையில் மனிதகுலத்தின் பாவங்களைச் சுமந்து செல்கிறார்.—ஏசாயா 53:4, 5.
யெகோவாவுக்கு முன் சந்தோஷமாயிருத்தல்
14, 15. கூடாரப் பண்டிகையின்போது என்ன செய்யப்பட்டது, அப்பண்டிகை இஸ்ரவேலருக்கு எவற்றை நினைப்பூட்டியது?
14 பாவநிவாரண நாளுக்குப் பிறகு, இஸ்ரவேலர் கூடாரப் பண்டிகையைக் கொண்டாடினார்கள்; அது யூதர்கள் கொண்டாடிய வருடாந்தரப் பண்டிகைகளில் மிகவும் சந்தோஷத்திற்குரிய பண்டிகையாக இருந்தது. (லேவியராகமம் 23:34-43) அப்பண்டிகை ஏத்தானீம் மாதம் 15-ஆம் தேதியிலிருந்து 21-ஆம் தேதிவரை கொண்டாடப்பட்டது; 22-ஆம் தேதி இஸ்ரவேலர் எல்லாரும் சபைகூடி வருவதோடு அப்பண்டிகை நிறைவுபெற்றது. அறுவடையின் சேர்ப்புக்காலம் முடிவுற்றதற்கு அது அடையாளமாக இருந்தது; அதோடு கடவுள் செய்த ஏராளமான நன்மைகளுக்கு நன்றி தெரிவிக்கும் சமயமாகவும் அது இருந்தது. அதன் காரணமாக, அதைக் கொண்டாடியோருக்கு யெகோவா இவ்வாறு கட்டளையிட்டார்: “உன்னுடைய எல்லா வரத்திலும் உன் கைகளின் எல்லா வேலையிலும் உன் கடவுளாகிய யெகோவாவே உன்னை ஆசீர்வதிக்கிறபடியினால் . . . சந்தோஷமாகவே இருக்க வேண்டும்.” (உபாகமம் 16:15, தி.மொ.) அது எவ்வளவு சந்தோஷமான சமயமாக இருந்திருக்க வேண்டும்!
15 அந்தப் பண்டிகையின்போது, இஸ்ரவேலர் ஏழு நாட்களுக்குக் கூடாரங்களில் தங்கியிருந்தார்கள். ஒருசமயம் வனாந்தரத்தில் கூடாரங்களில் அவர்கள் தங்க நேர்ந்ததை அது அவர்களுக்கு நினைவுபடுத்தியது. ஒரு தகப்பனாக யெகோவா அவர்களைக் கவனித்துக்கொண்டதை சிந்தித்துப் பார்க்க அந்தப் பண்டிகை அவர்களுக்கு அதிக வாய்ப்பை அளித்தது. (உபாகமம் 8:15, 16) அதுமட்டுமல்ல, பணக்காரர், ஏழை என்ற பாகுபாடின்றி எல்லாருமே ஒரேபோல் கூடாரங்களில் தங்கியிருந்தது, பண்டிகை காலத்தில் இஸ்ரவேலர் எல்லாரும் சரிசமானமாய் இருந்ததையும் அவர்களுக்கு நினைப்பூட்டியது.—நெகேமியா 8:14-16.
16. கூடாரப் பண்டிகை எதற்கு முன்நிழலாக இருந்தது?
16 கூடாரப் பண்டிகை என்பது அறுப்பின் பண்டிகையாக, அதாவது சந்தோஷத்துடன் கொண்டாடப்படும் சேர்ப்புக்கால பண்டிகையாக இருந்தது; அது, இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைப்போரை சந்தோஷத்துடன் கூட்டிச்சேர்ப்பதற்கு முன்நிழலாக இருந்தது. இந்தக் கூட்டிச்சேர்க்கப்படுதல் பொ.ச. 33, பெந்தெகொஸ்தே நாளில் ஆரம்பமானது; அதாவது, இயேசுவின் 120 சீஷர்கள் ‘பரிசுத்த ஆசாரியக்கூட்டத்தின்’ பாகமாக ஆவதற்கு அபிஷேகம் செய்யப்பட்டபோது ஆரம்பமானது. இஸ்ரவேலர் சில நாட்களுக்குக் கூடாரங்களில் தங்கியிருந்ததுபோல, அபிஷேகம் செய்யப்பட்ட இவர்களும் இந்தத் தேவபக்தியற்ற உலகில் தாங்கள் ‘பரதேசிகளே’ என்பதை அறிந்திருக்கிறார்கள். இவர்கள் பரலோக நம்பிக்கையுடையவர்கள். (1 பேதுரு 2:5, 11) அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் கூட்டிச்சேர்க்கப்படுவது, இந்த “கடைசி நாட்களில்” முடிவடையும் தறுவாயில் இருக்கிறது; இப்போது, 1,44,000 பேரில் கடைசியானவர்கள் கூட்டிச்சேர்க்கப்பட்டு வருகிறார்கள்.—2 தீமோத்தேயு 3:1.
17, 18. (அ) அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களைத் தவிர மற்றவர்களும் இயேசுவின் பலியிலிருந்து நன்மை அடைவார்கள் என்பதை எது காட்டுகிறது? (ஆ) அடையாள அர்த்தமுள்ள கூடாரப் பண்டிகையிலிருந்து இன்று யாரும்கூட நன்மை அடைகிறார்கள், சந்தோஷம் தரும் அப்பண்டிகை எப்போது முடிவடையும்?
17 கூடாரப் பண்டிகையின்போது 70 காளைகளை பலிசெலுத்தியது குறிப்பிடத்தக்கது. (எண்ணாகமம் 29:12-34) எழுபது என்ற எண் 7-ன் 10 மடங்காகும். பைபிளில் 7, 10 ஆகிய எண்கள் பரலோகத்திற்குரிய மற்றும் பூமிக்குரிய முழுமையைக் குறிக்கின்றன. ஆகவே, நோவாவிலிருந்து வந்த உண்மையுள்ள மொத்த மனிதர்களையும் குறிக்கும் 70 குடும்பத்தாருக்கும் இயேசுவின் பலி நன்மை அளிக்கும். (ஆதியாகமம் 10:1-29) இதற்கு இசைய, நம் காலத்தில் எல்லா நாடுகளையும் சேர்ந்தவர்கள் இயேசுவில் விசுவாசம் வைத்து, பரதீஸ் பூமியில் வாழும் வாய்ப்பைப் பெறுவதற்காகக் கூட்டிச்சேர்க்கும் வேலை பரந்தளவில் நடைபெற்று வருகிறது.
18 இன்று நடந்துவரும் இந்தக் கூட்டிச்சேர்க்கும் வேலையை அப்போஸ்தலன் யோவான் தரிசனத்தில் கண்டார். முதலில், 1,44,000 பேரில் கடைசியானவர்கள் முத்திரையிடப்படுவதைப் பற்றிய அறிவிப்பை அவர் கேட்டார். அடுத்து, ‘ஒருவரும் எண்ணக்கூடாத திரளான கூட்டத்தார்’ “தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து” யெகோவாவுக்கும் இயேசுவுக்கும் முன்பாக நிற்பதைக் கண்டார். இவர்கள் “மிகுந்த உபத்திரவத்திலிருந்து” தப்பிப்பிழைத்து புதிய பூமிக்கு வருகிறார்கள். அவர்களும்கூட இந்தப் பொல்லாத உலகத்தில் பரதேசிகளாகவே வாழ்கிறார்கள்; ‘ஆட்டுக்குட்டியானவர் இவர்களை மேய்த்து, இவர்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்தும்’ சமயத்தை நம்பிக்கையோடு எதிர்நோக்கியிருக்கிறார்கள். அச்சமயத்தில், “தேவன்தாமே இவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார்.” (வெளிப்படுத்துதல் 7:1-10, 14-17) கிறிஸ்துவின் ஆயிர வருட ஆட்சிக்குப் பிறகு அடையாள அர்த்தமுள்ள அந்தக் கூடாரப் பண்டிகை முடிவடையும்; அப்போது இந்தத் திரள்கூட்டத்தாருக்கும் உயிர்த்தெழுப்பப்படுவோரில் உண்மையுள்ளோருக்கும் நித்திய ஜீவன் அளிக்கப்படும்.—வெளிப்படுத்துதல் 20:5.
19. இஸ்ரவேலில் கொண்டாடப்பட்ட பண்டிகைகளைப் பற்றிச் சிந்திப்பதால் நாம் எப்படி நன்மை அடைகிறோம்?
19 பூர்வ யூத பண்டிகைகளைப் பற்றித் தியானித்துப் பார்ப்பதன் மூலம் நாமும் ‘சந்தோஷமாகவே இருக்க’ முடியும். ஏதேனில் யெகோவா சொன்ன தீர்க்கதரிசனம் எப்படி நிறைவேறும் என்பதற்கு முன்நிழலாக அவர் அளித்தவற்றைச் சிந்தித்துப் பார்ப்பது சிலிர்ப்பூட்டுகிறது. அதோடு, படிப்படியாக அவை நிறைவேறி வருவதைக் கண்ணாரப் பார்ப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. அந்த வித்து ஏற்கெனவே வந்துவிட்டதையும் அவருடைய குதிங்கால் நசுக்கப்பட்டதையும் நாம் அறிந்திருக்கிறோம். இப்போது அவர் பரலோகத்தில் ராஜாவாக இருக்கிறார். மேலும், 1,44,000 பேரில் பெரும்பாலோர் ஏற்கெனவே மரணம்வரை தங்களுடைய உண்மைத்தன்மையை நிரூபித்துவிட்டார்கள். இன்னும் மீதமிருப்பது என்ன? இந்தத் தீர்க்கதரிசனம் எவ்வளவு சீக்கிரத்தில் முழுமையாக நிறைவேறும்? இக்கேள்விகளுக்கு அடுத்தக் கட்டுரையில் பதிலைக் காணலாம்.
[அடிக்குறிப்புகள்]
a நிசான் மாதம், நம்முடைய காலண்டரில் மார்ச்/ஏப்ரல் மாதங்களுக்கு இணையான மாதமாகும்.
b புளிப்பாகப் பாகம்பண்ணப்பட்ட இரண்டு அப்பங்கள் அசைவாட்டும் காணிக்கையாக அளிக்கப்பட்டபோது பொதுவாக, ஆசாரியன் அவற்றை உள்ளங்கைகளில் வைத்து, தன் கைகளை உயர்த்தி ஒருபுறத்திலிருந்து மறுபுறத்திற்கு அசைப்பார். இப்படி அசைப்பது காணிக்கையை யெகோவாவுக்குச் சமர்ப்பிப்பதை அடையாளப்படுத்தியது.—யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட வேதாகமத்தின்பேரில் உட்பார்வை (ஆங்கிலம்), தொகுதி 2, பக்கம் 528-ஐக் காண்க.
c ஏத்தானீம், அல்லது திஷ்ரி மாதம் நம்முடைய காலண்டரில் செப்டம்பர்/அக்டோபர் மாதங்களுக்கு இணையான மாதமாகும்.
உங்களால் விளக்க முடியுமா?
• பஸ்கா ஆட்டுக்குட்டி எதற்கு முன்நிழலாக இருந்தது?
• யார் கூட்டிச்சேர்க்கப்படுவது பெந்தெகொஸ்தே பண்டிகையில் முன்நிழலாகக் காட்டப்பட்டது?
• இயேசுவின் மீட்கும்பலி நன்மை அளிக்கும் விதத்தை பாவநிவாரண பலியின் என்ன அம்சங்கள் சுட்டிக்காட்டுகின்றன?
• கூடாரப் பண்டிகை, கிறிஸ்தவர்கள் கூட்டிச்சேர்க்கப்படுவதற்கு எவ்விதத்தில் முன்நிழலாக இருந்தது?
[பக்கம் 22, 23-ன் அட்டவணை]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
பஸ்கா
நிசான் 14
சம்பவம்:
பஸ்கா ஆட்டுக்குட்டி அடிக்கப்பட்டது
முன்நிழலாக இருந்தது:
இயேசு பலியானது
புளிப்பில்லா அப்பப் பண்டிகை (நிசான் 15-21)
நிசான் 15
சம்பவம்:
ஓய்வுநாள்
நிசான் 16
சம்பவம்:
வாற்கோதுமை அளிக்கப்பட்டது
முன்நிழலாக இருந்தது:
இயேசு உயிர்த்
50 நாட்கள்
வாரப் பண்டிகை (பெந்தெகொஸ்தே)
சீவான் 6
சம்பவம்:
இரண்டு அப்பங்கள் அளிக்கப்பட்டது
முன்நிழலாக இருந்தது:
இயேசு தம் அபிஷேகம் செய்யப்பட்ட சகோதரர்களை யெகோவாவுக்கு அளித்தது
பாவநிவாரண நாள்
திஷ்ரி 10
சம்பவம்:
ஒரு காளையும் இரண்டு ஆட்டுக்கடாக்களும் பலி செலுத்தப்பட்டது
முன்நிழலாக இருந்தது:
மனிதகுலம் அனைத்திற்காகவும் இயேசு தம் இரத்தத்தின் மதிப்பை அளித்தது
கூடாரப் செய்யப்பட்டவர்களும் பண்டிகை (சேர்ப்பின் பண்டிகை)
திஷ்ரி 15-21
சம்பவம்:
இஸ்ரவேலர் சந்தோஷத்தோடே கூடாரங்களில் தங்கியது, அறுவடையைக் குறித்து மகிழ்ந்தது, 70 காளைகளை பலிசெலுத்தியது
முன்நிழலாக இருந்தது:
அபிஷேகம் ‘செய்யப்பட்டவர்களும் திரள்கூட்டத்தாரும்’ கூட்டிச்சேர்க்கப்படுவது
[பக்கம் 21-ன் படங்கள்]
பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்தத்தைப்போல, இயேசு சிந்திய இரத்தமும் அநேகருக்கு இரட்சிப்பை அளிக்கிறது
[பக்கம் 22-ன் படங்கள்]
நிசான் 16-ல் வாற்கோதுமை அறுப்பின் முதற்பலன் அளிக்கப்பட்டது இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு முன்நிழலாக இருந்தது
[பக்கம் 23-ன் படங்கள்]
பெந்தெகொஸ்தே நாளில் அளிக்கப்பட்ட இரண்டு அப்பங்கள், அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் சபைக்கு முன்நிழலாக இருந்தன
[பக்கம் 24-ன் படங்கள்]
கூடாரப் பண்டிகை, அபிஷேகம் செய்யப்பட்டவர்களும் சகல தேசத்தைச் சேர்ந்த ‘திரள் கூட்டத்தாரும்’ சந்தோஷத்தோடு கூட்டிச்சேர்க்கப்படுவதற்கு முன்நிழலாக இருந்தது