யெகோவாவின் நினைப்பூட்டுதல்கள் உங்கள் இருதயத்தை மகிழ்விக்கட்டும்
“உம்முடைய நினைப்பூட்டுதல்கள் என்னுடைய நித்தியகால சொத்து.” —சங். 119:111, NW.
1. (அ) நினைப்பூட்டுதல்களுக்கு மக்கள் எப்படியெல்லாம் பிரதிபலிக்கிறார்கள்? (ஆ) பெருமைபிடித்த ஒருவர் அறிவுரையை எப்படி எடுத்துக்கொள்வார்?
அறிவுரைகளுக்கு மக்கள் வெவ்வேறு விதங்களில் பிரதிபலிக்கிறார்கள். அதிகாரத்தில் இருக்கும் ஒருவர் ஒரு விஷயத்தை நினைப்பூட்டும்போது உடனடியாகக் கீழ்ப்படிவதும், சமவயதில் இருப்பவர்களோ தகுதியில் குறைந்தவர்களோ சொல்லும்போது சட்டென மறுப்பதும் சகஜமாக இருக்கிறது. யாராவது புத்தி சொன்னாலோ கண்டித்தாலோ சிலர் வருத்தப்படுகிறார்கள், சோர்வடைகிறார்கள், தங்களை அவமதித்ததாகக்கூட உணருகிறார்கள். மறுபட்சத்தில், சிலர் தங்களைச் சரி செய்துகொள்ளத் தூண்டப்படுகிறார்கள், அதைச் சவாலாக எடுத்துக்கொண்டு இன்னும் நன்றாகச் செய்ய உந்துவிக்கப்படுகிறார்கள். மனிதர்களுக்குள் ஏன் இத்தனை வேறுபாடுகள்? இதற்கு ஒரு காரணம் பெருமை. ஆம், மனமேட்டிமை ஒருவருடைய அறிவுக்கண்ணை மறைத்து விடுகிறது. அதனால் எது சரி எது தவறு என்பதை நிதானிக்க முடியாமல் ஆலோசனைகளை ஒதுக்கித்தள்ளிவிடுகிறார். விளைவு? முத்தான புத்திமதிகளின் பயன்களை இழந்துவிடுகிறார்.—நீதி. 16:18.
2. கடவுளுடைய வார்த்தையிலிருந்து கிடைக்கும் அறிவுரையை உண்மைக் கிறிஸ்தவர்களான நாம் ஏன் சந்தோஷத்தோடு ஏற்றுக்கொள்கிறோம்?
2 உண்மைக் கிறிஸ்தவர்களாகிய நாம் கடவுளுடைய வார்த்தையிலிருந்து யாராவது அறிவுரை தரும்போது அதைச் சந்தோஷத்தோடு ஏற்றுக்கொள்கிறோம். உதாரணத்திற்கு, தவறான நடத்தையினால் வரும் ஆபத்துகளைக் கண்டறிய யெகோவாவின் நினைப்பூட்டுதல்கள் நமக்கு உதவுகின்றன. சொல்லப்போனால் பொருளாசை, ஒழுக்கக்கேடு, போதைப்பொருள் மற்றும் மதுபான துஷ்பிரயோகம் போன்ற படுகுழிகளைத் தவிர்க்க அவை உதவுகின்றன. (நீதி. 20:1; 2 கொ. 7:1; 1 தெ. 4:3-5; 1 தீ. 6:6-11) மேலும், கடவுளுடைய நினைப்பூட்டுதல்களுக்கு நாம் கீழ்ப்படியும்போது “மனமகிழ்ச்சியினால் கெம்பீரிக்கிறோம்.”—ஏசா. 65:14.
3. சங்கீதக்காரனின் என்ன மனப்பான்மையை நாம் பின்பற்றலாம்?
3 நம் பரலோகத் தகப்பனிடம் நமக்கிருக்கும் அருமையான பந்தத்தைக் காத்துக்கொள்வதற்கு, எப்போதும் அவருடைய ஞானமான அறிவுரைகளின்படி நடப்பது அவசியம். “உம்முடைய நினைப்பூட்டுதல்கள் என்னுடைய நித்தியகால சொத்து, அவை என்னுடைய இருதயத்தின் மகிழ்ச்சி” என்று சங்கீதக்காரன் சொன்னார். (சங். 119:111, NW) அதே மனப்பான்மை நமக்கும் இருக்கிறதா, அல்லது சில சமயங்களில் யெகோவாவின் கட்டளைகளைப் பாரமானவையாகக் கருதுகிறோமா? ஒருவேளை, ஒருவருடைய ஆலோசனை உங்களை கோபப்படுத்தினாலும் அதற்காக சோர்ந்துபோக வேண்டியதில்லை; ஏனென்றால், கடவுளின் ஒப்பற்ற ஞானத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை வைக்கலாம். இதற்கு உதவும் மூன்று வழிகளை இப்போது பார்க்கலாம்.
ஜெபத்தின் மூலம் நம்பிக்கையைப் பலப்படுத்துங்கள்
4. தாவீதின் வாழ்க்கையில் எது மாறவே இல்லை?
4 தாவீது ராஜாவின் வாழ்க்கையில் நிறைய மேடு பள்ளங்கள் இருந்தாலும் யெகோவாமீது அவருக்கிருந்த நம்பிக்கை மட்டும் மாறவே இல்லை. அவர் இவ்வாறு சொன்னார்: “யெகோவாவே உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன். என் தேவனே உம்மை நம்பியிருக்கிறேன்.” (சங். 25:1, 2) பரலோகத் தகப்பனிடம் இப்படிப்பட்ட உறுதியான நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள தாவீதுக்கு எது உதவியது?
5, 6. யெகோவாவிடம் தாவீது வைத்திருந்த நட்பை அவருடைய ஜெபங்கள் எப்படிக் காட்டின?
5 நிறைய பேர் கஷ்டம் வரும்போது மட்டுமே கடவுளைத் தேடுகிறார்கள். உங்கள் நண்பரோ உறவினரோ பணத்துக்காக அல்லது வேறெதாவது உதவிக்காக மட்டுமே உங்களிடம் வந்தால், அவரைப் பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள்? போகப் போக அவருடைய உள்நோக்கத்தை சந்தேகிக்க ஆரம்பிப்பீர்கள், அல்லவா? ஆனால், யெகோவாவோடு தாவீது வைத்திருந்த நட்பு அப்படியிருக்கவில்லை. வாழ்க்கையில் வசந்தம் வீசியபோதும் சரி சூறாவளி அடித்தபோதும் சரி, கடவுள்மீது அவருக்கு உண்மையான அன்பும் விசுவாசமும் இருந்ததை அவருடைய ஜெபங்கள் காட்டின.—சங். 40:8.
6 தாவீது யெகோவாவைப் புகழ்ந்து அவருக்கு நன்றி தெரிவித்த விதத்தைப் பாருங்கள்: “எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் பூமியெங்கும் மேன்மையுள்ளதாயிருக்கிறது!” (சங். 8:1) கடவுளோடு தாவீது வைத்திருந்த நெருக்கமான பந்தத்தை இந்த வார்த்தைகள் உணர்த்துகின்றன, அல்லவா? ஆம், கடவுளின் மகிமையையும் மேன்மையையும் பொன்னெனப் போற்றியதால் “நாள் முழுதும்” அவரைத் துதித்துப் புகழ தாவீது தூண்டப்பட்டார்.—சங். 35:28.
7. யெகோவாவிடம் தவறாமல் ஜெபிப்பதால் நாம் எப்படிப் பயனடைகிறோம்?
7 தாவீதைப் போலவே நாமும் அவருடன் தவறாமல் பேச்சுத்தொடர்பு கொள்ளும்போது யெகோவாமீது நமக்கிருக்கும் நம்பிக்கை பலப்படுகிறது. “கடவுளிடம் நெருங்கி வாருங்கள், அப்போது அவர் உங்களிடம் நெருங்கி வருவார்” என்று பைபிள் சொல்கிறது. (யாக். 4:8) ஜெபம் செய்யும்போது கடவுளிடம் நெருங்கி வர முடிகிறது; அவருடைய சக்தியைப் பெறுவதற்கான மிகச்சிறந்த வழியாக இது இருக்கிறது.—1 யோவான் 3:22-ஐ வாசியுங்கள்.
8. எப்போதும் ஒரே மாதிரியாக ஜெபிப்பதை ஏன் தவிர்க்க வேண்டும்?
8 எப்போதும் ஒரே மாதிரியாக ஜெபிக்கும் பழக்கம் உங்களுக்கு இருக்கிறதா? அப்படியென்றால், ஜெபிப்பதற்கு முன் என்ன சொல்லப்போகிறீர்கள் என்பதைச் சிந்தித்துப் பார்க்க சற்று நேரம் ஒதுக்குங்கள். நம் நண்பரோடு அல்லது உறவினரோடு பேசும்போதெல்லாம் ஒரே மாதிரியான வார்த்தைகளையே பயன்படுத்தினால் அவர் என்ன நினைப்பார்? அப்படிச் செய்தால் நீங்கள் பேசுவதைக் கேட்கவே அவருக்கு விருப்பமில்லாமல் போய்விடும். தம்முடைய உண்மை ஊழியர்கள் உள்ளப்பூர்வமாகச் செய்யும் ஜெபங்களுக்கு யெகோவா ஒருபோதும் தம் காதை அடைத்துக்கொள்ள மாட்டார். ஆனால், ஒவ்வொரு முறை ஜெபம் செய்யும்போதும் சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்வதை நாம் தவிர்க்க வேண்டும்.
9, 10. (அ) என்னென்ன விஷயங்களுக்காக ஜெபிக்கலாம்? (ஆ) இருதயப்பூர்வமாக ஜெபிப்பதற்கு நமக்கு எது உதவும்?
9 நம்முடைய ஜெபம் மேலோட்டமானதாக இருந்தால், கடவுளிடம் நம்மால் நெருங்கவே முடியாது. நாம் எந்தளவுக்கு இருதயத்தை ஊற்றி ஜெபிக்கிறோமோ அந்தளவுக்கு யெகோவாவிடம் நமக்கிருக்கும் நெருக்கமும் நம்பிக்கையும் அதிகமாகும். அப்படியென்றால், என்னென்ன விஷயங்களுக்காக ஜெபிக்கலாம்? கடவுளுடைய வார்த்தை பதிலளிக்கிறது: “எல்லாவற்றையும் குறித்து உங்கள் விண்ணப்பங்களை நன்றியுடன்கூடிய ஜெபத்தினாலும் மன்றாட்டினாலும் கடவுளுக்குத் தெரியப்படுத்துங்கள்.” (பிலி. 4:6) சுருக்கமாகச் சொன்னால், கடவுளுக்கும் நமக்கும் இடையிலான நட்பை அல்லது நம்முடைய வாழ்க்கையைப் பாதிக்கிற எந்தவொரு விஷயத்திற்காகவும் ஜெபிக்கலாம்.
10 உண்மையுள்ள அநேக ஆண்கள், பெண்கள் செய்த ஜெபங்கள் பைபிளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து நாம் நிறையக் கற்றுக்கொள்ளலாம். (1 சா. 1:10, 11; அப். 4:24-31) யெகோவாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இருதயப்பூர்வமான ஜெபங்களும் பாடல்களும் அடங்கிய ஒரு தொகுப்புதான் சங்கீதப் புத்தகம். மனிதனின் உணர்வுகளை இப்புத்தகம் தத்ரூபமாக வர்ணிக்கிறது. உதாரணத்திற்கு, கடுந்துன்பத்திலும் பெருமகிழ்ச்சியிலும் இருந்தவர்கள் செய்த ஜெபங்களும் பாடிய பாடல்களும் இதில் உள்ளன. இவற்றை ஆராய்ந்து பார்ப்பது, அர்த்தமுள்ள விதத்தில் ஜெபம் செய்ய நமக்கு உதவும்.
கடவுளுடைய நினைப்பூட்டுதல்களைத் தியானியுங்கள்
11. கடவுளுடைய ஆலோசனையை நாம் ஏன் தியானித்துப் பார்க்க வேண்டும்?
11 “யெகோவாவின் நினைப்பூட்டுதல் நம்பகமானது, அனுபவமில்லாதவரை ஞானியாக்குகிறது” என்று தாவீது சொன்னார். (சங். 19:7, NW) ஆம், நாம் அனுபவம் இல்லாதவர்களாக இருந்தாலும், கடவுளுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடந்தால், ஞானவான்களாக ஆகலாம். சில வேதப்பூர்வ ஆலோசனைகளிலிருந்து முழுமையாகப் பயனடைய, அவற்றைத் தியானிப்பது அவசியம். உதாரணத்திற்கு, பள்ளியிலோ வேலை செய்யுமிடத்திலோ அழுத்தங்கள் வரும்போது கடவுளுக்கு உண்மையாய் நிலைத்திருக்க பைபிள் நியமங்களைத் தியானித்துப் பார்க்க வேண்டும். இரத்தம், கிறிஸ்தவ நடுநிலைமை சம்பந்தப்பட்ட விஷயங்களில் யெகோவாவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவும் உடை, தோற்றம் போன்றவற்றில் பைபிள் நியமங்களைக் கடைப்பிடிக்கவும் அது உதவும். கடவுளுடைய ஆலோசனைகளைத் தியானிப்பது இப்படிப்பட்ட பல்வேறு சூழ்நிலைகளை எதிர்ப்பட நம்மைத் தயார்ப்படுத்தும். அப்போதுதான் ஒரு சூழ்நிலையை எதிர்ப்படுவதற்கு முன்பே என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்க முடியும். ஆம், முன்யோசனையும் தயாரிப்பும் அநேக மனவேதனைகளிலிருந்து நம்மை விடுவிக்கும்.—நீதி. 15:28.
12. கடவுளுடைய நினைப்பூட்டுதல்களுக்குக் கீழ்ப்படிய என்ன கேள்விகளைச் சிந்தித்துப்பார்க்க வேண்டும்?
12 கடவுள் அளித்திருக்கும் வாக்குறுதிகள் நிறைவேறுவதைக் காண நாமனைவரும் ஆவலோடு காத்திருக்கிறோம். ஆனால், அவை நிஜமானதென நம்புகிறோம் என்பதையும் கடவுளுடைய சித்தத்திற்குத்தான் முதலிடம் தருகிறோம் என்பதையும் நம்முடைய வாழ்க்கை முறை காட்டுகிறதா? உதாரணமாக, மகா பாபிலோன் வெகுசீக்கிரத்தில் அழிக்கப்படும் என உண்மையிலேயே நம்புகிறோமா? பூஞ்சோலை பூமியில் முடிவில்லா வாழ்வு பற்றி முதன்முதலாகக் கேட்டபோது எப்படி உணர்ந்தோமோ அதேபோல்தான் இப்போதும் உணர்கிறோமா? ஊழியத்தில் வைராக்கியமாக ஈடுபடுவதற்குப் பதிலாக நம்முடைய சொந்த வேலைகளுக்கு முக்கியத்துவம் தருகிறோமா? உயிர்த்தெழுதல் நம்பிக்கை, யெகோவாவின் பெயரைப் பரிசுத்தப்படுத்துவது, அவரது பேரரசாட்சியே சரியானது என நிரூபிப்பது போன்ற விஷயங்களை இன்னமும் மிக முக்கியமானதாகக் கருதுகிறோமா? இதுபோன்ற கேள்விகளைத் தியானித்துப்பார்ப்பது, சங்கீதக்காரன் சொன்னது போலவே ‘கடவுளுடைய நினைப்பூட்டுதல்களை நம்முடைய நித்தியகால சொத்தாக்கிக்கொள்ள’ உதவும்.—சங். 119:111.
13. முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களால் சில விஷயங்களை ஏன் புரிந்துகொள்ளமுடியவில்லை? உதாரணம் தருக.
13 பைபிளிலுள்ள சில விஷயங்களின் அர்த்தத்தை நம்மால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடிவதில்லை. ஏனென்றால், யெகோவா இன்னும் அவற்றை தெளிவுபடுத்தவில்லை. இயேசு, தாம் பாடுபடுவதும் கொலை செய்யப்படுவதும் அவசியம் என்பதை தம்முடைய சீடர்களுக்குத் திரும்பத் திரும்ப நினைப்பூட்டினார். (மத்தேயு 12:40; 16:21-ஐ வாசியுங்கள்.) ஆனால், அவர் சொன்னதன் அர்த்தத்தை சீடர்கள் புரிந்துகொள்ளவில்லை. அவர் மரித்து, உயிர்த்தெழுந்து, சீடர்கள்முன் தோன்றி, ‘வேதவசனங்களின் அர்த்தத்தைப் புரிந்துகொள்வதற்கு அவர்களுடைய மனக்கண்களை முழுமையாகத் திறந்தபோதுதான்’ அதைத் தெளிவாகப் புரிந்துகொண்டார்கள். (லூக். 24:44-46; அப். 1:3) அதேபோல், கி.பி. 33 பெந்தெகொஸ்தே நாளன்று கடவுளுடைய சக்தி சீடர்கள்மீது பொழியப்பட்ட பிறகே கடவுளுடைய அரசாங்கம் பரலோகத்தில் நிறுவப்படும் என்பதை அவர்கள் புரிந்துகொண்டார்கள்.—அப். 1:6-8.
14. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், கடைசி நாட்களைப் பற்றிய தவறான எதிர்பார்ப்புகள் இருந்தபோதிலும் உண்மையுள்ள சகோதரர்கள் என்ன முன்மாதிரி வைத்தார்கள்?
14 இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் வாழ்ந்த உண்மைக் கிறிஸ்தவர்களுக்கு “கடைசி நாட்களில்” சம்பவிக்கப்போகும் விஷயங்களைப் பற்றிய சில தவறான எதிர்பார்ப்புகள் இருந்தன. (2 தீ. 3:1) உதாரணத்திற்கு, 1914-ல் தாங்கள் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுவார்கள் என சிலர் நினைத்தார்கள். அவர்கள் எதிர்பார்த்தபடி நடக்காததால், அது பற்றி அறிந்துகொள்ள வேதவசனங்களை மீண்டும் ஊக்கமாக ஆராய்ந்தார்கள். பிரமாண்டமான பிரசங்க வேலையைச் செய்வதே முக்கியம் என்பதை உணர்ந்து கொண்டார்கள். (மாற். 13:10) உலகளாவிய பிரசங்க வேலையை முன்நின்று வழிநடத்திய சகோதரர் ஜெ. எஃப். ரதர்பர்ட், 1922-ல் அமெரிக்காவிலுள்ள சீடர்பாயிண்ட், ஒஹாயோ என்ற இடத்தில் நடந்த சர்வதேச மாநாட்டில் இவ்வாறு சொன்னார்: “இதோ, ராஜா ஆட்சி செய்கிறார்! நீங்களே அவரது பிரதிநிதிகள். ஆகவே, ராஜாவையும் அவருடைய ராஜ்யத்தையும் விளம்பரப்படுத்துங்கள், விளம்பரப்படுத்துங்கள், விளம்பரப்படுத்துங்கள்.” அன்றுமுதல் ‘கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியை’ பிரசங்கிப்பதே யெகோவாவின் நவீனகால ஊழியர்களுடைய அடையாளச் சின்னமாக இருந்து வருகிறது.—மத். 4:23; 24:14.
15. கடவுள் தமது மக்களை நடத்திய விதத்தைத் தியானிப்பதால் நாம் எப்படிப் பயனடையலாம்?
15 பூர்வ காலத்திலும் நவீன காலத்திலும் யெகோவா தம்முடைய மக்களை அற்புதமாக வழிநடத்தியிருக்கிறார். அதைப் பற்றித் தியானிக்கும்போது, எதிர்காலத்திலும் அவரால் தமது நோக்கத்தை நிறைவேற்ற முடியும் என்பதில் நம் நம்பிக்கை பலப்படும். அதேசமயம், சீக்கிரத்தில் நிறைவேறப்போகிற தீர்க்கதரிசனங்களை நம் மனதிலும் இருதயத்திலும் பசுமையாக வைத்துக்கொள்ள அவருடைய நினைப்பூட்டுதல்கள் நமக்கு உதவும். இப்படிச் செய்யும்போது அவருடைய வாக்குறுதிகளில் நம் நம்பிக்கை நிச்சயம் உறுதிப்படும்.
வழிபாட்டுக்குரிய காரியங்களால் நம்பிக்கையைப் பலப்படுத்துங்கள்
16. கடவுளுடைய சேவையில் சுறுசுறுப்பாக ஈடுபடுவதால் கிடைக்கும் ஆசீர்வாதங்கள் யாவை?
16 நம்முடைய கடவுளாகிய யெகோவா எப்போதும் சுறுசுறுப்பாகச் செயல்படுபவர். “உம்மைப்போல் வல்லமையுள்ள கர்த்தர் யார்? . . . உம்முடைய கரம் பராக்கிரமமுள்ளது; உம்முடைய வலதுகரம் உன்னதமானது” என்று சங்கீதக்காரன் அவரைப் புகழ்ந்து பாடினார். (சங். 89:8, 13) கடவுளுடைய அரசாங்கம் சம்பந்தப்பட்ட காரியங்களுக்காக நாம் எடுக்கும் எல்லா முயற்சிகளையும் யெகோவா மிகவும் போற்றுகிறார், ஆசீர்வதிக்கிறார். ஆண் பெண், இளையோர் முதியோர் என யாராக இருந்தாலும் ‘சோம்பலின் அப்பத்தைப் புசிப்பதை’ யெகோவா விரும்புவதே இல்லை. (நீதி. 31:27) எனவே நம்முடைய படைப்பாளரைப் பின்பற்றி நாமும் அவருடைய சேவையில் சுறுசுறுப்பாக ஈடுபடுகிறோம். முழு இருதயத்தோடு யெகோவாவுக்குச் சேவை செய்யும்போது நாம் பல நன்மைகளை அடைவதோடு யெகோவாவின் உள்ளத்தையும் சந்தோஷப்படுத்துகிறோம்.—சங்கீதம் 62:12-ஐ வாசியுங்கள்.
17, 18. விசுவாசத்தோடு செய்யும் செயல்கள் மூலம் யெகோவாமீதுள்ள நம்பிக்கையை எப்படிப் பலப்படுத்தலாம்? உதாரணம் தருக.
17 விசுவாசத்தோடு செய்யும் செயல்கள் மூலம் யெகோவாமீதுள்ள நம்பிக்கையை எப்படிப் பலப்படுத்தலாம்? இஸ்ரவேலர், வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் நுழையும் தருவாயில் இருந்த சூழ்நிலையைப் பற்றி பைபிள் சொல்வதைக் கவனியுங்கள். யோர்தான் நதியின் நடுவாகக் கடந்துசெல்லும்படி ஒப்பந்தப் பெட்டியை சுமந்து சென்ற ஆசாரியர்களிடம் யெகோவா கட்டளையிட்டிருந்தார். ஆனால், யோர்தான் நதியை நெருங்கிய இஸ்ரவேலர்கள், மழை வெள்ளத்தால் நதி கரைபுரண்டோடுவதைப் பார்த்தார்கள். இப்போது அவர்கள் என்ன செய்வார்கள்? நதியோரத்தில் கூடாரமிட்டு நீர்மட்டம் குறையும் வரையாக வாரக்கணக்கில் அல்லது அதற்கும் அதிகமாக அங்கே காத்துக்கொண்டிருப்பார்களா? இல்லை, அவர்கள் யெகோவாவை முழுமையாக நம்பினார்கள், அவர் கொடுத்த கட்டளைக்குக் கீழ்ப்படிந்தார்கள். விளைவு? ‘ஆசாரியர்களின் கால்கள் தண்ணீரின் ஓரத்தில் பட்டவுடனே, மேலேயிருந்து ஓடிவருகிற தண்ணீர் நின்றது . . . ஆசாரியர்கள் யோர்தானின் நடுவிலே தண்ணீர் இல்லாத தரையில் காலூன்றி நிற்கும்போது இஸ்ரவேலரெல்லாரும் தண்ணீரற்ற உலர்ந்த தரை வழியாய் கடந்துபோனார்கள்.’ (யோசு. 3:12-17) பாய்ந்து வந்த தண்ணீர் சட்டென நின்றதைப் பார்த்து அவர்கள் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார்கள்! இஸ்ரவேலர்கள் யெகோவா கொடுத்த அறிவுரைகள்மீது நம்பிக்கை வைத்ததால் அவர்களுடைய விசுவாசம் பலப்பட்டது.
18 இன்று அப்படிப்பட்ட அற்புதங்களை யெகோவா செய்வதில்லை என்பது உண்மைதான், ஆனால் அன்றுபோல் இன்றும் தம்முடைய மக்கள் விசுவாசத்தோடு செய்கிற செயல்களை அவர் ஆசீர்வதிக்கிறார். தம்முடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியை உலகெங்கும் அறிவிக்க அவர் தம்முடைய சக்தியால் அவர்களைப் பலப்படுத்துகிறார். யெகோவாவுக்குத் தலைசிறந்த சாட்சியாகத் திகழும் இயேசு கிறிஸ்து இந்த முக்கியமான வேலையைச் செய்ய ஆதரவு தருவதாக உறுதியளித்தார். ‘புறப்படுங்கள், எல்லாத் தேசத்தாரையும் சீடர்களாக்குங்கள். . . . இந்த உலகத்தின் முடிவுகாலம்வரை எல்லா நாட்களிலும் நான் உங்களோடுகூட இருக்கிறேன்’ என்றார். (மத். 28:19, 20) ஆம், கூச்ச சுபாவமுடைய சாட்சிகள் பலர், முன்பின் தெரியாதவர்களிடம் ஊழியத்தில் தைரியமாகப் பேச கடவுளுடைய சக்தி உதவியிருப்பதாகச் சொல்கிறார்கள்.—சங்கீதம் 119:46-ஐயும் 2 கொரிந்தியர் 4:7-ஐயும் வாசியுங்கள்.
19. கடவுளுடைய சேவையில் அதிகமாக ஈடுபட முடியவில்லை என்றாலும் எதைக் குறித்து நாம் உறுதியாய் இருக்கலாம்?
19 வியாதி அல்லது முதுமை காரணமாக சகோதர சகோதரிகள் சிலரால் கடவுளுடைய சேவையில் அதிகமாக ஈடுபட முடிவதில்லை. ஆனாலும், ‘கனிவும் இரக்கமும் உள்ள தகப்பனாகவும் எல்லா விதமான ஆறுதலின் கடவுளாகவும்’ இருக்கிற யெகோவா ஒவ்வொருவருடைய சூழ்நிலையையும் நன்கு அறிந்திருக்கிறார். (2 கொ. 1:3) அவருடைய சேவையில் முடிந்தளவு ஈடுபடும்போது அதை அவர் உயர்வாகக் கருதுகிறார். மிக முக்கியமாக, கிறிஸ்துவின் மீட்கும்பலியில் விசுவாசம் வைப்பதன் மூலமே மீட்பு கிடைக்கும் என்பதை நாம் எல்லோரும் மனதில் வைக்க வேண்டும்.—எபி. 10:39.
20, 21. யெகோவாமீது வைத்திருக்கும் நம்பிக்கையை நாம் என்னென்ன விதங்களில் வெளிக்காட்டலாம்?
20 நம் வழிபாட்டில் நம்முடைய நேரம், சக்தி, பணம், பொருள் ஆகியவற்றை முடிந்தளவுக்கு முழுமையாக அர்ப்பணிப்பது அவசியம். ஆம், ‘நற்செய்தியாளரின் வேலையைச் செய்ய’ நம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய நாம் விரும்புகிறோம். (2 தீ. 4:5) சொல்லப்போனால், மற்றவர்கள் “சத்தியத்தைப் பற்றிய திருத்தமான அறிவை அடைய” உதவுவதில் நாம் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம். (1 தீ. 2:4) உண்மையில், யெகோவாவைத் துதித்துப் புகழ்வது நம்மை ஆன்மீக ரீதியில் செல்வந்தர்களாக்குகிறது. (நீதி. 10:22) இது யெகோவாமீது அசைக்க முடியாத நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள நமக்கு உதவுகிறது.—ரோ. 8:35-39.
21 இதுவரையில் பார்த்தபடி, ஞானமான அறிவுரைகளுக்காக யெகோவாமீது நம்பிக்கை வைப்பது தானாகவே வந்துவிடாது. அதற்காக உழைப்பது அவசியம். ஆகவே, ஜெபத்தின் மூலமாக எப்போதும் யெகோவாவைச் சார்ந்திருங்கள். தம்முடைய சித்தத்தை நிறைவேற்ற பூர்வ காலத்தில் அவர் எப்படியெல்லாம் செயல்பட்டார் என்றும் எதிர்காலத்தில் எப்படிச் செயல்படுவார் என்றும் தியானியுங்கள். ஆன்மீகக் காரியங்களைத் தொடர்ந்து செய்வதன் மூலம் அவர்மேல் இருக்கும் நம்பிக்கையைப் பலப்படுத்துங்கள். அப்போது யெகோவாவின் நினைப்பூட்டுதல்கள் என்றென்றும் நிலைத்திருப்பதுபோல் நீங்களும் என்றென்றும் நிலைத்திருப்பீர்கள்.