நட்புக்கான தீரா பசியைத் தீர்த்தல்
“தனிமை ஒரு வியாதி அல்ல” என இன் ஸர்ச் ஆஃப் இன்டிமஸி என்ற புத்தகம் குறிப்பிடுகிறது. “தனிமை என்பது ஒரு நியாயமான பசி . . . நட்புறவு இல்லாததற்கான இயல்பான ஓர் அறிகுறி” என்றும் அது குறிப்பிடுகிறது. பசி எடுக்கும்போது சாப்பாட்டைத் தேடுவது போல தனிமையுணர்வு ஏற்படுகையில் நல்ல நண்பர்களைத் தேடுவது அவசியம்.
இருந்தாலும், “சில ஆட்கள் மற்றவர்களிடம் எந்த ஒட்டுறவும் வைத்துக்கொள்வதே இல்லை” என பிரான்சு நாட்டைச் சேர்ந்த யாயில் என்ற இளைஞி குறிப்பிடுகிறாள். என்ன காரணத்திற்காக நம்மைத் தனிமைப்படுத்திக் கொண்டாலும் அது எந்தப் பிரச்சினையையும் தீர்க்கப்போவதில்லை, மாறாக நம் தனிமையுணர்வை இன்னும் மோசமாகவே ஆக்குகிறது. “தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்கிறவன் தன் சுய இச்சையைத் தேடுகிறான்; நடைமுறையான ஞானம் அனைத்தையும் புறக்கணிக்கிறான்” என பைபிளிலுள்ள ஒரு நீதிமொழி கூறுகிறது. (நீதிமொழிகள் 18:1, NW) ஆகவே, மற்றவர்களின் நட்புறவு நமக்குத் தேவை என்பதை நாம் முதலாவது புரிந்துகொள்ள வேண்டும், பிறகு அதற்காக என்ன செய்யலாம் என்பதைத் தீர்மானிக்க வேண்டும்.
நட்புக்காக நடைமுறை படிகளை எடுங்கள்
உங்களைப் பார்த்து பரிதாபப்படுவதற்கு பதிலாக, அல்லது நிறைய நல்ல நண்பர்களைப் பெற்றிருப்பவர்களைப் பார்த்துப் பொறாமைப்படுவதற்குப் பதிலாக நம்பிக்கையான மனநிலையோடு இருப்பதுதானே நல்லது; இத்தாலி நாட்டைச் சேர்ந்த மானுயேலாவுக்கு இப்படிப்பட்ட மனநிலை இருந்தது. அவள் இவ்வாறு சொல்கிறாள்: “நான் டீனேஜரா இருந்தப்போ யாருக்குமே என்னைப் பிடிக்காததைப் போல உணர்ந்தேன். அதிலிருந்து மீளுவதற்கு, யாருக்கெல்லாம் நல்ல ஃபிரெண்ட்ஸ் இருந்தாங்களோ அவங்களையெல்லாம் கவனிக்க ஆரம்பிச்சேன். மற்றவர்களுடைய மனசுக்குப் பிடித்தவளாக ஆவதற்கு அவர்களிடம் இருந்த நல்ல குணங்களை நானும் வளர்த்துக்கொள்ள முயன்றேன்.”
இதற்கு நடைமுறையான ஒரு படியானது, உங்களுடைய உடலுக்கும் உள்ளத்துக்கும் கவனம் செலுத்துவது. சத்தான உணவு, தேவையான ஓய்வு, போதுமான உடற்பயிற்சி என இவையாவும் நீங்கள் நல்ல தோற்றத்தை அளிப்பதற்கும் நல்ல மனநிலையுடன் இருப்பதற்கும் உதவும். சுத்தமாகவும் நேர்த்தியாகவும் உடையணிந்து, பார்க்க பளிச்சென இருக்கும்போது மற்றவர்களின் பிரியத்தைப் பெற முடியும்; மட்டுமல்ல, அது உங்களுக்கே ஓரளவு சுயமரியாதையையும் தரும். என்றாலும், வெளித்தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதைப் பற்றியே எப்போதும் நினைத்துக் கொண்டிருக்காதீர்கள். “நவநாகரிகமான உடைகளை உடுத்தினால்தான் நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள் என்றில்லை. நல்லவர்கள் உள்ளிருக்கும் குணத்தையே பார்க்கிறார்கள்” என குறிப்பிடுகிறாள் பிரான்சைச் சேர்ந்த கேயில்.
சொல்லப்போனால், உள்ளுக்குள் புதைந்து கிடக்கும் எண்ணங்களும் உணர்ச்சிகளும் நம் பேச்சிலும் தோற்றத்திலும் வெளிப்படுகின்றன. நீங்கள் நம்பிக்கையான மனநிலையோடு இருக்கிறீர்களா? அப்படியென்றால் அது உங்களுடைய முகத்தில் தெரியும். ஒரு யதார்த்தமான புன்முறுவலே சுண்டியிழுக்கும் தன்மை படைத்த மிகச் சிறந்த அணிகலன், “இது எல்லாராலும் ஏற்றுக்கொள்ளக்கூடியது, தவறாகவே புரிந்துகொள்ளப்படாதது” என விளக்குகிறார் உடலசைவு மொழி வல்லுநரான ராஜர் இ. ஆக்ஸ்டல்.a அதோடு நகைச்சுவையுணர்வும் சேர்ந்துவிட்டால், ஆட்கள் இயல்பாகவே உங்களிடம் ஒட்டிக்கொள்வார்கள்.
இப்படிப்பட்ட நல்ல குணங்கள் மனதில் பிறக்கின்றன என்பதை நினைவில் வையுங்கள். ஆகவே, பிரயோஜனமான, நம்பிக்கையான எண்ணங்களாலும் உணர்ச்சிகளாலும் உங்கள் மனதையும் இருதயத்தையும் நிரப்புங்கள். உலக நடப்புகள், வித்தியாசப்பட்ட கலாச்சாரங்கள், இயற்கை நிகழ்வுகள் போன்ற ஆர்வத்திற்குரிய பயனுள்ள விஷயங்களைப் படியுங்கள். உற்சாகமூட்டும் இசையைக் கேளுங்கள். அதே சமயத்தில், டிவி, திரைப்படங்கள், நாவல்கள் ஆகியவை உங்கள் மனதையும் உணர்ச்சிகளையும் கற்பனை உலகில் சஞ்சரிக்க வைக்க இடங்கொடுக்காதீர்கள். திரையில் காட்டப்படுபவை எல்லாம் நிஜமானவை அல்ல, நிஜ நட்புறவுகளும் அல்ல, ஆனால் அவை ஒருவரின் கற்பனை படைப்புகளே.
மனந்திறந்து பேசுங்கள்
இத்தாலியில் வாழும் ஸூலேகா இவ்வாறு சொல்கிறாள்: “சின்ன வயசில் எனக்கு கூச்ச சுபாவம் ஜாஸ்தி, அதனால் ஃபிரெண்ட்ஸ் பிடிப்பது எனக்கு கஷ்டமாக இருந்தது. ஃபிரெண்ட்ஸ் வேணும்னா வலியப் போய் மற்றவர்களிடம் நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு பேசணும் என்பதைத் தெரிஞ்சுக்கிட்டேன்.” ஆம், நல்ல நண்பர்கள் கிடைப்பதற்கு, நாம் மனந்திறந்து பேச வேண்டும், அதன் மூலம் நாம் எப்படிப்பட்டவர்கள் என்பதை அவர்களாகவே தெரிந்துகொள்வார்கள். அவ்வாறு பேசுவதும் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் பகிர்ந்துகொள்வதுமே உண்மையான நட்புக்கு மிக மிக முக்கியம், மாறாக அழகான தோற்றமோ வசீகரிக்கும் குணமோ அல்ல. “நீண்டகால உற்ற நண்பர்களை உடையவர்கள் சங்கோஜப்படுபவர்களாக, சகஜமாக பேசுபவர்களாக, இளைஞராக, முதியவராக, அசமந்தமாக, புத்திசாலியாக, எளிமையாக, அழகாக இருக்கலாம்; ஆனால் இவர்கள் எல்லாரிடமும் பொதுவாகக் காணப்படும் ஒரு குணம் மனந்திறந்து பேசுவதாகும். அவர்களுடைய உள்ளத்தில் என்ன இருக்கிறது என்பதை மற்றவர்கள் தெரிந்துகொள்ள இடமளிக்கிறார்கள்” என குறிப்பிடுகிறார் ஆலோசகரான டாக்டர் ஆலன் லோய் மகின்னஸ்.
அதற்காக, உங்களுடைய மனதில் உள்ள எல்லாவற்றையும் எல்லாரிடமும் சொல்ல வேண்டுமென்றோ, அந்தரங்க விஷயங்களை மனம்விட்டுப் பேச முடியாதவர்களிடத்தில் சொல்ல வேண்டுமென்றோ இது அர்த்தப்படுத்துவதில்லை. ஆனால், உங்களுடைய எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் கொஞ்சம் கொஞ்சமாக, அதுவும் சொல்ல முடிந்த விஷயங்களை தேர்ந்தெடுத்து தெரியப்படுத்துவதை இது அர்த்தப்படுத்துகிறது. இத்தாலியைச் சேர்ந்த மிக்கேலா இவ்வாறு கூறுகிறாள்: “என்னுடைய உணர்ச்சிகளை சொல்லாமல் மறைத்ததுதான் முதலில் எனக்குப் பெரும் பிரச்சினையாக இருந்தது. என்னுடைய உணர்ச்சிகளை ஃபிரெண்ட்ஸ் புரிந்துகொண்டு என்னுடன் நெருங்கிப் பழகுவதற்கு நான் என்னையே மாற்றிக்கொள்ள வேண்டியிருந்தது; என் எண்ணங்களை இன்னும் அதிகமாக பரிமாறிக்கொள்ள வேண்டியிருந்தது.”
நீங்கள் சகஜமாகப் பழகுபவராக இருந்தாலும்கூட நண்பர்களுக்கிடையே பரஸ்பர நம்பிக்கை உருவாகுவதற்குக் காலம் எடுக்கிறது; அதே சமயத்தில் ஒத்த அனுபவங்கள் இருப்பதும்கூட அப்படிப்பட்ட நம்பிக்கையை வளர்ப்பதற்கு உதவுகிறது. இந்தக் காலப் பகுதியில், மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்று ரொம்பவும் கவலைப்படாதீர்கள். இத்தாலியைச் சேர்ந்த எலிஸா இவ்வாறு சொல்கிறாள்: “எனக்கிருந்த பிரச்சினை, நான் சொல்ல விரும்புவதை சரியாக சொல்லாமல் போய்விடுவேனோ என்ற பயம்தான். அதற்கு பிறகு, ‘உண்மையான ஃபிரெண்ட்ஸ் என்றால் என்னைப் புரிஞ்சுப்பாங்க’ என்று நினைக்க ஆரம்பித்தேன். அதனால், நான் ஏதாவது தப்பும்தவறுமாக சொல்லிவிட்டால் நானே சிரித்துவிடுவேன், மற்றவர்களும் என்னோடு சேர்ந்து சிரித்துவிடுவார்கள்.”
ஆகவே, கலவரப்படாதீர்கள்! எப்போதும் போல் சாதாரணமாக இருங்கள். மாறுவேடம் போடுவதால் பயனில்லை. “யதார்த்தமாக, இயல்பாக இருப்பதைவிட ஒருவரிடமுள்ள விரும்பத்தக்க குணங்கள் வேறெதுவுமில்லை” என குடும்ப ஆலோசகரான எஃப். அலெக்ஸாண்டர் மகூன் எழுதினார். உண்மையிலேயே சந்தோஷமாக இருப்பவர்கள் பாசாங்கு செய்ய அவசியமில்லை, மற்றவர்களைக் கவரவும் அவசியமில்லை. நாம் நாமாக இருப்பதன் மூலம் மட்டுமே யதார்த்தமான நட்பை அனுபவித்து மகிழலாம். அதேபோல், மற்றவர்களும் அவ்வாறே இருக்கும்படி விட்டுவிடுவது அவசியம். மகிழ்ச்சியாக இருப்பவர்கள் மற்றவர்களை அவர்கள் இருக்கும் வண்ணமாக ஏற்றுக்கொள்கிறார்கள், சிறு சிறு குறைகளுக்குக் கவனம் செலுத்துவதில்லை. தங்களுடைய சொந்த கருத்துக்களுக்கு ஏற்ப தங்களது நண்பர்களை மாற்ற முற்படுவதில்லை. அப்படிப்பட்ட மகிழ்ச்சியுள்ள, குறைகாணாத நபராவதற்கு முயலுங்கள்.
நண்பரைப் பெற நண்பராக இருங்கள்
இன்னும் அதிமுக்கியமான, மிக அடிப்படையான ஓர் அம்சமும் உள்ளது. நிலைத்திருக்கும் மானிட உறவுகளுக்கு எது அஸ்திவாரமாக இருக்கிறதென்பதைப் பற்றி சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன் இயேசு கூறினார், அதுதான் சுயநலமற்ற அன்பு. “மனுஷர் உங்களுக்கு எப்படிச் செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்” என அவர் போதித்தார். (லூக்கா 6:31) இந்தப் போதனை பொன் விதி என அழைக்கப்படலாயிற்று. ஆம், நல்ல நண்பர்களைப் பெறுவதற்கு ஒரே வழி சுயநலமற்றவர்களாக இருப்பதும், நீங்கள் தாமே கொடுக்கும் நண்பராக இருப்பதும்தான். வேறு வார்த்தைகளில் சொன்னால், நண்பரைப் பெறுவதற்கு, நண்பராக இருக்க வேண்டும். இதில் வெற்றி காண, கைமாறு கருதாமல் தன்னையே அளிக்க முன்வர வேண்டும். நம் நண்பர்களின் தேவைகளை நம்முடைய விருப்பங்களுக்கும் வசதிகளுக்கும் மேலாகக் கருத வேண்டும்.
முன்பு குறிப்பிட்ட மானுயேலா இவ்வாறு சொல்கிறாள்: “கொடுப்பதன் மூலமே உண்மையான சந்தோஷம் கிடைக்கிறதென இயேசு சொன்னார். அப்படிச் செய்யும்போது பெற்றுக்கொள்பவரும் சந்தோஷமடைகிறார், கொடுப்பவரோ இன்னுமதிக சந்தோஷமடைகிறார். நம் நண்பர்களின் சுகநலனை உள்ளப்பூர்வமாக விசாரிப்பது, அவர்களுடைய பிரச்சினைகளைக் காதுகொடுத்து கேட்பது, வாய் திறந்து அவர்கள் கேட்பதற்கு முன்னரே நம்மால் முடிந்ததைச் செய்துகொடுப்பது இவையாவும் கொடுப்பதற்கான வழிகளில் சில.” ஆகவே, உங்களுக்கு ஏற்கெனவே இருக்கும் நண்பர்களிடம் மட்டுமல்லாமல் மற்றவர்களிடமும் அக்கறை காட்ட முயலுங்கள். நட்பின் பந்தத்தைப் பலப்படுத்துங்கள். அதிக முக்கியமில்லாத அதிக திருப்தியளிக்காத காரியங்களுக்கு நேரத்தையும் சக்தியையும் விரயமாக்கி, உங்களுடைய நண்பர்களை இழந்துவிடாதீர்கள். அவர்களோடு நேரம் செலவிட வேண்டும், அதிக அக்கறையும் காட்ட வேண்டும். இத்தாலியைச் சேர்ந்த ரூபன் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “நண்பர்கள் கிடைப்பதற்கும் அவர்களை இழந்துவிடாதிருப்பதற்கும் நேரம் செலவிடுவது அத்தியாவசியம். முதலாவதாக, சொல்வதைப் பொறுமையாகக் கேட்பவராவதற்கு காலம் எடுக்கிறது. காதுகொடுத்து கேட்பதிலும் மற்றவர்கள் பேசும்போது இடையிடையே குறுக்கிடாமல், அதேசமயம் சொல்லும் விஷயத்தில் ஆர்வம் காட்டுவதிலும் நாம் எல்லாருமே முன்னேறலாம்.
மதித்து நடக்க பழகுங்கள்
நெடுநாள் நண்பர்களாக இருந்து சந்தோஷம் காண்பதற்கு ஒருவரையொருவர் மதித்து நடப்பது மற்றொரு முக்கிய அம்சமாகும். மற்றவர்களுடைய உணர்ச்சிகளைப் புரிந்து நடப்பதையும் இது அர்த்தப்படுத்தும். உங்களுடைய நண்பர்களின் விருப்பங்களும் அபிப்பிராயங்களும் வித்தியாசப்படும்போது அவர்கள் சாதுரியமாகவும் விவேகமாகவும் நடந்துகொள்ள வேண்டுமென நீங்கள் விரும்புவீர்கள் இல்லையா? அப்படியானால் நீங்களும் அப்படித்தானே அவர்களிடம் நடந்துகொள்வீர்கள்?—ரோமர் 12:10.
மதித்து நடப்பதற்கு மற்றொரு வழி, நமது நண்பர்களை அன்பெனும் வட்டத்திற்குள் அடக்கி வைக்காமல் இருப்பதாகும். உண்மையான நண்பர்கள் பொறாமைப்பட மாட்டார்கள், தனக்கு மட்டுமே உரியதென சொந்தம் கொண்டாடவும் மாட்டார்கள். 1 கொரிந்தியர் 13:4-ல் “அன்புக்குப் பொறாமையில்லை” என பைபிள் கூறுகிறது. ஆகவே உங்களுடைய நண்பர்களை நீங்களே வைத்துக்கொள்ள வேண்டுமென்ற மனப்பான்மையை தவிர்த்திடுங்கள். மற்றவர்களிடம் அவர்கள் மனம்விட்டு பேசும்போது கொதிப்படையாதீர்கள், அவர்களை ஓரங்கட்டியும் விடாதீர்கள். நாம் எல்லாருமே பரந்த மனமுள்ளவர்களாய் இருந்து நட்புறவுகளை ஏற்படுத்திக்கொள்வது அவசியம் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். உங்களுடைய நண்பர்கள் இன்னும் பலருடன் நட்புறவை வளர்ப்பதற்குச் சந்தர்ப்பம் கொடுங்கள்.
உங்களுடைய நண்பர்களுக்குத் தனிமை தேவை என்பதையும் மனதில் வையுங்கள். தனி நபர்களும், தம்பதியினரும் தனிமையில் இருப்பதற்கு நேரம் தேவைப்படுகிறது. பிறரிடம் சகஜமாகப் பேசி பழகுகிறவர்களாக இருந்தாலும், சமநிலையோடும் முன்யோசனையோடும் நடந்துகொள்ளுங்கள், அவர்கள் சலித்துப் போகுமளவுக்கு எப்போதும் அவர்களுடனேயே இருக்காதீர்கள். “உன் அயலான் சலித்து உன்னை வெறுக்காதபடிக்கு, அடிக்கடி அவன் வீட்டில் கால் வைக்காதே” என பைபிள் எச்சரிக்கிறது.—நீதிமொழிகள் 25:17.
நூறு சதம் எதிர்பார்க்காதீர்கள்
ஆட்கள் ஒருவரையொருவர் புரிந்துகொள்ளும்போது, மற்றவர்களுடைய குறைநிறைகள் பளிச்சென தெரிவது உண்மைதான். இருந்தாலும், அவர்களை நண்பர்களாக்கிக் கொள்வதற்கு அவற்றை ஒரு முட்டுக்கட்டையாக நாம் கருதக்கூடாது. “நண்பர்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று பெரிய பெரிய எதிர்பார்ப்புகள் சிலருக்கு இருக்கிறது. அவர்கள் எல்லா விதத்திலும் நல்லவர்களாய் இருக்க வேண்டுமென நினைக்கிறார்கள், ஆனால் அதுவெல்லாம் முடிகிற காரியமல்ல” என பிரான்சு நாட்டைச் சேர்ந்த பாக்கோம் குறிப்பிடுகிறார். நம்மில் ஒரு குறையும் இல்லாதவர்கள் யாருமே இல்லை, அப்படியிருக்க, மற்றவர்களிடம் அப்படி எதிர்பார்ப்பதற்கு நமக்கு உரிமையும் இல்லை. நம்மிடமுள்ள குற்றங்குறைகளை நம்முடைய நண்பர்கள் பொறுத்துக்கொண்டு நம்மை ஏற்றுக்கொள்வார்கள் என நம்புகிறோம். நாமும்கூட அவர்களுடைய குறைகளைப் பற்றி சதா நினைத்துக்கொண்டிராமல் அல்லது அவற்றைப் பெரிதுபடுத்தாமல் விட்டுவிட வேண்டுமல்லவா? எழுத்தாளரான டென்னஸ் ப்ராகா நமக்கு இவ்வாறு நினைப்பூட்டுகிறார்: “குறை காணாத நண்பர்கள் (அதாவது, ஒருபோதும் குறை சொல்லாத, எப்போதுமே நேசிக்கிற, ஒருபோதும் முகம் கோணாத, எப்போதும் கரிசனை காட்டுகிற, ஒருபோதும் ஏமாற்றாத நண்பர்கள்) செல்லப் பிராணிகளைப் போன்றவர்கள்.” செல்லப் பிராணிகளை மட்டுமே உற்ற நண்பர்களாக கொண்டிராதபடிக்கு அப்போஸ்தலன் பேதுருவின் அறிவுரைக்கு நாம் கவனம் செலுத்துவது அவசியம்; ‘அன்பினால் திரளான பாவங்களை மூடும்படி’ அவர் சொன்னார்.—1 பேதுரு 4:8.
நட்பு நம் மகிழ்ச்சியை இருமடங்காக்கும், துக்கத்தையோ அரைவாசியாக்கும் என சொல்லப்படுகிறது. என்றாலும், நம்முடைய எல்லாத் தேவைகளையும் நண்பர்களால் பூர்த்தி செய்ய முடியாது, நம்முடைய எல்லாப் பிரச்சினைகளையும் அவர்களால் தீர்த்து வைக்க முடியாது என்பதே நிஜம். இதைப் புரிந்துகொள்ளாவிட்டால் அது தன்னலமான நட்பாக இருக்கும்.
இன்பத்திலும் துன்பத்திலும் நிலைத்திருக்கும் நண்பர்கள்
நாம் ஒரு நண்பரைப் பெற்ற பிறகு, அவரது நட்பை ஒருபோதும் துச்சமாகக் கருதக் கூடாது. வெகுதூரம் பிரிந்துபோக வேண்டிய சூழ்நிலை ஏற்படும்போது நண்பர்கள் ஒருவரையொருவர் நினைத்துக்கொள்வார்கள், ஒருவருக்காக ஒருவர் ஜெபம் செய்வார்கள். அவர்கள் அபூர்வமாகவே சந்தித்துக் கொண்டாலும் ஒன்று சேர்ந்தவுடன் நட்பு மீண்டும் மலர்ந்துவிடும். முக்கியமாகக் கஷ்ட காலத்திலோ, தேவையில் இருக்கையிலோ நாம் அவர்களுக்கு உறுதுணையாக இருப்பது அவசியம். மிக முக்கியமாக, பிரச்சினையில் இருக்கும்போது அவர்களை அம்போவென விட்டுவிடக் கூடாது. அப்போதுதான் முக்கியமாய் நாம் பக்கபலமாய் இருக்க வேண்டும். “சிநேகிதன் எல்லாக் காலத்திலும் சிநேகிப்பான்; இடுக்கணில் உதவவே சகோதரன் பிறந்திருக்கிறான்.” (நீதிமொழிகள் 17:17) உண்மையான நண்பர்களுக்கிடையே மனஸ்தாபங்கள் ஏற்படுகையில், அவர்கள் உடனடியாக அவற்றைச் சரிசெய்துகொள்கிறார்கள், ஒருவரையொருவர் மன்னிக்கிறார்கள். அவ்வப்போது பிரச்சினைகள் தலைதூக்குவதன் காரணமாக, உண்மையான நண்பர்கள் தங்களுடைய நண்பர்களை விட்டுவிடுவதில்லை.
சுயநலமற்றவர்களாக, மற்றவர்கள் மீது நம்பிக்கை வைத்து பழகினால் நண்பர்களைப் பெறுவீர்கள். ஆனால் உங்களுடைய நண்பர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதும் முக்கியம். ஆகவே, நல்ல நண்பர்களை எப்படித் தேர்ந்தெடுக்கலாம்? பதில் அடுத்த கட்டுரையில். (g04 12/8)
[அடிக்குறிப்பு]
a ஜூலை 8, 2000, விழித்தெழு! இதழில் உள்ள “புன்னகை புரிவீர்! புத்துணர்ச்சி அடைவீர்!” என்ற கட்டுரையையும் காண்க.
[பக்கம் 6, 7-ன் பெட்டி/படங்கள்]
ஆண்களும் பெண்களும் “சும்மா நண்பர்களாக” இருக்க முடியுமா?
மணமாகாத ஆண்களும் பெண்களும் நண்பர்களாக இருக்க முடியுமா? அதற்கான பதில், என்ன அர்த்தத்தில் நாம் ‘நண்பர்களாகப்’ பழகுகிறோம் என்பதைப் பொறுத்தது. இயேசு பெத்தானியாவிலிருந்த மரியாள், மார்த்தாள் என்ற பெண்களின் நெருங்கிய நண்பராக இருந்தார்; அந்த இருவருமே மணமாகாதவர்கள். (யோவான் 11:1, 5) பிரிஸ்கில்லாள் மற்றும் அவளுடைய கணவர் ஆக்கில்லா ஆகியோரின் நண்பராக அப்போஸ்தலன் பவுல் இருந்தார். (அப்போஸ்தலர் 18:2, 3) இவர்கள் எல்லாரும் ஒருவரையொருவர் உள்ளப்பூர்வமாக நேசித்தார்கள் என்பதை நாம் நன்கு அறிந்திருக்கிறோம். அதே சமயத்தில், இயேசுவோ பவுலோ இப்படிப் பழகியபோது ஒருபோதும் காதல்வயப்படவில்லை என்பதும் நமக்குத் தெரியும்.
இன்றைய சமுதாயம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே முன்னொருபோதும் இல்லாதளவுக்கு ஒரு நெருங்கிய கூட்டுறவை ஏற்படுத்தி விடுகிறது. இந்த இருபாலாரும் ஒருவருக்கொருவர் எப்படிப்பட்ட நட்புறவுகளை வைத்திருக்க வேண்டும் என்பதை அறிந்திருப்பதன் அவசியமும் அதிகரித்து வருகிறது. தம்பதியினரும்கூட மற்ற தம்பதியினர்களுடனும் மணமாகாதவர்களுடனும் தகுந்த விதத்தில் நட்புடன் பழகுவதன் மூலம் நன்மையடைகிறார்கள்.
“என்றாலும் காதலுக்கும் பாலுணர்வுகளுக்கும் நட்புக்கும் இடையேயுள்ள வித்தியாசத்தைக் கண்டுபிடிப்பது மிகக் கடினம்” என எச்சரிக்கிறது ஸைக்காலஜி டுடே என்ற பத்திரிகை. “எதிர்பாலாரின் நட்புறவில் பாலியல் கவர்ச்சி சட்டென தலைதூக்க எப்போதும் வாய்ப்பு உள்ளது. நட்பு முறையில் கட்டித்தழுவுவதும்கூட திடீரென மோகத்தைத் தட்டியெழுப்பலாம்” என்றும் அது எச்சரிக்கிறது.
மணமான தம்பதியினர் யதார்த்தமாகவும், நடைமுறையாகவும் செயல்படுவது ரொம்பவே முக்கியம். “மற்றவர்களோடு எந்த விதத்தில் நெருங்கிப் பழகினாலும் சரி அது மண வாழ்க்கைக்கு ஆபத்தாய் அமையலாம். தாம்பத்திய உறவிருந்தால் நெருக்கமான உறவிருப்பதாக சொல்ல முடியாது, எதிர்பாலாரில் உங்களுடைய துணை மட்டுமே உங்களுக்கு உண்மையான நெருங்கிய நண்பராய் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கும் உரிமையும் அவருக்கு உண்டு” என நூலாசிரியரான டென்னஸ் ப்ராகா மகிழ்ச்சி ஒரு பெரும் பிரச்சினை என்ற ஆங்கில புத்தகத்தில் எழுதுகிறார். ஒழுக்கச் சுத்தமுள்ளவர்களாய் இருப்பதற்கு இருதயத்தின் இச்சைகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என இயேசு குறிப்பிட்டார். (மத்தேயு 5:28) ஆகவே நண்பராகப் பழகுங்கள், ஆனால் இருதயத்திற்கு வேலி போடுங்கள்; எதிர்பாலாரிடம் தகாத எண்ணங்களும், உணர்ச்சிகளும் தலைதூக்குவதற்கோ முறை தவறி நடந்துகொள்வதற்கோ வழிவகுக்கும் சந்தர்ப்பங்களைக் கவனமாகத் தவிர்த்திடுங்கள்.
[பக்கம் 7-ன் படங்கள்]
உங்களுடைய உடலுக்கும் உள்ளத்துக்கும் கவனம் செலுத்துவது உங்களை மிக அழகானவராக்கும்
[பக்கம் 8-ன் படம்]
நண்பர்கள் ஒருவருக்கொருவர் மனம்விட்டுப் பேசுவார்கள்