A3
பைபிள் நமக்குக் கிடைத்த விதம்
பைபிளின் நூலாசிரியராகிய கடவுள், பைபிளைக் கொடுத்தது மட்டுமல்லாமல் அதைப் பாதுகாத்தும் வந்திருக்கிறார். அவர்தான் இந்த வார்த்தைகள் பதிவாகும்படி செய்திருக்கிறார்:
‘நம் கடவுளின் வார்த்தை என்றென்றும் நிலைத்திருக்கிறது.’—ஏசாயா 40:8.
எபிரெய-அரமேயிக் வேதாகமம்a மற்றும் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் முதல் கையெழுத்துப் பிரதிகள் நம்மிடம் இல்லையென்றாலும், மேலே சொல்லப்பட்டிருக்கும் வார்த்தைகள் உண்மையே. கடவுளுடைய தூண்டுதலால் முதன்முதலில் எழுதப்பட்ட விஷயங்கள் இன்றுள்ள பைபிளில் அப்படியே மாறாமல் இருக்கின்றன என்று நாம் எப்படி உறுதியாகச் சொல்லலாம்?
நகல் எடுப்பவர்கள் பைபிளைப் பாதுகாத்தார்கள்
ஆரம்பக் காலத்திலிருந்தே எபிரெய வேதாகமம் நகலெடுக்கப்பட்டு வந்தது; இதை வழக்கமாகச் செய்ய வேண்டுமென்று கடவுள்தான் சொல்லியிருந்தார்.b உதாரணத்துக்கு, இஸ்ரவேல் ராஜாக்கள் திருச்சட்டப் பதிவைத் தங்களுக்கென நகலெடுத்துக்கொள்ள வேண்டுமென்று யெகோவா கட்டளை கொடுத்திருந்தார். (உபாகமம் 17:18) அதோடு, திருச்சட்டத்தைப் பாதுகாக்கும் பொறுப்பையும் அதை மக்களுக்குக் கற்றுத்தரும் பொறுப்பையும் லேவியர்களுக்குக் கொடுத்திருந்தார். (உபாகமம் 31:26; நெகேமியா 8:7) யூதர்கள் பாபிலோனுக்குச் சிறைபிடிக்கப்பட்டுப் போன பிறகு, நகலெடுப்பவர்கள் அல்லது எழுத்தர்களின் (சோஃபெரிம்) ஒரு வகுப்பு உருவானது. (எஸ்றா 7:6, அடிக்குறிப்பு) காலப்போக்கில், அந்த எழுத்தர்கள் எபிரெய வேதாகமத்தின் 39 புத்தகங்களையும் ஏராளமாக நகலெடுத்தார்கள்.
பல நூற்றாண்டுகளாக, எழுத்தர்கள் இந்தப் புத்தகங்களை மிகவும் கவனமாக நகலெடுத்தார்கள். இடைக்காலத்தில் (கி.பி. 500–1500-ல்), யூத எழுத்தர்களின் ஒரு தொகுதியாகிய மசோரெட்டுகள் அந்த நகலெடுக்கும் வேலையைத் தொடர்ந்தார்கள். மிகவும் பழமையான, முழுமையான மசோரெட் கையெழுத்துப் பிரதி, லெனின்கிரேட் கோடெக்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இது கி.பி. 1008/1009-ஆம் வருஷத்தைச் சேர்ந்தது. ஆனால், 20-ஆம் நூற்றாண்டின் மத்தியில் கண்டெடுக்கப்பட்ட சவக்கடல் சுருள்களில் சுமார் 220 பைபிள் கையெழுத்துப் பிரதிகள் அல்லது அதனுடைய துண்டுகள் இருந்தன. அந்தக் கையெழுத்துப் பிரதிகள் லெனின்கிரேட் கோடெக்சைவிட ஆயிரம் வருஷங்கள் பழமையானவை. அந்தச் சவக்கடல் சுருள்களையும் லெனின்கிரேட் கோடெக்சையும் ஒப்பிட்டுப் பார்த்ததில் ஒரு முக்கியமான விஷயம் உறுதியானது: சவக்கடல் சுருள்களில் உள்ள வார்த்தைகளில் சில வித்தியாசங்கள் இருந்தாலும் அவற்றின் கருத்து எந்த விதத்திலும் மாறவே இல்லை.
கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் 27 பைபிள் புத்தகங்களைப் பற்றி என்ன சொல்லலாம்? அவை இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களாலும் ஆரம்பக் கால சீஷர்கள் சிலராலும் முதன்முதலில் எழுதப்பட்டன. யூத எழுத்தர்களின் பாரம்பரியத்தைப் பின்பற்றி ஆரம்பக் கால கிறிஸ்தவர்கள் அவற்றை நகலெடுத்தார்கள். (கொலோசெயர் 4:16) ரோமப் பேரரசர் டயக்லீஷியனும் மற்றவர்களும் ஆரம்பக் கால கிறிஸ்தவ புத்தகங்கள் எல்லாவற்றையும் அழிப்பதற்கு முயற்சி செய்தபோதிலும், இன்றுவரை ஆயிரக்கணக்கான பழங்கால கையெழுத்துப் பிரதிகளும் அவற்றின் துண்டுகளும் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன.
கிறிஸ்தவ புத்தகங்கள் மற்ற மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டன. ஆரம்பக் காலத்தில், அர்மீனியன், எத்தியோபிக், ஜார்ஜியன், காப்டிக், லத்தீன், சிரியாக் போன்ற பழங்கால மொழிகளில் பைபிள் மொழிபெயர்க்கப்பட்டது.
மொழிபெயர்ப்புக்கு அடிப்படையான எபிரெய மற்றும் கிரேக்கப் பதிவுகள்
பழங்கால பைபிள் கையெழுத்துப் பிரதிகள் எல்லாமே ஒரேபோல் இல்லை. அப்படியிருக்கும்போது முதன்முதலில் எழுதப்பட்ட பதிவில் என்ன தகவல் இருந்ததென்று நமக்கு எப்படித் தெரியும்?
இதைப் புரிந்துகொள்வதற்கு ஓர் உதாரணத்தைப் பார்க்கலாம். ஆசிரியர் ஒருவர், ஒரு புத்தகத்திலுள்ள பாடத்தைக் கைப்பட நகலெடுக்கும்படி வகுப்பில் இருக்கும் 100 மாணவர்களிடம் சொல்கிறார். ஒருவேளை அந்தப் புத்தகம் தொலைந்துபோனாலும், அந்த 100 நகல்களையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே, அந்தப் புத்தகத்தில் என்ன தகவல் இருந்ததென்று தெரிந்துகொள்ளலாம். நகலெடுத்தபோது ஒவ்வொரு மாணவனும் சில தவறுகள் செய்திருக்கலாம். ஆனால், எல்லா மாணவர்களும் ஒரே மாதிரி தவறுகள் செய்திருக்க மாட்டார்கள். அதேபோல், ஆயிரக்கணக்கான பைபிள் கையெழுத்துப் பிரதிகளின் துண்டுகளையும் பழங்கால பைபிள் புத்தகங்களின் நகல்களையும் பைபிள் அறிஞர்கள் ஒப்பிட்டுப் பார்த்தால், நகலெடுத்தவர்கள் செய்த தவறுகளையும் முதன்முதலில் எழுதப்பட்டிருந்த வார்த்தைகளையும் கண்டுபிடித்துவிடலாம்.
“எந்தப் பழங்கால புத்தகமும் இந்தளவு துல்லியமாக நம்மிடம் வந்து சேர்ந்ததில்லை என்று தாராளமாகச் சொல்லலாம்”
முதன்முதலில் எழுதப்பட்ட பைபிள் பதிவிலுள்ள கருத்துகள் மாறாமல் நம்மிடம் வந்து சேர்ந்திருக்கின்றன என்று எப்படி உறுதியாக நம்பலாம்? எபிரெய வேதாகமத்தைப் பற்றி அறிஞர் வில்லியம் எச். க்ரீன் இப்படிச் சொல்கிறார்: “எந்தப் பழங்கால புத்தகமும் இந்தளவு துல்லியமாக நம்மிடம் வந்து சேர்ந்ததில்லை என்று தாராளமாகச் சொல்லலாம்.” புதிய ஏற்பாடு என்று அழைக்கப்படும் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தைப் பற்றி பைபிள் அறிஞர் எஃப். எஃப். ப்ரூஸ் இப்படிச் சொல்கிறார்: “பழங்கால கிரேக்க எழுத்தாளர்கள் எழுதிய நிறைய புத்தகங்களுக்கு இருக்கும் ஆதாரங்களைவிட, புதிய ஏற்பாட்டின் புத்தகங்களுக்கு ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன. அதனால், புதிய ஏற்பாட்டின் நம்பகத்தன்மையைப் பற்றிக் கேள்வி கேட்க யாருமே நினைத்துக்கூட பார்ப்பதில்லை.” அதோடு, “புதிய ஏற்பாடு மதசார்பற்ற புத்தகங்களின் ஒரு தொகுப்பாக இருந்திருந்தால், அதன் நம்பகத்தன்மையைப் பற்றி யாருமே துளிகூட சந்தேகப்பட்டிருக்க மாட்டார்கள்” என்று அவர் சொல்கிறார்.
எபிரெயப் பதிவு: ருடால்ஃப் கிட்டெல் என்பவரின் பிப்ளியா ஹெப்ராய்காவை அடிப்படையாக வைத்துத்தான் எபிரெய வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு (1953-1960) ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. அதுமுதல், சவக்கடல் சுருள்கள் மற்றும் வேறு சில பழங்கால கையெழுத்துப் பிரதிகளை ஆராய்ச்சி செய்ததன் அடிப்படையில் திருத்தப்பட்ட எபிரெய பதிவுகளான பிப்ளியா ஹெப்ராய்கா ஸ்டட்கார்டென்சியா மற்றும் பிப்ளியா ஹெப்ராய்கா க்வின்ட்டா வெளியிடப்பட்டன. நிபுணர்களின் இந்தப் பதிவுகளில், லெனின்கிரேட் கோடெக்சில் உள்ள வார்த்தைகள் அப்படியே கொடுக்கப்பட்டிருப்பதோடு, சமாரிய ஐந்தாகமம், சவக்கடல் சுருள்கள், கிரேக்க செப்டுவஜன்ட், அரமேயிக் டார்கம்ஸ், லத்தீன் வல்கேட், சிரியாக் பெஷிட்டா போன்றவற்றில் காணப்படுகிற அவற்றுக்கு இணையான வார்த்தைகள் அடிக்குறிப்புகளில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆங்கில புதிய உலக மொழிபெயர்ப்பின் தற்போதைய திருத்திய பதிப்பு தயாரிக்கப்பட்டபோது பிப்ளியா ஹெப்ராய்கா ஸ்டட்கார்டென்சியா, பிப்ளியா ஹெப்ராய்கா க்வின்ட்டா ஆகிய இரண்டுமே ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தப்பட்டன.
கிரேக்கப் பதிவு: 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பி. எஃப். வெஸ்ட்காட் மற்றும் எஃப். ஜெ. ஏ. ஹார்ட் என்ற அறிஞர்கள், மூலப் பதிவோடு மிகவும் ஒத்திருந்ததாக நினைத்த அன்றைய பைபிள் கையெழுத்துப் பிரதிகளையும் அவற்றின் துண்டுகளையும் ஒப்பிட்டுப் பார்த்து கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் அடிப்படைப் பதிவைத் தயாரித்தார்கள். அந்த அடிப்படைப் பதிவை வைத்துதான் 20-ஆம் நூற்றாண்டின் மத்தியில் புதிய உலக பைபிள் மொழிபெயர்ப்புக் குழுவினர் தங்கள் பைபிளை மொழிபெயர்த்தார்கள். அதோடு, கி.பி. இரண்டாம், மூன்றாம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த நாணல் சுருள்களும் ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அதுமுதல், நிறைய நாணல் சுருள்கள் கிடைக்க ஆரம்பித்தன. அதோடு, நிபுணர்கள் சமீபத்தில் செய்த ஆராய்ச்சிகளின் அடிப்படையில் நெஸ்லே மற்றும் ஆலன்ட் பதிவு, ஐக்கிய பைபிள் சங்கங்களின் பதிவு போன்ற அடிப்படைப் பதிவுகள் தயாரிக்கப்பட்டன. இவற்றை ஆராய்ந்ததால் கண்டுபிடிக்கப்பட்ட சில விஷயங்கள், தற்போதைய ஆங்கில திருத்திய பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.
அந்த அடிப்படைப் பதிவுகளை வைத்துப் பார்க்கும்போது, கிங் ஜேம்ஸ் வர்ஷன் போன்ற பழைய மொழிபெயர்ப்புகளில் இருக்கும் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்திலுள்ள சில வசனங்கள், நகலெடுப்பவர்களால் பிற்பாடு சேர்க்கப்பட்டவை என்பதும், அவை கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் எழுதப்பட்டவை அல்ல என்பதும் தெளிவாகத் தெரிகிறது. ஆனால், சேர்க்கப்பட்ட இந்த வசனங்களை நீக்குவது நிறைய பைபிள்களிலுள்ள வசனங்களின் எண்களில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதற்குக் காரணம், வசனங்களைப் பிரிக்கும் முறை 16-ஆம் நூற்றாண்டிலேயே முடிவு செய்யப்பட்டுவிட்டது. அந்த வசனங்கள் இவைதான்: மத்தேயு 17:21; 18:11; 23:14; மாற்கு 7:16; 9:44, 46; 11:26; 15:28; லூக்கா 17:36; 23:17; யோவான் 5:4; அப்போஸ்தலர் 8:37; 15:34; 24:7; 28:29; ரோமர் 16:24. இந்த பைபிள் மொழிபெயர்ப்பில், இவை விடப்பட்ட வசனங்கள் என்பது அடிக்குறிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
மாற்கு 16-ஆம் அதிகாரத்தின் விரிவான முடிவுரையும் (9-20 வசனங்கள்), அதன் சுருக்கமான முடிவுரையும், யோவான் 7:53–8:11-ல் இருக்கும் வார்த்தைகளும் மூல கையெழுத்துப் பிரதிகளில் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. அதனால், தவறாகச் சேர்க்கப்பட்ட இந்த வசனங்கள் இந்த மொழிபெயர்ப்பில் சேர்க்கப்படவில்லை.
பொதுவாக, மூலப் பதிவுகளோடு எவை மிக நெருக்கமாக ஒத்துப்போகின்றன என்று பைபிள் அறிஞர்கள் நினைக்கிறார்களோ, அவற்றை அடிப்படையாக வைத்து சில வார்த்தைகள் இந்த மொழிபெயர்ப்பில் மாற்றப்பட்டிருக்கின்றன. உதாரணத்துக்கு, சில கையெழுத்துப் பிரதிகளின்படி, “இடுக்கமான வாசல் வழியாகப் போங்கள்; அழிவுக்குப் போகிற வாசல் அகலமாக இருக்கிறது, பாதையும் விசாலமாக இருக்கிறது” என்று மத்தேயு 7:13 சொல்கிறது. முன்பு வந்த ஆங்கில புதிய உலக மொழிபெயர்ப்பு பதிப்புகளில், இந்த வசனத்தில் “வாசல்” என்ற வார்த்தை ஒரு தடவைதான் சேர்க்கப்பட்டிருந்தது. ஆனால், கையெழுத்துப் பிரதிகளைக் கூடுதலாக ஆராய்ச்சி செய்து பார்த்ததில் மூலப் பதிவில் “வாசல்” என்ற வார்த்தை இரண்டு தடவை இருப்பது தெரியவந்துள்ளது. இதுபோன்ற சில மாற்றங்கள் நிறைய இடங்களில் இருந்தாலும், இவை சிறிய மாற்றங்கள்தான். இவற்றால் கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளின் அடிப்படைச் செய்தி எந்த விதத்திலும் மாறவில்லை.
a இனிவரும் பாராக்களில் எபிரெய வேதாகமம் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கும்.
b கையெழுத்துப் பிரதிகளை நகலெடுக்க வேண்டியிருந்ததற்கு ஒரு காரணம், அவை அழியக்கூடிய பொருள்களில் எழுதப்பட்டிருந்தன.