அதிகாரம் 27
“அவருக்குத்தான் எவ்வளவு நல்ல மனது!”
1, 2. கடவுளுடைய நல்மனம் எந்தளவு பயனளிக்கிறது, இந்தக் குணத்தை பைபிள் எப்படி வலியுறுத்திக் காட்டுகிறது?
சூரிய அஸ்தமனத்தின் பொன்னிற ஒளியில் ஆருயிர் நண்பர்கள் சிலர் ஒன்றுகூடி உணவு அருந்துகிறார்கள்; அழகிய காட்சியை ரசித்தவாறே சிரித்துப் பேசி மகிழ்கிறார்கள். வெகு தொலைவில், ஒரு விவசாயி தன் வயல்களின்மீது பார்வையை ஓடவிடுகிறார், கார்மேகம் திரண்டு வந்து தாகத்தோடிருக்கும் பயிர்கள் மீது மழைத் துளிகளை அள்ளி இறைப்பதைக் கண்டு புன்னகை பூக்கிறார். வேறொரு இடத்தில், கணவனும் மனைவியும் தங்கள் குழந்தை முதன்முதலாக தத்தித்தத்தி தளிர் நடைபயில்வதைக் கண்டு ஆனந்தம் அடைகிறார்கள்.
2 அறிந்தோ அறியாமலோ இவர்கள் எல்லாரும் ஒரே காரியத்திலிருந்து பயனடைகிறார்கள், அதுதான் யெகோவாவின் நல்மனம். “கடவுள் நல்லவர்” என்று பக்தியுள்ள சிலர் அடிக்கடி சொல்கிறார்கள். பைபிளோ பல படி மேலே சென்று, “அவருக்குத்தான் எவ்வளவு நல்ல மனது!” என வலியுறுத்திக் காட்டுகிறது. (சகரியா 9:17) ஆனால் இந்த வார்த்தைகள் உண்மையில் எதை அர்த்தப்படுத்துகின்றன என்பதை இன்று வெகு சிலரே அறிந்திருப்பதாக தெரிகிறது. யெகோவா தேவனுடைய நல்மனம் உண்மையில் எதை குறிக்கிறது, கடவுளுடைய இந்தக் குணம் நம் ஒவ்வொருவரையும் எவ்வாறு பாதிக்கிறது?
தெய்வீக அன்பின் தலைசிறந்த அம்சம்
3, 4. நல்மனம் என்றால் என்ன, யெகோவாவின் நல்மனம் தெய்வீக அன்பின் வெளிக்காட்டு என விவரிப்பது ஏன் மிகவும் பொருத்தமானது?
3 பைபிளில் சொல்லப்பட்டுள்ளபடி, ‘நல்மனம்’ என்பது சிறந்த ஒழுக்கநெறியைக் குறிக்கிறது. ஆகவே, ஒரு கருத்தில், நல்மனம் யெகோவாவில் வியாபித்திருக்கிறது என சொல்லலாம். வல்லமை, நீதி, ஞானம் போன்ற அனைத்து குணங்களும் முற்றுமுழுக்க நல்லவை. என்றாலும், நல்மனம் என்பதை யெகோவாவுடைய அன்பின் ஒரு வெளிக்காட்டு என வர்ணிப்பதே மிகவும் பொருத்தமானது. ஏன்?
4 நல்மனம் என்பது மற்றவர்களுக்காக செய்யும் செயல்களில் வெளிக்காட்டப்படும் ஒரு பண்பு. மனிதர்களில், நீதியைவிட அதிக மனங்கவரத்தக்க பண்பே நல்மனம் என அப்போஸ்தலன் பவுல் சுட்டிக் காட்டினார். (ரோமர் 5:7) நீதிமான் சட்டத்தை இம்மியும் பிசகாமல் உண்மையோடு கடைப்பிடிக்கிறார், ஆனால் நல்மனமுள்ளவரோ இன்னும் ஒரு படி மேலே செல்கிறார். அவரே முன்வந்து உதவிகள் செய்கிறார், மற்றவர்களுக்கு நன்மை செய்ய எப்போதும் வழி தேடுகிறார். நாம் பார்க்கப்போகிறபடி, இந்தக் கருத்தில் யெகோவா நிச்சயமாகவே நல்மனமுள்ளவர். யெகோவாவின் எல்லையற்ற அன்பிலிருந்தே இத்தகைய நல்மனம் ஊற்றெடுக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
5-7. ‘நல்ல போதகர்’ என அழைக்கப்படுவதை இயேசு ஏன் மறுத்தார், அதன் மூலம் அவர் வலியுறுத்திய ஆழமான சத்தியம் என்ன?
5 யெகோவா தமது நல்ல மனதை வெளிக்காட்டுவதில் தனித்தன்மை வாய்ந்தவராகவும் விளங்குகிறார். இயேசு மரிப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, ஒரு கேள்வி கேட்பதற்காக ஒருவன் அவரிடம் வந்தான். அப்போது அவரை “நல்ல போதகரே” என்று அழைத்தான். அதற்கு இயேசு, “என்னை ஏன் நல்லவன் என்று சொல்கிறாய்? கடவுள் ஒருவரைத் தவிர வேறு யாரும் நல்லவர் கிடையாது” என்றார். (மாற்கு 10:17, 18) ஒருவேளை, இந்தப் பதில் உங்களுக்கு குழப்பமாக தோன்றலாம். அந்த மனிதன் சொன்னதை இயேசு ஏன் திருத்தினார்? இயேசு உண்மையில் ‘நல்ல போதகர்’ தானே?
6 முகஸ்துதிக்காக அந்த மனிதன் ‘நல்ல போதகர்’ என்ற பட்டப்பெயரை உபயோகித்தான் என்பது தெளிவாக தெரிகிறது. இயேசு தாழ்மையுடன் இத்தகைய மகிமையை தமது பரலோக தகப்பனுக்கு சமர்ப்பித்தார்; அவரே நல்லவர், அவருக்கு நிகர் வேறு யாருமில்லை. (நீதிமொழிகள் 11:2) அதேசமயத்தில், இயேசு ஆழமான ஒரு சத்தியத்தையும் வலியுறுத்தினார். எது நல்லது என்பதற்குரிய தராதரமே யெகோவாதான். எது நல்லது எது கெட்டது என்பதை தீர்மானிக்கும் உன்னத உரிமை அவருக்கு மட்டுமே உள்ளது. கடவுளுடைய சொல்லுக்கு கட்டுப்படாமல் நன்மை தீமை அறியத்தக்க மரத்தின் கனியை சாப்பிடுவதன் மூலம் ஆதாமும் ஏவாளும் அந்த உரிமையை பறிக்க முயன்றார்கள். இயேசுவோ அவர்களைப் போல நடக்காமல் தராதரங்களை நிர்ணயிப்பதை தாழ்மையுடன் தமது தகப்பனிடம் விட்டுவிடுகிறார்.
7 மேலும், உண்மையிலேயே நன்மையான அனைத்திற்கும் ஊற்றுமூலர் யெகோவாவே என்பதை இயேசு அறிந்திருந்தார். ‘நல்ல பரிசுகள் ஒவ்வொன்றையும், மிகச் சிறந்த அன்பளிப்புகள் ஒவ்வொன்றையும்’ அளிப்பவர் அவரே. (யாக்கோபு 1:17) யெகோவாவின் நல்மனம் எவ்வாறு அவருடைய தாராள குணத்தில் வெளிப்படுகிறது என்பதை நாம் ஆராயலாம்.
யெகோவாவின் நல்ல மனதுக்கு அத்தாட்சி
8. எல்லா மனிதர்களுக்கும் யெகோவா எப்படி நன்மை செய்கிறார்?
8 இதுவரை வாழ்ந்தவர்கள் எல்லாருமே யெகோவாவின் நல்மனதால் பயனடைந்திருக்கின்றனர். சங்கீதம் 145:9 இவ்வாறு சொல்கிறது: “யெகோவா எல்லாருக்கும் நல்லது செய்கிறார்.” சகலத்தையும் உள்ளடக்கும் அவருடைய நல்மனதுக்கு சில உதாரணங்கள் யாவை? பைபிள் இவ்வாறு கூறுகிறது: “அவர் தன்னைப் பற்றிச் சாட்சி கொடுக்காமல் இருந்ததில்லை. எப்படியென்றால், வானத்திலிருந்து மழையையும், பருவ காலங்களில் அமோக விளைச்சலையும், ஏராளமான உணவையும் உங்களுக்குத் தந்து, உங்கள் உள்ளத்தைச் சந்தோஷத்தால் நிரப்பி நன்மை செய்திருக்கிறார்.” (அப்போஸ்தலர் 14:17) நீங்கள் அறுசுவை உணவை உண்டு அகமகிழ்ந்த சமயம் நினைவிருக்கிறதா? என்றென்றும் சுழற்சி முறையில் சுத்தமான நீரையும் ஏராளமான உணவையும் உற்பத்தி செய்ய ‘பருவ காலங்களை’ யெகோவா தமது நல்ல குணத்தால் படைக்காதிருந்தால் உணவே இருக்காது. அவரை நேசிப்போருக்கு மட்டுமே யெகோவா இத்தனை நன்மைகளை செய்யவில்லை, எல்லாருக்கும் செய்திருக்கிறார். “அவர் நல்லவர்களுக்கும் கெட்டவர்களுக்கும் சூரியனை உதிக்க வைக்கிறார்; நீதிமான்களுக்கும் அநீதிமான்களுக்கும் மழையைப் பெய்ய வைக்கிறார்” என இயேசு கூறினார்.—மத்தேயு 5:45.
9. யெகோவாவின் நல்ல மனதை ஆப்பிள் எவ்வாறு எடுத்துக்காட்டுகிறது?
9 சூரியன், மழை, செழிப்பான காலங்கள் ஆகியவை தொடர்ந்து செயல்படுவதால் மனிதகுலத்திற்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம். இதன் மூலம் பொழியப்படும் தாராள குணத்தை அநேகர் ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை. உதாரணமாக, ஆப்பிளை எடுத்துக்கொள்ளுங்கள். பூமியில் மித வெப்ப மண்டலம் முழுவதும் சர்வ சாதாரணமாக கிடைக்கும் ஒரு கனிதான் அது. என்றாலும், அது அழகாகவும் ருசியாகவும் இருக்கிறது. அதோடு, புத்துணர்ச்சியூட்டும் சாறும் இன்றியமையா ஊட்டச்சத்துக்களும் அதில் நிறைந்திருக்கின்றன. உலகம் முழுவதிலும் சுமார் 7,500 வகை ஆப்பிள்கள் இருப்பது உங்களுக்குத் தெரியுமா? சிவப்பு நிறம், பொன் நிறம், மஞ்சள் நிறம், பச்சை நிறம் என பல்வேறு நிறங்களில் அது கிடைக்கிறது. திராட்சை பழத்தைவிட சற்று பெரிய அளவு முதல், ஆரஞ்சு பழத்தின் அளவு வரை பல்வேறு அளவுகளிலும் அது கிடைக்கிறது. உங்களுடைய கையில் ஒரு சிறிய ஆப்பிள் விதையை வைத்திருக்கையில் அது அற்பமாக தோன்றலாம். ஆனால் அதிலிருந்தே ஓர் இனிய மரம் வளருகிறது. (உன்னதப்பாட்டு 2:3) ஒவ்வொரு வசந்த காலத்திலும் ஆப்பிள் மரத்தில் எண்ணிலடங்கா மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன; ஒவ்வொரு இலையுதிர் காலத்திலும் அது காய்த்து கனி தருகிறது. ஒரு சராசரி ஆப்பிள் மரம் ஒவ்வொரு ஆண்டும்—சுமார் 75 ஆண்டுகளுக்கு—தலா 19 கிலோ எடையுள்ள 20 பெட்டிகளை நிரப்பும் அளவுக்கு கனி கொடுக்கிறது!
யெகோவா ‘வானத்திலிருந்து மழையையும், பருவ காலங்களில் அமோக விளைச்சலையும் உங்களுக்குத் தருகிறார்’
10, 11. கடவுளின் நல்ல மனதை நம் புலன்கள் எவ்வாறு மெய்ப்பித்துக் காட்டுகின்றன?
10 யெகோவா நல்ல மனதோடு, நமது உடலை ‘அற்புதமாகப் படைத்திருக்கிறார்’; அவருடைய படைப்புகளைப் பார்த்து ரசித்து மகிழ உதவும் புலன்களுடன் அதைப் படைத்திருக்கிறார். (சங்கீதம் 139:14) இந்த அதிகாரத்தின் ஆரம்பத்தில் விவரிக்கப்பட்டுள்ள சில தருணங்களை மீண்டும் சிந்தித்துப் பாருங்கள். அத்தகைய நேரங்களில் எந்தக் காட்சிகள் மகிழ்ச்சி அளிக்கின்றன? புன்முறுவல் பூக்கும் ஒரு குழந்தையின் சிவந்த பட்டுக் கன்னங்கள், வயல் வெளியில் திரைச்சீலை போல விழும் மழை, சிவப்பு நிறத்திலும் பொன்னிறத்திலும் ஊதா நிறத்திலும் வர்ணஜாலம் புரிந்து அஸ்தமனமாகும் சூரியன் ஆகிய காட்சிகளே மகிழ்ச்சி அளிக்கின்றன அல்லவா? மனிதருடைய கண்கள் பல லட்சக்கணக்கான வண்ணங்களைப் பார்ப்பதற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன! அடுத்ததாக, நம்முடைய செவியுணர்வை எடுத்துக்கொள்ளலாம். அன்பானவரின் பல்வேறு குரல் தொனிகளையும், மரங்களை வருடி வரும் தென்றலின் கிசுகிசுப்பையும், தவழும் மழலையின் கள்ளம் கபடமற்ற புன்சிரிப்பையும் உணரும் திறன் நம் செவிக்கு உண்டு. இத்தகைய காட்சிகளையும் ஒலிகளையும் எப்படி நம்மால் கண்டுகளிக்க முடிகிறது? “கேட்பதற்குக் காதுகள், பார்ப்பதற்குக் கண்கள், இரண்டையுமே யெகோவாதான் உண்டாக்கினார்” என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 20:12) ஆனால் நம் புலன்களில் இவை இரண்டு மட்டுமே.
11 முகரும் உணர்வு யெகோவாவின் நல்மனதுக்கு மற்றொரு அத்தாட்சி. மனிதருடைய மூக்கு எக்கச்சக்கமான மணங்களை பகுத்தறியும் திறனுடையது. ஆயிரக்கணக்கான, ஏன் கோடிக்கணக்கான மணங்களை அதனால் பகுத்தறிய முடியும் என ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. அவற்றில் சிலவற்றை சிந்தித்துப் பாருங்கள்: உங்களுக்குப் பிடித்தமான உணவின் மணம், மலர்களின் சுகந்தம், காய்ந்த சருகுகளின் வாசனை, இளஞ்சூடேற்றும் நெருப்பிலிருந்து வரும் லேசான புகையின் வாசம். இன்னொரு புலன் தொடுவுணர்வு ஆகும். இதனால், முகத்தை வருடிச் செல்லும் இளந்தென்றல், அன்பானவருடைய இனிய தழுவல், கையிலுள்ள ஒரு பழத்துண்டின் இதமான மென்மை ஆகியவற்றை உங்களால் உணர முடிகிறது. அடுத்தது சுவையுணர்வு. கையிலுள்ள பழத்தை ஒரு கடி கடிக்கும்போது, உங்களுடைய சுவையுணர்வு உயிர் பெறுகிறது. பழத்தின் சிக்கலான வேதியியல் அமைப்பால் உருவாக்கப்படும் நுட்பமான ருசிகளை உங்களுடைய சுவை மொட்டுக்கள் உணரும்போது பல்சுவை உங்களுக்குப் பரவசமூட்டுகிறது. ஆம், “நீங்கள் தரும் நன்மைகள் எவ்வளவு ஏராளம்! உங்களுக்குப் பயந்து நடப்பவர்களுக்காக அவற்றைச் சேமித்து வைத்திருக்கிறீர்கள்” என்று சொல்லி யெகோவாவை வியந்து பாராட்டுவதற்கு நமக்கு சிறந்த காரணம் இருக்கிறது. (சங்கீதம் 31:19) ஆனால் தேவ பயமுள்ளவர்களுக்கு எவ்வாறு யெகோவா அதை ‘சேமித்து வைத்திருக்கிறார்?’
நித்திய நன்மைகள் தரும் நல்மனம்
12. யெகோவாவிடமிருந்து வரும் கொடைகளில் மிகவும் முக்கியமானவை எவை, ஏன்?
12 இயேசு இவ்வாறு கூறினார்: “‘உணவால் மட்டுமல்ல, யெகோவாவின் வாயிலிருந்து வருகிற ஒவ்வொரு வார்த்தையாலும் மனுஷன் உயிர்வாழ்வான்’ என எழுதப்பட்டிருக்கிறதே.” (மத்தேயு 4:4) சொல்லப்போனால், யெகோவா தரும் ஆவிக்குரிய விஷயங்கள் அவர் தரும் மாம்சப்பிரகாரமான விஷயங்களைவிட அதிக நன்மை பயக்கும்; ஏனென்றால் அவை முடிவில்லாத வாழ்வுக்கு வழிநடத்துகின்றன. இந்தப் புத்தகத்தில் 8-ம் அதிகாரத்தில், ஓர் ஆவிக்குரிய பூஞ்சோலையை உருவாக்க இந்தக் கடைசி நாட்களில் யெகோவா தமது புதுப்பிக்கும் வல்லமையை பயன்படுத்தியிருப்பதை நாம் கவனித்தோம். அந்தப் பூஞ்சோலையின் முக்கிய அம்சம் அபரிமிதமான ஆவிக்குரிய உணவாகும்.
13, 14. (அ) தரிசனத்தில் எசேக்கியேல் எதை கண்டார், இன்று அது நமக்கு எதை அர்த்தப்படுத்துகிறது? (ஆ) உண்மையுள்ள தமது ஊழியர்களுக்கு வாழ்வை கொடுக்கும் என்ன ஏற்பாடுகளை யெகோவா செய்திருக்கிறார்?
13 திரும்ப நிலைநாட்டப்படுவதைப் பற்றிய மகத்தான தீர்க்கதரிசனங்கள் ஒன்றில், புதுப்பிக்கப்பட்டு மகிமைப்படுத்தப்பட்ட ஆலயத்தைப் பற்றிய தரிசனம் எசேக்கியேல் தீர்க்கதரிசிக்கு காட்டப்பட்டது. அந்த ஆலயத்திலிருந்து தண்ணீர் வழிந்தோடியது; அது விசாலமாக பாய்ந்தோடியது, ஆழமும் அதிகரித்தது. அது பாய்ந்தோடிய இடமெல்லாம் ஆசீர்வாதங்களைப் பெற்றன. அந்த நதியின் இரு கரைகளிலும் மரங்கள் செழித்தோங்கி வளர்ந்து உணவையும் ஆரோக்கியத்தையும் அளித்தன. மேலும், உப்புமிகுந்த, உயிரற்ற சவக்கடலுக்கும்கூட அந்த நதி உயிரையும் வளத்தையும் கொடுத்தது! (எசேக்கியேல் 47:1-12) ஆனால் அவையனைத்தும் எதை அர்த்தப்படுத்தின?
14 அந்தத் தரிசனம், தூய வணக்கத்தை யெகோவா மீண்டும் நிலைநாட்டுவார் என்றும், அது மறுபடியும் அவருடைய நீதியான தராதரங்களுக்கு ஏற்ப இருக்கும் என்றும் காட்டுகிறது. தரிசனத்தில் பாய்ந்த அந்த நதியைப் போல், வாழ்வுக்காக கடவுள் செய்யும் ஏற்பாடுகள் அவருடைய ஜனங்களுக்கு என்றுமில்லாத அளவு அபரிமிதமாக கிடைக்கும். 1919-ல் தூய வணக்கம் திரும்ப நிலைநாட்டப்பட்டது முதல், யெகோவா தமது ஜனங்களுக்கு உயிர்காக்கும் ஏற்பாடுகளை அளித்து ஆசீர்வதித்திருக்கிறார். எப்படி? பைபிள்கள், பைபிள் பிரசுரங்கள், கூட்டங்கள், மாநாடுகள் ஆகிய அனைத்தும் லட்சோப லட்சம் மக்களுக்கு இன்றியமையா சத்தியங்களைக் கொடுத்து உதவி செய்திருக்கின்றன. இவற்றின் வாயிலாக, வாழ்வுக்கான ஏற்பாடுகளிலேயே மிகவும் முக்கியமானதாகிய கிறிஸ்துவின் மீட்புப் பலி ஏற்பாட்டைப் பற்றி யெகோவா மக்களுக்கு கற்பித்திருக்கிறார். இந்த ஏற்பாடே, யெகோவாவிற்கு முன்பு சுத்தமான நிலைநிற்கையைப் பெற வாய்ப்பளிக்கிறது; மேலும், கடவுளுக்கு பயந்து உண்மையிலேயே அவரை நேசிக்கிற அனைவருக்கும் முடிவில்லாத வாழ்வுக்கான நம்பிக்கையைத் தருகிறது.a ஆகவே, இந்தக் கடைசி நாட்கள் முழுவதிலும் உலகம் ஆவிக்குரிய பஞ்சத்தால் அவதியுறுகையில், யெகோவாவின் ஜனங்களோ ஆவிக்குரிய விருந்தை அனுபவித்து மகிழ்கிறார்கள்.—ஏசாயா 65:13.
15. கிறிஸ்துவின் ஆயிரவருட ஆட்சியில் உண்மையுள்ள மனிதருக்கு யெகோவாவின் நல்மனம் எந்த அர்த்தத்தில் அபரிமிதமாக பொழியப்படும்?
15 ஆனால் இந்தப் பொல்லாத உலகம் அழிந்தபின் எசேக்கியேலின் தரிசனத்தில் வரும் நதி பாயாமல் நின்றுவிடாது. மாறாக, அது கிறிஸ்துவின் ஆயிரவருட ஆட்சியில் இன்னும் சலசலவென பாய்ந்தோடும். யெகோவா, மேசியானிய அரசாங்கத்தின் மூலம், இயேசுவின் பலியின் மதிப்பை முழு அளவில் பயன்படுத்தி, உண்மையுள்ள மனிதர்களை படிப்படியாக பரிபூரணத்திற்கு உயர்த்துவார். அப்பொழுது நாம் யெகோவாவின் நல்ல மனதைக் குறித்து எவ்வளவாக மகிழ்ச்சியில் திளைப்போம்!
யெகோவாவுடைய நல்ல மனதின் கூடுதலான அம்சங்கள்
16. யெகோவாவின் நல்மனம் மற்ற பண்புகளையும் உட்படுத்துகிறது என்பதை பைபிள் எவ்வாறு காட்டுகிறது, அவற்றில் சில யாவை?
16 யெகோவாவின் நல்மனம் தாராள குணத்தையும்விட அதிகத்தை அர்த்தப்படுத்துகிறது. மோசேயிடம் கடவுள் இவ்வாறு கூறினார்: “நான் உன் முன்னால் கடந்துபோவேன். அப்போது, நான் எவ்வளவு நல்லவர் என்று நீ பார்ப்பாய். யெகோவா என்ற என் பெயரைப் பற்றி உன் முன்னால் அறிவிப்பேன்.” பிற்பாடு அந்தப் பதிவு இவ்வாறு சொல்கிறது: “யெகோவா மோசேயின் முன்னால் கடந்துபோகும்போது, ‘யெகோவா, யெகோவா, இரக்கமும் கனிவும் உள்ள கடவுள், சீக்கிரத்தில் கோபப்படாதவர், மாறாத அன்பை அளவில்லாமல் காட்டுபவர், உண்மையுள்ளவர்’ . . . என்று சொன்னார்.” (யாத்திராகமம் 33:19; 34:6, 7, அடிக்குறிப்பு) ஆகவே யெகோவாவின் நல்மனம் அநேக சிறந்த குணங்களை உட்படுத்துகிறது. அவற்றில் இரண்டை மட்டும் நாம் இப்பொழுது சிந்திக்கலாம்.
17. கனிவு என்றால் என்ன, இதை பாவமுள்ள மனிதரிடம் யெகோவா எவ்வாறு காண்பித்திருக்கிறார்?
17 ‘கனிவானவர்.’ ‘கரிசனை’ என்றும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்த வார்த்தை யெகோவா தமது சிருஷ்டிகளை நடத்தும் விதத்தைப் பற்றி நமக்கு நிறைய சொல்கிறது. அதிகாரத்தில் இருப்பவர்களைப் போல முகத்தில் அடித்தாற்போல் பேசுகிறவராகவோ உணர்ச்சியற்றவராகவோ அல்லது கொடுங்கோலராகவோ இல்லாமல் அவர் மென்மையாகவும் சாந்தமாகவும் நடந்துகொள்கிறார். உதாரணமாக, ஆபிராமிடம் யெகோவா இவ்வாறு கூறினார்: “நீ இருக்கும் இடத்திலிருந்து தயவுசெய்து வடக்கிலும் தெற்கிலும் கிழக்கிலும் மேற்கிலும் பார்.” (ஆதியாகமம் 13:14) “தயவுசெய்து” என்ற வார்த்தையை அநேக மொழிபெயர்ப்புகள் விட்டுவிடுகின்றன. ஆனால் மூல எபிரெய மொழியில் ஓர் இடைச்சொல் இருக்கிறது, அது கட்டளை வடிவில் இருக்கும் வாக்கியத்தை கனிவான வேண்டுகோளாக மாற்றுகிறது என பைபிள் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். இதுபோன்ற வேறுசில உதாரணங்களும் இருக்கின்றன. (ஆதியாகமம் 31:12; எசேக்கியேல் 8:5) இந்தச் சர்வலோகத்திற்கும் பேரரசராக இருப்பவர் சாதாரண மனிதரிடம் “தயவுசெய்து” என கூறுவதை கற்பனை செய்து பாருங்கள்! கொடுமையும் மூர்க்கமும் முரட்டுத்தனமும் சர்வ சாதாரணமாக காணப்படும் ஓர் உலகில், நம்முடைய கடவுளாகிய யெகோவா இனியவராக இருப்பதை சிந்தித்துப் பார்ப்பது புத்துணர்ச்சி அளிக்கிறது அல்லவா?
18. என்ன கருத்தில் யெகோவா “உண்மையுள்ளவர்,” ஏன் அந்த வார்த்தைகள் உறுதியளிக்கின்றன?
18 “உண்மையுள்ளவர்.” நேர்மையின்மையே இவ்வுலகத்தின் போக்காக இருக்கிறது. ஆனால், “பொய் சொல்ல கடவுள் என்ன சாதாரண மனுஷனா?” என்று பைபிள் நமக்கு நினைப்பூட்டுகிறது. (எண்ணாகமம் 23:19) சொல்லப்போனால், அவர் “பொய் சொல்ல முடியாத கடவுள்” என தீத்து 1:3 சொல்கிறது. யெகோவாவின் நல்மனம் அவரை பொய் சொல்ல அனுமதிப்பதில்லை. ஆகவே, யெகோவாவின் வாக்குறுதிகள் முற்றிலும் நம்பகமானவை; அவருடைய வார்த்தைகள் எப்பொழுதும் நிறைவேறும் என்பது உறுதி. யெகோவா ‘சத்தியத்தின் கடவுள்’ என்றும் அழைக்கப்படுகிறார். (சங்கீதம் 31:5) அவர் பொய் சொல்வதிலிருந்து விலகியிருப்பது மட்டுமின்றி சத்தியத்தை வாரி வழங்கவும் செய்கிறார். அவர் யாரையும் தம்மிடம் அண்ட விடாத, அமுக்கமான, கமுக்கமான நபர் அல்ல; மாறாக, ஞானம் எனும் எல்லையற்ற களஞ்சியத்திலிருந்து இறைத்து தம்முடைய உண்மை ஊழியர்களுக்கு தாராளமாக அறிவொளியூட்டுகிறார்.b தாம் வெளிப்படுத்துகிற சத்தியங்களின்படி எப்படி வாழலாம் என்பதையும் அவர்களுக்கு கற்பிக்கிறார், இவ்வாறு அவர்கள் ‘தொடர்ந்து சத்தியத்தில் நடக்க’ உதவுகிறார். (3 யோவான் 3) ஆகவே, யெகோவாவின் நல்மனம் நம்மை எவ்வாறு தனிப்பட்ட விதமாக பாதிக்க வேண்டும்?
யெகோவாவின் “நல்மனதால் . . . முகம் சந்தோஷத்தில் களைகட்டும்”
19, 20. (அ) யெகோவாவின் நல்ல மனதின் மீது ஏவாள் வைத்திருந்த நம்பிக்கையை எவ்வாறு சாத்தான் தந்திரமாக அழிக்க முயன்றான், அதன் விளைவு என்ன? (ஆ) யெகோவாவின் நல்மனம் நம்மை எவ்வாறு பாதிக்க வேண்டும், ஏன்?
19 ஏதேன் தோட்டத்தில் ஏவாளை சாத்தான் சோதித்தபோது, யெகோவாவின் நல்ல மனதின் மீது அவள் வைத்திருந்த நம்பிக்கையை தந்திரமாக அழிக்க ஆரம்பித்தான். “இந்தத் தோட்டத்தில் இருக்கிற எல்லா மரங்களின் பழங்களையும் நீ திருப்தியாகச் சாப்பிடலாம்” என்று ஆதாமிடம் யெகோவா சொல்லியிருந்தார். தோட்டத்தை அலங்கரித்த ஆயிரக்கணக்கான மரங்களில், ஒரேவொரு மரத்திற்கு மட்டுமே யெகோவா தடை விதித்தார். என்றாலும், ஏவாளிடம் சாத்தான் எவ்வாறு தந்திரமாக தன்னுடைய முதல் கேள்வியை கேட்டான் என்பதை கவனியுங்கள்; “தோட்டத்தில் உள்ள அத்தனை மரங்களின் பழங்களையும் நீங்கள் சாப்பிடக் கூடாது என்று கடவுள் நிஜமாகவே சொன்னாரா?” என்று கேட்டான். (ஆதியாகமம் 2:9, 16; 3:1) யெகோவாவின் வார்த்தைகளை சாத்தான் திரித்துக் கூறினான்; இவ்வாறு, நன்மையான ஏதோவொன்றை அவர் கொடுக்காமல் வைத்துக்கொண்டார் என ஏவாளை நினைக்க வைத்தான். அவனுடைய சூழ்ச்சி பலித்தது வருந்தத்தக்க விஷயம். எல்லாவற்றையும் தனக்குத் தந்த கடவுளுடைய நல்மனதை ஏவாள் சந்தேகிக்க ஆரம்பித்தாள்; அவளுக்குப் பின்வந்த எத்தனையோ ஆண்களும் பெண்களும்கூட அவளைப் போலவே அதை சந்தேகித்திருக்கிறார்கள்.
20 இப்படிப்பட்ட சந்தேகங்களால் விளைந்த ஆழ்ந்த துன்பத்தை நாம் அறிவோம். ஆகவே, எரேமியா 31:12-ல் (அடிக்குறிப்பு) சொல்லப்பட்டுள்ள வார்த்தைகளுக்கு செவிசாய்ப்போமாக; “அவருடைய நல்மனதால் அவர்களுடைய முகம் சந்தோஷத்தில் களைகட்டும்.” யெகோவாவின் நல்மனம் உண்மையிலேயே நம்மை சந்தோஷத்தால் பிரகாசிக்கச் செய்ய வேண்டும். நல்ல குணங்களைக் காட்டுவதில் பூரணராகிய நமது கடவுளின் உள்நோக்கங்களை நாம் ஒருபோதும் சந்தேகிக்க வேண்டியதில்லை. அவரை நாம் முழுமையாக நம்பலாம், ஏனென்றால் அவரை நேசிப்போருக்கு நன்மையானதைத் தவிர வேறொன்றையும் அவர் விரும்புவதில்லை.
21, 22. (அ) நீங்கள் யெகோவாவின் நல்மனதை பிரதிபலிக்க விரும்பும் வழிகள் சில யாவை? (ஆ) அடுத்த அதிகாரத்தில் நாம் எந்தக் குணத்தைப் பற்றி கலந்தாராய்வோம், நல்மனதிலிருந்து இது எவ்வாறு வேறுபடுகிறது?
21 மேலும், கடவுளுடைய நல்ல மனதைப் பற்றி மற்றவர்களிடம் பேச வாய்ப்பு கிடைக்கும்போது நாம் சந்தோஷப்படுகிறோம். யெகோவாவின் ஜனங்களைப் பற்றி சங்கீதம் 145:7 இவ்வாறு சொல்கிறது: “நீங்கள் செய்த ஏராளமான நன்மைகளுக்காக அவர்கள் உங்களை வாயாரப் புகழ்வார்கள்.” நாம் வாழும் ஒவ்வொரு நாளும் யெகோவாவின் நல்ல மனதிலிருந்து பயனடைகிறோம். யெகோவாவின் நல்ல மனதிற்காக முடிந்தளவு குறிப்பாக நன்றி செலுத்துவதை ஏன் பழக்கமாக்கிக் கொள்ளக் கூடாது? அவருடைய அந்தக் குணத்தைப் பற்றி சிந்திப்பதும், அதற்காக தினமும் நன்றி சொல்வதும், அதைப் பற்றி மற்றவர்களிடம் பேசுவதும் நல்மனமுள்ள அவரைப் பின்பற்ற நமக்கு உதவும். யெகோவாவைப் போல் நல்லது செய்ய வழி தேடும்போது நாம் அவரிடம் நெருங்கி வருவோம். வயதான காலத்தில் அப்போஸ்தலன் யோவான் இவ்வாறு எழுதினார்: “அன்புள்ள சகோதரனே, கெட்டதை அல்ல, நல்லதையே பின்பற்று. நல்லதைச் செய்கிறவன் கடவுளின் பக்கம் இருக்கிறான்.”—3 யோவான் 11.
22 யெகோவாவின் நல்மனம் வேறுசில பண்புகளுடனும் சம்பந்தப்பட்டிருக்கிறது. உதாரணமாக, கடவுள் “மாறாத அன்பை அளவில்லாமல் காட்டுபவர்.” (யாத்திராகமம் 34:6) இந்தக் குணம் நல்மனதைப் போல எல்லாருக்கும் காட்டப்படுவதில்லை, ஏனென்றால் யெகோவா இதை முக்கியமாக தமது உண்மையுள்ள ஊழியர்களிடமே காட்டுகிறார். இதை எவ்வாறு காட்டுகிறார் என்பதை அடுத்த அதிகாரத்தில் நாம் அறிந்துகொள்வோம்.
a யெகோவாவின் நல்ல மனதிற்கு மீட்புவிலையைவிட மிகச் சிறந்த உதாரணம் இருக்க முடியாது. கோடிக்கணக்கான ஆவி சிருஷ்டிகளில் ஒருவரை தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக, யெகோவா தமது ஒரே அன்பு மகனையே நமக்காக மரிப்பதற்குத் தேர்ந்தெடுத்தார்.
b சத்தியத்தை ஒளியுடன் பைபிள் ஒப்பிடுவது பொருத்தமானது. “உங்களுடைய ஒளியையும் சத்தியத்தையும் அனுப்புங்கள்” என சங்கீதக்காரன் பாடினார். (சங்கீதம் 43:3) தம்மிடமிருந்து கற்றுக்கொள்ள அல்லது அறிவொளி பெற மனமுள்ளவர்களுக்கு யெகோவா ஆவிக்குரிய ஒளியை அபரிமிதமாக அருளுகிறார்.—2 கொரிந்தியர் 4:6; 1 யோவான் 1:5.