அதிகாரம் 9
‘கிறிஸ்து கடவுளுடைய வல்லமையாக இருக்கிறார்’
1-3. (அ) கலிலேயா கடலில் என்ன பயங்கர சம்பவத்தை சீஷர்கள் எதிர்ப்பட்டார்கள், இயேசு என்ன செய்தார்? (ஆ) ‘கிறிஸ்து கடவுளுடைய வல்லமையாக இருக்கிறார்’ என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னது ஏன் பொருத்தமானது?
சீஷர்கள் அரண்டு போனார்கள். அவர்கள் கலிலேயா கடலில் பயணித்தபோது திடீரென புயற்காற்று வீசியது. இந்தக் கடலில் புயற்காற்றை எதிர்ப்படுவது நிச்சயமாகவே அவர்களுக்கு புதிதல்ல; ஏனெனில் அவர்களில் சிலர் அனுபவம் மிக்க மீனவர்களாக இருந்தார்கள்.a (மத்தேயு 4:18, 19) ஆனால் இம்முறை “பயங்கரமான புயல்காற்று” அடித்து, கடலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. படகை செலுத்த அவர்கள் பெரும் பாடுபட்டார்கள், ஆனாலும் காற்று மிகப் பலமாக வீசியது. பொங்கியெழுந்த அலைகள் “படகின் மேல் வேகமாக மோதிக்கொண்டிருந்ததால்,” அது தண்ணீரால் நிரம்ப ஆரம்பித்தது. இந்த நெருக்கடியிலும் இயேசு, அன்றைய தினம் முழுவதும் ஜனக்கூட்டத்திற்கு கற்பித்து களைப்படைந்தவராக கப்பலின் பின்புறத்தில் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்தார். உயிருக்கு பயந்துபோய் சீஷர்கள் அவரை எழுப்பி, “எஜமானே, காப்பாற்றுங்கள், நாம் சாகப்போகிறோம்!” என்று கெஞ்சினார்கள்.—மாற்கு 4:35-38; மத்தேயு 8:23-25.
2 இயேசு பயப்படவில்லை. முழு நம்பிக்கையோடு காற்றையும் கடலையும் அதட்டி, “உஷ்! அமைதியாக இரு!” என்றார். உடனடியாக காற்று நின்றுபோனது, கடல் அடங்கியது, “மிகுந்த அமைதி” உண்டானது. விசித்திரமான பயம் சீஷர்களை கவ்விக்கொண்டது. “இவர் உண்மையில் யார்?” என ஒருவருக்கொருவர் முணுமுணுத்தார்கள். அடங்காத பிள்ளையை அதட்டுவதுபோல் காற்றையும் கடலையும் அதட்டி அடக்க எந்த மனுஷனால் முடியும்?—மாற்கு 4:39-41; மத்தேயு 8:26, 27.
3 ஆனால் இயேசு சாதாரண மனிதரே அல்ல. யெகோவாவின் வல்லமை அவருக்கென்றும் அவர் மூலமாகவும் அற்புத விதங்களில் வெளிக்காட்டப்பட்டது. அப்போஸ்தலனாகிய பவுல் சக்தியின் ஏவுதலால் ‘கிறிஸ்து கடவுளுடைய வல்லமையாக இருக்கிறார்’ என பொருத்தமாகவே சொன்னார். (1 கொரிந்தியர் 1:24) கடவுளுடைய வல்லமை என்ன விதங்களில் இயேசுவில் வெளிக்காட்டப்படுகிறது? இயேசு வல்லமையை பயன்படுத்துவது நம் வாழ்க்கையில் என்ன பாதிப்பை ஏற்படுத்த முடியும்?
கடவுளுடைய அன்பு மகனின் வல்லமை
4, 5. (அ) யெகோவா தமது அன்பு மகனுக்கு என்ன வல்லமையையும் அதிகாரத்தையும் வழங்கினார்? (ஆ) இந்த மகன் படைப்பு சம்பந்தப்பட்ட தமது தகப்பனின் நோக்கங்களை நிறைவேற்ற எதை பெற்றிருந்தார்?
4 இயேசு மனிதனாக பிறப்பதற்கு முன்பு பெற்றிருந்த வல்லமையை பற்றி சிந்தித்துப் பாருங்கள். யெகோவா தமது ‘நித்திய வல்லமையை’ பயன்படுத்தி தமது அன்பு மகனைப் படைத்தார்; இவரே இயேசு கிறிஸ்து என அறியப்படலானார். (ரோமர் 1:20; கொலோசெயர் 1:15) அதன் பிறகு யெகோவா இந்தக் மகனுக்கு அபரிமிதமான வல்லமையையும் அதிகாரத்தையும் வழங்கி, படைப்பு சம்பந்தமான தமது நோக்கங்களை நிறைவேற்ற அவரை நியமித்தார். மகனைக் குறித்து பைபிள் இவ்வாறு சொல்கிறது: “எல்லாம் அவர் மூலமாகத்தான் உண்டானது, அவரில்லாமல் எதுவுமே உண்டாகவில்லை.”—யோவான் 1:3.
5 இயேசு பெற்ற நியமிப்பு எவ்வளவு பெரியது என்பதை ஒரு அளவுக்குத்தான் நம்மால் புரிந்துகொள்ள முடியும். வல்லமைமிக்க கோடிக்கணக்கான தேவதூதர்களையும், கோடானு கோடி நட்சத்திர மண்டலங்களுள்ள பிரபஞ்சத்தையும், வகை தொகையில்லா உயிரினங்கள் கொண்ட பூமியையும் உண்டாக்க எப்பேர்ப்பட்ட வல்லமை தேவைப்பட்டிருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள். இப்பணிகளை நிறைவேற்ற, சர்வலோகத்திலேயே மிக வல்லமைமிக்க சக்தியான கடவுளுடைய பரிசுத்த சக்தியை அவரது அன்பு மகன் பெற்றிருந்தார். மற்ற எல்லா காரியங்களையும் படைப்பதில் யெகோவாவின் கைதேர்ந்த வேலையாளாக பணியாற்றியது இந்த மகனுக்கு மிகுந்த இன்பமளித்தது.—நீதிமொழிகள் 8:22-31.
6. பூமியில் மரித்து உயிர்த்தெழுப்பப்பட்ட பிறகு இயேசுவுக்கு என்ன வல்லமையும் அதிகாரமும் அளிக்கப்பட்டது?
6 அன்பு மகன் இன்னுமதிக வல்லமையையும் அதிகாரத்தையும் பெறுவதற்கு வாய்ப்பிருந்ததா? இயேசு பூமியில் மரித்து உயிர்த்தெழுப்பப்பட்ட பிறகு, “பரலோகத்திலும் பூமியிலும் எனக்கு எல்லா அதிகாரமும் கொடுக்கப்பட்டிருக்கிறது” என்று சொன்னார். (மத்தேயு 28:18) ஆம், சர்வலோகத்திலும் வல்லமையை செலுத்த இயேசுவிற்கு திறமையும் உரிமையும் கொடுக்கப்பட்டிருக்கிறது. ‘ராஜாக்களுக்கெல்லாம் ராஜாவாகவும், எஜமான்களுக்கெல்லாம் எஜமானாகவும்’ தமது தகப்பனுக்கு எதிராக செயல்படும் காணக்கூடிய மற்றும் காணக்கூடாத ‘எல்லா அரசாங்கத்தையும் எல்லா அதிகாரத்தையும் எல்லா வல்லமையையும் ஒழித்துக்கட்ட’ அவர் அதிகாரம் பெற்றிருக்கிறார். (வெளிப்படுத்துதல் 19:16; 1 கொரிந்தியர் 15:24-26) கடவுள் தம்மைத் தவிர வேறு “எதையுமே அவருக்குக் கீழ்ப்படுத்தாமல் விடவில்லை.”—எபிரெயர் 2:8; 1 கொரிந்தியர் 15:27.
7. யெகோவா அளித்திருக்கும் வல்லமையை இயேசு ஒருபோதும் தவறாக பயன்படுத்த மாட்டார் என நாம் ஏன் நிச்சயமாக இருக்கலாம்?
7 இயேசு தம் வல்லமையை தவறாக பயன்படுத்துவாரோ என நினைத்து நாம் கவலைப்பட வேண்டுமா? துளியும் கவலைப்பட வேண்டியதில்லை! இயேசு தம் தகப்பனை மிகவும் நேசிக்கிறார், அவருக்குப் பிரியமில்லாத எதையும் ஒருபோதும் செய்ய மாட்டார். (யோவான் 8:29; 14:31) யெகோவா தமது சர்வவல்லமையை ஒருபோதும் தவறாக பயன்படுத்துவதில்லை என்பதை இயேசு நன்கு அறிந்திருக்கிறார். யெகோவா, “தன்னை முழு இதயத்தோடு நம்புகிறவர்களுக்குத் தன்னுடைய பலத்தைக் காட்டுவதற்காக” வாய்ப்புகளை தேடுகிறார் என்பதை இயேசு நேரடியாகவே கவனித்திருக்கிறார். (2 நாளாகமம் 16:9) மேலும், தகப்பனைப் போலவே இயேசுவும் மனிதவர்க்கத்தை நேசிக்கிறார். ஆகவே இயேசு எப்போதும் தம் வல்லமையை நன்மை பயக்கும் விதத்திலேயே பயன்படுத்துவார் என நாம் நம்பலாம். (யோவான் 13:1) இந்த விஷயத்தில் அவர் குற்றங்குறையில்லா பதிவை ஏற்படுத்தியிருக்கிறார். பூமியிலிருந்தபோது அவருக்கு இருந்த வல்லமையை பற்றியும் அதைப் பயன்படுத்த எவ்வாறு தூண்டப்பட்டார் என்பதை பற்றியும் நாம் கவனிக்கலாம்.
‘சொல்லில் வலிமையானவர்’
8. அபிஷேகம் செய்யப்பட்ட பிறகு இயேசு என்ன செய்யும்படி வல்லமை அளிக்கப்பட்டார், அவர் தமது வல்லமையை எவ்வாறு பயன்படுத்தினார்?
8 அத்தாட்சியின்படி, சிறுவனாக நாசரேத்தில் வளர்ந்தபோது இயேசு எந்த அற்புதங்களையும் செய்யவில்லை. ஆனால் சுமார் 30 வயதில், கி.பி. 29-ல் முழுக்காட்டப்பட்ட சமயம் முதற்கொண்டு நிலைமை மாறியது. (லூக்கா 3:21-23) ‘இயேசுவைக் கடவுள் தன்னுடைய சக்தியாலும் வல்லமையாலும் அபிஷேகம் செய்தார், கடவுள் அவரோடு இருந்ததால் அவர் தேசம் முழுவதும் போய் நன்மைகள் செய்தார், பிசாசின் கொடுமைக்கு ஆளான எல்லாரையும் குணப்படுத்தினார்’ என்று பைபிள் சொல்கிறது. (அப்போஸ்தலர் 10:38) ‘நன்மைகள் செய்தார்’ என்ற பதம், இயேசு தமது வல்லமையை நியாயமாகவே பயன்படுத்தினார் என்பதை சுட்டிக்காட்டவில்லையா? அபிஷேகம் செய்யப்பட்ட பிறகு அவர் “சொல்லிலும் செயலிலும் வலிமையான ஒரு தீர்க்கதரிசியாக இருந்தார்.”—லூக்கா 24:19.
9-11. (அ) இயேசு பெரும்பாலும் எவ்விடங்களில் போதித்தார், என்ன சவாலை எதிர்ப்பட்டார்? (ஆ) இயேசு போதிக்கும் விதத்தைக் குறித்து ஜனங்கள் ஏன் வியந்துபோனார்கள்?
9 இயேசு எவ்வாறு சொல்லில் வல்லமையுள்ளவராக இருந்தார்? அவர் திறந்தவெளியில்—ஏரிக்கரை, மலையோரம், வீதிகள், சந்தைவெளிகள் ஆகிய இடங்களில்—அடிக்கடி போதித்தார். (மாற்கு 6:53-56; லூக்கா 5:1-3; 13:26) ஆகவே அவர் பேசிய விஷயங்கள் ஆர்வத்தை கிளறவில்லையென்றால் கூடிவந்தவர்கள் அங்கிருந்து எளிதில் சென்றுவிடும் வாய்ப்பு இருந்தது. மேலும், புத்தகங்கள் பிரசுரிக்கப்படாத அந்த சகாப்தத்தில் இயேசுவின் வார்த்தைகளை ஆர்வத்தோடு கேட்டவர்கள் அவற்றை மனதிலும் இருதயத்திலும் மட்டுமே வைத்துக்கொள்ள முடிந்தது. ஆக, இயேசுவின் போதனை கவனத்தை முற்றுமுழுக்க ஈர்ப்பதாகவும், புரிந்துகொள்வதற்கு தெள்ளத்தெளிவாகவும், எளிதில் ஞாபகத்தில் தங்குவதாகவும் இருக்க வேண்டியிருந்தது. ஆனால் இது இயேசுவுக்கு ஒரு சவாலாகவே இருக்கவில்லை. உதாரணத்திற்கு அவரது மலைப்பிரசங்கத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.
10 கி.பி. 31-ன் ஆரம்பத்தில் ஒரு நாள் காலை, கலிலேயா கடலருகே ஒரு மலையோரத்தில் மக்கள் கூடிவந்தார்கள். சிலர் 100-110 கிலோமீட்டர் தூரத்திலிருந்த யூதேயாவிலிருந்தும் எருசலேமிலிருந்தும் வந்திருந்தார்கள். மற்றவர்கள் வடக்கே, கடற்கரையோரமாக அமைந்திருந்த தீரு, சீதோன் பட்டணங்களிலிருந்து வந்திருந்தார்கள். வியாதிப்பட்டிருந்த அநேகர் இயேசுவைத் தொடுவதற்கு அவரை நெருங்கினார்கள், அவரும் அவர்கள் அனைவரையும் சுகப்படுத்தினார். கடும் வியாதிப்பட்டிருந்த ஒரேவொருவர்கூட விட்டுப்போகாதபடி அனைவரையும் சுகப்படுத்தின பிற்பாடு அவர் போதிக்க ஆரம்பித்தார். (லூக்கா 6:17-19) சிறிது நேரம் கழித்து அவர் பேசி முடித்தபோது அவர்கள் வியந்துபோனார்கள். ஏன்?
11 அந்தப் பிரசங்கத்தைக் கேட்ட ஒருவர் பல ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வாறு எழுதினார்: “அவர் கற்பித்த விதத்தைப் பார்த்து மக்கள் அசந்துபோனார்கள். ஏனென்றால், . . . கடவுளிடமிருந்து அதிகாரம் பெற்றவராக அவர் கற்பித்தார்.” (மத்தேயு 7:28, 29) இயேசு வல்லமையோடு அதாவது அதிகாரத்தோடு பேசியதை அவர்களால் உணர முடிந்தது. அவர் கடவுள் சார்பாக பேசினார், கடவுளுடைய வார்த்தையின் அதிகாரத்தோடு போதித்தார். (யோவான் 7:16) இயேசு கூறியவை தெளிவாக இருந்தன, அவரது அறிவுரைகள் இணங்க வைத்தன, அவரது விவாதங்கள் மறுக்க முடியாதவையாக இருந்தன. அவரது வார்த்தைகள் பிரச்சினைகளின் ஆழத்தை மட்டுமல்ல கேட்போருடைய இருதயங்களின் ஆழத்தையும் எட்டின. சந்தோஷத்தைக் கண்டடைவது எப்படி, ஜெபிப்பது எப்படி, கடவுளுடைய ராஜ்யத்தை நாடுவது எப்படி, பாதுகாப்பான எதிர்காலத்திற்காக திட்டமிடுவது எப்படி என்றெல்லாம் அவர்களுக்குக் கற்பித்தார். (மத்தேயு 5:3–7:27) சத்தியத்திற்காகவும் நீதிக்காகவும் பசியாயிருந்தவர்களின் இருதயங்களை அவரது வார்த்தைகள் தட்டியெழுப்பின. அப்படிப்பட்டவர்கள் தங்களைத் தாங்களே “துறந்து” அனைத்தையும் விட்டுவிட்டு அவருக்குப் பின்செல்ல தயாராய் இருந்தார்கள். (மத்தேயு 16:24; லூக்கா 5:10, 11) இயேசுவின் வார்த்தைகளுக்கிருந்த வல்லமைக்கு எப்பேர்ப்பட்ட ஓர் அத்தாட்சி!
‘செயலில் வலிமையானவர்’
12, 13. என்ன அர்த்தத்தில் இயேசு ‘செயலில் வலிமையானவராக’ இருந்தார், எவ்வாறு பலதரப்பட்ட அற்புதங்களை நடப்பித்தார்?
12 இயேசு ‘செயலிலும் வலிமையானவராக இருந்தார்.’ (லூக்கா 24:19) அவர் நடப்பித்த 30-க்கும் மேலான குறிப்பிட்ட அற்புதங்களைப் பற்றி சுவிசேஷங்கள் அறிக்கை செய்கின்றன; அவை அனைத்தையும் அவர் ‘யெகோவாவின் வல்லமையில்’ செய்தார்.b (லூக்கா 5:17) இயேசுவின் அற்புதங்கள் ஆயிரக்கணக்கானோரின் வாழ்வை தொட்டன. இரண்டே இரண்டு அற்புதங்களை எடுத்துக்கொள்ளுங்கள். முதலில் 5,000 ஆண்களுக்கும், பிற்பாடு 4,000 ஆண்களுக்கும் உணவளிக்கப்பட்ட அற்புதங்களை யோசித்துப்பாருங்கள். பெண்களையும் பிள்ளைகளையும் சேர்த்தால் மொத்தம் பல ஆயிரம் பேர் அடங்கிய கூட்டத்தினருக்கு இயேசு உணவளித்திருக்கிறார்!—மத்தேயு 14:13-21; 15:32-38.
13 இயேசு பலதரப்பட்ட அற்புதங்களை நடப்பித்தார். அவர் பிசாசுகளின்மீது அதிகாரமுள்ளவராக எளிதில் அவற்றை துரத்தினார். (லூக்கா 9:37-43) இயற்கை பொருட்கள்மீது வல்லமையுள்ளவராக, தண்ணீரை திராட்சமதுவாக மாற்றினார். (யோவான் 2:1-11) ‘இயேசு கடல்மேல் நடந்துவருவதைப் பார்த்து’ அவரது சீஷர்கள் எவ்வளவு அசந்துபோயிருப்பார்கள். (யோவான் 6:18, 19) பிணிகள்மீது வல்லமையுள்ளவராக, ஊனங்களையும் தீராத வியாதிகளையும் உயிருக்கு ஆபத்தான நோய்களையும் குணப்படுத்தினார். (மாற்கு 3:1-5; யோவான் 4:46-54) பல்வேறு விதங்களில் அவர் சொஸ்தப்படுத்தினார். சிலரை தூரத்திலிருந்தே குணமாக்கினார், மற்றவர்களை தொட்டு குணப்படுத்தினார். (மத்தேயு 8:2, 3, 5-13) சிலர் உடனடியாக குணமடைந்தார்கள், மற்றவர்கள் படிப்படியாக குணமடைந்தார்கள்.—மாற்கு 8:22-25; லூக்கா 8:43, 44.
அவர்கள் ‘இயேசு கடல்மேல் நடந்து வருவதைப் பார்த்தார்கள்’
14. மரணத்தின் தடயத்தை நீக்க தமக்கு வல்லமையிருப்பதை எந்தெந்த சந்தர்ப்பங்களில் இயேசு வெளிக்காட்டினார்?
14 இயேசு மரணத்தின் தடயத்தை நீக்க வல்லமையுள்ளவராக இருந்தது மிகக் குறிப்பிடத்தக்கது. மூன்று சந்தர்ப்பங்களில் அவர் இறந்தவர்களை உயிர்த்தெழுப்பியதாக பதிவுகள் காட்டுகின்றன: ஒருமுறை 12 வயது சிறுமியை உயிர்த்தெழுப்பி பெற்றோரிடம் ஒப்படைத்தார், இன்னொரு முறை ஒரு விதவையின் ஒரே மகனை உயிர்த்தெழுப்பினார், மற்றுமொரு முறை இரு சகோதரிகளின் நேசத்திற்குரிய சகோதரனை உயிர்த்தெழுப்பினார். (லூக்கா 7:11-15; 8:49-56; யோவான் 11:38-44) அவருக்கு எந்தச் சூழ்நிலையுமே, கையாள முடியாதளவுக்கு கடினமாக இருக்கவில்லை. 12 வயது சிறுமியை அவள் இறந்த கொஞ்ச நேரத்திற்குள் படுக்கையிலிருந்து உயிர்த்தெழுப்பினார். விதவையின் மகனை அவன் இறந்த அதே நாளில் பாடையிலிருந்து எழுப்பினார். லாசருவை அவன் இறந்து நான்கு நாட்களுக்குப் பிறகு கல்லறையிலிருந்து எழுப்பினார்.
சுயநலமின்றியும் பகுத்தறிவோடும் பரிவோடும் பயன்படுத்தப்படும் வல்லமை
15, 16. இயேசு தமது வல்லமையை சுயநலமின்றி பயன்படுத்தினார் என்பதற்கு என்ன அத்தாட்சி உண்டு?
15 இயேசுவுக்கு இருந்த வல்லமை அபூரண ஆட்சியாளர் ஒருவருக்கு அளிக்கப்பட்டால் எந்தளவு அது தவறாக பயன்படுத்தப்படும் என்பதை கற்பனை செய்ய முடிகிறதா? ஆனால் இயேசு பாவமில்லாதவராக இருந்தார். (1 பேதுரு 2:22) சுயநலம், பேரும் புகழும் சம்பாதிப்பதில் நாட்டம், பேராசை ஆகிய எவற்றாலும் இயேசு கறைபடாமல் இருந்தார். இக்குணங்களே, மற்றவர்களுக்கு வேதனையளிக்கும் விதத்தில் அதிகாரத்தைப் பயன்படுத்த அபூரண மனிதர்களை தூண்டுகின்றன.
16 இயேசு தம் வல்லமையை சுயநலமின்றி பயன்படுத்தினார், சொந்த ஆதாயத்திற்காக ஒருபோதும் அதை பயன்படுத்தவில்லை. அவர் பசியாயிருந்தபோது தமக்காக கற்களை ரொட்டிகளாக மாற்ற மறுத்துவிட்டார். (மத்தேயு 4:1-4) அவருக்கு சொற்பமான உடைமைகளே இருந்ததானது, தமது வல்லமையை பயன்படுத்தி தமக்காக சொத்துசுகங்களை அவர் சேர்த்துக்கொள்ளவில்லை என்பதற்கு அத்தாட்சி. (மத்தேயு 8:20) சுயநலமில்லாத உள்நோக்கங்களோடுதான் அவர் அற்புதங்கள் செய்தார் என்பதற்கு கூடுதலான அத்தாட்சியும் உண்டு. அவர் அற்புதங்கள் செய்தபோது தம் பங்கில் தியாகமும் செய்தார். நோயுற்றிருந்தவர்களை குணமாக்கியபோது அவரிடமிருந்து வல்லமை வெளிப்பட்டது. இவ்வாறு வல்லமை புறப்பட்டதை அவர் உணர்ந்தார், ஒரேவொருவரை சுகப்படுத்திய சந்தர்ப்பத்தில்கூட உணர்ந்தார். (மாற்கு 5:25-34) இருந்தாலும் ஜனங்கள் யாவரும் தம்மை தொடும்படி அவர் அனுமதித்தார், அவர்களும் குணமானார்கள். (லூக்கா 6:19) எப்பேர்ப்பட்ட சுயநலமற்ற மனப்பான்மை!
17. இயேசு தமது வல்லமையை பகுத்தறிவோடு பயன்படுத்தியதை எப்படி வெளிக்காட்டினார்?
17 இயேசு தமது வல்லமையை பகுத்தறிவோடு பயன்படுத்தினார். வெறுமனே பகட்டுக்காக அல்லது மற்றவர்களை கவர வேண்டும் என்பதற்காக அவர் அற்புதங்களை ஒருபோதும் செய்யவில்லை. (மத்தேயு 4:5-7) ஏரோதின் தவறான ஆர்வத்தை திருப்தி செய்வதற்காக அற்புதங்களை செய்ய அவர் விரும்பவில்லை. (லூக்கா 23:8, 9) இயேசு தமது வல்லமையை விளம்பரப்படுத்துவதற்கு பதிலாக அதைப் பற்றி யாரிடமும் கூற வேண்டாமென குணமானவர்களுக்கு பெரும்பாலும் கட்டளையிட்டார். (மாற்கு 5:43; 7:36) மக்கள் பரபரப்பான செய்திகளைக் கேள்விப்பட்டு அவற்றின் அடிப்படையில் தம்மை பற்றி ஒரு முடிவுக்கு வர அவர் விரும்பவில்லை.—மத்தேயு 12:15-19.
18-20. (அ) இயேசு தமது வல்லமையை பயன்படுத்திய விதத்தை எது பாதித்தது? (ஆ) இயேசு ஒரு செவிடனை குணப்படுத்திய விதத்தைக் குறித்து நீங்கள் எவ்வாறு உணருகிறீர்கள்?
18 இந்த வல்லமைமிக்க மனிதராகிய இயேசு, மற்றவர்களின் தேவைகளையும் துன்பங்களையும் துளியும் பொருட்படுத்தாமல் இரக்கமின்றி அதிகாரம் செலுத்தியிருக்கும் ஆட்சியாளர்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டவராக இருந்தார். இயேசு மக்கள்மீது கரிசனை காட்டினார். துன்பத்திலிருந்தவர்களை வெறுமனே பார்த்ததும்கூட அவர் மனதை அந்தளவு உருக்கியதால் வேதனையிலிருந்து அவர்களுக்கு விடுதலையளிக்க தூண்டப்பட்டார். (மத்தேயு 14:14) அவர்களது உணர்ச்சிகளுக்கும் தேவைகளுக்கும் கவனம் செலுத்தினார்; இப்படிப்பட்ட கனிவான அக்கறை, அவர் தம் வல்லமையை பயன்படுத்திய விதத்தை பாதித்தது. இதயத்தைத் தொடும் ஓர் உதாரணம் மாற்கு 7:31-37-ல் காணப்படுகிறது.
19 இந்தச் சந்தர்ப்பத்தில், திரளான மக்கள் இயேசுவை தேடிவந்தனர், அவர்களில் அநேகர் வியாதிப்பட்டிருந்தனர்; அவர்கள் அனைவரையும் இயேசு குணப்படுத்தினார். (மத்தேயு 15:29, 30) ஆனால் அவர் ஒரு மனிதனுக்கு மட்டும் விசேஷ கவனம் செலுத்தினார். அவன் கொன்னைவாயுடைய ஒரு செவிடனாக இருந்தான். அவனுடைய பிரத்தியேகமான பயத்தை அல்லது கூச்சத்தை இயேசு கவனித்திருக்கலாம். ஆகவே முன்யோசனையுடன் அவனை கூட்டத்திலிருந்து தனியே கூட்டிச் சென்றார். பிறகு தாம் என்ன செய்யப் போகிறார் என்பதை சில சைகைகளால் அம்மனிதனுக்கு தெரியப்படுத்தினார். “அவனுடைய காதுகளில் தன் விரல்களை வைத்து, உமிழ்ந்து, பின்பு அவனுடைய நாக்கைத் தொட்டார்.”c (மாற்கு 7:33) அடுத்ததாக பரலோகத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சுவிட்டு ஜெபம் செய்தார். இந்த செயல்கள் மூலம், ‘நான் உனக்கு செய்யப்போவது கடவுளுடைய வல்லமையால்தான்’ என அம்மனிதனிடம் சொல்லாமல் சொன்னார். இறுதியில், “திறக்கப்படு” என்றார். (மாற்கு 7:34) உடனடியாக அவனுடைய காதுகள் திறந்தன, சரளமாக பேசவும் ஆரம்பித்துவிட்டான்.
20 அவதிப்பட்டவர்களை குணப்படுத்த கடவுள் தந்த வல்லமையை பயன்படுத்திய போதும்கூட இயேசு அவர்களது உணர்ச்சிகளுக்கு அனுதாபத்தோடு கவனம் செலுத்தியதை சிந்திக்கையில் உள்ளம் உருகுகிறதல்லவா? அப்படிப்பட்ட கரிசனையும் அக்கறையும் மிக்க அரசரிடம் மேசியானிய ராஜ்யத்தை யெகோவா ஒப்படைத்திருப்பதை அறிவது எவ்வளவு நம்பிக்கையூட்டுகிறது!
வரவிருக்கும் காரியங்களின் தீர்க்கதரிசன அடையாளம்
21, 22. (அ) இயேசுவின் அற்புதங்கள் எதற்கு அடையாளமாக இருந்தன? (ஆ) இயேசுவுக்கு இயற்கை சக்திகள் மீது அதிகாரம் இருப்பதால் அவரது ஆட்சியில் நாம் எதை எதிர்பார்க்கலாம்?
21 இயேசு பூமியில் நடப்பித்த அற்புதங்கள், அவர் ராஜாவாக ஆளுகையில் எப்படிப்பட்ட மகத்தான ஆசீர்வாதங்களை பொழிவார் என்பதற்கு வெறுமனே அடையாளமாக இருந்தன. கடவுளுடைய புதிய உலகில் இயேசு மறுபடியும் அற்புதங்களை நடப்பிப்பார், ஆனால் பூகோள அளவில் அவற்றை செய்வார்! நடக்கவிருக்கும் மெய்சிலிர்க்க வைக்கும் சில அதிசயங்களை கவனியுங்கள்.
22 இயேசு இந்தப் பூமியின் சூழியலை புதுப்பித்து, அதை மீண்டும் பரிபூரண சமநிலைக்கு கொண்டுவருவார். ஒரு புயற்காற்றை அடக்குவதன் மூலம் இயற்கை சக்திகள்மீது தமக்கிருக்கும் அதிகாரத்தை இயேசு வெளிக்காட்டினார் என்பதை நினைவுபடுத்திப் பாருங்கள். ஆகவே கண்டிப்பாக கிறிஸ்துவின் ராஜ்ய ஆட்சியில் சூறாவளிகள், பூமியதிர்ச்சிகள், எரிமலை வெடிப்புகள் போன்ற இயற்கை சேதங்களால் நாசம் விளையும் என பயப்படும் அவசியமே மனிதவர்க்கத்திற்கு இருக்காது. யெகோவா பூமியையும் அதிலுள்ள அனைத்து உயிரினங்களையும் படைக்க இயேசுவை கைதேர்ந்த வேலையாளாக பயன்படுத்தியதால் இப்பூமியின் ஒழுங்கமைப்பை இயேசு முழுமையாக புரிந்திருக்கிறார். அதன் வளங்களை எவ்வாறு சரியாக பயன்படுத்துவது என்பதை அறிந்திருக்கிறார். அவரது ஆட்சியில் இந்த முழு பூமியும் பரதீஸாக மாறும்.—லூக்கா 23:43.
23. ராஜாவாக இயேசு எவ்வாறு மனிதவர்க்கத்தின் தேவைகளை பூர்த்தி செய்வார்?
23 மனிதவர்க்கத்தின் தேவைகள் பூர்த்தி செய்யப்படுமா? வெகு சில உணவுப்பொருட்களையே வைத்து ஆயிரக்கணக்கானோருக்கு உணவளிக்கும் திறமை இயேசுவுக்கு இருந்ததை நினைத்துப் பார்க்கையில், அவரது ஆட்சியில் பசியென்ற பேச்சிற்கே இடமிருக்காது என்ற நம்பிக்கை ஏற்படுகிறது. ஏராளமான உணவு சமமாக பகிர்ந்தளிக்கப்பட்டு, பசி நிரந்தரமாக நீக்கப்படும். (சங்கீதம் 72:16) வியாதியின்மீதும் நோயின்மீதும் அவருக்கிருந்த அதிகாரம், வியாதிப்பட்டவர்கள், கண் தெரியாதவர்கள் காது கேட்காதவர்கள் நடக்க முடியாதவர்கள் பேச முடியாதவர்கள் ஆகியோர் முழுமையாகவும் நிரந்தரமாகவும் குணமாவார்கள் என்பதை காட்டுகிறது. (ஏசாயா 33:24; 35:5, 6) இறந்தவர்களை உயிர்த்தெழுப்ப அவருக்கு இருந்த திறன், அதிகாரமிக்க பரலோக ராஜாவாக, பிதா பிரியத்தோடு ஞாபகம் வைத்திருக்கும் லட்சக்கணக்கானோரை உயிர்த்தெழுப்பவும் அவர் வல்லமை பெற்றிருப்பதை உறுதிப்படுத்துகிறது.—யோவான் 5:28, 29.
24. இயேசுவின் வல்லமையைக் குறித்து சிந்திக்கையில் நாம் எதை நினைவில் வைக்க வேண்டும், ஏன்?
24 இயேசுவின் வல்லமையைக் குறித்து சிந்திக்கையில், அவர் தமது பிதாவை பரிபூரணமாக பின்பற்றுகிறார் என்பதை நினைவில் வைப்போமாக. (யோவான் 14:9) ஆகவே இயேசு தமது வல்லமையை பயன்படுத்தும் விதம், யெகோவா தமது வல்லமையை பயன்படுத்தும் விதத்தை தெளிவாக காட்டுகிறது. உதாரணத்திற்கு, இயேசு ஒரு தொழுநோயாளியை கனிவோடு குணப்படுத்திய விதத்தை நினைத்துப் பாருங்கள். அவர் மனதுருகி அம்மனிதனை தொட்டு, “எனக்கு விருப்பம் இருக்கிறது” என்றார். (மாற்கு 1:40-42) இதுபோன்ற பதிவுகளின் மூலம், ‘இப்படித்தான் நான் என் வல்லமையை பயன்படுத்துகிறேன்!’ என யெகோவா சொல்லாமல் சொல்கிறார். சர்வவல்லமையுள்ள கடவுளை துதிக்கவும், அன்பான விதத்தில் அவர் தமது வல்லமையை பயன்படுத்துவதற்கு நன்றி சொல்லவும் நீங்கள் தூண்டப்படவில்லையா?
a கலிலேயா கடலில் திடீரென புயற்காற்று அடிப்பது சகஜம். அது (கடல்மட்டத்திற்குக் கீழ், ஏறக்குறைய 200 மீட்டர் ஆழத்தில்) தாழ்வாக இருப்பதால், சுற்றுப்புற பகுதியைப் பார்க்கிலும் அங்கு காற்று அதிக சூடாக இருக்கிறது; இது, வாயுமண்டல கொந்தளிப்புகளை உண்டாக்குகிறது. இதோடு, பலத்த காற்று வடக்கே உள்ள எர்மோன் மலையிலிருந்து, கீழே யோர்தான் பள்ளத்தாக்குமீது பலமாக வீசுகிறது. ஒரு வினாடி அமைதி நிலவினாலும் மறு வினாடிக்குள் கடும் புயல் வீசத் துவங்கலாம்.
b மேலும், அநேக அற்புதங்களை ஒட்டுமொத்தத்தில் ஒரே சம்பவமாக சுவிசேஷங்கள் சிலசமயம் குறிப்பிடுகின்றன. உதாரணத்திற்கு, ஒரு சந்தர்ப்பத்தில் மொத்த “ஊரே” இயேசுவை காண கூடிவந்தனர் என்றும் நோய்களால் அவதிப்பட்டுக்கொண்டிருந்த “நிறைய பேரை” குணமாக்கினார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.—மாற்கு 1:32-34.
c உமிழ்வது, சுகப்படுத்துவதற்கான வழியாக அல்லது அடையாளமாக யூதர்களாலும் புறமதத்தாராலும் கருதப்பட்டது. குணப்படுத்தும் மருந்தாக உமிழ்நீர் பயன்படுத்தப்பட்டதாக ரபீக்களின் எழுத்துக்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. குணமடையப் போகிறான் என்பதை அம்மனிதனிடம் வெறுமனே தெரிவிப்பதற்காக இயேசு உமிழ்ந்திருக்கலாம். எப்படியானாலும், இயேசு தமது உமிழ்நீரை இயற்கை நிவாரணியாக பயன்படுத்தவில்லை.