பகுதி 17
கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி இயேசு போதிக்கிறார்
இயேசு தமது சீடர்களுக்கு அநேக விஷயங்களைப் போதிக்கிறார்; என்றாலும், ஒரு விஷயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்—அதுதான் கடவுளுடைய அரசாங்கம்
இயேசு எதற்காக இந்தப் பூமிக்கு வந்தார்? “நான் . . . கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்க வேண்டும், இதற்காகவே அனுப்பப்பட்டிருக்கிறேன்” என்று அவரே கூறினார். (லூக்கா 4:43) கடவுளின் அரசாங்கமே இயேசுவுடைய பிரசங்கத்தின் மையப்பொருளாக விளங்கியது. அந்த அரசாங்கம் சம்பந்தமாக அவர் போதித்த நான்கு விஷயங்களைக் கவனியுங்கள்.
1. இயேசுதான் நியமிக்கப்பட்ட ராஜா. தாமே முன்னறிவிக்கப்பட்ட மேசியா என்று இயேசு நேரடியாகக் கூறினார். (யோவான் 4:25, 26) தரிசனத்தில் தானியேல் தீர்க்கதரிசி கண்ட ராஜாவும் தாமே என்று அவர் கூறினார். இயேசு தம்முடைய அப்போஸ்தலர்களிடம் தாம் “மகிமையான சிம்மாசனத்தில்” உட்காருவார் என்றும், அவர்களும் சிம்மாசனங்களில் உட்காருவார்கள் என்றும் கூறினார். (மத்தேயு 19:28) தம்முடன் ஆட்சி செய்யப்போகும் அந்தச் சிறிய தொகுதியினரை “சிறுமந்தை” என்று அழைத்தார்; அந்தத் தொகுதியினரைத் தவிர, “வேறே ஆடுகளும்” தமக்கு இருப்பதாகக் குறிப்பிட்டார்.—லூக்கா 12:32; யோவான் 10:16.
2. கடவுளுடைய அரசாங்கமே நீதியை நிலைநாட்டும். இந்த அரசாங்கம் யெகோவா தேவனுடைய பெயரைப் புனிதப்படுத்தும்; ஏதேனில் கலகம் வெடித்ததுமுதல் அந்தப் பெயர்மீது சாத்தான் ஏற்படுத்திய களங்கத்தை நீக்கிப்போடும்; இவ்வாறு, கடவுளுக்கு எதிராக இழைக்கப்பட்ட மாபெரும் அநீதியை அந்த அரசாங்கம் ஒழித்துக்கட்டும் என இயேசு சுட்டிக்காட்டினார். (மத்தேயு 6:9, 10) ஆண் பெண், ஏழை பணக்காரன் என்ற எந்தப் பாகுபாடுமின்றி எல்லாருக்கும் தினமும் போதித்ததன் மூலம் தாம் பட்சபாதமற்றவர் என்பதையும் இயேசு காட்டினார். முக்கியமாய் இஸ்ரவேலருக்குப் போதிக்கவே இயேசு வந்தபோதிலும், சமாரியருக்கும் யூதரல்லாதவருக்கும்கூட உதவினார். அந்தக் காலத்தில் வாழ்ந்த மதத் தலைவர்களைப் போலின்றி அவர் எல்லாரையும் சமமாக நடத்தினார்.
3. கடவுளுடைய அரசாங்கம் உலக சார்பற்றது. சரித்திரத்தில் மிகவும் கொந்தளிப்பான காலத்தில் இயேசு வாழ்ந்துவந்தார். அவர் பிறந்த தேசம் அந்நிய ஆதிக்கத்தின்கீழ் இருந்தது. இயேசுவை அரசியலில் ஈடுபடுத்த ஜனங்கள் முயன்றபோது அவர்களிடமிருந்து அவர் நழுவிச் சென்றுவிட்டார். (யோவான் 6:14, 15) “என்னுடைய அரசாங்கம் இந்த உலகத்தின் பாகமல்ல” என்று ஓர் அரசியல்வாதியிடம் சொன்னார். (யோவான் 18:36) தம்மைப் பின்பற்றுகிறவர்களிடம், ‘நீங்கள் உலகத்தின் பாகமல்ல’ என்று கூறினார். (யோவான் 15:19) யுத்த கருவிகளைப் பயன்படுத்த அவர்களை இயேசு அனுமதிக்க மாட்டார். ஏன், தம்மைப் பாதுகாப்பதற்குக்கூட அவற்றைப் பயன்படுத்த அவர்களை அனுமதிக்கவில்லை.—மத்தேயு 26:51, 52.
‘அவர் . . . கிராமம் கிராமமாகச் சென்று கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியைப் பிரசங்கித்தும் அறிவித்தும் வந்தார்.’—லூக்கா 8:1.
4. கிறிஸ்துவின் ஆட்சி அன்பின் ஆட்சி. ஜனங்களுக்குப் புத்துணர்ச்சி அளிப்பதாக... அவர்களுடைய சுமைகளைக் குறைப்பதாக... இயேசு வாக்கு கொடுத்தார். (மத்தேயு 11:28-30) கொடுத்த வாக்கைக் காப்பாற்றினார். கவலையைச் சமாளிக்க... நல்லுறவை வளர்க்க... பொருளாசையைத் துறக்க... சந்தோஷத்தைக் காண... பயனுள்ள அறிவுரைகளை அன்புடன் கொடுத்தார். (மத்தேயு 5–7 அதிகாரங்கள்) அவர் அன்பு காட்டியதால் பலதரப்பினரும் அவரைத் தயக்கமின்றி அணுகினார்கள். இயேசு தங்களைக் கரிசனையோடும் மரியாதையோடும் நடத்துவார் என்பதில் மக்களுக்கு அபார நம்பிக்கை இருந்தது. அதனால் தாழ்த்தப்பட்டோரும்கூட அவரிடம் திரண்டு வந்தார்கள். உண்மையிலேயே இயேசு தலைசிறந்த ஆட்சியாளராக இருப்பார்!
வலிமைமிக்க மற்றொரு முறையிலும் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி இயேசு போதித்தார்; ஆம், அநேக அற்புதங்களைச் செய்தார். எதற்காக? அடுத்தப் பக்கத்தில் பார்க்கலாம்.