அதிகாரம் 6
இறந்தவர்கள் எங்கே இருக்கிறார்கள்?
1-3. மரணத்தைப் பற்றி மக்கள் பொதுவாகக் கேட்கும் சில கேள்விகள் என்ன? அதற்கு மதங்கள் கொடுக்கும் பதில்கள் என்ன?
‘மரணம் இல்லாத’ ஒரு காலம் வரும் என்று பைபிள் வாக்குறுதி கொடுக்கிறது. (வெளிப்படுத்துதல் 21:4) மீட்புவிலையினால் நமக்கு முடிவில்லாத வாழ்வு கிடைக்கும் என்று போன அதிகாரத்தில் நாம் கற்றுக்கொண்டோம். ஆனால், மக்கள் இன்னும் செத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். (பிரசங்கி 9:5) அதனால், இறந்த பிறகு நமக்கு என்ன ஆகிறது என்ற கேள்வி நிறைய பேருடைய மனதைக் குடைகிறது.
2 முக்கியமாக, நாம் நேசிக்கும் ஒருவர் சாகும்போது இந்தக் கேள்விக்கான பதிலைத் தெரிந்துகொள்ள நாம் ரொம்ப ஆர்வமாக இருக்கலாம். ‘அவர் இப்போது வேறு எங்கேயாவது வாழ்ந்துகொண்டு இருக்கிறாரா? நம்மைப் பார்த்துக்கொண்டு இருக்கிறாரா? நமக்கு அவரால் உதவி செய்ய முடியுமா? நம்மால் அவரை மறுபடியும் பார்க்க முடியுமா?’ போன்ற கேள்விகள் நம் மனதில் வரலாம்.
3 இந்தக் கேள்விகளுக்கு மதங்கள் வித்தியாசமான பதில்களைக் கொடுக்கின்றன. ஒருவர் நல்லது செய்தால் சொர்க்கத்துக்குப் போவார், கெட்டது செய்தால் நரகத்தில் வதைக்கப்படுவார் என்று சில மதங்கள் சொல்லித் தருகின்றன. இன்னும் சில மதங்கள், ஒருவர் இறந்த பிறகு அவர் ஆவியாக மாறி, ஏற்கெனவே செத்துப்போன தன் குடும்பத்தாரோடு வாழ்வார் என்று சொல்லித் தருகின்றன. வேறு சில மதங்கள், ஒருவர் இறந்த பிறகு அவருக்குத் தீர்ப்பு கொடுக்கப்படும் என்றும், அவர் வேறொரு நபராக அல்லது மிருகமாக ஒரு புதிய உடலோடு மறுபடியும் பிறப்பார் என்றும் சொல்லித் தருகின்றன.
4. இறந்தவர்களைப் பற்றி மதங்கள் சொல்லித் தருகிற ஒரு பொதுவான விஷயம் என்ன?
4 மதங்கள் வித்தியாசமான பதில்களைக் கொடுத்தாலும் எல்லா மதங்களும் பொதுவான ஒரு விஷயத்தையே சொல்லித் தருகின்றன. அதாவது, ஒருவர் இறந்த பிறகு அவருக்குள் இருக்கும் ஏதோவொன்று தொடர்ந்து உயிர்வாழ்வதாகச் சொல்லித் தருகின்றன. இது உண்மையா?
இறந்தவர்கள் எங்கே இருக்கிறார்கள்?
5, 6. இறந்த பிறகு நமக்கு என்ன ஆகிறது?
5 இறந்த பிறகு நமக்கு என்ன ஆகிறது என்று யெகோவாவுக்கு நன்றாகத் தெரியும். ஒருவர் இறக்கும்போது அவருடைய வாழ்க்கை முடிந்துவிடுகிறது என்று யெகோவா பைபிளில் சொல்லியிருக்கிறார். அப்படியென்றால், ஒருவர் இறந்த பிறகு அவர் வேறு எங்கும் வாழ்வது இல்லை.a அவருக்கு எந்த உணர்ச்சிகளும் நினைவுகளும் இல்லை. அவரால் பார்க்கவோ கேட்கவோ யோசிக்கவோ முடியாது.
6 “இறந்தவர்களுக்கு எதுவுமே தெரியாது” என்று பைபிள் சொல்கிறது. இறந்தவர்களால் அன்பையோ வெறுப்பையோ காட்ட முடியாது. அவர்கள் “போய்ச்சேரும் கல்லறையில் வேலை செய்யவோ திட்டம் போடவோ முடியாது; அங்கே அறிவோ ஞானமோ இல்லை.” (பிரசங்கி 9:5, 6, 10-ஐ வாசியுங்கள்.) சங்கீதம் 146:4 சொல்கிறபடி, இறந்தவர்களுடைய “யோசனைகள் அழிந்துபோகின்றன.”
மரணத்தைப் பற்றி இயேசு என்ன சொன்னார்?
7. மரணத்தைப் பற்றி இயேசு என்ன சொன்னார்?
7 இயேசுவின் நெருங்கிய நண்பன் லாசரு இறந்தபோது, “லாசரு தூங்குகிறான்” என்று அவர் தன் சீஷர்களிடம் சொன்னார். ஆனால், லாசரு ஓய்வு எடுத்துக்கொண்டிருந்ததாக இயேசு அர்த்தப்படுத்தவில்லை. ஏனென்றால், “லாசரு இறந்துவிட்டான்” என்று அதற்குப் பிறகு அவரே சொன்னார். (யோவான் 11:11-14) இயேசு மரணத்தைத் தூக்கத்துக்கு ஒப்பிட்டார். லாசரு நரகத்தில் அல்லது பரலோகத்தில் இருப்பதாகவோ, ஏற்கெனவே இறந்துபோன தன் குடும்பத்தாரோடு இருப்பதாகவோ, வேறு ஒரு மனிதனாக அல்லது மிருகமாக மறுபிறவி எடுத்திருப்பதாகவோ இயேசு சொல்லவில்லை. ஆழ்ந்து தூங்குகிற ஒருவரைப் போலத்தான் லாசரு இருந்தார். இன்னும் சில வசனங்கள் மரணத்தை ஆழ்ந்த தூக்கத்துக்கு ஒப்பிடுகின்றன. ஸ்தேவானின் மரணத்தைப் பற்றிச் சொல்லும்போது, அவர் “தூங்கிவிட்டார்” என்று பைபிள் குறிப்பிடுகிறது. (அப்போஸ்தலர் 7:60, அடிக்குறிப்பு) இறந்துபோன சில கிறிஸ்தவர்களைப் பற்றிச் சொல்லும்போது, அவர்கள் “தூங்கிவிட்டார்கள்” என்று அப்போஸ்தலன் பவுல் குறிப்பிடுகிறார்.—1 கொரிந்தியர் 15:6, அடிக்குறிப்பு.
8. கொஞ்சக் காலம் வாழ்ந்துவிட்டு இறந்துபோவதற்காக மனிதர்களைக் கடவுள் படைக்கவில்லை என்று எப்படிச் சொல்லலாம்?
8 கொஞ்சக் காலம் வாழ்ந்துவிட்டு இறந்துபோவதற்காகத்தான் ஆதாமையும் ஏவாளையும் கடவுள் படைத்தாரா? இல்லை. பரிபூரண ஆரோக்கியத்தோடு என்றென்றும் வாழ வேண்டும் என்பதற்காகத்தான் அவர்களைப் படைத்தார். யெகோவா அவர்களைப் படைத்தபோது, என்றென்றும் வாழ வேண்டும் என்ற ஆசையை அவர்களுக்குக் கொடுத்தார். (பிரசங்கி 3:11) எந்த அப்பா அம்மாவும் தங்களுடைய பிள்ளைகள் வயதாகி சாக வேண்டுமென்று விரும்ப மாட்டார்கள். அதேபோல், யெகோவாவும் நாம் சாக வேண்டுமென்று விரும்புவதில்லை. ஆனால், நாம் என்றென்றும் வாழ வேண்டும் என்பதற்காகத்தான் அவர் நம்மைப் படைத்தார் என்றால், நாம் ஏன் சாகிறோம்?
நாம் ஏன் சாகிறோம்?
9. ஆதாமுக்கும் ஏவாளுக்கும் யெகோவா கொடுத்த கட்டளை நியாயமானது என்று நாம் எப்படிச் சொல்லலாம்?
9 ஏதேன் தோட்டத்தில் யெகோவா ஆதாமிடம், “இந்தத் தோட்டத்தில் இருக்கிற எல்லா மரங்களின் பழங்களையும் நீ திருப்தியாகச் சாப்பிடலாம். ஆனால், நன்மை தீமை அறிவதற்கான மரத்தின் பழத்தை நீ சாப்பிடக் கூடாது. அப்படிச் சாப்பிட்டால், அதே நாளில் கண்டிப்பாகச் செத்துப்போவாய்” என்று தெளிவாகச் சொல்லியிருந்தார். (ஆதியாகமம் 2:9, 16, 17) கீழ்ப்படிவதற்கு அது ஒன்றும் கஷ்டமான கட்டளை கிடையாது. அதுமட்டுமல்லாமல், நல்லது எது, கெட்டது எது என்று ஆதாமிடமும் ஏவாளிடமும் சொல்லும் உரிமை யெகோவாவுக்கு இருந்தது. யெகோவாவுக்குக் கீழ்ப்படிவதன் மூலம் அவருடைய அதிகாரத்துக்கு அவர்கள் மதிப்பு காட்டியிருக்க முடியும். அவர் கொடுத்திருந்த எல்லாவற்றுக்காகவும் அவர்கள் நன்றியும் காட்டியிருக்க முடியும்.
10, 11. (அ) ஆதாமையும் ஏவாளையும் சாத்தான் எப்படி ஏமாற்றினான்? (ஆ) ஆதாமும் ஏவாளும் செய்தது ஏன் மன்னிக்க முடியாத குற்றம்?
10 ஆதாமும் ஏவாளும் யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல் போனார்கள். சாத்தான் ஏவாளிடம், “தோட்டத்தில் உள்ள அத்தனை மரங்களின் பழங்களையும் நீங்கள் சாப்பிடக் கூடாது என்று கடவுள் நிஜமாகவே சொன்னாரா?” என்று கேட்டான். அதற்கு ஏவாள், “தோட்டத்தில் இருக்கிற மரங்களின் பழங்களை நாங்கள் சாப்பிடலாம். ஆனால், தோட்டத்தின் நடுவில் இருக்கிற மரத்தின் பழத்தை நாங்கள் சாப்பிடக் கூடாது என்றும், தொடக் கூடாது என்றும் கடவுள் சொல்லியிருக்கிறார். மீறினால் நாங்கள் செத்துப்போவோம் என்றும் அவர் சொல்லியிருக்கிறார்” என்றாள்.—ஆதியாகமம் 3:1-3.
11 அப்போது சாத்தான், “நீங்கள் சாகவே சாக மாட்டீர்கள். நீங்கள் அதைச் சாப்பிடும் நாளில் உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமையைத் தெரிந்துகொண்டு கடவுளைப் போல ஆவீர்கள் என்றும் கடவுளுக்குத் தெரியும்” என்று சொன்னான். (ஆதியாகமம் 3:4-6) நல்லது கெட்டதைச் சொந்தமாகவே தீர்மானிக்க முடியுமென்று ஏவாளை நினைக்க வைக்க சாத்தான் விரும்பினான். அதோடு, கடவுளுடைய பேச்சை மீறினால் ஏவாள் சாக மாட்டாள் என்ற பொய்யையும் சாத்தான் அவளிடம் சொன்னான். அதனால், ஏவாள் அந்தப் பழத்தைச் சாப்பிட்டாள், அதை ஆதாமுக்கும் கொடுத்தாள். அந்தப் பழத்தைச் சாப்பிடக் கூடாது என்று யெகோவா சொன்னது ஆதாமுக்கும் ஏவாளுக்கும் நன்றாகத் தெரிந்திருந்தது. அந்தப் பழத்தைச் சாப்பிட்டபோது கடவுள் கொடுத்த தெளிவான, நியாயமான கட்டளைக்கு அவர்கள் வேண்டுமென்றே கீழ்ப்படியாமல் போனார்கள். அதோடு, அவர்கள் தங்களுடைய அன்பான பரலோகத் தகப்பனைக் கொஞ்சம்கூட மதிக்கவில்லை என்பதையும் காட்டினார்கள். அவர்கள் செய்தது மன்னிக்க முடியாத குற்றம்!
12. ஆதாமும் ஏவாளும் கடவுளுக்குக் கீழ்ப்படியாதது ஏன் வருத்தமான விஷயம்?
12 நம் முதல் பெற்றோர் தங்களைப் படைத்த கடவுளை இப்படி அவமதித்தது எவ்வளவு வருத்தமான விஷயம்! இதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்: நீங்கள் கண்ணும்கருத்துமாக வளர்த்த உங்களுடைய மகனோ மகளோ உங்கள் பேச்சை மீறினால் உங்களுக்கு எப்படி இருக்கும்? உங்கள் மனம் சுக்குநூறாகிவிடாதா?
13. “மண்ணுக்கே திரும்புவாய்” என்று யெகோவா சொன்னபோது எதை அர்த்தப்படுத்தினார்?
13 ஆதாமும் ஏவாளும் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போனபோது என்றென்றும் வாழும் வாய்ப்பை இழந்துவிட்டார்கள். யெகோவா ஆதாமிடம், “நீ மண்ணாக இருக்கிறாய், மண்ணுக்கே திரும்புவாய்” என்று சொன்னார். (ஆதியாகமம் 3:19-ஐ வாசியுங்கள்.) அவர் எதை அர்த்தப்படுத்தினார்? மண்ணிலிருந்து படைக்கப்பட்ட ஆதாம் மறுபடியும் மண்ணைப் போல உயிரற்றவனாக ஆகிவிடுவான் என்று அர்த்தப்படுத்தினார். (ஆதியாகமம் 2:7) ஆதாம் படைக்கப்படுவதற்கு முன்பு எப்படி எங்குமே இல்லையோ அப்படியே அவன் பாவம் செய்து செத்த பிறகும் எங்குமே இல்லாமல் போய்விட்டான்.
14. நாம் ஏன் சாகிறோம்?
14 ஆதாம் ஏவாள் மட்டும் பாவம் செய்யாமல் இருந்திருந்தால், இன்றுவரை உயிரோடு இருந்திருப்பார்கள். ஆனால், அவர்கள் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல், பாவம் செய்து, கடைசியில் செத்துப்போனார்கள். பாவம் என்பது நம் முதல் பெற்றோரிடமிருந்து வந்திருக்கிற ஒரு கொடிய நோய் என்று சொல்லலாம். நாம் எல்லாரும் பாவிகளாகப் பிறக்கிறோம்; அதனால்தான் சாகிறோம். (ரோமர் 5:12) ஆனால், மனிதர்கள் சாக வேண்டும் என்பது கடவுளுடைய நோக்கம் இல்லை. அதை அவர் ஒருபோதும் விரும்பியது இல்லை. சொல்லப்போனால், மரணத்தை “எதிரி” என்று பைபிள் குறிப்பிடுகிறது.—1 கொரிந்தியர் 15:26.
சத்தியம் நமக்கு விடுதலை தருகிறது
15. இறந்தவர்களைப் பற்றிய உண்மையைத் தெரிந்துகொள்வது நமக்கு விடுதலை தருகிறது என்று எப்படிச் சொல்லலாம்?
15 இறந்தவர்களைப் பற்றிய உண்மையைத் தெரிந்துகொள்வது தவறான பல நம்பிக்கைகளிலிருந்து நமக்கு விடுதலை தருகிறது. இறந்தவர்களால் எந்த வலியையும் வேதனையையும் உணர முடியாது என்று பைபிள் சொல்கிறது. நாம் அவர்களிடம் பேச முடியாது, அவர்களாலும் நம்மிடம் பேச முடியாது. நாம் அவர்களுக்கு எந்த உதவியும் செய்ய முடியாது, அவர்களாலும் நமக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. அவர்களால் நமக்கு எந்தக் கெடுதலும் செய்ய முடியாது, அதனால் நாம் அவர்களுக்குப் பயப்பட வேண்டிய அவசியமில்லை. ஆனால், இறந்தவர்கள் எங்கேயோ தொடர்ந்து உயிர்வாழ்கிறார்கள் என்றும், பாதிரிகளுக்கு அல்லது பூசாரிகளுக்கு நாம் பணம் கொடுத்தால் இறந்தவர்களுக்கு உதவ முடியும் என்றும் நிறைய மதங்கள் சொல்கின்றன. இறந்தவர்களைப் பற்றிய உண்மையை நாம் இப்போது தெரிந்துகொண்டதால், இனி அந்தப் பொய்களை நம்பி ஏமாற வேண்டியதில்லை.
16. இறந்தவர்களைப் பற்றிய என்ன பொய்யை நிறைய மதங்கள் சொல்லித் தருகின்றன?
16 இறந்தவர்கள் தொடர்ந்து உயிரோடு இருக்கிறார்கள் என்ற பொய்யைப் பரப்புவதற்காக சாத்தான் பொய் மதங்களைப் பயன்படுத்துகிறான். உதாரணத்துக்கு, நாம் இறந்துவிட்டாலும் நமக்குள் இருக்கும் ஏதோவொன்று எங்கேயோ தொடர்ந்து வாழ்வதாகச் சில மதங்கள் சொல்லித் தருகின்றன. உங்களுடைய மதமும் அப்படித்தான் சொல்லித் தருகிறதா அல்லது இறந்தவர்களைப் பற்றி பைபிள் சொல்லும் உண்மையைச் சொல்லித் தருகிறதா? மக்களை யெகோவாவிடமிருந்து பிரிப்பதற்காக சாத்தான் பல பொய்களைப் பரப்புகிறான்.
17. மனிதர்கள் நரகத்தில் வதைக்கப்படுவார்கள் என்ற போதனை யெகோவாவை எப்படி அவமதிக்கிறது?
17 இறந்தவர்களைப் பற்றி மதங்கள் சொல்லித் தரும் சில விஷயங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. உதாரணத்துக்கு, கெட்டவர்கள் நரகத்தில் என்றென்றும் வதைக்கப்படுவார்கள் என்று சில மதங்கள் சொல்கின்றன. இந்தப் பொய் யெகோவாவை அவமதிக்கிறது. ஏனென்றால், அவர் ஒருபோதும் மக்களை வதைக்க மாட்டார்! (1 யோவான் 4:8-ஐ வாசியுங்கள்.) தண்டனை கொடுக்க வேண்டும் என்பதற்காகப் பிள்ளையின் கையை நெருப்பில் காட்டும் ஒருவரைப் பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள்? அவர் ரொம்பக் கொடூரமானவர் என்றும், அவருடைய சகவாசமே வேண்டாம் என்றும்தானே நினைப்பீர்கள்? யெகோவாவைப் பற்றியும் நீங்கள் அப்படி நினைக்க வேண்டும் என்றுதான் சாத்தான் விரும்புகிறான்.
18. இறந்தவர்களை நினைத்து நாம் ஏன் பயப்பட வேண்டியதில்லை?
18 மனிதர்கள் இறந்த பிறகு ஆவியாக மாறிவிடுகிறார்கள் என்று சில மதங்கள் சொல்கின்றன. இறந்தவர்களுக்கு மதிப்புமரியாதை செலுத்த வேண்டுமென்றும், அவர்களுக்குப் பயப்பட வேண்டுமென்றும்கூட அவை சொல்கின்றன. ஏனென்றால், அவர்கள் சக்திவாய்ந்த நண்பர்களாக அல்லது பயங்கரமான எதிரிகளாக ஆகிவிடலாம் என்று சொல்கின்றன. இந்தப் பொய்யை நிறைய பேர் நம்புகிறார்கள். இறந்தவர்களை நினைத்துப் பயப்படுவதால், யெகோவாவை வணங்குவதற்குப் பதிலாக இறந்தவர்களை வணங்குகிறார்கள். ஆனால், நாம் ஏற்கெனவே பார்த்தபடி, இறந்தவர்களுக்கு எந்த உணர்ச்சியும் இல்லை. அதனால், நாம் அவர்களை நினைத்துப் பயப்பட வேண்டியதில்லை. நம் படைப்பாளரான யெகோவாதான் உண்மையான கடவுள். அவரை மட்டும்தான் நாம் வணங்க வேண்டும்.—வெளிப்படுத்துதல் 4:11.
19. இறந்தவர்களைப் பற்றிய உண்மை நமக்கு எப்படி உதவுகிறது?
19 இறந்தவர்களைப் பற்றிய உண்மை, மதங்கள் சொல்லித் தருகிற எல்லா பொய்களிலிருந்தும் நமக்கு விடுதலை தருகிறது. நம் வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் பற்றி யெகோவா கொடுத்திருக்கும் அருமையான வாக்குறுதிகளைப் புரிந்துகொள்ளவும் அது உதவுகிறது.
20. அடுத்த அதிகாரத்தில் நாம் எதைப் பற்றித் தெரிந்துகொள்வோம்?
20 “மனுஷன் செத்த பின்பு மறுபடியும் உயிரோடு வர முடியுமா?” என்று கடவுளுடைய ஊழியரான யோபு பல வருஷங்களுக்கு முன்பு கேட்டார். (யோபு 14:14) இறந்துபோன ஒருவரால் உண்மையிலேயே உயிரோடு வர முடியுமா? இதற்கான பதிலைக் கடவுள் பைபிளில் தந்திருக்கிறார். புல்லரிக்க வைக்கும் இந்த விஷயத்தைப் பற்றி அடுத்த அதிகாரத்தில் பார்ப்போம்.
a ஒருவர் இறந்த பிறகு அவருடைய ஆத்துமாவோ ஆவியோ தொடர்ந்து வாழ்கிறது என்று சிலர் நம்புகிறார்கள். கூடுதலான தகவலுக்குப் பின்குறிப்பு 17-ஐயும் 18-ஐயும் பாருங்கள்.